முன்னுரை
பொருளாதார மேம்பாடு என்பது வறுமை நிலையில் உள்ள மக்களை முன்னேற செய்யும் வழிமுறைகளை உள்ளடக்கியது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து தொழிலாளி, முதலாளி எனும் வர்க்க வேறுபாடு வலுப்பெற்று வந்தது. அதன் அடிப்படையில் ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி உழைப்பிற்கேற்ற ஊதியமும், கூலியும் கொடுக்க மறுக்கின்ற சமூகநிலை உருவாயிற்று. இவை தொடர்பான பதிவுகளும் நாவலில் இடம் பெற்றுள்ளன. இவற்றை எடுத்து விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.
பொருளாதாரம்
பொருளாதாரம் பகுத்தறிவுச் சிந்தனையின்றிச் செயல்படும் தன்மையினை விஜயம் நாவல், தீமையைப் பழிப்பதற்கும், நன்மையைப் புகழுவதற்கும் ஓர் எல்லை உண்டு. நல்ல கொள்கை என்றாலும் அதைக் தவறான பாதையில், பகுத்தறிவின்றி உபயோகப்படுத்தத் துணிந்தால், அதனால் கேடுதான் விளையும். சோம்பி வாழ்பவன் சுகவாசி ஆவானா? உழைப்பது கவுரவக் குறைவு என்று நினைத்து, சுகவாசி வாழ்வை நாடிய நம் நாட்டார் எல்லாத் தொழில்களையும் பறிகொடுத்துவிட்டு, சாப்பாட்டுக்குப் போதுமான தானியங்களைப் பயிராக்க முடியாத இங்கிலீஷ்காரரின் தேசத்தைக் கைத்தூக்கி விட்டுவிட்டார்கள்.1 இவ்வாறான செய்தியினை எடுத்துரைக்கின்றது. மேலும், வருமானத்திற்கு மீறிச் செலவு செய்யும் நிலையினைப் பற்றி விஜயம் நாவல், வாழ்க்கையைத் துண்டு துண்டாக நோக்குவது கூடாது. வாழ்வை ஒன்று சேர்த்துப் பார்க்கவேண்டும். வாழ்க்கையின் பல பகுதிகள் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு கிடக்கையில், ஒன்றிரண்டு பகுதிகளைமட்டும் மாற்றிக்கொள்ளுவது முடியாத காரியம். ஏனைய பகுதியில் மாறுதல் ஏற்பட்டால், அது வேறு பகுதியில் மாறுதல் ஏற்பட்டால், அது வேறு பகுதியில் போய்ப் பாதிக்கும். சிறிய புதுப் பழக்கமான காபியை எடுத்துக் கொள்ளுவோம். பழையது சாப்பிடப் பணம் வேண்டாம். காபிக்கு அதிகமான பணம் தேவை. அந்தப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் அல்லது கடன் வாங்க வேண்டும். மேலும், ஒருவர் வீட்டில் காபி சாப்பிட்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் யாவரும், காலக்கிரமத்தால் காபிக் குடியர்கள் ஆகிறார்கள். எல்லோருக்கும் நவ நாகரிக ஆசை தோன்றுகிறது. இதனால், அந்தக் குடும்பத்தின் போக்கே, விரைவில் மாற்றம் அடைகிறது. கல்யாணம் என்பது மதச் சடங்காக இருந்ததுபோக, அது இப்பொழுது வியாபாரத் தொழிலாக ஆகிவிட்டது‚ இந்த நிலைமையை, நம் முன்னோர் பொறுப்பார்கள் என நீங்கள் எண்ணுகிறீர்களா? 2 என்று எடுத்துரைக்கின்றது. பகுத்தறிவுவாதி என்பவன் தனது வாழ்வில் சராசரி வாழ்க்கைத்தரம் என்னவோ அதன்படி நடந்து கொள்வதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும். பெரியார் வருமானத்திற்கு மீறிய செலவினைப் பற்றி, தேவைக்கு மட்டுமே செலவு செய்வது சிக்கனம். தேவை மேல் செலவு செய்வது ஊதாரித்தனம். தேவைக்கே செலவு செய்யாமலிருப்பது கருமித்தனம்.3 என்று சிக்கனம், ஊதாரித்தனம், கருமித்தனம் போன்றவற்றிற்குத் தெளிவாகப் விளக்கம் அளித்துள்ளார். ஒரு நாட்டிலே, நாகரிகப் போர்வையின் கீழ், சூதான சட்டத்தின் துணையைக் கொண்டு, கண்ணைக் குருடுபடச் செய்யும் பகிரங்கப் பகல்கொள்ளை நேருமாகில், பலவீனர்கள் அற்பத் திருட்டில் ஆசை வைப்பது இயல்பு. அது தண்டனைக்கு உரித்தானதல்ல என்பது என் கட்சியல்ல. வல்லார்கள், சட்டத்தைச் சாதகமாக வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கையில், மெலியார்கள் சட்டத்தை ஏய்த்துத் திருடப் பார்க்கின்றனர். குணமுள்;ளவனைக் காட்டிலும் பணம் படைத்தவன் மணம் பெறுகிறான் என்ற நிலைமை ஒரு ஜனசமூகத்தினிடையே ஏற்படுமாகில், பணம் சம்பந்தமான குற்றங்கள் நாய்க் குடைகளைப் போலத் தோன்றும் என்பதில் சந்தேகம் உண்டா? 4.
என்றும் நாவலில் விளக்கப்பட்டுள்ளது.
உழைப்பைச் சுரண்டுதல்
ஆதிக்கமும், செல்வமும் படைத்தவர்களின் கைகளில் ஏழை மக்கள் அகப்பட்டு உடலாலும் உள்ளத்தாலும் செயல்பட முடியாமல் வாழ்க்கையில் பல துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். பெரும் பான்மையான மக்கள் வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை ஆகியவற்றால் இன்னல்கள் அடைகின்றனர். அதிகாரவெறியும் தன்னலமும் மேலோங்கிப் பணம் படைத்தவர்கள் அனைத்து வசதி வாய்ப்புக்களையும் பெற்றுத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர். ஆனால் உழைக்கும் ஏழைகளின் வாழ்க்கை பின்னடைந்து வருகிறது.
விஜயம் நாவலில் உழைப்பைச் சுரண்டும் நிலையினைப் பற்றி,
உழைத்தும் பட்டினி கிடக்கும் பரம்பரைக் கூலிகளான தீண்டாதார்கள் இருக்குமளவும், தொண்டிமேட்டார் நிலம் பயிராகாமல் இருக்க முடியுமா? பயிர் செய்யாவிடின், தீண்டாதார்களின் ஆன்மா விரைவில் கூட்டை விட்டுப் பிரிந்து போகாதா? பயிர்ச் செலவுக்காரனிடம் குறுணி நெல்லுக்குப் பிசுகி, லொடடொடவென்று வார்த்தைகளைக் கொட்டி, நெல்களத்தில் வாதாடி, சந்தி சிரிக்கும் தொண்டிமேட்டு மிராசுதார், கோர்ட்டுச் செலவிற்காக வக்கீலிடம் நோட்டு நோட்டாக, வாய் பேசாமல் கொடுத்துவிட்டு, வழக்குச் சூதாட்டத்தின் முடிவை எதிர் நோக்கி நின்று, ஏமாந்து போவதும் உண்டு.5
ஏழைகளின் நிலை இவ்வாறு தான் அடிமை பெற்று இருக்கின்றது. மேலும், இதே நாவல் கீழ்வரும் கருத்தையும் முன்வைத்துள்ளது. கந்தையை உடுத்தி, அவரைப் பந்தலைப்போலத் தலைவிரி கோலமாய் நின்று, குடியானவன், “எல்லாருக்கும் என்னால்தானே எல்லாம் கிடைக்கின்றன… என்று கதறுகின்றான். வறுமையில் ஆழ்ந்து கிடக்கும் இக்குடியானவன் மண்ணில் பயிர் செய்து, பணத்தைத் தேடுகிறான். மற்றைய பொறுப்பாளிகள் அவன் கொடுக்கும் பொருளைக் கேள்வி முறையின்றிச் செலவு செய்து உல்லாசமாய்க் காலங்கழித்துச் சுகமாய் வாழ்கின்றார்கள். ‘கொடிது கொடிது இளமையில் வறுமை’ என்கிறார் புலவர். ‘கொடிது கொடிது, எப்போதும் வறுமை’ என்று சொல்லியிருந்தாலும், அது உண்மை தான்.6
பெரும்பான்மையான கீழ்ச்சாதியோர் வறுமைக் கோட்டுக்குள் இருக்கின்றனர். வறுமையும், சாதியமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகின்றன. வயிற்றுத்தீயைத் தணிக்கமுடியாத அவர்களின் பொருளாதார நெருக்கடியைப் பணம் படைத்தவர் பயன் படுத்திக்கொள்கின்றனர். உழைப்பின் கூலியைக் குறைத்துக் கொள்ள லாபம் தேடும் இவர்கள் காலம்காலமாய் ஏழைகளின் வயிற்றைப் பட்டினி போடுவதோடு அவர்களின் வாழ்க்கையை மீட்சி இல்லா வெறுமைக்குள்ளாக்குகின்றனர். மனிதனை மனிதனாக ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழும் முயற்சி இன்றி, வாய்ப்புக் கிடைக்கும் ஒவ்வொரு மனிதனும் தான் வளர்ந்து பிறரை அழுத்தும் வகையிலேயே செயல்படுகின்றான். இவ்வாறு பணம், ஆள், அரசியல் அதிகாரம் அனைத்தும் இவ் எளிய மக்களை வாய்திறக்க விடாமற் செய்துள்ளன. பொருள் வலிமையுள்ளவர்கள் முன்னால் ஏழைகளின் வாழ்வு புதைக்கப்படுகின்றது. இவற்றைத் தான் பெரியார் கீழ்வருமாறு எடுத்துரைத்தார்.
1. பிராமணன் கூலி கொடுத்தும் கூலி கொடுக்காமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். (மனு. அதி.8, விதி 43)
2. பிராமணனால் கூலி கொடுக்கப்படாவிட்டாலும் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டாலும் சூத்திரன் தான் வேலை செய்யவேண்டிய பொறுப்பிலிருந்து நீங்கியவனாக மாட்டான். (மனு. அதி.8, விதி 413)
3. சூத்திரன் பொருள் எதுவாய் இருந்தாலும் அது பிராமணனுக்கே சொந்தமானதாகும். (மனு. அதி.8, விதி 416)
4. சூத்திரனின் பொருள் யாவற்றையும் பிராமணன் சிறிதும் தயக்கமின்றிப் பலாத்காரமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம். சூத்திரர்களுக்குத் தொண்டுதான் சொந்தமே ஒழிய பொருள்களுக்குக் கொஞ்சமும் அவன் உரிமைக்காரன் அல்ல. (மனு. அதி.8, விதி 417)
5. சூத்திரனைப் பிரமணனுக்கே தொண்டு செய்யும்படி அரசன் கட்டளையிட வேண்டும். (மனு. அதி.8, விதி 418)7
சமூகம் கட்டாய நிலை
என்றைக்குக் கட்டாய நிலை வந்ததே அன்றே சமூகம் அழிவிற்கு வந்து விட்டது என்ற செய்தியினைப் பற்றி விஜயம் நாவலில், கட்டாய பிரம்மசரியம் தாசி வீட்டுக்குக் கொண்டுபோய்விடும். கட்டாய வைதவ்யம் குழந்தைக் கொலையிலும் சமூகத்துக்கு அவமானத்திலும் போய் முடியும். கட்டாயச் சிக்கனம் அற்றத்தனத்திலும் பொறாமையிலும் உயிர்ச்சேதத்திலும் போய் நிற்கும். கட்டாயச் சீர்திருத்தம் திருட்டுத் தனத்துக்கும் வெளி வேஷத்துக்கும் உற்ற துணையாகும். கட்டாயக் கல்யாணம் தரித்திரத்திலும் குடும்பக் கலகத்திலும் விவகாரத்திலும் விளம்பரம் பெறும். கட்டாய உணவு அஜீரணத்துக்கு ஆதாரமாகும். கட்டாயக் கல்வி மனிதர்களுக்குப் படிப்பிலே வெறுப்பு உண்டாக்கும். கட்டாய ராணுவப் பயிற்சியால் சேனையில் கோழைகள் மலிந்து போவார்கள். எங்கே கட்டாயம் தலைவிரித்து ஆடுகின்றதோ, அங்கே இயற்கை தனது ஜால வித்தைச் சூதைப் பிரயோகம் செய்து, கட்டாயத்தை இருந்தவிடம் தெரியாமல் ஓட்டம் எடுக்கச் செய்துவிடும்.8 என எடுத்துரைக்கின்றது. எதிலும் அடக்கு முறைகள் இருப்பின் அங்கு எவ்வித பயன்பாடுமின்றி பொருளாதாரத்திலும் வீழ்ச்சியின் நிலையினைத்தான் கொண்டிருக்க முடியும்.
தொகுப்புரை
சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர் துன்புற்றிருந்தனர். ஆதிக்க சாதியினருக்கும், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையில் வேறுபாடுகள் நிறைந்திருந்தன. இவர்களிடையே வணங்கும் கடவுளில் வேறுபாடு, வாழும் இடத்தில் வேறுபாடு, உண்ணும் உணவில் வேறுபாடு இன்னும் எத்தனையோ வேறுபாடுகள் காணப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்டு அவமானப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டோரேயாவர் என்பதை நாவல்கள் விளக்கியுள்ளன.
அடிமைகளை வைத்து வேலை வாங்கி அதன் மூலம் உற்பத்திகளை அனுபவித்த சிறிய தனியுடைமையாளர்களின் கைகளில் மேலும் மேலும் விளைநிலங்களும் உற்பத்திக் கருவிகளும் சேரலாயின. அவர்களிடம் உணவுப் பொருட்களும் கைத்தொழில் பொருட்களும் வளர்ந்தன. இதனால் ஏற்கனவே இருந்த நிலப்பிரபு, அடிமை, விவசாயம் செய்வோன், கைத்தொழில் செய்வோன் என்பதோடு புதியதாக இடைத்தரகர்களாகிய வியாபாரிகளும் தோன்றினர். இதன் மூலம் இவர்களிடமும் இவர்களோடு சேர்ந்த நிலப்பிரபுகளிடமும் உழைப்புகள் இல்லாமலே பணம் குவிய ஆரம்பித்ததனால் அரசையும், ஆளும் வர்க்கத்தையும் நிர்ணயிக்கும் சக்திகளாக இவர்கள் மாறினர். இத்தகைய நிலப்பிரபுக்கள் இருந்த சமுதாயத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியாக முதலாளித்துவம் வளரத் தொடங்கியது.
சான்றெண் விளக்கம்
1. வ. ராமசாமி, விஜயம், பக். 64-65
2. மேலது, ப. 119
3. மா. நன்னன், பெரியார் கணினி, தொகுதி – 2, ப. 976
4. வ. ராமசாமி, விஜயம், ப. 238
5. வ. ராமசாமி, விஜயம், ப.12
6. மேலது, ப. 177
7. மா. நன்னன், பெரியார் கணினி, தொகுதி – 1, ப. 344
8. வ. ராமசாமி, விஜயம், ப. 117
துணை நூற்பட்டியல்
1. வ. ராமசாமி விஜயம் – அல்லயன்ஸ் கம்பெனி, 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, தபாற் பெட்டி எண் 617, மயிலாப்பூர், சென்னை – 600 004. முதற்பதிப்பு – ஆகஸ்ட் 1980
2. நன்னன், மா., – பெரியார் கணினி, தொகுதி – 1இ2 , ஞாயிறு பதிப்பகம், 11, முதல்தெரு, அரங்கராசபுரம் , சைதாப்பேட்டை, சென்னை – 600 015., முதற்பதிப்பு – 1996
இரண்டாம் பதிப்பு – 1998
anuselva007@gmail.com
*கட்டுரையாளர்: – அ. அனுடயானா, உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 02. –