வாசிப்பும், யோசிப்பும் 196: பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11; அறிஞர் அண்ணா நினைவாக…;இந்தி இசை கேட்கும் நேரம் இது!

ஓவியம் - புதுவை ராமன்; நன்றி.என் பிரியத்துக்குகந்த மகா கவிஞன் பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11. . எனக்குப் பிடித்த அவனது கவிதை வரிகள் சிலவற்றை அவனது நினைவாகப் பகிர்ந்து கொள்கின்றேன்.

“மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்”

“நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்”

“தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி
என்னைப் புதியவுயி ராக்கி – எனக்
கேதுங் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்…”

“எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா !
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர்”

“காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்‘ “

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!”

“அச்ச மில்லை, அமுங்குத லில்லை,
நடுங்குத லில்லை, நாணுத லில்லை,
பாவ மில்லை, பதுங்குத லில்லை;
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்;
கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம்;
யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்;
எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்;
வான முண்டு, மாரி யுண்டு,
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே;”

“பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்,
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் —
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந் திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமும் மிடிமையும் நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க’ என்பேன்! “

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய்”

“எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்”

“செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திட லாமென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர் அவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்.”

“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே — அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே — அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே — இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ “

“இனியொரு விதி செய்வோம் — அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் — வாழ்க”

“உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனைசெய்வோம் — வீணில்
உண்டுகளித் திருப்போரை
நிந்தனைசெய்வோம்”

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.”

“உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்;”

” குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக! என்றார்;
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்,
கிருதயுகம் எழுக மாதோ! “

பாரதியார் கவிதைகளை வாசிக்க http://www.tamilvu.org/library/l9100/html/l9100ba1.htm


அறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் செப்டம்பர் 15.

அறிஞர் அண்ணா!

அறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் செப்டம்பர் 15. இன்று தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை வேறெந்தக் கட்சிகளாலும் உடைக்க முடியாத நிலைதானுள்ளது. இதற்குப் பலமான அத்திவாரமிட்டவராக அறிஞர் அண்ணாவைக் கூறலாம். சினிமா, நாடகம், இலக்கியம் என்னும் ஊடகங்களின் பயன்களை நன்கு உணர்ந்து, அவற்றைத்தம் கொள்கைகளைப் பரப்பும் சாதனங்களாகப் பயன்படுத்துவதில் மிகுந்த வெற்றியடைந்தவர்கள் அண்ணாவின் தலைமையில் உருவாகி, வளர்ந்து தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலைப்பிடித்த திராவிடக்கட்சியினரே.

அண்ணாவின் பிறந்ததினமான இன்று அவரை நான் எவ்விதம் முதன் முதலில் அறிய வேண்டி வந்தது என்பதை நினைத்துப்பார்க்கின்றேன். அதுவே இன்றைய முகநூற்பதிவாகின்றது.

திராவிடக் கட்சியினரின் ஆதிக்கத்தால் ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகள் நிறையவேயுள்ளன. அவை பெரும்பாலும் பதவியும், ஆட்சியும் தரும் போதையினால் அரசியல்வாதிகள் பலர் புரியும் ஊழல்கள். ஆனால் அதற்காக அவர்களால் விளைந்த நேர்மறையான விளைவுகளைப் புறக்கணித்துவிட முடியாது. இந்தியத் தேசியக்கட்சிகளின் ஆதிக்கத்திலிருந்த தமிழகத்தை, மாநிலக் கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தவை திராவிடக் கட்சியினரே.
மூடநம்பிக்கைகளுக்கெதிரான சீர்திருத்தக் கருத்துகளைத் தம் எழுத்துகள் மூலமும், கலை வடிவங்கள் மூலமும் வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கியவர்கள் அறிஞர் அண்ணாவின் பாசறையில் வளர்ந்த திராவிடக் கட்சியினரே. இவை ஆரோக்கியமான விளைவுகள். அடிப்படையில் இவர்களும் நடைமுறையிலிருக்கும் சமுதாய அமைப்பின் அங்கத்தினர்களென்பதால், இவர்களால் தாமிருக்கும் சமுதாய அமைப்பின் அனைத்துப்பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. அது அமைப்பினை அடியோடு மாற்றுவதால் மட்டுமே சாத்தியம். எனவே இவர்கள் இருக்கும் அமைப்பினுள் வைத்துத்தான் இவர்களின் குறை, நிறைகளை நான் அறிந்து கொள்கின்றேன். புரிந்து கொள்கின்றேன்.

முதல் முதலாக நான் அறிஞர் அண்ணாவை அறிந்த தருணத்தை நினைத்துப்பார்க்கின்றேன். உலகத்தமிழாராய்ச்சி மாநாடு சென்னையில் நடந்த காலகட்டத்தின்போதுதான் முதன் முறையாக அறிஞர் அண்ணாவை நான் அறிந்துகொண்டேன். அப்பா திராவிட முன்னேற்றக்கழகத்தினரின் ஆதரவாளராக அக்காலகட்டத்திலிருந்தார். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் மீது மதிப்பு வைத்திருந்தவர். அந்த தமிழாராய்ச்சி மாநாடடையொட்டி மிகவும் தரமான, அழகான விழா மலரொன்றினை வெளியிட்டிருந்தார்கள். அம்மலர்க்குழு பொறுப்பாளராக எம்ஜிஆர் இருந்திருக்க வேண்டுமென்று ஞாபகம். மலரின் ஆரம்பத்தில் மலருக்கான அவரது வரவேற்பிருந்தது. தடித்த அட்டையுடன் கூடிய மலரைத்திறந்ததுமே முதற் பக்கத்துக்கும், அட்டைக்குமிடையில் தாமரை மலரொன்று விரிவது போல் அமைக்கப்பட்டிருந்ததாகவும் ஞாபகம்.

அந்த மலரின் மூலம்தான் முதன் முறையாகத் அறிஞர் அண்ணாவைப்பற்றி, அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தினரைப்பற்றியெல்லாம் அறிந்து கொண்டேன். அப்பொழுது நான் ஐந்தாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். அக்காலகட்டத்தில் தினத்தந்தி நிறுவனத்தினர் மாதாந்த நாவல் திட்டமாக ராணிமுத்துப் பிரசுரத்தை அறிமிகப்படுத்தினர். ராணிமுத்துப் பிரசுரமாக முதலில் வெளியான நாவல் அகிலனின் ‘பொன்மலர்’. அடுத்தது அறிஞர் அண்ணாவின் ‘பார்வதி பீ.ஏ’. பின்னர் ‘ரங்கோன் ராதா’வும் ராணிமுத்துப் பிரசுரமாக வெளியானது

என் பதின்மவயதுகளில் யாழ்ப்பாணத்தில் என் வாழ்க்கை கழிந்தபோது நான் அண்ணாவின் நூல்களை ஒருவித வெறியுடன் தேடித்தேடி வாசிக்குமொரு வாசகனாகவும் விளங்கியிருக்கின்றேன். அவரது ‘ஏ தாழ்ந்த தமிழகமே’ , ‘கம்பரசம்’ பொன்ற நூல்களைக்குறிப்பிடலாம். மூடம்பிக்கைகளை, இந்துமதப்புனைவுகளில் சாதி வகித்த பங்கினை, அதன்காரணமாகவே ஓரவஞ்சகமாகக்கட்டப்பட்ட புனைவுகளையெல்லாம் அவரது நூல்கள் தோலுரித்துக்காட்டின. அதனால் அவை அக்காலகட்டத்தில் பிடித்திருந்தன.

என் வாசிப்பின் வரலாற்றில் அண்ணாவின் , திமுகவினரின் நூல்களுக்கும் ஓரிடமுண்டு..


அண்ணா என்றால் உடனே நினைவுக்கு வருவது அவரது குரலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப விரைவாக அவர் உதிர்க்கும் சொற்களின் அழகும்தாம்.

உதாரணத்துக்கு ஒன்றினைக் குறிப்பிடலாம். ஒரு முறை தேர்தல் கூட்டத்துக்கு நேரம் சென்று வந்தார். இரவு பத்தரையை நெருங்கிக்கொண்டிருந்தது. அது ஒரு சித்திரை மாதம். அவரை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த மக்கள் தூங்கி வழிந்துகொண்டிருந்தார்கள். வந்த வேகத்தில் அண்ணா தனது பேச்சினை ஆரம்பித்தார்.

“மாதமோ சித்திரை.
நேரமோ பத்தரை.
நீங்களோ நித்திரை.”

அவ்வளவுதான் தூங்கி வழிந்துகொண்டிருந்த மக்களின் தூக்கக்கலக்கம் போன இடமே தெரியவில்லை.


அப்பாவுக்குப் பிடித்த அறிஞர் அண்ணாவின் அடுக்கு மொழி!

அண்மையில் டொராண்டோ நூலகக் கிளையொன்றில் அறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ நாவலைப்பார்த்தவுடன் என் நினைவலைகள் என் தந்தையார் வாழ்ந்த காலகட்டத்துக்கு ஒருமுறை சென்றது.

அப்பா இருந்தவரை திமுக ஆதரவாளர். அப்பொழுது திமுக பிளவு படாமலிருந்த காலகட்டம். அறிஞர் அண்ணாவின், கலைஞரின் எழுத்துகள் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக அவர்களின் அடுக்கு மொழிகளை அவர் மிகவும் இரசிப்பார். அவ்விதம் அவர் இரசித்த அறிஞர் அண்ணாவின் அடுக்கு மொழிகளிலொன்று ரங்கோன் ராதா நாவலின் இறுதி வசனம். அந்த நாவல் கீழ்க்கண்டவாறு முடியும்:

“இன்பமே” என்றேன் நான்.

கண்களை ஒரு விநாடி மூடித்திறந்தாள் – செந்தாமரை மலர்ந்தது. அருகே வந்தாள், வசந்தம் வீசிற்று!

புன்னகை புரிந்தாள், புது விருந்து உண்டேன்! “

இதிலுள்ள புன்னகை புரிந்தாள், புது விருந்து உண்டேன்! என்ற நாவலின் முடிவில் வரும் அடுக்குமொழித்தொடர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனை வாசித்து அண்ணாவின் அடுக்கு மொழித்திறனை எண்ணி, அவர் தனக்குத்தானே மெல்லிய புன்னகையினைச்சிந்தியது இன்னும் நெஞ்சினில் பசுமையாக உள்ளது.

மேற்படி ரங்கோன் ராதா நாவல் 1956இல் திரைப்படமாகவும் மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வெளியானது. சிவாஜி/பானுமதி/ எம்.என்.ராஜம் நடிப்பில் வெளியான திரைப்படமது. கலைஞரின் வசனத்தில் வெளியான திரைப்படத்தில் அவரது பாடல்கள் சிலவும் உள்ளன.

அறிஞர் அண்ணாவின் பெயர் அரசியலில் மட்டுமல்ல, தமிழ்ச்சினிமாவிலும் நிலைத்து நிற்கும். தமிழ்ச்சினிமாவில் சீர்சிருத்தக்கருத்துகளைப் புகுத்தியதில், அதுவரை பாடல்கள் வகித்த பங்கினை வசனங்களுக்கு மாற்றியதில் அண்ணாவின், திமுகவினரின் திரைப்படங்கள் முக்கிய பங்காற்றின.

 


இந்தி இசை கேட்கும் நேரம் இது: ‘மேரே சப்னொ கி ரானி கபூ ஆய கீது’

இந்தி இசை கேட்கும் நேரம் இது: 'மேரே சப்னொ கி ரானி கபூ ஆய கீது'எழுபதுகளின் ஆரம்பத்தில் என்னைக் கவர்ந்த இன்னுமொரு ஹிந்தித்திரைப்படப்பாடல். ‘ஆராதனா’ திரைப்படத்தில் வரும் பாடகர் கிஷோர்குமாரின் குரலில், எஸ்.டி,பர்மனின் இசையில், ஷர்மிளா தாகூர், ராஜேஸ்கன்னா நடிப்பில் ஒளிரும் ‘மேரே சப்னொ கி ரானி கபூ ஆய கீது’ இப்பாடலை இன்று கேட்கும்போதும் கேட்பவர் உள்ளத்தை ஈர்த்துவிடும் சக்தி மிக்கதாக விளங்குவதை அறிந்துகொள்ளலாம்.

ஹிந்திப்பட நாயகர்களுக்குரிய நளினமான உடல் அசைவுகளுடன் கூடிய ராஜேஷ்கன்னாவின் உடல் அசைவுகள் தமிழ்ப்பட நாயகர்களின் நளினமற்ற உடல் அசைவுகளைப்பார்த்துப் பழகியிருந்த எமக்கு ஒருவித வித்தியாசமான அனுபவத்தை அக்காலத்தில் தந்தன.

மொழி தெரியாவிட்டாலும், காட்சியிலிருந்து ராஜேஷ்கன்னா புகையிரதத்தில் நூல் வாசிப்பதாகப் பாவனை பண்ணிக்கொண்டே, பயணிக்கும் நாயகி ஷர்மிளா தாகூரின் காதலைப்பெறுவதற்காக முயற்சி செய்கின்றார் என்பது விளங்கியிருந்தது. ஆனால் அவர் பாடலின் அர்த்தம் என்ன என்பது பற்றிப்புரியாமலேயிருந்தது.

அண்மைக்காலம் வரை இப்பாடலை இப்பாடலின் பொருள் அறியாமல்தான் இரசித்து வந்திருந்தேன். அண்மையில்தான் இப்பாடலின் ஆங்கில உபதலைப்புகளுடன் கூடிய காணொளியினைப் பார்க்கும் / கேட்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதன் ஆங்கில உப தலைப்புகளைத் தமிழாக்கி நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இவ்விதம் ஆங்கில
உபதலைப்புகளுடன் பாடலை யு டியூப்பில் பதிவிட்டிருந்தவர் நாடி ரொமினா (NADEE ROMINA) என்பவரே. எனவே ஹிந்தி மொழி தெரியாத நிலையில், அவரது ஆங்கில மொழிபெயர்ப்பை உண்மையாகக்கருதி அதனைத்தமிழ்ப்படுத்தியிருக்கின்றேன்.

இதில் பொருள் குற்றம் இருக்குமாயின் அதற்காக எனக்குத்தருவதை அவருக்கே கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் (திருவிளையாடல் தருமியின் ஞாபகம் வருகின்றதா?) 🙂 🙂

தமிழ் மொழிபெயர்ப்புடன் மீண்டும் இந்தப்பாடலைக் கேட்டுப் பாருங்கள் இன்னும் இனிமையாக இருக்கும்.

அந்தப்பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு இதோ கீழே:

எனது கனவுகளின் இராணியே
நீ எப்பொழுது என்னிடம் வரப்போகின்றாய்?

இனிய பருவ காலம் வந்து விட்டது.
நீ எப்பொழுது என்னிடம் வரப்போகின்றாய்?

வாழ்க்கை நம்மைக் கடந்து செல்கிறது.
நீ எப்பொழுது என்னிடம் வரப்போகின்றாய்?

தயவு செய்து வா! என் அன்பே!
தயவு செய்து வா!

காதல் வீதிகள்,
பூங்காக்களிலுள்ள பூ மொட்டுகள்,
என்னைச்சுற்றியுள்ள எல்லா வர்ணமயமான பொருள்களும்,
என்னைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கின்றன
எப்பொழுது நீ ஆற்றங்கரையில் நின்று
காதல் பாட்டைப்பாடுவாய் என்று.

இதழ் அவிழ்க்கும் மலரைப்போல்
தயவு கூர்ந்து என் இதயத்துக்கு அருகாக வா.

உன்னைத்தூரத்தில் இருந்து பார்ப்பதால்
எனக்கு அமைதி கிடைப்பதில்லை.

இது போல் எவ்வளவு காலம்தான் என்னை நீ சித்திரவதை செய்யப்போகின்றாய்?

எவ்விதம் நீ ஒரு காதல் நெஞ்சத்தை
நம்புவாய்?

அது இன்னுமொருவர் மேல் காதல் கொண்டு விடக்கூடும்?

அவ்விதம் நடந்து விட்டால் நீ மிகவும் வருந்துவாய்.

எனது கனவுகளின் இராணியே
நீ எப்பொழுது என்னிடம் வரப்போகின்றாய்?