பாட்டியல் நூல்களால் வரையறுத்துக் கூறப்பட்ட சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று.
“குழவி மருங்கினும் கிழவதாகும்”1 (தொல்.1030)
என்னும் தொல்காப்பிய நூற்பாவானது, தாம் விரும்பும் கடவுளையோ, பெரியோரையோ, குழந்தையாகப் பாவித்து அவர்தம் சிறப்புகளை எடுத்துரைப்பது பிள்ளைத்தமிழாகும் என்று இலக்கணம் கூறுகிறது. பாட்டுடைத் தலைமக்களின் பெருமைகளைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம் நூறு பாடல்களால் பாடப்படுவது மரபாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பன இருபாற் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான ஏழு பருவங்களாகவும், சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்பன ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும், கழங்கு (அம்மானை), நீராடல், ஊசல் என்பன பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் இறுதியில் அமையும் மூன்று பருவங்களாகவும் அமைகின்றன.
நூலமைப்பு
கர்மவீரர், கிங் மேக்கர் என்று புகழப்படும் காமராசரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு புலவர் செந்தமிழ்ச் செல்வன் அவர்களால் இயற்றப்பட்டதே ‘பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழாகும்’. இந்நூலானது பிள்ளைத்தமிழ் மரபன் படியும், நூற்காப்பாக மூன்று பாக்களையும், இறுதியில் ஒரு வாழ்த்துப்பாவையும் கொண்டு மொத்தம் 104 பாக்களால் இயற்றப்பட்டுள்ளது. இத்துடன் காமராசரின் அரசியல் குருவான தீரர் சத்தியமூர்த்தியின் பெருமைகளை எடுத்துரைக்கும் பஞ்சகத்துடன் இந்நூல் தொடங்குகிறது. பஞ்சகம் என்பது ஒரு ‘பொருள் பற்றி ஐந்து பாடல்கள்’ பாடுவதாகும். காப்பு பருவத்தில் திருமால், சிவன், நான்முகன், திருமகள், கலைமகள், மகாசக்தி, புத்தர், அருகன், இயேசுபிரான், அல்லா ஆகியோர் குழந்தையைக் காக்க வருமாறு வேண்டுவதிலிருந்து ஆசிரியரின் சமரசக் கொள்கையை அறிய முடிகின்றது. மேலும் செங்கீரைப் பருவம் முதல் சிறுதேர்ப் பருவம் ஈறாக ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு குறந்தலைப்பிட்டு ஆசிரியர் போற்றிபாடியிருப்பது புதுமையான ஒன்றாக விளங்குகிறது.
பிறப்பும் வளர்ப்பும்
காமராசர் எளிய குடும்பத்தில் குமாரசாமி-சிவகாமி அம்மையார்க்கு மகனாகத் தோன்றி மக்களைக் காத்தார். பாரதத்தாயின் விடுதலைக்குப் பாடுபட்டார். இவர் பிறந்த குழலைக் கவியரசு கண்ணதாசன்,
“மாமதுரை நாட்டில்
மறவர் படை நடுவில்
தேமதுரத் தமிழ் பாடும்
திருநாடார் தங்குலத்தில்
வாழையடி வாழையென
வந்த தமிழ்ப் பெருமரபில்
ஏழை மகன் ஏழையென
இன்னமுதே நீ பிறந்தாய்
நிமிர்ந்தால் தலையிடிக்கும்
நிற்பதற்கே இடமிருக்கும்
அமைவான ஓர் குடியில்
ஐயா நீ வந்துதித்தாய்”2
என்று பாடியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். காமராசர் தன் தந்தை குமாரசாமியின் மறைவுக்குப்பின் அவரது பாட்டி பார்வதி மற்றும் தாயார் சிவகாமி அம்மையாரின் அரவணைப்பிலே வளர்ந்தார் எனும் செய்தியினை வெளிப்படுத்தும் விதமாக,
‘பாட்டியவள் பார்வதியும் பற்றுமிகு தாயவளும்’ (செங்.2)
‘கதைனில் வாணிக்கத்தைக் கவனித்துக் கொண்டிரு நீ
கவலையிலை என்று தாயும்’ (செங்.2)
‘சீர் கொண்ட விருதுநகர் சிவகாமி மைந்தன் நீ’ (செங்.3,4)
என்ற பாடலடிகள் செங்கீரைப் பருவத்தில் இடம் பெற்றுள்ளன.
காமராசர் எனப் பெயர் பெற்றமை
காமாட்சி என்றே முதலில் காமராசர்க்குப் பெயர் சூட்டப்பட்டது. “பார்வதிப் பாட்டி அப்படிப் பெயரிடுவதற்கு தேவி மீனாட்சியின் மீது அவர் கொண்டிருந்த இறைபக்தியும் பிரியமும் தான் காரணம் ஆகும்”3 காமாட்சி என்பது அவர்களது குலத்தெய்வத்தின் பெயருமாகும். சிவகாமி அம்மாள் காமராசரை ராஜா என்றே செல்லமாக அழைத்து வந்தார். பிற்காலத்தில் இரு பெயர்களையும் இணைத்துக் காமராசர் என்று அழைத்தனர்.
பிடியரிசிப் பள்ளிக்கூடம்
வேலாயுதம் என்பவர் நடத்திய திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிப்பைத் தொடங்கிய காமராசரைப் பின்பு, சத்திரிய சாலை பள்ளியில் சேர்த்தனர். “இப்பள்ளி நாடார் இன மக்களது கூட்டுறவால் துவங்கப்பட்டதாகும். பள்ளியிறுதி வகுப்பு வரை படிக்க வசதியுள்ள இப்பள்ளியில் 1888 ஆம் ஆண்டில் இலவசக்கல்வி அளிக்கப்பட்டு வந்தாலும் அப்பள்ளி மாணவர்களின் குடும்பத்தினர் நாள்தோறும் நன்கொடையாகப் பள்ளிக்குக் கொடுத்த பிடியரிசியைக் கொண்டு தான் இப்பள்ளிக்குப் பிடியரிசிப் பள்ளிக்கூடம் என்று பெயர் வந்தது”4 என்ற பாலசுப்பிரமணியனின் கருத்து இங்கு ஒப்பு நோக்கத்தக்தாகும்.
இளம் பருவத்து நிகழ்வுகள்
சிறுவயது முதல் காந்தியின் பற்றிலும், தீரன் சத்தியமூர்த்தி வழியிலும் தம் அரசியலை அமைத்துக் கொண்டார். தேச விடுதலைப் பணிகளில் ஈடுபட்டதோடு அரிசனப்பிள்ளையை ஆலயத்திற்குள் பிரவேசிக்கச் செய்தது, திருடனைப் பிடித்து சங்கலியால் மதயானையை அடக்கியது முதலான இளம்பருவத்து நிகழ்வுகள் நூலில் அங்காங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவையாவன,
“திடமுடனே தேசமிசைப் பற்றுகொடு சமர் புரிவோய்” (செங்.2)
“மிகக் கொடிய கள்வன் தன்னை மேலான நண்பருடன் மிக எளிதில்
பிடித்திட மேதாவி காமராஜ் (செங்.3)
“திண்பறைகள் முழங்கிவரப் பக்தியுடநாடிவரும்
திருக்குமரன் என்னும் சேயை
அரிசனத்துப் பிள்ளையினை ஆலயத்துள் இழுத்து வரும்” (செங்.4)
“சகமுனால் தலைமகன் காந்தியின் வழி செல்லும்
சத்தியன் வழி நின்றாய்” (செங்.5)
“இரும்பியன்ற சங்கிலியால் கருங்களீற்றின்
வெறிய கற்றும் எம்பிரான்” (முத்.1,2,3,4)
இலவசக்கல்வியும் மதிய உணவுத்திட்டமும்
காமராசர் தமிழகத்தின் முதன் மந்திரியாக வந்தவுடன், தான் கற்காத கல்வியைத் தனக்குப் பின்னால் வரும் தலைமுறையினர் கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இலவசக் கல்வியையும், மதிய உணவுத்திட்டத்தையும் தொடங்கினார். எனவே தான், அவர் ‘ஏழைப் பங்காலன்’, ‘கல்விக் கண் திறந்த காமராசர்’ என்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். பாரதியார்,
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னை பாலினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
என்று கூறியதை அப்படியே நடை முறைப்படுத்தியவர் காமராசர். ஏழைகளுக்குக் கல்வி கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் “பொருளாதாரத்தில் அடிதட்டு நிலையிலுள்ள நம் மக்களுக்குக் கல்வி தந்து இழந்திருக்கும் தங்கள் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். இதுதான் இப்போது நாம் செய்ய வேண்டிய ஒரே சேவையாகும்” என்று விவேகானந்தர் கூறுவது இங்கு கருதத்தக்கது ஆகும்.
ஏழ்மையில் பிறந்து வளர்ந்த காமராசர் ஏழைகள் உயர இதன்படி 4,400 தொடக்கப்பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தைக் தொடங்கி 16 லட்சம் மாணவர்கள் பகற்பொழுதில் பசியாற வழியமைத்தார். இத்திட்டம் 1956இல் நடைமுறைக்கு வந்தது. கி.பி.1960இல் ஏழைகள் அனைவருக்கும் 11ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தார். 1963இல் அனைவருக்கும் இலவசக் கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனால் தான் காமராசர் ‘கல்வித்தந்தை’ எனப் போற்றப்படுகிறார். இதனை,
“பட்டிகள் தொட்டிகள் எங்கணும் பள்ளிகள்!
பதினோரம் நிலைவரை இலவசக் கல்வியே!
பகலுணா இலவசம்! ஏழையர்க் இலவசம்” (முத்.10)
“ஏழையர்க்கு மதிய உணவை உவந்தளித்த மதியே வருக வருக”
(வரு.10)
என்னும் பாடலடிகளின் வழி ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.
தொழிற்புரட்சி
தாழ்நாட்டில் தொழிற்புரட்சி ஏற்பட்டு மக்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் காமராசரால் கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைகள் குறித்தும் அறியாமையை அகற்றிட அவர் திறந்த கல்விச்சாலைகள் குறித்து ஆசிரியர்,
“மேட்டூரில் சுருங்கைவழி மின்தட்டம் செய்தாய்
மேன்மலையில் குந்தா நீர் மின்திட்டம் செய்தாய்
காட்டூர்கள் பயன்பெறவே நீர் புளம்பாடிக் கால்வாய்!
கண்டனையே! வண்டமிழா! கொண்டனையே புகழே
நாட்டுக்குள் கல்லூரி நூற்றுக்கும் மேலே
நாட்டினையே! உயர்பள்ளி ஆயிரத்தில் மேலே!” (செங்.9)
என்ற பாடல் வரிகள் விவரித்துக்காட்டியுள்ளார்.
அணைகளும் பாசனத் திட்டங்களும்
கமராசர் ஆட்சிக் காலத்தின் அணைக்கட்டுத் திட்டங்களில் மிகப்பெரியது கீழ்பவானிதிட்டம் ஆகும். மேட்டூர் அணைத்திட்டம், மணிமுத்தாறு திட்டம் கட்டளைக்கால் வாய்த்திட்டம், புள்ளம்பாடித்திட்டம், அமராவதி அணைத்திட்டம் போன்ற ஒன்பது திட்டங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் 25 சதவிகிதத் தள்ளுபடியுடன் நீண்ட காலத் தவணையில் விவசாயிகளுக்குக் கடன் உதவிகளையும் வழங்கி விவசாயிகளின் நலம் உயர பாடுபட்டவர் காமராசர்.
தொழிற்சாலைகள்
சென்னை, பெரம்பூரில் உள்ள இரயில் பெட்டித் தொழிற்சாலை கிண்டிக்கும் அருகிலுள்ள ஆலிவெட்டி எனும் இத்தாலிய நிறுவனம் ஒத்துழைப்புடன் இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் தொழிற்சாலை. நீலகிரியில் கச்சாப் பட்டச்சுருள் உற்பத்தி தொழிற்சாலை, திருவெறும்பூரில் கனரகக் கொதிகலன் சாலை. ஆவடியில் ராணுவத்தளவாடத் தொழிற்சாலை, நந்தம்பாக்கத்தில் அறுவை சிகிச்சை செய்யும் கருவிகள் தொழிற்சாலை, பட்டாபிராமில் ரயில்வே வாகனங்கள் செய்யும் தொழிற்சாலை இவ்வாறாகப் பல தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் காமராசர் வகுத்தார்.
“1954இல் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது தமிழகத்தின் மொத்த ஆண்டு வருமானம் 43 கோடியாக இருந்தது. 1963இல் அவர் பதவி விலகிய போது அது 134 கோடியாக உயர்ந்திருந்தது”7 என்பது அவரது மக்கள் சார்ந்த பணியின் வேகத்தையும் தேசபக்தியையும் பறைசாற்றுகிறது. இவற்றை விளக்குவதாக,
“சென்னை பெரம்பூர் தொடர்பெட்டி!
சீரா வடியில் பெருந்தாங்கி!
சேணார் உதகைப் படச்சுருளே!
சேலகம் நகரில் உருக்காலை!
மன்னைப் பதியில் நெல்லாலை!
சேமகிடங்கே! உரவாலை!
மதுரை யருகே தொழிற்பேட்டை!
நெல்லை கடலூர் பெரும்பேட்டை” (சிற்.8)
என்ற பாடலடிகள் அமைந்துள்ளன.
ஒருவன் பிறக்கும் குடிக்கும் அவனது வாழ்வின் முன்னேற்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை காமராசரின் வாழ்க்கை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும் காமராசரின் பிறப்பு, வளர்ப்பு, இளமைப்பருவம் குறித்த செய்திகளையும் அவரது திட்டங்களான இலவசக்கல்வி, மதிய உணவுத்திட்டம், தொழிற்புரட்சி, அணைகளைக்கட்டி விவசாய மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த பாசனத் திட்டங்களையும் இப்பிள்ளைத்தமிழ் நூலின் வழி அறிய முடிகிறது.
சான்றெண் விளக்கம்
1.இளம்பூரணர் தொல்காப்பியம் நூற்பா.1030
2.பாலசுப்பிரமணியம்.ப., கல்வித்தந்தை காமராசர், ப.2
3.நாகூர் ரூபி காமராஜ் – கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை ப.19
4.முந்நூல் ப.3
5.பாரதியார் கவிதைகள், ப.45
6.பாலசுப்பிரமணியம்.ப., கல்வித்தந்தை காமராசர், ப.38
7.நாகூர் ரூபி காமராஜ் – கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை ப.71
gmari3696@gmail.com
* கட்டுரையாளர்: திருமதி.செ.சாந்தி, முதுகலைத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர்.