முள்ளிவாய்க்கால் அவலம் பற்றிய தீர்க்கமான அரசியல் ஆய்வு! தேசம் ஜெயபாலனின் நூல் குறித்துப் பாராட்டு.

முள்ளிவாய்க்கால் அவலம் பற்றிய தீர்க்கமான அரசியல் ஆய்வு! தேசம் ஜெயபாலனின் நூல் குறித்துப் பாராட்டு.       ‘2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரபாகரனின் மாவீரர் தின உரையிலிருந்து இன்றைய காலகட்டத்தை உபயோகித்து, தமிழர்களுடைய போராட்ட வரலாற்றையே ஆராய்ந்து பார்த்துள்ளது இந்த நூல். தமிழ் மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர்நது தமிழர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை அரசு, இந்திய அரசு என்ற ஈழப்போராட்டத்தின் பங்குதாரர்கள் பற்றியும் பக்க சார்பில்லாமல் இந்நூலில் அழகாகச் சொல்லியிருக்கிறார் ஜெயபாலன். ஜனநாயகத்திற்காக, மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தார்மீகப் போராளியின் பதிவாகவே இந்நூலை நான் பார்க்கிறேன்’ என்று அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள் அண்மையில் கிழக்கு லண்டன் றினிற்ரி மண்டபத்தில் இடம்பெற்ற ‘வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற நூல் அறிமுகத்தின்போது அந்நூல் குறித்துப் பேசுகையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் வி.சிவலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் ‘2008 – 2009 ஆண்டுக் காலப்பகுதியில் மக்கள் அனுபவித்த அவலங்களை வெளிக்கொண்டுவருவதற்கு ஜெயபாலன் பதிவு செய்ய முயற்சித்து இருக்கிறார். ஜெயபாலன் என்ன அரசியல் நிலைப்பாட்டில் இருந்தார் என்பது இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களுக்குத் தெரியாது. ஆனால் இதில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் தேசியத்தைக் கைவிட்டு சிறீலங்காவின் தேசியத்துள் கரைந்து போய்விடவேண்டும் என்றுதான் கூறுவதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எரிச்சோல்ஹைம் போன்ற வெளித்தரப்பு அதிகாரங்களின் ஏவலாளிகளுக்கு கொடுக்கின்ற மதிப்பை எங்களுடைய புலம்பெயர்ந்த செயற்பாட்டாளர்களுக்கு கொடுக்கவில்லை என்பது எனக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்கின்றபோது எழுகின்ற வினா. ஆனாலும் ஜெயபாலன் உண்மையிலேயே ஜனநாயகத்திலும் இவ்வாறான கருத்துப் பரிமாற்றத்திலும் ஆர்வமுடையவர் என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்றும் தெரிவித்தார்.

‘இந்த நூல் அறிமுவிழாவில் அரசியல் ஆய்வாளரும், ஒரு பேப்பர் ஆசிரியருமான கோபி ரத்தினம் பேசுகையில்: இது மிகவும் முக்கியமானதொரு பதிப்பு. இது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அலட்சியப்படுத்த முடியாதது. உடனுக்கு உடன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவ்வப்போது தொகுத்து மிகவும் நிதர்சனமான உண்மையயை சந்தேகத்திற்கு இடமின்றி பதிவு செய்துள்ளது இந்நூல். தனித்துவமான மனிதனாக இருந்து ஜெயபாலன் ஒரு பார்வையாளனின் பதிவாக இந்நூலைக் கொண்டுவந்துள்ளார்’ என்று தெரிவித்தார். ‘சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான  சையது பசீர் பேசுகையில்: வரலாற்று ஆசிரியர்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு சிலதை மேற்கோள்காட்டி எழுதுவது சரியான சுலபம். ஆனால் அந்த நேரம் நடக்கின்ற போது இருக்கின்ற விசயத்தை வைத்துக்கொண்டு என்ன நடக்கப் போகின்றது. என்ன செய்ய வேணும் என்று சொல்வது ரொம்ப சிரமமான விசயம். அதை ஜெயபாலன் ஓரளவுக்கு திறம்படத்தான் செய்துள்ளார். சிறிலங்கா அரசுதான் கொலைகளை செய்கிறது என்று திட்டவட்டமாக விமர்சனம் வைக்கிறார். மற்றப் பக்கத்தில் புலிகள் மக்களை சுட்டுக்கொhல்வது போராளிகளை பலவந்தமாக பிடிப்பது திட்டவட்டமாகச் சொல்லப்படுகிறது. இது கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய வரலாற்று ஆவணம். நடந்தது தவறு என்று ஒத்துக்கொள்வதற்கு அதற்கு தலைமை தாங்கியவர்கள் சாக்குப்போக்கு சொல்லத் தேவையில்லை. அதில் ஜெயபாலனின் குரல் நியாயமானது. இதுவொரு அருமையான புத்தகம்’ என்று தெரிவித்தார்.

‘கோட்பாட்டியலாளர் ரகுமான் ஜான் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்: பக்கத்திற்குப் பக்கம் ஆதாரங்களை வைத்துப் பதிவு செய்யப்பட்டுள்ள நூல். வன்னி மக்கள் பட்ட அவலங்களைப் பற்றிப் பேச யாரும் இல்லாத நிலையில் அது பற்றி எழுதுவது கூட ஆபத்தான நிலையில் ஜெபாலனின் இந்த புத்தகம் ஒரு முக்கியத்தவம் வாய்ந்த பதிவு. இதுவொரு ஆச்சரியமான பதிவு. முழுத் தகவல்களோடும் கூடிய பதிவு. மிகத் துணிச்சலாக எழுதக் கூடிய பத்திரிகையாளனாக ஜெயபாலனை நான் காண்கிறேன். மிக நெருக்கடியான நிலைமைகளின் மத்தியிலே இந்நூல் எழுதப்பட்டு உள்ளது’ எனத் தெரிவித்தார்.

இவ்விழாவிற்கு தலைமை வகித்த திரு.ரி. கொன்ஸ்ரன்ரைன் அவர்கள் பேசியபோது: தகவல் அனுபவத்துடன் செயற்பாட்டு அனுபவங்களும் இணைவதால் எதிர்கால நிலைமைகளை தெளிவாகக் கணிக்கின்றது ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற இந்தநூல். இதுதான் நடக்கும் என்று மிக உறுதியாகவே ஜெயபாலன் கணிப்பிட்டு உள்ளார். இதுவே ஒரு அரசியல் ஆய்வாளனுடைய முக்கியமான பதிவு – பங்களிப்பு. யாராவது மாற்றத்திற்கான ஒரு தூண்டுகோலாக செயற்பட விரும்பினால் இந்த நூல் அவர்களுக்கு உதவியாக இருக்கும்’ எனத் தெரிவித்தார். 

நூலாசிரியர் ஜெயபாலன் நன்றியோடு கூடிய ஏற்புரையை வழங்கியிருந்தார். முரண்பட்ட அரசியல் பின்னணிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  இவ்விழாவில் கலந்துகொண்டமை குறிப்பிடத் தக்கதாகும்..

NavajothyBaylon@hotmail.co.uk