நெடுங்கவிதைகளாய் உருமாறி வாழ்வியலைப் பாடும் சிறுகதைகள்

ஒரு தென்னைமரம்‘லௌகீகம் வியாபித்த வாழ்வியற்தளம் தனி  பொதுவாழ்வின் தரிசனங்களாய் விரிகின்றபோது நான் தரிசித்த, என்னைத் தட்டிவிட்ட நிகழ்வுகள் என் ஜீவனிலேறி அவை சிறுகதைகளாக வடிவம் பெற்றன’’ எனக் கூறும் கவிஞர் கிண்ணியா ஏ எம்.எம் அலியின் இரண்டாவது நூல்தான் ஒரு தென்னைமரம் சிறுகதைத் தொகுப்பு.  1974 இல் இலக்கிய உலகில் தடம் பதித்த  கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம் அலி அவர்களின் ஆக்கங்கள் தாங்கி வராத தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகளே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். தேசிய சர்வதேச ரீதியில் நடாத்தப் பட்ட ஏராளமான இலக்கியப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும்  விருதுகளையும் பட்டங்களையும் அள்ளிக் குவித்ததோடு அண்மையில் இலக்கியத்திற்கான  கலாபூஷணம் அரச கௌரவத்தையும்பெற்றிருப்பது றிப்பிடத்தக்கது.

 இவரின்முதல்கவிதைத்தொகுப்பு குடையும் அடைமழையும். கவிஞர் அண்ணல் அவர்களின் கவிதைத் தொகுப்புக்குப்பின். கிண்ணியாவில் வெளியான கனதியான மரபுக் கவிதைத் தொகுப்பாக குடையும் அடைமழையும் தொகுப்பைத்தான்  கூறவேண்டும்.   உண்மையில் கவிஞர்களின் உரைநடைகள் கவித்துவம் மிக்கவை.வரிகளை விட்டும் விலக விடாது ஒரு காந்தம்போலே விழிகளை ஈர்த்துநிற்பவை.அதிலும் நாம் சார்ந்த சூழற்பின்னணியில் பின்னப்பட்டவையெனில் சொல்லவும் வேணுமா?

உள்ளே மொத்தமாய் 18 சிறுகதைகள். அவை வெளியான பத்திரிகை, திகதியைக் கூட கச்சிதமாய் அட்டவணைப் படுத்தியிருக்கிறார். கிண்ணியாவின் தேர்ந்த படைப்பாளிகளான எஸ்.அருளானந்தம், கே எம்.எம் எம்.இக்பால், கிண்ணியா நஸ்புல்லாஹ் ஆகியோரின் உரைகளையும் உள்ளடக்கியுள்ளது.
       
கலாபூஷணம் அருளானந்தம் அவர்களின் அணிந்துரையில் ‘’ ஓர் இலக்கியக் கலைவடிவத்தை எழுதி முடித்தபின் எழுத்தாளன் இழக்கும் சக்தி அபரிமிதமானது.ஒரு நிகழ்வு சாதாரண நபரை அவ்வளவு தூரம் பாதிப்பதில்லை.ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு அது உணர்வில் கலந்து விடுகிறது.பெரியதொரு தாக்கத்தைக் கொடுத்து விடுகிறது.இலக்கியவாதி சிலந்தி வலையமைப்பது போல்,பறவைகள் கூடு கட்டுவதுபோல்,ஓர் உருவத்தைக் கொடுத்து அந்த உணர்ச்சிகளை அவற்றினுள் குடியேற்றி விடுகிறான்.’’ என்கிறார்.

கவிஞர் நஸ்புல்லாஹ் ‘’ ஈழத்துப் படைப்பாளிகளில் கலாபூஷணம் ஏ.எம்.எம்.அலி அவர்கள் மிக முக்கியமானவர்.இவருடைய எல்லாக் கதைகளையும் படிக்கும்போது,சமூகம் மீதான உறவு அல்லது தொடர்பு அலி அவர்களுக்கு நிறையவே இருக்கின்றது என்பதைத் தெளிவாக அடையாளப் படுத்துகின்றது.’’ என்கிறார்.
கலாநிதி கே.எம்.எம்.இக்பால்,

”கவிதைத்துறையிலே கிண்ணியாமண்ணுக்குப் பெருமை சேர்த்த இவர் சிறுகதை இலக்கியத்திலும் தன் ஆழுமையை வெளிப்படுத்தி வருகிறார்.சிறுகதைகளைப் படைப்பதில் இவருக்கு உள்ள ஆர்வத்தின் வெளிப்பாடாக இந்நூல் அமைகிறது.யதார்த்தமும் வறுமையும் மண்வாசனையும் இவரது சிறுகதைகள் முழுக்க விரவிக் கிடக்கிறது.” என்கிறார்.
     
இத்தொகுதியின் முதல் கதை ஒரு தென்னைமரம். காணிப் பகிர்வில் அடி ஒருபுறமும், நுனி மறுபுறமுமாய் அல்லாடுமொரு தென்னைமரம். அதன் குலைகளை ஆளாளுக்கு விட்டுக் கொடுக்கவிரும்பாத சுயநலங்கொண்ட அக்கா தங்கைகள்.இவர்களின் நீளச்சொண்டுகளுக்கிடையில் மாட்டிக்கொண்டு நெளியும் அப்பாவிநாயகனின் உள்ளார்ந்த நேர்மை. இந்த அக்கா தங்கைகளின் உப்புச்சப்பில்லாத சண்டையே ஒரு அழகிய நெடுங்கவிதையாய் தொடர்கிறது முதல் கதையில். ஆனாலும் அது காட்டும் வாழ்வியல் தரிசனம் ஆழமானது,அற்புதமானது.. இக்கதையின் மகுடமே நூலுக்கும்.பாதிப்பக்கமே தெரிகிற தென்னைமரமாய்வரும் எஸ்.நளீமின் அட்டைப்படமும் இதனையே உணர்த்திநிற்கிறது போலும்.
 
இதேபோல் ஏனைய ஒவ்வொரு கதைகளுமே குறைகாணவியலாத உணர்வுகளின் உச்சமான படைப்புக்களே.கவிஞரின் மென்மனசு ரௌத்திரமாகிய கணங்களை வெகு கச்சிதமாகப் பத்திரப்படுத்தியிருக்கிறார் தம் ஒவ்வொரு சிறுகதைகளிலும்.குடும்பம் சமூகம் அரசியல் ஆன்மீகத்தளமென தான் புழங்கும் சகல தளங்களையுமே கதைக்குள் பரவவிட்டிருக்கிறார்.      

மத்திய கிழக்கு மாப்பிள்ளை,சரியான தண்டனை சிறுகதைகள் இரண்டிலும் கணவன் பொருள்தேடி வெளிநாடு செல்வதால் மனைவி மற்றும் குடும்பத்தார் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.   ‘எங்கட பெண் இனம் முகர்ந்து கசக்கி எறிவதற்காகவே முகிழ்த்திருக்கிற மலர்கள் என்றெண்ணாதீங்க…..’ ‘அண்ணல் நபி[ஸல்] அவங்கட அருமை மகள் பாத்திமா[ரலி] யையும் அலி[ரலி]யையும் எண்ணிப் பாருங்க.எத்தன துன்பம் வந்தாலும் இனியொருபோதும் இவங்க போல இனிய தம்பதியரில்லை என  வாழ்ந்தாங்க.அவங்கட தாம்பத்தியம் அன்பெனும் அத்திவாரத்தில் கட்டப் பட்டிருந்தது.இந்தக் கால வாழ்க்கையைப் போல பொருளெனும் அத்திவாரத்தில் போடப் படவில்லையே!’ ‘  கடிதத்தைப் படித்துமுடித்தபோது அவள் கதறவில்லை.கண்ணீர் பெருக்கெடுக்கவில்லை!பூமி பிளக்கவில்லை!அதனுள் அவள்புதைந்து போகவுமில்லை’.-மத்திய கிழக்கு மாப்பிள்ளை சமாதானத்திற்கான யுத்தம் எனும் போர்வையில் இனவொழிப்பை நடத்துகின்ற பூமியில், பேரவலங்களே தமிழ் மக்களின் வாழ்வாய்ப் போன பூமியின் நீதியும், நியாயமும் நேர்மையும் ,செத்துப்போன இந்த ஈழத்துப் பூமியில்,மேலும் வாழ்வது சிறப்பல்ல என்பதைப்போல……’  – புதிய மனிதனாகியும் ‘உணவுமுத்திரையின் பெறுமதியில் மூன்றிலொரு பங்கைக் கொடுத்து மடக்கி எடுக்கின்ற நீவிரென்ன முகம்மதியனா என்றெல்லாம் ஊர்ச்சுவர்கள்கூறிய உறைப்பான சேதிகள் யாவும் உண்மையென்பதை இவர்களிருவராலும் மறுக்க முடியுமா? ‘ஆமீன்’ கூற மறந்தவரை அரசு  ‘இதோ  ஜாமீன்’என்று கூறி வீட்டுக்கு அனுப்பியிருந்தது’.-[ முத்திரை தந்த முத்திரை]  போன்ற வரிகள் நம் மனதிற்குள் எழுப்பும் கேள்விகள் ஆயிமாயிரம்.
    
ஒரு   சராசரிப் பார்வை தவற விடுகிற எத்தனையோ நுண்வெளிகளை இலக்கியக் கண்கள் கண்டுகொள்கின்றன.அவ்வனுபவங்களைத் தன்னோடு மாத்திரமே சுருக்கிக் கொள்ளாது அடுத்தவரோடும் புனைவுகளினூடே பகிர்ந்துகொள்கின்றன.அப்பகிர்வில் தானே ஆனந்தமும் பேரமைதியும் அடைகின்றன.
 
ஆனாலும் இதிலுள்ள சில படைப்புகளில் அந்தப் பார்வை தொடர்ச்சியாய் அழைத்துவரும் பிரசாரக்குரல் அல்லது சுயமேன்மைத்துவம் படைப்புக்களை ஒற்றைபார்வையுடையதாய் எண்ணத்தோன்றுகிறது.பல சமகால நவீனபடைப்புகளில் இவ்வுத்தமத் தன்மை சிதைக்கப்பட்டு அவர்தம் பலவீனங்களும் வெளிப்படுத்தப் படுகின்றமை கவனிப்பிற்குரியது.பல எதிர்வினைகளையும் முகங்சுளிப்புகளையும் அவை பெறுகிற போதிலும் அப்படைப்புக்கள் பல்பரிமாணத்தன்மையோடும் படைப்பு நேர்மையோடும்  மிளிர்வதைக் காணமுடிகிறது. ஆனாலும் இக்கதைகளில் மறைந்திருக்கும் பிரசாரக் குரல் கதையோட்டத்தையும் அதன் செழுமையையும் எவ்வகையிலும் பாதிக்கவில்லையென்பதையும் இங்கு கூறித்தானாக வேண்டும்.

மேலும் கவிதை சிறுகதைத்துறையில் ஓரளவு செழிப்பான நிலையை அடைந்துள்ள கிண்ணியாவின் நாவலிலக்கியத்துறை பெரிதும் வரட்சித் தன்மையாகவே உள்ளது. எனவே  கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம் அலி போன்ற தேர்ச்சிமிக்க படைப்பாளிகள் இதுதொடர்பிலும் கவனங்கொள்வதோடு,தமக்கிருக்கும்  செறிவான ஆங்கிலப்புலமையைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்புத் துறையிலும் தம் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்வதோடு இன்னும் பல காத்திரமான தொகுப்புக்களையும் கலையுலகிற்குக் கொடுக்கவேண்டும் எனவும் கவிஞர் கலாபூஷணம் கிண்ணியா ஏ.எம்.எம் அலி அவர்களை வாழ்த்துகிறேன்.

‘நூலின் பெயர் – ஒரு தென்னை மரம் (சிறுகதை)
நூலாசிரியர் – கிண்ணியா ஏ.எம்.எம். அலி
தொலைபேசி – 077 2765174
வெளியீடு – ஹாஜரா வெளியீட்டகம்
விலை – 350 ரூபாய்
கிண்ணியா எஸ். பாயிஸா அலி

Mrs. S.Faiza Ali <sfmali@kinniyans.net>