மூளை விற்றவர்களின் கதை
-துவாரகன்
நான் சிறுவனாக இருந்தபோது
அயலூரில்
ஒரு மூளைதின்னி இருந்தானென்று
அம்மா சொல்வாள்.
வேகும் பிணத்தின்முன்
சுடுகாட்டில் காத்திருப்பானாம்.
இப்போ
மூளை விற்ற
மனிதர்களைக் கண்டுகொண்டேன்.
பறக்கும்தட்டுக் கிரகவாசிகளுக்கு
நல்ல விலைக்கு மூளை விற்றவர்கள்
செம்மறியாட்டினதும்
குரங்கினதும்
காண்டாமிருகத்தினதும்
மூளைகளை மாட்டிக் கொள்கிறார்கள்
சித்தம் கலங்கிப் பேய்களாகிறார்கள்
உடையுண்டு நிறமுண்டு
கையுண்டு நகமுண்டு
காலில்லை பேயென்று
என் குழந்தை சொல்கிறது
நான் சொல்லிக்கொள்கிறேன்
அவர்கள் மூளை கழற்றியவர்கள் என்று
நாங்களும் யோசிக்கலாம்
எங்கள் மூளைகளை
நல்ல விலைக்கு விற்பதுபற்றி…!
08/2011
kuneswaran thuvarakan <kuneswaran@gmail.com
ரமழானே இன்னொருமுறை சந்திப்போமா..?
– ஜே.ஜுமானா, புத்தளம்.
மின்னல் போல வானில் மின்னி
எங்கும் வான வேடிக்கை…
எம் கண்கள் ஓரம் சின்னதாக
ஏனோ இன்று நீர்த்துணிக்கை…
வானில் தலைப்பிறையின்
புன்னகையோ…?,
ஊரில் தக்பீரின்
முழக்கங்கள்…!
ஆம் –
நாளை பெருநாளாம்…
ஆனந்தம் அதனாலாம்…
ஆனாலும் உன் பிரிவால்
துயர் கொண்டு பாடுகிறோம்…
சென்று வா ரமழானே!
நிலைக்காத உலகத்தில்
நீ மட்டும் நிலைப்பாயோ…?!
அடுத்த முறையும்
உன் வரவை எதிர்பார்த்து
அனுப்பி வைக்கின்றோம்
ஏதோ அரைமனத்துடன்…
குர் ஆன் இறக்கப்பட்ட மாதமே!
சுவன வாசல்களை மட்டுமா
திறக்க வைத்தாய்…
எம் உள்ளக்கண்களையுமல்லவா
திறக்க வைத்தாய்…!
எம் “கல்பு”களை கண்ணீரால்
குளிக்க வைத்தாய் –
உன் வாடை பட்டு
“தக்வா”ஆடையணிந்து கொண்டோமே…
“குன்” என்றான் அல்லாஹ் –
குவலயம் ஆனது…
உன்னையும் சந்திக்க
வாய்ப்பளித்தான்,
அவன் வல்லோனே…!
மறுபடியும் உனைக்காண்போம்
மரணிக்காத வரை…
ஆயுளில் அவகாசம்
அவன் தருவானா..?
மௌனமாக…..
– வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) –
ஆத்திரத்தால் உடலில் நிகழும்
காத்திரமான பௌதிக மாற்றம்
காத்திடும் கௌரவ மந்திரம்,
சூத்திரமாய்த் தோன்றிடும் மௌனம்.
அரிய மொழி மௌனம்
பெரிய சாதனைகளும் சாதிக்கும்.
உரிய நேரத்து மௌனம்
எரிய வைக்கும் உண்மையை.
பண்பற்ற சொல்லருவியில் நீந்தி
புண்படுதல் தவிர்க்கும் துணை.
கண்ணியமான கைப்பிடி மௌனம்.
கண்ணிற்குப் புலப்படாப் பௌர்ணமி.
ஒருமித்த கூட்டுறவின் பலத்தில்
இரு கரங்கள் எழுப்பும் ஒலி.
ஒரு கரத்தின் இழப்பு நிலையைப்
பெருமௌனம் தரவும் கூடும்.
காயாகக் கசக்கும் மௌனம்
வாயாடிக்கு வலி தரும் தேள்.
நோயாடா தியான நிதானம்
சாயாத மனதின் மௌனம்.
kovaikkavi@gmail.com .
*******************************
கவிதை : என்று வருமந்த ஆற்றல்?
– வ.ந.கிரிதரன் –
நள்ளிரவுக் கருமை;
மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி
பாய்ச்சும் நிலவு; ‘கெக்க’லித்துச்
சிரிக்கும் சுடரு.
விரிவான் விரிவெளி.
‘புதிர் நிறை காலவெளி.
வெறுமைக்குள் விரியும்
திண்ம இருப்பு.
பரிமாண விலங்குகள்
தாங்கும் அடிமை.
பன்முறையெனினும்
மீறி வியப்பதற்கெதுவுண்டு.
படியளக்கும் படைத்தவரே!
படைத்ததேன்? பகர்வீரா?
அறிவுத்தாகம் மிகுந்த
அலைவு; தாகசாந்திதான்
எப்போது?
அலையெனப் பரவும்
நிலை வரும் வரையிலா?
என்று வருமந்த
நிலை? அன்றி
‘அதிவெளி’ கடக்கும்
ஆற்றல் வரும் வரையிலா?
என்று வருமந்த
ஆற்றல்?
ngiri2704@rogers.com