கவிதை: ஓவியன் பெரேடைப் பற்றி

கவிதை படிப்போமா?அந்த வெண்நீல நகரம் ஓவியவர்களுடையது
அங்குள்ள அனைவரும் கண்டதை புறக்கணித்து கண்டது மறைப்பதை தீட்டுபவர்கள்
இதனால் என்னவோ அவர்களுக்கும் அவர்கள் காணும் வஸ்துகளுக்கும் தீராத போர்
நிறக்கொலைகள், நிறப்படுகொலை, நிறவீக்கம், நிறப்பற்றாக்குறை என
நகரமே எப்போதும் பரபரப்போடு இருக்கும்
துப்பாக்கி குண்டுகள் விரையும் போது முத்தமிடும் காட்சியையும்
முத்தமிடும் போது ஆண்குறிகள் வெட்டுபடும் காட்சியையும் அவர்கள் தீட்டுவார்கள்
அந்த நகரத்தில் பெரேட் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவன்
பகலின் இரத்தத்தை கோப்பையில் ஊற்றி குடிப்பவன் பெரேட்
அவன் தான் அந்த நகரத்தை கேன்வாஸில் உருவாக்கினான்
ஒருகணம் அவன் யோசித்திருக்ககூடும் பெரேட் ஆகிய நான் இருப்பது ஓவியத்திற்குள்ளா
நீலப்பெண் பனிக்கால நாய் போல மஞ்சள் ஆணுடன் பிணைவதை அவன் தீட்டியிருக்கிறான்
சிவப்பு நிற பெருங்கடலின் மீது ஊறும் எறும்புக்கப்பலில்
அந்த எறும்புக் கப்பலில் இருக்கும் நீலப்பெண்னின் உதடுகளில்
புரோட்டான் நியுட்ரான் மேற்கொண்ட காதலை தீட்டியிருக்கிறான்
அந்த நியுட்ரானின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களை பற்றித் துல்லியமாக தீட்டியிருக்கிறான்
எங்கோ அட்ரீனல் கற்பூரம் கொழுந்துவிட்டு எரிகிறது
காட்டுத்தீயைப் போல கற்பனையை வாளியில் அள்ளி அணைக்க முயற்சிக்கிறார்கள்
அது பெரேடின் வீடு தான்
ஓவியத்திற்குள் இருக்கிறது கற்பனையின் கனவுகளின் கையொப்பங்கள் பல
வெளியே என்ன இருக்கிறது என கேட்டால் பெரேட் சொல்லுவான்
ஒன்றுமே இல்லை என இரவின் மார்புகளில் தலையை புதைத்துக்கொண்டே

(சால்வடார் டாலிக்கு )

suryavn97@yahoo.com