திரும்பிப்பார்க்கின்றேன்: பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு – கற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்திற்காக பயன்படுத்திய பெண்ணிய ஆளுமை

பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு“பெண்களது  இலக்கிய மரபை நிறுவுதல் என்பது எப்பொழுதும் சவால்களை எதிர்கொள்வதாகவே  இருக்கிறது. பல  இடைவெளிகள், கேள்விகள் என்றும்  இருந்துகொண்டே  உள்ளன. சங்க  இலக்கியம் தொட்டு இன்றுவரை இந்நிலை தொடர்கிறது. சங்கப்பாட்டுகளில்  எத்தனை  பெண்களுடையவை…? சங்கப்புலவர்களில் எத்தனைபேர் பெண்கள்…?  என்ற  மயக்கம்  இன்னும்  முற்றாகத் தீர்ந்து விடவில்லை. பெயர் தொடர்பான மயக்கமே  இது. ஆணா? பெண்ணா? என்கிற மயக்கம் தற்காலம் வரை தொடர்கிறது.” பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, 2007 ஆம் ஆண்டு வெளியான பெயல் மணக்கும் பொழுது ( ஈழத்துப்பெண் கவிஞர்கள் கவிதைகள் – தொகுப்பு அ. மங்கை) நூலுக்கு எழுதியிருந்த பின்னுரையில்  மேற்கண்ட  வரிகளைப்பார்க்கலாம்.

எஸ்.பொ.வுடன் இணைந்து நாம் தொகுத்த பனியும் பனையும் -புலம்பெயர்ந்தவர்களின் கதைத்தொகுப்பு வேலைகளிலும் எமக்கு இந்த மயக்கம் வந்தது. பல ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களில் இன்றுவரையில் எழுதிவருகிறார்கள். காலப்போக்கில் தொடர்ச்சியான வாசிப்பில் எழுதுவது பெண்களா, ஆண்களா என்பதை தெரிந்துகொள்கின்றோம்.

ஈழத்தில் பெண் எழுத்துக்களை குறிப்பாக இளம் தலைமுறை பெண்படைப்பாளிகளை  எமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும், எம்மத்தியில் இன்றும் அயர்ச்சியின்றி இயங்கும் ஆளுமையான சித்திரலேகா மௌனகுரு அவர்களை  சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் சந்தித்தேன்.  கலை, இலக்கியம், கல்வி மற்றும் ஊடகத்துறையில்  ஈடுபாடுகொண்டிருந்தவர்கள்  வாழ்ந்த ஒரு அழகிய மாடி வீட்டில்தான் சித்திரலேகா – மௌனகுரு தம்பதியரையும் கண்டேன். அந்த இல்லத்தை ஏற்கனவே எனது பத்திகளில் காவிய நயம் நிரம்பிய கலாசாலை என்றும் வர்ணித்துள்ளேன். கொழும்பு – பாமன் கடை என்னும் இடத்தில் அமைந்த அந்த வீட்டில் ‘அப்பல்லோ’ சுந்தா சுந்தரலிங்கம்,  மௌனகுரு, கவிஞர்கள் முருகையன், சிவானந்தன் குடும்பத்தினர் வசித்தனர். அடிக்கடி அங்கு இலக்கிய சந்திப்புகள் நடக்கும். நீர்கொழும்பில் ஏதும் இலக்கியக்கூட்டங்கள் ஒழுங்கு செய்யும்பொழுது அந்த இல்லத்திலிருப்பவர்களிடம் சென்றுதான் ஆலோசனைகள் பெறுவேன். அன்று முதல் இன்றுவரையில் அங்கிருந்தவர்களுடனான எனது நேசிப்புக்கு எந்தவொரு விக்கினங்களும் வந்ததில்லை. கலை இலக்கிய ஊடக உலகில் உறவுகள் ஆரோக்கியமாக  நீடித்திருப்பது அபூர்வம் என்பதனால்தான் அவ்வாறு சொல்கின்றேன்.  சித்திரலேகா அக்காலப்பகுதியில்   இலங்கை வானொலி கலைக்கோலத்தில்  இலக்கிய உரைகளை நிகழ்த்தியபோது கேட்டிருக்கின்றேன். இவரது வானொலி ஊடகப்பிரவேசம் குறித்து ஜோர்ஜ் சந்திரசேகரன் தமது நூலிலும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்தப்பதிவு சித்திரலேகாவின் ஆற்றல்களை மேன்மைப்படுத்தாமல், வளர்ந்துவரும்   ஆளுமையை  இனம்காணாமல்  ஆணாதிக்க மனோபாவத்தில் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து, அந்த நூலை எனக்கு வாசிக்கத்தந்த நண்பர்  காவலூர்   ராசதுரையிடமும்  சொல்லியிருக்கின்றேன்.

பெயல் மணக்கும்பொழுது –  அது வெளிவந்த ஆண்டின் (2007) இறுதியிலேயே எனக்கு படிக்கக் கிடைத்தது.   பெண்கவிஞர்களின் கவிதைகளை தொகுப்பதில் நேரும் நெருக்கடிகள், அச்சங்கள் பற்றியெல்லாம் விரிவாகச்  சொல்கிறார் அதனைத்தொகுத்திருக்கும் அ. மங்கை. பெண்கள் குறித்து பெண்களுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும்  தயக்கம்  நீடிக்கிறது.  பெண்கள் தாயாகவும் தாரமாகவும்    இருக்கும்பொழுதும் நெருக்கடிகளை சந்திக்கிறார்கள்.  கல்வி, கலை, இலக்கியம், அரசியல்,  சமூகப்பணி, விழிப்புணர்வு  – மனித உரிமை வேலைத்திட்டங்கள்  முதலானவற்றில்  ஈடுபடும்பொழுது அவர்கள் வசம் அதிகாரம் வந்துவிடக்கூடாது என்பதிலும்  ஆணாதிக்க சமுதாயம்  கவலைகொள்கிறது. இந்தப்பின்னணிகளிலிருந்துதான் பேராசிரியை சித்திரலேகா  மௌனகுரு அவர்களின் ஆளுமைப்பண்பிற்குரிய  பின்புலத்தை அவதானிக்க முடிகிறது. மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தை நோக்கினால், அவருடைய ஆளுமைக்கும் பெண் விடுதலைச்  சிந்தனைகளுக்கும் சுதந்திரவேட்கைக்கும்  பின்புலமாக நிவேதிதா தேவியிலிருந்து பலர் தொடர்ச்சியாக  அவரில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம்.

பாரதியின் கவிதை வரிகள் பலவற்றுக்கு பல ஆளுமைகள்தான் ஊற்றுக்கண்.   சித்திரலேகாவின் வளர்ச்சியிலும் இந்த அம்சங்களை காணமுடிகிறது. வடபுலத்தில் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக குரல்கொடுத்த அவரது தந்தையின் கருத்தியல்களினால்  சிறுவயதிலேயே ஆகர்சிக்கப்பட்டிருக்கும்  இவர், பெற்றவர்கள் கிழக்கில் வாழத்தலைப்பட்டவேளையில்,  மட்டக்களப்பில் பிறந்து வின்சன்ட் மகளிர் கல்லூரியில் பயின்றவர்.  அங்கு தனது  ஆசிரியைகளிடம் கல்வியை மாத்திரம் கற்றுக்கொள்ளாமல் பெண்கள் பற்றிய அறிவார்ந்த  சிந்தனைகளையும்  பெற்றவர்.

கல்லூரிப்பருவத்திலேயே தான் கற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்தவகையில்  மூலதனமாக்கிய  சித்திரலேகா,   மௌனகுரு அவர்களை சந்தித்த பின்னர்– மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் முதலானோரின் கருத்தியல்களிலிருந்து பெண்ணியம், குடும்பம், சொத்துடைமை, அரசியல்,  பொருளாதாரம் , ஒடுக்குமுறை, இனநெருக்கடிகள், சோஷலிஸ யதார்த்தப்பார்வை முதலான இன்னோரன்னவற்றையும்    உள்வாங்கியிருக்கிறார்.

ஒருவருடைய ஆளுமையை பெரிதும் தீர்மானிப்பவர்கள்: பெற்றோர், ஆசிரியர், துணை, நண்பர்கள் வட்டம். சித்திரலேகாவும்  இதற்கு விதிவிலக்கல்ல.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பிரவேசித்தபின்னர்,  அவரிடத்தில் இலக்கியம், அரசியல், பெண்ணியம் சார்ந்த பார்வைகள் மேலும் ஆழமும் விரிவும் பெற்றிருக்கிறது.
பேராசிரியர் கைலாசபதி, குமாரி ஜயவர்தனா முதலானோரின் ஆளுகை இவரது ஆற்றல்களை வெளிப்படுத்தியும் நெறிப்படுத்தியுமிருக்கிறது. நெதர்லாந்தில் சமூக விஞ்ஞானத்திற்கான நிறுவனத்தில் அபிவிருத்தி சம்பந்தமான கற்கை நெறியில் இணைந்து பெண்களும் அபிவிருத்தியும் என்ற பாட நெறியில் முதுகலை மாணி பட்டம் பெற்றிருக்கும் சித்திரலேகா, அங்கும் தனது விரிவுரையாளர்களிடமிருந்து அனைத்துலக பெண்களின் பிரச்சினைகளையும்  , பல உலக நாடுகளில்  பெண்கள் தொடர்பான கோட்பாடுகளையும் தெரிந்துகொள்கிறார்.

சித்திரலேகா, நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் அனுசரணையிலிருக்கும்  ஹன்டர் கல்லூரியில் சுமார் ஒருவருடகாலம் தங்கியிருந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர். இங்கு பாலஸ்தீனம், எல்சல்வடோர் முதலான நாடுகளைச்சேர்ந்த பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளின் சேர்க்கையினால் பெண்ணிலைவாதம், புகலிடத்தில் பெண்களின் வாழ்வுக்கோலங்கள் பற்றியெல்லாம் மேலும் மேலும் புதிய கருத்தியல்களை பெற்றுக்கொள்கிறார். இவ்வாறு தனது அறிவையும் ஆற்றலையும் தொடர்ச்சியாக விரிவுபடுத்திக்கொண்டிருக்கும் இயல்பு அவரிடம் குடியிருப்பதனால்தான் நெருக்கடியான காலகட்டங்களிலும் தெளிவோடும் தீர்க்கதரிசனத்தோடும் அவரால் செயல்பட முடிந்திருக்கிறது.

நானறிந்தவரையில் அவர் முன்னேடுத்த சொல்லாத சேதிகள்  கவிதைத்தொகுப்பு முயற்சி காலம் கடந்தும் பேசப்படுகிறது. மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில்,  குறிப்பாக போர்நெருக்கடிகளுக்கு மத்தியிலிருந்துகொண்டு ஈழத்து பெண் எழுத்துக்களை அறிமுகப்படுத்தினார்.  சித்திரலேகா  1986 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பெண்கள் ஆய்வு வட்டத்தின் சார்பில் தொகுத்து வெளியிட்ட சொல்லாத சேதிகள்  கவிதைத்தொகுப்பு  இன்றும் இலக்கியப்பரப்பில்  பேசுபொருளாகவே  வாழ்கிறது. அதில்  இடம்பெற்ற  சிவரமணி தற்கொலைசெய்துகொண்டார். செல்வி என்ற செல்வநிதி காணாமலாக்கப்பட்டார். ஒரு சிலர் நாட்டை விட்டே சென்றனர். சிலர் தற்பொழுது எழுதுவதும் இல்லை. அ.சங்கரி,  சிவரமணி,  சன்மார்க்கா,  ரங்கா,  மசூரா ஏ.மஜிட், ஒளவை, மைத்ரேயி, பிரேமி, ரேணுகா நவரட்ணம், ஊர்வசி ஆகிய பத்துப் பெண்கவிஞர்களின்  கவிதைகளின் தொகுப்பு  சொல்லாத சேதிகள்.  இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி என்ற பெருமையும் அதற்குண்டு.
இலங்கையிலும் தமிழகத்திலும் மாத்திரமின்றி உலகின் எந்தப்பகுதியிலும் தமிழ்க்கவிதை தொடர்பாக நடைபெறும் மாநாடுகள், கருத்தரங்கு உரைகளிலும் – எழுதப்படும் ஆய்வுகளிலும் சொல்லாத சேதிகள் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது.

சித்திரலேகாவிடம் நாம் காணும் மற்றும் ஒரு சிறப்பியல்பு: அவருடைய இயங்குதளம். தானும் இயங்கி மற்றவர்களையும் இயங்கவைக்கும் தன்முனைப்பற்ற இயல்பு.
பேராசிரியர் கைலாசபதியிடத்திலும் இந்த இயல்பை நாம் அவதானித்திருக்கின்றோம். அவர் கொழும்பில் தினகரன் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியபோதும், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்ததும் அதன் முதல் தலைவராக நியமனமானதன் பின்பும் அவரிடம் இந்த இயல்பின் செயலூக்கத்தை காணமுடிந்தது.
1976 இல், கைலாஸ்  யாழ். பல்கலைக்கழகத்தில் முன்னின்று நடத்திய நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு மைல்கல்.  இரண்டு நாட்கள் நடந்த அந்த ஆய்வரங்கில்தான் கொழும்பில் முன்னர் நான் சந்தித்த சித்திரலேகாவை மீண்டும் கண்டேன். சிவத்தம்பி,  மௌனகுரு,  நுஃமான்,  சிவநேசச்செல்வன், சண்முகதாஸ், சண்முகலிங்கம்,  மு. நித்தியானந்தன், துரை மனோகரன், நிர்மலா, ஏ.ஜே.கனகரத்தினா , கிருஷ்ணராஜா, நா. சுப்பிரமணியன்  முதலான பலருடன் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த அசோகமித்திரனையும் இவர்களுடன் சித்திரலேகாவையும் அங்கு காணமுடிந்தது. குறிப்பிட்ட  ஆய்வரங்கு  நிறைவு நாளையடுத்து நண்பர் டானியல் தமது இல்லத்தில் அனைவருக்கும் இராப்போசன விருந்துகொடுத்தார். அதில் பேராசிரியர் சண்முகதாஸ் மேசையில் தட்டி தாளம்போட்டு நாட்டார் பாடல்கள் பாடினார். சிலர் உரையாடிக்கொண்டிருந்தனர்.  அதில் இருவருக்கிடையில் வாக்குவாதம் வந்துவிட்டது.  அதில் ஒருவர் – அக்காலப்பகுதியில் யாழ்.பல்கலைக்கழகத்தில் சித்திரலேகாவின் மாணவர்களில்  ஒருவரான,   பின்னாளில்  கவிதையிலும் அரசியலிலும் ( சினிமாவிலும்தான்) பிரபல்யம் பெற்றவர். உணர்ச்சிவசப்பட்டு பேசத்தொடங்கினார். கைலாஸ் அவரை அமைதியாக இருக்கச்சொல்லியும் அவர் அசட்டைசெய்துகொண்டு தன்னை முன்னிலைப்படுத்த முயன்றார். உடனே சித்திரலேகா, அந்த மாணவ இளைஞரை உற்றுநோக்கி, பார்வையாலேயே   அமரச்சொன்னதும், அவர் மறுபேச்சின்றி மௌனமானதும் எனக்கு அதிசயமாகப்பட்டது.  இவ்வாறு ஒரு விருந்தினர்  சபையின் அழகை  சித்திரலேகா அன்று பேணியதை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.

யாழ். பல்கலைக்கழகம் பரமேஸ்வராக்கல்லூரியில் முன்னைய ஶ்ரீமா – என்.எம்., பீட்டர் முதலான தலைவர்கள் இணைந்திருந்த கூட்டரசாங்கத்தால் அமைந்தபோது,  தமிழர் தரப்பு அரசியல் தலைவர்கள் நடந்துகொண்ட  விதம் விமர்சனத்திற்குரியது. அத்துடன் இப்பதிவில்  நான் மேலே குறிப்பிட்ட விரிவுரையாளர்களில்  சிலரது பங்களிப்புடன் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் காலத்தின் தேவையாக உருவாகியதை பின்னாளில்  அந்தத்தலைவர்களினால் உணரப்பட்டிருக்கும் என்றே நம்புகின்றேன்.

சித்திரலேகாவும்  வேறும் சில ஆசிரியர்களும் மாணவிகளும் இணைந்து உருவாக்கிய பெண்கள் முன்னேற்றச்சங்கம், பெண்ணியம் சார்ந்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது. அதிலிருந்து பெண்கள் ஆய்வு வட்டம் உருவாகியிருக்கிறது. இந்த வட்டத்தினால், மௌனகுருவின் சக்தி பிறக்குது, குழந்தை சண்முகலிங்கத்தின் தியாகத்திருமணம் முதலான நாடகங்கள் அரங்காற்றுகை கண்டுள்ளன. அனைத்துலக பெண்கள் தினம் வருடாந்தம் மார்ச் முற்பகுதியில் வரும். இதனையிட்டு குறிப்பிட்ட பெண்கள் ஆய்வு வட்டம் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்திருக்கிறது. பெண்கள் ஆய்வு வட்டம்  அமைப்பு,  அரங்காற்றுகை, நூல் வெளியீடு, கருத்தரங்கு முதலானவற்றை நிகழ்த்தியிருக்கிறது. இக்காலகட்டத்தில் வடக்கில் அன்னையர் முன்னணியும் தொடங்கப்பட்டது. வடபுலத்தில் அக்காலத்தில் நீடித்த தேடுதல் வேட்டைகள், காணமல் போகும் படலம், தாக்குதல்கள் என்பன தென்னிலங்கை ஏடுகளில் செய்தியாகிக்கொண்டிருந்த வேளையில்,  சித்திரலேகாவும் மற்றும் பல பெண்களும் சோர்வின்றி இயங்கினார்கள். ஆயுதப்படையினரின் மனித உரிமை மீறல்களையும் கடல் வலயத்தில் உருவாகியிருந்த தடைச்சட்டங்களையும் கண்டித்து அன்னையர் முன்னணி பேரியக்கங்களையும் கவனஈர்ப்பு போராட்டங்களையும் நடத்தியது.

ஆயுதம்  ஏந்திய தமிழ் விடுதலை இயக்கங்களுக்கிடையே தோன்றிய பிரச்சினைகளுக்காகவும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
அன்னையர் முன்னணியை அமைதிகாக்க வந்த இந்தியப்படையினர் மௌனமாக்கினர்.  இறுதியில் அந்தப்படைவெளியேறியதும் பூரணி என்ற பெண்களுக்கான அமைப்பை வடக்கில் உருவாக்குவதில் சித்திரலேகா சிலருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்கும் இயல்பும்கொண்டிருந்த இவருக்கு,  அந்த அமைப்பின் ஊடாக பல பெண்களுக்கும் உதவ முடிந்திருக்கிறது.

அதற்கும் தடை வந்தது. 1984 முதல் 1991 வரையில் சித்திரலேகா, தனது விரிவுரைப்பணிக்கும் இலக்கிய விமர்சனப் பிரதிகள் படைக்கும் எழுத்தூழியத்திற்கும்   மொழிபெயர்ப்பு வேலைகளுக்கும்  மத்தியில் சோர்வின்றி   மேற்கொண்ட சமூக நலன்சார்ந்த இயக்கங்கள் பற்றி முறையாக ஆவணப்படுத்தப் படல்வேண்டும்.
எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்வதற்கு, கடந்துவந்த பாதையையும் திரும்பிப்பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் செல்லும் பாதையில் வெளிச்சம் தோன்றும்.
சித்திரலேகா, சர்வதேச ரீதியில் பல பெண்ணிய ஆளுமைகளுடன் இணைந்து பயின்ற அனுபவமும் – இலங்கையில் மூவினத்தையும் சேர்ந்த  பெண்களுடன் இயங்கிய முழுமையான அனுபவமும் பெற்றவர்.

தென்னிலங்கையில் மனித உரிமை ஆர்வலரான சுனிலா அபயசேகரா , குமுதினி சாமுவேல், செல்வி திருச்சந்திரன், அன்பேரியா ஹனிபா, பவித்ரா கைலாசபதி, சர்வமங்களம் கைலாசபதி, ஔவை, ரெஜி டேவிட் , சாந்தி சச்சிதானந்தன், உட்பட பலருடனும் இணைந்து இயங்கியவர். தென்னிலங்கையில் இவர்களினால் உருவாக்கப்பட்ட சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையமும் காலப்போக்கில் கிழக்கிற்கு இடம்பெயர்ந்தது. இவை தவிர தேசிய மட்டத்தில் இயங்குகின்ற அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களிலும் இணைந்திருப்பவர் இந்த அயற்சியற்ற ஆளுமை. இறுதியாக இவர் தொடர்பான செய்தியும் எமக்கு கிட்டியிருக்கிறது. இலங்கையில் புதிய அரசு பதவியேற்றதும் தொடங்கப்பட்டிருக்கும் நல்லிணக்கம் தொடர்பான செயலணியில் சித்திரலேகா இணைந்துள்ளார். இலங்கையில் நீடித்து முற்றுப்பெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்  மனித உரிமை மீறல்களுக்கு இலக்காகிய மக்களுக்காகவும், ஐ.நா. மனித உரிமைப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அமைய  இச்செயலணி தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சித்திரலேகா பெற்றுக்கொண்ட அனுபவங்கள் அவரை எமது சமூகம் சார்ந்து,  முக்கியமாக பெண்களிடத்தில் விழிப்புணர்வை வளர்ப்பதற்கு தூண்டியிருக்கிறது. தனது வளர்ச்சியில் மற்றவர்களின் ஆளுகையை இன்றுவரையில் போற்றிவரும் சித்திரலேகா,  தனது மாணாக்கரிடத்தில் தமது ஆளுகையை செலுத்தியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. யாழ். பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் இவரின் விரிவுரைகள்  கேட்டுப்பயின்ற பல மாணவர்களிடம் இவரின் சிந்தனைத்தாக்கம் நீடித்திருக்கிறது. பேராசிரியர் கைலாசபதியின் அபிமானத்திற்குரிய மாணவியான சித்திரலேகா, பேராசிரியர் பொன். பூலோகசிங்கத்தின் பாசத்திற்குரிய மாணவி. மற்றவர்கள் தன்னை சித்திரா என அழைப்பார்கள். ஆனால், பூலோகசிங்கம் சேர் எங்கு கண்டாலும் முழுப்பெயருடன்தான் விளிப்பார் என்று எனக்கு எழுதிய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருக்கிறார்.பூலோகசிங்கம்  அவுஸ்திரேலியா சிட்னியில்  முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியுடன் நான் எழுதிய பதிவை பார்த்துவிட்டு உடனடியாக அவருக்கு தமது அன்பைத்தெரிவிக்குமாறும் மேலும் தகவல் கேட்டும்  எழுதியிருந்தார்.
இவருடைய இரண்டு மாணவிகளான  தேவகௌரி, சூரியகுமாரி ஆகியோரிடம் கேட்டால், தம்மை  விமர்சனத்துறையில் நெறிப்படுத்தியதில் சித்திரா மிஸ் அவர்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது என்பார்கள்.

“விமர்சனம் என்பது மேலோட்டமானது அல்ல. உன்னிப்பாக அவதானித்து எழுதப்படுவது. அந்த அவதானிப்பில் கூர்மை இருத்தல் வேண்டும் என்றும் சுருக்கமாகச்சொல்வதாயின் கழுகுப்பார்வை வேண்டும் என்றும் வலியுறுத்தி பயிற்றுவித்தவர் அவர்.  எங்களுக்கு மிகவும் பிடித்தமான  விரிவுரையாளர்தான் சித்ரா மிஸ் ” – என்று இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு தான் கற்றவர்களிடமிருந்தும் கற்பித்தவர்களிடமிருந்தும் அபிமானம் பெற்றிருக்கும் சித்திரலேகா மௌனகுரு ,  பெண்களின் சமத்துவத்தை ஊக்குவித்தமைக்காக ஐ.நா.வின் அகதிகளுக்கான தூதுவர் அலுவலகத்தின்  (U.N.H.C.R)  விருதினையும் பெற்றவர். சித்திரலேகா, இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம் என்னும் நூலை நுஃமான், மௌனகுரு ஆகியோருடன் இணைந்து எழுதியிருக்கிறார். கொழும்பில் இயங்கிய விபவி நிறுவனத்தினால் நடத்தப்பட்ட  சுதந்திர இலக்கிய விழாவில் சமர்பித்த இலங்கைத்தமிழரின் புலம்பெயர் இலக்கியம் என்னும் ஆய்வையும் எமக்கு நூல் வடிவில் வரவாக்கியிருக்கிறார்.  2010 இல் கவிதைகள் பேசட்டும் என்ற மற்றுமொரு கவிதைகளின் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் சில மொழிபெயர்ப்பு நூல்களையும் எமது சமூகத்திற்காக தந்துள்ளார்.  இவர் எழுதியிருக்கும்  பாரதியின் பெண்விடுதலை (இலக்கியம்-கருத்து-காலம்)  பெண்ணிலைச்சிந்தனைகள் , பேரழிவுகளுக்கு பெண்கள் முகம் கொடுத்தல்,  உயிர்வெளி – கவிதைகள்  (தொகுப்பு) டாக்டர் மேரி ரட்னம்,  (மொழிபெயர்ப்பு)  முதலான நூல்கள் பற்றிய  மேலதிக விபரங்களை  நூலகம் இணையத்தளத்தில் படிக்க முடியும். நூலகர் செல்வராஜா தொகுத்திற்கும் நூல்தேட்டத்தில் காணமுடியும்.

சித்திரலேகாவிடம்   கற்ற ஒரு  மாணவர்,   இவரைப்பற்றி கலாநிதிப்பட்டத்திற்கான  ஆய்வையும்  மேற்கொண்டிருக்கிறார். தர்மசேன பத்திராஜாவின் இயக்கத்தில் வெளியான காவலூர் ராசதுரையின் பொன்மணி திரைப்படத்தில் பொன்மணியின் அக்காவாகவும் இவர் நடித்திருக்கிறார். பன்முக ஆற்றலும் ஆய்வறிவும் மிக்கவராக எம்மத்தியில் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்கள் கடந்து வந்திருக்கும் பாதை எமக்கு  முன்மாதிரியானது. அதில் சர்வதேசியப்பார்வையே அகலித்திருக்கிறது.

 

letchumananm@gmail.com