அண்மையில் டொராண்டோவில் நடைபெற்ற தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் பற்றிய கலந்துரையாடலில் உரையாற்றிய அன்பரசி (அன்பு) அவர்களின் கூறிய கருத்துகள் பற்றிச் சில கருத்துகளைக் கூறலாமென்று மீண்டுமொரு தடவை அவரது உரையினை உள்ளடக்கிய காணொளியினை (வடலி அமைப்பினர் யு டியூப்பில் வெளியிட்ட காணொளி) பார்த்தபொழுது தோன்றியது.
தனதுரையின் உரையின் ஆரம்பத்தில் அவர் தமிழினியக்கா என்று விளித்துக் கூறிய கருத்தொன்றில் நூல் பற்றிக் குறிப்பிடும்போது ‘தமிழினியக்கா அவரது அறிவுக்கும், ஆளுமைக்கும் உட்பட்டு அவர் அறிந்த தரவுகள், தகவல்கள், அடிப்படையாக வைத்து நகர்கின்றது இந்நூல் என்றும், ‘போர் கொடுமையானது. அதை ஒரு போராளியாக நேர்மையாகப் பதிவு செய்கின்றார் தமிழினி’ என்றும் கூறுவார். ஆனால் காணொளியில் இந்த அவரது முடிவைத்தொடர்ந்து அவர் கூறிய பெரும்பாலான கருத்துகள் இக்கருத்துகளுக்கு எதிராகவே இருந்தன. எவ்விதம் அவரால் இந்த நூல் பற்றி இவ்விதமான இரு முரண்பட்ட கருத்துகளுக்கு வர முடிந்தது? அதனை அவர்தான் விளக்க வேண்டும்.
மேலும் மேற்படி நிகழ்வில் கலந்துரையாடலுக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்த நூல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட பிரதி அல்ல. கிளிநொச்சியில் வெளியான நூலின் பிரதி அது. ஆனால் தனதுரையை ஆரம்பித்ததுமே காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டதன் காரணமாக, காலச்சுவடு பதிப்பகத்தின் அரசியல் காரணமாக, அந்த அரசியலைத் தான் ஏற்காததன் காரணமாக காலச்சுவடு பதிப்பகப் பிரதியாக ஏற்கனவே எண்ணியிருந்ததால், அவ்வுணர்வுகளின் அடிப்படையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையினை அந்நோக்கில் வைத்து ஆரம்பித்தார். இலங்கைப்பதிப்புக்கும் , காலச்சுவடு பதிப்புக்கும் இடையில் ஏதாவது வேறுபாடுகள் உண்டா? (பின் அட்டைப்பட அறிமுகத்தில் காலச்சுவடு பதிப்பகப் பிரதியிலுள்ள தவறு அனைவரும் அறிந்ததே.). அறிந்தவர்கள் அறியத்தரவும். ஏனெனில் நான் இன்னும் காலச்சுவடு பதிப்பகப்பிரதியினை வாசிக்கவில்லை. இரு பிரதிகளின் உள்ளடக்கமும் ஒன்றாக இருந்தால் காலச்சுவடு அரசியல் செய்கிறதென்ற தர்க்கம் வலுவாக இருப்பதற்குச் சாத்தியமில்லை.
தனதுரையில் ‘தமிழினியக்கா தான் சார்ந்த செயற்பாடுகளில் ஏற்பட்ட தவறுகளைக்கூட தலைமையின் தலையில் ஏற்றித்தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முனைகின்றாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது’ என்றும் அன்பரசி அவர்கள் கூறுகின்றார். தனதுரையின் ஆரம்பத்தில் ‘ஒரு போராளியாக நேர்மையாகப் பதிவு செய்கின்றார் தமிழினி’ என்று கூறும் அன்பரசி இவ்விதம் கூறுவது தமிழினியக்காவின் நேர்மையைச் சந்தேகிப்பது என்று ஆகிவிடாதா? முன்னுக்குப்பின் முரணாக உள்ளதே இத்தர்க்கம்.
உண்மையில் தமிழினி இந்நூலை நேர்மையாகத்தான் பதிவு செய்திருப்பதாக எனக்குத்தோன்றுகின்றது. நூலின் ஆரம்பித்திலேயே அவர் போராட்டத்தில் ஏற்பட்ட அனைத்திலும் தனக்கும் பங்கிருப்பதை ஏற்றுக்கொள்கின்றார். அதற்காக வருத்தமும் அடைகின்றார். அதனை அவர் நூலின் ஆரம்பத்திலேயே பதிவு செய்திருக்கின்றார்.
நூலின் முன்னுரையில் அவர் இவ்விதம் கூறுவார்: “போராட்டத்தை முழுவதுமாக தன்னகப்படுத்திக்கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள்ளே வாழ்ந்திருக்கிறேன். போராளிகளான நாங்கள் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றத்தவறி விட்டோம். கையிலெடுத்த ஆயுதங்களைக் பாதுகாத்துக்கொள்வதற்காக எமது அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்து விட்டோம்.” (பக்கம் 7)
இவ்விதம் நூலின் ஆரம்பத்திலேயே நடந்தவற்றுக்கான தனது பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டுதான் தன் சுய விமர்சனத்தைத்தொடர்கின்றார்.
அதே நேரத்தில் இயக்கத்தின் எழுச்சிக் காலத்தில் யாருக்கும் இயக்க நடவடிக்கைகளை எதிர்த்துக்கேட்கும் பூரண சுதந்திரம் இருந்ததாக நான் அறிந்த வரையில் அறியவில்லை. அவரே பல தடவைகள் அதனைக் குறிப்பிட்டிருக்கின்றார். சில சமயங்களில் தன்னால் இயக்கத்தலைமையின் முடிவுகளை ஏற்க முடியாவிட்டாலும், இயக்கக் கோட்பாடுகளுக்கு அமைய அவர் அமைதியாகச் செயற்படுகின்றார்.
நல்லதொரு நூல் பற்றிய விமர்சனம் அந்நூலில் குறிப்பிடப்படும் விடயங்களை மட்டுமே மையமாக வைத்து ஆற்றப்பட வேண்டும். ஆனால் அன்பரசி அவர்கள் கட்டாய ஆட்சேர்ப்பு பற்றி இவ்வுரையில் குறிப்பிடப்படும் பல விடயங்கள் நூலில் இல்லை. காணொளியினை ஒரு முறைக் கவனமாகக்கேளுங்கள். புரிந்து கொள்வீர்கள். அவ்விதம் நூலில் இல்லாத பல விடயங்கள் இயக்கப்பொறு[ப்பாளர்கள் பலருக்குத் தெரியுமென்று கூறுகின்றார். இவ்விதம் அவர் கூறும்பொழுது அவற்றுக்கான ஆதாரங்கள் எவற்றையும் அவர் முன் வைக்கவில்லை. ஆதாரங்களற்றதால் அவை வலுவான தர்க்கங்கள் அல்ல, அவை உண்மையாக இருந்தால் கூட.
இந்தியப்படையினரால் பாலுறவுக்குட்பட்ட பெண்கள் பலர். ஆனால் தமிழினியக்காவோ சில நடைபெற்றதாகத் தான் கேள்விப்பட்டதாகக்குறிப்பிடுவதும், அதுவும் காலச்சுவடு பதிப்பகத்தின் தந்திரமோ என்று சந்தேகப்படும் வகையில் தோன்றுவதாகவும் என்னும் அர்த்தத்தில் அன்பரசி தனதுரையினைத் தொடர்கின்றார். ஆனால் இத்தர்க்கமும் எடுபடவில்லை. ஏனெனில் அன்றைய நிகழ்வில் அங்கிருந்தவை இலங்கையில் வெளியான ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூலின் பிரதிகளே. காலச்சுவடின் பிரதிகள் அல்ல. மேலும் இந்தியப்படையினரால் பாலுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்கள் உண்மையில் பலர் எனப்பொதுவாக மக்கள் மத்தியில் கருதப்பட்டாலும், வெளியில் அறிய முடிந்தவை சில தாம். ஏனெனில் பெண்கள் பலர் அவற்றைப்பகிரங்கப்படுத்த விரும்பாதிருக்கலாம். இவ்விதமானதொரு சூழலில் தமிழினி தான் கேள்விப்பட்டதை அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம். மேலும் அன்பரசியிடம் ஆதாரங்கள் இருந்தால் அவற்றைத்திரட்டி வெளியிடலாம். ஆனால் குறுகிய காலத்தில் இந்தியப்படையினர் புலிகள் மீது யுத்தத்தைப்பிரகடனப்படுத்திப் போரிட்ட சமயத்தில் அதிக அளவில் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதனைப்பலர் ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள்.
தமிழினி நூலில் எழுதியுள்ளவற்றை விமர்சிப்பது நல்ல விமர்சகருக்கு அழகு. அவ்விதம் விமர்சிக்கப்படும்போது ஆதாரங்களை முன் வைத்து விமர்சிப்பது முக்கியம். தமிழினி தனது நூலில் கட்டாய ஆட்சேர்ப்பு பற்றிக் குறிப்பிடும்போது தனது எதிரான கருத்துகள் காரணமாகத் தன்னை வேறு துறைக்கு மாற்றியதாகக்குறிப்பிடுகின்றார். ஆனால் அன்பரசியோ வேறு காரணங்களை முன் வைத்துத் தமிழினியை விமர்சிக்கின்றார். அதே சமயம் தமிழினியக்கா ஒரு போராளியாக நேர்மையாகப் பதிவு செய்கின்றார் என்றும் நூல் பற்றிக் கூறுகின்றார். இது எப்படி இருக்கிறதென்றால் ‘தமிழினியக்கா நேர்மையாகப் பதிவிடுகின்றார். அதே சமயம் நேர்மையாகப் பதிவிடவில்லை’ என்பது போலல்லவா இருக்கிறது.
கட்டாய ஆட்சேர்ப்பு பற்றிய அன்பரசியின் கருத்துகள் உண்மையானவையா என்று ஆதாரங்களுடன் கூறக்கூடியவர்கள் பலர் தமிழ்க்கவி அம்மா, எழுத்தாளர் கருணாகரன் போன்றவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள்தான் தம் கருத்துகளை இங்கு கூற வேண்டும்.
மேலும் நூலொன்றில் கூறிய விடயங்களைபற்றிக் குறிப்பிடும்போது அங்கு கூறப்பட்டுள்ள விடயங்களை மையமாக வைத்து விமர்சனங்களை முன் வைக்க வேண்டும். அதுதான் தர்க்கத்துக்குச் சிறப்பினை அளிக்கும். தமிழினியின் நூலில் கூறப்பட்டுள்ளவற்றில் எவை உண்மை, எவை உண்மையில்லை என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்ட வேண்டும். அவர் பெரிதாகக் கூறாத விடயங்களைச்சுட்டிக்காட்டுவதுடன் , அவற்றுக்கு எதிராக உண்மையான ஆதாரங்கள் இருப்பின் அவற்றை வெளிப்படுத்த வேண்டும். ஆதாரங்கள் இல்லாதவிடத்து ஏன் தமிழினி எழுதவில்லை என்று கேட்பதில் அர்த்தமில்லை. ஏனெனில் குறுகிய காலத்தில் தமிழினி எழுதியது ஆய்வுக்கட்டுரை அல்ல. அவர் எழுதியது தனது வாழ்வு பற்றிய உணர்வுகளை. தன்னை அதிகம் பாதித்த உணர்வுகளை அவர் இந்நூலில் எழுதியிருக்கின்றார். அவர் எழுதியவற்றின் உண்மைத்தன்மையை ஆராயும் அதே சமயம், அவர் அதிகம் எழுதாமல் விட்ட விடயங்களை அவை பற்றி அறிந்த ஏனையவர்கள் விரிவாக எழுதலாம். அதற்குப்பதிலாகத் தன் வாழ்க்கையையே மக்களுக்காகத் தாரை வார்த்த ஒரு பெண் போராளியின் நேர்மையான உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதாக இருக்கக் கூடாது.
தமிழினி மேலும் பல விடயங்களையும் கூறாமல்தான் விட்டிருக்கின்றார். அவ்விதம் கூறியபோதும் சுருக்கமாகத்தான் கூறிச்சென்றிருக்கின்றார். உதாரணமாக கைது செய்து அல்லது கடத்தித் தம் சிறைகளில் அடைத்து வைத்திருந்த கவிஞர் செல்வி, கேசவன் (டொமினிக்) போன்ற பலரைப்பற்றி அவருக்குத்தெரிந்திருக்கும். ஆனால் அவற்றைப்பற்றியெல்லாம் அவர் தனது நூலில் குறிப்பிடவில்லை. அதற்காக நூலின் நேர்மைத்தன்மையினை நான் சந்தேகிக்கவில்லை. அவை பற்றித்தெரிந்தவர்கள் நூலில் ஏன் அவை பற்றிக்குறிப்பிடவில்லை என்பதற்குப் பதில் அவை பற்றிப்போதிய விபரங்களை அறிந்திருந்தால் வெளியிடவேண்டும். இது ஓர் ஆய்வு நூல் அல்லாமல் , ஒருவரின் அக்காலகட்ட உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சுயசரிதை நூல் என்பதால் எல்லாவற்றையும் எழுதியவரிடம் எதிர்பார்க்க முடியாது. ஆச்சரியமென்னவென்றால்.. இவ்விதமானதொரு நூலினை அவர் அவரிருந்த மனநிலையில் எழுதியதே பெரும் சாதனைதான். அவமானங்களை, துயரங்களை , தோல்விகளை அடைந்திருந்த நிலையிலும் அவர் எவ்வளவுதூரம் தான் யாருக்காகப் போராடினாரோ அம்மக்கள்மீது கரிசனை கொண்டிருக்கின்றார் என்பதை வெளிப்படுத்தும் நூலிதுவென்பேன்.
ngiri2704@rogers.com