வாசிப்பும், யோசிப்பும் 210: இசை கேட்கும் நேரம் இது!

பாலமுரளி கிருஷ்ணா1. இசை கேட்கும் நேரம்: இசைச்சிகரம் சரிந்தது: பாலமுரளிகிருஷ்ணா மறைவு! அமரர் சங்கீதக் கலாநிதி பாலமுரளி கிருஷ்ணா நினைவாக…

பிரபல கர்நாடக இசைக்கலைஞரான கலாநிதி பாலமுரளி கிருஷ்ணா இன்று (நவம்பர் 22) சென்னையில் மறைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கர்நாடக இசையின் சிகரங்களில் ஒருவராக விளங்கிய பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் இந்தியத் திரைப்படத்துறையிலும் தன் பங்களிப்பினை வழங்கித் தடம் பதித்தவர். இது பற்றி தினமணி இணையத்தளத்தில் ‘400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள பாலமுரளி கிருஷ்ணா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியுள்ளார். பக்த பிரகலாதா என்கிற தெலுங்குப் படத்தில் நாரதராக நடித்தார். 1976-ல் சிறந்த பாடகருக்கான விருதை, ஹம்சகீதே என்கிற கன்னடப் படத்துக்காகப் பெற்றார். 11 வருடங்கள் கழித்து, மாதவச்சாரியா என்கிற படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலமுரளிகிருஷ்ணா எனக்கு மிகவும் பிடித்துப்போனதுக்கு முக்கிய காரணங்களாக அவரது அனைவரையும் ஈர்க்கும் முகராசி, எந்நேரமும் இதழ்க்கோடியில் ஒளிரும் காந்தப்புன்னகை, நெஞ்சினையள்ளும் இன்குரல், வித்துவச்செருக்கு அற்ற பெருந்தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். திருவிளையாடல் படத்தில் இவர் பாடிய ‘ஒரு நாள் போதுமா? ‘ பாடலை யார்தான் மறப்பர்? இவரது பாடல்களைக் கேட்டு இரசிப்பதற்கு நிச்சயம் ஒரு நாள் போதாதுதான்.

இன்று முழுவதும் அடிக்கடி சிந்தையில் ‘ஒரு நாள் போதுமா/’, ‘தங்கரதம் வந்தது’ மற்றும் ‘சின்னக்கண்ணன் அழைக்கின்றான்’ ஆகிய பாடல்களே தோன்றுவதும், மறைவதுமாகவிருந்தன. அப்பொழுதுதான் தெரிந்தது என் ஆழ்மனத்தில் எவ்வளவுதூரம் அமரர் பாலமுரளிகிருஷ்ணாவின் இன்குரல் பதிந்துபோய்க்கிடக்கின்றது என்ற உண்மை. தமிழ்த்திரையுலகின் முக்கியமான இசைச்சாதனையாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆகியோர். இம்மூவரின் இசையமைப்பிலும் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் மெல்லிசைப்பாடல்கள் பாடியிருக்கின்றார். அவை அனைத்துமே மிகுந்த வரவேற்பினைப்பெற்ற பாடல்கள். எழுபதுகளில் ‘சின்னக்கண்ணன் அழைக்கின்றான்’ பாடல் இலங்கை வானொலியின் தமிழ்ப்பகுதியில் ஒலிக்காத நேரமேயில்லை என்னும்படியாக ஒலித்துக்கொண்டிருந்தது.

இம்மூன்றிலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் “ஒரு நாள் போதுமா?” அதற்கு அடுத்தடுத்த இடங்கள் அவரது ஏனைய பாடல்கள்.

ஒரு தகவல்: ஏன் பாலமுரளி கிருஷ்ணா என்னும் பெயரிலுள்ள ‘பால’ என்பது எதனைக்குறிக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா? எட்டுவயதிலேயே மேடையேறி இசைக்கச்சேரி செய்ததால் ‘பால’ என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அதன் பின்னர் பாலமுரளி கிருஷ்ணா என்று அழைக்கப்பட்டதாகவும் அறிகின்றோம்.

இசைச்சிகரத்துக்கு எமது அஞ்சலி.


இசை கேட்கும் நேரம் இது: காதல் கொண்டாலே பயமென்ன? (ப்யார் கியா தோ டர்னா க்யா)

மதுபாலாசிறு வயதில் அப்பாவும் அம்மாவும் இந்தி நடிகை மதுபாலா பற்றி அவ்வப்போது உரையாடுவதைக் கேட்டிருக்கின்றேன். அவற்றிலிருந்து அவர் நடிகரும் , பாடகருமான கிஷோர்குமாரின் மனைவி என்றும், இளம் வயதில் இறந்து விட்டாரென்றும் அறிந்திருந்தேன். ஆனால் அண்மையில்தான் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘பறவைக்கோணம்’ (உயிர்மை சஞ்சிகையில் வெளியான சினிமா பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு) வாசித்துக் கொண்டிருந்தபோதுதான் அதிலுள்ள ‘காதல் கொண்டாலே பயமென்ன?’ கட்டுரையின் மூலம் மதுபாலா/ திலீப்குமார் காதலையும், அவர்கள் இருவரும் இணைந்து நடித்த மொகல் ஏ ஆஸம் திரைப்படம் பற்றியும், அவற்றின் பழைய, புதிய இந்தி மற்றும் தமிழ்ப்பதிப்புகளைப்பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது.

நடிகர் திலீப்குமாரும், நடிகை மதுபாலாவும் உயிருக்குயிராகக் காதலித்திருக்கின்றனர். ஆனால் அதற்கு மதுபாலாவின் தந்தையார் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றார். ஒரு சமயம் இவர்களது காதல் பற்றியும் அதற்கேற்ற முடிவு பற்றியும் ராமகிருஷ்ணன் எழுதியிருப்பதை அவ்விதமே தருகின்றேன். வாசித்துப்பாருங்கள்:

“திலீப்குமாருக்கு ஜோடியாக நடிக்கத் துவங்கி நான்கு படங்கள் ஒன்றாக நடித்து அவரைக் காதலிக்கத் துவங்கியிருந்தார் மதுபாலா. திலீப்குமாரும் அவரைக் காதலித்தார். அன்றைய திரைஉலகமே அந்தக் காதலைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தது. திரைப்பட விழா ஒன்றுக்காக மதுபாலாவை திலீப்குமார் தனது காரில் அழைத்துக் கொண்டு வந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தக் காதலை மதுபாலாவின் அப்பா ஏற்றுக் கொள்ளவில்லை. நயாதூர் படத்திற்காக திலீப்குமாரும் மதுபாலாவும் குவாலியருக்கு ஒரு மாதகாலம் படப்பிடிப்புக்-குப் போகவேண்டும் என்பதை மதுபாலாவின் அப்பா ஒத்துக் கொள்ளவில்லை. இது தன் மகளின் காதலை வளர்த்துவிடும் என்று தடை செய்தார். படத்தின் இயக்குனர் சோப்ரா இதைக் கண்டித்து வழக்குத் தொடுக்கப்போவதாகச் சொன்னார். ஆனால் மதுபாலா-வின் அப்பா தன் மகள் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். புதிய கதாநாயகியாக வைஜெயந்திமாலா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்பாவின் வற்புறுத்தல் காரணமாக திலீப்குமாரை விட்டுவிலகினார் மதுபாலா. ஆனால் அவரது காதலை விலக்க முடியவில்லை. காதல் பிரிவில் மனச்சோர்வு கொண்ட மதுபாலாவைத் திருமணம் செய்துகொள்ள நடிகர்களுக்குள் பெரிய போட்டியே நடந்தது. ஆனால் பிரபல பின்ணணிப் பாடகரான கிஷோர்குமாரை மதுபாலா திருமணம் செய்து கொண்டார். கிஷோர்குமார் முன்னதாகத் திருமணம் ஆனவர். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தார். மதுபாலா கிஷோரைத் திருமணம் செய்துகொண்டபோதும் மனதில் இருந்து திலீப்குமாரை நீக்க முடியவேயில்லை.

அந்த தருணத்தில்தான் மொகலே ஆஜம் படமாக்கப்பட்டது. அதில் வெளிப்படும் ஒவ்வொரு உணர்ச்சியும் அனார்கலியுடையது மட்டுமில்லை, காதல் மறுக்கப்பட்ட மதுபாலாவின் மனவெளிப்பாடும் அதுவே. அதே நிலைதான் திலீப்குமாருக்கும். தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட திலீப்குமாருக்குள்ளும் மதுபாலாவின் மீதான காதல் நெருப்பாக எரிந்து கொண்டேயிருந்தது. படப்பிடிப்பு நேரங்களில் அவர்கள் மறுபடி காதலித்து-விடாமல் மதுபாலாவின் அப்பா கண்காணித்து வந்தார். மனச்சோர்வு மற்றும் வெறுமையால் மதுபாலா நோயுற்றார். அந்த நோய் இதயவலியை உருவாக்கியது. சிகிச்சைக்காக லண்டன் சென்றார். ஆனால் அறுவை-சிகிச்சைக்குப் பிறகும் அவரது உடல் நலமடையவில்லை. தனது 36வயது வயதில் பாதியில் எரிந்துபோன நட்சத்திரமாக மறைந்து போனார் மதுபாலா.

காதலின் துயரம் நிரம்பிய நாட்களில் மொகலே ஆஜம் படமாக்கப்பட்டது, ஆகவே அனார்கலியாக அவர் தன்னையே உணர்ந்து கொண்டார். காதல் செய்தாலே தவறென்ன என்ற அவரது கேள்வி அக்பரிடம் கேட்டதில்லை, தனது சொந்த தந்தையிடம் கேட்டதுதான். வலியும் நோயுமாக மரணப்படுக்கையில் இருந்த மதுபாலா நாள் முழுவதும் ப்யார் கியா தோ டர்னாக்யா பாடலைக் கேட்டுக் கொண்டேயிருந்தார், பல நாட்கள் பாடலைக் கேட்டு விம்மி அழுவதோடு தான் ஒருமுறையாவது திலீப்குமாரைப் பார்க்க முடியாதா என்று அழுதிருக்கிறார். ஆனால் திலீப்குமார் அவரைச் சந்திக்கவேயில்லை. மதுபாலாவின் இறுதி ஊர்வலத்திற்கு திலீப்குமார் வருவார் என்று திரையுலகமே காத்திருந்தது. ஆனால் திலீப்குமார் வரவில்லை. அனார்கலியைப் பறிகொடுத்த சலீமைப் போல மதுபாலாவின் அழியாத காதலை மனதிற்குள்ளாக ஒடுக்கிக் கொண்டு அவளை மரணக்கோலத்தில் காண வராமல் தனிமையில் அழுதிருக்கிறார் திலீப்குமார். காதல்தானே செய்தேன், எதையும் களவாடவில்லையே என்ற வரி அவரது மனசாட்சியின் வார்த்தைகளாகவே மாறியிருக்கின்றன. ” (பறவைக்கோணம் – எஸ்.ராமகிருஷ்ணன்; பக்கம் 57-68)

மொகலே ஆஜம் இந்தித்திரைப்படம் கறுப்பு- வெள்ளைத்திரைப்படமாக வெளியாகியிருந்தது. அதன் தமிழ்ப்பதிப்பு அக்பர் என்னும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. பின்னர் 2006இல் மொகலே ஆஜம் வர்ணத்திரைப்படமாக வெளியானது. அது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அனார்கலி என்னும் பெயரில் வெளியானது.

மொகலே ஆஸம் இந்தித்திரைப்படத்தில் ப்யார் கியா தோ டர்னா க்யா என்று லதா மங்கேஸ்காரின் குரலில் ஒலித்த பாடல் அக்பர் தமிழ்ப்பதிப்பில் பி.சுசீலாவின் குரலில் ‘காதல் கொண்டாலே பயமென்ன?’ என்று ஒலித்தது. 2006இல் வெளியான தமிழ்ப்பதிப்பான அனார்கலியில் அக்பர் படத்தில் பி.சுசீலா பாடிய பாடல்களை அமரர் சுவர்ணலதா சிறிது மாற்றத்துடன் ‘காதல் கொண்டாலே அச்சமென்ன/’ என்று பாடியிருப்பார். கறுப்பு வெள்ளைப்படங்களாக வெளியான மொகலே ஆஸம் மற்றும் அக்பர் ஆகிய படங்களும் வர்ணத்தில் உருமாற்றம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் யு டியூப்பில் காணலாம்:

அக்பரில் தமிழ்ப்பாடல்களை எழுதியவர் கவிஞர் கம்பதாசன்.

மேற்படி கட்டுரையில் திலீப்குமாரைப் பற்றிக் குறிப்பிடுகையில் எஸ்.ராமகிருஷ்ணன் ”திலீப்குமாரின் கண்கள் நடித்தது போல யாருடைய கண்களும் நடித்தது இல்லை என்று ஒரு நேர்காணலில் கமல்ஹாசன் கூறியிருந்தார். அது மறுக்கமுடியாத உண்மை. திலீப்குமாரின் கண்கள் நடிப்பதைக் காண வேண்டும் என்றால் ப்யார் கியா தோ டர்னா க்யா போதும். கண்களின் அசைவுகளாலே மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தும் திலீப்குமாரின் நடிப்பு அபாரமானது.’ என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மதுபாலாவின் வாழ்க்கையும், திலீப்குமார் மேல் கொண்ட அழியாத காதலும், இளவயது மரணமும் கவலையைத்தருபவை. மானுடர்களை எதற்காக இவ்விதம் காதல் உணர்வுகள் இவ்விதம் வாட்டி வதக்குகின்றனவோ தெரியவில்லை.

அக்பரில் கவிஞர் கம்பதாசன் எழுதிய ‘காதல் கொண்டாலே பயமென்ன?’ பாடலின் முழு வரிகளும் இதோ:

விருத்தம்

ஒரு மாது பிறவேல் ஜெகம் மீதிலே
ஒரு முறையேதான் காதல் கொள்வாளே
இந்தக் காதலின் நோயில் வாழ்வாளே
இந்தக் காதலின் நோயில் மரிப்பாளே.

(பல்லவி)

காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

(அனுபல்லவி)
காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை

(கோரஸ்)

காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை
விதி எதிரானாலும் பயமென்ன?
உண்மைக்காதல் கொண்டாலே பயமென்ன?

(சரணம்)

இன்றென் நெஞ்சத்தின் கதையைச் சொல்வேனே
என் ஆவி நீதி வேண்டில் இரேனே.

(கோரஸ்)

இன்றென் நெஞ்சத்தின் கதையைச் சொல்வேனே
என் ஆவி நீதி வேண்டில் இரேனே.
அன்பர் கண் முன்னே காதல் காதல்
அன்பர் கண் முன்னே காதல் காதல்
அஞ்சி அஞ்சியே சாதல் என்ன?

உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?
காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

நெஞ்சில் அவர்தன் நினைவே தான் பாடும்
கண்ணில் அவர்தன் கனவேதான் ஆடும்.

(கோரஸ்)

நெஞ்சில் அவர்தன் நினைவே தான் பாடும்
கண்ணில் அவர்தன் கனவேதான் ஆடும்.
காதலே வாழ்வே காதலே சாவே
காதலே வாழ்வே காதலே சாவே
காதல் இன்றேல் கதி வேறென்ன?

உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?
காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

அணையாது எந்தன் காதலின் தீபம்.
ஆகாயம் எங்கும் காதலர் ரூபம்

(கோரஸ்)

அணையாது எந்தன் காதலின் தீபம்
ஆகாயம் எங்கும் காதலர் ரூபம்
மர்மத் திரையில்லை அல்லா முன்னாலே
மர்மத் திரையில்லை அல்லா முன்னாலே
மனிதர்கள் முன்னால் திரையென்ன?

காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை.
விதி எதிர்த்தாலும் பயமென்ன?

காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?


3. இசை கேட்கும் நேரம் இது: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

வாசிப்பும், யோசிப்பும் 210: இசை கேட்கும் நேரம் இது!இந்தப்பாடல் எனக்குப் பிடித்துப்போனதற்குக் காரணம் இதன் இசையும், இனிய இயற்கை பற்றிய சொற்களும்தாம். கேட்கையில் நெஞ்சினை வருடிச்செல்லும் இசையும், அதற்கு உறுதுணையாக இருக்கும் பாடகர்களின் குரல்களும் எப்பொழுது கேட்டாலும் நெஞ்சினில் ஒரு வித அமைதியை, இனிமையான உணர்வினைத்தருகின்றன. பாடலில் வரும் அமைதியான நதி, ஓடம், காற்று, மழை, இடி, வெள்ளம், தென்னங்கீற்று, ஆற்றங்கர மேடு, நாணல், கனிந்த மரம், அந்தி, காலை இவ்விதம் இயற்கையை விபரிக்கும் சொற்கள் மனதில் இயற்கையைப் பார்த்து இரசிக்கும்போது ஏற்படுத்தும் உணர்வினைத்தந்து விடுகின்றன. “அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தெளிந்துவிடும், அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்” மற்றும் “நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது” ஆகியவை பாடலின் முக்கிய வரிகளில் சில.

மேலும் ‘நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது’ என்றொரு வரி வருகின்றது. ஏன் கவிஞர் நாணலுடன் நடந்து வரும் பெண்மையினை ஒப்பிடுகின்றார் என்று சிறிது சிந்தித்துப் பார்த்தேன். நாணலானது இப்படியும் அப்படியுமாக காற்றடிக்கும் பக்கமெல்லாம் சாயும் தன்மை மிக்கது. பெண் நடந்துவரும்போது அவளது நடை அசைவுகளும் அவ்விதமே இப்படியும் அப்படியுமாக , நிலையாக இல்லாமல் நாணலைப்போல் அசைகின்றது என்பதை வெளிப்படுத்த, அவளது நடையழகை விபரிக்கக் கவிஞர் கையாண்ட உவமையே நாணலாக எனக்குப் படுகின்றது. நாணலை முதுகெலும்பற்றவர்களுக்கு, உறுதியான மனநிலை இல்லாதவர்களுக்குப் பொதுவாகக் கவிஞர்கள் ஒப்பிடுவார்கள். ஆனால் இங்கு கவிஞர் நாணலின் அசைவுகளைப் பெண்ணின் நடையசைவுகளுடன் ஒப்பிடுகின்றார். அதுதான் கண்ணதாசன். 🙂

ஒரு நாளின் எப்பொழுதுகளிலும் கேட்டு மகிழத்தக்க பாடல்களிலொன்று ‘அமைதியான நதிகளிலே ஓடம்’


4. சாவித்திரி: மகாநடிகையின் வீழ்ச்சி ஒரு காவியத்துயரம்!

சாவித்திரிஎஸ்.ராமகிருஷ்ணனின் ‘பறவைக்கோணம்’ அவரது சினிமா பற்றிய உயிர்மைக் கட்டுரைகளின் தொகுப்பு. அதிலொரு கட்டுரையில் அவர் நடிகை சாவித்திரி பற்றி குறித்திருந்தது என் கவனத்தை ஈர்த்தது. சாவித்திரி போன்ற நடிகையொருவர் இன்னும் தமிழ்த்திரையுலகில் அவருக்குப் பின்னர் வரவில்லையென்பது என் தனிப்பட்ட கருத்து. உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான முக பாவங்கள், நடிப்பு, துடுக்குத்தனமான பேச்சு, சிரிப்பு, அங்க அசைவுகள் இவையெல்லாவற்றிலும் அவர் சிறந்து விளங்கினார். எழுத்தாளர் எஸ்.ரா. கூறியதை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.:

“சாவித்திரியை நாம் நடிகையர் திலகம் என்றே சொல்கிறோம். சினிமாவில் இவர் ஒருவரே இந்தப்பட்டத்தைப்பெற்றவர். சாவித்திரியை மஹாநடிகை என்கிறது தெலுங்கு சினிமா. சொந்த வாழ்வில் அதிகமும் துன்பத்தையும் வேதனைகளையும் அனுபவித்துக் குடியால் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டா சாவித்திரி. ஆனால் அவரைப்போல் சினிமாவை நேசித்த சினிமாவிற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நடிகை இன்றுவரை எவருமில்லை. நடித்தாலும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் துடுக்குத்தனமிக்க பேச்சுமாக சாவித்திரி தனது தனித்தன்மையை வெளிப்படுத்தத் தவறியதேயில்லை. ‘தேவதாஸ்’ படத்தில் வரும் சாவித்திரிக்கும் ‘மிஸ்ஸியம்மா’வில் வரும் சாவித்திரிக்கும் இடையில் நடிப்பில் எவ்வளவு பெரிய மாறுபாடு! அந்த வேறுபாட்டை அவர் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் கவனமாக வெளிப்படுத்தியவர். மிகக்குறைவான நடிகைகளே திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார்கள். பானுமதி, அதில் ஒரு முன்னோடி. சாவித்திரி தமிழில் குழந்தை உள்ளம், பிராப்தம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். தெலுங்கிலும் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.”

இவ்விதம் கூறும் ராமகிருஷ்ணன் இன்னுமொரிடத்தில் ‘சாவித்திரி என்ற மகாநடிகையின் வீழ்ச்சியை ஒரு காவியத்துயரம் என்றே சொல்வேன்.’ என்பார். உண்மைதான். ‘காவியத்துயரம்’ இந்த சொற்தொடர் அற்புதமான விபரிப்பு. சாவித்திரியே ஒரு காவியம். அவரது முடிவினை விபரிக்க இதை விட வேறொரு சொல் இல்லை.


5.பேராசிரியர் நுஃமானும், பாரதியின் ‘கண்ணம்மாவும்’: ‘காற்று வெளியிடைக் கண்ணம்மா! நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்”

அண்மையில் எம்.ஏ.நுஃமானின் ‘மார்க்சியமும், இலக்கியத்திறனாய்வும்’ நூலினை மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தபோது என் கவனத்தை ஈர்த்த பகுதியினை முகநூல் நண்பர்களுடன் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

“.. கலைகள் எப்போதுமே கருத்து நிலைப்பட்டவையல்ல: அதாவது ஒரு வெளிப்படையான சமூகக் கருத்தை மட்டும் கூறுவன அல்ல. கலையில் அது ஒரு அம்சம்தான். பெரும்பாலான கலைகள் ஒரு குறிப்பிட்ட மனித உணர்வை , ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை, ஒரு குறிப்பிட்ட மனித ஆற்றலை வெளிப்படுத்துபவையே.. வெவ்வேறு கலை வடிவங்களில் இருந்து நாம் இதற்கு ஏராளமான உதாரணங்கள் காட்ட முடியும். … இங்கு ஒரு கவிதையையே உதாரணமாகக் காட்ட விரும்புகின்றேன். நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான பாரதியின் பாடல் ஒன்றையே தருகின்றேன்.

இது பாரதியின் அற்புதமான கவிதைகளில் ஒன்று. தமிழிலேயே உள்ள அற்புதமான கவிதைகளில் ஒன்று என்றும் நான் இதைச்சொல்வேன். இதற்குக் கண்ணன், தெய்வீகக்காதல் என்றெல்லாம் விளக்கம் சொல்வது அபத்தம். காதல் உணர்வை இக்கவிதையில் ஒரு அற்புதமான கலை ஆக்கி இருக்கிறான் பாரதி. எத்தனை முறை பாடினாலும் எனக்குச் சலிப்பதில்லை. இந்தக் கவிதை மனிதனின் காதல் உணர்வு உள்ளவரை இக்கவிதையும் வாழும் என்றுதான் நான் நினைக்கின்றேன்.” [பக்கம் 37 & 38]

இந்தக்கவிதை எனக்கும் மிகவும் பிடித்ததொரு கவிதை; திரைப்படப்பாடலும் கூட. உங்களில் பலருக்கும்தான். இப்பாடலை இங்கும் முன்பொருமுறை பகிர்ந்திருக்கின்றேன். இப்பொழுதும் மீண்டுமொருமுறை நுஃமானின் எண்ணங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

பாடல்: காற்று வெளியிடைக் கண்ணம்மா
படம்: கப்பலோட்டிய தமிழன்
வரிகள்: பாரதியார்
குரல்: பி.பி.ஸ்ரீனிவாஸ் – பி.சுசீலா
இசை: ஜி.ராமநாதன்

காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் – அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன்

வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் – கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த்
தீயினிலே வளர் சோதியே – என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்
(காற்று)

இந்தப்பாடலில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி ஒன்று உள்ளது.  அதில் பாடலைப் பாடிக்கொண்டிருக்கும் ஜெமினி

“கண்ணம்மா” என்பார்.

அதற்குச் சாவித்திரி “ம்ம்ம்” என்பார்.

அடுத்த முறையும் ஜெமினி மீண்டும் ஒருமுறை ‘கண்ணம்மா” என்பார்.

அதற்குச் சாவித்திரி மீண்டுமொருமுறை “ம்ம்ம்ம்ம்ம்” என்று ‘ம்’ மைச் சிறிது நீட்டிப்பதிலளித்துப்பாடுவார்.

இப்பகுதி பாரதியின் கவிதையில் இல்லாத பகுதி. திரைப்படத்தில் பாடலுக்காகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட பகுதி.

அந்த இடத்தில் பாடகர்களின் குரலினிமை என்னை மிகவும் கவரும் வகையிலுள்ளது. குறிப்பாக இரண்டாவது முறை சாவித்திரி ‘ம்’ மைச் சிறிது நீட்டிச்சொல்கையில் அதில் தெரிவும் கனிவும், காதலும், குழைவும் அற்புதமான உணர்வினைக் கேட்பவருக்கு ஏற்படுத்தும். பாடல் முழுவதிலும் ஜெமினியும், சாவித்திரியும் உண்மையிலேயே காதலர்கள் என்பதால் காதல் உணர்வுகளைக் கொட்டி வெளிப்படுத்தியிருப்பார்கள். அங்கு அவர்கள் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கின்றார்கள் என்பேன்.

இதுவரைத் தமிழ்ச்சினிமாவில் வெளியான பாடல்களில்,, காதல் உணர்வினை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல்களில், முதலாவது இடத்தில் இப்பாடலை வைப்பதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை.