முன்னுரை
உலகின் எந்த மொழி இலக்கியமானலும் அது தோன்றிய சமகாலநிகழ்வுகளை பிரதிபலிப்பதாகவே பெரும்பாலும் அது அமையும் எனலாம். ஆனால், நாம் இன்று அனுபவிக்கும்; எந்தவொரு நவீனக் கண்டுபிடிப்பும் தோன்றாத காலகட்டங்களில் வாழ்ந்த மக்களின் சமுதாய பின்னனிகளையும், அவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும், அவர்களை வழிநடத்திய அரசர்களையும், அவர்கள் கால வரலாறுகளையும், இன்னபிற பதிவுகளையும் ஏடுகளில் அடுத்த தலைமுறையினருக்கு எழுத்து வடிவத்தில் எடுத்துச்செல்லும் அற்புதப் பணியில் ஈடுபட்ட நம் முன்னோர்களின் முயற்சி உண்மையில் வியந்து பாராட்டத்தகும். அந்த வகையில் தமிழுலகம் இதுவரை எத்தனையோ இலக்கண இலக்கியங்களை தன்னகத்தே வளர்த்து வந்துள்ளது. அவற்றில் தமிழுக்குக் கிடைத்த தூது என்னும் சிற்றிலக்கியம் அகவாழ்விலும் புறவாழ்விலும் மன்னர்களுக்கும் மக்களுக்கும் ஆற்றிய பெரும்பணி தமிழிலக்கியம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது என்பதை கற்றோர் யாவரும் அறிவோம். உ.வே.சாமிநாதையர் நூலகச்சுவடியில் பதிப்பாசிரியர் மு.சண்முகம்பிள்ளை மற்றும் பொறுப்பாசிரியர் முனைவர் இரா.நாகசாமி முயற்சியால் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்ட திருவேங்கடநாதன் வண்டுவிடு தூது என்னும் நூலின் உட்கருத்துக்களை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூது பொருள் விளக்கம்
ஒருவர் தன்னுடைய கருத்தினை மற்றொருவருக்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிவிப்பதற்கு தன் நம்பிக்கைக்குரிய உயிரினத்தின் வாயிலாகவோ அல்லது ஒரு நபரின் வாயிலாகவோ ஒலிவடிவிலோ வரிவடிவிலோ பொருள்வடிவிலோ தெரிவிப்பதனை தூது எனலாம். தூது என்பது சொல்லியனுப்பப்படும் செய்தியையும் சென்று சேர்ப்பவனின் செயலையும் குறிக்கும். இச்செயலினைச் செய்பவன் ‘தூதன்’ எனப்படுவான். இந்நிலை உயர்திணை அஃறிணையாகிய இரண்டிற்கும் பொருந்தும்.
மகளிர் தம் மனங்கவர்ந்த மனாளனுக்கு தன்நிலையை தோழியின் வாயிலாகத் தூதாகச் சொல்லியனுப்பும் மரபு நம் தமிழ் சமுதாயத்தில் காலந்தோறும் இருந்து வந்துள்ளதனை இலக்கண இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது. மேலும், பிரிவுக்காலங்களில் தலைவன் தலைவியின் மனமாற்றத்தினை நீக்குவதற்கு தோழி உள்ளிட்ட பலரும் தூதாக சென்றுள்ளனர். இவ்வாறு தலைவன் தலைவி பொருட்டு தூது செல்பவளை ‘தூதி’ என்பர். தலைவன் தலைவியின் காதல் பொருட்டு செல்லும் தூதினை ‘வாயில்’ என்னும் பெயரால் தொல்காப்பியர் குறிப்பிடுவர். இதனையே,
“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” ( தொல்.பொருள்.கற்பியல்.52 )
என்னும் மேற்கண்ட நூற்பா வாயிலாக அகவாழ்க்கையில் வாயில்களாக பன்னிருவர் (12) அமைவார்கள் என்பதனைத் தொல்காப்பியர் தொகுத்துத்தந்துள்ளார். புறவாழ்க்கையில் ஆண்பாலரும் அகவாழ்க்கையில் மகளிரும் தூதாகச் சிறப்பிடம் பெற்றுள்ளனர். புறத்தில் மிகச்சிறுபான்மையாக ஒளவையார், அதிகமான் நெடுமானஞ்சிக்கு அரசியல் தூதுவராக செயலாற்றிய நிகழ்ச்சிகளும் வரலாற்றில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன என்பதனை புறநானூறு 95 வது பாடல் பதிவுசெய்துள்ளது.
அரசனும் தூதனும்
அரசனுக்குரிய ஆறு அங்கங்களைப் போலவே செய்தியினை சுமந்துவரும் ஒற்றன் அல்லது தூதன் என்பவனும் தமிழிலக்கண இலக்கியத்தில் சிறப்பிடம் பெறுகிறான். ஒரு அரசனின் அரசவையில் அமைச்சன் என்பவன் எவ்வளவு இன்றியமையாதவனோ அவனைப் போன்றே தூதனும் முதன்மை இடம்பெறுகிறான். உலகமக்கள் யாவருக்கும் அறத்தினை எடுத்து ஓதும் வள்ளுவப் பெருந்தகை, அமைச்சியல் என்னும் அதிகாரத்தில் தூதுரைப்பவனின் பண்புகளை தூது என்னும் பகுதியில் மிக அழகாக எடுத்துரைத்துள்ளார்.
சிலப்பதிகாரம், இராமாயணம் போன்ற காவியங்களிலும் அரசியல் சார்பான தூது நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. இராமாயணத்தில் அனுமன் தூது அங்கதன் தூது நிகழ்ச்சிகளும், பாரதத்தில் உலூகன் தூது, சஞ்சயன் தூது, கிருட்டினன் தூது பற்றிய பதிவுகளும் காணமுடிகின்றன. கந்தபுராணத்தில் வீரபாகு தேவர் தூதும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இதுபோன்ற இதிகாச மற்றும் காவியத்தூதுகள் போர் நிகழ்வதற்கு முன்னர் மாற்றரசர்களுக்கு போரினைத் தவிர்க்கும் சமாதான முயற்சிக்காக இடம்பெற்றுள்ளது என்பதனை அறியமுடிகின்றது.
காப்பியங்களில் தூது
சிலப்பதிகாரத்தில் தலைவி தன் தலைவனுக்கு விடுத்த தூது நிகழ்ச்சிகள் சிற்சில இடங்களில் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று சீவகசிந்தாமணியிலும் குணமாலை சீவகனுக்குக் கிளியைத் தூது விடுத்த செய்தியும் காணமுடிகின்றது. (சீவகசிந்தாமணி : 1000 – 1002). நளனுடைய சரித்திரத்தில் நளன் தமயந்தியிடம் அன்னப்பறவையினை தூதனுப்பிய வரலாற்றுச்செய்தியும் இடம்பெற்றுள்ளது.
தூது இலக்கியத்தின் இலக்கணம்
பிரபந்த இலக்கிய வகைகளுள் தூது இலக்கியங்கள் காலந்தோறும் வளம் பெற்று வந்துள்ளன. தலைவி என்பவள் தன் தலைவனுக்கு ஏதேனும் ஒரு முறையில் தன்னிலையை தெரியப்படுத்த தூது விடுப்பதாகக் கலிவெண்பாவால் பாடப்படும் பிரபந்தவகையே தூது எனப்படும். தலைவன் தலைவிபால் தூது விடுத்தலும் சிறுபான்மையாக இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. சத்திமுற்றத்துப்புலவர் பாண்டியன் தலைநகராம் கூடல்நகரில் குளிரால் நடுங்கிக்கொண்டிருக்கும் தம் மனைவிக்கு நாரையை தூதனுப்பிய போது ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ எனத்தொடங்கும் தனிப்பாடலால் தூது இலக்கியத்தினை மேன்மையுறச் செய்துள்ளார் என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது. வேதாந்ததேசிகர் பாடிய ஹம்ஸசந்தோசமும் இவ்வகையினதே ஆகும்.
அஃறிணைப் பொருள்களைத் தூதுவிடல்
அஃறிணைப் பொருள்கள் எடுத்துரைக்கும் திறன் அல்லது சொல்லும் திறன் இல்லாதவனவாயிற்றே, அவை தூது சென்று ஒருவரிடம் செய்தியைச் சொல்லி மீண்டு வந்து தெரிவிக்கும் அறிவும் இல்லதாவனவாயிற்றே என்ற ஐயம் எழக்கூடும். இருந்தாலும் தலைவன் தலைவியின் புரிந்துணரும் தன்மையாலும் அறிவுநுட்பத்தாலும் அது சாத்தியம் என நிருபிக்கும் தூது இலக்கியங்கள் பல தமிழில் உள்ளன. இதனடிப்படையில் தலைவன் தலைவியின் காதல் அல்லது மனமயக்கத்தினை அவரவர் தன்மைக்கு ஏற்றார்போல் வெளிப்படுத்த அஃறிணைப்பொருள்கள் ஒரு வாயில்களாக அமைந்துள்ளன. இவ்வாறு ஆண் பெண்ணின் உள்ளக்கிடக்கையில் தோன்றி வளர்ந்த காதல் உரையாடல்களை அகத்திணைத் துறையுள் ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என தொல்காப்பியம் வரையறை செய்கிறது.
“சொல்லா மரபி னவற்றோடு கெழிஇச்
செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும்” ( தொல்.பொருள் : 2 )
என்னும் தொல்காப்பிய நூற்பா தூது இலக்கிய மரபினை விதிமுறையால் விளக்கியுள்ளது.
அஃறிணைப் பொருள்களை நோக்கித் தத்தம் எண்ணங்களைக் காதலர் வெளிப்படுத்தும் அணுகுமுறையினை ஓர் இலக்கிய வடிவமாக அல்லது தமிழரின் மரபாக சான்றோர் கையாண்டுள்ளனர். இதனையே,
“ஞாயிறு திங்கள் அறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ள நெஞ்சே
அவையல பிறவும் நுவலிய நெறிவால்
சொல்லுந போலவும் கேட்குந போலவும்
சொல்லியாங் கமையும் என்மனார் புலவர்”
(தொல்.பொருள்.செய்யுளியியல்.நூ.201 )
என்று செய்யுளியியல் நூற்பாவில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார் எனலாம். மேலும்,
“கேட்குந போலவும் கிளக்குந போலவும்
இயக்குந போலவும் இயற்றுந போலவும்
அஃறிணை மருங்கினும் அறையப் படுமே” ( நன்னூல் நூ.எ : 409 )
என பவணந்தி முனிவரும் நன்னூலில் அஃறிணைப் பொருள்கள் வழி தூது விடும் மரபினை போற்றியுள்ளார் என மேற்கண்ட நூற்பா சான்றளிக்கிறது.
தூது இலக்கியத்தின் பழமை
தூது என்ற இலக்கிய வடிவத்தின் சாயல் அல்லது பிரதிபலிப்பு தமிழின் பல்வேறு பழமை வாய்ந்த நூல்களிலும் இடம்பெற்றுள்ளதை எண்ணி ஆராய்கையில் அது தோன்றி வளர்ந்த காலச்சூழல் எத்தனை பழமையானது என யூகிக்க முடிகிறது. தூது இலக்கியத்தின் வெளிப்பாடு அகநானூற்றில் 170 வது பாடலில் ‘கனலுங் கழறாது’ என்னும் வரிகளால் தலைவி தன் தலைவனுக்கு நண்டைத் தூதனுப்பிய செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஐங்குறுநூற்றில் ‘சூழ்கம் வம்மோ’ என்ற 217 வது பாடல் வரிகளால் நெஞ்சைத் தூது விட்ட செய்தியையும் காணமுடிகிறது. ‘தூதேய வண்டின் தொழுதி’ என்னும் பரிபாடல் வரிகள் வண்டைத் தூது விடும் மரபினை சுட்டிக்காட்டுகிறது. ‘சிறு வெள்ளாங் குருகே’ என்னும் நற்றினையின் 70 வது பாடல் வரிகள் குருகைத் தூதுவிடும் முறையினை உணர்த்துகிறது. மேற்கண்ட சான்றுகளை உற்றுநோக்கும் பொழுது தொல்காப்பியம் மற்றும் சங்கப்பாடல்களிலும் தூது இலக்கியத்தின் மரபும் அமைப்பும் அமைந்துள்ளதால் தூது இலக்கியத்தின் காலம் மிகப்பழமையானது என அறியமுடிகிறது. தொல்காப்பியமும், சங்கஇலக்கியமும் தூது இலக்கியத்தின் தோற்றத்தினை பல இடங்களில் பதிவு செய்திருந்தாலும், தூது இலக்கியத்திற்கென முறையான தனிவடிவத்தினை சிற்றிலக்கிய காலங்களே வரையறை செய்துள்ளன.
தூதனுப்பும் பொருட்கள்
தூதனுப்பும் பொருட்கள் எவையெவை என்பதனை இரத்தினச் சுருக்கம் என்ற நூலில் அமைந்துள்ள செய்யுள் ஒன்று (7) எடுத்துரைக்கிறது. அவையாவன,
“இயம்புகின்ற காலத்து எகினம் மயில் கிள்ளை
பயம்பேறு மேகம்பூவை பாங்கி – நயந்தகுயில்
பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்தும்
தூதுரைந்து வாங்கும் தொடை” ( இரத்தினச் சுருக்கம் 1 : 7 )
மேற்கண்ட செய்யுள் உணர்த்தும் பொருண்மையாவது எகினம் (அன்னம்), மயில், கிள்ளை (கிளி), மேகம், பூவை (நாகணவாய்ப்புள்), பாங்கி (தோழி), குயில், நெஞ்சம் (மனம்), தென்றல், பிரமரம் ( வண்டு ) போன்ற பத்துப் பொருட்கள் தூது விடுத்தற்குரியன என்று இரத்தினச் சுருக்கம் கூறுகிறது. இப்பொருள்களையே தூதனுப்பியதாக ஆன்றோர்களால் ஆக்கப்பெற்ற பல இலக்கியங்களும் சான்றளிக்கின்றது.
இரத்தினச் சுருக்கம் வரையறுத்த பத்துப்பொருட்களோடு காலப்போக்கில் புதியன புகுதலாக வெவ்வேறு பொருட்களையும் தூது விடுத்ததாகப் பாடிய நூல்களும் தமிழில் உள்ளன. வசைவிடு தூது (தாமரை), நெல்விடு தூது, பணவிடு தூது, விறல்விடு தூது என்பன புதுமைப் பொருட்களாகவும், தமிழ்விடு தூது, புகையிலைவிடு தூது போன்றவை பிற்காலத்தில் தோன்றியதாகவும் அறியமுடிகிறது.
தூது இலக்கியமும் புலவர் விருப்பமும்
பெரும்பான்மை காதல் நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்ட தூது இலக்கிய பிரபந்தங்கள் இன்பமும் மகிழ்ச்சியும் தருபவையாக அமைந்துள்ளன. இவற்றில் மாறுபட்ட தன்மையில் அமைந்த தூது இலக்கியங்களும் தமிழில் பாடப்பட்டுள்ளன என்பதனையும் அறியமுடிகிறது. அதாவது, தம்முடன் பொருந்தாது பகைத்தவர்மேல் வசைமாரி பொழிவதற்கும் புலவர்கள் தூது இலக்கியத்தினை பயன்படுத்தியுள்ளனர் எனலாம். சான்றாக, செருப்புவிடு தூது, கழுதைவிடு தூது போன்றவையாகும்.
காட்சிப் பொருளோடு கருத்துப் பொருளான நெஞ்சும் தூதுப்பொருளாக தமிழில் எடுத்தாளப்பட்டுள்ளது. ஞானகுருவின் மீது நெஞ்சைத் தூது விடுவது பக்தனின் அளப்பரிய பாசத்தின் வெளிப்பாடாகும். சிவஞானபாலைய சுவாமிகள் மீது சிவப்பிரகாசர் பாடிய நெஞ்சுவிடு தூது, கமலை ஞானப்பிரகாசர் மீது மாசிலாமணி தேசிகர் இயற்றிய நெஞ்சுவிடு தூது போன்றவை தமிழில் மாறுபட்ட சிந்தனையில் தோன்றியதாகும். எனவே காலத்திற்கு காலம் வெவ்வேறு தூது இலக்கியம் தமிழில் தோன்றியுள்ளதை அறிவதிலிருந்து தூது இலக்கியம் பாடுவதில் புலவர்கள் பெருவிருப்பம் கொண்டிருந்தனர் எனவும் அறியமுடிகின்றது.
தூது இலக்கியத்தின் பெயரும் சிறப்பும்
தூது இலக்கியங்களின் பெயர்கள் யாவும் தூதனுப்பப்படும் பொருளின் பெயரை மையமிட்டே அமைந்திருக்கும். பாட்டுடைத் தலைவனுக்கு முதன்மையிடம் தருவது போலவே தூது இலக்கியங்களில் தூது விடப்படும் பொருளுக்கும் சிறப்பிடம் தந்து புலவர்கள் தம் புலமைத்திறத்தினை வெளிப்படுத்தியுள்ளனர் எனலாம்.
எந்த வகையான ஒன்றை கவிஞன் தூதிற்குரிய பொருளாகத் தேர்ந்தெடுத்தாலும் அதன் நோக்கத்தினையும் சிறப்பினையும் எடுத்தியம்பும் பகுதி அவருடைய அறிவுப்புலமையின் உச்சத்தினையும், கற்பனைத் திறத்தின் உயர்ந்த சிந்தனையையும் வெளிப்படுத்துவதாக அமையும் என்பதில் வியப்பில்லை. மேலும், தூதனுப்புவதற்குரிய பொருட்களின் தகுதியினை வரையறுத்த புலவர்கள், தூதினை திறம்பட எடுத்துச்சொல்ல அல்லது எடுத்துச்சொல்ல திறன் இல்லாத பிறபொருட்களின் குறைகளையும் கற்பித்து விளக்கும் புலவரின் அறிவுத்திறன் உண்மையில் போற்றத்தக்கதாகும்.
தூது இலக்கியம் என்பது பாட்டுடைத் தலைவனின் வரலாறுகளையும் சிறப்புகளையும் பலவகையாகப் புகழ்ந்து பாடுவதற்கும் இடமளிக்கிறது. தலைவனுடைய தசாங்கங்களை தனிப்பட எடுத்துரைக்கும் பிரபந்தங்கள் சொல்லணி, பொருளணி, சிலேடை நயம் அமையப் பாடப்பட்டுள்ளன.
காதலனோடு கூடி அனுபவிக்கும் இன்ப நிகழ்ச்சிகளும் இடமறிந்து பேசும் இயற்கை உரையாடல்களும் இவ்விலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. காமநூல் போலக் காட்சியளிக்கும் கலவிப் பூசலைக் கட்டுரைக்கும் பகுதிகளும் எடுத்துச் சொல்ல இயலாத காதலர் தம் சேர்க்கை இன்பங்களை அவர்களுடைய உரையாடல் வழி வெளிப்படுத்தும் பாங்கும் இவ்விலக்கியங்களில் காணப்படுகின்றன. எனவே, காமுகர் காமநூல் என்று புகழப்படும் நூல்களும் தூது இலக்கியங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளன என்பதனை அறியமுடிகிறது.
தூது இலக்கியங்களின் முடிவு பெரும்பாலும் தலைவனுடைய மார்பில் அலங்கரிக்கும் மாலையைப் பெற்றுவா! என்று வேண்டுவதாகவே அதனை முடிப்பது மரபாகும். சிவபெருமானைக் குறித்த கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டுவிடு தூது, பத்பகிரிநாதர் தென்றல்விடு தூது ஆகியவற்றில் அப்பெருமானுக்குரிய கொன்றை மாலையை பெற்று வா ! என்று கூறுவதாக முடிகிறது. தமிழ்விடு தூது,
“துறவாதே சேர்ந்து சுகாநந்த நல்க
மறவாதே தூது சொல்லி வா”
எனத் தனக்கு இன்பம் தருமாறு செய்தி சொல்ல வேண்டுகிறது.
“பூங்கொன்றை வாங்கியிங்கும் பொற்பக் கொணர்ந்தென்னும்
ஓங்கி பெரும் வாழ்க்கை உதவு”
எனக் கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டுவிடு தூதில் தலைவியானவள் மாலையைப் பெற்று வந்து பெறுவாழ்வு தர வேண்டுகிறாள். தலைவன் மாலையைப் பெறுவதென்பது அத்தலைவன் வந்து தலையளி (தழுவுவது) போன்ற அறிகுறியாகும். இந்தத் திருவேங்கடநாதன் வண்டுவிடு தூதும் இம்மரபினையே போற்றி,
“கண்டே நான் கொண்ட மயல் காதலெல்லாம் சொல்லி மலர்
வண்டே பூந் தார்வாங்கி வா”
என்று நிறைவு பெறுவதனை காணமுடிகிறது. மக்கள்மேல் விடப்படும் தூதும், மக்கள் யாவரும் போற்றும் தெய்வங்களின் மீது மக்களொருவர் விடுகின்ற தூதுமென இதனை இருவகையாக கூறலாம். மானிடர்களுக்குள் ஏற்படுகின்ற காதல் உரையாடல்களும் நிகழ்வுகளுமாக, தெய்வங்களை முன்னிருத்திய தெய்வக்காதலில் பக்தியை நிலைக்களனாகக் கொண்டும் அமைகின்றன. தெய்வக்காதலை, ‘கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்தபக்கம்’ என்பர். தூது இலக்கியத்தினை வரலாற்று நோக்கில் அணுகும்பொழுது அரசன், வள்ளல்கள் முதலியோரைத் தலைவனாகக் கொண்டு அமையும் இலக்கியங்கள், அவனுடைய வாழ்க்கைச் சிறப்பினையும் அவன் வாழ்ந்த காலத்தில் ஆற்றிய நற்பணிகளையும் இவ்விலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. மேலும், மானிடக்காதல் இயல்பான ஒன்றாக அமைவதனால் மக்கள் மற்றும் அரசன் குறித்த பிரபந்தநூல்கள் முற்பட வைத்து எண்ணத்தக்கதாக அமைகின்றன. திருவேங்கடநாதன் வண்டுவிடு தூதும் இவ்வகையில் அமைந்த ஒரு பிரபந்த நூலாகும்.
திருவேங்கடநாதன் வண்டுவிடு பெயர்க்காரணம்
திருவேங்கடநாதன் என்னும் பெருந்தலைவனின் பவனியில் அவனைக் கண்டு மனமயங்கி காதல் வயப்பட்ட மங்கையர் ஒருத்தியின் மணம்திறந்த உரையாடலை வண்டின் வாயிலாக வெளிப்படுத்தும் இந்நூல் திருவேங்கடநாதன் வண்டுவிடு தூது என்னும் பெயரில் இயற்றப்பட்டுள்ளது.
திருவேங்கடநாதன் வரலாறு
தென்பாண்டி நாட்டின் ஒரு பகுதியான திருவழுதி என்னும் வளநாட்டை ஆண்ட குறுநிலத்தலைவரே திருவேங்கடநாதன். இவருடைய தலைநகரம் திருக்குருகூர், சடகோபராகிய நம்மாழ்வார் திருப்புளிக்கீழ் அமர்ந்து திருப்பதியாதலின் ‘ஆழ்வார் திருநகரி’ என்னும் பெயர் பெற்றதாகக் கூறுவர். இவருடைய பெருமை பேசும் தசாங்கம் பகுதியில் (59-66) பொதியமலையும், பொருநை நதியும் இவருக்கு உரிமையாகச் சொல்லப்பட்டிருப்பதால், திருநெல்வேலிச் சீமையில் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய சிற்றரசராக இவர் விளங்கினார் என அறியமுடிகின்றது. இவருக்கு உரித்தான திருவழுதி வளநாடும் (66 – 70), திருக்குருகையூரும் (70-88) தூது நூலில் சிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், குவளை மாலை இத்தலைவருக்குரியது எனக் கூறப்பட்டுள்ளமையால் இவர் வேளாளப்பிரபு என அழைக்கப்பட்டுள்ளார் என்பதனை வெளிப்படையாக அறியமுடிகின்றது. தூதின் முதற்பகுதியில் 203 ஆம் கண்ணிவரை இத்தலைவனது கொடைச்சிறப்பு, வெற்றிச்சிறப்பு, குடிச்சிறப்பு, தசாங்கங்கள் முதலியனவற்றை விளக்கி, இவர் பவனி வரும் காட்சியை வருணிக்கும் பகுதியாக இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. யுதிராசராகிய இராமாநுஜர் வழங்கிய விசிட்டாத்துவிதம் எனப்படும் ஸ்ரீ வைணவ சித்தாந்தத்தில் திருவேங்கடநாதன் பேரீடுபாடு கொண்டிருந்தான் என்பதனை,
“யதிபதிசித் தாந்தம் முந்திக்கேது வென்றநூலே
யதிக மென்று நம்பு நமது ஐயன்” (41)
என்னும் பாடல் புலப்படுத்துகின்றது.. இவன் திருமாலை வழிபடுபவன் என்பதனையும் புலவர் ஆங்காங்கே வெளிப்படுத்தியுள்ளார். திருஞானதேசிகனாகிய நம்மாழ்வாரின் பாதம் பணியும் பக்தன் இவன், வானாசலமுனி இவருடைய ஆசிரியர் ஆவார். வானாசலம் என்பது வானமாமலை எனப் பெருள்படும். இப்பொழுது நாங்குனேரி என இப்பகுதி அழைக்கப்படுகிறது. தோத்தாத்திரி என்றும் இதற்கு மற்றொரு பெயரும் உண்டு. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இவ்வூரில் திருமாலடியாராகிய ஜீயர் வீற்றிருக்கும் திருமடமும் உள்ளது. இம்மடத்தில் விளங்கிய ஆசாரியினிடத்து இவர் பெரும் பக்திகொண்டவராக அறியப்படுகிறார்.
“அண்டர்தொழும் வானாசலமுனியை வந்தித் திருபொழுதுந்
தேனார் மலகுடியைச் சிந்திப்போன் – ஆனாத
கல்விக் கடலையருட் காரி தருங்கனியைச்
செல்வக் கொழுந்தை திரளமுதைச் – சொல்வித்தை
மேளாத் திருவுருவை முத்திக்கு வித்தை மலர்த்
தேவைத் திருஞான தேசிகனை – வானவரும்
வேதாவும் காணவிரும்பும் பரிபுரப் பொற்
பாதார விந்தம் பணிருதிருவோன்” ( 36 – 40 )
என்ற பாடலில், நாள்தோறும் நீராடிய பின்பு திருமாலைச் சிந்தையில் வைத்துப் பூசித்துத் திருஞான முத்திரைக்கைத் தேசிகனான சடகோபரைத் தொழுதுவிட்டு தம் அரச காரியங்களைக் கவனித்து வந்தார் திருவேங்கடநாதன் என்பதனையும் கவிஞர் எடுத்துரைத்துள்ளார். மேலும் இச்செய்தியினை எடுத்துச்சொல்ல முயன்ற புலவர்,
“சேவித்தாரங்கே திருமஞ்சனம் பணிந்து
மேவித் திருந்துகிலோன் மெய்புலர்த்தி – பூவிரிந்த
பீதாம் பரத்தரித்துப் பீடிகையில் வீற்றிருந்து
வேதாந்த மெய்ப்பொருளை விண்ணவருக் – காதார
மான பரம்பொருளை யச்சுதனைச் சிந்தை செய்து
மோனத் திருஞான முத்திரைக்கைத் தானவனைக்
கும்பிட்டு நாமக் கொறு முடிந்த பின்னர்” ( 125 – 128 )
என்ற பாடலடிகளால் திருவேங்கடநாதன் தெய்வச்செயலினை விவரித்துள்ளார். திருவேங்கடநாதன் கல்வியால் மேம்பட்டவன் என்று ‘அட்டாவதாணி திருவேங்கடநாதன்’ என்னும் தனிப்பாடல் இவரைச் சிறப்புச் செய்கிறது. மேலும், ‘கல்வி கவியானவன் என்றும், யாவும் கற்ற திருவேங்கடநாதன்; என்றும்’ இன்னும் சில தனிப்பாடல்கள் இவரைப் புகழ்ந்துரைக்கின்றன. ‘கல்விப்புலவர் புகழ் தன்னகரித்துரை’ என்பதால் இவரைப் புலவர்பெருமக்கள் யாவரும் பிடித்துப் போற்றும் புகழுக்குரியவன் என்பதும் இதன்மூலம் தெரிய வருகின்றது. மேலும், இத்தூது பிரபந்தம் தவிர பிள்ளைத்தமிழும் சதகமும் இவரைப் பாடி பரவசப்படுத்துகின்றன.
திருவேங்கடநாதனின் குடிவழி உறவுகள்
திருவேங்கடநாதனின் குடிவழிச் செய்தியினைத் வண்டுவிடு தூதின் 45 ஆம் கண்ணி முதல் 59 ஆம் கண்ணி வரையுள்ள பகுதிகள் யாவும் பதிவு செய்துள்ளன. இத்தூது நூலின் வழி அறிய வரும் திருவேங்கடநாதன் குடிவழி உறவுகளாவன, இவர் துரை சுப்பிரமணியம் என்ற மன்னனின் புதல்வர் (22-44) என்றும், மீனாட்சிநாதன் என்பது இவருடைய தமையன் என்றும் (46), இவருக்குச் சுவாமிநாதன் என்ற தம்பி ஒருவர் இருந்தார் என்றும் (47), சங்கரநாராணயன் என்பது இவருடைய பெரிய தந்தையின் பெயரென்றும் (53), இப்பெரிய தந்தையின் வழிச் சகோதரன்கள் துரைமாலைப் பிள்ளை, தெய்வநாயக மகீபன், பெரிய இருவழ விபேகன் என்ற மூவரும் (53-54). சங்கரநாராயணன், தையல் பாகன், சுப்பிரமணியன், சீனிவாசன் ஆகிய நால்வரும் இவருக்கு மாமன்கள் (55-57) எனவும், சங்கரமூர்த்தி, வைகுந்தநாதன் என்ற இருவரும் இவருக்கு மைத்துனன்கள் (58) என்றும் திருவேங்கடநாதனின் குடிவழி உறவுமுறையினையும் வண்டுவிடு தூது எடுத்தியம்புகிறது.
திருவேங்கடநாதனின் காலமும் சிறப்பும்
தூது இலக்கிய பிரபந்தம் மட்டுமல்லாமல் திருவேங்கடநாதன் பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கியமும் தமிழில் இவர் பெயரால் எழுந்துள்ளது. மேலும், தனிப்பாடல்கள் மட்டும் இவர் பெயரில் 38 இருந்தாகக் கூறப்படுகின்றது. இவற்றுள் 35 மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நூல்கள் இவருடைய வெற்றிச்சிறப்பு, கொடைச்சிறப்பு, ஆட்சியின் மேன்மை, இவர் ஆற்றிய அறச்செயல்கள் போன்ற பல்வேறு நற்செய்திகளை தெரியப்படுத்துகின்றன. அவற்றுள் ஒன்று திருவேங்கடநாதன் திருக்குருகூர் ஆலயத்தில் கருடவாகனம் செய்தளித்தமையை விவரிக்கின்றது. இதனை,
“மன்றுதொள விரத்தனுபத் தவ்யா மாண்டு
மாசிமதி மேவுமதி னோராத் தெய்தி
பன்னுசுக்கிர வாரமசு பதிதன் னாளிற்
(பங்கயக்) கண் மாயர்திரு வுளத்துக்கேற்கச்
சொன்னவடி வாற்கருடே சனைமிக் காகத்
தொல்லில் கினிற்பிரதிட்டை தோன்றச் செய்தான்
நன்னயவான் புகழ்வளஞ்சேர் குருகை மாறன்
நகர்த்திருவேங் கடநாத ராசன் மானே”
என்ற மேற்கண்ட பாடலடிகள், கருடவாகனம் செய்துகொடுத்தது கொல்லமாண்டு 965 எனச் சுட்டுகிறது. கொல்லம் ஆண்டு 965 என்பது கி.பி.1790 ஆகும். இதனால் இவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சி புரிந்தவனாக இருக்கவேண்டுமென இலக்கியச் சான்றின் வாயிலாக அறியமுடிகின்றது.
வண்டுவிடு தூதின் நூலாசிரியர் பற்றிய செய்திகள்
வண்டுவிடு தூது என்னும் நூலாசிரியர் பற்றிய பெயரும் விவரமும் எந்தத் தமிழ் பிரதிகளின் வழியாலும், பிறவற்றாலும் அறியும்படி இல்லை. ஆனால், இப்புலவர் திருவேங்கடநாதனால் ஆதரிக்கப் பெற்றவராய் இருத்தல் வேண்டும். தம்மை ஆதரித்த வள்ளலுக்கு நன்றி பாராட்டும் விதமாக இப்பிரபந்தத்தை இயற்றி அத்தலைவனின் புகழை பூலோகத்தில் நிலவச்செய்துள்ளார் எனலாம். ஏனெனில், இப்புலவர் பாடும் பிரபந்தத்தின் வாயிலாக மட்டுமே அத்தலைவனின் புகழை இவவுலகம் அறியும் வாய்ப்பை பெற்றுள்ளது. இத்தலைவனைக் குறித்த வரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில் வேறு எந்தத் தடயங்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. திருக்குருகூருக்குச் சென்று துருவி ஆராய்ந்தால் ஏதேனும் ஒரு சில சான்றுகள் கிட்டினாலும் கிட்டும் என்ற செய்தி மட்டும் ஆய்வுக் கருத்தாக முன்வைக்கப்படுகிறது. வண்டுவிடு தூதின் நூலாசிரியர் தம் படைப்பிற்கு ஏற்ற இடத்தில் திருக்குறள், நாலடியார் போன்ற தமிழின் உயர்ந்த அறஇலக்கியங்களின் நற்கருத்துக்களையும் அப்படியே கையாண்டுள்ளார். அவைகளாவன,
“நனவென வொன்றிலை யாயிற் கனவினாற்” ( குறள் : 1216 )
“காதலர் நீங்கலர் மன் னென் – றனுதினமும்” ( கண்ணி – 246 )
“குறிச்சிறுங் காமஞ் சுடுமே குன்றேறி
யொளிப்பினுங் காமஞ் சுடுமென் – றளித்தவுரை” ( நாலடியார் பா.எ. 90: வரி 225 )
ஆகியனவாகும். மேலும், வண்டின் பெருமை பேசுவதற்காக இராமாயண மகாபாரத நிகழ்ச்சிகளையும் சீவகசிந்தாமணிச் செய்திகளையும் குறிப்பிட்டுள்ளார். (230 – 241) அதுமட்டுமல்லாமல், பெருங்கதையில் வரும் மதியூசி என்னும் உதயனின் நண்பனைக் குறித்து இவரது நூலில் குறிப்பிடுவதால் பழந்தமிழ் நூல்களிளெல்லாம் இவர் பெரும்பயிற்சி உடையவராக இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது. இவர் பாடிய திருவேங்கடநாதன் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சி புரிந்தவனாதலின் இப்புலவரும் அக்காலத்தவரே எனக்கருதப்படுகிறார்.
முடிவுரை
திருவேங்கடநாதன் வண்டுவிடுவிடு தூது நூலாசிரியரின் வாக்கு வளமாயுள்ளது, தலைவனின் மேன்மையும் பவனிச்சிறப்பும், இந்நூல் எழுந்த சமகால வரலாறும், தலைவியின் காதலும், அவள் கனவில் கண்ட இன்பக்காட்சிகளும், கனவு கலைந்த நிலையில் அவளுடைய விரகதாபங்களும், அதனால் வருந்திப் பூஞ்சோலையில் தன்முன் எதிர்பட்ட வண்டு ஒன்றைத் தூதனுப்பும் பகுதி யாவும் தமிழின் சுவையை நன்குணர்ந்த முதிர்ந்த புலவனைப் போல் எழுத்தில் வடிவமைத்த எண்ணமும் கருத்தும் கற்பனையும் எண்ணி யாவரும் வியக்குமளவு அமைந்துள்ளது. தொலைத்தொடர்பு எதுவுமற்ற பழங்கால மக்களின் அகம் மற்றும் புறவாழ்வியல் சிக்கல்களை அறிந்தது மட்டுமல்லாமல் அக்குறைகளை நிவர்த்தி செய்ய அவர்கள் கையாண்ட முறை உண்மையில் சிலிர்ப்பூட்டுகிறது. இருந்தாலும் விஞ்ஞான வளர்ச்சியில் இதுபோன்ற சிற்றிலக்கிய வடிவங்களின் மெய்ப்பாடும் வெளிப்பாடும் பல சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. ஆனால், கலைகளையும் இலக்கியங்களையும் வளர்த்து மண்ணில் வாழும் மனிதர்களுக்குப் புகுட்ட பழந்தமிழர்கள் உயர்திணை அஃறிணை என்று பாகுபாடு பார்க்காமல் எல்லாவற்றின் அசைவுகளையும் அர்த்தத்தோடு உள்வாங்கி அவற்றை கலை மற்றும் இலக்கிய வளர்ச்சிக்குப் பயன்படுத்தியுள்ளனர் எனலாம். இதனடிப்படையில் எழுந்த திருவேங்கடநாதன் வண்டுவிடு தூதும் சிற்றிலக்கியத்தில் எதிர்கால இலக்கிய மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், இதனை மெய்ப்பிக்கும் சான்றாக, ‘ஓடுகிற தண்ணியில ஒரசிவிட்டேன் சந்தனத்த சேர்ந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியில’ என எழுதிய இன்றைய சமகாலக் கவிஞனக்கு வித்திட்டவன் நம் மண்ணில் வாழ்ந்த சங்ககாலக் கவிஞனும் இன்னும் பல சிற்றிலக்கியக் கவிஞனும்தான் காரணம் எனலாம்.
உசாத்துணை நூல்கள்
மு.சண்முகம்பிள்ளை ( பதிப்பாசிரியர் )
முனைவர்.இரா.நாகசாமி ( பொறுப்பாசிரியர் ) – திருவேங்கடநாதன் வண்டுவிடு தூது ( உ.வே.சாமிநாதையர் நூலகச்சுவடி )தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு முதற்பதிப்பு – 1981
*கட்டுரையாளர்: – பா.கனிமொழி , முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மையம் ,புதுச்சேரி – 08 –
Cmkm.muthukani@gmail.com