அரசியல் தலைவர்களினால் ஏற்கவும் இழக்கவும் முடியாத தனித்துவம் மிக்க துக்ளக் சோ. நாடகத்தில் – திரைப்படத்தில் – இதழியலில் அங்கதச்சுவையை இயல்பாக இழையவிட்டவரின் சகாப்தம் நிறைவடைந்தது

சோ” நான் ஒரு பத்திரிகை தொடங்கப்போகின்றேன். நீங்களும் ஆதரவு தரவேண்டும்.”  என்று  35 வயதுள்ள  அவர்,  நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம்  கேட்கிறார். நகைச்சுவை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் அறிமுகமாகியிருந்த அவர்,  சட்டமும் படித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சில வர்த்தக நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும்  விளங்கினார். எதனையும் தர்க்கரீதியில்   விவாதிக்கும் திறமையும் அவருக்கிருந்தது. இவ்வளவு ஆற்றலும்  இருந்தும்,  எதற்காக பத்திரிகையும் நடத்தி வீணாக  நட்டப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தின்  அடிப்படையிலேயே சிவாஜி  அவருக்கு  புத்திமதி  சொன்னார்.

” உனக்கு நடிப்பைத்தவிர வேறும்  ஒரு  நல்ல  தொழில் தெரியும்.  நீ பத்திரிகை  நடத்தினால் அது எப்படி இருக்கும் தெரியுமா…? கள் அருந்திய குரங்கை  தேனீக்கள் கொட்டினால் அது என்ன பாடுபடுமோ அப்படித்தான்  இருக்கும்  உனது பத்திரிகையும்” என்றார் சிவாஜி. ஆனால்,  இதனைக்கேட்ட  அவர்  தனது  யோசனையை கைவிடவில்லை. 1970 ஆம் ஆண்டு பிறந்ததும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் தனது பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டார். நாற்பத்தாறு ஆண்டுகளையும் கடந்து இன்றும் வெளியாகிறது அந்த இதழ். அதன் பெயர் துக்ளக்.

நடிகராகவும்  வழக்கறிஞராகவும்  இயங்கிக் கொண்டே   வெற்றிகரமாக பத்திரிகையும்  நடத்திய  அவர்தான் நேற்று  சென்னையில் தமது 82 வயதில் மறைந்த சோ. ராமசாமி. துக்ளக் என்ற மன்னர் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். இன்று இந்தியாவில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் புதிய நாணயத்தாள் விவகாரம் பற்றி  அறிவோம். இந்தியாவில்  விலங்குகளுக்கென மருத்துவமனை அமைத்த முன்னோடியாக அசோக மன்னன் விளங்குவது போன்று, மன்னர் கியாஸ்தின் துக்ளக்கின் மறைவிற்குப்பிறகு,  கி.பி. 1325 இல் பதவி ஏற்ற  முகம்மது பின் துக்ளக்தான் இந்தியாவில் நாணயத்தாளை அறிமுகப்படுத்திய  முன்னோடி. . கிறுக்குத்தனமாக  முடிவுகளை எடுக்கும்  மன்னர்  என்றே முகம்மது பின் துக்ளக்கை வரலாற்று ஆசிரியர்கள் பதிவுசெய்துள்ளனர். ஆயினும், துக்ளக் –  கணித சாஸ்திரம், தத்துவம், வானவியல், இயற்பியல்   முதலான துறைகளில் நல்ல நிபுணத்துவம் பெற்றிருந்தவர். துக்ளக் சோ  அவர்களும் பல்துறை ஆற்றல் மிக்கவர். அவர் ஒரு நடிகராகவும் வழக்கறிஞராகவும்  மாத்திரம்  இருந்திருப்பாரேயானால்  இவ்வளவு  தூரம் பிரபல்யம்  அடைந்திருக்கமாட்டார். சில  அரசியல்  தலைவர்களுக்கும்  ஆலோசகராக  விளங்கியர்  சோ.

இளமையில்  நடித்த ஒரு நாடகத்தில் தாம் ஏற்ற  சோ என்ற  பாத்திரத்தின் பெயரையே  தனது  புனைபெயராக்கிக்கொண்டு  நாடகம்  மற்றும் திரையுலகிலும்   அரசியலிலும்  பிரபல்யமானவர்தான்   இந்த  அங்கதச்சுவை  எழுத்தாளர். அங்கத  எழுத்தே  அவரது  பலம். மறைந்த  ஜெயலலிதாவின்   கால்களில் விழுந்து  பணிந்து  ஆசி பெற்ற பல ஆண்களை  படங்களில்  பார்த்திருப்போம்.  ஆனால்,  ஜெயலலிதா,  சோ  தம்பதியரின்  பாதங்களை பணியாமலேயே  ஆசிபெற்ற  காட்சிகளும்  வெளியாகியிருக்கின்றன. சோவின்  பேச்சில், நடிப்பில், எழுத்தில்  அங்கதச்சுவை இழையோடிக்கொண்டே  இருக்கும்.  அதனால் நாடகத்தில்  திரையில் பத்திரிகை  உலகில்  தனித்துவமாகத்  தென்பட்டவர். மற்றவர்களையும்  கிண்டல்  செய்தவாறு  தன்னையும் கேலிசெய்துகொள்வார்.

சமூக  நாடகங்கள்   திரைப்பட  வசனங்கள் எழுதியிருக்கும் சோ, இராமாயணம், மகாபாரதம்  குறித்தெல்லாம்  தமது  துக்ளக்கிலேயே தொடராக  எழுதியிருப்பவர். தானும்  அவ்வாறு  தொடர்கள்  எழுதியதுடன்  மற்றவர்களையும்  துக்ளக்கில்   அவரவர்  துறைகளில்   எழுதத்தூண்டியவர்.  ஜெயலலிதா,  ஜெயகாந்தன்  உட்பட   பலர் துக்ளக்கில்  எழுதியிருக்கிறார்கள். ஜெயகாந்தனின் ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் தொடர்  துக்ளக்  இதழில்  வெளியானதன்  பின்னரே  நூலாகியது. ஜெயாகாந்தனின்  உற்ற  நண்பரான  சோ, 1994  இல் ஜெயகாந்தனுக்கு மணிவிழா  நடந்தவேளையில்   அந்த   விழாக்குழுவில் துணைத்தலைவராகவும்  இருந்தவர்.   ஜி.கே. மூப்பனார் தலைமை வகித்த அந்த   மணிவிழாக்குழுவின்   ஏற்பாட்டில்   நடந்த   விழாவிலும்  சோ உரையாற்றியிருக்கிறார். 1960  களில் இவரது சாம்பவாமி யுகே யுகே என்ற அரசியல் நையாண்டி நாடகத்தை  அன்றைய  காங்கிரஸ்  அரசு  தடைசெய்யமுயற்சித்தது. 1970 இல் துக்ளக் இதழை வெளியிடுவதற்கு  முன்பே  முகம்மது பின் துக்ளக் நாடகத்தை  பலதடவைகள்  மேடையேற்றியிருந்தார். 1971 இல் அதனை திரைப்படமாக வெளியிட்டார்.  குறித்த நாடகம் பற்றி அறிந்திருந்த அப்போதைய தி.மு.க. அரசு  அது  திரைப்படமாவதை  விரும்பவில்லை.

நாடகத்திலும்  திரையிலும்  பல  அரசியல் தலைவர்களை அங்கதச்சுவையுடன்  கேலி  செய்திருக்கும்  சோ, துக்ளக் இதழ்களிலும் அவர்களை  விட்டுவைக்கவில்லை.  முதல்  இதழிலிருந்து  தொடர்ச்சியாக ஒவ்வொரு  இதழ்களின்  முகப்பிலும்  கேலிச்சித்திரங்கள்  மூலம் வாசகர்களை  சிரிக்கவும்  சிந்திக்கவும்  வைத்தவர்  சோ. இவரது   அரசியல்  கருத்துக்களுடன்  உடன்படாதவர்களும்,  தம்மைப்பற்றி சோ  என்ன  எழுதியிருப்பார்,  எத்தகைய  கேலிச்சித்திரங்களை வெளியிட்டிருப்பார்  என்பதை  பார்ப்பதில்  ஆர்வம்  காண்பிப்பார்கள்.

அகில  இந்திய  காங்கிரஸ்,  ராஜமானிய  மசோதா  விவகாரத்தில்  இரண்டாக பிளவுபட்டபொழுது,   இந்திரா  காந்தியின்  தலைமையில்  இந்திரா காங்கிரஸ_ம்  தமிழ்நாட்டில்  காமராஜர்  தலைமையில்  ஸ்தாபன காங்கிரஸ_ம்   உருவான வேளையில்  தி.மு.க.வும்  வலது  கம்யூனிஸ்ட்டுகளும்    இந்திரா காந்தியை   ஆதரித்தனர். காமராஜரிடம்   பற்றுக்கொண்டிருந்த  கண்ணதாசன்,  ஜெயகாந்தன்,  சிவாஜி கணேசன்  ஆகியோர்  ஸ்தாபன  காங்கிரஸை   ஆதரித்தனர். சோவும்   இவர்களுடன்  இணைந்துகொண்டார்.   அதன்  பின்னர்  இந்திரா காந்தியின்  ஆட்சிக்காலத்தில்  மிசா  சட்டத்தினால்  நெருக்கடி  நிலை வந்தசமயத்தில்   அதனையும்  கடுமையாக  எதிர்த்து  எழுதினார்.

அதன்பின்னர்  சோ,  இந்திராவையோ  அவரது  வாரிசுகளையோ  ஆதரிக்கவில்லை.   வலதுசாரி  இந்துத்துவா  பிற்போக்கு வாதி என்றெல்லாம்  அவர்  அரசியல்  எதிரிகளினாலும்   இடது  சாரிகளினாலும் விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட்டார்.   என்றைக்கும் விமர்சனங்களைக்கண்டு   அஞ்சுபவர்  அல்ல  இவர். மொரார்ஜி  தேசாயையும்  அவருக்குப் பின்னர்  வாஜ்பாயையும்   நரேந்திர மோடியையும்   வெளிப்படையாகவே  ஆதரித்தவர். 

பெண்ணிலை  வாதம்  தொடர்பாகவும்  சோவின்  கருத்தியல்கள்  குறித்து பெண்ணிய  செயற்பாட்டாளர்களின்  கடும்  விமர்சனங்களுக்கும் ஆளாகியிருந்தார். இலங்கை   இனப்பிரச்சினை  விவகாரத்திலும்  இவரது  நிலைப்பாடு விமர்சிக்கப்பட்டது.   இலங்கையிலும்  தமிழ்நாட்டிலும்  அமிர்தலிங்கம், பத்மநாபா,   ரஜீவ்  காந்தி  ஆகியோர்  விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டவேளைகளிலும்  அதன்  பின்னரும்  துக்ளக்கில்  கடும் தொனியில்   கண்டித்தவர்  சோ. ஏற்கனவே,   அமிர்தலிங்கம்,  பத்மநாபா  ,  வரதராஜப்பெருமாள்  ஆகியோரின்  நேர்காணல்களுக்கும்  முக்கியத்துவம்  கொடுத்திருக்கும் சோவுக்கு   புலிகளின்  போக்கு  பிடித்தமானதாயிருக்கவில்லை. இலங்கை – இந்திய  ஒப்பந்தத்தையும்   சோ  ஆதரித்தார்.  ஒரு  சமயம் இவரும்   ஜெயகாந்தனும்  கலந்துகொண்ட  ஒரு  அரசியல்  கூட்டத்திற்குள் அத்துமீறி   நுழைந்த  சிலர்  முட்டைகள்  எறிந்தும்  ரகளை செய்திருக்கிறார்கள். விடுதலைப்புலிகளின்  கட்டுப்பாட்டில்  யாழ்ப்பாணம்  இருந்த காலப்பகுதியில்   அங்கு  துக்ளக்  இதழ்களை  காணமுடியாது. பாபர் மசூதி  தகர்க்கப்பட்டபோதும்  சென்னையில்  பத்மநாபா  உள்ளிட்ட சிலர்   கொல்லப்பட்டபோதும்  அச்சம்பவங்களை  கண்டித்து  சென்னை மேடைகளில்  பேசியவர்  சோ.  குஜராத்   சம்பவங்களினால்   தமிழகத்தில்  நரேந்திரமோடி  மீது  கடும் எதிர்ப்பு  பரவியிருந்த  சூழ்நிலையிலும்  தமது  துக்ளக்  ஆண்டுவிழாவுக்கு மோடியை   அழைத்து  பேசவைத்த  துணிச்சலும்  இவருக்கிருந்தது.

ஒவ்வொரு   ஆண்டும்  துக்ளக்  விழா  வெகு  விமரிசையாக கொண்டாடப்படும்.   நிகழ்ச்சியின்  இறுதியில்  வாசகர்களின் கேள்விகளுக்கு   சோ  பதிலளிப்பார்.  மண்டபமும்  நிறைந்து  ஆசனம் இல்லாமல்   பலர்  மண்டபத்திற்கு  வெளியே  நின்றும்  ஒலிபெருக்கி  ஊடாக சோவின்   பேச்சைக்கேட்பது  வழக்கம். வாசகர்களின்   கருத்தறிவதற்காகவும்   அவர்களின்  நாடித்துடிப்பைத்  தெரிந்துகொள்வதற்காகவும்   இவ்வாறு  துக்ளக்  ஆண்டுவிழாக்களை  அவர் ஒழுங்கு  செய்துவந்தாலும்,  துக்ளக்கின்  தனித்துவத்தை  இழந்துவிடாமல் வழக்கமான   கேலியும்  கிண்டலும்  அவரது  விமர்சன   எழுத்திலும்   கேள்வி – பதில்   பகுதியிலும்  பதிவாகிக்கொண்டுதானிருக்கும்.

துக்ளக்  இதழ்களில்  வெளியாகும்  அரசியல்  விமர்சனக்கட்டுரைகளிலும் கேலிச்சித்திரங்களிலும்   பல  தலைவர்கள்  கிண்டலடிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின்   கருத்துக்கள் –  நேர்காணல்களுக்கு  துக்ளக்கில்  உரிய  களம் வழங்குவது   சோ  அவர்களின்  சிறப்பியல்பு.  அதனால்  எந்தவொரு  அரசியல்   தலைவரும்  இவரை  விரோதியாகப்  பார்ப்பதில்லை. கருத்துரிமையின்   ஜனநாயகப்பண்புகளை  சோ   தொடர்ச்சியாக பேணியவர்.

“தி.மு.க.  தலைவர்  கருணாநிதியை  தொடர்ச்சியாக    விமர்சிக்கிறீர்களே,  அவர்  உங்களைப்பற்றி   என்ன   நினைப்பார்…? ”  என்ற   ஒரு   கேள்விக்கு, ” இவனை   என்ன  செய்யலாம்…?   என்றுதான் யோசித்துக்கொண்டிருப்பார் ” என்று  பதில்  தந்திருந்தார். கருணாநிதி   நோயுற்றிருந்த சமயத்தில்  அவரது  வீட்டிற்கே  சென்று  சுகம் விசாரித்து   மருத்துவ  ஆலோசனைகளும்  சொன்னவர்.   ஜெயலலிதாவுக்கும் இவர்   அரசியல்  ஆலோசகராக  இருந்திருப்பதாகத்தான்  சொல்கிறார்கள். அதேசமயம்   சோ,   ஜெயலலிதாவையும்  கண்டித்து   எழுதியிருக்கிறார். சிவாஜி கணேசனின்   பேத்திக்கு  ஜெயலலிதா  தனது  வளர்ப்பு  மகன் சுதாகரனை  திருமணம்  செய்துகொடுத்த வேளையில்  நடத்திய கோடிக்கணக்கான   ரூபா  செலவில்  நிகழ்த்திய  ஆர்ப்பாட்டமான   விழாவை சபிக்கப்பட்ட   திருமணம்   என்றுதான்  சோ  வர்ணித்தார். ஜெயலலிதா  பதவிக்காலத்தில்  கருணாநிதி,   இரவு வேளையில் கைது செய்யப்பட்டதைக்கண்டித்தும்  எழுதினார். ஜெயலலிதா   திடுதிப்பென  எடுக்கும்   அவசர  முடிவுகளை   விமர்சித்து  ” நந்தவனத்திலோர்  ஆண்டி,  அவன்   ஆறாறு   மாதமாய்   குயவனை வேண்டி   கொண்டுவந்தான்   ஒரு   தோண்டி…  அதைக்கூத்தாடி   கூத்தாடி போட்டுடைத்தான்டி”  என்ற   தலைப்பில்   கேலிச்சித்திரம்   வரச்செய்தார்.

துக்ளக்கில் வெளியாகும்   கேள்வி – பதில்  பகுதி   வாசகர்களினால் விரும்பிப்படிக்கப்படும்  பக்கங்களாகும்.  ஆர்வம்  ஊட்டக்கூடியதாகவும்   அதேசமயம்  தீர்க்கதரிசனமாகவும்   அவை அமைந்திருக்கும்.  அங்கும் சில சந்தர்ப்பங்களில்  அவர்  தன்னையும்  கேலி  செய்துகொள்வார். ஒரு  வாசகர், ” நீங்கள்  எழுதியிருக்கும்  நூல்களைப் படித்தால்  எதுவும் புரியவில்லையே !!! ”  எனச்சொல்லியிருந்தார். அதற்கு சோ, “எனக்கும்தான்  புரியவில்லை.  மீண்டும்   மீண்டும்  படியுங்கள். ஏதும்   புரிந்தால்  எனக்கும்  சொல்லுங்கள். ”  என்று  பதில்  தந்திருந்தார். சோவின்  துக்ளக்  கருத்துக்களினால்  அவரை  ஏற்கவும்  முடியாமல் இழக்கவும்  முடியாமல்  ரசித்த  அரசியல்  தலைவர்கள்தான்  இந்தியாவில் அதிகம். அதனாலும்  அவர்  தனித்துவம்  மிக்க  பத்திரிகையாளராகவே  மிளிர்ந்தார்.

இலங்கைக்கு  அவர்   நடிகராகவும்  பத்திரிகையாளராகவும்   வெவ்வேறு சந்தர்ப்பங்களில்  வந்திருக்கிறார். துக்ளக்  சோ வின் சகாப்தம்,  அவரால்  ஆசிர்வதிக்கப்பட்ட –  ஆலோசனைகள் வழங்கப்பட்ட   ஜெயலலிதாவின்  சகாப்தத்துடன்  விடைபெற்றிருக்கிறது. சோ  கடந்த  பல  மாதங்களாக கடும்  ஆஸ்த்மா  நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர்.   இந்த  உபாதையுடன்  அவர்  பல வருடங்களை கடந்தவர்.   துக்ளக்  விழாக்களிலும்  இதர  கூட்டங்களிலும்  அவர்  இருமிக்  கொண்டே    உரையாற்றியிருப்பதை   அவதானித்திருக்கிறோம். ஆயினும்  அவர்  துக்ளக்கையும்  நடத்திக்கொண்டு,   மேடை  நாடகம் திரைப்படங்களிலும் தொலைக் காட்சித்தொடர்களிலும்  நடித்துக்கொண்டு  சட்டவாதியாகவும்  அரசியல் ஆலோசகராகவும்   அயராமல்  இயங்கிவந்திருப்பவர்.  ராஜ்யசபா  உறுப்பினராகவும்  சில வருடங்கள் பதவி வகித்துள்ளார். சில   மாதங்களுக்கு  முன்பிருந்தே   சோ  சுகவீனமுற்றிருந்தார்.  அவரை மருத்துவமனைக்கு  வந்து  பார்த்து  நலம்  விசாரித்தவர்  ஜெயலலிதா. ஆனால்,  ஜெயலலிதா  மறைந்ததும்  தெரியாமல்  48  மணிநேரத்திற்குள்  சோ அவர்களும்   ஜெயலலிதாவை  பின்தொடர்ந்து  சென்றுவிட்டார். இந்திய   அரசியலில்  ஜெயலலிதாவுக்கென  தனியிடம்  அமைந்தது  போன்று பத்திரிகை  உலகில்  சோவுக்கும்  தனித்துவமான  ஒரு  இடம் பதிவாகிவிட்டது.