ஆய்வு: திருக்குறள் உணர்த்தும் புலால் உண்ணாமை

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. அந்நியர் படையெடுப்பின் காரணமாக சமுதாயத்தில் மாற்றம்  ஏற்பட்டது.சங்க காலத்தில் புலால் உண்ணலை வழக்கமாக மேற்கொண்ட மக்கள் காலமாற்றத்தின் காரணமாகவும்,பிற ஆட்சியின் காரணமாகவும்,சமயத்தின் காரணமாகவும் சங்கமருவிய காலத்தில் புலால் உண்ணலை தவிர்க்கும் நெறியினை மேற்கொண்டுள்ளனர். இக்காலத்தில் அறத்தை வலியுறுத்துவதற்காக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் எவை என்பதை

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களில் புலால் உண்ணாமை பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இதில் திருக்குறளில் காணப்படும் புலால்மறுத்தல் அதிகாரத்தில் இடம்பெறும் செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர்.முப்பால் என்பது இதன் பெயர்.உத்திரவேதம்,தெய்வ நூல்,பொய்யா மொழி,வாயுறை வாழ்த்து,தமிழ் மறை,பொதுமறை,திருவள்ளுவப் பயன்,திருவள்ளுவம் என்ற வேறு பெயர்களும் உண்டு.இந்நூலின் ஆசிரியர் வள்ளுவநாயனார், தேவர்,முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகன், மாதாநுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர்,பொய்யில் புலவன் என்ற வேறு பெயர்களும் இவருக்கு உண்டு.அதிகாரம்133 மொத்த குறள்கள் 1330 இவைகள் குறள் வெண்பாவால் ஆனது.அறத்துப்பால் 38 அதிகாரங்களை உடையது.(பாயிர இயல் 4,இல்லறவியல் 20 ,துறவியல் 13 ,ஊழியல் 1 என்ற 4 இயல்களையும் கொண்டுள்ளது)பொருட்பால் 70 அதிகாரங்களை உடையது.(அரசியல் 25 ,அங்கவியல் 32,குடியியல் 13,ஊழியல் 1)காமத்துப்பால் 25 அதிகாரங்களை உடையது.(களவியல் 7 ,கற்பியல் 18 )பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிகப் பாடல்களையும் அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள்.அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் நூல். மக்கள் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறங்களைத் தொகுத்துக்காட்டுபவையாக இந்நூல் அமைந்துள்ளது.

அறநூலில் புலால் மறுத்தல்
“ஊன் உண்டலை ஒழித்தல்”என்பர் பரிமேலழகர்.புலால் தின்றால் அருள் உணர்வு அற்றுப் போகும் என்பது மணக்குடவர் கருத்து.இக்கருத்து,முற்றும் சைன சமயம் தழுவியது என்பதில் ஐயமில்லை.சமயச் சார்பற்ற திருவள்ளுவருக்குப் புலால் உண்ணல் ஒரு சிறிதும் ஏற்பன்று.அக்காலத்து (ஆரியர்களால்)செய்யப் பெறும் யாகங்களில் உயிர்களைக் கொன்று ஆகுதியில் போடுவது வழக்கமாக இருந்தது.திருவள்ளுவர்,அதுவும் குற்றம் என்று வரையறுத்துள்ளார் (359),கடைச் சங்ககாலத் தமிழரிடம் யாகம் செய்தலும்,யாகத்திற்காக உயிர்களைக் கொன்று வேள்வித் தீயில் இடுதலும் அரசர்களின் உடன்பாட்டில் நிகழ்ந்தன.(எ-கா)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி-புறநானூறு,பதிற்றுப்பத்துப் பாடல்கள்,திருவள்ளுவர்,இந்த அதிகாரத்தில் எழுதியதன் மூலம் இவ்வழக்கை வெறுத்தனர்,மறுத்தனர் என்பதாம்.(க.ப.அறவாணன்,திருவள்ளுவம்,) இழிந்தவர் வயிறு ஆடு,கோழி முதலானவற்றின் இடுகாடுகளாக உள்ளன என்று  (நாலடியார்13:1) கூறுகிறது,முற்பிறப்பில் தொழுநோயாளி ஆகிவிடுகிறார் (13:3)என்றும்,வேண்டா என்று விட்டவர் மீண்டும் புலாலை தின்னுதல் கூடாது என்று (பழமொழி26)இயம்புகிறது,ஊன் உண்பதற்காக ஆடு,கோழி வளர்த்தலும் நேரில் கொல்லாவிட்டாலும்,மற்றவர் கொன்ற புலாலை வாங்கி உண்ணலும் உயிர்களைக் கொல்லலும் பெரும் குற்றங்களாக விளம்பிநாகனார்  (நான்மணி.3)ஆம் பாடலில் இயம்புகிறார்.கொல்லாதவனும்,புலால் தின்னாதவனும் மண் உலகத்திற்கு மட்டுமின்றி விண் உலகத்திற்கும் தலைவனாகின்றனர்.(ஏலாதி.2)ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.

திருக்குறளில் புலால் உண்ணாமை
புலால் உண்பவன் அருள் இல்லான்
வள்ளுவர் பெருந்தகை சமுதாயத்தில் வாழும் மக்கள்  கருணை உள்ளத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அருள்உடைமை என்ற அதிகாரத்தை 25 ஆவது அதிகாரமாக வைத்துள்ளார்.அருளின் சிறப்பை,

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு   (247)

என்ற குறளில் உயிர்களித்தில் கருணைக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.இக்கருத்திற்கு மாறுபாடு தெரிவிக்கும் வகையில் புலால் உண்ணாமை என்ற அதிகாரத்தில் உயிர்களிடத்தில் கருணையில்லாமல் அவற்றின் இறைச்சியை உண்ணும் மனபாங்கை எடுத்துரைத்துள்ளார். மாமிசம் உண்பதை விலக்குதல் புலால் மறுத்தல் ஆகும்.இவ்வதிகாரம் 26 ஆவது அதிகாரமாக உள்ளது.ஒவ்வொரு மனிதனும் அருள் உடையவனாக இருக்க வேண்டும்.இத்தகைய அருள்பண்பு பிற உயிரனங்களைக் கொன்று தின்பவனுக்கு இருக்காது என்கிறார் வள்ளுவர்,

தன்ஊன் பெருக்கத்திற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் (251)

என்ற குறளின் வழி வெளிப்படுத்தியுள்ளார்.

அருள் நன்மைகள் கிடைக்காது
செல்வத்தைப் பாதுகாக்காதவனுக்குச் செல்வத்தால் வரும் நன்மைகள் இல்லை.அதைப் போல (உயிர்களைப் பாதுகாக்காமல் உயிரை நீக்கி)ஊனைத் தின்பவர்களுக்கு அருளால் பெறக்கூடிய நன்மைகள் இருக்காது என்கிறார் வள்ளுவர் இதனை,

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு  (252)

என்ற குறளின் வழி உணரமுடிகிறது.

கொலைக்கருவி  உடையவரும் புலால்  உணவு உண்பவரும் சமம். கொலைக் கருவியைப் பிடித்தவர் மனம் கொலை செய்வதையே நாடும் அதுபோல மற்றோர் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அதனையே நாடும் அருளை நாடாது இதனை

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம் (253)

என்ற குறளில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அருளே கொல்லாமை
அருள் யாது என்றால் பிற உயிரைக் கொல்லாமை அருள் அல்லது யாது என்றால் உயிரைக் கொல்லுதல் ஆதலால் கொன்று ஊன் தின்பது பாவம் அதனால் பொருளல்லது யாதென்றால் ஊன் தின்னக் கூடாது என்பதே ஆகும்.

அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்  (254)

என்ற குறளில் உணரமுடிகிறது.

ஊன் உண்பவனின் துன்பம்
ஊன் உண்ணாததனால் உடலில் உயிர் நிற்கின்றது.ஊன் உண்பவனைப் பற்றிய துன்பம் அவனை விடுவதற்கு இடம் தராது.இதனை,

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு  (255)

என்ற குறளில் புலப்படுகிறது.

உயிர் கொல்லாமை
ஊன் தின்பதற்காக மக்கள் உயிர்களைக் கொல்லாவிட்டால் பொருள் வேண்டின் ஊன் விற்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதை,

தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்  (256)

என்ற குறள் சுட்டுகிறது.

புலால் உணவு ஒர் உடம்பின் புண் என்று நினை
புலால் உண்பதை ஒர் உடம்பின் புண் என்று உணர்வாரால்,புலாலை உண்ணாது இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.இதனை,
உண்ணாமை வேண்டும் புலால் பிறிதுஒன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்    (257)

என்ற குறளில் அறியமுடிகிறது.

உயிர் நீங்கிய உடலைத் தின்னக்கூடாது
குற்றம் நீங்கிய அறிவினை உடையவர்கள் ஒர் உயிர் நீங்கிய உடலைத் தின்னமாட்டார்கள் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்ப் பெறின்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்          (258)

என்ற குறள் சுட்டுகிறது.

வேள்விகளைக் காட்டிலும் ஊன் உண்ணாமையே சிறந்தது
தீயில் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட ஒன்றின் உயிரைப் போக்கி அதன் ஊனைத் தின்னாதது நல்லது.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று       (259)

என்ற குறளின் வழி தெளிவாக்கப்பட்டுள்ளது உணரமுடிகிறது.

உயிர்கள் தொழும் பண்புடையவர்கள்
ஒர் உயிரைக் கொல்லாமலும் புலாலைத் தின்னாமலும் உள்ளவனை எல்லா உயிர்களும் வணங்கும்.இதனை,

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்            (230)

என்ற குறளின் வழி அறியமுடிகிறது.பிற உயிர்களை கொன்று தின்னுவது தீவினைகளுள் ஒன்றாகும்.அவர்களை மடையர்கள் என்பர்.சிற்றுயிர்களின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டு அவைகளைச் சிறைப்படுத்தி வைப்பதும் தீவினையாகும்.ஊன் உண்ணிகளை உண்ணுவதால் தீவினை உண்டாகும்.அதனால் அதற்கு அஞ்சி அதனைச் செய்யாமல் இருக்க வேண்டும்.இல்லையேல் நோய் கொண்டு துன்புறுவர் என்ற இக்கருத்துகளை நாலடியார் பாடல்கள் (121,122,123)எடுத்துக்காட்டுகிறது.

இருப்பார்க்குங் காலராய் ஒதிலார்க் காளாய்க்
கரும்பார் கழனியுட் சேர்வர் – அரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுகாய்க் கொண்டுவைப் பார்     (நாலடி.122)

என்ற பாடல் சான்றாக அமைகிறது.இக்கருத்திற்கு ஏற்ப வள்ளுவர் ,தீய செயல்கள்,தம்மைச் செய்தவனுக்குத் துன்பம் தருதலால்,அவை தீயைவிட அதிகமாக அஞ்சத் தக்கவையாகும் என்று கூறுகிறார்.இதனை,

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்           (202)

என்ற குறள் எடுத்துரைக்கிறது.மேலும் மாமிசம் உண்போர் வயிறு இடுகாடு ஆகும்.என்பதை,

துக்கத்துள் தூங்கி துறவன்கண் சேர்கலா
மக்கட் பிணத்த சுடுகாடு – தொக்க
விலங்கிற்கும்,புள்ளிற்கும் காடே,புலம் கெட்ட
புல்லிறிவாளர் வயிறு         ( நாலடி.தீவினை.1)

என்ற பாடல் சுட்டுகிறது.மேலும் பழமொழி நானூறு என்ற நூலும் புலால் உண்ணாமல் கொள்கையில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்கிறது இதனை,

விடல் அரிய துப்புடைய வேட்கையை நீக்கி
படர்வு அரிய நல்நெறிக்கண் நின்றார்,இடர் உடைத்தாய்ப்
பெற்ற விடக்கு நுகர்தல் – கடல் நீந்தி
கன்று அடியுள் ஆழ்ந்துவிடல்  (பழமொழி.26)

என்ற பாடல் ஆனது விடுவதற்கு ஆகிய வன்மை வாய்ந்த ஆசைகளை முற்ற பின்பற்றுவதற்கு அரிய நல்ல நெறிகளைப் பின்பற்றுவதற்கு அரிய நல்ல நெறிகளைப் பின்பற்றுகிறவர் எக்காரணம் கொண்டும் புலாலை உண்ணுதல் கூடாது என்று உணர்த்துகிறது.மேலும் பிற்கால நீதி இலக்கியமும் புலால் உண்ணக்கூடாது என்று எடுத்துரைக்கிறது.இதனை,

நோன்பு என்பது கொன்று தின்னாமை   (கொன்.வே.58)
புலையும் கொலையும் களவும் தவிர்   (கொன்.வே.63)

மேலும் விவிலிய நீதிமொழிகளும் இக்கருத்தையே கூறுகிறது.இதனை,

பகை நெஞ்சம் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட
அன்புள்ளம் அளிக்கும் மரக்கறி உணவே மேல்  (15:17)

என்ற வரிகளின் மூலம் அறியமுடிகிறது.

முடிவுரை
புலால் உண்பவன் அருள் இல்லாதவன் என்பதை அறியமுடிகிறது. கொலைக்கருவிஉடையவரும் புலால்உணவுஉண்பவரும்சமம், உயிர் நீங்கிய உடலைத் தின்னக்கூடாது, புலால் உணவு ஒர் உடம்பின் புண் என்று நினைக்க வேண்டும் போன்ற செய்திகளை இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.இக்காலச்சமுதாயத்தினரும் மருத்துவரின் பரிந்துரைப் படி புலால் உண்ணலை தவிர்ப்பது சாலச் சிறந்தது.

துணைநூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)               பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)               பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 2  செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
3.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)               பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3  செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -1999
4.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)                  நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
5.அகராதி                        தமிழ் – தமிழ் அகரமுதலி சென்னைப் பல்கலைக்கழக அகராதி
6.  கௌமாரீஸ்வரி .எஸ் (ப.ஆ)                    இனியவை நாற்பது மூலமும் உரையும் சாரதா பதிப்பகம் சென்னை – 600014 முதற்பதிப்பு -2
7.இராசாராம் .துரை                          பதினெண் கீழ்க்கணக்கு(தெளிவுரை) மூன்றாம் பகுதி முல்லை நிலையம் சென்னை 17  முதற்பதிப்பு – 1995 திருக்குறள்
சாரதா பதிப்பகம் சென்னை-600014 முதற்பதிப்பு -2002
9  மாணிக்கம் .அ                                 திருக்குறள் தெளிவுரை தென்றல் நிலையம் சிதம்பரம் -608001 முதற்பதிப்பு -1999
10 நாராயணசாமி .இரா                       திருக்குறள் இனிய உரை நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை -600098   முதற்பதிப்பு -1997

jenifersundararajan@gmail.com

 

* கட்டுரையாளர் – – சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி – 24