நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் உயர்ந்து, தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்ட பெருமகனார் தான் ஜீவா என்ற ஜீவானந்தம் ஆவார். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்யப் பாடல்கள் பலவற்றைப் பாடினார். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்ப் பண்பாட்டுடன், கட்சியை வளர்த்த பெருமை ஜீவாவையே சாரும். இத்தகைய பெருமைக்குரிய ஜீவா என்ற ஜீவானந்தம் நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21-ஆம் தேதி, பட்டப்பிள்ளை-உமையம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். அவருக்கு பெற்றோர் ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயரான சொரிமுத்து எனும் பெயரை இட்டனர்.
காந்தீயத் தொண்டர்
ஜீவா தம் இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது தொண்டரானார். காந்திய வெளியீடுகளைப் படித்தார். அந்தக் காலத்தில் காந்தீயக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு நாடகம் நடத்தி வெள்ளையரைக் கலங்க வைத்த தியாகி விஸ்வநாததாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். ஜீவா அவர்கள் சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார். நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடையவராக ஜீவா விளங்கினார். மேலும் ஒன்பதாவது படிக்கும்போதே கவிதைகள் எழுதும் திறம் படைத்தவராக ஜீவா திகழ்ந்தார். அவர் காந்தியையும், கதரையும் பற்றி அதிகமாகக் கவிதைகள் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவா அவர்கள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது “சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்” என்ற நாவலை எழுதினார்.மேலும் “ஞானபாஸ்கரன்” என்ற நாடகத்தையும் அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றி அந்த நாடகத்திலும் நடித்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் இணைதலும் கதர் அணிதலும்
காந்தியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது. காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய தேசபக்தர் திருகூடசுந்தரம் அவர்களின் பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. ஜீவா அவர்கள் அவரது பேச்சால் தூண்டப்பட்டு அன்னியத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வெறும் கோவணத்துடன் வீடு திரும்பினார். அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.
ஜீவாவின் துவக்க காலம் கதர், காங்கிரஸ் போன்றவைகளில் ஆழ்ந்த நாட்டம் கொண்டிருந்திருக்கிறது. அவருடைய தாயார் மரணத்தின் போது கொள்ளி வைக்கும்போது கட்டிக்கொள்ளும் கோடித்துணிக்காக கதராடையைக் கேட்டிருக்கிறார் ஜீவா. அது மறுக்கப்பட்டதால் தனது தாயாருக்கு கொள்ளி போடவும் மறுத்திருக்கிறார். பின்னர் அவருடைய சகோதரர் நடராஜனை வைத்து தாயாரின் இறுதிச் சடங்கினை உறவினர்கள் முடித்திருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி ஜீவா அவர்களின் காந்தீயப் பற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
சிறை செல்லல்
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. இளைஞர் உலகம் கொந்தளித்து எழுந்தது. ஜீவா அவர்கள் வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத்சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது. சிறையிலிருந்து பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய “நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா. ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். ஆங்கிலேய அரசு அதற்காகச் ஜீவாவைக் கைதுசெய்து, கை-கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.
தீண்டாமை எதிர்ப்பு
தீண்டாமை என்பது மிகவும் கொடுமையாக உலவி வந்த காலகட்டம். ஆலயப்பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட காலம். நாஞ்சில் நாட்டின் ஊர்களில் கோயில் திருவிழா தொடங்கியதும் நான்கு முக்கிய தெருக்களிலும் தெரு மறிச்சான் கட்டி விழா தொடங்கி விட்டது என்று அறிவிப்பு செய்வார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் அந்தத் தெருக்களில் நுழையக் கூடாது என்று தெருவில் போடப்படும் தடுப்புத்தான் தெருமறிச்சான் என்பதாகும். இதைக் கண்டு மனம் வெதும்பிய ஜீவா சேரியைச் சார்ந்த தனது இரு நண்பர்களை அழைத்துக் கொண்டு அந்த தெருமறிச்சானைப் பிடுங்கியெறிந்து தாண்டி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். நாஞ்சில் நாட்டில் நடந்த ஆலயப்பிரவேசப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராக ஜீவா திகழ்ந்தார் என்பதற்கு இச்சம்பவம் காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் அவரது தந்தை ஊர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இதனால் தந்தை மகன், இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் தனது 17-ஆவது வயதில் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார்.
வ.வே.சு. ஐயரின் ஆசிரமத்தில் பணியாற்றல்
ஜாதி வேறுபாடு பாராமல் ஆசிரமம் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நிதி சேர்க்கப்பட்டு வ.வே.சு.ஐயரால் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட தேசிய குருகுலத்தில் ஜாதி பாகுபாடு காட்டப்பட்டது என்ற புகார் எழுந்து வ.வே.சு.ஐயரைக் கண்டித்து கிளர்ச்சி நடத்தது. இதை அறிந்த ஜீவா மற்றும் பெரியார் போன்றோர் அச்செயலைக் கடுமையாக எதிர்த்தனர்.வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஜீவானந்தம் அவர்கள் தமது பணியைத் துறந்தார். தீண்டாமையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜீவா, ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அப்போது ஏற்பட்ட போராட்டங்களினால் அந்த ஆசிரமம் மூடப்பட்டது.
காந்தி ஆசிரமம் உருவாக்குதல்
வ.வே.சு ஐயரின் ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊருக்கு வந்து அங்கு காந்தியடிகள் பெயரில் ஓர் ஆசிரமத்தை ஜீவா உருவாக்கினார். அந்த ஆசிரமத்தையும் அதன் செயல்பாடுகளையும் வ.உ.சி. போன்றவர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர். ஆசிரமம் அமைக்கும் முன்பே ஜீவாவுக்குத் தனித் தமிழிடம் அதிகப் பற்று ஏற்பட்டது. தூய தமிழில் பெயரிட வேண்டும் என்ற ஆவலில் தனது பெயரை “உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்டார்.
காந்திஜியின் பாராட்டு
ஜீவாவின் ஆசிரமத்துக்கு வந்த வ.ரா., ஆசிரமக் கொள்கையையும் நடைமுறையையும் பாராட்டினார். ஜீவாவின் சொற்பொழிவுகளைக் கேட்டு அவர் மீது பெரும் மதிப்பு கொண்ட வ.ரா., ஜீவாவுக்கு ஆலோசனை கூறினார்: “உங்களை நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையையும் வளர்ச்சியையும் கருதியாவது தனித் தமிழில் பேசுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசிய போதிலும் உங்களுடைய தனித் தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியுமா?” என்ற வ.ரா.வின் அறிவுரையை சிந்தித்த ஜீவாவுக்கு தனித்தமிழில் உள்ள வெறி நீங்கியது. “உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்ட தனது பெயரை, மீண்டும் ஜீவானந்தமாக மாற்றினார். இறுதிவரை ப.ஜீவானந்தம் – ஜீவா என்றே அழைக்கப்பட்டார். ஜீவா நடத்திய காந்தி ஆசிரமத்துக்கு ஜீவா அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி வருகைபுரிந்தார். ஜீவானந்தத்தின் இளமைத் தோற்றமும், வாதத் திறமையும் காந்தியை வியக்கவைத்தன. ஆசிரமப் பணிகளையும் சேவையையும் பாராட்டிய காந்தி, ஜீவாவைப் பார்த்து, “உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?” என்றார். அதற்கு, “இந்தத் தேசம்தான் எனக்குச் சொத்து” என்று ஜீவா பதிலளித்தார். ஜீவாவின் பதிலைக் கேட்டு காந்திஜி திகைத்தார். பிறகு காந்திஜி, “இல்லையில்லை, நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து” என்றார்.
ஜீவாவின் பொதுப்பணி
சிராவயலில் ஆசிரமம் நடத்திக் கொண்டிருந்தபோது வ.உ.சிதம்பரனார் அங்கு வருகை புரிந்தபோது மாணவர்களை நூல் நூற்க வைப்பது குறித்து மிகவும் தாக்கிப் பேசியிருக்கிறார். வாள்பிடிக்க வேண்டிய கைகளை நூல் நூற்க வைப்பது ஏன் என்றும் கேள்விகேட்டு பெண்களைப் பற்றியும் சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். ஜீவா நூல் நூற்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி தைரியமாக எடுத்துரைத்தது மட்டுமல்லாது வஉசியின் பேச்சில் வெளிப்பட்ட பெண்களைப் பற்றிய தவறான கருத்துக்களை மிகவும் மனஉறுதியுடன் சுட்டிக்காட்டி அவருடைய கருத்துக்களை ஜீவா மறுத்துரைத்தார். ஜீவாவின் மனஉறுதியை மிகவும் பாராட்டிய வஉசி பின்னாளில் பெண்களைப் பற்றிய தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டதையும் அதில் ஜீவாவின் பங்கு பற்றியும் தமது நூல் எழுதினார் என்பது நோக்கத்தக்கது.
சிராவயல் ஆசிரமத்தில் பல சிறப்பான செயல்களை ஜீவா அவர்கள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவைகளை அக்காலத்திய சமூக நடைமுறை மனதில் கொண்டு பார்க்கும் போது அச்செயலின் சிறப்பு நமக்கு விளங்கும். பல ஆதி திராவிடக் குழந்தைகளுக்கு கௌதமன், மணிவாசகன், மணித்தொண்டன், கிளிமொழி, மங்கையர்க்கரசி போன்ற பெயர்களைச் சூட்டி அவர்களுக்கு வடமொழி சுலோகங்களைப் பயிற்றுவித்து பல பொது மேடைகளில் அவர்களை அச்சுலோகங்களை சொல்லும்படி செய்தார் ஜீவா.
சிராவயல் ஆசிரமத்தில் இருந்து வெளியேறல்
சிராவயல் ஆசிரமத்தின் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் அங்கிருந்து ஜீவா வெளியேறினார். ஜீவாவின் தீவிர அரசியல் ஈடுபாடு படிப்படியாக அந்நாளில் நிலவிய அரசியல் சூழலில் தீவிரமடைந்து வந்தது. அத்தீவிரம் 1932-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்குகொள்ள வைத்து ஜீவாவிற்குச் சிறைவாசம் பெற்றுத்தந்தது. அந்த ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ்காரராக சிறைக்குள் புகுந்த ஜீவா நவம்பர் மாதம் சிறையை விட்டு வெளியேறும்போது சிறைக்குள் கிடைத்த நட்பு மற்றும் அங்குக் கிடைத்த நூல்களின் ஈர்ப்பில் கம்யூனிஸ்டாக வெளியே வருகிறார்.
சிங்காரவேலருடன் நட்பு
இக்காலகட்டத்தில் பொதுஉடைமை இயக்க முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படும் சிங்காரவேலரின் நட்பு ஜீவாவுக்குக் கிடைத்தது. சிங்காரவேலர் தன்னுடைய வீட்டு நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள ஜீவாவுக்கு அனுமதி அளித்தது ஜீவாவின் வாழ்வில் மிகப்பெரிய புதிய வாயிலைத் திறந்து வைத்தது போலாயிற்று எனலாம்.
தமிழகத்தின் முதல் பொதுவுடமை வாதியாகக் கருதப்படும் சிங்காரவேலருக்கும் ஜீவாவுக்கும் உள்ள ஒருமைப்பாடு இதர அரசியல் தலைவர்களிடமோ சுதந்திர போராட்ட காலத்திய பொதுவுடமைவாதிகளிடமோ காணப்படாத ஒரு பண்பாடு ஆகும். இருவரும் ஒரே சமயத்தில் சமூக விடுதலை தளத்திலும் செயலாற்றியிருப்பது இவ்விரு தலைவர்களும் ஒரே சமயத்தில் சுயமரியாதை இயக்கத்திலும் தேசவிடுதலைத் தளத்திலும் முன்னணியில் நின்று, தீவிரமாகப் பங்கேற்றிருக்கிறார்கள் என்பது நோக்கத்தக்கது.
இல்லற வாழ்க்கை
கடலூர் சட்டமன்றத் தொகுதி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் மகளான கண்ணம்மாவை ஜீவா திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948-ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர். அவ்வப்போது போராட்டங்களில் கலந்து கொண்டு ஜீவா பலமுறை சிறை சென்றுவிடுவார். கட்சி, கொள்கை, போராட்டம், சிறைவாசம் என்று வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அவர், குடும்பம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிடவில்லை.
தனித்தமிழ் ஆர்வலர்
சிராவயல் ஆசிரமத்தில் காந்திய நிர்மாணத் திட்டத்தோடு தேவாரம், திருவாசகம், திருக்குறள், நிகண்டு மற்றும் பாரதியார் பாடல்கள் ஆகியவை போதிக்கப்பட்டன. இங்குதான் சொரிமுத்து ஜீவானந்தமாக பெயர் மாற்றம் பெற்றிருக்கிறார். இந்த ஆசிரமத்தில் இருந்த காலத்தில்தான் ஜீவாவுக்கு சங்க இலக்கியம் முதல் பாரதி வரையிலான எல்லா நூல்களையும் படிக்க வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. கம்பனிலும் பாரதியிலும் அவர் கண்ட புரட்சிக்கொள்கை, அவரை இலக்கியங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. தமிழ் நூற்கல்வியும் சேரன்மாதேவி ஆசிரமத்தில் அவருக்குக் கிடைத்த அனுபவமும் சேர்ந்து ஜீவாவை தீவிரமான வடமொழி எதிர்ப்பாளராகவும் தனித்தமிழ் ஆர்வலராகவும் மாற்றியது எனலாம்.
ஜீவா எதிலும் தீவிரம் காட்டும் பிறவிக்குணம் வாய்ந்தவர். இக்குணம் தனித்தமிழில் தீவிர ஆர்வம் கொண்ட ஜீவானந்தத்தை உயிரின்பனாக பெயர் மாற்றம் செய்திருக்கிறது. இவருடைய துடிப்பான தனித்தமிழ்ப் பேச்சை மிகவும் ரசித்த பாரதி அன்பர் வ.ராமசாமி இம்மாதிரி பிரசங்கத்தை நான் கேட்டதே இல்லை என்றும் ஆனால் தமிழ் மொழியின் வளர்ச்சியை உத்தேசித்து தயவு செய்து தனித்தமிழை விட்டுவிடுங்கள். இந்தத் தமிழைப் பாமர மக்களால் புரிந்து கொள்ள முடியாது. இது மக்களுடைய மொழியல்ல என்று யோசனை தெரிவித்திருக்கிறார். இந்த யோசனை ஏற்கும் மனநிலையில் ஜீவா அப்போது இல்லை. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தபோது ஜஸ்டிஸ் கட்சிக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதனால் ஜீவா காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் இருந்தார். அப்போது தனித் தமிழ் இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சுவாமி வேதாச்சலம் என்கிற மறைமலையடிகள் மீது ஜீவா மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார். 1927-ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டிலும் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்ட ஜீவா மறைமலையடிகளைப் பார்ப்பதற்காக அவர் தங்கியிருந்த பல்லாவரம் வீட்டிற்குச் சென்றார். அங்கு மறைமலையடிகள் வீட்டை அடைந்து அடிகளாரின் வீட்டுக் கதவைத்தட்டிய போது கேட்ட குரல் ஜீவாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேட்ட குரல் தனித் தமிழ் இயக்கத்தின் தனிப்பெரும் தலைவராகக் கருதப்பட்ட மறைமலையடிகளின் குரல். துரதிருஷ்டவசமாக அக்குரல் தனித் தமிழில் ஒலிக்கவில்லை.
யாரது போஸ்ட்மேனா? என்று தனித்தமிழ்; வித்தகர் கேட்ட கேள்வி ஜீவாவை அதிர்ச்சியடைய வைத்தது. அதைத் தொடரந்த மறைமலையடிகளுடனான விவாதத்தில் அவர் வடமொழி எதிர்ப்பாளாராக மட்டுமல்லாது ஆங்கிலத்தின் ஆதரவாளராகவும் இருப்பதையம் உணர்ந்திருக்கிறார் ஜீவா. பிற்காலத்தில் தன்னுடைய தலைமறைவு வாழ்வின் போது மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் வரா சொன்னது போல மக்கள் மொழியில் பேச வேண்டும் என்பதை ஜீவா உணர்ந்தார். இதனைப் தாம் எழுதிய நூல்களிலும் ஜீவா பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவுடமைக் கட்சியில் இணைந்து
ஜீவா பொதுவுடமைவாதியாகச் செயல்படுவதற்கு அடிப்படையாக அமைந்த காலச்சூழல் 1935-ஆம் ஆண்டில் இருந்து 1939-ஆம் ஆண்டு வரையுள்ள காலகட்டமாகும். இக்காலங்களில்தான் ‘ஜனசக்தி’ இதழ் உருவாக்கப்பட்டது (1937). ‘தொழிலாளர் பாதுகாப்புக் கழகம்’ எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். இரண்டாம் உலகப்போர் உருவாவதற்கான ‘பெரும் அழுத்தம்’ உருவாகும் சூழலில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய இயக்கங்களின் எழுச்சி பிரிட்டனின் ஏகாதிபத்திய அரசு எந்திரத்தைத் தூக்கியெறிவதற்கான அடிப்படைகளை உருவாக்கிற்று. இதனை அடி மட்டத்தில் சாத்தியப்படுத்தியவர்களாகக் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்.
ஜீவா 1930-ஆம் ஆண்டுகளில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932-ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். சிறை ஜீவாவின் சிந்தனைப் போக்குகளை மாற்றியது. ‘சிறையிலிருந்து நான் வெளிவரும்போது, கம்யூனிசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவே வெளியே வந்தேன்’ என்று ஜீவா எழுதுவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியப் பொருப்பினை வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. அதனை எதிர்த்துக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கு வகித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் (1939-42) பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களை ஜீவா கழித்தார். இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான செயல்பாடுகளில் தோழர்களோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். 1948-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சித்தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். இக்காலங்களில் ஜீவா மார்க்சியக் கல்வி பயிலுவதை முதன்மைப்படுத்திக் கொண்டார். சோசலிச வரலாறு, சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை வாசித்த அனுபவத்தை வைத்துக் கொண்டு, தமிழில் அப்பொருண்மைகள் குறித்து எழுதினார்.
மார்க்சிய கருத்துகளைத் தமிழில் சொல்வதற்கு ஜீவா பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார். 1940-ஆம் ஆண்டுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் தொடக்கத்திலும் ஜீவா எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும் ‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் பல தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக்கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஜீவாவிற்கு உருவானது. ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் இக்காலங்களில் ஏற்றிருந்தார்.
சுயமரியாதைச் சமதர்மக் கட்சியை உருவாக்குதல்
ஈ.வெ.ராவோடு கருத்து முரண்பாடு ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ. ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து ‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’ மற்றும் ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது (1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். இவ்வகையில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். குறிப்பாக அக்காலங்களில் நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜீவா அதற்கு எதிராகச் செயல்பட்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காரராகச் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் ஜனசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தது (1937) எனலாம்.
1933-ஆம் ஆண்டில் ஜீவா எழுதிய “பெண்ணுரிமை கீதாஞ்சலி” என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுவே ஜீவா எழுதிய முதல் நூல் ஆகும். அன்றிலிருந்து நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பல பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.
தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபடல்
1937-ஆம் ஆண்டில் கோவை லட்சுமி மில் போராட்டத்தைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் ஈஎம்எஸ் நம்பூதிரபாடு தலைமையில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் மாநாட்டில் ஜீவா செங்கொடியினை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து 1938-ஆம் ஆண்டில் மதுரை பசுபதி மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஜீவா கலந்து கொண்டு போராடியபோது ஜீவா கைது செய்யப்பட்டார். இத்தகைய போராட்டங்களால் ஜீவாவிற்குப் பல்வேறுவிதமாக துன்பங்கள் ஏற்படுகின்றன. ஜீவா காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் சென்னை மாகாணத்திலிருந்தே வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து ஜீவா பம்பாய் சென்றார். ஆனால் அங்கும் அரசியல் காரணங்களுக்காக ஜீவா கைது செய்யப்பட்டார். இந்நிகழ்வைப் போன்று இருமுறை சென்னை மாகாணத்தை விட்டு ஜீவா வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குப்பின் தொடர்ச்சியான சிறைவாசங்களும் தலைமறைவு வாழ்க்கையும் ஜீவாவின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகின. இதற்கிடையில் 1937-ஆம் ஆண்டில் நவம்பர் 20-ஆம் தேதி ஜீவா பல இன்னல்களுக்கிடையில் ஜனசக்தி பத்திரிகையை துவங்கினார் .
1957-ஆம் ஆண்டில் டிசம்பரில் திருச்சியில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி தமிழக பிரதிநிதிகளின் மாநாட்டைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி ஜீவா பேசிய பேருரையே ‘ஜாதி ஒழிப்பும் மொழிப்பிரச்னையும்’ என்ற நூல் ஆகும்.
சட்டமன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் ததலைவராகச் செயல்படுதல்
நாட்டின் சுதந்திரத்துக்குப்பின் ஒருமுறை சட்டசபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜீவா. சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து அவர் ஆற்றிய, ‘‘நான் தமிழன். என்னுடைய மொழியே இந்த ராஜ்யத்தில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. கல்விக் கூடங்களிலும் ஆட்சி மன்றத்திலும் நியாய மன்றத்திலும் நிர்வாகத்துறையிலும் பிரதேச மொழியே இயங்கவேண்டும். ஆகவே வெகுசீக்கிரமாக தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க அரசியலார் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் முதல் அடிப்படையான கொள்கை இதுதான். இப்படிச் செய்தால்தான் ஜனநாயகத்தின் முதல் வடிவம் சிருஷ்டிக்கப்படும். தமிழ் தெரிந்தால் போதும். இந்நாட்டின் ஆட்சியாளராகவும் ஆகலாம். உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் ஆகலாம். கல்லூரிப்பேராசியராகவும் ஆகலாம்.’’ என்ற உரை மிகவும் புகழ்பெற்றது. இது ஜீவாவின் உண்மையான மொழிப்பற்றினைக் காட்டுவதாக அமைந்துள்ளது எனலாம்.
அதேபோன்று கம்பன் மீதும் பாரதி மீதும் ஜீவா கொண்டிருந்த பற்றினைப் பற்றி தனியாகவே ஒரு கட்டுரையோ நூலோ எழுதலாம். திராவிட இயக்கங்கள் கம்பராமாயணத்தைக் கடுமையாகத் தாக்கி நூல்கள் எழுதி, அதில் உள்ள சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு விரசமான கட்டுரைகளும் தாக்குதல்களும் தொடர்ந்தபோது கம்பனில் பொதிந்துள்ள நயங்களை அந்த திராவிட இயக்கத்தவர்களின் கடுமையான தாக்குதல்களுக்கு எவ்வித அடிபணிதலும் இல்லாது தன்கருத்துக்களை முன்வைத்தவர் ஜீவா. குன்றக்குடி அடிகளாரும் ஜீவாவும் கலந்து கொண்ட பட்டிமண்டபங்கள் மிகவும் புகழ் பெற்றவையாக அமைந்து விளங்கின. ஜீவாவைக் ‘கம்பராமாயண உபன்யாசகர்’ என்று திராவிட கட்சிகள் கேலி செய்த அதே மேடையில் ஜீவா கம்பனை வியந்து பார்த்துக் கருத்துக்களை வெளியிட்டார் . தாமரை இதழ்களில் பாரதி பற்றி ஜீவா எழுதிய கட்டுரைகள் பாரதி ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளவை என்று சொல்லலாம்.
தன்னலம் கருதாத்தகைமையாளர்
தன்னலம் கருதாது என்றும் எப்பொழுதும் ஜீவா அவர்கள் நாட்டின் நலத்திற்காகவும், மக்களின் நலத்திற்காகவும் பாடுபட்டுக் கொண்டே இருந்தார். ஜீவாவின் வாழ்வில் பல மறக்க இயலாத நிகழ்வுகள் நடந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்.
1963-ஆம் ஆண்டின் ஒரு நாள். சென்னையின் ஜனசக்தி அலுவலகத்தில் எழுத்துப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்தார் ஜீவா. அப்பொழுது இளம்பெண்கள் இருவர் ஜனசக்தி அலுவலக வாயிலில் தயங்கித் தயங்கி நின்றனர். அவர்கள் உள்ளே இருந்தவரைப் பார்த்து, ‘‘ஜீவா இருக்கிறாரா? என்று ஒரு பெண் மெதுவாகக் கேட்கிறாள். உடனே இருவரும் ஜீவாவின் அறையில் அனுமதிக்கப்படுகின்றனர். இரு பெண்களும் ஜீவாவின் முன் தயங்கி அமர்கின்றனர். அவர்களைப் பார்த்து பரிவான குரலில் என்னம்மா வேண்டும் என்று கேட்கிறார் ஜீவா. உங்களைத்தான் பார்க்க வந்தோம் என்று ஒரு பெண் கூறினாள்.
பேசாமல் தயக்கத்துடன் இருந்த பெண்ணை நோக்கி நீ யாரம்மா என்று கேட்கிறார் ஜீவா.அந்தப் பெண் பதில் ஏதும் சொல்லவில்லை. ஏற்கனவே பேசிய பெண், நாங்கள் ஆசிரியப் பயிற்சி முடித்த மாணவிகள் என்கிறாள். மீண்டும் ஜீவா, ஒன்றும் பேசாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து நீ யாரம்மா? என்று கேட்டார்
கலங்கிய கண்களுடன் அப்பெண் ஒரு துண்டுக் காகிதத்தை ஜீவாவிடம் நீட்டினாள். அதில் – எனது தாத்தாவின் பெயர் குலசேகரதாஸ். எனது அன்னையின் பெயர் கண்ணம்மா என்று எழுதியிருந்தது. அந்த வாக்கியங்களை வாசித்த ஜீவா என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார். ஜீவா அத்துண்டுக் காகிதத்தில் என் மகள் என்று எழுதி அந்தப் பெண்ணிடம் நீட்டுகிறார்.
அந்த வார்த்தைகளைக் கண் கொட்டாமல் அந்தப் பெண் உணர்ச்சிகரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எழுதிய அந்தத் துண்டுக் காகிதத்தை ஜீவா திரும்பக் கேட்டார். அப்பெண் அதைக் கொடுக்கவில்லை. என் மகள் என்று சொல்லவே கூசித்தானே தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறாய் என்று மனந்திறந்து ஜீவா கேட்டு விட்டுவிட்டார்.
ஒரு புன்சிரிப்பினால் பதில் சொன்னாள் ஜீவாவின் மகளான அந்தக் குமுதா. ஜீவாவின் முதல் துணைவியார் திருமதி கண்ணம்மாவின் ஒரே பெண். கண்ணம்மாவின் தகப்பனார் குலசேகர தாஸ் கடலூரிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலித் சட்டசபை உறுப்பினர். குமுதாவைப் பெற்றெடுத்த சில நாட்களில் கண்ணம்மா தன் கண்களை மூடினர். அதன் பிறகு குமுதா தன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வந்தாள். அவர்களையே பெற்றோர் என்று எண்ணி அவள் வளர்ந்து வந்தாள். அந்தக் குமுதா தனது 17 வயது வாழ்க்கையைத் தன் தந்தையிடம் சொல்ல, அந்தத் தந்தை தமது 17 ஆண்டுக் கால வாழ்க்கையை, தான் நாடு கடத்தப்பட்டதை, தன் சிறைவாழ்வை, அரசியல், பொதுவாழ்வு போன்றவைகளில் தன்னையும் தன் வயதினையும் கரைத்துக் கொண்டதை தன் மகளுக்கு சொல்கிறார். பிறகு அந்த மகள் தந்தை இறக்கும் வரை அவருடன் சேர்ந்து குடிசையில் வசிக்கிறாள். இந்த நிகழ்ச்சி அனைவரையும் நெகிழவைக்கும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது.
பொதுநலம் பேணிய புனிதர்.
ஜீவாவும், காமராஜரும் அன்பால் இணைந்த நண்பர்களாகத் திகழ்ந்தனர். ஜீவாவின் மீது காமராஜர் பெருமதிப்பு வைத்திருந்தார். முதல்வராக இருந்த காமராஜர் சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார். அப்போது கட்சித்தொண்டர் ஒருவர் ஜீவா அந்தப் பகுதியில் வசிப்பதாகவும் அவர் மிகவும் உடல்நலம் குன்றி இருப்பதாகவும் கூற, காமராஜர் அவரை சந்திக்க பல குண்டு குழிகளையும் சாக்கடைகளையும் தாண்டி ஜீவா வசித்து வந்த குடிசைக்குச் செல்கிறார். அந்த குடிசையின் இழிந்த நிலை காமராஜரை திடுக்கிட வைக்கிறது. ஜீவாவின் பக்கத்தில் அமர்ந்து ”ஜீவா என்ன கஷ்டம் இது? முதல்வரின் கோட்டாவில் உனக்கு ஒரு அரசாங்க வீடு ஒதுக்கிக் கொடுக்கிறேன். அங்கு போய் நீ இரு” என்று காமராஜர் கூறினார்.
அதனைக் கேட்ட ஜீவா, ‘‘ தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் இருக்க வசதியாக அரசு வீடுகள் கிடைக்கட்டும். அன்று நான் நீங்கள் கொடுக்கும் வீட்டுக்குக் குடியேறுகிறேன்” என்றார்.
விரக்தியுடன் காமராஜர், ‘‘…ஜீவா நீ உருப்படமாட்டே..’’ என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார். தன்னலம் கருதாத் தகைமையாளராகவும், பொதுநலம் பேணிய புனிதராகவுமாக ஜீவா திகழ்ந்ததை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ஜீவா அவர்கள் தமக்கு நெருங்கியவர் முதல்வராக இருந்தும் அவருடன் கொண்ட நட்பினைத் தவறாகப் பயன்படுத்தாமல் நேர்மையுடையவராகத் தூய்மைஉடையவராக வாழ்ந்தார்.
ஜீவாவின் நூல்கள்
தமிழகத்தின் சிறந்த மேடைப்பேச்சாளராகவும் சிந்தனையாளராகவும் கருதப்பட்ட ஜீவா ஆற்றிய சிந்தனை ஆழமிக்க சொற்பொழிவுகள் அப்போது காற்றில் கலந்த பேரோசைகளாகப் போய்விட்டன. அவர் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் மட்டுமே இப்போது கிடைக்கின்றன.
மதமும் மனித வாழ்வும், சோஷலிஸ்ட் தத்துவங்கள், புதுமைப்பெண், இலக்கியச்சுவை, சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள், மொழியைப் பற்றி, ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு, மேடையில் ஜீவா (தொகுப்பு), சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, கலை இலக்கியத்தின் புதிய பார்வை, தேசத்தின் சொத்து (தொகுப்பு) ஆகியவை ஜீவா அவர்களின் மிகச் சிறந்த நூல்களாகும்.
கலைஇலக்கிய பெருமன்றம் உருவாக்கல்
ஜீவாவின் இறுதிக்காலச் செயல்பாடுகளில் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கது 1961-ஆம் ஆண்டு அவரால் உருவாக்கப்பட்ட ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ ஆகும். பொதுவுடமைக் கொள்கையைப் பரப்ப “ஜனசக்தி” நாளிதழைத் தொடங்கிய ஜீவா, “தாமரை” என்ற இலக்கிய இதழை 1959 –ஆம் ஆண்டில் தொடங்கினார்.
இங்ஙனம் ஜீவா அடித்தளமிட்டு உருவாக்கிய கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கமானது இன்று கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று இலக்கிய இயக்கத்தையும், அமைப்பையும் தோற்றுவித்துள்ளது நோக்கத்தக்கது. நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் அயராது பாடுபட்டு மாவீரராகத் திகழ்ந்த ஜீவா அவர்கள், 1963-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 18-ஆம் நாள் இயற்கை எய்தினார்.
ஜீவாவின் மறைவு உழைக்கும் பாட்டாளி வர்க்க மக்களுக்கும், பாரத நாட்டிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். ஜீவாவின் இறுதிச் சடங்கின்போது நாடகக் கலைஞர் டிகே சண்முகம் அவர்கள் சென்னை இடுகாட்டில்,
‘‘காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா’’
என்ற ஜீவாவின் பாடலைப் பாடிய போது அனைவரும் கண்ணீர் உகுத்தனர். பாரதத்தின் சொத்தாகத் திகழ்ந்த ஜீவா அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனதை விட்டு என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
.
Malar.sethu@gmail.com