இலங்கைத்தமிழ்ச்சூழலில் ஒருவர் முழு நேர எழுத்தாளராக வாழ்வதன் கொடுமையை வாழ்ந்து பார்த்து அனுபவித்தால்தான் புரியும். எனக்குத்தெரிய பல முழுநேர தமிழ் எழுத்தாளர்கள் எத்தகைய துன்பங்களை, ஏமாற்றங்களை, தோல்விகளை, வஞ்சனைகளை, சோதனைகளை சந்தித்தார்கள் என்பதை மனதில் பதிவு செய்யத்தொடங்கியபோது அவர்களின் வாழ்வு எனக்கும் புத்திக்கொள்முதலானது. நான் எழுத்துலகில் பிரவேசித்த காலப்பகுதியில் மினுவாங்கொடையைச் சேர்ந்த நண்பர் மு.பஷீர், எங்கள் இலக்கியவட்டத்தின் கலந்துரையாடல்களின்போது குறிப்பிடும் பெயர்:- இளங்கீரன். இவரது இயற்பெயர் சுபைர். இவரும் முழு நேர எழுத்தாளராக வாழ்ந்தவர்.
நீர்கொழும்பில் எனது உறவினர் மயில்வாகனன் மாமா 1966 காலப்பகுதியில் தாம் நடத்திய அண்ணி என்ற சஞ்சிகையின் முதலாவது இதழில் இளங்கீரன் அவர்களின் நேர்காணலை பிரசுரித்திருந்தார். அப்பொழுது எனக்கு இளங்கீரனைத் தெரியாது. அந்த இதழில் முன்புற – பின்புற அட்டைகளைத்தவிர உள்ளே அனைத்துப்பக்கங்களிலும் விடயதானங்கள் கறுப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால், இளங்கீரனின் நேர்காணல் மாத்திரம் சிவப்பு நிறத்தில் அச்சாகியிருந்தது. அதற்கான காரணத்தை மாமாவிடம் கேட்டேன். அண்ணி சஞ்சிகையின் துணை ஆசிரியர்களில் ஒருவரான ஓட்டுமடத்தான் என்ற புனைபெயரில் எழுதும் நாகராஜா என்பவர் இடதுசாரி சிந்தனையாளர். இளங்கீரனும் கம்யூனிஸப்பற்றாளர். நாகராஜாதான் அந்தப் பேட்டிக்காக இளங்கீரனைச்சந்தித்து எழுதியவர். சஞ்சிகையில் குறிப்பிட்ட பக்கங்கள் சிவப்பு நிறத்தில் அச்சாகவேண்டும் என்ற பிடிவாதத்தில் நாகராஜா இருந்தார் என்று சொல்லி எனது சந்தேகத்தைப்போக்கினார்.
இளங்கீரனைப்பற்றிய பல தகவல்களை பஷீர் எனக்குச்சொன்னபோது நான் வியப்புற்றேன். பல நாவல்கள் படைத்தவர். மகாகவி பாரதியின் சிந்தனைகளை தமிழகத்திலும் இலங்கையிலும் தனது மேடைப்பேச்சுக்களினால் தொடர்ச்சியாக பரப்பிக்கொண்டிருந்தவர். தினகரனில் தொடர்கதைகள் எழுதியவர். மரகதம் இலக்கிய இதழை நடத்தியவர். தொழிலாளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர். ஒரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டவர். இப்படியெல்லாம் பல சிறப்புகளைப்பெற்ற இளங்கீரன் வறுமையிலும் வாடினார் என அறிந்தபோது துணுக்குற்றேன். பின்னாளில் 1980 களில் மிகவும் சிரமப்பட்டு சேமித்து தனது பெரிய குடும்பத்திற்காக ஒரு வீடு வாங்கும் முயற்சியில் இளங்கீரன் ஈடுபட்டபொழுது ஒரு அரசியல் பிரமுகரினால் ஏமாற்றப்பட்டவர். தமது சேமிப்பை இழந்தவர்.
கைலாசபதி தினகரனில் ஆசிரியராக பணியாற்றிய காலப்பகுதியில் இளங்கிரனின் நாவல் தொடர்கதையாக வெளியானது. அந்தக்கதையில் ஒரு பாத்திரம் பத்மினி. கதையில் பத்மினி இறந்துவிட வாய்ப்பிருந்த அத்தியாயம் வெளியானதும் ஒரு வாசகர் பத்மினி சாகக்கூடாது என்று அவசரக்கடிதம் ஒன்றை ஆசிரியர் கைலாசபதிக்கு அனுப்பியிருந்த தகவலை தமது தமிழ் நாவல் இலக்கியம் என்ற விமர்சன நூலில் கைலாசபதி பதிவுசெய்துள்ளார்.
வாசகர்களிடம் தாம் படைத்த பாத்திரத்துக்கு அனுதாபத்தையே அந்தக்காலகட்டத்தில் உருவாக்கியவர் இளங்கீரன். 1950 களிலேயே ஈழத்து நாவல் இலக்கியவளர்ச்சிக்கு அவரது நாவல்கள் வரவாகியிருக்கின்றன. பைத்தியக்காரி, பொற்கூண்டு, மீண்டும் வந்தாள், ஒரே அணைப்பு, கலாராணி, காதல் உலகினிலே, மரணக்குழி, மாதுளா, வண்ணக்குமரி, அழகு ரோஜா, பட்டினித்தோட்டம், நீதிபதி, புயல் அடங்குமா?, சொர்க்கம் எங்கே? எதிர்பார்த்த இரவு, மனிதனைப்பார், நீதியே நீ கேள், இங்கிருந்து எங்கே?, மண்ணில் விளைந்தவர்கள், காலம் மாறுகிறது, இலட்சியக்கனவு, அவளுக்கு ஒரு வேலை வேண்டும், தென்றலும் புயலும். இப்படி பல நாவல்களை எழுதியிருக்கும் இளங்கீரன் சில வானொலி நாடகங்களும் மேடை நாடகங்களும் எழுதியவர். பாலஸ்தீனம் என்ற இவரது நாடகப்பிரதியை பார்த்த கலாசார திணைக்களம் அதனை மேடையேற்ற தடைவிதித்தது. மகாகவி பாரதி, கவிதை தந்த பரிசு, நீதிக்காகச் செய்த நீதி முதலான நாடகங்களின் தொகுப்பு தடயம் என்ற பெயரில் வெளியானது. பாரதி கண்ட சமுதாயம், இலங்கையில் இருமொழிகள். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வரலாறு முதலான நூல்களையும் எழுதியிருப்பவர். இளங்கீரனின் இலக்கியப்பணி தொடர்பாக பேராதனைப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த மாணவி ரஹீமா முகம்மத் பின்னர் ஆசிரியராக பணியாற்றியவர். குறிப்பிட்ட ஆய்வை கல்ஹின்ன தமிழ் மன்றத்தின் நிறுவனர் சட்டத்தரணி எஸ்.எம். ஹனிபா வெளியிட்டார். இளங்கீரனைப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் 1972 காலப்பகுதியில் துளிர்த்திருந்தவேளையில் எனக்குமட்டுமல்ல இளங்கீரனின் பல நண்பர்களுக்கும் ஆறுதல் தரக்கூடிய தகவலை புத்தளத்திலிருந்து அச்சமயம் சோலைக்குமரன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நண்பர் ஜவாத் மரைக்கார் சொன்னார். “குமார் ரூபசிங்க நடத்தும் ஜனவேகம் என்ற பத்திரிகையில் இளங்கீரன் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரைப்பார்ப்பதற்காக வார விடுமுறை தினத்தன்று செல்லவிருக்கிறேன். நீங்களும் உடன் வரலாம்.” என்ற தகவலை அவர் அனுப்பியிருந்தார். தீர்மானித்தவாறு அவரைப்பார்க்கச்சென்றோம். மருதானை ரயில் நிலையத்துக்கு சமீபமாக அமைந்திருந்த ஒரு மாடிக்கட்டிடத்தில் ஜனவேகம் காரியாலயத்தை கண்டுபிடித்தோம்.
நாம் ஒரு மதியவேளையில் அவரைப்பார்க்கச்சென்றதற்கும் காரணம் இருந்தது. அவரையும் அழைத்துக்கொண்டு எங்காவது மதிய உணவுக்குச்செல்வது என்பதுதான் எங்கள் தீர்மானம். எம்மிருவரது எழுத்துக்களையும் படித்திருந்த இளங்கீரன், முன்னறிவிப்பின்றி நாம் வந்ததற்காக கண்டிக்கவில்லை. ஒரு தந்தையின் பாசத்துடன் அணைத்துக்கொண்டார்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை 1974 இல் நடத்தியபோது கொழும்பில் பல ஆலோசனைக்கூட்டங்கள் நடந்தன. இக்கூட்டங்களுக்கு முடிந்தவரையில் தவறாது கலந்துகொண்டபோது இளங்கீரனையும் அங்கு சந்திப்பேன். என்னை மட்டுமல்ல என்போன்ற அக்கால கட்டத்தில் இலக்கியத்துறைக்கு வந்த இளம் தலைமுறையினரை ஒரு தந்தையின் பரிவோடு அணைத்துக்கொண்டவர். இந்த உறவு தொடர்ந்தது. 1983 தொடக்கத்தில் பாரதி நூற்றாண்டு காலத்தில் மீண்டும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தபோது இளங்கீரனுடன் இணைந்து வேலை செய்யும் சந்தர்ப்பங்கள் தோன்றின. ஏற்கனவே பாரதி பற்றி எழுதியும் பேசியும் வந்துள்ள இளங்கீரன் பாரதியின் வாழ்வின் சில பக்கங்களை சித்திரிக்கும் ஒரு நாடகத்தை எழுதினார். அந்தனிஜீவாவின் இயக்கத்தில் இந்நாடகம் மருதானை டவர் அரங்கில் மேடையேறியது. அதனைத் தொடர்ந்து நாடகத்தை எழுதியவருக்கும் இயக்கியவருக்கும் இடையே நிழல் யுத்தம் ஆரம்பமாகியது. அதனைத்தணிப்பதற்கு எவரும் முயற்சிக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாகவும் இருந்தது. காலம் கனியும்போது அவர்கள் இருவரும் சமாதானமாவார்கள் என்று மாத்திரம் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி சொன்னார்.
1983 இல் இயக்குநர் அந்தனி ஜீவாவின் எந்தத்தயவும் இல்லாமலேயே பாரதி நாடகத்தை மீண்டும் சங்கத்தின் பாரதிநூற்றாண்டு கொழும்பு நிகழ்ச்சியின்போது பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இளங்கீரன் மேடையேற்றினார். தமிழகத்திலிருந்து வந்திருந்த ரகுநாதனும் ராஜம் கிருஷ்ணனும் பேராசிரியர் ராமகிருஷ்ணனும் சபையிலிருந்து எம்முடன் இந்நாடகத்தை பார்த்து பாராட்டினர். ரகுநாதன் நாடகம் முடிந்ததும் மேடையேறி இளங்கீரனையும் நடிகர்களையும் பாராட்டினார். ஆனால் அதனை தொடக்கத்தில் இயக்கியவர் பற்றி எதுவும் சொல்லவில்லை. இளங்கீரனுக்கும் அந்தனிஜீவாவுக்கும் இடையில் நீடித்துக்கொண்டிருந்த ஊடலை நாம் எவரும் ரகுநாதனுக்குச்சொல்லவும் இல்லை. தாம் பாரதி நூற்றாண்டு செயற்குழுவினால் முற்றாக ஓரங்கட்டப்பட்டிருப்பதாக அந்தனிஜீவா வருந்தினார். அவர் நிகழ்வுகளுக்கு வந்து தமது கோபத்தை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காண்பிக்கவும் தவறவில்லை. எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
1956 இல் ரகுநாதன் இலங்கை வந்தபோது மலையகத்துக்கு சென்றிருந்தமையால் இரண்டாவது பயணத்தில் வடக்கு, கிழக்கு மாகாணத்துக்குச் செல்ல விரும்பியிருந்தார். இக்காலப்பகுதியில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்திருந்தது. அத்துடன் பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். வடக்கு, கிழக்கில் நிலைமைகளை அறியவேண்டும் என்ற ஆவலும் ரகுநாதனுக்கு இருந்தமையால் செயலாளர் பிரேம்ஜி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு ரகுநாதனை அழைத்துச்செல்லும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். இளங்கீரனும் அன்றிரவு எம்முடன் மட்டக்களப்பிற்கு ரயிலில் பயணித்தார். என்னை ரகுநாதனுடன் விட்டு விட்டு தான் தனியாக ஒரு ஆசனத்தில் அமர்ந்து நித்திராதேவியுடன் சங்கமமானார். நானும் ரகுநாதனும் விடியவிடிய பலதும் பத்தும் பேசிக்கொண்டிருந்தோம்.
மறுநாள் காலை மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் நண்பர்கள் மருதூர்கொத்தனும் மருதூர்க்கனியும் ரகுநாதனையும் இளங்கீரனையும் வரவேற்க மாலைகளுடன் காத்து நின்று, அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இந்த கொளரவிப்பு எனக்கு மட்டுமல்ல மட்டக்களப்பு ரயில் நிலைய மேடையில் நின்ற சக பயணிகளுக்கும் வியப்பாகவிருந்தது. அந்தப்பயணிகள் யாரோ தமிழ் அரசியல் தலைவர்கள் வருகிறார்கள் என்றுதான் நினைத்திருக்கக்கூடும்.
என்னை கல்முனையில் ஒரு நண்பரின் இல்லத்தில் இறக்கிவிட்டு அவர்கள் அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சி கலாசாலைக்கு ரகுநாதனையும் இளங்கீரனையும் கூட்டத்திற்கு அழைத்துச்சென்றனர். அன்று மாலை கல்முனை பாத்திமா கல்லூரியில் பாரதி விழாவும் எழுத்தாளர் ஒளிப்படக்கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையால் அவற்றைக்கவனிப்பதற்காக நான் கல்முனையில் இறங்கிக்கொண்டேன்.
எழுத்தாளர் சடாட்சரனும் இன்னும் சில நண்பர்களும் அந்தக் கல்லூரி மண்டபத்தில் படங்களை சுவர்களில் காட்சிப்படுத்துவதற்கு எனக்கு உதவினார்கள். ஒவ்வொருவரும் அகன்ற பின்னர் முதல்நாள் இரவுப்பயணக்களைப்பினாலும் உறக்கமின்மையாலும் கல்லூரி வாசலில் ஒரு கதிரையில் சாய்ந்து உறங்கிவிட்டேன். நான் ஆழ்ந்த நித்திரை. அச்சமயம் அட்டாளைச்சேனை நிகழ்வுகளை முடித்துக்கொண்டு திரும்பியிருந்த இளங்கீரன் கல்லூரி மண்டபத்தில் மாலை நிகழ்வு முன்னேற்பாடுகளை கவனிக்க வந்துள்ளார். நான் ஒரு வாயில் காப்போனாக வாசலில் உறங்கிக்கொண்டிருக்கின்றேன். எனது துயிலைக்களையாமல் உள்ளே சென்று எனது கண்காட்சி வேலைகளை பார்த்துத்திரும்பியிருக்கிறார். அவருக்கு என்னைப்பார்க்க மிகவும் கஷ்டாக இருந்திருக்கவேண்டும். அருகே வந்து என்னைத்தட்டி எழுப்பி மார்போடு அணைத்துக்கொண்டார். அவரது கண்கள் கலங்கியிருந்தன. “எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு அர்ப்பணிப்புடன் இயங்கக்கூடிய இளைஞர்களைத்தான் தேடிக்கொண்டிருந்தோம். நீ எமக்கு கிடைத்துள்ளாய். ஜீவாவும் பிரேம்ஜியும் சோமகாந்தனும் எமக்கு ஒரு பிள்ளையைத்தந்துள்ளார்கள் என்று நாதழுதழுக்கச் சொல்லி என்னை உச்சிமோந்தார். அவரது இந்த இயல்பு நான் எதிர்பாராதது. அன்று விழாவுக்கு வந்திருந்த சட்டத்தரணி அஷ்ரப்பை எனக்கு அறிமுகப்படுத்திய இளங்கீரன் – அன்று இரவு முருகேசம்பிள்ளை என்ற அன்பரின் இல்லத்தில் நடந்த இராப்போசன விருந்திலும் கலந்துகொண்டவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திப்பேசினார். அன்று இரவு மருதமுனையில் கவிஞர் மருதூர்க்கனியின் இல்லத்தில் தங்கியிருந்து மறுநாள் நண்பர் அன்புமணி ஒழுங்கு செய்திருந்த மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலைக்கூட்டத்திற்குச் சென்றோம். அங்கும் நாம் மூவரும் உரையாற்றினோம். மூத்ததலைமுறையினருடன் இளையதலைமுறை படைப்பாளியையும் இணத்துக்கொண்டு செயற்பட்டால்தான் ஒரு இயக்கத்தை ஆரோக்கியமுடன் முன்னெடுத்துச்செல்ல முடியும் என்ற பாடத்தை நான் இளங்கீரனிடமும் கற்றுக்கொண்டேன்.
மதியம் மட்டக்களப்பு பொது நூலகத்தில் நண்பர் சிவராம் ஒரு சந்திப்பை ரகுநாதனுக்காக ஏற்படுத்தினார். இந்த சிவராம்தான் பிற்காலத்தில் பிரபலமான ஊடகவியலாளர் தராக்கி. இங்கு நான் சந்தித்த பஷீர் என்பவர் தற்பொழுது லண்டனிலிருந்து அரசியல் பத்திகள் எழுதிவருகிறார். இந்தப்பயணத்தில் நான் சந்தித்த இருவர் (அஷ்ரப், தராக்கி சிவராம்) பின்னாட்களில் அரசியலிலும் ஊடகத்திலும் மிகவும் பிரபலமானார்கள். அவர்களது கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றன. ஆயினும் அவர்கள் கொல்லப்பட்டபோதும் இளங்கீரன் மறைந்தபோதும் அவர்களின் இழப்பின் துயரநிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாமல் நான் அவுஸ்திரேலியாவில் மனம்வருந்திக்கொண்டிருந்தேன் என்பது எனது விதிதான்.
1986 இறுதியில் கொழும்பில் கமலா மோடி மண்டபத்தில் நண்பர் சோமகாந்தனின் ஆகுதி சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழாவில் இளங்கீரனைச்சந்தித்து உரையாடினேன். அதனை அவதானித்த நண்பர் ராஜ ஸ்ரீகாந்தன், என்னைத்தனியே அழைத்து ஒரு இரகசியம் சொன்னார். மறுநாள் இளங்கீரனுக்கு 60 வயது பிறக்கிறது. அதே சமயம் எங்கள் சங்கத்தின் மாதாந்த கருத்தரங்கும் கொழும்பு பிரதான வீதி முஸ்லிம் லீக் வாலிப முன்னணி மண்டபத்தில் நடக்கிறது. அதற்கு இளங்கீரனை எப்படியும் வரச்செய்து திடுதிப்பென அவரது மணிவிழாவை பகிரங்கப்படுத்தி பாராட்டுவோம் என்பதுதான் ராஜஸ்ரீகாந்தன் சொன்ன இரகசியம். ஆனால் இதுபற்றி எவருக்கும் தற்பொழுது தெரியவேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.
சோமகாந்தனின் நூல் வெளியீட்டுக்கூட்டம் முடிந்ததும், இளங்கீரனை நாளைய சந்திப்புக்கு வருமாறு அழைத்தோம். இன்றும் வந்து நாளையும் வரத்தான் வேண்டுமா? எனக்கு ஓய்வு தர மாட்டீர்களா? என்று அவர் கடிந்துகொண்டார். இல்லை அவசியம் வாருங்கள் என்று அன்புக்கட்டளை விடுத்தோம். அன்று இரவு கூட்டம் முடிந்ததும் பஸ் நிலையம் செல்லாமல் உடனே வீரகேசரிக்கு விரைந்தேன். இளங்கீரனுக்கு 60 வயது மணிவிழா. கொழும்பில் இன்று அவருக்கு பாராட்டு என ஒரு செய்தியை எழுதி அச்சுக்கு கொடுத்துவிட்டு அதன்பின்னர் ஊருக்கு பஸ் ஏறினேன். இதனை நான் ராஜஸ்ரீகாந்தனுக்கும் சொல்லவில்லை. மறுநாள் வீரகேசரியில் குறிப்பிட்ட செய்தியைப்பார்த்த சில இலக்கிய நண்பர்கள் கொழும்பில் இளங்கீரன் வீடு தேடிச்சென்று வாழ்த்தி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள். அன்று மாலை அவருக்காக ஒரு பூமாலையும் வாங்கிக்கொண்டு மாதாந்த கருத்தரங்கிற்குச்சென்றேன். அன்றைய சந்திப்பே இறுதிச்சந்திப்பு. இந்தப்பத்தியில் இடம்பெறும் அவருடனான ஒளிப்படம் அன்று எடுத்ததாகும்.
அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் நான் நிகழ்த்திய முதலாவது வானொலி உரை அக்காலப்பகுதியில் மணிவிழாக்கண்ட நால்வரைப்பற்றியதாக இருந்தது என ஏற்கனவே பதிவுசெய்திருக்கின்றேன். அவர்கள் இளங்கீரன், கே.டானியல், அகஸ்தியர், மல்லிகை ஜீவா.
பேராசிரியர் இலியேசர் நிகழ்ச்சித்தயாரிப்பாளராக இருந்த 3 EA வானொலியில் ஒலிபரப்பான அந்த நீண்ட உரையை பதிவு செய்து கொழும்பில் நண்பர் ராஜஸ்ரீகாந்தன் ஊடாக குறிப்பிட்ட ஒலிநாடாக்களை இலங்கைக்கு அனுப்பினேன். இளங்கீரனிடம் அதனைச்சேர்ப்பிக்கச்சென்ற ராஜஸ்ரீகாந்தன் எதிர்பாராத விதமாக இளங்கீரனின் உறவினர் ஒருவரின் ஜனாஸாவிலும் கலந்துகொள்ள நேரிட்டது. அச்சமயம் இளங்கீரன் நீர்கொழும்பில் குடும்பத்தினருடன் வசித்தார். ஜனாஸா முடிந்ததும் ராஜஸ்ரீகாந்தன் திடீரென்று நீர்கொழும்பு வந்த நோக்கத்தை இளங்கீரன் கேட்கிறார்.
ராஜஸ்ரீகாந்தனும் அந்த இழப்பு நடந்த வீட்டில் தயங்கித்தயங்கி தான் வந்த காரணத்தைச்சொல்லி குறிப்பிட்ட ஒலி நாடாவை நீட்டியுள்ளார். உறவினரின் மறைவினால் சோர்வுற்றிருந்த இளங்கீரன் உற்சாகமாகி, வீட்டுக்கு வந்திருந்தவர்களையெல்லாம் வட்டமாக அமரச்செய்து அந்த ஒலி நாடாவை வானொலியில் ஓடவிட்டு செவிமடுத்து என்னைப்பற்றி வந்தவர்களுக்கெல்லாம் சொல்லத்தொடங்கிவிட்டாராம். இந்த சுவாரஸ்யத்தை ராஜஸ்ரீகாந்தன் எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் பதிவுசெய்துள்ளார். இளங்கீரனும் அவ்வப்போது எனக்கு கடிதங்கள் எழுதுவார். எனது கடிதங்கள் தொகுப்பில் இடம்பெற்றள்ள அவரது கடிதமே சற்று நீளமானது. இளங்கீரன் அந்திமகாலத்தில் நோயுற்று படுக்கையிலிருந்தவேளையில் அவரைப்பார்க்க வந்த எழுத்தாளர்கள் அவருக்கு பாற்கஞ்சியை பருக்கினார்களாம். எனக்கு அந்தப்பாக்கியமும் கிட்டவில்லை என்பதை கண்ணீருடனேயே இங்கு பதிவுசெய்கின்றேன். அவர் மறைந்த செய்தியை அறிந்து இலக்கிய நண்பர்கள் ஊடாக எனது அனுதாபத்தை அவரது குடும்பத்திற்குத் தெரிவித்தேன்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் 1997 இல் இலங்கை சென்றபோது நீர்கொழும்பில் பெரியமுல்லை என்ற இடத்தில் நானும் அம்மாவும் அவரது வீட்டைத்தேடினோம். அவரது குடும்பம் கொழும்புக்கு இடம்பெயர்ந்த தகவல் கிடைத்தது. அன்று முதல் இளங்கீரனின் மகன் மீலாத் கீரனையும் தேடினேன். எனக்கு சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. இலங்கையில் 2011 தொடக்கத்தில் நாம் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின்போதாவது மீலாத்கீரனை பார்த்துவிட முயன்றேன். எப்படியோ அவரைத்தொடர்புகொண்டு அழைத்தேன். அவரும் மின்னலாக வந்து என்னைச்சந்தித்து உரையாடிவிட்டு மின்னலாகச்சென்றுவிட்டார். இளங்கீரன் எனக்கு மட்டுமல்ல பல எழுத்தாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் ஒரு தந்தையாகத்தான் வாழ்ந்தார். அவர் எம்மிடம் விட்டுச்சென்றிருப்பது அவரது குடும்ப வாரிசுகளும் அவரது நூல்களும் நினைவுகளும்தான்.