கவிதை: எல்லோரும் பொங்கி நிற்போம் !

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

புத்துணர்வு புதுக்கருத்து
புறப்பட்டு வந்திடட்டும்
பொங்கலிட்டு மனம்மகிழ்ந்து
புதுப்பொலிவு பெற்றிடுவோம்
பொறுமையெனும் நகையணிந்து
பொங்கிநின்று மகிழ்ந்திடுவோம்
இறைநினைப்பை மனமிருத்தி
எல்லோரும் பொங்கிநிற்போம் !

குறையகன்று ஓடிவிட
இறைவனைநாம் வேண்டிடுவோம்
நிறைவான மனதுவரும்
நினைப்புடனே பொங்கிடுவோம்
துறைதோறும் வளர்ச்சிவர
துடிப்புடனே உழைப்பதென
மனமெண்ணி யாவருமே
மகிழ்வுடனே பொங்கிநிற்போம் !

சாந்தியொடு சமாதானம்
சகலருமே பெற்றுவிட
சந்தோஷம் வாழ்வினிலே
சகலர்க்கும் நிலைத்துவிட
மழைபொழிந்து பூமியெங்கும்
பயிர்செழித்து வளர்ந்துவிட
வழிவகுக்க இப்பொங்கல்
வாய்துவிட பொங்கிநிற்போம் !

பால்பொங்கி வருவதுபோல் பண்புபொங்கி வரவேண்டும்
பச்சரிசி சிரிப்பதுபோல் பலமனங்கள் விரியவேண்டும்
சுவைபயக்கும் சர்க்கரையாய் சுகங்கள்பல வரவேண்டும்
இவையாவும் வாழ்வினிலே இருக்கவெண்ணிப் பொங்கிடுவோம் !

புலம் பெயர்ந்த நாட்டினிலும்
பொங்கல் பொங்கி மகிழ்ந்திடுவோம்
நலந்திகழும் நாளாக நாமெண்ணிபொங்கிடுவோம்
நிலம் பெயர்ந்து போனாலும்
நெஞ்சில் பொங்கல் நிறைத்துவைத்து
உளம் மகிழக் கூடிநின்று
உவகைபொங்கப் பொங்கி நிற்போம் !

எல்லோரும் இன்பமுற இப்பொங்கல் அமைகவென
நல்லெண்ணம் மனமிருத்தி நாம்பொங்கல் பொங்கிடுவோம்
பொல்லாத குணமெல்லாம் போயகல வேண்டுமென்று
எல்லாமாய் இருக்கின்ற இறைவனைநாம் வேண்டிநிற்போம் !

 

jeyaramiyer@yahoo.com.au