சமூகத்தில் நடக்கின்றவற்றை படம்பிடிக்கும் கருவியாக எழுத்தாளன் செயற்படுகின்றான். அந்த வகையில் இலக்கியத்தின் கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் என்ற பல்வேறு தளங்களிலும் செயல்படும் உ. நிசார் தன் எளிமையான எழுத்துக்களினூடாக வாசகரைக் கவர்ந்தவர். சமூகம் சார் சிறுகதைகள் இவரது ஆளுமைக்கு கட்டியம் கூறுவனவாக அமைந்திருக்கின்றன. இதுவரை 19 நூல்களை வெளியிட்டிருக்கும் இவரது 20 ஆவது நூலாக பூவிதழும் பூனிதமும் என்ற நூல் 09 சிறுகதைகளை உள்ளடக்கியதாக 96 பக்கங்களில் பானு வெளியீட்டகத்தின் மூலம் வெளிவந்திருக்கின்றது.
பூவிதழும் புனிதமும் (பக்கம் 13) என்ற சிறுகதை பிரிந்து போன காதலின் சோகத்தை சொல்லி நிற்கின்றது. தன்னிடம் படித்த மாணவி அமீனாவைக் காதலித்ததற்காக ரானா சேர் அமீனாவின் சகோதரனால் தாக்கப் படுகின்றார். பின் அந்த ஊர் எம்பியின் சூழ்ச்சியால் ரானா சேருக்கு தனது சொந்த ஊருக்கே இடமாற்றம் கிடைக்கின்றது. அதற்கிடையில் அமீனாவுக்கு வேறொரு இடத்தில் திருமணமாகி அவள் கணவனுடன் சிங்கப்பூருக்குச் செல்கின்றாள். ஆனால் அவளது மனதில் ரானா சேர் தன்னை ஏமாற்றிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டதான எண்ணம் வலுப் பெறுகின்றது.
பல வருடங்கள் கழிந்த நிலையில் இருவரும் எதேச்சையாக மலேசியாவில் சந்தித்து தம் சோகங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். அமீனாவின் கணவன் விபத்தொன்றில் இறந்துவிட்டதாகவும், அவனது சொத்துக்களில் அமீனாவுக்கு பங்கு கொடுக்காமல் தற்போது அமீனா தாயுடன் வந்து தங்கியிருப்பதாகவும் அறியக் கிடைக்கின்றது. தன்னால் அவளது வாழ்வு கருகிவிட்டதை அறிந்த பின்பு ரானா சேருக்கு கவலை மேலிடுகின்றது. அவரும் அதுவரை மணமுடித்திருக்கவில்லை. ஆதலால் மீண்டும் அமீனாவை மணமுடிக்க சம்மதம் கேட்கின்றார். அதற்கு அமீனா கூறும் கூற்றிலிருந்து காதலின் புனிதம் உணர்த்தப்படுகின்றது.
`நான் ஆரம்பத்துல ஒங்கள காதலிச்சேன். அன்பு வச்சேன். பாசமா இருந்தேன். எனக்காக நீங்க அனுபவிச்ச கஷ்ட நஷ்டங்களயும் கேட்டதிலிருந்து அந்தக் காதல், அன்பு, பாசம் எல்லாம் இன்னும் ஆழமா மனசுல பதிஞ்சிட்டுது. அந்தக் காதலில, அன்பில, பாசத்தில பூவிதழ் ஒண்டுல உள்ள புனிதத்த இப்ப நான் உணர்ரேன். நாங்க கலியாணம் கட்டி கணவன் மனைவியா வாழப் போனா அந்தப் பூவிதழ் உதிர்ந்து அதுட புனிதம் மாசடைந்து போகலாம்’.
அன்பளிப்பு (பக்கம் 25) என்ற சிறுகதையில் ஆலிம்ஷாவின் வாழ்க்கை பற்றியும் இன்றைய சமுதாயப் போக்கு பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. இன்று இறந்தவர்களின் பெயரில் கத்தம் கொடுப்பது சரியா பிழையா என்ற வாதம் நடந்துகொண்டிருக்கின்றது. அது எப்படியிருந்தாலும் அவ்வாறான நிகழ்வு இடம்பெற்றால் ஆலிம்ஷாவுக்கு பணம் கொடுப்பது வழமை. அவ்வாறு ஒரு மரண வீட்டிற்கு அழைக்கப்பட்டு அனைத்து பொறுப்புக்களும் ஆலிம்ஷாவுக்கு கொடுக்கப் படுகின்றது. அன்றைய வருமானத்துக்கு வழிவந்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு அனைத்து வேலைகளையும் முழுமனதோடு செய்கின்றார். ஆனால் இறுதியில் யாருமே அவருக்குரிய கொடுப்பனவைக் கொடுக்கவில்லை என்பதாக கதை நிறைவடைகின்றது. இன்று பள்ளிவாசலில் பணிபுரிபவர்களின் நிலை இதுதான். இதை மாற்றியமைக்க தனவந்தர்களின் உதவி தேவை என்பதை இக்கதை உணர்த்தி நிற்கின்றது.
பெற்றது குற்றம் (பக்கம் 67) என்ற சிறுகதை தாய்ப் பாசத்தையும், பிள்ளைகளின் வேஷத்தையும் பறைசாற்றுகின்றது. உம்முனா என்ற வயோதிப மாதுவின் எண்ணங்;கள் தன் பிள்ளைகளைச் சுற்றியே வலம் வருகின்றது. ஆனால் பிள்ளைகள் மூவரும் தந்தையின் இறப்புக்குப் பின்னர் தாயிடம் பரிவு காட்டி, நடித்து அவளிடமிருந்து சொத்துக்களை எல்லாம் அபகரித்துக்கொண்டு கடைசியில் அவளை கைவிடுகின்றனர். இறுதியில் அவள் வளர்த்த பூனைக்குட்டி மாத்திரமே அவளுடன் துணைக்கு வருகின்றது. அவள் தற்போது பஸ் தரிப்பு நிலையத்தில் தனியாக இருப்பதாக சொல்லப்பட்டதிலிருந்து பிள்ளை மனம் பித்து என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.
சுவர்க்கமும் நரகமும் (பக்கம் 88) என்ற கதை சுவாரஷ்யம் மிக்கதாக இருக்கின்றது. அதை வாசித்துக்கொண்டு போகையில் எம்மையும் அறியாமல் சிரிப்பு மேலோங்குவது கதையோட்டத்தின் சிறப்பாகக் கொள்ள முடியும். ஆப்தீன் ஹாஜி என்ற பாத்திரத்தினூடாக சுவர்க்கமும் நரகமும் நகைச்சுவையாக சொல்லிக் காட்டப்படுகின்றது. அதாவது அவர் வயது போன காலத்தில் வாய் உளறிக்கொண்டு இருக்கின்றார். மரணித்துவிட்ட அவரது இனசனங்கள் தன்னை சுவர்க்கத்துக்கு அழைத்துப் போவதற்காக காத்துக்கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கு உட்கார இட வசதி வேண்டும் என்பதால் முன்வாசல் சுவரை இடிக்கும்படியும் உத்தரவிடுகின்றார்.
அப்போது அங்கு வந்த அவரது மனைவி சொர்க்கத்துக்கு அல்ல அங்கொடைக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறுவதாக இக்கதை நகர்ந்து செல்கின்றது. அத்துடன் அவர் சம்பாதிக்கும் காலத்தில் மார்க்கத்துக்கு முரணான பல காரியங்கள் செய்ததாகவும் அதிலிருந்து வரும் பணத்தில் நன்மைகள் செய்ததாகவும் சொல்லும் ஆப்தீன் ஹாஜி இதனால் சுவர்க்கம் கிடைக்குமா? நரகம் கிடைக்குமா என்று கனவிலும் அவதிப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
தீய வழிகளில் பணம் சம்பாதித்துவிட்டு அதை நன்மையான காரியங்களுக்காக செலவழிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. நன்மை செய்யுமளவுக்கு தனக்கு வசதியில்லாதபோதும் தீய வழியில் பணம் சம்பாதிப்பதை அடியோடு நிறுத்திவிட வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை இக்கதை மூலம் நன்கு உணர்த்தப்பட்டிருக்கின்றது.
இந்த நூலில் 09 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. மண் வாசனையுடன் கூடிய உரையாடல்கள் மூலம் இந்தக் கதைகளை நூலாசிரியர் நகர்த்தியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயம். சமூகத் தளத்தில் நின்று இலக்கியப் பணிபுரியும் உ. நிசார் அவர்களிடமிருந்து இன்னும் பல படைப்புக்கள் வெளிவருவதற்கு வாழ்த்துக்கள்!!!
நூலின் பெயர் – பூவிதழும் புனிதமும்
நூலின் வகை – சிறுகதை
நூலாசிரியர் – உ. நிசார்
வெளியீடு – பானு வெளியீட்டகம்
விலை – 350 ரூபாய்
poetrimza@gmail.com