ஆய்வு: சங்க இலக்கியத்தில் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்

முனைவர் கோ.வசந்திமாலா, தமிழ்த் துறைத் தலைவர், நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையம்பாளையம்,  கோயபுத்தூர் -பண்டைய தமிழ் மக்களின் பண்பு, நாகரிகம், சமயம், அரசியல், தொழில் முதலியவற்றை அறிவதற்குத் தமிழ் நாட்டிலுள்ள கல்வெட்டுகள் பண்டைய நாணயங்கள் பிறநாட்டார் எழுதி வைத்த நூல்கள் முதலின கருவியாக விளங்குகின்றன. இவற்றைக் காட்டிலும் பண்டைய தமிழ் மக்களின் பண்பினை அறிவதற்கு தமிழ் இலக்கியங்களே சிறந்த சான்றாக அமைகின்றன. உலகம் நல்வழியில் இயங்குவதற்கு பண்பாடு (அ) பண்புடையார் வாழ்தல் மிகவும் பயனுள்ளது.

“பண்புடையார் பட்டுண் டுலகம் அதுவிறெல்
மண்புக்கு மாய்வது மன்”1

என்பது வள்ளுவர் வாய்மொழி. அன்பும் அறனும் எங்கெங்கும் பரவிப் பெருகி வாழும் வாழ்க்கைப் பண்பும் பயனுமாக மிளிர்வது பண்பாட்டின் நோக்கமாகும். தனிமனிதனின் ஒழுக்கமும் பண்பும் மிகவும் இன்றியமையாததாகும். இத்தகையப் பண்பாட்டுப் பதிவுகளை நம் முன்னோர்கள் வடிவமைத்த சங்க இலக்கியங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்வதே ஆய்வின் நோக்கமாக அமைகின்றது

தனிமனிதப் பண்பாடு
பண்பாடு என்பது பண்பட்ட எண்ணமும் சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து திருந்திய நிலையாகும். எல்லோருடைய இயல்புகளும் அறிந்து ஒத்த நன்னெறியில் ஒழுகுபவர் பண்பாடு உடையவர் ஆகின்றார். சங்ககாலத்தில் தனிமனித வாழ்க்கையில் நட்பும், பகையும், விருப்பும், வெறுப்பும், அன்பும், அன்பின்மையும் ஆகிய பல்வேறு உணர்ச்சிகளும் இடம்பெற்றன. ஆனால் சங்கப் புலவர்கள் சமுதாயப் பொதுமைக்காகவும், பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காகவும்  பிறர் பழிதூற்றாமல் இருப்பதற்காகவும் தனி மனிதனின் உயர்ந்த பண்பினையே தேர்ந்தெடுத்துக்கூறியுள்ளனர். இதனையே,

“நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்……”2

என்று குறிப்பிட அறியலாம். நல்வினை செய்யவில்லை என்றாலும் தீவினையைச் செய்யாதீர்கள் என்று தனிமனித பண்பாட்டை சங்க நூல் குறிப்பிடுவதனை அறியமுடிகிறது.

சங்க கால விருந்தோம்பலும் பண்பாடும்
பண்டைய தமிழரின் வாழ்க்கை அறத்தின் அடிப்படையில் அமைந்தது. அறவாழ்க்கையின் முழுமை அன்பு என்ற பண்பால் மேன்மையடைந்தது. அன்பு ஒன்றே அனைத்திற்க்கும் ஆதரமாக அமைந்தது.

அறம், பொருள், இன்பம், வீடுபேறு அடைதல் நூற்பயன் என்பர். இந்நான்கினுள் அறம் வலிமையுடையதாகக் கருதப்படுகின்றது. இவ்வறத்தினை மேற்கொள்ள பொருள் வேண்டப்படுகின்றது. இப்பொருளைத் தேடுவதற்குத் தலைவன் தலைவியைப் பிரிந்து பொருளீட்டும் தன்மையும் அப்பொருளைக் கொண்டு தலைவி விருந்து  என்னும் அறம் புரிந்த பண்பும் சங்கப்பாடல்களில் புலவர்கள் பதிவு செய்துள்ளனர். சங்க கால மக்கள் பசித்துவரும் புதியவர்களுக்காகச் சிறந்த உணவை நாள்தோறும் அளித்தனர். .

“கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கம்
மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”3

என்று தொல்காப்பியர் சங்க காலத் தலைவியின் மாண்புகளில் விருந்து புறந்தருதலைத் ஒரு செயலாகக் குறிப்பிடுவதைக் காணலாம். விருந்து செய்தல் வேண்டி சிறந்த பொருளை ஈட்டி வருதல் தலைவனுக்குரிய கடமையாக அமைந்தது. இதனை,

“செழுநகர் நல்விருந்து அயர்மார் ஏமுற
விழுநிதி எளிதினின் எய்துக தில்ல
கல்பிறங் காரிடை விளங்கிய
சொல்பெயர் தேஎத்த சுரனிறந்தோரே”4

அகநானூற்று பாடல் வழி சங்க கால மக்கள் தங்களுடைய வாழ்க்கைகாக மட்டுமல்லாது விருந்தினருக்கு உணவு கொடுப்பதற்காகப் பொருளீட்டச் செல்லுதல் அக் கால மக்களின் தலைச் சிறந்த பண்பாட்டுப் பதிவாக அமைகின்றது. இதனையே வள்ளுவர்.

“செல்விருந் தோம்பி வருவிருந்து பார்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.”5

விருந்தோம்பல் சிறப்பினை குறள் வழி தெளிவுப்படுத்துகிறார்.

பண்பட்ட நாகரிகப் பதிவுகள்
விருந்தினர் தன் இல்லதிற்கு வரும்பொழுது தலைவி தலைவனோடு ஊடியிருந்த பொழுதும் அதை மறைத்து முறுவல் கொண்ட முகத்தினராய் இருந்தனர் என்பதை நற்றிணைப் பாடலில் தமிழரின் பண்பட்ட நாகரிக வாழ்க்கையை எடுத்துரைக்கிறது. இதனை,

“அந்துகில் தலையில் துடையினள் நப்புலத்து
அட்டி லோளே அம்மா அரிவை
எமக்கே வருதல் விருந்தே சிவப்பான்று
சீறுமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம்காண் கம்மே”6

இப்பாடல் வழி அறியமுடிகிறது. அளவற்ற உணவுப் பொருளை விருந்தினருக்குப் படைத்தைச் சங்க பாடல்கள் தெளிவாகிறது.

தமிழரின் காதல் வாழ்க்கையில் – பண்பாட்டுக் கூறுகள்
தமிழருக்குக் காதலும் வீரமும் இரு கண்களாக விளங்கின. சங்க காலத்  தமிழர் ‘களவு’ வாழ்க்கையையும் ‘கற்பு’ வாழ்க்கையையும் மேற்கொண்டொழுகினர். இதில் தாங்கள் மேற் கொண்ட களவு வாழ்க்கையிலும் நமது பண்பாட்டினைப் பதிவு செய்துள்ளனர்..

தலைவன் மீது காதல் கொண்ட தலைவி தன் தலைவனை பற்றியும் அவனது அன்பைப் பற்றியும் அதன் அளவு எத்தகையது என்பது பற்றியும் குறிப்பிடும் இடங்கள் இன்னும் நாம் கண்டு வியப்புறும் படி அமைந்துள்ளது சிறப்பாகும். தலைமகள் தோழியிடம் தலைவனின் அன்புடைமையை வற்புறுத்தும் சூழலில் அக்காதல் நிலத்தைவிடப் பரந்ததாக வானை விட உயர்ந்ததாக நீரை விடஆழமானதாகத் திகழ்கின்றதெனக் கூறித் தன் அன்பின் அளவை வெளிப்படுத்துகிறாள்.

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் புக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”7

இச்சங்கப்பாடலால் அறியலாகின்றது.

 

நீண்ட நாள் களவுமேற் கொள்ளுதல் ஆகாது விரைவாகமணமுடித்துக் கொள்ளுதல் நல்லது என்று இடித்துரைக்கும் தோழியின் கூற்றால் ஊரில் அலர் ஏற்படும் என்று கருதும் தோழியின் மன உணர்வும் தமிழர்களின் பண்பட்ட வாழ்வும் புலனாகின்றது. இதனை

“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாகங்கியவள்
உயிர்த்தவச் சிறிது காமமோ பெரிது”8  

என்று மலைச் சாரலில்  சிறிய கிளையில் பெரிய பலாப்பழம் தொங்குவதுபோல் தலைவியின் உயிர் மிகச் சிறியது. இவள் கொண்ட காதலோ பெரியது என்று கூறி வரைவு மேற்கொள்ளாமல் களவொழுக்கத்திலே வாழ்தல் உயிர்வாழ்க்கைக்குத் துன்பமானது என்பதனை உணர்த்தி விரைவில் தலைவியை மணம்செய்து கொள்ளுமாறு தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள். இதன் வழி களவு வாழ்க்கையை கற்பு  வாழ்வாக மாற்றிக் கொள்ளும் சங்க கால மக்களின் பண்பினை அறியமுடிகிறது.

சங்க கால மகளிரின் அரசியலறிவும் பண்பாடும்
சங்க காலத்தில் ஆண்கள் பெண்கள் என்ற ஏற்றத்தாழ்வு அற்ற மனநிலையுடன் வாழ்ந்தனர். உழைப்பிற்கும் ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் தரப்பட்ட சங்க காலத்தில் பெண்கள் உரிமையுடன் வாழ்ந்தனர். பெண்கள் கல்வியிலும் புலமையிலும் சிறந்து விளங்கினர். அரசர்களுக்கே அறிவுரை கூறும் பண்பட்டவர்களாகவும் திறமையுடையவர்களாகவும் விளங்கினர். சங்க காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்களுள் தலைசிறந்தவர் ஒளவையார். அவர்அதியமானிடம் கொண்ட பற்றே அவரைத் தொண்டைமானிடம் தூதுவராகச் செல்லத் தூண்டியது. போரை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அவரது நல்லபண்பே சந்து செய்விதத்து என்ற உண்மையை அவரது பாடலில்.

“இவ்வே பீலி  யணிந்து மாலை சூட்டிக்
கண்டிர னோன்காழ் திருத்தி நெய் யணிந்து
கடியுரை பியனக ஒவ்வே யவ்வே
பகைவர் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுரைக் குற்றில் மாதோ வென்றும்
உண்டாயிற் பதங்கொடுத்துத்
தில்லாயி னுடனுண்ணும்
இல்லோ ரொக்கற் றலைவன்
அண்ணலெங் கோமான் வைநுதி வேலே”9

அறியலாகின்றது. ஒளவையார்  தொண்டைமானிடம் சென்று போரை தடுத்து நிறுத்திய அரசியல் தூது உலக இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.

அறம் போற்றிய அரசர்கள் அக்காலத்தில் வாழ்தனர் என்பதும் தொண்டைமான் போரை கைவிட்டு அதியனின் வீரத்தை உணர்ந்தான் எனில் பகைவன் என்னும் திறமையும் வீரமும் மிக்கவன் என்பதனை ஏற்றுக்கொள்ளும் தமிழரின் தனிபட்ட பண்பாட்டு உணர்வின் வெளிப்பாட்டை சுட்டிக்காட்டிய பண்பட்ட பெண்கள் வாழ்ந்த பெருமைக்குறியது நம் நாடு என்பது புலனாகிறது.

போர் புரிதலில் – நாகரிகமும் பண்பாடும்
சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் போருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் போரிடுவதற்குத் தனிப்பட்ட அறம் மேற்கொண்டனர். திடீரென்று போர் மேற் கொண்டு பகை மன்னருக்குள் நெருக்கடியை ஏற்படுத்தாமல்    போரில் சில விதி முறைகளையும் அறப்பண்பையும் பின்பற்றி வாழ்தனர். போரிடும்பொழுது  முன்னரே அறிவித்தனர் யார் யாரெல்லாம் பாதுகாப்பான இடம் செல்ல வேண்டும் என்பது முரசறைந்து அறிவிக்கப்பட்டதைத் தமிழரின் பண்பட்ட நாகரீகத்தினைப் புறநானூறு காட்டுகிறது. இதனை,

“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்னர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர் பெறாய தீரும்
எம் அம்பு கடிவிடதும் நும்அரண் சேர்மின்”10

இதில் பசு அந்தணா பெண்கள் பிணியுடையோர், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் ஆகியவர்கள் பாதுகாப்பான இடத்தை அடைய அறிவுறுத்தப்பட்டனர்.  இதன் மூலம் தமிழர்களின் பண்பாட்டின் உயர்ந்த நிலை விளங்குகின்றது.

காலமறிந்து போர் புரியும் பண்பு
மன்னர்கள் தாங்கள் நினைத்தபோதெல்லாம் போர்புரிதல் மரபன்று என்று கருதினர் எனவே கார், கூதிர், முன்பனி, பின்பனி,  வேனில்,  இளவேனில் என ஆறுவகையான பருவங்களைப் பகுத்துக்கொண்டு வாழ்ந்தனர் இதில் வேனிற்பருவமும் கூதிர் பருவமும் போர்க்குறிய பருவங்களாகக் கருதினர். மன்னர்கள் பாசறை அமைத்துப் போர் புரிந்தனர். இதனை,   

“கூதிர் வேனில் என்றிரு பாசறைக்
காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும்”11

என்ற தொல்காப்பிய நூற்பா வழி அறியலாம். நெடுநல்வாடை கூதிர் பாசறை அமைத்துத்தங்கியிருந்த பாண்டியநெடுஞ்செழியன் போர் செயல்களைக் குறித்தும், வேனிற் பாசறை இயல்பினை எடுத்துரைக்கிறது. போரின் விளைவாக ஆட்சிக் குழப்பமோ பஞ்சமோ மக்கள் மேற்கொள்ளும் தொழிலுக்கு இடையுறோ உண்டாகக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

எனவே தான் உழவுத்தொழில் செய்வோர் அறுவடையை முடித்து ஓய்வாகஇருக்கும் கூதிர் பருவம் முதல் வேனிற் காலம் வரையுள்ள இடைக்காலத்தைப் போர் புரிவதற்கு ஏற்ற காலமாகத் தேர்ந்தெடுத்தனர். இதன் வழி சங்க கால மக்கள்வீரத்தை வெளிப்படுத்தும் பொழுதும் பண்பாட்டையும் அறத்தையும் போற்றி வாழ்ந்தனர் என்பதனை அறியலாகின்றது.

சங்க கால மக்கள் தாங்கள் வாழ்ந்த வாழ்வின் மூலம் மிக உயந்த பண்பாட்டினை இவ்வுலகுக்கு அளித்துள்ளனர் என்பதனை அகச்சான்றுகள் கொண்டு அறிய முடிகின்றது. அக  – புற வாழ்வின் வழி தமிழர் பண்பாட்டை உணர்த்தியுள்ளனர். பகைவனின் வீரத்தையும் ஒப்புக்கொள்ளும் உயர் தனிப்பண்பு தமிழர் பண்பு என்பது புலனாகிறது.

குறிப்புகள்
1. திருக்குறள்.996
2. புறநானூறு. பா. 195.
3. தொல்.கற்பியல், நூ.11
4. அகம், பா. 205
5. திருக்குறள்.86
6. நற்றிணை, பா.120
7. குறுந்தொகை. பா.2
8. கபிலர், பா.08
9. புறநானூறு, பா.95
10. புறநானூறு,  பா. 9
11. தொல்காப்பியம்.

rvsuryaa20@gmail.com

*கட்டுரையாளர்   – முனைவர் கோ.வசந்திமாலா, தமிழ்த் துறைத் தலைவர், நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையம்பாளையம்,  கோயபுத்தூர் –