ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றிய நாற்பது முற்போக்கு ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யும் 327 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் கடந்த (2016) ஆண்டு இறுதியில் கொழும்பில் வெளியிட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பு நூலிற்கான செயற்திட்டங்கள் சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பில்தான் மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதை மின்னஞ்சல் வாயிலாக அறிந்தேன். நீர்வைபொன்னையன், தேவகௌரி, குமரன் பதிப்பகம் குமரன் ஆகியோர் அவ்வப்போது தொடர்புகொண்டு சில முற்போக்கு எழுத்தாளர்களின் விபரங்கள், படங்களும் கேட்டிருந்தனர். கேட்டவற்றை அனுப்பிக்கொண்டிருந்தேன். ஆயினும் நூல் வெளிவருவதில் தொடர்ந்தும் தாமதம் நீடித்துக்கொண்டிருந்தது. இதற்கிடையில் நீர்வைபொன்னையனும் அவுஸ்திரேலியா சிட்னிக்கு வந்து திரும்பியிருந்தார்.இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து இயங்கிய சில எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இடம்பெறமாட்டார்கள் என்பதை தெரிந்துகொண்ட கவிஞர் மேமன்கவியும் பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் தமது கடிதத்தில் இத்தொகுப்பில் புறக்கணிக்கப்பட்ட சில எழுத்தாளர்களின் பெயர்களையும் சுட்டிக்காண்பித்திருந்தார். முகநூல்களிலும் மின்னஞ்சல்களிலும் சில வாரங்கள் ஈழத்து இலக்கியவாதிகளிடத்திலும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களிடமும் மேமன்கவியின் கடிதம் பேசுபொருளாக இருந்தது. இந்த சர்ச்சைகளும் நூல் வெளியீட்டில் தாமதம் தருகின்றதோ என அந்நியதேசத்திலிருந்து நான் யோசித்தேன். திடீரென்று ஒரு மின்னஞ்சல், தொகுப்பில் இடம்பெறவிருக்கும் முற்போக்கு எழுத்தாளர்களின் மனைவிமார், பிள்ளைகள் பெயர் விபரங்களும் கேட்டிருந்தது. அதற்கான பதிலை மின்னஞ்சலில் தெரிவிக்காமல், தொலைபேசி ஊடாகவே சொல்ல நேர்ந்தமைக்கு, குறிப்பிட்ட தகவல்கள் விவகாரங்களிற்கு அழைத்துச்சென்றுவிடும் என்பதும் ஒரு காரணம். 2014 ஆம் ஆண்டு முதல் தாமதமாகவிருந்து ஒருவாறு இலங்கை முற்போக்கு எழுத்தாளர்கள் நூல் கடந்த ஆண்டு இறுதியில் கொழும்பில் வெளியிடப்படுவதாக பத்திரிகைச்செய்தியில் பார்த்தேன். குறிப்பிட்ட நூல் வெளிவருவதற்கு முன்னர், என்னிடம் கட்டுரைகள், படங்கள் கேட்டவர்களிடமிருந்து அதன்பின்னர் எதுவித தகவலும் இற்றைவரையில் இல்லை. நூலை அச்சிட்டவரிடமிருந்தும் தகவல் இல்லை. சரி…, காரியம் முடிந்துவிட்டது. இனி அவர்களுக்கு என்ன கவலை…? என்று என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அந்த நூலில் என்னைப்பற்றிய கட்டுரை எழுதியவர் வசந்தி தயாபரன். அவருடன் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு ஒரு பிரதியைபெற்று, அவுஸ்திரேலியா வந்த எனது தங்கை ஊடாகத் தருவித்துப்படித்தேன்.இந்த நூலுக்கும் எனக்குமிருந்த சிறிய உறவின் முன்கதைச்சுருக்கம் அவ்வளவுதான். அருமையான தொகுப்பு. ஆனால், மருதூர்க்கொத்தன், மேமன்கவி, பத்மாசோமகாந்தன், அந்தனிஜீவா ஆகியோர் பற்றி எவரும் எழுதவில்லை என்பதும், இதன்தொகுப்பாசிரியர் அவர்களை இணைத்துக்கொள்ளாததும் வருத்தமளிக்கிறது. இவர்கள் நால்வரும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து பயணித்தவர்கள் என்பதற்கு நானும் ஒரு சாட்சி. எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது, 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி மருதானையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுதான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். அதனால் நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலம் வரையில் இச்சங்கம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
நான் எழுதத்தொடங்கிய 1972 ஆம் ஆண்டின் பின்னரே மல்லிகை ஜீவாவின் தொடர்பினால் இச்சங்கத்தில் உள்வாங்கப்பட்டேன். 1975 ஆம் ஆண்டு சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய ஒருமைப்பாடு மாநாடு நடத்தப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே சங்கத்தின் தேசிய சபை உறுப்பினராகவும், நீர்கொழும்பு கிளைச்செயலாளராகவும் 1977 முதல் 1986 இறுதிவரையில் (அவுஸ்திரேலியா வரும் வரையில்) கொழும்புக்கிளைச்செயலாளராகவும், சங்கத்தின் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தின் இணைப்பாளராகவும் இயங்கியிருக்கின்றேன். அதனாலும் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களின் அரவணைப்பாலும் இயங்கியமையால் சங்கம் எனது மற்றுமொரு தாய்வீடு என்றே எனது பத்திகளிலும் நேர்காணல்களிலும் குறிப்பிட்டு வந்துள்ளேன். நான் அவுஸ்திரேலியாவுக்கும் சங்கத்தின் நீண்ட காலச்செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் கனடாவுக்கும் புலம்பெயர்ந்தோம். சோமகாந்தன், ராஜஶ்ரீகாந்தன் எம்முடன் இயங்கிய ஆசிரியர் மாணிக்கவாசகர் ஆகியோர் மறைந்தனர். பேராசிரியர் கா. சிவத்தம்பி, நீர்வைபொன்னையன், மல்லிகை ஜீவா, முகம்மது சமீம் ஆகியோரால் இணைந்து இயங்கமுடியாத நிலைவந்திருக்கிறது. அதனால், இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் தோன்றியிருக்கிறது. தொடர்ச்சியாக இயங்கிய இம்மன்றம் சில நூல்களையும் பதிப்பித்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் முற்போக்கு எழுத்தாளர்களை கொழும்பில் கொளரவித்து பாராட்டியுமிருக்கிறது இம்மன்றம். அவ்வேளையிலும் தகவல் அறிந்து, ஒரு விரிவான கட்டுரை எழுதினேன். ஜெர்மனி தேனீ, கனடா பதிவுகள், அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணையத்தளங்களிலும், யாழ்ப்பாணம் ஜீவநதியிலும் வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவல்களின் பின்னணியிலிருந்தே, இந்த நூலில் புறக்கணிக்கப்பட்டிருப்பவர்களுடைய சங்கத்துடனான பங்களிப்புகளை அவதானிக்கின்றேன். மருதூர்க்கொத்தன் சங்கத்துடன் இணைந்திருந்த மூத்த படைப்பாளி. பல முற்போக்கான மண்வாசனை கமழும் சிறுகதைகளை வரவாக்கியவர். மேமன் கவியின் முதல் கவிதைத்தொகுப்பு யுகராகங்கள், நுஃமானின் முன்னுரையுடன் சங்கத்தின் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் வெளியானது. திருமதி பத்மாசோமகாந்தன், சங்கத்தின் பணிகளில் தமது கணவருடன் பக்கத்துணையாக இயங்கியவர். இவர்களின் கொழும்பு, யாழ்ப்பாணம் இல்லங்களில் சங்கத்தின் செயற்குழுக்கூட்டங்கள் நடந்துள்ளன. பல முற்போக்கான சிறுகதைகள் எழுதியிருக்கும் பத்மாசோமகாந்தன், தொடர்ச்சியாக இலக்கியப்பரப்பில் அயற்சியின்றி இயங்கிய பெண்ணிய ஆளுமை.
அந்தனிஜீவா அவ்வப்போது முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டாலும் எம்முடன் இயங்கியவர். தவிர்க்க முடியாதவர். தொகுப்பாளர் நீர்வைபொன்னையன், என்னிடம் தேவகௌரி ஊடாக கேட்டதற்கு இணங்க எஸ். அகஸ்தியர், காவலூர் ராசதுரை ஆகியோரைப்பற்றிய கட்டுரைகளை எழுதிக்கொடுத்திருந்தேன். அவற்றுடன் மேலும் 38 பேரைப்பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சி.வி.வேலுப்பிள்ளை, கே. கணேஷ், அ.ந. கந்தசாமி, கே. டானியல், கவிஞர் பசுபதி, அகஸ்தியர், டொமினிக்ஜீவா, சுபைர் இளங்கீரன், செ. கணேசலிங்கன், என்.கே. ரகுநாதன், பிரேம்ஜி ஞானசுந்தரன், நீர்வைபொன்னையன், காவலூர் ராசதுரை, எச்.எம்.பி. மொஹிதீன், கா. சிவத்தம்பி, முகம்மது சமீம், க. கைலாசபதி, நா. சோமகாந்தன், சில்லையூர் செல்வராசன், சுபத்திரன் தங்கவடிவேல், கவிஞர் முருகையன், சி. தில்லைநாதன், ஆப்டீன், ஏ. இக்பால், யோ. பெனடிக்ற் பாலன், சபா. ஜெயராசா, இ.சிவானந்தன், செ.யோகநாதன், தெணியான், மருதூர்க்கனி, செ. கதிர்காமநாதன், மு.கனகராசன், கே.விஜயன், சி.மௌனகுரு, எம்.ஏ.நுஃமான், சாருமதி க. யோகநாதன், ஐ. சாந்தன், ராஜஶ்ரீகாந்தன், திக்குவல்லை கமால், முருகபூபதி ஆகியோர் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ள இந்த நூலுக்கு செல்வி திருச்சந்திரன் முகவுரையும் நீர்வை பொன்னையன் தொகுப்புரையும் எழுதியிருக்கிறார்கள்
.
“இந்நூலில் பேசப்படும் இலக்கியப்படைப்பாளிகளில் சிலர் இடதுசாரிக்கட்சிகளின் அங்கத்தவர்களாக இருந்தது வரலாற்றின் ஒரு முக்கிய நிகழ்வு என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்” எனத்தெரிவிக்கும் செல்வி திருச்சந்திரன், ” இந்த முற்போக்குச்சிந்தனையை முன்வைக்கும் இலக்கியப்படைப்பாளிகள் எழுத்தாற்றலுடனும் சிருஷ்டிகளுடனும் மாத்திரம் ஒதுங்கியவர்கள் அல்லர். இவர்கள் சமூக அரசியல் செயல்பாட்டாளர்களாகவும் இயக்கங்களை தோற்றுவித்தவர்கள். கொண்டு நடத்தியவர்கள். பத்திரிகை, சஞ்சிகைகளை இயக்கியவர்கள். தொழில் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவும் என்று பல நிலைகளில் இயங்கி உள்ளார்கள்.” எனவும் பதிவுசெய்கிறார்.
இக்கருத்து மிகவும் சரியானது. தெளிவானது.
இலங்கையில் இடதுசாரிச்சிந்தனைகளை வளர்ப்பதிலும் முற்போக்கு இலக்கியத்தை முன்னெடுப்பதிலும் கடினமாக உழைத்தவர்களும், படைப்பிலக்கியத்திலும் விமர்சன ஆய்வுத்துறையிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியவர்களும் கவிதை, நாடகம், கூத்து, திரைப்படம், மொழிபெயர்ப்பு, இதழியல் துறைகளில் சாதனைகளை நிகழ்த்தியவர்களும் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களில் அ.ந. கந்தசாமி, கவிஞர்கள் பசுபதி, சாருமதி, சுபத்திரன், ஆகியோரை நான் எனது வாழ்நாளில் சந்திக்கவில்லை. இவர்கள் பற்றிய கேள்விஞானமும் இவர்கள் குறித்து மற்றவர்கள் எழுதியவையும்தான் எனது மனப்பதிவுகள். சி.வி.வேலுப்பிள்ளை, கே. கணேஷ், பிரேம்ஜி ஞானசுந்தரன், முகம்மது சமீம் ஆகியோரைப்பற்றி எழுதியிருக்கும் லெனின் மதிவானம் இவர்கள் குறித்து ஆய்வறிவுடன் பதிவுசெய்திருக்கிறார். இலக்கிய உலகம் அறியத்தவறிய பல தகவல்கள் இந்நூலில் விரவிக்கிடக்கிறது. பல ஆங்கில இலக்கியங்களின் பரிச்சயம் மிக்க அ.ந.கந்தசாமி மாந்தருக்கு உதவும் வெற்றியின் இரகசியங்கள் நூலை எழுதியிருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்வு வெற்றிகரமாக அமையவில்லை என்பது நான் அறிந்த தகவல். ஏ. இக்பால், அ.ந. கந்தசாமி பற்றிய அருமையான கட்டுரை எழுதியுள்ளார். அவரது மனக்கண் நாவல் அறிவியல் பண்பு விரிந்துள்ள படைப்பு எனக்குறிப்பிடுகிறார். அத்துடன் அ.ந.க.வின் மதமாற்றம் நாடகம் அவரது மறைவுக்குப்பின்னரும் மேடையேற்றப்பட்ட புகழ்பெற்ற படைப்பு என விதந்துரைக்கிறார். சில்லையூர் செல்வராசன் பற்றிய கட்டுரையை எழுதியிருக்கும் நுஃமான், அவர் பிரதானமாக ஒரு மேடைக்கவிஞர்தான் ( A platform poet) எனக்குறிப்பிடுகிறார். அத்துடன், ‘சேக்ஸ்பியர் ஒரு ஜீவநதி’ என்னும் சில்லையூரின் கட்டுரை சேக்ஸ்பியர் பற்றி தமிழில் வெளிவந்த சிறந்த கட்டுரை எனவும் நுஃமான் பாராட்டுகிறார். ஈழத்து இலக்கிய உலகில் பலராலும் மறக்கப்பட்டுவிட்ட கவிஞர் சுபத்திரன் பற்றிய கட்டுரையை சித்திரலேகா மௌனகுரு எழுதியிருக்கிறார். இலக்கிய வாசகர்களுக்கும் ஈழத்து கவிதைத்துறை பற்றிய ஆய்வுக்கும் பயனுள்ள தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. எம்.ஏ. நுஃமான் பற்றிய வ. மகேஸ்வரனின் கட்டுரை முழுமைபெற்றிருப்பதாகவே உணர்கின்றேன்.
இவ்வாறு இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு கட்டுரைகளும் எழுதப்பட்டவர்களினால் சிறப்படைந்துள்ளன. முற்போக்கு எழுத்தாளர்களின் இலக்கிய பலம் – பலவீனம் பற்றியெல்லாம் பேசுகின்றன. எழுதியவர்கள் ஏனோதானோவென்று எழுதாமல் மிகுந்த அக்கறையெடுத்து, தகவல்களை தேடிப்பெற்று எழுதியிருக்கின்றனர். அதனால் எனது வாசிப்பு அனுபவத்தில் நல்லதொரு தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இதிலிடம்பெற்றுள்ள கட்டுரைகள் பரவலான வாசிப்புக்குச்செல்லும்போதுதான் ஈழத்து இலக்கிய வரலாற்றில் முற்போக்குச்செல்நெறியின் தார்ப்பரியம் ஆழமாக பதிவாகும். தொகுப்பில் நேர்ந்துள்ள தவறையும் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. பிரேம்ஜி ஞானசுந்தரன் பற்றிய விரிவான கட்டுரையை எழுதியவர் லெனின் மதிவானம். பொருளடக்கத்தில் அதனை எழுதியவர் அவர்தான் என்று சரியாக அச்சிட்டவர்கள், நூலின் 88 ஆம் பக்கத்தில் இடம்பெறும் அக்கட்டுரையில் அதனை எழுதியிருப்பது முருகபூபதி என பதிவிட்டுள்ளனர். நூலை தொகுத்தவரும், அச்சிட்டவரும் இந்நூலின் வெளியீட்டில் ஈடுபட்டவர்களும் இந்தத் தவறை இதுவரையில் கண்டு பிடிக்கவில்லையா…? என்ற கேள்விதான் எழுகிறது.முகவுரை வழங்கியிருக்கும் செல்வி திருச்சந்திரன், இறுதியாக முன்வைக்கும் கருத்து அவரை மட்டுமல்ல என்னைப்போன்ற வாசகர்களுக்கும் ஆழ்ந்த சிந்தனையையும் கவலையையும் தருகின்றது. ” இலங்கையில் உள்ள முற்போக்கு எழுத்தாளர்களில், இத்தொகுப்பில் ஒருவராவது பெண்ணாக இல்லையே, இந்தியாவில் தோன்றிய பெண் முற்போக்கு இலக்கியவாதிகளில் ஒரு வீதம் கூட நம்மில் இல்லையா…?” என்ற நியாயமான கேள்வியை அவர் எழுப்பியிருக்கிறார். இடதுசாரி முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து எழுதினால்தான் ஒருவர் முற்போக்கு எழுத்தாளரா…? அமைப்புச்சாராமலேயே எத்தனையோ முற்போக்கான படைப்புகளை தந்தவர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள். முற்போக்கு இலக்கிய முன்னோடிகள், முற்போக்கு இலக்கியத்தில் புனைகதைச்சுவடுகள், முற்போக்கு இலக்கியத்தில் கவிதைச்சுவடுகள், ஈழத்து முற்போக்கு சிறுகதைகள், முற்போக்கு இலக்கிய எழுச்சி: நான்கு முன்னோடி எழுத்தாளர்கள் ஆகிய நூல்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கும் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், அந்த வரிசையில் இந்த நூலையும் வெளியிட்டுள்ளது.
இலக்கிய வாசகர்களுக்கும் பல்கலைக்கழகங்களில் தமிழ் இலக்கிய ஆய்வுத்துறையில் பயிலும் மாணவர்களுக்கும் தமிழ் ஊடகத்துறையினருக்கும் இந்நூல் பயனுடையது. இதனைத்தொகுத்திருக்கும் நீர்வைபொன்னையன் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளை புறம் ஒதுக்கியிருந்தால் மேலும் சிலர் இதில் இடம்பெற்றிருப்பார்கள் என்பது எனது எண்ணம்.
letchumananm@gmail.com
—-0—-