எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும் சங்க இலக்கியங்களாகும். இப் பதினெட்டு நூல்களையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர். அதே போல, சங்க மருவிய காலத்தில் எழுந்த பதினெட்டு நூல்களான திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபங்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகிய தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. இப் பதினெட்டு நூல்களையும் குறிக்கும் நாலடி வெண்பா ஒன்றையும் காண்போம்.
‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுங் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.’
மேலும், இப் பதினெட்டு நூல்களையும் முப்பகுதிகளான 1. நீதி கூறும் 11 நூல்கள், 2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள், 3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் என்று வகுத்துக் கூறுவர்.
1. நீதி கூறும் 11 நூல்கள் – திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது,
இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு,
முதுமொழிக் காஞ்சி, ஏலாதி.
2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள் – ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை
எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது.
3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் – களவழி நாற்பது.
இனி, மேற்கூறிய நீதி கூறும் நூல்களில் ஒன்றான திரிகடுகம் என்ற நூல் கூறும் செய்திகளை ஆய்வதுதான் இக்கட்டுரையின் நோக்காகும். இந் நூலை நல்லாதனார் (நல் 10 ஆதனார்) என்னும் புலவர் இயற்றினார். இவர் வைணவ மதத்தைச் சார்ந்தவர். இவர் திரிகடுகத்தில் காப்புப் பாடலைத் தவிர, நூறு (100) பாடல்களைப் பாடியுள்ளார். திரிகடுகம் ஸ்ரீ திரி 10 கடுகம். திரி ஸ்ரீ மூன்று. கடுகம் ஸ்ரீ மருந்து. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயைத் தீர்ப்பன. அதேபோல், இந்நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப் பெறும் மூன்று கருத்துக்கள் உள்ளன. அவை நோயைப் போக்கும் தன்மை கொண்டன.
மருந்து
அருந்ததி போன்ற கற்புடைய மங்கையரின் தோளும், குற்றமற்ற குடியில் தோன்றிய பண்புடையவர் தொடர்பும், குற்றமற்ற அறிவுடைய சான்றோர் நட்பும் என்ற இம்மூன்றும் ஒருவனுக்குத் திரிகடுகம் போன்ற மருந்துகளாகும்.
‘அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் – சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்
திரிகடுகம் போலு மருந்து.’ – (01)
அறியாமை தரும் கேடு
கற்க வேண்டியவற்றைக் கல்லாதவருக்கு நட்பாகி ஒழுகல், உள்ள உறுதி கொண்ட மனைவியைக் கோலால் அடித்தல், சிற்றறிவுடையவரைத் தன் இல்லத்துக்குள் அழைத்துப் போதல் ஆகிய இம்மூன்றும் தன் அறியாமையால் உண்டாகும் கேடுகளாம். இவற்றைச் செய்யாதிருத்தல் நன்று.
‘கல்லார்க்கு இனனாய் ஒழுகலும் காழ்கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும் – இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும்
அறியாமை யால்வரும் கேடு.’ – (03)
துன்பம் தரும் நெறி
எவரும் இறங்கி ஆடிடும் வழக்கம் அற்ற துறையில் இறங்கிப் பெருநீரில் போவதும், தனக்கு விருப்பம் இல்லாத பொதுமகளிர் தோள்களைச் சேர்வதும், வருந்தி விருந்தினனாய் அயலூரில் சென்று புகுவதும் ஆகிய இந்த மூன்றும் ஒருவனுக்கு அரிய துன்பத்தைத் தரும் வழிகளாகும். இவற்றைச் செய்யாதிருத்தல் நன்று.
‘வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப
விழைவிலாப் பெண்டீர்த்தோள் சேர்வும் – உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலும் இம்மூன்றும்
அருந்துயரம் காட்டு நெறி.’ – (05)
மற்றவன் பொருளுக்கு ஆசைப்படுதலும், தன் உறவினர் பசியுடன் இருக்கச் சோம்பல் கொள்ளுதலும், வெறுத்து ஒருவனால் இவன் கல்லாதவன் என்று இகழப்படுதலும் ஆகிய இம்மூன்றும் எல்லார்க்கும் துன்பத்தைத் தருவனவாம். இவற்றைச் செய்யாதிருத்தல் வேண்டும் என்றவாறு.
‘ஆசை பிறன்கண் படுதலும் பாசம்
பசிப்ப மடியைக் கொளலும் – கதித்தொருவன்;
கல்லானென்று எள்ளப் படுதலும் இம்மூன்றும்
எல்லார்க்கு மின்னா தன’ – (20)
தீமையைத் தருவன
கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் வாழ்தலும், முரண்பாட்டைப் போக்கித் தெளிவிக்கும் கல்வி கேள்விகளில் முதிர்ந்தவர் இல்லாத அவையில் இருத்தலும், பகுத்து உண்ணும் தன்மை இல்லாதவர் அயலில் இருத்தலும் ஆகிய இம்மூன்றும் நன்மை தரா, தீமையையே அளிக்கும்.
‘கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல.’ – (10)
தமக்கு வரும் துன்பத்துக்கு அஞ்சாதவரிடம் கொண்ட நட்பும், விருந்தினர்க்கு உணவு கொடுக்க அஞ்சும் மனைவியை வீட்டில் இருக்கச் செய்தலும், சிறப்பைத் தராத தன்மையுடைய இல்லத்தார்க்குப் பக்கத்தே குடியிருத்தலும் என்ற இம்மூன்றும் நன்மையை அளிப்பவை அல்ல.
‘நோவஞ்சா தாரொடு நட்பும் விருந்தஞ்சும்
ஈர்வளையை இல்லத் திருத்தலும் – சீர்பயவாத்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்தல இல.’ – (63)
நன்மை தருவன.
முயற்சி உடையவன் என்று சொல்லப்படுபவன் மற்றவரிடம் கடன்படாமல் வாழ்பவன் ஆவான். பிறர்க்கு உதவி செய்பவன் வந்த விருந்தினர் பசித்திருக்கத் தான் தனித்து உண்ணாதவன். பிறர் அறிவித்தவற்றை மனத்தில் கொள்பவன் தான் கேட்டவற்றை மறவாதவன் ஆவான். இந்த மூவரும் நண்பராக இருக்க வாழ்வது ஒருவனுக்கு நன்மை தருவதாகம்.
‘தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.’ – (12)
பெறற்கு அரியார்
மற்றவரின் நல்ல குணங்களை அறிபவன் இளமை தொட்டு வந்த நண்பன் ஆவான். நிறைந்த குடிகளைக் காப்பவன் மன்னன் ஆவான். குற்றம் இல்லாத சிறந்த குணங்களையுடையவன் துறவியாவான். இந்த மூவரும் எங்கும் பெறுவதற்கு அரியவர் ஆவார்.
‘சீலம் அறிவான் இளங்கிளை சாலக்
குடியோம்பல் வல்லான் அரசன் – வடுவின்றி
மாண்ட குணத்தான் தவசியென்ற இம்மூவர்
யாண்டும் பெறற்கரி யார்.’ – (13)
உயர்ந்தோர்
தனக்குச் செய்யக் கூடியதை அறியவல்ல விருந்தினனும், அரிய உயிரைக் கொல்வதை நடு நின்று தடுத்து வாழ்பவனும், மன உறுதியுடன் உயிர்க்கு நன்மை தருவதான ஒழுக்கத்தை உடைய ஆசானும் ஆகிய இந்த மூவர் உயர்ந்தோர் என்று உயர்த்திச் சொல்லப்படுபவர் ஆவார்.
‘ஒல்வ தறியும் விருந்தினனும், ஆருயிரைக்
கொல்வ திடைநீக்கி வாழ்வானும் – வல்லிதின்
சீல மினி துடைய ஆசானும் இம்மூவர்
ஞாலம் எனப்படு வார்’ – (26)
மூன்று வகையான கடமைகளைச் செய்து முடித்த அந்தணனும், அற நூல் அரசியல் நூல் என்பவற்றை ஆராய்ந்துணர்ந்த நீதி நிலையினின்று மாறுபடாத மன்னனும், மன்னனால் சிறையகப்பட்டு வருந்தாத குடிமக்களும் என்ற இம்மூவரும் உயர்ந்தவரென்று கூறப்படுபவராவர்.
‘மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசும் – சிறைநின்று
அலவலை இல்லாக் குடியும் இம்மூவர்
உலகம் எனப்படு வார்’- (34)
கற்றோர் கருத்து
ஒரு பெண் தன்னை விரும்பி வரினும் தன் நடக்கையில் மாறுபடாமையும், தன்னிடம் வந்தது கையிலே அகப்பட்டது என்றாலும் மற்றவர் பொருளிடத்தே ஆசை கொள்ளாமையும், நிலம் முலியவற்றை விரும்பி அறப்பயனை அடையாமல் வாழ்கின்ற காலத்தினை மதியாமையும் என்ற இம்மூன்றும் நுட்பமான நூல்களை உணர்ந்தவர்களின் கருத்தாகும்.
‘பெண்விழைந்து பின்செலினும் தன்செலவிற் குன்றாமை
கண்விழைந்து கையுறினும் காதல் பொருட்கின்மை
மண்விழைந்து வாழ்நாள் மதியாமை இம்மூன்றும்
நுண்விழைந்த நூலவர் நோக்கு.’ – (29)
பல நல்ல நூற்பொருள்களைக் கற்றலும், பகுத்து உண்டு இல்லறத்தைக் குறைவில்லாது நடத்துதலும், ஊக்கத்துடன் முயற்சி கொண்டு செய்வதற்குரிய செயல்களைச் செய்து முடித்தலும் ஆகிய இம்மூன்றும் சிறந்த கல்வியாகும்.
‘பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாம்
இல்லற முட்டாது இயற்றலும் – வல்லிதின்
தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை.’ – (31)
முக்தியுலகை அடைபவர்
கடலில் எழும் அலை போன்று தன் மனம் எழுந்து அலையாத அறிவுடையவனும், நுட்பமான சிந்தனைகளாலும் மிக்க கேள்விகளாலும் நூல்களின் முடிவுகளைக் கண்டவனும், குற்றம் தன்னிடத்தில் இல்லாதபடி மனக்கலக்கத்தை ஒழித்தவனும் ஆகிய இந்த மூவரும் அழிவற்ற தன்மையுடைய முக்தியுலகத்தில் நிற்பவர் ஆவர்.
‘முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்
நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்
மைந்நீர்மை இன்றி மயலுறுப்பான் இம்மூவர்
மெய்ந்நீர்மை மேல் நிற்பவர்.’ – (35)
அறங்களுள் சிறந்தவை
வறுமையில் துன்பப்பட்டவர்க்கு அவர் விரும்பும் பொருட்களைக் கொடுப்பதால் உண்டாகும் புகழும், வறுமையால் தளர்ச்சி ஏற்பட்ட போதும் தன் குடிக்கேற்ற இயல்பினின்று குறையாத தன்மையும், நாள்தோறும் அன்பு மிகுந்து நட்பினரைப் பெருக்கிக் கொள்ளுதலும் ஆகிய இம்மூன்றும் கேட்கப்படும் அறங்கள் பலவற்றிலும் சிறந்தவையாகும்.
‘அலர்ந்தார்க் கொன்று ஈந்த புகழும் துளங்கினும்
தன்குடிமை குன்றாத் தகைமையும் – அன்போடி
நாள்நாளும் நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றும்
கேள்வியுள் எல்லாந் தலை.’ – (41)
வேளாளர் குலத்துக்கு அழகு
சூதாட்டத்தால் கிடைத்த பொருளை விரும்பாமையும், பல நாள் பழகினும் அந்தணரைத் தீயினுக்கு அஞ்சி நடப்பதைப் போன்று அஞ்சி நடத்தலும், பயிர்த் தொழிலில் விருப்பம் செலுத்தி வாழ்தலும் என்னும் இம்மூன்றும் வேளாளர் குலத்துக்கு அழகு எனச் சான்றோர் கூறுவர்.
‘கழகத்தால் வந்த பொருள்கா முறாமை
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் – ஒழுகல்
உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு.’ – (42)
உள்ளவை போல் அழியும்.
உறவினர்க்கு உதவாதவனின் பொருளும், பசுமையான பயிர் தனக்கு விளைவு தரும்போது அதனைக் காக்கும் இயல்பு இல்லாதவனின் உழவுத் தொழிலும், இளையவனாய் இருந்து கள்ளை உண்டு வாழ்பவனின் குடியும், ஆகிய இம்மூன்றும் நிலைத்தவை போல் தோன்றிக் கெடும்.
‘கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைங்கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும் – இளையனாய்க்
கள்ளுண்டு வாழ்வான் குடிமையும் இம்மூன்றும்
உள்ளன போலக் கெடும்.’ – (59)
அமைச்சரின் துணிவு
ஐம்பொறிகளின் அறிவும் தீய நெறியில் செல்லாது தம்மிடம் அடங்கி இருக்கும்படி நடத்தலும், அரசனுக்கு ஏற்படவுள்ள தீமையை முன்னர் அறிந்து தடுத்தலும், நாள்தோறும் தம் பகைமையை ஏற்றுக் கொள்வதற்குரிய மன்னரின் இருப்பை ஒற்றரால் அறிந்து அதற்கு ஏற்பச் செய்தலும் என்ற இம்மூன்றும் சிறப்புடைய அமைச்சரின் துணிவுகளாகும்.
‘ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்
எய்துவது எய்தாமை முற்காத்தல் – வைகலும்
மாறேற்கும் மன்னர் நிலைஅறிதல் இம்மூன்றும்
சீரேற்ற பேரமைச்சர் கோள்.’ – (61)
கற்புடையாளின் கடமைகள்.
நல் விருந்தினரை உபசரிப்பதால் கணவனுக்கு நட்பினளாம். நாள்தோறும் இல்லறத்தைக் காத்தலால் அவள் பெற்ற தாயாம். தன் பழைய குடும்பத்துக்குரிய மக்களைப் பெறுவதால் மனைவியாம். இம்மூன்றும், கற்புடைப் பெண் மேற்கொண்ட கடமைகளாகும்.
‘நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும்
இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் – தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்.’ – (64)
அறவுணர்வு உடையார்.
வறியவர்க்குக் கொடுக்கும் பொருளும், இவ்வுலகில் பொருள்களின் நிலையாமையை ஆராய்ந்து அறியும் வழியில் பொருந்துதலும், எல்லா உயிர்களுக்கும் துன்பம் செய்யாத தூய தன்மையும், என்னும் இம்மூன்றும் அறத்தை அறிகின்ற மக்களுக்கு உளவாம்.
‘இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க்கு உள.’ – (68)
நற்றவமுடையார்
தூய்மை உடையவனாக இருத்தல், சான்றோரால் நல்ல செயலை விவரிக்கும் உண்மையுடையவனாக இருத்தல் மங்கையரின் அழகான தீமையை மனத்தினால் நினையாமை வாயால் சொல்லாமை என்ற இம் மூன்றும் தவத்தில் செருக்கி நின்றவரின் கொள்கையாகும்.
‘தூய்மை உடைமை துணிவாம் தொழிலகற்றும்
வாய்மை உடைமை வனப்பாகும் – தீமை
மனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும்
தவத்தில் தருக்கினார் கோள்’ – (78)
ஆசைக் கடலுள் ஆழ்வர்
பலர்க்கும் தன்னிடம் உள்ள நீரைத் தரும் துறையினைப்போல் தன் தோள்களைத் தந்து வாழ்கின்ற பொது மகளும், நாள்தோறும் சூதாட்டத்தைத் தேடி அலையும் நீதியற்ற சூதாடியும், மிக்க வட்டி வாங்கிச் சிறந்த பொருளை ஈட்டுபவனும் என்னும் இம்மூவரும் ஆசை என்ற கடலில் மூழ்குபராவர்.
‘தோள்வழங்கி; வாழும் துறைபோல் கணிகையும்
நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும்
வாசிகொண் டொண்பொருள் செய்வானும் – இம்மூவர்
ஆசைக் கடலுள் ஆழ்வார்.’ – (81)
வறுமை
நீர் வரும் வழி நன்கு அமையாத குளமும், தன் வயிறு நிரம்புமாறு தாய்க் கொங்கைப் பாலை உண்ணாத குழந்தையும், உயர்ந்த முறையில் நூல்களைக் கற்றலினது மாட்சிமையுடைய அறிவு இல்லாத மனிதரும் ஆகிய இந்த மூவரும் வறுமையால் பற்றப்பட்டவர் ஆவார்.
‘வாய்நன்கு அமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை உண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட் டார்.’ – (84)
மூடரின் செயல்கள்
ஓர் உயிரைக் கொல்ல அஞ்சாது அதைச் செய்ய விரும்புபவனும், கல்வி கல்லாத இனத்துடன் புகுபவனும், ஒரு முயற்சியும் செய்யாதவனாய் இருந்து முன்னுள்ள பெருஞ் செல்வத்தைச் செலவு செய்து குறைப்பவனும் ஆகிய இம்மூவரும் மூடர்கள் ஆகின்ற தன்மை உடையவர் ஆவார்கள்.
‘கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக்கு
அகன்ற இனம்புகு வானும் இருந்து
விழுநிதி குன்றுவிப் பானும் இம்மூவர்
முழுமக்க ளாகற்பா லார்.’ – (87)
பிறந்தும் பிறவாதார்
அருளைத் தன் உள்ளத்தில் நிறைத்து வைக்காதவனும், பொருளைத் தான் அனுபவிக்காமலும் பிறர்க்குக் கொடுக்காமலும் புதைத்து வைப்பவனும், தன்னிலை கடந்து பிறர்க்குத் துன்பம் கொடுக்கும் சொற்களைக் கூற வல்லவனும் என்ற இம்மூவரும் மக்களாகப் பிறந்திருந்தும் பிறவாதவர் ஆவர்.
‘அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்
இறந்து இன்னா சொல்லகிற் பானுமிம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்’ – (89)
பிறப்பின் பயனை அடையார்
ஒழுக்கம் நிறைந்த உயர் குலத்தில் பிறவாதவனும், எழுத்தினைச் சிறிதும் கல்லாத பேதையும், என்றும் முறை தவறிச் சொற்களைப் பேச விரும்புபவனும் ஆகிய இம்மூவரும் மக்கள் மத்தியிற் பிறந்தும் பிறப்பின் பயனை அடையாதவர் ஆவார்.
‘விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை
ஓன்றும் உணராத ஏழையும் – என்றும்
இறந்துரை காமுறு வானும் இம்மூவர்
பிறந்தும் பிறவா தவர். ‘ – (92)
நல்வினை நீக்கும் ஆயுதங்கள்
நல்லறிவு சிதையுமாறு வருத்தும் பசிப்பிணியும், சான்றோர் நெருங்குதல் கெடுமாறு தோன்றும் விருப்பமும், பகைவரிடம் உண்டாகும் கொடிய சொற்களைப் பொறுக்காத சினமும் ஆகிய இம்மூன்றும் நல்ல வினையை நீக்கும் ஆயுதங்களாகும்.
‘அறிவுஅழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்
செறிவழுங்கத் தோன்றும் விழைவும் – செறுநரின்
வௌ;வுரை நோனா வெகுள்வும் இவைமூன்றும்
நல்வினை நீக்கும் படை.’ – (95)
பாவச் செயல்கள்
மன்னன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் ஆகிய ஐந்து பெரியோரின் ஆணையை மறுத்து நடத்தலும், குறையாது வளர்கின்ற நட்புடையவனிடத்துப் பொய் பேசுதலும், தன்னை மனத்தால் விரும்பிய கற்புடைய மனைவியைத் துறத்தலும் என்ற இம்மூன்றும் அறமற்றவரின் செயல்களாகும்.
‘ஐங்குரவர் ஆணை மறுத்தல் ஆர்வுற்ற
எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் – நெஞ்சமர்ந்த
கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்
நற்புடையி லாளர் தொழில்.’ – (97)
நல்லுலகம் சேராதவர்
கற்க வேண்டியவற்றைக் கற்ற அறிவுடைய சான்றோரை விட்டு விலகி வாழ்பவனும், தான் விரும்பியவற்றை விரும்பியவாறு செய்து ஒழுகும் அறிவற்றவனும், தடையின்றித் தீமைகளைச் செய்யும் பேச்சுக்காரனும் என்ற இம்மூவரும் நல்லுலகங்களைச் சேராதவர் ஆவார்.
‘கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்’ – (99)
மன்னனின் உறுப்புகள்
தம்மிடம் உள்ளன்பு கொண்ட படையும், பலர் ஒன்றாய் நின்று எதிர்த்தாலும் அச்சப்படாத மதிலான அரணும், சேர்த்து வைக்கப்பட்டு எண்ண முடியாத பெருங் செல்வமும் என்ற இம்மூன்றும் நாட்டை ஆள்கின்ற மன்னர்க்கு உறுப்புகளாம்.
‘பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்துஅமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க்கு உறுப்பு.’ – (100)
முடிவுரை
இதுகாறும் மருந்து, அறியாமை தரும் கேடு, துன்பம் தரும் நெறி, தீமையைத் தருவன, நன்மை தருவன, பெறற்கு அரியார், உயர்ந்தோர், கற்றோர் கருத்து, முக்தியுலகை அடைபவர், அறங்களுள் சிறந்தவை, வேளாளர் குலத்துக்கு அழகு, உள்ளவை போல் அழியும், அமைச்சரின் துணிவு, கற்புடையாளின் கடமைகள், அறவுணர்வு உடையார், நற்றவமுடையார், ஆசைக் கடலுள் ஆழ்வர், வறுமை, மூடரின் செயல்கள், பிறந்தும் பிறவாதவர், பிறப்பின் பயனை அடையார், நல்வினை நீக்கும் ஆயுதங்கள், பாவச் செயல்கள், நல்லுலகம் சேராதவர், மன்னனின் உறுப்புகள் என்ற தலைப்புகளில் திரிகடுகக் கூற்றுக்களை அவதானித்தோம். திரிகடுகத்தில் காட்டப்படும் நீதிக் கூற்றுக்கள் மனித வாழ்வியலை மேம்படுத்தி நிற்கின்றன என்பது தெட்டத் தெளிவாகின்றது.
wijey@talktalk.net