– முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் ஐந்தாவது அத்தியாயம் ‘ஒளிரும் மாய நகரம் – பாரிஸ் “என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. – பதிவுகள் –
அத்தியாயம் ஐந்து: ஒளிரும் மாய நகரம் – பாரிஸ்
“பாரிஸ் என்ற வார்த்தையுடன் மூன்று எழுத்துக்கள் சேர்த்தால் அது பாரடைஸ் ஆகிறது’ . (Paris – Paradise )
ஏப்ரல் 23, 2017
இந்த நாள் யுனைடெட் கிங்டோம் விட்டு விலகி அண்டை நாடான பிரான்சு நோக்கி புறப்படத் தயாரானோம். எங்கள் பயண திட்டத்தில் அடுத்து நாங்கள் ரசிக்கப்போகும் நிலம் உலகப்புகழ் பெற்ற பாரிஸ் நகரம். உலகின் அதிசயம் என முதலில் ஆராதிக்கப்பட்ட ஐஃபெல் டவர் அமைந்துள்ள நகரம். அதிகாலையிலே எழுந்து புறப்பட்டு காலை உணவை முடித்து பேருந்தில் ஏறி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பயணம் செய்து நூறு மைல்கல் தொலைவில் இருந்த டோவர் துறைமுகத்தை அடைந்தோம். செல்லும் வழியில் எல்லாம் கண் கொள்ளா அழகிய வண்ணம் மிக்க சிறுசிறு பூக்கள் அதிலும் ஒரு மஞ்சள் நிற பூ கொல்லென்று எல்லா பகுதியிலும் பூத்துக்கிடக்கிறது. பேருந்து வேகமாக சென்றதால் சரியான முறையில் அப்பூக்களை நிதானமாக ரசிக்க இயலவில்லை. பெயர் தெரியாவிட்டாலும் மனத்தில் நிறைந்த மலர் அது.
வானத்தில் மலர்தேவதைகள் சுமந்து சென்ற பூக்கூடைகள் அனைத்தும் கொட்டி சிதறி மஞ்சள் பாய் விரித்தது போன்ற ஒரு தோற்றம். நம் ஊரில் எல்லாம் இப்படி, இவ்வளவு கண்கவர் அழகுகளை வழிகளில் பார்த்தாக கொஞ்சம் கூட நியாபகம் இல்லை. வட இந்தியாவில் டெல்லியில் இருந்து ஆக்ரா செல்லும் வழியில் வழியெங்கும் இருக்கும் கடுகு செடியில் அமைந்த மஞ்சள் மலர்கள் நம்மூரில் அழகுதான். எனினும், இந்த மஞ்சள் மலர்கள் கொள்ளை அழகு. அதன் பெயர் காமன் ராக்ரோஸ் என்பதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். என் யூகம் தவறாகவும் இருக்கக்கூடும். இதுபற்றி விசாரித்து அறியவேண்டும்.
டோவர் துறைமுகம் தெற்கு இங்கிலாந்தில் கென்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான துறைமுகம். அங்கிருந்து பிரான்ஸ் வெறும் 21 மைல்கல் மட்டும்தான் என்பதால் தினமும் படகு சேவை இக்கரையில் இருந்து அக்கரைக்கு மக்களை சுமந்து செல்கிறது. Ferry Service என்றே அந்த படகுகளைக் குறிப்பிடுகிறார்கள். காரணம் படகுகள் (Boats) சிறிய வகையை சார்ந்தவை. கப்பல்கள் (Ships) மிகவும் பெரியவை. கப்பல்களிலும் சேராமல், படகென்றும் ஒதுக்கிவிட முடியாமல் நடுத்தர வகைக்ச் சேர்ந்தவையே Ferry என அறியப்படுகின்றன. இந்த வகை Ferry Service பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும் மற்றும் கார்கோ (Cargo) எனப்படும் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. நிறைய Ferry Service பேருந்துகள், பெரிய கன்டைனர் வகை லாரிகளையும் எடுத்து செல்லும் அளவு திறன் படைத்தவை.
பேருந்தில் நமது அனைத்து பெட்டி படுக்கைகளுடன் செல்லும் நாம் டோவர் துறைமுகத்தை நெருங்கும் முன்னரே டோல்கேட் மாதிரியான ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டு, மூன்று அல்லது நான்கு செக்கிங் அதிகாரிகளால் நமது பாஸ்போர்ட் சரி சரிபார்க்கப்பட்டு சோதனை செய்யப்படுவோம். பேருந்தில் நுழையும் அதிகாரிகள் பலே பேர்வழிகள். அவர்கள் உள்ளே நுழைந்து எங்களை சோதிக்கும் சாக்கில்,, யாராவது ஒளிந்து கொண்டு இருந்தாலும் பிடித்துவிடும் நோக்கில் கண்களைச் சுழலவிட்டுக்கொண்டே, அதே சமயம் நம்மிடம் ஒரு நட்புடன் கூடிய ஒரு ஹாய் சொல்லிக்கொண்டே நமது பாஸ்போர்ட் சரிபார்ப்பார்கள். பேருந்து கிளம்பும் முன்னரே திரு. பாலா அவர்கள் இந்த விஷயம் பற்றி கூறியதால் அனைவரும் பாஸ்போர்ட் கையில் சரியாக வைத்திருந்தோம்.
அதன் பின்னர், துறைமுகத்தை நெருங்கும் சமயம், இன்னொரு டோல்கேட் உள்ளது. அங்கே அனைத்து பயணிகளும் வரிசையாக சென்று நின்று அங்கே உள்ள அதிகாரிகளிடம் பாஸ்போர்ட் கொடுத்து, அதில் ஷெங்கன் விசா (Schengen Visa -பிரான்சு நாட்டுக்குள் நுழைய இது அவசியம் என்று முன்பே நாம் சொல்லியிறோம் அல்லவா!) உள்ள இடத்தில் ஒரு ஸ்டாம்ப் குத்தி, நம்மை பிரான்ஸ் நாட்டுக்குள் செல்ல அனுமதி வழங்குகிறார்கள். இத்துடன் நமது லண்டன் விசா காலாவதி ஆகிறது. விசா மட்டும் அல்லது லண்டன் நகரத்தின் பணம் ஆன பௌண்டும் (pound) காலாவதி அப்போதைக்கு ஆகிறது. மிச்சம் இருந்தால் ஒன்று அங்கேயே அந்நிய செலாவணியில் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், அதற்கான இடைத்தரகுக்குக் கொடுக்கும் விலை வீண்தான். அல்லது அதை அப்படியே பத்திரமாக வைத்து அடுத்த முறை போனால் பயன்படுத்திக்கொள்ளலாம். என்னுடைய உள்ளுணர்வு நான் மீண்டும் லண்டன் போகும் வாய்ப்பு உள்ளது என கூறியதால் அதை மதித்து, மிச்சம் இருந்த பவுண்ட் மற்றும் நாணயங்களைப் பத்திரமாக ஒரு உறையில் வைத்து எனது கைப்பையில் ஒரு இடத்தில் பதுக்கி விட்டேன். என் உள்ளுணர்வு என்றுமே எனக்குப் பொய்யுரைத்ததில்லை.
இனி பயன்படுத்த போகும் பணம் யூரோ எனப்படும் பணம் ஆகும். இந்த டோல்கேட் கடந்தவுடன் நமது பெட்டிகள் அனைத்தையும் இறக்கி ஒரு தள்ளுவண்டியில் ஏற்றி பெர்ரி ஊழியர்கள் எடுத்து செல்வார்கள். நாம் ஒரு முறை நமது பெட்டிகள் எல்லாம் அந்த தள்ளு வண்டியில் ஏறி விட்டதா என்று பரிசோதித்து விட்டபின் இன்னும் சிறிது நேரம் உள்ளதால் அங்குள்ள ஸ்டோரில் என்ன இருக்கிறது என்று ஒரு நோட்டம் விட்டோம். எங்களுடன் கூட இருந்த குழுவினருக்கு ஒரு பழக்கம். நல்ல பழக்கமோ, கெட்டபழக்கமோ தெரியாது. எந்த இடத்தில பேருந்து நின்றாலும், இயற்கை உபாதைகளுக்கான இடங்களில் நின்றால் கூட, அங்கே இருக்கும் கடைகளில் (நம்ம ஊர் டிபார்ட்மென்டல் ஸ்டோர் மாதிரி இருக்கும்) ஏதாவது வாங்கி விடுவார்கள்.
அது சாப்பிடும் பொருளோ, அல்லது பொம்மைகளோ அல்லது வைன் பாட்டிலோ, அல்லது எதாவது அலங்காரப்பொருட்களோ (கண்ணாடியில்) வாங்கி வருவார்கள். அதும் ஒரு செட் மக்கள் வாங்கி வந்து பேருந்தில் காட்டியவுடன், உடனே உள்ளே அமர்ந்திருக்கும் மற்றவர்களும் இறங்கி ஓடுவார்கள். இப்படியே செய்து பத்து நிமிடம்தான் அங்கே நேரம் என்பதையும் மீறி கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் செய்துவிடுவார்கள். நாங்கள் இந்த விளையாட்டுக்கெல்லாம் செல்ல மாட்டோம். கடைகளில் ஒரு நோட்டம் விடுவதுடன் சரி. இவர்கள் வாங்கி வந்த பொருளை பேருந்தில் வைப்பதும் எடுப்பதுமாக அதில் வேறு நேரம் செலவழிப்பார்கள். அதே போல் டோவர் துறைமுகத்தில் பெர்ரி சேவைக்காக காத்திருக்கும் வேளையிலும் அங்கே உள்ள ஸ்டோரில் வாங்கி குவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
எங்களுக்குத் தேவை இல்லாமல் வாங்கி குவிக்கும் பழக்கம் இல்லையானாலும், இப்போது ஒரு தேவை ஏற்பட்டுவிட்டது. கடந்த இரு நாட்களாக லண்டனில் குளிரில் சுற்றிய காரணத்தால் உதடுகள் பனியில் வறண்டு கொஞ்சம் வெடிக்க ஆரம்பித்து விட்டன. என் மகனுக்கு நல்ல வலி உதட்டில். நம்மூரில் மார்கழி மாதக் குளிரில் சுற்றினாலும் ஒன்றும் ஆகாது. அப்படி மீறி உதடு காய்ந்து விட்டால் வெண்ணை எடுத்து வாயில் கொஞ்சம் போட்டுக்கொண்டு பின் உதட்டிலும் தடவி சரிசெய்து விடுவோம். கடைசி தேங்காய் எண்ணையாவது பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த உதட்டு வெடிப்புக்கென நாங்கள் கையில் எந்த மருந்தும் எடுத்து வரவில்லை. எனவே, அந்த ஸ்டோரில் இருந்த ஒரு சிறிய மருத்துவ சாதனங்கள் அடங்கிய பகுதியில் சென்று லிப் பாம் (Lip Baalm) வேண்டும் என வினவினேன்.
அங்கே இருந்த இருவர் – ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு நான் கூறும் விஷயம் புரியவே இல்லை. அவர்களுக்குப் பிரெஞ்சு மொழி மட்டுமே தெரியும். ஆங்கிலத்தில் கூறும் லிப் பாம் என்பது கூட தெரியவில்லை. உடனே நான் அபிநய சுந்தரியாக மாறி உதட்டில் தடவுவது போல் செய்து காண்பித்தேன். அவர்கள் அதைப் புரிந்து கொண்டது போல் தலை ஆட்டி, ஒரு பக்கம் கை காட்டினார்கள். அங்கே இருந்தது லிப்ஸ்டிக். மறுபடியும் ஒரு நாட்டிய தாரகையாக மாறி உதட்டில் வலி இருப்பது போல் முகபாவனை செய்து காட்டினேன். அந்த ஆண் உடனடியாகப் புரிந்து கொண்டு, ஓடிப்போய் ஒரு லிப் பாம் எடுத்து வந்து கொடுத்தார். கடவுள் நாட்டியம் என்று ஒன்று உலகில் ஏற்படுத்தியதால்தான் எப்படியோ நாம் பாஷை தெரியாத ஊர்களில் பிழைக்க முடிகிறது.
அந்த மருந்துக்கான விலையை கொடுத்து விட்டு, கூடவே சாப்பிடக் கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி வாசனையில் உள்ள மிட்டாய்களை வாங்கி வெளி வந்தவுடன் எங்கள் வழிகாட்டி பாலா உடனடியாக கிளம்ப வேண்டும் என குரல் கொடுத்தார். இன்னும் ஸ்டோரில் ஏதோதோ வாங்கி குவித்துக்கொண்டிருந்த எங்கள் குழுவினரை திரட்டி அனைவரும் வரிசையில் நின்று “கான்டெர்பரியின் பெருமை” (Pride of Canterbury) என்ற ஃபெரி சேவையில் ஏறத்தயாரானோம். கான்டெர்பரி என்பது டோவர் துறைமுகம் அருகே அமைந்த ஒரு பிரபலமான ஊர். ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு அந்த பெயர் நன்கு பழக்கம். கடவுள் மேல் தான் கொண்ட பற்றினாலும், தன் நியாயமான கொள்கைகளால் ராஜா இரண்டாம் ஹென்றியின் தவறுகளுக்கு துணைபோகாத ஒரு மதகுருவான தாமஸ் பெக்கெட் (Thomas Becket) என்பார் ராஜா அனுப்பிய கொலைகாரர்களால் கொல்லப்பட்டு பிற்காலத்தில் கடவுளுக்கு நிகரான அளவில் வழிபாடு ( Martyr) செய்யும்படி அவர் கல்லறையை புனிதத்தலம் ஆக மாற்றிய இடம் இங்கேதான். அது அந்த நாட்டுமக்களின் வழிபாட்டுத்தலமாகவும் அமைந்துள்ளது. பதினைந்தாம் நூறாண்டு ஆங்கிலக்கவி சாஸரின் (Chaucer) “கான்டெர்பரி டேல்ஸ்” (Canterbury Tales) எனும் நீண்ட கவிதையும், இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர் எலியட் (Eliot) அவர்களின் கதீட்ரலில் நடந்த கொலை (Murder in the Cathedral) எனும் நாடகமும் இந்த நகரை சுற்றியே அமைந்தவை.
“கான்டெர்பரியின் பெருமை” என்ற பெர்ரியின் உள்ளே அனுமதிக்கப்பட்ட நாம் அங்கே உள்ள லிப்ட் அல்லது படிகளை பயன்படுத்தி இரண்டாம் மாடிக்கு சென்றோம். பாலா அவர்கள் எங்களுக்குச் சில விளக்கங்கள் கூறினார். அந்த ஃபெரி சேவையில் கிட்டத்தட்ட நான்கு மாடிகள் உள்ளன. இந்த இரண்டாம் மாடி ஒரு லௌஞ் (Lounge) அதாவது மிக பெரிய கல்யாண மண்டப ஹால் மாதிரி அமரும் இருக்கைகள் மற்றும் உறங்க பெஞ்சுகள் போடப்பட்டு உள்ளன. சில இடங்களில் சாப்பிடும் வசதி கொண்ட டைனிங் டேபிள் கூட உள்ளது. மதிய உணவு எங்களுக்குக் காலையிலேயே ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் கட்டப்பட்டு திரு. பாலா எடுத்து வந்து எங்கள் கையில் கொடுத்து இருந்தார். எனவே, அவர் எங்களை அங்கே அமர்ந்து சாப்பிடச் சொன்னார். மேலும். சாப்பிட்டு விட்டு உள்ளேயே இருக்கும் அரங்குகள், காபி டீ சாப்பிடும் ஹோட்டல்கள், நிறைய விற்பனை மையங்கள் அதில் பல பொருட்கள் கைக்கடிகாரம் உள்பட விறபனைக்கு உள்ளன எனவும் தெரிவித்து, எங்கு வேண்டுமானாலும் சென்று விட்டு கடைசியில் ஃபெரி கரை சேரும் வேளையில் இங்கே வந்து கூடும்படி கூறிவிட்டு எங்களை எங்கள் போக்கில் விட்டு விட்டார். இன்னும் மேல்தளங்களில் சில கடைகளும், கடைசியாக திறந்த வெளியும் உள்ளது. அங்கே சென்றால் அந்த பெர்ரி போவது மற்றும் சுற்றிலும் உள்ள நீர் கண்டு களிக்கலாம்.
முதலில் சாப்பாட்டை முடித்த நாங்கள் என் அப்பாவைப் பொருட்களுக்கு பாதுகாப்பாய் அங்கேயே அமர வைத்து விட்டு உள்ளே சுற்ற சென்றோம். அதற்குள், பாம் என சங்கநாதம் எழுப்பிய ஃபெரி, குறிப்பிட்ட நேரத்தில் தன் பருமனான உடலை வேகமாக அசைத்து நீரை களைந்து செல்ல முற்பட்டது. அதன் உடலின் கீழ் சிக்குண்ட நீர் சல சலவென வேகமாக விலகியது. அந்த நீருக்கும் ஒரு பெயர் உண்டு அல்லவா! அது ஆங்கிலக்கால்வாய் (The English Channel) என அழைக்கப்படும் பெயரிலேயே ஆங்கிலம் வைத்துள்ள அழகிய கால்வாய். தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்சையும் பிரிக்கும் இந்த கால்வாய், வடக்கு கடல் (North Sea) எனும் ஆழியை அட்லாண்டிக் பெருங்கடலுடன் (Atlantic Ocean) இணைக்கும் வேலையையும் செய்கிறது
ஃபெரி தனது இயக்கத்தை ஆரம்பித்தவுடன் நானும் என் மகனும் மேல் தளத்திற்கு சென்று அங்கிருந்து ஆகாய நீலமும், இடையே வெண்மையும் கலந்து சரசர என சாரைப்பாம்பின் லாவகத்துடன் ஃபெரியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் விலகி செல்லும் நீரின் அழகை ரசித்தோம். எங்களைப் போலவே பலர் அங்கே வந்து ரசித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பத்து நிமிடத்திற்கு மேல் எங்களால் அங்கே தாக்கு பிடிக்க முடியவில்லை. சூரிய வெளிச்சம் இருந்தாலும் எலும்பில் ஊடுருவும் ஒரு சில்லென்ற காற்று நம்மைச் செயல் இழக்க வைத்து விடும். இந்தக் காற்றில் இருந்து தப்பி உள்ளே சென்று ஒளிந்து கொள்ளவே மனம் விரும்பும். நாம் உடுத்தி இருக்கும் எந்த ஆடையும் இந்த காற்றை தாக்கு பிடிக்காது. வெளி நாட்டவர்கள் இது பற்றி நன்கு தெரிந்து தேர்ந்தவர்கள். நாம் நம் ஊரில் அடிக்கடி கூறும் “கொஞ்சம் காற்று அடித்தால் நல்ல இருக்கும்” என்ற வாசகம் இங்கே “கொஞ்சம் காற்று அடிக்காமல் இருந்தால் தேவலை” என்று மாறிவிடும் நிலைதான். இந்த ஊதக்காற்றுக்கு பயந்து, உள்ளே ஓடி இரண்டாம் தளத்தில் அமர்ந்து அங்குள்ள கண்ணாடி வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.
தூரத்தில் தெரிந்த கலே (Calais) துறைமுகம் எனக்கு நான் போதிக்கும் இங்கிலாந்தின் சமூக வரலாற்றை ஞாபகப்படுத்தியது. Calais என்று எழுத்துக்கள் இருந்தாலும் பிரெஞ்சு மொழியில் கடைசியில் வரும் S மற்றும் t உச்சரிக்க மாட்டார்கள். கலே என்றுதான் உச்சரிக்க வேண்டும். பழங்காலத்தில் இருந்தே வடக்கு பிரான்சில் அமைந்துள்ள இந்த துறைமுகம் மிகவும் பரபரப்பான, வர்த்தகத்துக்கும், போக்குவரத்துக்கும் முதன்மையாகத் திகழ்ந்த ஒரு கடற்கரை நகரம். முதலில் இந்தத் துறைமுகம் ஆங்கிலேயர்களின் கைப்பிடியில் இருந்தது. இங்கிலாந்தின் கம்பளி வர்த்தகத்திற்கு உறுதுணையாக இருந்து அந்த நாட்டின் பெருமைக்குரிய போர்ட் (port) ஆக “ஆங்கில முடியாட்சியின் பிரகாசமான நகை” (the brightest jewel in the English Crown) என்ற பெயருடன் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.
கி.பி. 1558 -ல் பிரான்ஸ் இந்த துறைமுகத்தைத் தன் வசப்படுத்தியது. அதற்கு முன்பிருந்தே இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் நூற்றாண்டு கால போர் (100 years of war) நடந்து பகைமை மூண்டிருந்தது. போர்களின் பல காரணங்களில் இந்த துறைமுகத்தைக் கைப்பற்றுவதும் ஒன்றாகும். ரோமானியர்கள் காலத்தில் உலகப்புகழ் பெற்ற ஜூலியஸ் சீசர் ஆயிரம் படகுகளுடன் இங்கே வந்து தங்கி பிரிட்டானியா (Britania) என்று அந்த காலத்தில் அழைக்கப்பட்ட கலிடோனியா (Calidonia – தற்போது ஸ்காட்லாந்து) பகுதியை தாக்கி பிடிக்க முற்பட்டபோது இந்த துறைமுகத்துக்கு கொடுத்த பெயர் கேலிடம் (Calitum). அதில் இருந்து மருவி வந்ததே தற்போதைய பெயர்.
இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே உள்ள 26 மைல்கல் தொலைவை கடக்க முப்பது நிமிடங்கள் மட்டுமே ஆகும். எனவே அந்தப் பயணம் ஒன்றும் கடினமானது அல்ல. இதே போன்று ஒரு பயணம் கடந்த 2015 – ல் ஸ்காட்லாந்தில் இருந்து அயர்லாந்துக்கு மேற்கொண்டிருக்கிறோம். இதே போன்றே அனைத்து வசதிகளும் நிறைந்த ஃபெரியில் ஒரு பயணம். மிக குறுகிய காலம் மட்டுமே பயணிப்பதால் பெரிதாக உடல் உபாதைகள் வர வாய்ப்பு இல்லை. கலே துறைமுகம் தூரத்தில் இருந்து பார்க்கையிலே மிகவும் கூட்டத்துடன் பரபரப்பாகவே தென்பட்டது. கடல் பறவைகளான சீ கல்ஸ் (Sea Gulls) குறுக்கும் நெடுக்குமாக கூட்டமாக பறந்து கொண்டிருந்தன.
மதியம் ஒரு மூன்று மணி அளவில் அந்தக்கரையைச் சென்றடைந்தோம். அங்கே இறங்கியவுடன் எங்கள் பெட்டிகள் கீழ் தளத்தில் இருந்து தள்ளு வண்டி மூலம் மேலே கொண்டு வரப்பட்டு கரை சேர்க்கப்பட்டன. அவற்றைச் சரி பார்த்து எடுத்துக்கொண்டு, அங்கே எங்களுக்காகக் காத்திருந்த எங்களின் குழுவிற்கான பிரத்தியேக பேருந்தில் அனைத்து பெட்டிகளையும் கீழ் பகுதியில் வைக்க ஓட்டுநர் உதவி செய்தார். இனி இந்த பேருந்துதான் எங்கள் சுற்றுப்பிரயாணம் முடியும் மட்டும் எங்களுடன் இருக்கும் வாகனம் என எங்கள் வழிகாட்டி திரு.பாலா கூறினார். பேருந்தின் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, பேருந்து புறப்பட்டு பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிஸ் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாரிஸ் நகரம் சென்றடைய சுமார் மூன்றரை மணி நேரம் பிடிக்கும் என்பதால் அனைவரும் அமைதியாக உறங்க ஆரம்பித்து விட்டனர். வழி எங்கும் மரங்கள் மட்டுமே தென்பட்டன தவிர லண்டனில் பார்த்த பசுமை மற்றும் பூக்கள் இங்கே காணப்படவில்லை. சாதாரணமான எப்போதும் பயணத்தில் பார்க்கக்கூடிய காட்சியாகத்தான் தெரிந்தது. வழியில் தென்பட்ட அனைத்து ஊர்களின் பெயர்களும் பிரெஞ்சு மொழியில் இருந்ததால் மனதில் பதியவில்லை.
இடையில் ஒரு இடத்தில் எக்ஸிட் எடுத்து (அகலப்பாதையில் இருந்து பிரிந்து சிறு சாலைக்கு வருவது) இயற்கை உபாதைகள் தீர்க்க வண்டி பத்து நிமிடம் நின்றது. அப்போதுதான் கவனித்தேன் என் மகனின் கண்கள் சிவந்து முகம் வாடிக்கிடந்தது. அவனும் தனக்கு தொண்டை மற்றும் உடல் மிகவும் வலிப்பதாகவும் கூறினான். எனக்கு பகீரென்றாகி விட்டது. ஏதாவது சுரம் வந்து விடுமோ என உள்ளூர பயம். இருந்தாலும், அதை மறைத்துக்கொண்டு அங்கே பெர்ரியில் மேல் தளத்தில் நின்றதால் அப்படி ஆகி இருக்கும் என்று சமாதானம் கூறி விட்டு, என்னிடம் இருக்கும் கைப்பையில் உள்ள க்ரோசின் மற்றும் கால்பால் மாத்திரைகளைத் தேடினேன்.
அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது அது விமான பயணத்தின் போது கைப்பையில் வைக்க அனுமதிக்காவிடில் என்ன செய்வது என்ற காரணத்தினால் பெரிய பெட்டியில் வைத்து, தற்போது அந்த பெட்டி பேருந்தின் கீழ்தளத்தில் அனைத்து பேரின் பெட்டிகளுடன் கலந்து எங்கே உள்ளது என்று கூட தெரியாத வகையில் உள்ளது என்பது. ஒரு க்ரோசின் சாப்பிட்டால் சரியாகி விடும் என்பது என் கணிப்பு. ஆனால் மாத்திரை கைவசம் இல்லை.
ஸ்டோரில் உள்ளே பார்த்தால் மாத்திரைகள் வேறு பெயரில் இருந்தது. என் மகன் ஒரு மாத்திரையையும் வேண்டாம் என கூறி விட்டான். வேறு வழி இல்லாமல், அந்த ஸ்டோரில் உள்ள சிறிய ட்ரிங்க்ஸ் கடையில் ஒரு காபி என்று வாங்கி (நம்ம ஊர் காபி அல்ல. கொஞ்சம் வெந்நீர், சில் என நுரையுடன் பால், சர்க்கரை நாம் போட்டுக்கொள்ள வேண்டும்), அதில் அந்தக் காபி வழங்கிய பெண்மணியிடம் கொஞ்சம் சுடுதண்ணீர் கேட்டு வாங்கி என் மகனைக் குடிக்க வைத்தேன். சூடு நீர் கிடைக்க அங்கே தோப்புக்கரணம்தான் போட வேண்டும். அதனால்தான் நம் ஊரில் ஒரு வாக்கியம் சொல்லுவார்கள் “ஒரு சுடுதண்ணி கொடுக்கக் கூட துப்பு இல்லை” என. வெளியே சில்லென்று இருப்பது போல் அவர்கள் குடிப்பதும் சில்லென்றுதான். சூடான பானங்கள் அவர்கள் விரும்புவது இல்லை. சுடுநீர் பல சமயங்களில் நமக்கு நல்ல உதவி பண்ணும். ஆனால் கிடைப்பது கடினம் அங்கே.
பேருந்து புறப்பட்டவுடன், என் மகனை நன்கு உறங்க சொல்லிவிட்டு, என் மனதிற்குள்ளோர் இடைக்காலப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஓடி வந்தேன். என் இஷ்ட தெய்வங்கள் வாழும் கோவிலுக்கு ஒரு சூறாவளி பிரயாணம் மேற்கொண்டு சுரம் அல்லது எந்த கஷ்டமும் என் மகனுக்கு நேர்ந்து விடக்கூடாது என்று வேண்டினேன். பின் மனம் சிறிது அமைதி அடைந்தவுடன் நானும் உறங்க ஆரம்பித்தேன். இடைஇடையே என் மகனின் கரத்தைத் தொட்டு பார்த்து சூடு இருக்கிறதா என சரி பார்த்துக்கொண்டே இருந்தேன். கடைசியாக சுமார் ஆறு மணி முப்பது நிமிட அளவில் பாரிஸ் நகரம் அடைந்தோம்.
இரவு உணவு எட்டு மணி அளவில் இந்திய உணவகமொன்றில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால், உணவை முடித்து விட்டுத்தான் நாங்கள் தாங்கும் விடுதிக்கு செல்ல வேண்டும். எனவே அது வரை பாரிஸ் நகரின் பிரபலமான இடங்களை பேருந்தில் இருந்தே பார்த்தோம். முதலில் நாங்கள் பார்த்தது Champs-Élysées என்ற மிகவும் அழகான அவென்யூ உள்ளது. அதன் அருகே The Arc de Triomphe de l’Étoile என்ற நினைவாலயம் உயர்ந்து நிற்கிறது. பிரஞ்சு புரட்சியின் போதும், நெப்போலியன் வழிநடத்திய போர்களின் போதும் இறந்த வீரர்களுக்கான நினைவாலயம் என்று கூறப்படுகிறது.
Place de la Concorde எனப்படும் இடம் பாரிஸ் நகரத்தின் மொத்த அழகையும் நம் கண்களுக்கு விருந்தாகும் விதமான இடமாக அமைந்துள்ளது. அங்கிருந்து தூரத்தில் தெரியும் ஐஃபெல் டவர், (Eiffel Tower) தேசிய அசெம்பிளி போன்ற காட்சிகளுடன் அமைந்த ஒரு சதுக்கம். அங்கே நெப்போலியன் குதிரை மீது உள்ளது போன்ற ஒரு சிலையும் உள்ளது. இந்த சதுக்கம் வரலாற்றிலும் புகழ் பெற்ற ஒரு இடமாகும். பிரெஞ்சு புரட்சியின் போது பல ராஜ குடும்பத்தை சார்ந்த, பிரஞ்சு அரசி மேரி அண்டானெட் (Marie Antoinette) உள்பட .அனைவரின் தலையும் கில்லட்டின் (guillotine) என்ற இயந்திரத்தின் மூலம் சீவப்பட்டது இந்த இடம்தான்.
அங்கிருந்து நகர்ந்து செல்லும் வழியில் சென் நதியும் (Seine River), அதன் பாலங்களும் தெரிகின்றன. பாரிஸ் நகரத்தின் முக்கியமான இடங்கள் அனைத்தும் சென் நதியின் இரு கரைகளிலும் அமைந்துள்ளன. நதியில் படகுச்சவாரி சென்றால் அனைத்து இடங்களையும் பார்த்து விடலாம். பாரிஸ் நகரத்தில் அதிக அளவில் முன் காலத்தில் ராஜா ராணிகள் வாழ்ந்ததின் அடையாளமாக இன்றும் மாளிகைகள் நிறைய இடங்களில் காணப்படுகின்றன. அதனுடன் உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகங்களும் (Museums) உள்ளது.
நதியின் ஓரமாக அமைந்த சாலையில் பேருந்து சென்று கொண்டே அனைத்து முக்கிய இடங்களையும் நோட்டமிட்டுக்கொண்டே சென்றோம். அப்போது நாங்கள் பார்த்த ஒரு விஷயம் பற்றி இங்கே குறிப்பிட எண்ணுகிறேன். பேருந்து ஒரு சைகை விளக்கில் பச்சை விளக்குக்காக காத்திருக்கும் வேளையில், திடீரென விசில் சத்தமும் அதைத் தொடர்ந்து எங்கள் பேருந்தின் அருகில் இருந்த நடைபாதையில் பாரிஸ் நகர போலீஸ் (அதில் பெண்கள்தான் அதிகம்) யாரையோ துரத்துவதும் தென்பட்டது. வேகமாக ஓடிய போலீஸ் மகளிர் சடாரென அந்த நபரை மடக்கி பிடித்து அவரின் பின்னங்காலில் மண்டியிட செய்து அவர் பின்னங்கழுத்தை அழுத்தி பிடித்து அவரது நிமிர விடாமல் செய்து விட்டனர். உடனே அங்கே இருந்த மற்ற போலீசார் கையில் உள்ள விலங்கை அந்த நபருக்கு மாட்டினர். அந்த நபரும் வேறு வழி இல்லாமல் அமைதியாக மண்டியிட்டவாறு இருந்தார். அவர் கையில் மற்றும் தோளில் நிறைய மூட்டைகள். கூர்ந்து கவனித்ததில் அவர் ஒரு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த கறுப்பினத்தவர் எனத்தெரிய வந்தது.
எங்கள் பயண வழிகாட்டி திரு. பாலா இது பற்றி கூறுகையில், பாரிசில் முறையான குடியுரிமை பெறாமல் வந்துள்ள கறுப்பினத்தவர் (Illegal Immigrants) அவர்கள் என்றும் அவர்கள் தொழில் திருட்டுப்பொருட்கள் விற்பனை செய்வது என்பதுதான். இந்த மாதிரி திருட்டுப்பொருட்கள் விற்பது மற்றும் அதை வாங்குவதும் பாரிஸ் நகரில் சட்டப்படி குற்றம் என கருதப்படுகிறது. எனவே இந்த மாதிரி பொருட்கள் யாரேனும் விற்பனை செய்தால் வாங்க கூடாது எனவும், அப்படி மீறி வாங்கும் போது இவ்வாறு போலீஸ் பிடித்து விட்டால் 2000 யூரோ அபராதம் வாங்குபவர்களும், சிறை தண்டனை அந்த ஆப்பிரிக்க விறபனையாளர்களுக்கும் என மேலும் கூறினார்.
அந்த காட்சி என் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களின் நிலை மனதில் மிகவும் பரிதாப உணர்வை தோற்றுவித்தது. ஆப்பிரிக்கா மிகுந்த வளங்கள் நிறைந்த நாடு. காடுகள், நதிகள், நிலங்கள் என நீண்டு பறந்து கிடைக்கும் பூமியை நான் ஆப்பிரிக்காவின் டான்சனியா நாட்டுக்கு 2004 -ம் வருடம் சென்ற போது கண்டுஇருக்கிறேன். ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு உடல் வலிமையும் அதிகம். தங்கள் உடல் உழைப்பை பயன்படுத்தி தங்கள் நிலத்தில் அவர்கள் விளைவித்து வாழ்ந்தாலே ராஜா மாதிரி அவர்கள் நாட்டிலேயே வாழலாம். அதை அவர்களுக்குச் சரியான முறைகள் உணர்த்தி வழிகாட்டி செல்ல நல்ல தலைவர்கள் இல்லை என்பதே அவர்களில் இந்த நிலைக்கு காரணம். பாரிஸ் நகர போலீஸ் மீது குற்றம் காண முடியாது. அவர்கள் கடமை அவர்கள் சரியாக செய்கிறார்கள். ஆனால் நாடு விட்டு நாடு வந்து இப்படி இன்னலுக்கு ஆளாகும் ஆப்ரிக்க மக்களைப் பார்க்கையில் என மனதிலோர் இனம் புரியாத வேதனை. இவர்களால் பாரிஸில் சில குற்றங்களும் நடக்கின்றன என்பதும் ஒரு தகவல்.
அவர்களுக்கு நாம் எந்த வகையிலும் உதவ முடியாது. கறுப்பினத்தவர் நிறைய அளவில் பாரிஸில் எந்தச் சுற்றுலா தலம் சென்றாலும் பார்க்கலாம். வயது வித்தியாசம் இல்லாமல் சிறு பையனில் இருந்து வயதான ஆண்கள் வரை மற்றும் தலையை பல முடிச்சுகளாக போட்டுகொண்டு பெண்களும் அவர்கள் கையில் கைப்பைகளோ அல்லது கைக்கடிகாரம் மேலும் நினைவுப்பொருட்கள் எனப்படும் Souvenir வைத்துக்கொண்டு நம்மிடம் ஓடி வருகிறார்கள். இந்தியர்கள் என்று பார்த்தவுடனே கண்டு கொள்ளும் அவர்கள் நமஸ்தே என்று ஹிந்தியில் பேசுகிறார்கள். அவர்களைக் கண்டு கொள்ளாமல் நாம் செல்ல வேண்டும். ஆனால் எங்கள் குழுவினரில் சிலர் அவர்களிடம் பேரம் பேசி பொருட்கள் வாங்கத்தான் செய்தார்கள். போலீஸ் பார்க்காத வரையில் ஒன்றும் இல்லை. பார்த்து விட்டால் அதோ கதிதான்.
அடுத்து எங்கள் மனதைப் பாதித்த ஒரு விஷயம் Pont de l’Alma என்ற சாலைப்பாலத்தின் ஒரு பக்கத்தில் பார்த்த Flame of Liberty என்னும் நினைவு சின்னம்.
தங்க இலைகளால் சுற்றப்பட்ட ஒரு தீப்பிழம்பு கொண்ட டார்ச் போன்ற ஒரு நினைவுச்சின்னம் அங்கே வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த டார்ச் வடிவம் நியூயார்க் நகரில் உள்ள சுதந்திர தேவியின் சிலையின் கையில் உள்ள தீப்பிழம்பு வடிவத்தின் இன்னொரு மாதிரி ஆகும். நியூயார்க் சுதந்திரதேவி சிலையே பிரான்ஸ் நாட்டு கலைஞரை கொண்டு வடிவமைக்கப்பட்டு பாரிஸ் நகர மக்களால் அமெரிக்காவிற்கு பரிசாக வழங்கப்பட்டதே ஆகும். அதற்குப் பதில் பரிசாக அமெரிக்கா பிரான்சுக்கு வழங்கி கௌரவித்ததே இந்த சுதந்திரத்தீப்பிழம்பு.
1989 -ம் வருடம் அமெரிக்காவால் வழங்கப்பட்ட இந்த நினைவுப்பரிசு அப்போதிலிருந்து இந்த இடத்தில் நிறுவப்பட்டு இருந்தாலும், 1997 -ம் ஆண்டில் இருந்து இதற்க்கு வேறு ஒரு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. 1997 -ம் ஆண்டில்
இங்கிலாந்தின் ஆராதிக்கப்பட்ட இளவரசி டயானா பாரிஸ் நகரில் ஒரு கார் விபத்தில் அகால மரணம் அடைந்தது அனைவருக்கும் நினைவிருக்கும். துயர் நிறைந்த அவரின் மரணம் சம்பவித்த இடம் இந்த நினைவிடத்தின் கீழ் அமைந்துள்ள குகைப்பாதையில் சரியாக இந்த சுதந்திரத்தீப்பிழம்பு சின்னத்தின்கீழ் ஆகும் என்பதால், அதன் பின்னர் மக்கள் அந்த நினைவுச்சின்னத்தை டயானாவின் நினைவுச்சின்னமாக மாற்றிவிட்டனர். அவர் உயிர் துறந்த இடத்தின் சோக சாட்சியாக அந்த தங்கப்பிழம்பு நின்று கொண்டு இருப்பதை பார்க்கும் போது மனது அந்த நினைவுச்சின்னத்தின் அழகை ரசிக்க முற்படவில்லை. மாறாக கொஞ்சம் தொய்வுதான் ஏற்பட்டது. வேறு எந்த நாட்டிலோ பிறந்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து உலகம் முழுதும் புகழப்பட்டு இந்த பாரிஸ் நகரத்தில் ரத்தமும் சதையும் விபத்தில் இழந்து சாக வேண்டும் என்ற தலைவிதி அந்த இளவரசிக்கு என்பது மனம் வருத்தப்படும் ஒரு விஷயமே.
இவ்வாறாக ஒரு சுற்று பாரிஸ் நகரை சுற்றிய பின் இரவு உணவை முடித்துக்கொண்டு Hotel Novotel Paris Creteil le Lac என்ற விடுதியில் தங்கச்சென்றோம். இரவு உணவின் போதே சிறிது சுடுதண்ணீர் மீண்டும் வாங்கி அதனுடன் கொஞ்சம் குருமிளகும் (Pepper) சேர்த்து என் மகனுக்கு குடிக்க கொடுத்தேன். கொஞ்சமாக சப்பாத்தி மற்றும் சிக்கன் குழம்பு சாப்பிடவும் செய்தான். சரி, இனி நன்கு தூங்கினால் கொஞ்சம் பரவாயில்லை என நினைத்துக்கொண்டு தங்கும் அறைக்கு சென்றோம். லண்டனில் இருந்த அளவு வசதிகள் இந்த விடுதியில் இல்லை. கொஞ்சமாகத்தான் இடம். மேலும் அறையில் காபி போடும் சாதனங்கள் வசதி குறைவு. ஆனால் சமாளிக்கும் அளவு இருந்தது. அந்த விடுதி அமைந்துள்ள இடமும் பாரிஸ் நகரத்தில் இருந்து ஒரு நாற்பது நிமிட பயணத்திற்குப்பின்தான் செல்ல முடியும். பாரிஸ் நகரில் விடுதிகள் கட்டணம் அதிகம். மேலும், கோடை விடுமுறைகளில் விடுதிகள் அனைத்தும் நிரம்பி விடும் என்பது ஒரு காரணம்
மாத்திரைகள் இப்போது எடுக்க முடியும் என்றாலும், என் மகன் மாத்திரைகள் வேண்டாம் எனக்கூறியதால், அவற்றை எடுத்து கைப்பையில் தயாராக வைத்துக்கொண்டேன். அடுத்த நாள் நிறைய இடங்கள் நாங்கள் பார்க்க வேண்டிய லிஸ்டில் உள்ளதால் இரவு சீக்கிரம் உறங்கி காலை எட்டு மணிக்கு காலை உணவை முடித்து தயாராக இருக்க வேண்டும் என திரு. பாலா கூறி இருந்ததால், சீக்கிரமே உறங்க சென்றோம்.
அடுத்த நாள் காலை எட்டு மணியளவில் தயாராகி காலை உணவை முடித்துக்கொண்டு (மீண்டும் ஒரு முறை சுடுதண்ணீர் பானம் என் மகனுக்கு). பாரிஸில் முதலில் பார்க்கும் இடமாக லூவ்ரு மியூசியம் சென்றோம்.. லூவ்ரு மியூசியம் பற்றி சில குறிப்புகள்.
1 உலகிலேயே மிக பெரிய மியூசியம், பரப்பளவிலும் சரி (சுமாராக 650,000 சதுர அடி பரப்பளவு -அதாவது ஒரு 15 ஏக்கர் நிலம் கொண்டது), உள்ளே இருக்கும் கலைப்பொருட்களின் எண்ணிக்கையிலும் சரி. எனவே. இந்த மியூசியம் ஒரே நாளில் பார்ப்பது என்பது எந்த ஒரு மனிதனுக்கும் சாத்தியமில்லை.
2 இந்த மியூசியம் சுமார் 380,000 கலைப்பொருட்களை உள்ளடக்கியதாகும். அதில் கொஞ்சம் பார்வையாளர்கள் பார்க்க முடியாது.
3. இந்த மியூசியம் பதினாறாம் நூற்றாண்டிலேயே தொடர்ச்சியாக மற்றபல மியூசியம் மற்றும் பாரிஸ் நகரின் மிக பழைய பூங்காவுடனும் இணைக்கப்பட்டுள்ளது..
4, ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 15,000 பார்வையாளர்கள் பார்வையிடுவதற்காக தகவல். அதில் 70 சதவீதம் வெளி நாட்டவர். கடந்த 2014 ஆண்டில் மட்டும் 9.3 மில்லியன் பார்வையாளர்கள் வந்து சென்றது சிறப்பிற்குரிய விஷயம். இங்கே வேலை பார்க்கும் பணியாளர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2000..
5. முதலில் இந்த இடம் ராஜ குடும்பம் வசிக்கும் அரண்மனையாக இருந்தது. பின் வெர்சையில் (Versailles) அரண்மனை கட்டப்பட்ட பின் ராஜகுடும்பம் அங்கே தன் ஜாகையை மாற்றிக்கொள்ள, இது காலப்போக்கில் கலைப்பொருட்கள் வைத்து இருக்கும் கோட்டையாக மாறி பின் அருங்காட்சியகமாக பார்வையாளர்களுக்கு 1793 ஆண்டு முதல் முதல் திறந்து விடப்பட்டது..
6. உலகத்திற்கே பெயர் சொன்னால் தெரியும் அளவு பிரபலமான கலைஞர் லியோனார்டோ டாவின்சியின் (Leonardo Davinci) படைப்புகளில் மிக சிறந்த ஒன்றான அவர் தன் கைப்பட வரைந்த ஓவியமாக மோனா லிசா (Mona Lisa) என்ற படம் இந்த அருங்காட்சியகத்தின் முதலாம் மாடியில் ஆறாம் அறையில் (அந்த அறையின் பெயரே மோனா லிசா அறை) காணப்படுகிறது. அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையும் அனைத்து பார்வையாளர்களும் அடித்து பிடித்து முதலில் ஓடுவது இந்த அறைக்குத்தான்.
7. 21 மீட்டர் அடி உயரம் கொண்ட கண்ணாடியில் ஆன ஒரு பிரமிட் (Pyramid) இந்த அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் உள்ளது. மேல்புறமாகவும், கீழ்த்தளத்தில் தலைகீழ் பிரமிட் ஆகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது பாரிஸின் ஒரு முக்கிய லாண்ட் மார்க் (Land Mark) ஆகக்கருதப்படுகிறது.
8. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் அனைத்து எட்டு விதமான துறையின்கீழ் பிரிக்கப்பட்டு உள்ளன. எகிப்து, இஸ்லாம், கிழக்கத்திய நாடுகளின் கலைவடிவங்கள், ஆப்பிரிக்க நாட்டு கலைப்பொருட்கள், ஓவியங்கள், சிலைகள் என தரம் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள கலைப்பொருட்களுள் அறுபத்தி ஐந்து சதவீதம் பிரஞ்சு நாட்டு கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டவை.
9. வரலாறு மட்டும் அல்லாது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் சார்ந்த கலைப்பொருட்களும் இங்கே அமைக்கப்பட்டு இருப்பதே இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு
இப்படிப்பட்ட பெருமைகளை உள்ளடக்கிய லூவ்ரு மியூசியம் உள்ளே நீண்ட வரிசையில் நின்று நாங்கள் உள்ளே சென்ற போது மணி காலை பத்து இருபது இருக்கும். எங்கள் பயண வழிகாட்டி திரு.பாலா அவர்கள் எங்களுக்கு கொடுத்த நேரம் இரண்டு மணி நேரம் மட்டுமே. பன்னிரண்டு முப்பது மணி அளவில் வெளியே உள்ள பேருந்து நிறுத்தம் அனைவரும் வந்து விடவேண்டும் என்று கூறிவிட்டு, முதலில் எங்களை மோனா லிசா ஓவியத்தை பார்த்து விட அதற்கான தளம் பற்றியும் கூறினார். எங்களிடம் நுழைவு சீட்டு கொடுத்து விட்டு அவர் வெளியே சென்று விட்டார்.
உள்ளே நுழைந்ததும் அங்கே உள்ள இலவச கையேடுகள் எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் எங்கே என்ன இருக்கிறது என்ற வரைபடமும், எப்படி உள்ளே செல்வது எப்படி வெளி வருவது மற்றும் கழிவறை வசதிகள் போன்றவைகள் குறிப்பிடப்பட்டு இருக்கும். எல்லோரையும் போலவே நாங்களும் ஓடியது மோனா லிசா நோக்கியே. முதலிலேயே நான் பார்த்திருந்தாலும், தற்போதும் ஒரு முறை பார்த்து புகைப்படம் எடுத்து கொள்ள வேகமாக முன்னேறினோம். மிக பிரமாண்டமான அந்த அருங்காட்சியகத்தில் பார்ப்பது எல்லாமே வியப்புக்குரிய விஷயமே. பெரும்பான்மையான ஓவியங்கள் கிருத்துவமதம் சார்ந்த கதைகள் மற்றும் பைபிளின் சாராம்சங்கள் அடங்கிய விஷயங்களையே வெளிக்காட்டுகிறது. தத்ரூபமான முக பாவனைகளும் உடல் அமைப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன, ஆனால் ஒவ்வொன்றாக பார்க்க நமக்கு போதிய நேரம் இல்லை.
உலகப்புகழ் பெற்ற மோனா லிசா ஓவியம் அனைவரும் நினைக்கும் அளவு மிக பிரமாண்டமானது அல்ல. இன்னும் சொல்ல போனால் அளவில் மிகவும் பெரியதாக இருக்கும் பல ஓவியங்களின் நடுவே இந்த ஓவியம் ஒரு சிறு கொசு போன்றே தென்படுகிறது. ஆனால் அங்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் அந்த ஓவியத்தைப் புகைப்படம் எடுத்த வண்ணம் சூழ்ந்து இருக்கின்றனர். ஓவியம் உள்ள சுவற்றின் பத்து அடிக்கு முன்னரே தடுப்பு கட்டி சரியான முறையில் யாரும் ஓவியத்தை அணுகாதவாறு பாதுகாப்பு செய்து உள்ளார்கள். மேலும் ஓவியம் இருப்பது ஒரு குண்டு துளைக்காத கண்ணாடியில். இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் 1911 -ம் ஆண்டு திருடப்பட்டு, மீண்டும் இரண்டு வருடம் கழித்து திரும்ப மீட்டெடுக்கப்பட்டது.
மோனா லிசா என்ற பெண் பற்றிய தகவல் இன்று வரை புதிராகவே உள்ளது. எதற்காக அவள் அப்படி ஒரு மர்ம புன்னகை, அதுவும் யாரை நோக்கி புரிகிறாள் என்பதும் டாவின்சி மட்டுமே அறிந்த உண்மை. ஒரு சிலர் அவள் ஒரு இத்தாலிய தளபதியின் மனைவி என்றும் ஒரு சிலர் ஓவியர் டாவின்சி தன்னை பெண்ணாக கருதிக்கொண்டு மாற்றி வரைந்த படம் என்றும் கூறுவார். இதற்கு, மேலும் சுவையூட்ட 2003 -ம் வருடம் வெளிவந்த டான் பிரௌன் (Dan Brown) எழுதிய டாவின்சி கோட் (Davinci Code) என்ற புத்தகம் இந்த அருங்காட்சியகத்தில், மோனா லிசா ஓவியத்தின் பின்னணியில் கதையை புதிராக கொண்டு சென்று இருந்தது ஆங்கிலக்கதை வாசிப்பாளர்கள் மத்தியில் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி, இந்த அருங்காட்சியகத்தின் புகழை மேலும் பிரபலமாக்கியது. நானே 2007 -ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து திரும்பி வரும் வேளை, ஒரு வாரம் பாரிஸில் தங்கி இருந்த போது இந்த ஓவியம் பார்க்க என் அம்மாவுடன் ஆவலாக வந்திருந்தேன்.
எல்லா அறைகளிலும் உள்ளே அமர்ந்து பார்க்க வசதியாக இருக்கைகள் உண்டு. ஆங்காங்கே, சிறு சிறு மாணவர்கள் வந்து அமர்ந்து அந்த ஓவியங்களை கவனமுடன் பார்த்து தங்கள் கையில் உள்ள காகிதங்களில் பிரதி எடுத்து கொண்டிருந்தார்கள். மேலும் ஓவியக்கலை பயிலும் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் ஆசிரியருடன் வந்து ஒவ்வொரு ஓவியம் பற்றியும் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வேக வேகமாக ஓடி ஓவியங்களை மின்னல் வேகத்தில் பார்வையிட்டு கழிவறையை கண்டு பிடித்து இயற்கை உபாதையை முடித்து விட்டு ஆப்பிரிக்க கலைப்பொருட்கள் பகுதியில் பார்வையிட்டுவிட்டு திரும்பும்போது வழிதவறி விட்டோம்.
எப்படிச் சென்றாலும் சுற்றி சுற்றி ஒரே இடம்தான் வந்து சேர்கிறோம். அங்கே அமர்ந்துள்ள ஊழியரிடம் கேட்டபோது அவர் பிரஞ்சு மொழியில் வேண்டா வெறுப்பாக ஏதோ கூறிவிட்டு அமர்ந்து விட்டார். கையேட்டில் உள்ள வரைபடம் காட்டும் வழியும் எங்களுக்கு சரியாகப் புலப்படவில்லை. கடைசியாக அந்த சிலைகளின் பெயரை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு துப்பறிவாளன் போல் என் மகன் கண்டுபிடிக்க ஒரு மாடிப்படிக்கட்டைக் கண்ணில் பார்த்து கடைசியாக வெளியே வந்து சேர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டோம். பிறகுதான் தெரிந்தது எங்கள் குழுவினர் பலர் இப்படி வழி தேடித்தான் உள்ளே அலைந்து கொண்டிருந்தனர் என்று.
அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் யூரோ டிஸ்னி (Euro Disney) எனப்படும் கேளிக்கை நகரம். பாரிஸ் நகரில் இருந்து சுமார் 20 மைல்கல் தொலைவில் அமைந்துள்ள இந்த ஒரு தீம் பார்க் (Theme park). வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் உகந்த ஒரு இடம் என்றாலும், பாரிசில் பார்க்க வேண்டிய பல சரித்திர புகழ் பெற்ற இடங்களைத் தவிர்த்து இந்த மாதிரி ஓரிடம் பயண ஏற்பாட்டாளர்கள் செய்வது ஒருவகையில் பிரயாணிகளைக் கவரும் ஒரு யுத்தியே என எனக்குத் தோன்றியது. நாங்கள் 2007 -ம் வருடம் அமெரிக்கா சென்ற போது புளோரிடா (Florida) மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ (Orlando) நகரில் அமைந்திருந்த டிஸ்னி உலகத்தின் ஒரு சிறிய பகுதி ஒரு நாள் மட்டும் கண்டு களித்தோம். அதே போல் இங்கே பாரிஸ் நகரில் உள்ள யூரோ டிஸ்னி நகருக்கும் நான்கு மணி நேரம் மட்டுமே கொடுக்கப்பட்டது.
4500 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த கேளிக்கை நகர் இரண்டு பிரிவுகளாக உள்ளது. ஒன்று. டிஸ்னி ஸ்டூடியோஸ்- (Disney Studios). இன்னொன்று டிஸ்னி பார்க் (Disney park). இரண்டுக்கும் தனித்தனியாக நுழைவு சீட்டு வாங்கி இரண்டு நாட்கள் தனித்தனியாக காணலாம். எங்களுக்கு இந்த இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க எங்கள் பிரயாண ஏற்பாட்டாளர்கள் முதலிலேயே கூறி இருந்தனர். ஏனெனில் ஒரு சில மணி நேரங்களே செலவிடப்போவதால் ஒரு பகுதி மட்டுமே காண முடியும் என்பதுதான் காரணம். இந்த இரண்டு பகுதியில் டிஸ்னீ பார்க் குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த மற்றும் ஜெயண்ட் வீல் போன்ற பல்வேறு விளையாட்டுக்கருவிகள் அடங்கிய இடம் ஆதலால், அதிகம் ஷோ நடக்கும் டிஸ்னி ஸ்டுடியோஸ் (Disney Studios) நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.
எங்கள் குழு அவரவர் விருப்பத்திற்கேற்ப இரண்டாகப்பிரிந்தது. மாலை அனைவரும் குறிப்பிட்ட இடத்தில கூட வேண்டும் என்ற விதிமுறையை பலமுறை அழுத்திக்கூறிவிட்டு எங்கள் பிரயாண வழிகாட்டி திரு. பாலா எங்களுக்கான மதிய உணவை முதலிலேயே இந்திய உணவகமொன்றில் தயார் செய்து வாங்கி வைத்துள்ளது) எங்கள் கையில் கொடுத்து, நுழைவுச்சீட்டும் கொடுத்து எங்களை கட்டவிழ்த்து விட்டார். எல்லாருக்கும் ஒரே சுதந்திர உணர்வு. ஆளுக்கொரு திசையில் வேகமாக செல்ல ஆரம்பித்தார்கள். நாங்கள் மூவரும் டிஸ்னி ஸ்டுடியோஸ் நோக்கி நகர்ந்தோம்.
இந்த இடத்தில டிஸ்னி லாண்டின் பெருமை பற்றி கண்டிப்பாக ஒரு சில வார்த்தைகள் கூறத்தான் வேண்டும். உலகின் தலை சிறந்த கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கும் இடங்களில் முதல் இடத்தை பிடிப்பது இந்த டிஸ்னி லேண்ட் என்னும் வால்ட் டிஸ்னி (Walt Disney) நிர்வாகத்தாரால் உருவாக்கப்பட்ட ஒரு பிரமிப்பூட்டும் இடம். கார்ட்டூன் பாத்திரங்களை பிரதானமாக வைத்து பல கேளிக்கை விளையாட்டுக்கள், காட்சிகள், வண்ணங்கள் நிரம்பிய இடங்கள் என மனிதனுக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ அனைத்தும் ஒரே இடத்தில கொடுத்து மிகவும் அற்புதமாக நம்மை வியப்பில் ஆழ்த்தும் இடம் என்றால் அது மிகையாகாது. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் இடம் இது என்பதில் ஐயமில்லை. அமெரிக்காவில்தான் இதன் தலைமை என்றாலும் அதே பாணியில் உலகின் சில பெரிய நகரங்களில் இந்த டிஸ்னி லாண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த யூரோ டிஸ்னி.
இங்கேயும் நமக்கு ஒரு வரைபடம் இலவசமாக கிடைக்கிறது. எங்கே என்ன கிடைக்கும், என்ன ஷோ நடக்கிறது, அந்த ஷோ நடக்கும் இடத்தின் கூட்ட வரிசையில் நாம் எவ்வளவு நேரம் காக்க வேண்டும் என்பதும் அங்கே உள்ள திரையில் ஓடிக்கொண்டே இருக்கும். நாங்கள் பார்த்த வரையில் ஒவ்வொரு காட்சிக்கும் குறைந்தபட்சம் அரைமணி நேரம் காத்திருத்தல் அவசியம் என்று காணப்பட்டது. பொதுவாக வருடம் முழுதும் கூட்டம் இருக்கும் என்றாலும், ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை ஆனதால் குடும்பத்துடன் அனைவரும் இங்கே வந்துவிடுவார் போலும்.
எல்லா இடங்களிலும் வரிசையில் காத்து செல்ல வேண்டிய கட்டாயம். ஆனால் நம் ஊர் போல் தள்ளுமுள்ளு எல்லாம் கிடையாது. தில்லுமுல்லும் கிடையாது. எந்த ஊர் ராஜாவானாலும் காத்திருந்துதான் செல்ல வேண்டும். பிரீமியம் நுழைவு சீட்டு அதிக பணம் கொடுத்து வாங்கி இருந்தால் அதில் குறிப்பிட்ட மணிநேரத்தில் அந்த ஷோ அல்லது ரைட் செல்ல அதில் அனுமதி இருக்கும். இதன் மூலம் காத்திருத்தலை தவிர்க்கலாம். அதற்க்கென தனியாக ஒரு வரிசை எல்லா இடங்களிலும் உள்ளது, நமது திருப்பதி பெருமாளை தர்ம தரிசனத்தில் பார்க்க காத்திருப்போருக்கும், பல ஆயிரங்களை கட்டி சீக்கிரம் நுழைந்து தரிசிப்போருக்கும் உள்ள வித்தியாசம் மாதிரிதான்.
நாங்கள் முதலில் வரிசையில் நின்று சென்றது ஒரு டிராம் (Tram) பயணம். பல பெட்டிகளை கொண்ட இந்த வசதியான டிராம் நம்மை அந்த பகுதியின் முக்கிய இடங்களுக்கு இட்டு செல்கிறது. போகும் வழியில் எல்லாம் ஹாலிவுட் படங்கள் எடுக்க பயன்படுத்திய கேமராக்கள், ராட்சச விளக்குகள் இன்னும் பல உபகரணங்கள், படங்களுக்கு பயன்படுத்திய சிலைகள், அரங்குகள், மற்றும் கார்கள் போன்றவை இரு மருங்கிலும் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. அதிலும் டால்மேஷன் கார் ஒன்று வெள்ளை நிறத்தில் கருப்பு பெரிய வட்டங்களுடன் அந்த டால்மேஷன் நாய் மாதிரியே வண்ணம் தீட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளது பார்ப்பதற்கு வியப்பாக உள்ளது. அது போக ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தும் கார்கள், மற்ற வாகனங்களும் காண முடிகிறது.
இந்த டிராம் பின் ஒரு மலைப்பாதை மாதிரியான ஒரு அரங்கில் மெதுவாக நுழைகிறது. அங்கே டிராம் நகர்ந்து கொண்டு வேளையில் திடீரென அந்த மலைக்குன்றில் உள்ள ஒரு காலி ட்ரம்மில் தீ பற்றி எரிகிறது. அடுத்த நொடி படபடவென பெருமழை கொட்டுகிறது. ஊழிக்காற்று சுழன்று அடிக்கிறது. கண் மூடி இமைத்து திறப்பதற்குள், அந்த மலைக்குன்றின் மறுபுறம் இருந்து சடாரென வெள்ளப்பெருக்கு புறப்பட்டு வந்து நாம் அமர்ந்து இருக்கும் ட்ராமை புரட்டி போடுவது போல் வெகு வேகமாக நம்மை நோக்கி வருகிறது. நாம் அமர்ந்து இருக்கும் டிராம் வேகமாக குலுங்கி புரண்டு விழுவது போல் போக்கு காட்டுகிறது. அனைவரும் அடிவயிற்றில் இருந்து கிளம்பிய பீதியில் வீல் என அலறிக்கொண்டே இருக்கும் அடுத்த நொடியில், வந்த வெள்ளம் நம்மை நெருங்காமல் அங்கே இருக்கும் பள்ளத்தில் காணாமல் போகிறது. நாம் அமர்ந்து இருக்கும் டிராம் ஒன்றுமே நடவாதது போல் உடலை குலுக்கிக்கொண்டு அடுத்த இடம் நகர்கிறது. கொஞ்ச நேரம் நாம் கதிகலங்கிப்போவது என்னவோ உண்மைதான். நம் மேல் லேசான நீர்த்திவலைகள் மட்டுமே மிச்சம்.
ஹாலிவுட் படங்களில் நாம் பார்க்கும் பல பயங்கரமான காட்சிகள் இவ்வாறு செட் போடப்பட்டு படமாக்கப்படுகின்றன என்பதே இந்த ஷோவில் நமக்கு அவர்கள் உணர்த்துவது. இதற்க்கு விளக்கம் கொடுக்கும் விதமாக டிராம் உள்ளே ஒரு படக்காட்சி. அதில் இருவர் பேசிக்கொண்டே எந்த படங்களில் இவ்வாறு நடக்கின்றன என்றும் நமக்கு சிறுகாட்சிகள் காட்டுகின்றனர். வெளியே நடக்கும் நிகழ்வுகளுக்கு உள்ளே உள்ள வீடியோ காட்சி அழகான விளக்கம் அளிப்பது மிகவும் அருமை. இது ஒரு அருமையான பயணம் ஆகிறது. நாங்கள் மிகுந்த சுவாரஸ்யத்துடன் ரசித்து சிரித்துக்கொண்டே இந்த காட்சிகளை பார்த்தோம்.
அடுத்ததாக நாங்கள் சென்றது ட்விலைட் ஹாலிவுட் டவர் ஹோட்டல் (Tiwilight Hollywood Tower Hotel) என்ற ஒரு அரங்கு. உள்ளே நுழையவே அரைமணி நேரம். சரியான கூட்டம். உள்ளே சென்றவுடன் மங்கலான விளக்கு ஒளியில் பாழடைந்த மாளிகைக்கான அனைத்து பொருட்களும் தென்படுகின்றன. கிரீச் க்ரீச் என்ற ஒலிகள் வேறு கேட்கின்றன. நாம் பல அறைகளுக்கு அழைத்து செல்லப்படுகிறோம். சந்திரமுகி படத்தில் நகைச்சுவை நடிகர் திரு. வடிவேலு அந்த அரண்மனையில் நடுங்குவது போல் நாம் உள்ளூர நடுங்கினாலும் வெளியே அமைதியாக ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே செல்கிறோம். கடைசியாக நாம் ஒரு மின்தூக்கி உள்ளே அமர வைக்கப்படுகிறோம்.
ஒரு இருபது பேர் அமரும் அந்த மின்தூக்கியில் நம்மை அமரவைத்து கெட்டியாக இடுப்பு பெல்ட்டில் கட்டிவிடுகிறார்கள். பின், மின்தூக்கியின் கதவு மூடப்பட்டு விளக்கும் அனைகிறது. அப்புறம்தான் கதை ஆரம்பம். சல் என நான்காம் மாடிக்கு அந்த மின்தூக்கி நம்மை தூக்கிச்செல்கிறது. அங்கே நம் முன்னே இருக்கும் படாரென கதவு திறக்கிறது. வெளிச்சத்தில் வெளி உலகம், ஜன நடமாட்டம் தெரிகிறது. நாம் ஒரு நல்ல தென்னை மர உயரத்தில் இருப்பது நமக்கு புரிய ஆரம்பிக்கும் அடுத்த நொடி கதவு மூடப்பட்டு, அந்த மின்தூக்கி சடாரென அறுந்து விழுவது போல் கீழே வெகு வேகமாக போகிறது. வயிற்றில் இருக்கும் சிறுகுடல் சுருண்டு வந்து நம் தொண்டையை கவ்விப்பிடிக்கிறது. அனைவரும் குய்யோ முய்யோ என அலறுகிறார்கள். அடுத்த நொடி மின்தூக்கி அமைதியாக நல்ல பிள்ளை போல் உருமாறி மீண்டும் மேலே உள்ள நாலாம் மாடிக்கு செல்கிறது. சரி. அவ்வளவுதான் போல என்று மனம் கொஞ்சம் தேறுதல் அடையும்போது, திரும்பவும் இதே கதை. இவ்வாறாக ஒரு நான்கு முறை நடந்தபின் நமது வயிற்றின் அனைத்து உறுப்புகளும் தொண்டையில் வந்து நின்று கண்பார்வை நெட்டுகுத்தலாக நிற்கும் வேளையில் நமது கதவு திறக்கப்பட்டு நன்றி என்று பிரெஞ்சு மொழியில் இனிமையாக கூறியபடி அந்த ஊழியர் நம்மை வழி அனுப்புகிறார்..
நல்லா சொன்னீங்கம்மா நன்றி என மனதில் நினைத்துக்கொண்டே வெுளியே வந்தோம். நாங்களே இப்படி என்றால் என் அப்பாவின் நிலை எப்படி இருக்கும்! உடலில் இருக்கும் ஆவி கூட்டை விட்டு வெளியே சென்று சென்று உள்ளே வந்தது என ஒரு கவிதையாக தன் அனுபவம் விவரித்தார். இவ்வாறாக அதை முடித்து பின் டிஸ்னி ஷோ என்னும் ஒரு காட்சி பார்க்கச்சென்றோம். மிக அற்புதமாக சினிமா போல் வடிவமைக்கப்பட்ட நேரில் நடக்கும் அந்த காட்சி மிகவும் பிரமிப்பூட்டுகிறது. பின் அப்படியே உள்ளே இருக்கும் புட் கோர்ட் மற்றும் டாய்லெட் அனைத்தையும் ஒரு முறை வலம் வந்து, மேலும் இரு காட்சிகளை பார்த்து விட்டு ஒரு கேபசீனோ (cappuccino – நம்ம ஊர் காபி பாணியில் இருப்பது) குடித்துவிட்டு பின் வெளியே வந்தோம். இன்னும் அந்த டவர் ஹோட்டல் மின்தூக்கியில் இருந்து வீல் வீல் என்ற அலறல் சந்தம் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.
மணி மாலை ஏழு ஆகிவிட்ட நிலையில், நாங்கள் அங்கிருந்து நேராக பயணம் செய்து இரவு உணவுக்கான ஒரு இந்திய உணவகம் சென்றோம். அங்கே உணவு முடித்து நேராக சென் நதிக்கரையில் இறங்கி ஐஃபெல் டவர் பார்க்கும் விதமாக நின்று கொண்டோம். அப்போது மணி பத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது. இருளும் சூழ ஆரம்பித்தது. சரியாக பத்து மணி அளவில் ஐஃபெல் டவரின் முழுப்பகுதியிலும் சிறு விளக்குகள் மினுக் மினுக் என விட்டு விட்டு மின்னி கண் சிமிட்ட ஆரம்பித்தன. அது பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருந்தாலும் அதை எங்கள் அருகில் இருந்த சென் நதியின் நீரோட்டத்தில் காணும் போது லூவ்ரு அருங்காட்சியகத்தில் இருந்து தப்பி ஓடி வந்த ஒரு மாடர்ன் ஆர்ட் ஓவியம் போல் மிளிர்ந்தது. ஒளி விளக்குகளின் நகரம் பாரிஸ் என்னும் கருத்து அங்கே நிரூபணம் ஆனது. சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஒளிர்ந்து விட்டு பின் சாதாரண விளக்கொளியில் ஒன்றுமே நடவாதது போல் அமைதியாக நின்றது ஐஃபெல் டவர்.
இவ்வாறாக இரவு பத்துமணிக்கு மேலாகியும் எங்கள் சுற்றுப்பிராயணம் முடியாத நிலையில், அடுத்ததாக லிடா ஷோ (Lida Show) என்ற இடத்திற்கு நாங்கள் சென்றோம். அதைப்பற்றி ஒரு விவரமும் எங்களுக்கு தெரியாத நிலையில் 10.40 மணிக்கு தொடங்கும் இரவுக்காட்சிக்காக காத்திருந்தோம். அதன் முந்தய காட்சி முடிந்து வந்தவர்களில் பெரும்பான்மையோர் மேல்தட்டு மக்கள். அவர்கள் உடையிலேயும் நடை உடை பாவனையிலேயும், தாங்கள்தான் மிகவும் சிறந்தவர்கள் போன்ற ஒரு பாவனை. அது உண்மையாக கூட இருக்கலாம்.
எங்களது பிரயாண ஏற்பாட்டிலேயே இந்த ஷோ செல்வதற்கும் நாங்கள் பணம் செலுத்தி இருந்தோம். இந்த காட்சிக்கான கட்டணம் 100 யூரோ. அதாவது நமது ரூபாயில் தோராயமாக ஏழாயிரத்து இருநூறு ஆகிறது. எங்களுக்கு ஏதோ எங்களுக்கு சேராத இடம் வந்தது போல் ஒரு உணர்வு. என் மகன் வேறு என்னிடம் “இதுக்கு பணம் கட்டினீர்களே, என்ன ஷோ என்று கேட்க மாட்டீர்களா” என நச்சரிக்கிறான். எனக்கு இது பற்றி ஒரு இம்மியளவும் எந்த விவரமும் தெரியாது. லிடா (Leda – the wife of King tyndareus of Sparta) என்பது மிக அழகிய ஒரு பெண் என்பதும் அவள் ஜீயஸ் (Zeus – the God of Sky and Thunder in Greek Mythology) என்னும் கடவுளின் வஞ்சிப்புக்கு ஆளானாள் என்பதும் தெரியும். ஜீயஸ் இந்த பெண்ணை வஞ்சிக்க அன்னப்பறவையின் ரூபம் எடுத்ததால் லிடா என்பது அன்னப்பறவையுடன் தொடர்புடையது என்பது என்று ஆங்கில இலக்கியத்தில் ஏட்ஸ் (W.B. Yeats) என்னும் ஆங்கில கவி கிரேக்க கதைக்களஞ்சியத்தை தழுவி எழுதிய Leda and the Swan என்ற கவிதையில் படித்தது தவிர வேறு ஏதும் தெரியாது.
சிறிது காத்திருப்புக்குப்பின், அங்கே உள்ள மேசைகளை சுற்றி உள்ள இருக்கைகளில் நம்மை அந்த ஊழியர்கள் அமரவைக்கிறார்கள். நாங்கள் அமர்ந்த இருக்கையின் முன் ஒரு சிறிய சுவர் மாதிரியான அமைப்பு. அதன் முன்னே சொகுசு சோபாக்கள் போட்டு அதன் முன்னேயும் மேசைகள். அங்கே செல்ல நுழைவுக்கட்டணம் அதிகம் இருக்கும் போல. சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக ஒயிலாக வந்து அமர்கிறார்கள். அப்படி அமர்பவர்களில் நிறைய தமிழ் குடும்பங்களை என்னால் காண முடிந்தது. அவர்கள் தோரணையை காணும்போது பல வருடங்களாக அந்த நாட்டில் வசித்து உயர்பதவியில் உள்ளது போன்றதொரு எண்ணம் நமக்கு தோன்றுகிறது. காட்சி ஆரம்பிக்கும் முன் அனைவரும் செல்பி எடுத்து கொண்டார்கள். காட்சியின்போது போட்டோ எடுக்கக்கூடாது என்பது அங்கே உள்ள கண்டிப்பான ஒரு விதிமுறை.
அனைவருக்கும் தெரியும் பாணியில் அங்கே ஒரு மேடை மிக அழகான முறையில் சாண்டிலியர்களுடன் காட்சி அளித்தது. சிறிது நேரத்தில் காட்சி தொடங்கியது. கண்கவரும் வண்ண ஒளிவிளக்குகளுடன் மிக அழகிய இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் நடனங்களை ஆடத்துவங்குகிறார்கள். ஒரு கதை போன்ற பாணியில் நடனம் செல்கிறது. அவர்களின் ஆடம்பரமான அணிகலன்கள் மற்றும் தங்கள் முதுகுப்பகுதியில் இருக்கும் அன்னப்பறவை மற்றும் மிகப்பெரிய பறவைகளின் தோகைகள் போன்றவை நம் கருத்தை கவர்வதாக இருக்கிறது.
சட் சட் என்று கண் இமைக்கும் நேரத்தில் மேடையின் அமைப்புகள் மாறுகிறது. திடீரென நாம் இருக்கும் இடம் கொஞ்சம் உயரத்திற்கு செல்கிறது. மேடையும் சில சமயம் கீழே இறங்குகிறது. பக்கவாட்டில் நகர்கிறது. ஆனால் மேடையில் இருக்கும் கலைஞர்கள் கொஞ்சம் கூட இதனால் பாதிக்கப்படாமல் தங்கள் ஆட்டத்தை தொடர்ந்து கொண்டே உள்ளனர். இதற்கிடையில் அங்கே ஊழியர்கள் நமக்கு குடிக்க பழரசம் அல்லது ஷாம்பெய்ன் இரண்டில் ஏதேனும் ஒன்று தருகிறார்கள். அங்கே என்ன நடக்கிறது என்பதே மிகவும் புதிராக இருந்தது. நாம் நகர்கிறோமா அல்லது இந்த கட்டிடமே நகர்கிறதா என்பது குழப்பமாகவே இருக்கிறது. இந்த மாதிரி மேசையில் இருக்கும் கண்ணாடி பாத்திரங்கள் கீழே விழாமல் இப்படி எல்லாம் நகருமா என்ன! நமக்கு ஒன்றும் புரிபடவில்லை. இதுவரை இப்படி ஒரு ஷோ பார்த்ததும் இல்லை.
இந்த காட்சியில் கலை அம்சம் பொருந்திய பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், பல காட்சி அமைப்புகளில், நடன கலைஞர்கள் தங்கள் ஆடைகளின் குறைபாடு பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. இது நமக்கு கொஞ்சம் அதிர்ச்சி தருவதாகத்தான் இருக்கும். ஆனால் பாரிஸ் நகரத்தில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலையம்சம் கொண்ட சிலைகள் கூட தங்கள் முழு உடலை வெளிஉலகுக்கு பறைசாற்றும் வண்ணம்தான் காணப்படுகின்றன. இந்த இடத்தில்தான் நம் கலைக்கண்ணோட்டம் மாறுபடுகிறது. நம் நாட்டின் அனைத்து சிலைகளுக்கும் சிலையை வடிவமைக்கும்போதே சிற்பி அந்த கல்லிலேயே ஒரு ஆடையை செதுக்கி விடுவார். கூர்ந்து கவனித்தால் தெரியும். கோவில்களில் உள்ள துவாரபாலகர் உட்பட அனைத்து சிலைகளுக்கும் ஆடை அந்த கல்லிலேயே இருக்கும். அதன் மேல் நாம் மீண்டும் ஒரு ஆடையை அணிவிப்போம். தெய்வசிலைகளுக்கும் இது பொருந்தும். அம்மனின் சிலையிலேயே நல்ல மடிப்புகள் கொண்ட புடவை அணிந்த தோற்றத்தில்தான் சிற்பி அந்த சிலையை வடிவமைத்திருப்பார்.
பாரிஸ் நகரத்தில் தங்கள் உடல் அவயங்களை வெளியில் காட்டிக்கொள்ள அவர்கள் தயக்கம் கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் அது அவர்களுக்கு பெருமை. கச்சிதமாக தன் உடலை வைத்திருப்பதால் அதனை வெளிகாட்டிக்கொள்வதில் அவர்களுக்கு மிகுந்த அக்கறைதான். இந்த எண்ணம் இந்த காட்சிகளின் பல இடங்களில் வெளிப்படுகிறது என்பதையும் அதை பார்க்கும் மக்களும் அதைப்பற்றி பெரிதாக சிந்திக்காமல் காட்சியின் அழகை மட்டுமே ரசிக்கிறார்கள் என்பதும் நமக்கு புரிந்தாலும், நம் மனது இப்படி ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள சிறிது தயங்குகிறது என்பது உண்மைதான். இந்த மாதிரியான காட்சிகள் உலகப்பெருமை பெற்று விளங்குவதும் ஒரு வகையில் நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மூன்று தலைமுறைகளின் பிரதிநிதிகளாக என் அப்பா நான் என் மகன் என மூவரும் இருந்தாலும் நாங்கள் யாருமே இந்த மாதிரி ஒரு ஷோ எங்கள் வாழ்க்கையில் கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை எனக்கூறலாம். கடைசியாக ஷோ நள்ளிரவு ஒரு மணி அளவில் முடிவுற்று அனைவரும் அமைதியாக பேருந்தில் வந்து அமர்ந்து விடுதி வந்து சேரும்போது நடுஇரவு இரண்டு மணியை பிடித்துவிட்டது. பலவிதமான அனுபவங்களுடன் மிக நீண்ட நாளாக அந்த நாள் அமைந்தது எங்களுக்கு.
அடுத்த நாள் காலை நாங்கள் கொஞ்சம் நிதானமாகவே புறப்பட்டோம். காலை ஒன்பது மணி அளவில் காலை உணவு என்ற பெயரில் கடை பரப்பி வைக்கப்பட்டு இருக்கும் சில பொருட்களை கஷ்டப்பட்டு கொஞ்சமாக விழுங்கிவிட்டு, நல்ல காபியாக காபி போடும் இயந்திரத்தில் அதற்கு புரியும் மொழியில் பட்டன்களை தட்டி கேட்டு வாங்கி குடித்துவிட்டு பாரிஸ் நகரின் தென்மேற்கு பகுதியில் சுமார் பத்து மைல்கல் தொலைவில் அமைந்துள்ள வெர்சாய் மாளிகை (Palace of Versailles) நோக்கி புறப்பட்டோம்.
சுமாராக ஒரு 2014 ஏக்கர் பரப்பளவு விஸ்தீரணத்தில் பரந்து விரிந்த இந்த மாளிகையை காண கூட்டம் அலைமோதுகிறது. பேருந்து நிறுத்தும் இடம் மட்டுமே ஒரு நான்கு ஏக்கர் இருக்கும் போல. நாம் பேருந்தில் இருந்து இறங்கியதுமே நம்மை நோக்கி ஆப்பிரிக்க வியாபாரிகள் கையில் பலவகை பொருட்களுடன் நமஸ்தே என்று கூறிக்கொண்டே ஓடி வருகிறார்கள். அவர்களை ஏறிட்டு பார்த்து விட்டோமானால் நம்மிடம் சிரித்தபடியே பேசி பொருட்களை வாங்கச்சொல்லி வற்புறுத்துகிறார்கள். அவர்களை காணாதது போல் நடந்து கடந்து செல்வதே உத்தமம் என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்ததால், நாங்கள் வேகமாக மாளிகையின் வெளிப்புற வாயிலுக்கு சென்றோம். எங்கள் குழுவினர் சிலர் அந்த வியாபாரிகளிடம் பேரம் பேசி வாங்கிக்கொண்டு பின் மெதுவாக வந்து சேர்ந்தனர்.
மாளிகையின் வெளிப்புறம் கூட தரையில் உயர்வகை டைல்ஸ் தளம் போடப்பட்டு மிக அதிக பரப்பளவில் காணப்பட்டது. எங்கள் குழுவிற்கான நுழைவுக்கட்டணம் எங்களுக்காக மாளிகையை சுற்றிக்காட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பிரெஞ்சு வழிகாட்டி பெண்மணி வாங்கி வந்தார். அவரிடம் இருந்த ஒரு சின்ன ரேடியோ செட் மற்றும் அதனுடன் இணைந்த காதில் செருகும் ஒயர் போன்றவற்றை நமக்கு கொடுக்கிறார். நாம் அந்த ரேடியோ செட் ஆன் செய்து நமது காதில் அந்த ஹியர் போன் செருகிக்கொண்டால், அந்த வழிகாட்டி பெண்மணி பேசுவது ஒரு பத்தடி தொலைவில் அவர் இருந்தாலும் நமக்கு சரியாக கேட்கும்படியான ஒரு அமைப்பு அதில் உள்ளது.
மாளிகையின் உள்ளேயும் கூட்டம் அலைமோதும் என்பதால், அனைவரும் ஒன்றாக ஒரு குழுவாகவே இருக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். போட்டோ எடுக்கும் நோக்கத்தில் வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். அந்த மாளிகையில் போட்டோ எடுக்கலாம் என்றாலும் பிளாஷ் போன்ற கருவிகள் பயன்படுத்த கூடாது என்ற விதிமுறையும் அறிவுறுத்தப்படுகிறது. பிளாஷ் போன்ற வெளிச்சம் அந்த கலைச்செல்வங்களை பாழ்ப்படுத்தக்கூடும் என்ற காரணத்தால் அவற்றை தவிர்க்க வேண்டியுள்ளது.
இவ்வாறு நம்மை தயார்படுத்திக்கொண்டு, மாளிகையின் உள்ளே நுழைந்து படிகளில் ஏறி மேல்தளம் சென்று மாளிகையைப் பார்வையிட ஆரம்பித்தோம். ஒவ்வொரு அடியாகத்தான் நகர வேண்டும் என்ற அளவு கூட்டம் முண்டியடிக்கிறது. ஒரு இடத்தில் போட்டோ எடுக்க நின்றால் அந்த புகைப்படத்தில் நம்முடன் சேர்ந்து குறைந்தபட்சம் பத்து பேராவது காணப்படுவார்கள். அந்த பிரெஞ்சு வழிகாட்டிப் பெண்மணி நல்ல தெளிவான ஆங்கிலத்தில் அந்த மாளிகையின் ஒவ்வொரு சிறப்புகளாக காட்டிக்கொண்டே எங்களை சரியான முறையில் வழிநடத்தி சென்றார். எங்கள் காதுகளில் இருந்த ஹியர் போன் மூலம் அவர் பேசியது எங்களுக்கு தெளிவாக கேட்டது.
1623 -ம் வருடம், பிரான்சு நாட்டு அரசர் பதிமூன்றாம் லூயி (Louis XIII) காலத்தில் வேட்டையின் போது தங்குவதற்கு என கட்டப்பட்ட ஒரு சாதாரண கோட்டை, அதன் பின் பதவிக்கு வந்த சூரிய ராஜா என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பதினான்காம் லூயி (Louis XIV) காலத்தில் அதாவது 1660 மற்றும் 1670 ஆண்டுகளில், பல இணைப்புகள் செய்யப்பட்டு, தலைசிறந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்டு இன்று மக்களின் பார்வைக்காக இருக்கும் உலகப்புகழ் பெற்ற படாடோபம் மிகுந்த ஒரு அரண்மனையாக திகழும் வெர்சாய் எனப்படும் பிரம்மாண்ட மாளிகை பார்க்க கம்பீரமாய் பரந்து நிற்கிறது. பதினான்காம் லூயி காலத்தில் பிரான்ஸ் நாட்டின் அரச குடும்பம் தங்கும் ராஜ மாளிகையாக திகழ்ந்தது இந்த அரண்மனை. தன் குடும்பம் மட்டும் அல்லது தனது அவையின் பிரமுகர்களும் அவர்கள் குடும்பத்துடன் தங்க தேவையான அறைகளை (நம் அரசாங்க ஊழியர்களுக்கு குவார்ட்டர்ஸ் போலத்தான்) இணைப்பாக கட்டி மாளிகையின் பரப்பளவை அதிகம் ஆக்கிய பெருமை இந்த ராஜாவையே சாரும்.
1789 -ம் வருடம் நடந்த பிரஞ்சு புரட்சியின் பின் இந்த மாளிகையைப் பொதுச் சொத்தாக மாற்றிவிட்டனர். நம்ம ஊர் மைசூர் மஹாராஜா அரண்மனை பார்த்தவர்கள், அந்த அரண்மனை மாதிரி ஒரு 100 மடங்கு பெரிய மாளிகையை மனதில் கற்பனை செய்து கொள்ளலாம். இதே போல் (இந்த அளவு ஆடம்பரம் இல்லாமல்) மாளிகைகள் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் மாளிகை நகரங்களான ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்புர் நகரங்களில் உள்ளன என நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் பார்த்தது இல்லை. சினிமாப்படங்களில் பார்த்திருக்கிறேன். எனினும் உலக அளவில் ஆடம்பரம், பகட்டு, உலகின் தலை சிறந்த கலைப்பொருட்களைத் தன்னகம் கொண்டு மிக அதிக பரப்பளவிலான ராஜ மாளிகை என்று பெருமை பெற்று திகழ்கிறது இந்த அரண்மனை.
சுமாராக 50 வருடங்களாக பல்வேறு துறைகளைச்சார்ந்த வல்லுனர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டு, 700 அறைகளையும், 2000 ஜன்னல்களையும், 67 மாடிப்படிகளையும் கொண்ட இந்த மாளிகை உள்ள கண்ணாடி மண்டபம் 357 மாபெரும் அளவிலான கண்ணாடிகள் பதிக்கப்பட்டதாக உள்ளது.. இதன் ஆடம்பரத்திற்கோர் உதாரணமாகக் கூறப்படுவது இந்த மாளிகையின் அறைகளில் வைக்கப்பட்டிருந்த டாய்லெட் குடுவைகள் கூட (Chamber pots) வெள்ளியினால் ஆனவை என்பதாகும். இந்த அரண்மனையின் அனைத்து பொருட்களும் மிக விலை உயர்ந்த வகையை சாரும். இந்த மாளிகையைப் பார்ப்பவர்கள் ஆ என்றுதான் வாயை பிளந்துகொண்டு கொஞ்சநேரம் நிற்கவேண்டும். பகட்டும், படாடோபமும் நிரம்பி வழிகிறது. கலைநயமும் அதில் கலந்து மிளிர்கிறது. எனினும், இதன் பின்னணியில் பிரஞ்சு புரட்சியின் (French Revolution) அவலமும் தொக்கி நிற்கிறது. இந்த மாளிகையில் வாழ்ந்த கடைசி ராணி மேரி அன்டோனெட் (Marie Antoinette) தன் வாழ்வில் பின்பற்றிய கட்டவிழ்ந்த சுயநல இன்பவாழ்வு பிரான்ஸ் நாட்டின் முடியாட்சிக்கு சாவுமணி அடித்தது என்றால் அது மிகையாகாது.
ஆஸ்திரிய நாட்டு இளவரசியான மேரி அன்டோனெட் பிரான்ஸ் நாட்டு மன்னர் பதினாறாம் லூயி (Louis XVI) அவர்களை திருமணம் முடித்து பட்டத்துராணியாகத் தனது பதினாலாம் வயது இளம் பிராயத்திலேயே பொறுப்பேற்று குழந்தைகளைப் பெற்று, , கணவரின் அன்பு கிடைக்காமல், அந்த ஏக்கத்தைத் திசை திருப்ப ஆடம்பரவாழ்வில் ஈடுபட்ட நேரம் பிரான்ஸ் நாட்டின் பஞ்சகாலம். மக்கள் பட்டினியில் வாடி வறண்டு கிடக்க, ராணி இன்பத்தில் தன் தோழிகளுடன் திளைக்கிறாள் வெளியில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளவே விருப்பம் இல்லாமல். இந்த அரண்மனை அவளுக்கு சகலமும் தருகிறது.
நாட்டின் பஞ்சம், பல போர்களில் நாடு இழந்த செல்வம், இவற்றுடன் இந்த அரண்மனையின் ஆடம்பர செலவுக்காக ராஜா மக்களின் மேல் திணித்த வரி, ராணியின் கவலையற்ற ஆடம்பர வாழ்க்கை இவை அனைத்தும் மக்களிடையே கடும் அதிருப்தி மற்றும் கோபத்தை கிளப்பி, அவர்களை ஒன்றாக சேர்ந்து இந்த அரண்மனையின் தங்கக்கதவுகளை தகர்க்கச்செய்தது. மக்களின் சினத்தின் வெளிப்பாடாக தோன்றிய இந்த சலசலப்பு பெரும் புரட்சியாக மாறி ராஜகுடும்பங்களை குறிவைத்து அவர்களை கொன்று குவிக்கும் விதமாகவும் மாறியது. இவ்வாறு தோன்றிய பிரஞ்சு புரட்சியை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு புத்தகமே புகழ் பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) எழுதிய இரு நகரங்களின் கதை – A Tale of Two Cities. 1792 -ம் ஆண்டில் இதே அரண்மனையில் கைதிகளாக்கப்படும் மேரி மற்றும் அவளது குடும்பம் கடைசியில் நடுவீதியில் கில்லட்டின் என்னும் இயந்திரத்தால் தலை கொய்யப்பட்டு உயிர் துறக்கிறார்கள். ராணி இறக்கும்போது அவள் வயது 37 மட்டுமே.
இத்தனை புகழ் வாய்ந்த அரண்மனையைப் பார்த்துக்கொண்டே வெளிவந்த பின்தான் ஆவென பிளந்திருந்த வாய் கொஞ்சம் மூடியது. வெளியில் குளிர் ஐந்து டிகிரி செல்சியஸ். கிடுகிடுவென நடுங்கியது. எங்களின் அனைத்து குல்லாய்களும் என் அப்பா வாங்கி மாட்டிக்கொண்டார். கையில் இருந்த ரேடியோ பெட்டி மற்றும் அந்த காது ஒயர்களை அந்த வழிகாட்டி பெண்மணியிடம் கொடுத்து நன்றி கூறிவிட்டு பேருந்து இருக்கும் திசையை நோக்கி ஓடி வந்து ஏறுவதற்குள் பல்வரிசை கிடுகிடுவென ஆட ஆரம்பித்துவிட்டது. பேருந்தின் உள்ளே குளிர் அளவு சரியாக வைத்து இருப்பதால், உள்ளே ஏறி அமர்ந்தால் தாயின் மடியில் கதகதப்பாக இருப்பது போல் ஒரு உணர்வு. லண்டனில் இவ்வளவு தெரியவில்லை. பாரிஸ் கொஞ்சம் குளிர் நகரம்தான்.
இதற்க்கு அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் ஐஃபெல் டவர். பிரஞ்சு புரட்சியின் நூறு ஆண்டுகால நிறைவை கொண்டாட பிரான்ஸ் நாட்டு பொறியாளர் கஸ்டவ் ஐஃபெல் (Gustav Eiffel) என்ற மனிதரால் வடிவமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் இரண்டு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இரும்பினால் ஆன ஒரு கோபுரம். இன்றைய காலகட்டங்களில் இதை மிஞ்சும் பல கோபுரங்கள் காணப்பட்டாலும் 1889 -ம் வருடம் இது கட்டப்பட்டது இன்று வரை ஒரு சாதனைதான். இங்கேயும் ஒவ்வொரு வருடமும் தோராயமாக ஏழு மில்லியன் பார்வையாளர்கள் உலகெங்கும் இருந்து இதைக்காண ஆவலுடன் வருகை தருகிறார்கள். இந்த கோபுரத்தின் உச்சி வரை செல்ல மின்தூக்கி வசதி உண்டு. அதற்கான நுழைவுக்கட்டணம் உண்டு.
கோபுரத்தைக் காண வருபவர்கள் நன்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுப்பப்படுகிறார்கள். கைப்பை மற்றும் நாங்கள் எல்லாம் பரிசோதனைக்கு உட்பட்டபிறகு, அங்கே மேலே செல்ல நுழைவுக்கட்டணம் பெற வரிசையில் நின்றோம். மூன்று தளங்கள் அந்த டவருக்கு இருக்கிறது. முதலாம் தளம் 115 மீட்டர் உயரம். . இரண்டாம் தளம் அடுத்த உயரத்தில் 276 மீட்டர் உயரத்தில். கடைசியாக உச்சி சென்றால் ஒரு தளம் 300 மீட்டர் உயரத்தில். முதல் இரண்டு தளம் செல்ல ஒரு கட்டணம். மூன்று தளங்களுமே செல்ல ஒரு கட்டணம் என நிர்ணயித்து இருக்கிறார்கள். மூன்று தளங்களுக்கும் செல்ல எங்களுக்கு நுழைவுக்கட்டணம் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் இரண்டு தளங்களுக்கு ஒரு மின்தூக்கி. பின் இரண்டாம் தளத்தில் இறங்கி சிறிது உள்ளே சென்று உச்சிக்கு செல்ல இன்னுமொரு மின்தூக்கி ஏறவேண்டும்.
மூன்று தளங்களிலும் இறங்கி பார்வையிட்டோம். உச்சியில் இருந்து பாரிஸ் நகரம் முழுதும் பார்க்க முடிகிறது. இரும்பினால் ஆன கம்பிகள் தடுப்புச்சுவராக இருப்பதால் பயம் இல்லை என்றாலும் கொஞ்சம் கால் நடுக்கம் கொள்ளத்தான் செய்கிறது. அதை விட, சில்லென ஒரு காற்று நம்மை கொல்லாமல் கொல்கிறது. மேலிருந்து அனைத்து அரண்மனைகளும் பாரிஸ் நகரின் சாலைகளும், பூங்காக்களும் கண்கவர் காட்சியாகின்றன. அதனிடையே சென்நதி ஒரு அசையா பாம்பு போல் இளம்பச்சை நிறத்தில் படுத்துக்கிடக்கிறது. அதன் மேல் செல்லும் படகுகள் தீப்பெட்டிகள் நகர்வது போல் காட்சி அளிக்கின்றன. காலையில் நாங்கள் பார்த்த வேர்சைல் மாளிகையும் கண்ணில் படுகிறது. வேண்டுமட்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டு, குளிர்காற்றிடம் இருந்து தப்பிப்பிழைக்க மின்தூக்கிக்கு ஓடி வந்தால் அங்கே ஒரு கூட்ட வரிசை நிற்கிறது.
குளிரில் உடலின் எந்தவொரு அவயமும் இயங்க மறுத்தது. கொஞ்சம் காத்திருப்புக்குப்பிறகு கீழே வந்து சேர்ந்தோம். பேருந்தில் நுழைந்தால் போதும் என்ற அளவு குளிர் ஆட்டிப்படைத்ததினால், அங்கே உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் வாங்க இயலவில்லை. ஆனால் எங்கள் குழுவினர் அதையும் விடவில்லை. வேண்டியமட்டும் வாங்கிக்கொண்டு பேருந்து வந்து சேர கால தாமதம் செய்தார்கள். பேருந்து அடுத்த இடமான படகு சவாரி (River Cruise) புறப்படும் இடத்திற்கு எங்களை அழைத்துச்சென்றது.
பிரான்சு நாட்டின் இரண்டாம் பெரிய நதியான சென் நதியில் செல்லும் படகுச்சவாரி சுமார் ஒரு மணிநேரம் நீடிக்கிறது. இருக்கை வசதிகள், ட்ரிங்க்ஸ் அருந்தும் வசதிகள் அடங்கிய இந்த பெரிய படகில் நாம் மேல்தளம் சென்றும் அனைத்து இடங்களையும் கண்டு களிக்கலாம். இந்த படகு செல்லும் பாதையின் இருமருங்கும் புகழ்பெற்ற நார்ட்டர்டாம் கதீட்ரல் மற்றும் செயின்ட் சாப்பெல் (Cathedral of Notre Dame and Sainte Chapelle) போன்ற ஸ்தலங்கள் உள்ளன. கத்தோலிக்கர்களின் புனிதத்தலமான நார்ட்டர்டாம் கதீட்ரல் ஏசுபிரானின் முள்கிரீடம் (உண்மையானது அல்ல) எனச்சொல்லப்படும் கலைச்செல்வத்தைத் தன்னகத்தே வைத்துள்ளது. நெப்போலியன் இந்த கிரீடம்தான் தான் அரசனாகும் போது சூட்டிக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. பிரான்சு நாட்டு எழுத்தாளர் விக்டர் ஹுகோ (Victor Hugo) எழுதிய The Hunchback of Nortre Dome என்னும் புகழ் பெற்ற புத்தகத்தில் இந்த இடம் மையப்படுத்திக்காட்டப்படுகிறது. இன்னும் பல கட்டிடக்கலை அதிசயங்கள் நதியின் இருகரைகளிலும் இருந்தாலும், அவற்றை இறங்கி உள்ளே சென்று பார்க்க போதிய நேரம் இல்லாமல் போய்விட்டது. படகில் அமர்ந்தபடியே ரசித்துக்கொண்டு, ஒரு சுற்று முடித்து கரை சேர்ந்தோம்.
இந்த பயணத்தில் நான் தரிசித்த இரண்டாம் நதியான சென் என் மதிப்பிற்குரிய நீர்நிலையாக இருந்தாலும், லண்டனில் தேம்ஸ் நதியுடன் உரையாடியது போல் உரிமையுடன் இங்கே இந்த நதியுடன் ஓட்டமுடியவில்லை. காரணம் எனக்குத் தெரியவில்லை என்றாலும், பிரான்சு நாட்டு இலக்கியத்துடன் நேரடி தொடர்பு எனக்கு இல்லாமல் போனதும், இந்த நதியை ரசித்த பிரஞ்சு கவிகளை எனக்கு அதிக அறிமுகம் இல்லாமல் போனதும் காரணங்களாக இருக்கக்கூடும் என்றே யூகித்தேன். மேலும், இந்த நதியில் மக்கள் தொடர்ந்து படகு சவாரி செய்து கொண்டிருக்கும் காரணத்தினாலோ என்னவோ, தேம்ஸ் நதியின் சுறுசுறுப்பு சென் நதியில் கொஞ்சம் குறைந்துதான் காணப்படுகிறது. பத்து பிள்ளைகளை பெற்ற பெண் தளர்ந்து நடை போடுவது போல் நிலைகுலைந்து தடுமாறும் சென் எனும் அழகிய நதிதேவதை என் கண்களுக்குப் பாவமாகத்தான் தெரிந்தாள்.
கடைசியாக மீண்டும் ஒருமுறை பாரிஸ் நகரை பேருந்தில் வலம் வந்து புகைப்படம் எடுக்க விருப்பம் உள்ள இடத்தில் நிறுத்தி எடுத்துக்கொண்டு, இரவு உணவை இந்திய உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு விடுதி வந்து சேர்க்கையில் மணி இரவு 8 .30 . கடந்த மூன்று நாட்களாகப் பாரிஸ் நகரம் சுற்றியதால் ஒரே விடுதியில் தங்கி இருந்த நாங்கள் அன்று இரவு அனைத்து பொருட்களையும் பெட்டியில் அடுக்கி வைத்து அடுத்தநாளுக்கான பயணத்திற்கு தயாராக பெட்டி படுக்கையுடன் காலை இருக்க வேண்டும் என திரு. பாலா கூறி இருந்ததால். அனைவரும் சென்று எல்லா வேலைகளையும் முடித்து அடுத்த நாள் காலை பக்கத்து நாடான ஜெர்மனி நோக்கி செல்ல ஆயத்தம் ஆனோம். மூன்று நாட்களும் எங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிமையான அனுபவங்களைக் கொடுத்த மாய நகரம் பாரிசில் அந்த நாள் கடைசி நாள் என்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. எனினும் இன்னும் புதுப்புது நகரங்கள் எங்களை எதிர்நோக்கி காத்து இருக்கின்றன என்ற எண்ணம் கொஞ்சம் மகிழ்ச்சியைத் தர. அமைதியாக உறங்க ஆரம்பித்தோம்.
[தொடரும்]
* முனைவர் ஆர்.தாரணி– akilmohanrs@yahoo.co.in