கஞ்ச மலராளோ
கானத்திருமகளோ
காற்றோடும்
விஞ்சும் பனியாளோ
மேபிள் துகிலுரியும்
மெய்யாளோ
நெஞ்சக் கரமோடும்
நித்திலமோ வெய்யும்
நிலத்தாளோ
மஞ்சிற் படிந்த
வரலாறோ இந்நாள்
மகத்துவமே! கன்னற் கனடா
கதிர்க்குப் பிறந்தநாள்
என்றுலகம்
மின்னிப் பரவும்
விருப்பந் தரலால்
வியந்துதனி
யென்னத் துறுநூறும்
ஐம்பதும் என்றுபுகழ்
வேரோடும்
அன்னக் கனடா
அணித்தாய் வரைந்தாள்
அகிலமதே!
நீரோடுங் கானகத்தே
நின்றாடும் மானும்
நிலவாத்தும்
வாரோடும் பூங்கா
வடிவோடும் முற்றி
மலர்ப்படுகைத்
தேரோடுங் கோவிற்
திருவழகும் சேரத்
தினத்தோறும்
பேரேடு பூக்கும்
பொழிலாங் கனடா
பிறந்ததுவே!
நயாகரா வென்றும்
நயந்ததனி “வொண்டலாண்ட்”
என்றுமாய்
வியாபகத் தோரொடும்
விண்வான வேடிக்கை
யென்றுலகந்
தயாரித்தும் உற்ற
தனித்துவம் பெற்றும்
தனியொருவன்
நியாயங்கள் போற்றும்
நெறியே கனடா
நிறையுலகே!
நூற்றைம்ப தாமாண்டு
நண்ணுங் கனடா
நினைப்பொடுமாய்
போற்றும் மனதும்
பிறந்தநாட் பாடும்
புதுயுகமாய்
ஆற்றுப் படுத்தி
அகிலத் தொடும்நாள்
அணிதிரண்டு
நாற்றுக் கொடுத்து
நயந்த மணிநாடு
வாழ்த்துகண்டோம்!
vela.rajalingam@gmail.com