நெடுஞ்சாலை வாழ்க்கை –கா.பாலமுருகன் நூல்
ஓட்டுனர் ( லாரி ) சமூகத்தோடு பழகி 2 ஆண்டுகள் 12,000 கிமீட்டர்கள் பயணித்த அனுபவங்களை கா. பாலமுருகன் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். சின்னவயது அனுபவங்களில், ஆசைகளில் அவருக்கு ஓட்டுனர் ஆகவேண்டும் என்று மனதில் ஆழப்பதிந்திருக்கிறது. அதை நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு முகமாய் இப்பயணங்களை வட மாநிலங்களுக்கு ஓட்டுனர் ( லாரி ) சிலருடன் மேற்கொண்டிருக்கிறார். குப்பியில் அடைத்த மருந்து குலுங்குவது போல் லாரி பயணங்கள் இருந்ததாகச் சொல்லும் பாலமுருகன் அப்படித்தான் படிப்பவர்களையும் குலுக்கி விடுகிறார்.அப்படி குலுக்கி எடுக்கும் சமாச்சாரங்கள் தான் எத்தனை எத்தனை.
1. ஓட்டுனர்களுக்கு ( லாரி ) காவல்துறை ஆள் யார், . காவல்துறைக்காரர் யார், காவல்துறை ஆள் என்று சொல்லிக் கொண்டு பணம் பறிப்பவர் யார் என்று கண்டுபிடிக்கமுடியாமல் அவர்கள் திணறுவதைப் பார்க்கும்போது சிரமமாக இருக்கிறது.
2. விதவிதமான டோல் பூத் காணிக்கைகள்… சாமிகள், பூசாரிகள் யார் என்றே தெரியாது. ஆனால் கட்டாயக் காணிக்கைகள். காணிக்கை தருவதில் ஒரு பவ்யம் வேண்டும் . இல்லாவிட்டால் பலிதான் செக்போஸ்ட்டுகள், மாநில எல்லைகள், பெருநகர எல்லைகளில் இந்த பலி பீடங்கள் உள்ளன.
3. லாரிகளில் கொண்டு செல்லும் பொருட்களை திருடுவதில் கூட பலவிதங்கள். தந்திரங்கள்.அதைக்கண்டுபிடித்து ஜாக்கிரதைப் பண்ணீக்கொள்ள பெரிய பிரயத்தனங்கள். ஆள் நடமாட்டமில்லாத இடங்கள் அவர்களுக்குச் சொர்க்கம்.
4. திருட்டு காரணமாக எதிர்ப்புத் தெரிவிக்கிற போது உயிரை விட்டவர்கள் பலர்…சேர்த்து வைத்தப் பணம் பறிபோகும் விதவிதமான அவலம்.
5. காணாமல் போன ஓட்டுனர்கள் பலர். காணாமல் போனவர்களின் குடும்பக்கதைகள், குடும்ப புகைப்படங்கள் ரொம்பவும் உறுத்துகின்றன. அவர்களின் கனவுகள் ரொம்பவும் சிதைந்து போனவை. வேறென்ன கனவு… வீடு கட்ட வேண்டும் ,குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும், தம்பி தங்கைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற சாதாரணக் கனவுகள். லாரி சொந்தமாக வாங்க வேண்டும் என்ற கனவினை பெரும்பான்மையான லாரி ஓட்டுனர்கள் கைவிடும் இன்றைய சூழல்பற்றிய காரணங்களின் பெரிய பட்டியல் உண்டு.
6. வகை வகையான வசூல் ராஜாக்கள்..
7. அரசு அதிகாரிகள் பான் கார்டைக் காட்டினால் கூட பயப்படும் ஓட்டுனர்கள். பயமே உடம்பில் ஊறிப்போய்விடுகிறது அவர்களுக்கு.
8. வறுமை சார்ந்த சித்தரிப்பில் இளம் பெண்கள் தென்படுவதை ( பசி மற்றும் விபச்சாரம் ) மிகுந்த சிரமத்துடன் கடந்து போகிறார் பாலமுருகன்.
9. சாப்பாடு ருசி பார்த்து பசியில் இறங்கும் அனுபவங்கள். சாலை ஓரங்கள் சமையல் கூடங்களாகும் மோட்டல்கள், ஹோட்டல்களில் சாப்பாடு, கையேந்தி பவன்கள். லாரியின் அடியில் தூக்கம்,கேபினில் தூக்கம் என்ற சமாச்சாரங்கள் பாலமுருகனுக்கு புது அனுபவங்கள். வழக்கமான ஓட்டுனர்களுக்கு தினசரி வாழ்க்கை
பயணத்தில் பல இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் தண்ணீர் அபூர்வப்பொருளாகிப் போனதை சொல்கிறார் ( பக்கம் 223 ), மனிதாபிமானம் காணாமல் போனதை பாதிப்பக்கங்களில் காட்டுகிறார்.
பயணத்தின் போது பையா, அண்ணா என்று கேட்கும் உபசரிக்கும் மனிதர்கள் மொழி மீறி சாதி மீறி கொள்ளும் அன்பு பலசமயங்களில் பயணம் காரணமாய் உண்டான உடம்பு வலியை போக்கிவிடுகின்றன. மெக்கானிகல் கேஷ் என்று ஒரு வகைச் செலவைக்குறிப்பிடுகிறார். ஜியெஸ்ட்டி என்று வந்து விட்டால் இந்த அவஸ்தெயெல்லாம் குறையுமோ என்னமோ.
திருப்பூரில் டைலர், கட்டிங் மாஸ்டர், பவர்டேபிள் போட்டவர் என்று ஆரம்பகாலத்தில் இருந்தவர்கள் பின்னால் பின்னலாடைக்கம்பனி முதலாளிகள் ஆகிற வித்தைகள் உழைப்பின் மூலம் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் நடந்திருக்கின்றன. இன்றில்லை . இதே வித்தைதான் லாரி ஓட்டுனரிடமும்.. ஓர் ஓட்டுனர் உழைப்பு, அதிர்ஷ்டத்தால் லாரி சொந்தமாக வாங்குபவராக, வைத்திருப்பராக ஆகலாம். முன்னேறலாம் முன்பெல்லாம்… திருப்பூர் நிலைமைதான் லாரி விசயத்திலும் வந்து விட்டது. எல்லாம் உலகமயமாக்கலின் வித்தையின் வெவ்வேறு ரூபங்கள் என்பதை பல ஓட்டுனர்களின் வாக்குமூலங்களில் தெரிவித்திருக்கிறார்.திருப்பூ ர் பகுதி பருத்திகளை வடநாட்டுப்பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் பழைய அனுபவங்களை சிலர் இதில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.இப்போது கொங்குப்பகுதிகளிலெல்லாம் பருத்தி விளைவதில்லை. துணி ரோல்ரோல்களாகவே பெரும்பாலும் வடக்கிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்து விடுகின்றன. பருத்தி இல்லாமல் போன வருத்தம் ஒரு ஓட்டுனரிடம் தென்பட்டது மனதைத் தொட்டது..
எனக்கு எங்காவது செல்லும் போது அந்தப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களைப் பார்க்காமல் அதன் வழியே பயணம் அமைந்து விட்டால், அதை கடந்து சென்றுவிட்டால் பதட்டமாகிவிடும். லாரி ஓட்டுனர் அப்படி எதையும் பார்க்க ஆசைப்படவே கூடாது. கொஞ்சம் வானம் பார்க்கவும், மழையை வேடிக்கை பார்க்கவும் கூட முடியாது. ஒரே இலக்குதான். ஒரே லட்சியம்தான். கொண்டு போகும் பொருள் சரியான இடத்திற்குப் போய்ச் சேர வேண்டும் அவ்வளவுதான். இதை நினைத்துப்பார்க்கையில் ரொம்பவும் பதட்டமாகிவிட்டேன். சுற்றுப்பயணியாக அவர்கள் வேடிக்கை பார்க்க வரம் அளிக்கப்படாமல் துரத்தப்படுகிறார்கள். என்னே அவலம். அதிலும் தமிழன் என்றால் இளக்காரம் இருக்கத்தான் செய்கிறது வடக்கத்தியனுக்கு… தனிமையில் சாரமிருக்கிறது என்று இருக்க முடியாது. வயதானவன் கொஞ்சம் சலுகை காட்டு என்று கெஞ்சினாலும் பயனில்லை.சென்றாண்டில் மட்டும் 150 தமிழக லாரிகள் கடத்தப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் மொத்தம் ஓடும் 45 லட்சம் லாரிகளில் பத்து சதவீதம் தமிழகத்து லாரிகள்.முக்கியப்பங்கு வகிப்பவை. காணாமல் போகும் லாரிகள், காணாமல் போகும் லாரி டிரைவர்கள் எண்ணிக்கையும் முக்கியமானவை . காணாமல் போகும் லாரி ஓட்டுனர்கள்( கணவர்கள் ) வருவார்கள் என்ற நம்பிக்கையில் விதவைத்கோலத்தை தவிர்த்து விட்டு தனிமைப்படும் பல நூறு லாரி ஓட்டுனர்களின் கதைகள் இந்நூலில் உள்ளன.லாரித்தொழில் அழிவை நோக்கிச் செல்லும் பல தடங்களை சேலம் டூ கல்கத்தா, சேலம் டூ காஷ்மீர் என்று காட்டுகிறார். கொஞ்சம் ஆறுதலுக்காய் தெனிந்தியாவைக் கூட அடுத்த நூலில் கடந்து போக பாலமுருகன் முயற்சிக்கலாம். ஆறுதலாய் கொஞ்சம் இயற்கைச்சூழல், குறைந்த பட்சச்சுரண்டல் தென்படலாம்.பயணங்கள் மனிதனின் மனதை விசாலப்படுத்தப்பயன்படும் என்றால் லாரிகளில் போகும் பயணங்கள் மனதைச் சுக்குநூறாக்கி ஒட்டவைத்து வேடிக்கை பார்ப்பவை. விளிம்பு நிலையிலிருக்கும் விளிம்பு நிலை லாரி ஓட்டுனர்களை வாழ்க்கையின் விளிம்பிற்கே கொண்டு துரத்திச் சென்று வேடிக்கை பார்க்கவைக்கும் வித்தைகளைக் கொண்டிருக்கின்றன..இலக்கிய வாசகனாக பலருக்கு அறிமுகமான பாலமுருகனின் மொழி இச்சூழ்நிலைகளின் வெக்கையில் தோய்ந்ததாக இதில் இருக்கிறது.இதையும் பயண நூல் என்றே பலரும் படிக்கலாம்.அவ்வளவு சுவாரஸ்யம் இருக்கிறது.. ரோடு மூவி என்று கற்பனைத்தும் கொள்ளலாம்.அவ்வளவு சம்பவங்கள் உள்ளன. வெவ்வேறு வகை வாசிப்புப் பிரிவுகளில் வாகனப் பயணத்தை மையமாகக் கொண்ட அனுபவங்கள் என்ற வகையில் எளிய மனிதர்களின் பாடுகளை இந்நூல் கொண்டிருக்கிறது. பாலமுருகன் தன் இலக்கியப்பயணத்தில் தொடர்ந்து இவ்வகைப்பாடுகளையே மனதில் கொண்டிருக்கிறார் என்பதன் அத்தாட்சி இந்நூல்.
( நெடுஞ்சாலை வாழ்க்கை –கா.பாலமுருகன் .விகடன் பிரசுரம், சென்னை240 பக்கங்கள் 175 ரூபாய் )
subrabharathi@gmail.com