வாசிப்பும், யோசிப்பும் 246: ‘டொரான்டோ’வில் பிரெக்ட்டின் ‘யுகதர்மம்’ நூல் வெளியீடு பற்றிய சிறு குறிப்பு..

வாசிப்பும், யோசிப்பும் 246: 'டொரான்டோ'வில் பிரெக்ட்டின் 'யுகதர்மம்' நூல் வெளியீடு பற்றிய சிறு குறிப்பு.. இன்று , ஜூலை 9, 2016, நடைபெற்ற ‘யுகதர்மம்’ நாடகப்பிரதி நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு பலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ‘காலம்’ சஞ்சிகையின் ஆதரவில் நடைபெற்ற நிகழ்வு இது. கூடவே’காலம்’ சஞ்சிகையின் ‘வாழும் தமிழ்’ புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வினை ஒழுங்கு செய்து நடத்தியதற்காக ‘காலம்’ செல்வத்துக்குப் பாராட்டுகள். எனக்கு மிகவும் பிடித்த நாடகங்களிலொன்றான அவைக்காற்றுக் கழகத்தின் தயாரிப்பான ‘யுகதர்மம்’ நாடகப்பிரதியினை நூலாகப்பெறும் வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சியினைத்தந்தது. இவ்விதம் அவைக்காற்றுக் கழகத்தயாரிப்புகளின் நாடகப்பிரதிகளை நூலாக்கும் எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பதை நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய பாலேந்திரா, ஆனந்தராணி தம்பதியினர் தமது உரையில் குறிப்பிட்டனர். தாம் அண்மையில் இலங்கை சென்றிருந்த போது பலருக்குத் தமது நாடகங்கள் பற்றிய முழுவிபரங்களும் , பிரதிகளும் கிடைக்கவில்லையென்பதை அவர்கள் மூலம் அறிந்ததாகவும், அவர்கள் இவர்கள் தயாரிப்பில் வெளியான நாடகப்பிரதிகளை நூல்களாக்கினால் , அவை ஆவணங்களாக இருக்கும் அதே சமயம், நாடக ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையுமென்றும் குறிப்பிட்டதாகவும், அதன் பின்பே தமக்கும் இவ்விதமான ஆர்வம் ஏற்பட்டதாகவும், அதன் விளைவுதான் ‘யுகதர்மம்’ நூல் என்னும் கருத்துப்பட உரையாற்றினர். உண்மையில் இது வரவேற்கத்தக்க மிகவும் பயனுள்ள முயற்சியென்றே கூறுவேன். அத்துடன் ஆனந்தராணி பாலேந்திரா  இன்றைய இளம் சமுதாயம் இந்நாடக முயற்சிகளில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை விளக்கியதுடன், இதற்காக அவைக்காற்றுக்கழகம் எடுத்த, எடுக்கின்ற செயற்பாடுகளையும் தனது உரையில் விபரித்தார். உண்மையில் நாடகக்கலையில் ஆர்வமுள்ள இருவரும் நிஜ வாழ்விலும் ஒன்றிணைந்ததும் அவைக்காற்றுகழகத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களிலொன்று என்பேன்.


நிகழ்வுக்குத் தலைமையேற்று மிகவும் திறமையாக நடாத்தினார் எழுத்தாளர் ப.ஸ்ரீகாந்தன். அவர் தனது அறிமுக உரையில் பாலேந்திராவின் நாடக முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்டதுடன், தான் யுகதர்மம் நாடகம் பார்த்தபோது அதில் வியாபாரியாக நடித்த ரவிச்சந்திராவின் நடிப்பு தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், அவரைப்பார்க்க விரும்பியதாகவும் குறிபிட்டார். அத்துடன் யுகதர்மம் நாடகத்தில் நடித்த பலரை இந்நிகழ்வில் காணமுடிகிறதென்பதையும் சுட்டிக்காட்டினார்.


நிகழ்வில் கவிஞர் ஆனந்தப்பிரசாத் பாரதியாரின் ‘என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்’ கவிதையையும், ‘நடிப்புச் சுதேசிகள்’ கவிதையையும் இணைத்து தன் மதுரக் குரலில் பாடிச்சபையோரை மகிழ்ச்சிக்கடலிலாழ்த்தினார். நான் கவிஞர் ஆனந்தப்பிரசாத்தின் மதுரக் குரலுக்கு அடிமை. எனக்கு மிகவும் பிடித்த ஈழத்துப்பாடகராக அவரையே குறிப்பிடுவேன். இதுவரை காணொளிகள் மூலம் கேட்டு இரசித்த அவரது பாடலை, இன்று நேரில் கேட்டு இரசிக்கும் வாய்ப்பு கிட்டியது என் அதிருஷ்ட்டமே.


நிகழ்வில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், கவிஞர் சேரன், நாடகவியலாளர் பி.விக்கினேஸ்வரன், எழுத்தாளர் பா.அ.ஜயகரன், யுகதர்மம் நாடகத்தில் நடித்த ‘கட்டடககலைஞர்’ ரவிச்சந்திரா,  ‘பொறியியலாளர்’ சண்முகானந்தா, ‘காலம்’ செல்வம் மற்றும் பாலேந்திரா தம்பதியினரின் மகள் ஆகியோர் உரையாற்றினர். இறுதியில் பாலேந்திரா தம்பதியினர் தமது உரையினையாற்றினர். இடையிடையே ‘யுகதர்மம்’ நாடகத்தில் வரும் அமரர் வாசுதேவன் எழுதிய பாடல்கள் சிலவற்றை பாலேந்திரா, ஆனந்தராணி பாலேந்திரா, அவரது மகள் மற்றும் ரவிச்சந்திரா ஆகியோர் பாடிச் சபையோரைப் பரவசப்படுத்தினர். எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் தனது உரையில் ‘யுகதர்மம்’ என்று நாடகத்துக்குத் தமிழில் பெயரிட்ட மொழிபெயர்ப்பாளர் அமரர் வாசுதேவனின் மொழிபெயர்ப்பைச் சிலாகித்துப் பேசினார். பி. விக்கினேஸ்வரன் பிரெக்ட்டின் நாடகங்களைப்பற்றி , பொதுவாக நாடகங்களைப்பற்றி நீண்டதொரு உரையினை நிகழ்த்தினார். ஜயகரன் பிரெக்டின் நாடகங்கள் எவ்விதம் பார்வையாளருக்கும்,நாடகத்துக்குமிடையில் ஓர் இடைவெளியை வைத்திருக்கின்றன. அதற்கான காரணமென்ன? என்பதுபற்றிக் குறிப்பிட்டுத் தன் உரையினை நடாத்தினார். அத்துடன் எவ்விதம் தமக்குப் பாலேந்திராவின் நாடகங்கள் கனடாவில் நவீன நாடகங்களை உருவாக்க உதவின என்பதையும் நினைவு கூர்ந்தார். ரவிச்சந்திரா எவ்விதம் எண்பதுகளில் தாம் அனைவரும் ஒரு குடும்பமாக சுமார் மூன்று வருடங்கள் ‘யுகதர்மம்’ நாடகத்தைப் பல தடவைகள் மேடையேற்றினோம் என்பதைத்தனது உரையில் நினைவு கூர்ந்தார். கவிஞர் தனது உரையில் பாலேந்திராவின் நாடகங்களுடனான தனது அனுபவங்கள் மற்றும் பிரெக்டின் நாடகங்கள், அவை எவ்விதம் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகவுள்ள இக்காலகட்டத்திலும் பொருந்துகின்றன என்பது பற்றித் தனது உரையினை ஆற்றினார். பேச்சாளர்கள் அனைவருமே அவைக்காற்றுக் கழகத்தினர் எவ்வித வெளியார் உதவிகளுமின்றி, தன்னார்வளர்கள் உதவியுடன் ஓரியக்கமாக அவைக்காற்றுக் கழகத்தைக்கட்டியெழுப்பி இவ்வளவு வருடங்களாக நாடகங்கள் நடாத்தி வருவதையும், இதற்காகப் பாலேந்திராவைப் பாராட்டியும் உரையாற்றினர்.

-எழுத்தாளர்கள் என்.கே.மகாலிங்கம், டானியல் ஜீவா, வ.ந.கிரிதரன், நாடகவியலாளர் பாலேந்திரா & கட்டடக்கலைஞர் ரவிச்சந்திரா தம்பதியினர் –

சிறப்புப் பிரதிகளை எழுத்தாளர் அ.முத்துலிங்கம், ‘கனடாத்தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்’ என்னும் 24 மணி நேர வானொலியினை நடாத்தும் இளையபாரதியுட்பட மேலும் பலர் வாஙகியதைத்தொடர்ந்து சபையோருக்கு நூல்கள் விற்பனை செய்யப்பட்டன. நூல்களை பாலேந்திராவிடமிருந்து சபையோர் வாங்கிக்கொண்டனர்.


நிகழ்வில் கலை, இலக்கியப்பிரமுகர்கள் பலரைக் குறிப்பாக எழுத்தாளர்கள் விக்கினேஸ்வரன், அருண்மொழிவர்மன், என்.கே.மகாலிங்கம் (இவரது இளமையின் இரகசியம்தான் என்ன? ), அ.முத்துலிங்கம், டானியல் ஜீவா, எழுத்தாளர் திவ்வியராஜன், தேவகாந்தன், ஜயகரன், கவிஞர் அவ்வை, கற்சுறா எனப்பலரைக் காண முடிந்தது. பாலேந்திரா மொறட்டுவைப்பல்கலைக்கழக முன்னாள் மாணவரென்பதால், கட்டடக்கலை மற்றும் பொறியியல் பீட முன்னாள் மாணவர்கள் பலரைக் (கட்டடக்கலைஞர்களான சிவகுமார், கலா ஈஸ்வரன், ரவிச்சந்திரா, ஜோதிநாதன், மற்றும் பொறியியலாளர் சண்முகானந்தா) காண முடிந்தது. இவர்களில் மட்டக்களப்பைச்சேர்ந்த ரவிச்சந்திரா என்னுடன் ஒன்றாகக் கட்டடக்கலை படித்தவர். திறமையான நடிகர். விளையாட்டு வீரர். அக்காலகட்டத்தில் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் எப்பொழுதும் முதலாவதாக வருவார். ‘யுகதர்மம்’ நாடகத்தில் அவர் பிரதான பாத்திரத்தில் நடித்துப் பலரின் பாராட்டுதல்களையும் பெற்றவர். அவரை எண்பதுகளின் பின் இப்பொழுதுதான் முதன் முறையாக சந்திக்கின்றேன். அவர் நிகழ்வுக்குத் தன் மனைவியுடன் வந்திருந்தார்.


நீண்ட நாள்களின் பின்னர் நிறைவான நிகழ்வொன்றினைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது. பாலேந்திரா தம்பதியினரின் நாடகத்துறைக்கான பங்களிப்பு தொடர, மேலும் பல சாதனைகளைப் பதித்திட வாழ்த்துகள்.

ngiri2704@rogers.com