இலங்கையில் நடன உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ‘நடன நாடகச் செல்வி’ ஸ்ரீமதி நளாயினி ராஜதுரையை தனது முதல் குருவாகக் கொண்ட சாகித்தியா சுரேஸ் ‘நாட்டியக்கலைமணி’ ஸ்ரீமதி மாலதி ஜெயநாயகத்திடம் தனது நாட்டியக் கலையை தொடர்ந்து முறையாக முழுமையாகப் பரதத்தைப்பயின்று அண்மையில் லண்டன் The Orchard Theater இல் அரங்கேற்றம் கண்டுகொண்டார். பரதக்கலை மட்டுமன்றி அக்கலையோடு பிணைந்திருக்கும் சங்கீதக் கலையையும் நான்கு சகாப்தங்களாக பரதநாட்டியஇ குச்சுப்பிடி அரங்கேற்றங்களுக்குப் பாடிவரும் ‘நாட்டியக் கோகிலவாணி’ ஸ்ரீமதி அம்பிகா தாமோதரத்திடம் கற்றுத் தேறிய பெருமைக்குரியவராவார் இந்த இளம் சாகித்தியா.
‘நாட்டியக்கலைமணி’ ஸ்ரீமதி மாலதி ஜெயநாயகத்தைக் குருவாகக் கொண்டு சாகித்தியா இவ்வரங்கேற்றத்தை கடும் உழைப்பின் மத்தியில் சிறப்பிப்பது தன்னை மிகமகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக கனடாவிலிருந்து பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த ‘நிருத்தியக் கலைமணி’ ஸ்ரீமதி. கிருபாநிதி ரட்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். புஷ்பாஞ்சலி, கணபதி ஸ்துதி, ஜதீஸ்வரம், வர்ணம், கீர்த்தனம், பதம், கலிங்க நர்த்தனம், தில்லானா என்ற ஒழுங்கில் கவர்ச்சி, கச்சிதம், விறுவிறுப்பு நிறைந்த நடன உருப்படிகளால் சாகித்தியா சபையோர்களைக் கட்டி வைத்திருந்தாள் என்று தனது பிரதம உரையில் குறிப்பிட்ட ஸ்ரீமதி. கிருபாநிதி ரட்னேஸ்வரன் இரு கண்களைப்போன்று நர்த்தகி சாகித்தியாவும் இசைக் கலைஞரான ஸ்ரீ.பாலகாட் ஸ்ரீராமும் பக்க வாத்தியக் கலைஞர்களான ‘மிருதங்க கலைமாமணி’ ஸ்ரீ.பத்மநாபன் ஜெயராமன், வயலின் வித்துவான் ‘சங்கமித்திரா’ ஸ்ரீ. கே.ரி.சிவகணஷ், புல்லாங்குழல் செல்வன்.அரவிந்தன் பகீரதன் போன்றவர்களோடு இணைந்து பரதத்தின் மதிப்பை, ஆளும் நேர்த்தியோடமைந்த பாவத்தை, கலையை உயிரோட்டமாக வெளிப்படுத்தி ரசிர்களை தக்க வைத்தார்; நர்த்தகி சாகித்தியா என்றும் பாராட்டியிருந்தார்.
செல்வி.சாகித்தியாவின் நாட்டிய நுட்பங்கங்களை அவதானித்த பிரதம விருந்தினரான ‘ஆதீத நர்த்தகி’ ஸ்ரீமதி.கிருபாநிதி ரட்னேஸ்வரன் அவர்கள் ‘சம்பூரண நர்த்தகி சாகித்தியா’ என்ற விருதினை செல்வி சாகித்தியா சுரேசிற்கு வழங்கிக் கௌரவித்திருந்தார்.
தனது ஆறு வயதில் பரதத்தை ஆரம்பித்த சாகித்தியா 14 வயதின் ஆரம்பமுதல்; சகல உருப்படிகளையும் பயின்று அரங்கேற்றுவது என்பது பரதக் கலைமீது அச்சிறுமி கொண்டுள்ள இயல்பான விருப்பமும், ஆர்வமும் என விதந்து பேசிய விசேட விருந்தினராக இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த கலாஷேத்திரா நிவனத்தின் ஸ்ரீ ஹரிஹரன் நர்த்தகி சாகித்தியா லாவகமாக முத்திரைகளைச் சித்தரித்த அழகிய நிலைகளையும், புன்முறுவலுடன் விறுவிறுப்பாக மேடை முழுவதையும் நன்கு பயன்படுத்திய விதத்தினையும் வெகுவாகப் பாராட்டினார். லண்டனில் பிறந்து வளர்ந்த சாகித்தியா கொடிபோல் அசைந்து, மயில்போல் ஆடி, மான்போல் துள்ளி, அவளின் அழகிய விழிகள் உருண்டாடி கலையின் திறமைகளை அழகோடு வெளிப்படுத்திய விதங்களை விபரித்த ஸ்ரீ ஹரிஹரன் சாகித்தியாவின் அம்மம்மாவான திருமதி. அம்பிகா வாசுதேவன் அவர்கள் நர்த்தகி சாகித்தியாவுக்கு வழங்கிய மனப்பலத்தையும், மிகப்பெரிய உற்சாகத்தையும் சபையோர்கள் ஆச்சரியப்படும் வகையில் குறிப்பிட்டார்.
நர்த்தகி சாகித்தியாவின் தந்தையான டாக்டர் சுரேஸினதும் அவரது மனைவி தேவாஜினி சுரேசினதும் பெரு முயற்சியைப் பாராட்டிய இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த சங்கீத வித்துவான் ஸ்ரீ.பாலக்காட் ஸ்ரீராமன் அவர்கள் டாக்டர் சுரேஸ் துரைரட்ணம் வைத்தியத்துறையில் மட்டுமன்றி அழகிய புகைப்படக் கலைஞராகவும், ஆடை அலங்காரக் கலைஞராகவும் திகழ்ந்து தனது புத்திரியின் பரதநாட்டியத்தை மெருகூட்டி தமிழ் பண்பாட்டை வெளிப்படுத்தியதைக் காண முடிந்தது என்றும் கூறினார்.
மண்டபம் நிறைந்த மக்களிடையே மிகுந்த கரகோஷத்துடன் நர்த்தகி ரேச்சல் சாகித்தியா சுரேஸ் தொடர்ந்தும் இக்கலையை தன் வாழ்நாளில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென ஆனைக்கோட்டை திரு.ரவி சூசைப்பிள்ளை, புங்குடுதீவு டாக்டர்.சண்முகலிங்கம், ‘ஈழத்து இசை வேந்தர்’ பொன். சுந்தரலிங்கம் போன்றவர்களின் நிறைந்த வாழ்த்துக்களோடும், மிகுந்த மகிழ்வோடும் நிறைவு கண்டதைக் காணமுடிந்தது.
மேலும் சில காட்சிகள் …
16.9.2011.
navajothybaylon@hotmail.co.uk