செழியனின் ‘ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து..’ (வானத்தைப் பிளந்த கதை)
சிறந்த நாவல்கள் பலவற்றின் தொடக்க வசனங்கள் முக்கியமானவை. வாசகர்களைத் தட்டியெழுப்பி வாசிப்பிற்குள் மூழ்க வைப்பவை. மிகவும் புகழ் பெற்ற நாவல்களிலொன்றான ‘ஹெர்மன் மெல்வில்லின்’ ‘மோபி டிக்’ நாவலின் முதல் வசனம் ‘என்னை இஸ்மாயில் என்று அழையுங்கள்’ (Call me Ishmael) என்று தொடங்கும். மறக்க முடியாத முதல் வசனத்தை உள்ளடக்கிய நாவல்களில் மோபி டிக்’கிற்கு முக்கியமானதோரிடமுண்டு.
இன்னுமொரு நாவலின் தொடக்கமும் வாசகர்களைத் தட்டெயெழுப்பி நாவலுக்குள் மூழ்க வைக்கும் தன்மை மிக்கது. அது காஃப்காவின் புகழ் பெற்ற நாவலான ‘உருமாற்றம்’ (The Metamorphosis) அதன் நாயகனான ‘கிரகர் சம்சா’வைப்பற்றி வர்ணிப்பதுடன் நாவல் தொடங்கும். அது வருமாறு: “ஒரு காலைப்பொழுதில் கிரகர் சம்சா தொல்லைகள் நிறைந்த கனவுகளிலிருந்து விழித்தபோது அவன் தனது படுக்கையில் பூச்சி போன்ற பயங்கரமானதொரு உயிரினமாக மாறியிருப்பதைக் கண்டான்” (One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin)
சில நாவல்கள் அல்லது படைப்புகளின் முடிவுகளும் வாசகர்களைச் சுண்டியிழுப்பதாக, நெஞ்சில் நிலையாக உறைந்து விடுவதாக அமைந்து விடும். அண்மையில் கவிஞர் செழியனின் ‘வானத்தைப் பிளந்த கதை (ஈழப்போராட்ட நாட்குறிப்புகள்) ‘ அத்தகையதொரு படைப்பு. இது கவிஞர் செழியனின் ஒரு குறிப்பிட்ட காலத்துச் சுயசரிதை. தாயகம் (கனடா)வில் ‘ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து’ என்று தொடராக வெளிவந்து ‘கனேடியன் நியூபுக் பப்பிளிகேசன்’ (ரொறொன்ரோ) பதிப்பகத்தால் அதே பெயரில் நூலாகவும் வெளியிடப்பட்டது. பின்னர் ‘காலம்’ சஞ்சிகையின் ‘வாழும் தமிழ்’ வெளியீடாக ‘வானத்தைப் பிளந்த கதை’ என்று மீண்டும் வெளியானது. இந்நூல் பின்வருமாறு முடிகின்றது. நெஞ்சத்தைத்தொடும் முடிவு. புகலிடம் நாடிப் பிறந்த மண்ணை விட்டுப் பிரியும் மானுடர் அனைவரையும் சுண்டியிழுக்கும் முடிவு.
“விமானம் ஓடு பாதையில் ஓடத்தொடங்கியது. வேகமாக .. ஓடி.. ஓடி..மெல்ல மெல்ல எழுந்து வானவெளியில் மிதந்தது. மலைகளே! கற்களே! மேகக் கூட்டங்களே! என் இனிய தேசமே… சென்று வருகிறேன். கண்ணீர் நிறைந்து வழிந்தது. சென்று வருகிறேன். என் ஜென்ம பூமியே! இங்குதான் பிறந்தேன். இங்குதான் வளர்ந்தேன். இப்போ பிரிய நேர்ந்ததே. வயல்களும், காடுகளும், மலைகளும் நிறைந்தன என் தேசம். தந்தையர் வாழ்ந்த தாய்த்திருநாடு. தந்தையும், தாயும் கூடிக் குலாவி வாழ்ந்த பொன்னாடு. விமானம் உயர உயரப் பறந்தது. என் தேசத்தில் இருந்து வந்த ஒளிக்கீற்றுகள் கண்சிமிட்டி விடை தருவதுபோல இருந்தது.
இனிய தேசமே மறுபடியும் நான் வருவேன். மனிதன் எனும் இனம் எழுந்து வரும் நாளில் மறுபடி நான் வருவேன். ஒருவேளை என் முற்றாத கன்வுகளோடு முதிர்ந்த வயதில் ஏதோ ஒரு நாட்டில் ஒரு அகதியாய் அநாதைப் பிணமாய் பனிக்கட்டிகளுக்கு நடுவிலோ, இயந்திரங்களுக்கு அடியிலோ மரணித்துப் போகலாம். காற்றே, மரம், செடி, கொடிகளே என் தலைமுறை மறுபடி இங்குதான் வேர்விட்டு, இருதளிர்கரம் நீட்டி வளரும். என்புதல்வர்கள், அல்லது போனால் என் பேரர்களில் ஒருவர் வருவார்கள். இத்தாய்த் திருநாட்டை முத்தமிட வருவார்கள். இனிய தேசமே தெரிந்தோ தெரியாமலோ நான் ஏதும் தவறு செய்திருந்தால் தங்கள் கண்ணிரால் என் பாவங்களை இவர்கள் கழுவுவார்கள். தேசமே என்தலை முறையையாவது இங்கு வாழவிடு. விமானம் மேகக் கூட்டத்தினுள் புகுந்து தொலைந்து போனது.”
நாட்டில் நிலவிய உள், வெளி அரசியல் முரண்பாடுகளால வாழ முடியாத சூழலில் நாட்டை விட்டுப் புகலிடம் நாடி வேற்று நாடொன்றுக்குச் செல்லும் மனிதனொருவனின் மனநிலை இது.
மறக்க முடியுமா? மறக்கத்தான் முடியுமா?
[ ‘ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து’ நூலை ‘நூலகம்’ இணையத்தளத்தில் வாசிக்கலாம்: http://noolaham.net/project/14/1309/1309.pdf ]
பார்க்க வேண்டிய திரைப்படம்: Hazaar Chaurasi Ki Maa – ‘இலக்கம் 1084இன் அம்மா –
அமரர் மஹாஸ்வேதாதேவியின் புகழ்பெற்ற வங்க நாவலான ‘இலக்கம் 1084இன் அம்மா’ – (Mother of 1084) ஜெயாபாதுரி பச்சனின் நடிப்பில் Hazaar Chaurasi Ki Maa என்னும் பெயரில் வெளியானது. அமரர் மஹாஸ்வேதாதேவியின் நினைவாக இங்கு அந்தத்திரைப்படத்தைப் பகிர்ந்துகொள்கின்றேன். எழுத்தாளர் மஹாஸ்வேதாதேவி சமுதாயப்பிரக்ஞை மிக்க எழுத்தாளர் என்பதை அவரது எழுத்துகள் வெளிப்படுத்தும். அவரது புகழ்பெற்ற நாவல் Mother of 1084.
இந்நாவல் கூறும் கதை இதுதான்: வங்கி உத்தியோகத்தராகச் சுஜாதா சாட்டர்ஜி தனது கணவருடன் கல்கத்தாவின் செல்வச்சிறப்பு மிக்க பகுதியில் வசித்து வருகின்றார். சுஜாதா ஓர் இந்துப்பெண். பக்தி மிக்க இரக்க சுபாவம் மிக்க பெண்ம்ணி. அவளது ஒரே மகன் காலேஜில் படிக்கும் மாணவன். பெற்றோர் பெருமிதப்படக்கூடிய இளைஞன் அவன். ஒரு நாள் அவர்களின் அவனைப்பற்றிய கனவுகள் தகர்ந்து போகின்றன. பொலிஸ் அவன் மகன் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும், 1084 என்று அடையாளமிடப்பட்ட அவனது உடலை அடையாளம் காட்டும்படியும் அழைக்கின்றது.
சுஜாதா கொலை செய்யப்பட்டு இறந்து போன தனது மகனின் கடந்த காலத்தை அறிய விரும்புகின்றாள். அவனது நண்பர்களைச் சந்திக்கின்றாள். அப்பொழுதுதான் அவள் தன் மகனுக்கு காதலியொருத்தி இருப்பதை அறிந்துகொள்கின்றாள். அவளது பெயர் நந்தினி மித்ரா. அப்பொழுதுதான் அவள் தன் மகன் ‘நக்ஸல்பாரி’ என்னும் புரட்சிகர அமைப்பின் உறுப்பினர் என்பதை அறிகின்றாள். அதுவோர் இடதுசாரிப் புரட்சிகர அமைப்பு. தனது மகனின் கடந்த காலத்தைப்பற்றிய தேடலில் அவள் தன் மகனின் போராட்டத்தைப் புரிந்துகொள்கின்றாள். அவ்வழியே தொடர்ந்தும் பயணித்திட முடிவு செய்கின்றாள்.
மஹாஸ்வேதாதேவியின் மேற்படி நாவலைத்தழுவி எடுக்கப்பட்ட ஹிந்தித்திரைப்படமே ‘hazar churashir ma’ . இதில் சுஜாதாவாகா நடித்திருப்பவர் ஜெயபாதுரி பச்சன்.. மகனின் காதலி நந்தினி மித்ராவாக நடித்திருப்பவர் நந்திதா தாஸ். இருவருமே சிறந்த நடிகையர்கள். நடிப்புக்காகப் பல விருதுகளைப்பெற்றவர்கள். ஜெயாபாதுரி தனது முதற் படமான குட்டி மூலம் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதினைப் பெற்றவர்..
இத்திரைப்படத்தில் வரும் அம்மாவைப்போல் எத்தனை அம்மாக்கள், எத்தனை மகன்கள் எம் மண்ணில்…
ngiri2704@rogers.com