கவிதை: ஏமாந்தவனின் பாடலல்ல, மாற்றுபவனின் பாடலுமல்ல.

- தம்பா (நோர்வே) -முகமையிடலும் முலாமிடலும்
எப்போதும் பயனற்றவை அல்ல.
குணத்தை
வெளிப்பாட்டை
செயற்பாட்டை
முறைப்பாட்டை
மாற்றிவிடும் அபத்தம் காண்பீர்.

கண்ணாடியும் நிலைக்கண்ணாடியும்
ஒன்றெனக் கொள்ள முடிந்ததில்லை.
மூலம் ஒன்றானாலும்
குணப்பாடு வேறானதாகி விடும்
பிறழ்வு பாரும்.

கண்ணாடியின் தடையற்ற உடலினூடே
கடந்து செல்ல
கரையாது ஒளி காட்சி தரும்.

வழிமாற்றி வெளியேற்றி
ஒளி முடங்க
முகம் காட்டும் நிலைக்கண்ணாடி.

ஒரு கணம் கூத்தாடியும் கலைஞனும்
முகமுலாமிட்டு மகிழ்ந்தாட
மகிழ்பரவ துணைவனாகும்.

மறுகணம் கஞ்சனும் நஞ்சனும்
முகமுலாமிட்டு வஞ்சனை செய்ய
துணைநின்று துரோகியுமாகும்.

பயன் தருவதெல்லாம் நல்லதுமல்ல.
பயன் தராததெல்லாம் கெட்டதுமல்ல.

பொய்மைக்கு முலாமிடல்
உண்மையை ஒளியவைக்கிறது.
உண்மைக்கு முலாமிடலும்
பொய்மையை ஒளியவைக்கிறது.