இந்த அங்கத்தை ஒரு சொல்ல மறந்த கதையுடன் ஆரம்பிக்கலாம். தென்னிலங்கையிலிருந்து பலவருடகாலமாக வெளியாகிறது அந்தப்பத்திரிகை. ஒரு இந்தியத்தன வந்தரினால் தொடங்கப்பட்டு காலப்போக்கில் பல தனவந்தர்களின் பங்குடன் வளர்ந்து, பலதரப்பட்ட வர்த்தகத்துறை செல்வந்தர்களிடம் கைமாறிச்சென்று ஒரு கால கட்டத்தில் அரச மற்றும் அரசியல் கட்சிகளின் மட்டத்திலும் செல்வாக்குச்செலுத்தி, இலங்கை வர்த்தகத்துறையில் தேர்ந்த ஞானமும் பெற்றவரின் தலைமைப்பொறுப்பிற்கு வருகிறது அந்தப்பத்திரிகை. ஒரு காலகட்டத்தில் அவருக்கு, அந்தப்பத்திரிகை ” இன்னாரின் பத்திரிகை ” என்ற பெரும் புகழுக்கும் அப்பால், தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பும் பெற்ற ஊடகம் என்பதிலும் பெருமிதம் நீடித்திருந்தது. உலகவங்கியும் அவரது இதர வர்த்தகத்துறைகளின் அபிவிருத்திக்கு கடன் வழங்குவதற்கு முன்வந்திருந்தது.
அந்தப்பத்திரிகையில் இடதுசாரி சிந்தனையுள்ள ஒரு பத்திரிகையாளர் பராளுமன்ற நிருபராக நீண்ட காலம் பணியாற்றினார். அவர் அந்த நிருவாகத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கும் பின்னின்று உழைத்திருந்தவர். அதனால், வர்த்தக ஞானம் மிக்கவரான அந்தப் பத்திரிகை நிறுவனத்தின் தலைவருக்கு குறிப்பிட்ட இடதுசாரியின் மீது ஒரு கடைக்கண் பார்வை இருந்தது. பாராளுமன்றில் ஒரு விவாதம் வந்தபோது இனக்குரோதம் கக்கும் ஒரு அரசியல்வாதி, ” அரசாங்கமும் உலகவங்கியும் குறிப்பிட்ட வர்த்தக பிரமுகருக்கு மறைமுகமாக உதவிவருகிறது” என்று சொல்லிவிட்டார். அத்துடன் அந்தப் பிரமுகரின் குலத்தையும் இழுத்துப்பேசிவிட்டார். குறிப்பிட்ட பத்திரிகையாளரும் அந்தச்செய்தியை பத்திரிகையில் எழுதிவிட்டார். செய்தி வெளியான பத்திரிகையின் பிரதி வழக்கம்போல் காலைவேளையிலேயே அதன் உரிமையாளரான பிரமுகரின் வாசஸ்தலத்திற்கு சென்றுவிட்டது. அவர் காலையில் எழுந்ததும் அருகிலிருக்கும் கடற்கரையோரமாக நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர். நடைப்பயிற்சியின்போது அன்று காலையில் அவர் வாசித்த அவர் பற்றிய செய்திதான் மூளையை குடைந்திருக்கிறது. உண்மையிலேயே அந்த இனக்குரோத அரசியல்வாதி அப்படித்தான் பேசியிருப்பாரா..? என்ற கேள்விதான் அவரது சிந்தனையில் ஊடுறுவியிருந்தது. அன்று காலை தமது மற்றும் ஒரு அலுவலகம் வந்ததும், தனது செயலாளரை பாராளுமன்றம் அனுப்பி, பாராளுமன்ற பதிவேட்டினை (ஹன்சார்ட்) எடுத்துவரச்செய்து பார்த்தார். அதில் தமிழ் வர்த்தகர் என்றுதான் இருந்ததே தவிர அவரது குலம் பற்றி எதுவும் இல்லை. அப்படியானால், குறிப்பிட்ட பத்திரிகையாளர் வேண்டுமென்றே தன்னை இழிவுபடுத்திவிட்டார் என நினைத்துக்கொண்டு, அவரிடம் விளக்கம் கோருமாறு பிரதம ஆசிரியரிடம் வலியுறுத்தினார். செய்தித்துறையில் ஆற்றல் மிக்க அந்த இடதுசாரி பத்திரிகையாளருக்கு ஆபத்துவரப்போகிறது என்பதை தெரிந்துகொண்ட ஆசிரியரும் சாதுரியமாக நடந்துகொண்டார். குறிப்பிட்ட அரசியல்வாதியை தொடர்புகொண்டு, ” நீங்கள் அவ்வாறு உரையாற்றினீர்களா..? எனக்கேட்டு உறுதிசெய்துகொண்டார். அவரும் “ஆமாம்” என்றார். “ஆனால், பாராளுமன்ற பதிவேட்டில் அவ்வாறு இல்லையே என்றதும். ” அப்படியா…? நான் மீண்டும் இதனையும் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டி மீண்டும் பேசுகின்றேன்” என்றார். அவ்வாறே மீண்டும் பேசினார். இதிலிருந்து சில உண்மைகள் தெளிவாகின்றன.
நிகழ்த்தப்படும் உரைகள் அனைத்தும் பாரளுமன்ற பதிவேடுகளில் வரிக்கு வரி அப்படியே பதிவாவதில்லை. ஒரு தமிழ் வர்த்தக பிரமுகரிடமிருந்து, ஒரு தமிழ் ஊழியரை பாதுகாப்பதற்காக ஒரு இனக்குரோத அரசியல்வாதி மீண்டும் இனக்குரோதம் கக்கினார். ஊடகத்துறையில் இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அக்காலப்பகுதியில் இலங்கையில் பத்திரிகை உலகம் எவ்வாறு இருந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்தான் அந்த பத்திரிகையாளருக்கு நேர்ந்த அனுபவம். அவர் பத்திரிகைத்துறையில் நல்ல அனுபவசாலி. அதேசமயம் மதுப்பழக்கமும் அவருக்கிருந்தது. எனினும் நிதானம் தவறாமல் செய்திகளை எழுதுவார். அத்துடன் சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். அவரது கையெழுத்தும் அழகானது. பாரளுமன்ற உரைகளை மாத்திரமின்றி மேடைப்பேச்சுக்களையும் கூர்மையாக செவிமடுப்பவர். ஒரு சமயம் மேதினம் வந்தது. அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் நாள். ஆனால், அவருக்கு காலிமுகத்திடலுக்கு அருகில் அது எங்கே இரகசியமாக விற்பனையாகிறது என்பதும் நன்கு தெரியும். காலிமுகத்திடலில் அன்றைய ஜனாதிபதியும் பிரதமரும் மற்றும் அவர்களின் கட்சியின் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றவிருக்கிறார்கள். “உலகத்தொழிலாளர்களே ஓரணியில் திரளுங்கள்” என்ற கோஷத்துடன் பலவாறாகப்பிளவுபட்டு பல மேதின ஊர்வலங்களும் மேதினக்கூட்டங்களும் நடத்துகின்ற தலைவர்களையும் கட்சிகளையும் நாம் தொடர்ச்சியாகப் பார்த்துவருகின்றோம். இதுப்பற்றி மேதினம் என்ற சிறுகதையையும் முன்னர் எழுதியிருக்கின்றேன். இந்தப்பத்தியில் குறிப்பிடப்படும் அந்த பத்திரிகையாருக்கு அன்றைய தினம் காலிமுகத்திடலில் நடக்கும் அரசாங்கக்கட்சியின் மேதினக்கூட்டத்தின் செய்திகளை எடுத்துவரும் வேலை ஒப்படைக்கப்படுகிறது. அவரும் ஒரு ஒளிப்படக்கலைஞருடன் அவ்விடத்திற்குச்சென்றுவிடுகிறார். தாகசாந்தியும் செய்துகொண்டார். ஒரு சுருள் கடலையும் வாங்கிக்கொண்டு, கடற்காற்றை சுவாசித்தவாறு மைதானத்தில் உலாவத்தொடங்கினார். உடன்வந்த ஒளிப்படக்கலைஞர், ” அண்ணே… ஜனாதிபதி, பிரதமர் எல்லோரும் வந்துவிட்டார்கள். ஊர்வலமும் வருகிறது. வாருங்கள் மேடையருகே செல்வோம்.” எனச்சொல்கிறார். அந்த மேடையருகே பத்திரிகையாளர்களுக்கும் ஒளிப்படக்கலைஞர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவரோ, கடற்காற்றை சுவாசித்து, உள்ளே சென்ற தீர்த்தத்தின் சுகானுபவத்துடன் மைதானத்தில் நடக்கிறார். உடன்வந்தவரோ, ” அண்ணே வாருங்கள் மேடைக்கு அருகில் செல்வோம்.” என தொடர்ந்து அழைக்கிறார். ” நீ…போ…. போய் படங்களை எடுத்துக்கொண்டு போ. நான் மெதுவா வாரேன்….இவங்கள் என்னத்தடா புதுசா பேசப்போறாங்கள். ஒவ்வொரு மே தினத்திலும் பேசியதைத்தானே பேசுவான்கள். நாங்களும் அதனைத்தானே எழுதிக்கொண்டிருக்கிறோம். நீ…. போ….நான் பிறகு வருகின்றேன்.” என்று சொல்லி அனுப்பிவிடுகிறார். அந்த ஒளிப்படக்கலைஞரும் மே தின மேடையருகே சென்று, படங்கள் எடுத்துக்கொண்டு பத்திரிகை அலுவலகத்திற்கு போய்ச்சேர்ந்துவிட்டார். மேடையருகேயே செல்லாத அந்தப் பத்திரிகையாளரோ, கொரித்த கடலை முடிந்ததும் பஸ் ஏறி அலுவலகம் வந்து, செய்தியை எழுதிக்கொடுத்துவிட்டு வீடு சென்றுவிட்டார். மறுநாள் அந்தப்பத்திரிகையில் தலைப்புச்செய்தியாக வெளியானது முதல்நாள் காலிமுகத்திடல் மேதினக்கூட்டத்தின் உரைகள். ஜனாதிபதியும் பிரதமரும் பேசிய பேச்சுகள் எவ்வாறு அதில் பதிவாகியிருந்ததோ, அவ்வாறே இதர பத்திரிகைகளிலும் அதே சாரப்பட செய்திகள் வெளியாகியிருந்தன.
இதர பத்திரிகையாளர்கள் மேதின மேடைக்கு அருகிலிருந்து எழுதிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய அதே செய்தியைத்தான் “காற்றுவாங்கப்போனேன் ஒரு செய்தி வாங்கி வந்தேன்” என நடமாடித்திரிந்த நமது நாயகனும் எழுதியிருந்தார். அன்றைய தினம் காலிமுகத்திடலில் நடமாடிக்கொண்டே , ஒலிபெருக்கியிலிருந்து பெற்று செவிமடுத்த செய்தியே அவரால் எழுதப்பட்டது. ஆனால், சரியாக எழுதப்பட்டிருக்கிறது. இதிலிருந்து தெளிவாகும் உண்மை யாதெனில், செய்தி சேகரிப்பதற்கு கிரகித்தல்தான் மிகவும் அத்தியாவசியமானது.
கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ரோவின் அருமை நண்பரும் நோபல் விருது பெற்றவருமான இலக்கியப்படைப்பாளியும் பத்திரிகையாளருமான, கப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் (1927-2014) நிருபர்களுக்கு அவசியமான கிரகித்தல் பற்றி எழுதியிருக்கிறார். நிருபர்கள் தம்வசம் டேப்ரெகோடர் வைத்திருக்கவேண்டியதில்லை எனவும் சொல்லியிருக்கிறார். கிரகித்தல், நினைவாற்றல் என்பனவே நிருபர்களுக்கு அவசியமானவை என்று சொல்லியிருக்கும் அந்த இலக்கிய மேதை அந்திமகாலத்தில் நினைவு மறதி நோயினால்தான் மறைந்தார் என்பதும் துன்பியல் நிகழ்வுதான்.
இந்த சொல்ல மறந்த கதைகளை அன்று கிளிநொச்சியில் நண்பர் கருணாகரனும் கிளிநொச்சி ஊடக அமையமும் ஒழுங்குசெய்திருந்த சந்திப்பு – கலந்துரையாடலில் சொன்னேன். எனக்கு அவர்கள் தந்திருந்த தலைப்பு: ஊடகத்துறையில் எதிர்நோக்கும் சவால்கள். இரவல் தாய்நாட்டில் அரசியல் உட்பட ஊடகத்துறை தொடர்பாக பேசும்பொழுது நிதானமும் எச்சரிக்கையும் முக்கியம். ஒரு பத்திரிகையாளருக்கு பலதரப்பிலிருந்தும் சவால்கள் வரும். எந்தத்தொழிலும் சவால்கள், சோதனைகள் நிரம்பியதுதான். அதிகாரத்திலிருப்பவர்களையும் சம்பளம் தரும் முதலாளிகளையும் சமாளிக்கவேண்டும். பத்திரிகை முதலாளிகள் பத்திரிகையாளர்கள் அல்ல. அதிகாரத்திலிருப்பவர்களும் பத்திரிகையாளர்கள் அல்ல. இலங்கையில் ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸ், டி.பி. இலங்கரத்னா, டி.பி. தென்னக்கோன், முதலான ஒரு சில சிங்கள அமைச்சர்கள் பத்திரிகையாளராகவும் எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் விளங்கினர். தற்பொழுது மல்லியப்பு திலகர் என்ற எழுத்தாளர் எம்.பி.யாக பதவிவகிக்கின்றார். அவரைப்போன்று மலையக மக்கள் முன்னணி தலைவராகவும் அமைச்சராகவுமிருந்த சந்திரசேகரனும் ஒரு எழுத்தாளர்தான். முஸ்லிம் தலைவர்கள் அஷ்ரப்பும் – ரவூப் ஹக்கீமும் கவிஞர்கள்தான். மட்டக்களப்பின் முடிசூடா மன்னர் எனப்பெயரெடுத்த செல்லையா இராஜதுரையும் முன்னாள் பத்திரிகையாளர்தான். இவர்களுக்கு பத்திரிகையாளர்களின் பிரச்சினைகள் தெரியும். ஆனால், அதிகாரத்தில் அமர்ந்ததும் அவர்களின் முகம் வேறுவிதமாக மாறிவிடுவது தவிர்க்கமுடியாதது.
இதழியல் சார்ந்த சங்கங்கள் இலங்கையில் பெருகியிருந்தபோதிலும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அன்றைய சந்திப்பில், எல்லோருக்கும் நன்கு தெரிந்த சவால்கள் பற்றி பொதுவாகச்சொல்லிவிட்டு, ஒவ்வொரு பத்திரிகையாளரும் தமக்குத்தாமே சவாலாகியிருக்கும் விடயம் பற்றி யாராவது பேசுகிறீர்களா…? எனக்கேட்டேன். எனது இந்தக்கேள்வி அங்கிருந்தவர்களுக்கு விநோதமாக இருந்திருக்கவேண்டும். பத்திரிகையாளர்களும் படைப்பாளிகளும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சிந்திக்கிறார்களா…? இயங்குகிறார்களா…? எழுதுகிறார்களா…? எனக்கேட்டேன்.
அவ்வாறு எழுதத்தயங்கினால் அதுவும் அவர்களுக்கு ஒரு பாரிய சவால்தானே…? தமக்குப்பிடிக்காதவர்களின் செய்திகளை பிரசுரிக்காமல் இருட்டடிப்புச்செய்வது. அதிகாரத்திலிருப்பவர்களின் நன்மதிப்பைப்பெறுவதற்கு ஏற்றவாறு செய்திகளை வெளியிடுவது. அதன் மூலம் தனிப்பட்ட நலன்களைப்பெறுவது.
இக்கலந்துரையாடலில் பேசப்படாத ஒரு விடயத்தையும் இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன். இலங்கையில் ஒரு தமிழ்ப் பத்திரிகை முழுப்பக்க விளம்பரத்திற்கு எவ்வளவு கட்டணம் பெறுகிறது…? ஒரு பக்க சிறுகதைக்கு அல்லது கட்டுரைக்கு எவ்வளவு சன்மானம் தருகிறது…? இதுபற்றி எவரேனும் யோசிக்கிறார்களா…? வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற என்னைப்போன்ற பலரும் இலங்கைப்பத்திரிகைகளில் எழுதுகின்றார்கள். அவர்கள் எதுவித சன்மானமும் பெறுவதில்லை என்பது பரகசியம். ஆனால், இலங்கையிலிருந்துகொண்டு எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு என்ன தரப்படுகிறது…? இலங்கையிலிருக்கும் தமிழ்ச்சங்கங்கள், இலக்கிய அமைப்புகள், எழுத்தாளர்கள் இதுபற்றி விசாரிக்கின்றார்களா..? பத்திரிகைகளை வெளியிடும் நிறுவனங்களின் தலைவர்களிடம் இதுதொடர்பாக ஏதேனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்களா…? ஊடகவியலாளர்களும் படைப்பாளிகளும் எதிர்நோக்கும் சவால்களும் இவற்றுள் அடங்குகிறதுதானே…? சவால்கள் அதிகார மையத்திடமிருந்து மட்டுமல்ல பத்திரிகைகளை வெளியிடும் நிறுவனங்களிடமிருந்தும் எதிர்நோக்கப்படுகிறது. இயங்கும் ஊடக அமையங்கள், பத்திரிகையாளர் சங்கங்கள் இதுபற்றியும் யோசிக்கவேண்டியிருக்கிறது. இலங்கையில் சமகாலத்தில் ஊடகக்கற்கை நெறி அறிமுகமாகியுள்ளது. ஊடகக்கல்லூரிகள் தோன்றியிருக்கின்றன. அவற்றுக்கு இந்தப்பதிவை சமர்ப்பிக்கின்றேன்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கிளிநொச்சியில் வதியும் சில கலை, இலக்கியவாதிகள், சமூகப்பணியாளர்கள் சில பாடசாலை அதிபர்கள் கலந்துகொள்ளும் சந்திப்புக்கு நண்பர் கருணாகரன் அழைத்துச்சென்றார். நீண்ட நாட்களாக நான் சந்திக்க பெரிதும் விரும்பியிருந்த ஒரு முக்கியமான அன்பர் எனக்காக அங்கு காத்திருந்தார். – (பயணங்கள் தொடரும்) –