அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையோ அல்லது அவற்றில் ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளில் வெண்பா யாப்பில் கூறுவன கீழ்க்கணக்கு நூல்களாகும். இவ்விலக்கணம் நீதி நூல்களுக்குப் பொருந்துவதாகும். இதன் காரணமாகவே வெண்பா யாப்பு நீதி நூல்களுக்கு உரியதானது. குறிப்பாக ஓரடி, ஈரடி, நான்கடி என்று சுருங்கிய அளவில் நீதிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் போக்கு நீதி நூல்களில் காணப்படுகிறது. நீதி கூறுகையில் அது சுருங்கிய அளவில் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் படைப்பாளர்கள் எண்ணியுள்ளனர். மேலும் வாழ்க்கைக்குச் சட்டமாக அமையும் நீதி நூல்கள் விரிவான அடிவரையறை பெற்றனவாக இருந்தால் அதனுள் பல குழப்பங்கள் நேரும் என்பது கருதியும் இந்தச் சுருக்கமான அடி வரையறை நீதி நூல்கள் எழுதுபவர்களால் பின்பற்றப் பெற்றுள்ளது. தமிழ்ப் பரப்பில் தொடர்ந்து வந்த நீதி நூல்களிலும் இந்தச் சுருக்கமான அடிவரையறை என்ற கட்டமைப்பு பின்பற்றப் பெற்றுள்ளது. இதனை அறிந்துணர நீதி நூல்களின் அடி அளவு குறித்த செய்திகளைத் தொகுத்துக் காண வேண்டியுள்ளது.
ஏலாதி என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கீழ்க்கணக்கு நூல்கள் சங்க மருவியக் காலத்தில் தோன்றியவை. ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி என்ற ஆறு பொருட்கள் சேர்த்து செய்யப்படும் சூர்ணத்திற்கு ஏலாதி என்று பெயர். அதுபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு அறக்கருத்துக்களைக் கொண்டிலங்குவதால் ஏலாதி என்று இந்நூல் பெயர் பெற்றது.
ஏலாதி ஆசிரியர்
ஏலாதி ஆசிரியரின் பெயர் கணிமேதாவியார். இது இவரது இயற்பெயர்ப் போல் தெரியவில்லை. கணி என்பதற்கு கணிதம் (கணக்கு) என்றும் சோதிடம் என்றும் பொருள் படும். இத்துறைகளில் சிறந்து விளங்கியவர் ஆதலால் ஆர் விகுதி சேர்த்து, மரியாதை நிமித்தம் “கணிமேதாவியார்” என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதை இவர் நூலில் வலியுறுத்தும் கருத்துக்களைக் கொண்டு எளிதில் அறியமுடிகிறது.
பதிப்பு வரலாறு
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலும் சமண சமயத்தவர்கள் செய்தது. சுமார் 19ஆம் நூற்றாண்டில்தான் கீழ்க்கணக்கு நூல்கள் பதிக்கப்பட்டன. பெரும்பாலான கீழ்க்கணக்கு நூல்களுக்கு பழைய உரைகள் கிடைக்கப் பெறவில்லை. கிடைக்கப் பெறாத உரைகளுக்கு, பின்னாளில், பதிப்பித்தவர்கள் மற்ற புலவர்களை வைத்து உரையெழுதி வெளியிட்டார்கள். அவர்களுக்கு, சமண நூற்களில் பயிற்சியின்மையால், சில சொற்றொடர்களுக்கு தங்களுக்குத் தெரிந்த பொருள்களைக் கொண்டு உரையெழுதினார்கள். அவற்றுள் அறுநால்வர் என்பது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
நூல் கருத்து
சிறப்புப் பாயிரம் இல்லறத்தையும், துறவறத்தையும் போற்றி, கணிமேதாவியார் நூல் செய்திருப்பதாகக் கூறுகிறது. சமணம் இல்லறத்தை வெறுத்தது என்று தூற்றுவோர்கள் கவனிக்கவும். இல்லறம், துறவறம் என்று அறத்தைப் பகுப்பதுச் சமண சமயக் கொள்கை. இந்நூலில் நாற்பொருளுள் முதலான அறத்தைக் கலந்துக் கொடுத்திருக்கும் பாங்கு எண்ணத்தகும். ஏலாதி
ஏலாதி நான்கு வரிகளால் ஆன பாடல்களை உடையது. இதன் நூலாசிரியர் கணிமேதாவியார். இந் நூலில் எண்பது வெண்பாக்கள் உள்ளன. காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு ஆகும். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஏலாதியில் தான் மிகுதியான வட சொற்கள் காணப்படுகின்றன.
ஏலாதி, மாக்காயனின் மற்றொரு மாணாக்கரான கணி மேதாவியார் என்பவரால் இயற்றப்பட்டது. அரசன் தவிர்க்க வேண்டியவையாகப் போகம், வீண் செலவு, மிருக வேட்டை, கள், சூது, கடுஞ்சொல் பேசுதல், கடுங்கோபத்துடன் தண்டனை வழங்குதல், அடக்கமின்மை ஆகியவற்றை இந்நூலின் 18ஆம் பாடல் பட்டியலிடுகிறது. ஈகையின் பயனாக (மறுபிறப்பில்) அரசாட்சி கிட்டும் என்றும் (பா. 47), சுற்றத்தாரைப் பாதுகாப்பவன் வாளேந்தும் அரசனாகப் பிறப்பான் என்றும் (பா. 48), தவசியர்க்கு உணவளிப்பவன் குபேரனாக வாழ்வான் என்றும். (பா. 49), ஊனமுற்றோர்க்கும் ஆதரவற்றோர்க்கும் உணவளிப்போர் பல்யானை மன்னராய் வாழ்வர் என்றும் படைத் தலைவராய் வாழ்வர் என்றும் (பா. 52, 53) இந்நூல் குறிப்பிடுவதிலிருந்து அரச குலத்தாரையும், பெருஞ்செல்வரையும் போற்றும் கணி மேதாவியாரின் மனநிலை வெளிப்படுகிறது.
இந்நூல் கொலை, களவு, பொய், காமம், கள் ஆகியவற்றை போக்கிடும் சமண மதத்தின் ஐந்து ஒழுக்கங்களை கூறுகிறது. புலால் உண்ணாமை, சூதா டுதல், புறங்கூறாமை, பிறன் மனை விரும்பாமை போன்றவற்றையும் புகட்டு கிறது. பொதுவாக எளிமையாக இனிய தமிழில் பாடல்கள் இருந்தாலும், வட மொழிச் சொற்கள் கலந்துள்ளதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந் நூலின் முடிவில் தமிழாசிரியர் மகனார் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதை யார் செய்த ஏலாதி முற்றிற்று என்று கூறப்பட்டுள்ளது. பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றான திணை மாலை நூற்றைம்பது என்ற நூலை இயற்றியதும் இவரே. பதினெண்கீழ்க்கணக்கு நூல் களில் ஒன்றான ஏலாதி கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தோன்றியது. இதன் ஆசிரியர் கணிமேதாவியார் ஆவார். இவர் கணிமேதையார் என்றும் அழைக் கப்படுகிறார். கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணப்படி வெண்பாவால் குறிப் பாக நேரிசை வெண்பாவால் ஆனது. நான்கடி கொண்ட வெண்பா பாடலில் இரண்டாவது அடியின் நான்காவது சீர் தனிச்சொல் பெற்று வருவது நேரிசை வெண்பா எனப்படும். சிறப்புப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் எனும் 2 பாடல் களுடன் மொத்தம் 82 பாடல்களை கொண்டது ஏலாதி.
ஏலம் முதலிய ஆறுவகை மருந்துப் பொருள் கொண்ட சூரணம் (பொடி) ஏலாதி என்று குறிப்பிடப்படும். ஏலம் ஒரு பங்கும் இலவங்கப்பட்டை இரண்டு பங் கும் சிறு நாவல் பூ மூன்று பங்கும் மிளகு நான்கு பங்கும் திப்பிலி ஐந்து பங்கும் சுக்கு ஆறு பங்குமாகச் சேர்த்துப் பொடியாக்கிச் செய்யப்படுவது ஏலாதி சூரணம் ஆகும். இம்மருந்து மக்களின் உடல் நோயைப் போக்கி வலிமையை யும் வனப்பையும் தரும். அதுபோல் ஏலாதி நூல் உள்ளத்தை வலிமை யாக்கி வாழ்க்கைக்கு நல்வழிகாட்டியாய் அமையும். இதன் ஒவ்வொரு பாடலும் ஆறு கருத்துக்களை கூறுகிறது.
ஏலாதியின் தற்சிறப்புப் பாயிரத்தில் “அறு நால்வர் ஆய்புகழ்ச்சேவடி ஆற் றப்/பெருநாவலர் பேணி வணங்கி – பெறுநால்/ மறைபுரிந்து…” என்று கூறப் பட்டிருப்பதால் இருபத்தி நான்கு தீர்த்தங் கரர்களுடைய சேவடியைத்தாங்கிய நால் வரை வணங்கி என்பது சமணசமயத்தின் பெருமையைப் புகழ்பாடுவது அதன் மதச்சார்பை உணர்த்தினாலும், வேறு சில பாடல்கள் வைதீக சமயத்தின் கருத் துக்களை எடுத்துக் கூறுகின்றன.
இல்லறத்தைப் பற்றியும் வீடுபேறு அடையும் துறவறத்தைப் பற்றியும் கணி மேதாவியார் அழகாக பாடல்கள் இயற்றி யுள்ளார் என்று சிறப்புப்பாயிரம் கூறு கிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது தமிழ் முதுமொழி. இளமை போகாது, பிணி அண்டாது, மூப்பு வாராது, சாவு நிகழாது என்று சொல்ல முடியுமா அதுஎல்லாம் இயற்கை நீதி. ஆயினும் உடம்பைப் பேணினால் உயிரை நீண்டநாள் காக்க லாம் அல்லவா? நோய்நொடியின்றி வாழ உடலை வலிமையாக்க உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார் கணிமேதாவி.
“எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல் நிலையே
படுத்தலோடு ஆடல் பகரின் – அடுத்து உயிர்
ஆறுதொழில் என்று அறைந்தார் உயர்ந்தவர்
வேறு தொழிலாய் விரித்து (69)”
கையை நிலத்திலே ஊன்றி உடலை மேலே தூக்கும் தண்டால், கைகால் களை முடக்கி இருத்தலாகிய ஆசனம், நிமிர்ந்து நிற்றல், தலைகீழாக நிற்றல், படுத்துச் செய்யும் பயிற்சி, குதித்தல் முதலிய பயிற்சிகளைச் செய்தால் உடல் உறுதிபெறும் உயிர்திண்மையுறும்.
தவம் எளிது; தானம் அரிது… என் றும் சாவது எளிது; சான்றோனாதல் அரிது… என்றும் பலவும் இரண்டு (3,39) பாடல்களில் கூறுகிறார். இடையழகும் தோள் அழகும் செல்வத்தின் அழகும் நடைஅழகும் நாண்உடை அழகும் கழுத்து அழகும் அழகல்ல; எண்ணோடு எழுத்தின் அழகே அழகு(75) என்கிறார். இது சமணப் பள்ளியின் கல்விச் சிறப்பை கூறுவது தானே. 21 பாடல்களில் மன்னனுக்கு உரிய மாண்புகள், தகுதிகள், செயல்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்.அமைச்சர், தூதுவர் போன்றோர் பற்றியும் குறிப்பிடுகிறார். 7 பாடல்களில் வீடுபேறு அடைதல் குறித் துக் கூறுகிறார். 2 பாடல்களில் (30, 31) 12 வகைப் பிள்ளைகள் பற்றிக் கூறு கிறார். இது பார்ப்பன குலத்தின் வைதீக நெறியின்படி இல்லறவாழ்க்கை, முறை தவறிய வாழ்க்கை, நெறியற்ற ஆண், பெண் உறவினால் உருவாகும் குழந் தைகள் பற்றி கூறப்படுகிறது.
கணவனுக்குப் பிறந்தவன் (ஒளரதன்), கணவன் இருக்கையில் பிறனுக்குப் பிறந்தவன் (கேத்திரசன்), திருமணம் ஆகாத பெண்ணுக்குப் பிறந்தவன் (கானீனன்), பரத்தமைத் தொழிலில் பிறந்தவன் (கூடோத்து பன்னன்), விலைக்கு வாங்கப்பட்டவன் (கிரீதன்), கணவன் இறக்க மறுமணமா கிப் பிறந்தவன்(பௌநற்பவன்), சுவீ காரம் எடுத்துக் கொள்ளப்பட்டவன் (தத் தன்), திருமணத்தின் போதே கருவிலி ருந்து பிறந்தவன்(சகோடன்), கண் டெடுத்து வளர்க்கப்பட்டவன்(கிருத்திரமன்), மகளுக்குப் பிறந்தவன்(புத்திரிபுத்திரன்), பெற்றோர்களால் கைவிடப்பட்டு, பிறரால் வளர்க்கப்படுபவன்(அபவித்தன்), காணிக்கையாக வந்தவன்(கிருதன்) என்று ஏலாதி பன்னிரண்டு வகை களைக் குறிப்பிடுகிறது.
இடையின் அழகோ, தோளின் அழகோ அல்லது ஈடு இல்லாத வேறு அழகுகளோ, நடை அழகோ, நாணத்தினால் ஏற்படும் அழகோ, கழுத்தின் அழகோ உண்மையான அழகு ஆகா. எண்ணும், எழுத்தும் சேர்ந்த, அதாவது கல்வியினால் ஏற்படும் அழகே அழகு என்னும் பொருள்பட வரும் ஏலாதிப் பாடல்களில் ஒன்று இது:
இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு.
காலன் வராமல் காக்கும் வழி!
பூமியில் ஒரு ஜனனம் ஏற்பட்டவுடன் அந்தப் பிறப்புடன் உடனே ஒட்டிக் கொள்ளும் ஒரு வார்த்தை மரணம் தான்! பாரபட்சமில்லாது வரும் காலனது வருகையை ஆசிரியர் அழகுற விளக்குகிறார்.
அழப்போகான், அஞ்சான், அலறினால் கேளான்,
எழப்போகான் ஈடு அற்றார் என்றும் – தொழப் போகான்,
என்னே இக் காலன்!ஈடு ஓரான், தவம் முயலான்,
கொன்னே யிருத்தல் குறை (பாடல் 37)
அழுதாலும் விடமாட்டான், அலறினாலும் விட மாட்டான், நீயே என் குல தெய்வம் என தொழுதாலும் விட மாட்டான்,அட எப்படிப்பட்டவனடா இந்தக் காலன்! என்னே இக் காலன் என கணிமேதாவியார் வியக்கும் போது கூடவே நாமும் வியக்க வேண்டியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இவனை வெல்லத் தவம் அல்லவா வழி! அதை மேற்கொள்வோம் என பாடல் வலியுறுத்துகிறது.
இந்தப் பாடலைப் படித்து விட்டு கவியரசு கண்ணதாசன்,
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லை என்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா
கூக்குரலாலே கிடைக்காது -அது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது-அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
நயமான உண்மைக் கருத்தை கண்ணதாசனுக்கு இனம் காண்பித்தவர் ஏலாதியார் என்றால் மிகை அல்ல!
எழுத்தினால் நீங்காது, எண்ணால்ஒழியாது ஏத்தி வழுத்தினால் மாறாது என அடுத்த பாடலிலும் ஜனனம் மரணம் என்பது கல்வி அறிவினாலோ, தியானத்தினாலோ, அல்லது துதிக்கும் பாடல்களினாலோ நீங்காது என்று வலியுறுத்தி நல்ல ஒழுக்கத்துடன் தவம் புரிந்தால் ஜனன மரணச் சுழலிலிருந்து விடுபடலாம் என பேருண்மையை நூலாசிரியர் கூறுகிறார்.
ஆறு மனமே ஆறு; நூல் கூறும் கட்டளைகள் ஆறு
இனி பாடல்களில் ஆறு ஆறாகக் கூறும் பல உண்மைகள் சுவை பயப்பதோடு அரிய நீதிகளையும் உணர்த்துகிறது.
போகக்கூடாத இடங்கள் ஆறு:
கொலைக்களம் வார் குத்துச் சூதாடும் எல்லை,
அலைக்களம் போர்யானை ஆக்கும், – நிலைக்களம்,
முச்சாரிகை ஒதுங்கும் ஓரிடத்தும் இன்னவை,
நச்சாமை நோக்காமை நன்று (பாடல் 12)
கொலை செய்யும் இடம், வெள்ளச் சூழல் உள்ள நீர் நிலை,சூதாடும் கழகம், சிறைச்சாலை,யானைகளைப் பழக்குகின்ற இடம், தேர், குதிரை, யானை ஆகிய முப்படைகள் செல்லும் இடத்திற்குப் போகாதே!
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப இப்பாடலைப் பார்த்தால் ஏவுகணைகள் ஏவும் இடம், துப்பாக்கிப் பயிற்சி பெறும் இடம்,தரை, விமானப் படைகள் இயங்கிக் கொண்டிருக்கும் இடங்களில் ‘இந்த எல்லையில் வரக் கூடாது’ என்ற அறிவிப்புப் பலகைகளை சாதாரணமாகக் காண்கிறோம். உயிரைப் போக்க வைக்கும் அபாயங்கள் நிறைந்த இடத்திற்கு வலியப் போகாதே என்று கூறி ஆயுளை நீட்டிக்கும் வழிகளை கணி மேதாவியார் காட்டுகிறார்!
தேவாதி தேவன் யார்?
உரையான் குலன் குடிமை: ஊனம் பிறரை
உரையான்:பொருளொடு வாழ்வு ஆயு உரையானாய்-
பூ ஆதி வண்டு தேர்ந்து உண்ணு குழலாய், ஈத்து உண்பான்,
தேவாதி தேவனாய்த் தேறு (பாடல் 32)
வண்டுகள் மொய்த்து உண்ணும் கூந்தலை உடைய பெண்ணே, தன் குல உயர்வு,குடிப் பிறப்பு உயர்வு ஆகியவற்றைப் பாராட்டிப் பேசாதவன்,பிறரது இழிவினை இகழ்ந்து உரைக்காதவன்,தன் பொருளை ஏழைகளுக்குக் கொடுத்து வாழ்பவன் தேவர்களுக்கெல்லாம் தேவன்!
எந்த அழகு உண்மை அழகு?
கல்வியைப் பற்றிக் கூறும் ஒரு பாடல் வழிவழியாக அனைவராலும் மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது.
இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடில் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு (பாடல் 74)
இடுப்பழகு, தோளழகு, செல்வத்தின் அழகு, நடையழகு, நாணத்தின் அழகு,கழுத்தின் அழகு – இவையெல்லாம் அழகே அல்ல;எண்ணும் எழுத்தும் கூடிய கல்வி அழகே அழகு!
அபூர்வ செய்திகள்!
ஏலாதி சில அபூர்வமான செய்திகளையும் ஆங்காங்கே தெளித்துச் செல்கிறது! ஒருவன் தவத்தினைச் செய்வானாயின் அவனுக்கு மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழாம் பிறப்பில் வீடு பேறு வாய்க்கும் என்று உறுதி படக் கூறுவது சுவையான செய்தி. அடுத்து பல்வேறு வகையில் பிறப்பு நேரிடுவதைச் சுட்டிக் காட்டி அப்படிப் பிறக்கும் பிள்ளைகளுக்கு உரிய பெயரையும் பட்டியலிட்டுத் தருகிறது!(பாடல்கள் 31,32).இது வேறு எந்த நூலிலும் காணக் கிடைக்காத ஒரு பட்டியல்!
ஔரதன் – கணவனுக்குப் பிறந்தவன்; கேத்திரசன் – கணவன் இருக்கும் போது பிறனுக்குப் பிறந்தவன்;கானீனன் – திருமணம் ஆகாதவளுக்குப் பிறந்தவன்;கூடோத்துபன்னன் – களவில் பிறந்தவன்; கிரிதரன் – விலைக்கு வாங்கப்பட்டவன்;பௌநற்பவன் – கணவன் இறந்த பிறகு பிறனை மணந்து பெறப்பட்டவன்;தத்தன் – சுவீகார புத்திரன்;சகோடன் – திருமணத்தின் போதே கருவில் இருந்தவன்;கிருத்திருமன் – கண்டெடுத்து வளர்த்துக் கொள்ளப்பட்டவன்;புத்திர புத்திரன் – மகனுக்குப் பிறந்தவன்;அபவித்தன் – பெற்றோர்கள் கைவிட மற்றவர்களால் வளர்க்கப்பட்டவன்;உபகிருதன் – காணிக்கையாக வந்தவன்!
சொல்வளம்
நூலின் சொல்வளம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் இருப்பதால் படிக்கப் படிக்கச் சுவை கூடுகிறது. ஒரே ஒரு பாடலை எடுத்துக்காட்டாகச் சுட்டிக் காட்டலாம்:
பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின் – மை தீர்
சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று;
இடர் இன்று; இனி துயிலும் இன்று (பாடல் 66)
பொய் இல்லாத பெரியோர் ஆராய்ந்த வீடு பேற்றின் மாட்சிமையை உணர்ந்தால் ஒளி இல்லை;சொல் இல்லை; மாறுபாடு இல்லை; சோர்வு இல்லை;துன்பமில்லை; இனி தூக்கமும் இல்லை!
நூலின் யாப்பு
உலகிலேயே சம்ஸ்கிருதம் உள்ளிட்ட எந்த மொழியிலும் இல்லாத ஒரு பா வகை வெண்பா. சொல் நயத்தையும் ஓசை நயத்தையும் கருத்து நயத்தையும் தரும் வண்ணம் இதன் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது அதிசயத்திலும் அதிசயமே. ஆகவே இதை மனப்பாடம் செய்வது மிகவும் சுலபம்! ஆகவே தான் ‘வெண்பா ஒரு கால் கல்லானை’ என்ற மொழி வழக்கில் உள்ளது. ஒரு முறை கேட்டாலேயே வெண்பா மனனம் ஆகி விட வேண்டுமாம்! வாழ்வியல் நீதிகளைக் கூறும் இந்த நூலை அதனால் தான் கணி மேதாவியார் வெண்பாவில் அமைத்துத் தந்தார் போலும். அனைவரும் இதனை எளிதாக மனத்தில் இருத்திக் கொள்ளமுடிகிறது.
ஆறு பொருள்களைச் சொல்ல வேண்டியிருப்பதால் உவமை நயங்கள், அலங்கார சாஸ்திரம், அணிகள் ஆகியவற்றிற்கு நூலில் அதிகம் இடம் இல்லாமல் போய் விட்டது. அதிலும் அழகிய பெண்ணை அழைத்து நீதியைச் சொல்வதால் அதில் சில சொற்கள் போய்விடுவதால் சொற்களின் இழப்பைப் புலவர் சந்திக்க வேண்டி இருக்கிறது. ஆனால் பெண்களின் அழகை வர்ணித்து அந்த இடத்தில் உவமை நயத்தைக் காட்டி உவமைகள் உள்ள நூலாக இதை ஆக்கியுள்ளார் அவர்!
மனிதனுக்கு ஏற்றம் தரும் வாழ்வியல் நீதிகளை எண்பது பாக்களில் தர வேண்டும் என்று நினைக்கும் கணிமேதாவியாரின் துடிப்பு ஒவ்வொரு எழுத்திலும் தெரிவதால் ஏலாதி அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய நூல் ஆகி விட்டது. பல முறை இதைப் படித்தால் அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய இந்த நான்கையும் அடையும் ரகசியம் புலப்படும்!
முடிவுரை
வாழ்வியலில் பின்பற்றக்கூடிய பல அறக்கருத்துக்களை மிகவும் நயமாக எடுத்துரைக்கும் நூல்களில் எலாதி முக்கிய இடத்தைப்பெறுகிறது. இதன் ஆசிரியர் கணிமேதாவியார் பல பயனுள்ள அறக்கருத்துக்களை மனித சமுதாயம் பயன்பெற எடுத்துறைக்கிறார்.
துணைசெய்த நூல்கள்:
1. கௌமாரீஸ்வரி .எஸ் (ப.ஆ) ஏலாதி மூலமும் உரையும் சாரதா பதிப்பகம்,
சென்னை – 600014 முதற்பதிப்பு -2007
2. இளமுனைவர் தமிழ்ப்பிரியன்(உ.ஆ), திரிகடுகம் ஏலாதி இன்னிலை மூலமும் உரையும், கற்பகம் புத்தகாலயம், சென்னை, முதற்பதிப்பு, 2009.
3. http://www.tamilvu.org/courses/degree/c012/c0121/html/c012133.htm
mudalvaa@gmail.com
* கட்டுரையாளர் – பெ.சுபாசினி, முனைவர் பட்ட ஆய்வாளர், செந்தமிழ் கல்லூரி, மதுரை –