சிறுகதை: கனிவு

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -‘ஆனைவாழை குலை போட்டிருக்கு!”

வீட்டுக்கு வந்து பயணக்களைப்பு ஆற அமர முதலே இந்தச் செய்தியை மனைவி சொன்னாள். அதைக் கேட்டதும் ‘அட! அப்படியா..” என்றொரு சந்தோஷம் மனதிற்குள் தோன்றினாலும் நிதானமாக நின்று உடைகளை மாற்றினான்.

‘கேட்டுதே? ஆனைவாழையெல்லே குலை போட்டிருக்கு எண்டு சொல்லுறன்!”

‘ஓம்! ஓம்! பாப்பம்..” என அவன் மனைவியைப் பார்த்துச் சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

‘ஓமடா தம்பி!… நல்ல பெரிய குலை..!” என அம்மா சொன்னாள்.

‘ஆனைவாழை பெரிசாத்தான் குலைபோடும்..” என முற்றும் தெரிந்தவன்போல அவன் கூறினான். ஆனால் ஆனைவாழை பெரிசாகவா சிறிசாகவா குலை போடும் என்பது அவனுக்குத் தெரியாது. ஆனை வாழைப்பழம் பெரிசாக இருப்பதால் ஆனைவாழைக்குலையும் பெரிசாக இருக்குமென ஊகித்திருந்தான். அல்லது ஏன்தான் அந்த வாழைக்கு ஆனைவாழை எனப் பெயர் வந்தது என்பதும் புரியவில்லை.

சிறு பிராயத்தில் பாடசாலையின் ஒரு விடுமுறைக் காலத்தில் அப்பாவோடு கொழும்பு கண்டி போன்ற வெளியூர்களுக்குச் சுற்றுலா போயிருந்தபோதுதான் முதலில் ஆனை வாழையைப்பற்றி அறிந்துகொண்டான். அப்போது சாப்பாட்டுக் கடையொன்றில் சாப்பிடப் போயிருந்தபொழுது வாழைப்பழம் கொண்டு வரும்படி அப்பா ஓடர் கொடுத்தார். வெயிட்டர் ஒரு தட்டில் வாழைப்பழச் சீப்பைக் கொண்டுவந்து வைத்தான். அவன் அதைப் பார்த்துவிட்டு “பழுக்கயில்ல.. காய்..!” என்றான்.

‘இல்லை… அது நல்ல பழம்!” என்றார் அப்பார். அவன் அதன் பச்சைத் தோலில் பிடித்து மெதுமையாக அழுத்தினான். அது நல்ல பழமாகத்தான் இருந்தது.

‘தோல் ஏன் பச்சையாய் இருக்கு?”

‘ஆனைவாழை பழுத்தாலும் தோல் பச்சையாகத்தானிருக்கும். ஆனால் நல்ல ருசியான பழம்! சாப்பிட்டுப் பார்!”

சாப்பிட்டுப் பார்த்தான். பிறகு அங்கு போகின்ற எல்லாக் கடைகளிலும் ஆனை வாழைப்பழம் இருக்கிறதா எனக் கவனித்தான். பழுத்தாலும் தோல் பச்சையாகவே இருக்கும் வித்தியாசமான குணம் அவனைக் கவர்ந்தது. ஆனைவாழையைக் கொண்டுசென்று வீட்டில் உண்டாக்கினால் அழகாக இருக்கும் என எண்ணி தனது விருப்பத்தை அப்பாவிடம் சொன்னான்.

‘எங்கையாவது பார்த்து ஒரு ஆனைவாழைக் குட்டி கொண்டுபோனால் வீட்டில் நடலாம்.”

‘அந்த மண்ணுக்கு இது சரிவராது..” என அப்பா சொன்னார்.

உண்மையில் ஆனைவாழை அந்த மண்ணுக்குச் சரிவராதுதானா? அல்லது வாழைக்குட்டி ஒன்றை எடுப்பதிலுள்ள சிரமத்தினால் அப்பா அப்படிச் சொன்னாரா என்பது புரியவில்லை.

அவன் நினைவுக்கு எட்டியவரையில் யாழ்ப்பாணத்தில் ஆனைவாழை இல்லைதான். அவனது வீட்டில் பல வாழைகள் உள்ளன. கதலி இருக்கின்றது. இதரை… கப்பல்… மொந்தன் இப்படிப் பல இன வாழைகளைப் பல தோட்டங்களிலும் கண்டிருக்கிறான். சாப்பாட்டுக் கடைகள் அல்லது வாழைப்பழக் கடைகளில்கூட அவன் ஆனை வாழைக்குலையைக் கண்டதில்லை. அதனால் இது அந்த மண்ணுக்கு ஒத்துவராது என்பதை அவன் ஒப்புகொள்ள வேண்டியிருந்தது.
சுற்றுலா முடித்து ஊருக்கு வந்ததும் அவன் ஆனை வாழையின் விசேடம்பற்றி அம்மாவுக்குச் சொன்னான். பிறகு வாழைத் தோட்டங்களுக்கெல்லாம் சென்று ஆனை வாழை இருக்கிறதா எனப் பார்த்தான். தேடியவரை கிடைக்காமலே போனது.
பழைய நினைவுகள் சிலவற்றில் மனதை விட்டிருக்க அறைக்குள் ஓடிவந்த கடைசித் தம்பி ‘அண்ணை! ஆனைவாழை குலை போட்டிருக்கு!” என்றான்.

ஆக… ஆனைவாழை குலை போட்ட விஷயம் வீட்டில் எல்லோரையுமே ஒருவித ஆச்சரியமான மகிழ்ச்சிக்குள் ஆட்படுத்தியிருக்கிறது! அல்லது அவர்கள் தன்னிடம் இப்படியொரு ஆச்சரியத்தை எதிர்பார்க்கிறார்களோ என்னவோ!
‘சரி! வாங்கோ பாப்பம்..” என அவன் அறையை விட்டு வெளியேறினான். அவன்… அவனது மனைவி… அம்மா… குட்டித்தம்பி எல்லோருமாக வாழையைப் பார்க்கப் போனார்கள். அறைக்குள் நோட்டம் விட்டவாறு விறாந்தையில் படுத்திருந்த நாய்க்குட்டி எழுந்து எல்லோருக்கும் முன்னதாகக் கிணற்றடிப்பக்கம் ஓடிப்போய் அவர்களது வருகையைப் பார்த்துக்கொண்டு வாழையடியில் நின்றது.

கிட்ட வந்து குலையை நிமிர்ந்து பார்த்தான். பிறகு மரத்தை உச்சியிலிருந்து நோட்டம்விட்டான்.

வாழை நல்ல நெடுவலாக வளர்ந்திருந்தது. ஆனால் உயரத்திற்குத் தகுந்த பருமன் இல்லாமல் மெலிவாக இருந்தது. ஆள் ஒட்டலென்றாலும் பெரிய குலையாக ஈன்றிருந்தது. குலையைச் சுமக்கமுடியாத பாரத்தில் முதுகைக் குனிந்துகொண்டு நின்றது.

குட்டியாக நட்ட வாழை தாயாகிவிட்டது. பக்கத்தில் இரண்டு குட்டிகள் பெரிதாக வளர்ந்திருக்கின்றன. இன்னொரு தவ்வல் இப்பதான் முளைவிட்டு வளர்கிறது. பெற்றுப் பெருகி நின்றாலும் தாய் வாழையைப் பார்க்க அவனுக்கு மனக்குறையாக இருந்தது. நல்ல போஷாக்கு இல்லாமற்தான் அது இப்படி ஒட்டலாக இருக்கிறதுபோலும்.

‘நீங்கள் அதுக்கு நல்ல பசளை போடவில்லை போல?” என்று கேட்டான்.

இதைக் கேட்டதும் குட்டித்தம்பி பொங்கி எழுந்தான். அண்ணன் வெளிநாட்டிலிருந்த கடந்த ஒரு வருட காலமாக வாழையைக் கவனித்து வந்தவன் அவன்.

‘நல்ல கதை! அதோடை பட்டபாடு எனக்கெல்லோ தெரியும்!”

இதைக் அவதானித்த அம்மாவும் சொன்னாள்: ‘அதுக்குப் போடாத பசளையே! அதரெடுத்துச் சாணியெல்லாம் போட்டவன். எந்த நேரமும் அதோடைதான் மாயிறவன். விரத நேரங்களிலை அதிலை ஒரு இலை வெட்டக்கூட விடமாட்டான். பிள்ளைதான் அதிலை வலு கவனம். அங்கை பார்! வடிவாய்ப் பாத்தி கட்டி தண்ணியும் விட்டிருக்கிறான்.”

‘நான் வாறனெண்டு தெரிஞ்சவுடனை விட்டிருப்பான். இன்னும் ஈரம் காயாமல் கிடக்கு..!”

‘ஒருத்தரும் கவனியாமல் தண்ணி விடாமல்தான் வாழை இவ்வளவு வளர்ந்து குலை போட்டது… என்ன? இந்த மனிசருக்கு நல்ல விசயத்த நல்லதெண்டு சொல்ல மனம் வராது. ஏதாவது ஒரு குறை கண்டுபிடிக்கவேணும்…” எனக் குட்டித்தம்பி போட்ட போடு அவனைச் சற்றுத் தடுமாறச் செய்தது.

‘சரியடாப்பா நான் சும்மா ஒரு கதைக்குத்தான் சொன்னனான். வாழை ஏன் இவ்வளவு மெலிவாய் இருக்குதெண்டுதான் தெரியவில்லை.” எனச் சமாளிப்பாகக் கூறினான்.

‘அது எனக்கு அப்பவே தெரியும். இது அவ்வளவு செழிப்பாய் வளராதெண்டு. நான் சொல்லயிக்கை கேக்காமல் நட்டியள். இந்த நிழலுக்கை நிண்டால் எப்பிடி நல்லாய் வரும்?”

ஏதோ தவறு செய்துவிட்டவன்போல தம்பியைப் பார்க்க… தம்பி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பள்ளிக்கூடத்தில் படித்த விசயங்களை விளாசினான். ‘சூரிய வெளிச்சம் இலைகளிலை பட்டால்தான் மரம் கெதியா வளரும். வெயில் பிடிக்கிறதுக்காகத்தான் வாழை மற்ற மரங்களுக்கும் மேலாலை உயரமாய் வளர்ந்திருக்கு! சரியாய் வெளிச்சம் பிடிக்காமல்தான் மெலிவாய் இருக்கு.”

கிணற்றடி நிழலான இடம்தான். மறைப்பு வேலிக்கு நட்ட பூவரசங்கதியால்கள் மிக உயரமாக வளர்ந்து குழைகளைப் பரப்பி நிற்கின்றன. இரண்டொரு தென்னம்பிள்ளைகள் உயர்ந்து தோகையை விரித்து நிற்கின்றன. வாழையை நடும்பொழுது இதுபற்றி யோசிக்காமல் விட்டது மடைத்தனம்தான். குட்டிகளையாவது வேறு இடங்களில் கிளப்பி நடவேண்டும் என நினைத்துக்கொண்டான்.

வாழை குலை போட்ட விஷயத்தை பெரியம்மாவிடம் சொல்லவேண்டும்… இந்த வாழையைக் குட்டியாக அவனுக்குக் கொடுத்ததே பெரியம்மாதான்.

கல்யாணம் செய்த புதிதில் மனைவியுடன் பெரியம்மா வீட்டுக்குப் போயிருந்தான். விருந்துபசாரத்தின் போது சாப்பாட்டு மேசைக்கு வாழைப்பழம் வந்தது. அதைக் கண்டதும் அவன் ”ஆனை வாழைப்பழம்!” என ஆச்சரியப்பட்டான்.
தேடியலைந்து கிடைக்காமல் போனமையினாலும் பின்னர் உத்தியோகம் காரணமாக வீட்டைவிட்டு வெளியூர்களுக்குப் போயிருந்தமையாலும் மனதை விட்டு மறந்துபோயிருந்த ஆனைவாழை மீண்டும் அவன்முன்னே வந்து நின்றது.
‘எங்கடை வாழையிலைதான் காய்ச்சது!”

பெரியம்மா சொன்னதைக் கேட்டு அவன் அதே ஆச்சரியத்தோடு முற்றத்துக்கு ஓடிவந்து வாழைகளைப் பார்த்தான். ஏழெட்டு வாழைகள் குட்டிகள் சகிதமாக நின்றன.
“எல்லாம் ஆனைவாழையளோ?” எனப் பிரமித்தான்.

பெரியம்மாவுக்கு அவனது பரவசத்தைக் காணப் புதினமாக இருந்தது.

‘எங்காலை எடுத்தனீங்கள்? நான் எவ்வளவோ நாளாய்த் தேடித் திரியுறன். கிடைக்கயில்லை.”

‘அவர் ஓரிடத்திலையிருந்து குட்டியொண்டு கொண்டுவந்தவர். அதை நட்டு உண்டாக்கி அதின்ரை குட்டியள்தான் எல்லாம்.. ஏன்? இப்ப கன இடங்களிலை இருக்குதுதானே?”
வாழை மரங்களையும் பெரியம்மாவையும் மாறிமாறிப் பார்த்தான். ஆனைவாழை இப்பொழுது இங்கு கன இடங்களுக்கு வந்துவிட்ட கதை அவனுக்குத் தெரியாது.
‘எனக்கொரு குட்டி தாறீங்களோ?”

‘அதுக்கென்ன? கிளப்பி வைக்கிறன். பிறகு ஒரு நாளைக்கு வந்து எடுத்துக்கொண்டு போவன்.”

பிறகு அவன் ஒவ்வொரு நாளும் பெரியம்மா வீட்டுக்கு வந்தான். ஆனால் வாழைக்குட்டிதான் கிடைத்தபாடாக இல்லை.

‘கொத்துறவனுக்குப் சொல்லியனுப்பினனான். ஆளைக் காணக்கிடைக்கவில்லை. வாழைப்பாத்தியள் ஒருக்கால் கொத்தவேணும். அப்ப கிளப்பி வைக்கிறன். பிறகு வா தம்பி..” எனப் பெரியம்மாவிடமிருந்து பதில் கிடைத்தது.
பிறகும் வந்தான். கொத்துகிறவன் கிழமைக்கணக்காக வரவில்லை. அடுத்த சில நாட்கள் சில முக்கிய அலுவல்கள் காரணமாகப் பெரியம்மா வீட்டுக்கு வர முடியவில்லை. அதற்குப் பிறகு ஒரு நாள் வந்தபொழுது…
‘எங்கை இவ்வளவு நாளும் போனனீ? அங்கை உனக்கு வாழைக்குட்டியெல்லே கிளப்பி வைச்சிருக்கிறன்!”

வாழைக்குட்டியை வேலியோடு சாத்தி வைத்திருந்தார்கள். அதன் இலைகள் வாடிப்போயிருந்தன. பணிய இருந்து வேர்ப் பகுதியைப் பார்த்தான். வெட்டப்பட்ட கிழங்கின் பகுதியில் பல துளிகள் நீர்க்கசிவு ஏற்பட்டு செந்நிறமாக உறைந்து போயிருந்தது.

‘ஐயோ!” என்றான்.

‘என்ன தம்பி?” என்றவாறு பெரியம்மா கிட்ட ஓடிவர “ரத்தம் வந்திருக்கு!” என்றான்.

‘அட! இதுதானே..? அதொண்டும் செய்யாது.. கொண்டு போய் நடு.”

வாழைக்குட்டியை ஒரு பிள்ளையைத் தூக்கம் பக்குவம்போலத் தூக்கிக்கொண்டு போனான். வீட்டுக்கு வந்ததும் அவனைப் பிடிக்கமுடியவில்லை. எவ்விடத்தில் நடலாம் என்ற பிரச்சினை முதலில் தோன்றியது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடங்களைச் சிபார்சு செய்தார்கள். மற்ற வாழைகளுடன் சேர்த்து நட்டால் அவற்றிற்கு வரும் வருத்தம் இதற்கும் தொற்றிவிடும் என அபிப்பிராயப்பட்டான். ஏற்கனவே அங்கு சில கதலி வாழைகள் குருக்கன் அடித்து நிற்கின்றன. கிணற்றடியிலென்றால் அடிக்கடி போகிறவர்கள் கவனித்து தண்ணீரும் விடுவார்கள். தனிமையான இடமாகவும் இருக்குமாதலால் அதுவே தகுந்த இடமெனத் தீர்மானித்தான். அதற்குப் பிறகு… மண்வெட்டியைக் கொண்டுவா! அதைக் கொண்டுவா! இதைக் கொண்டுவா! என ஒரே அமர்க்களமாக இருந்தது.

கிண்ணற்றடி மண்ணில் கற்களைக் கிளறி எடுத்துவிட்டு மாட்டுச் சாணத்தைப் போட்டுப் பாத்திகட்டி வாழைக்குட்டியை நட்டுத் தண்ணீர் ஊற்றிவிட்டு வந்தபொழுது அவனுக்கு எதையோ சாதித்துவிட்ட திருப்தி தோன்றியது.
ஆனால் நாட்கள் பல கடந்தும் வாழை வளர்வதற்குரிய அறிகுறிகளைக் காணோம். இலைகள் இன்னும் வாடின. இது அவனுக்குப் பெரிய கவலையை ஏற்படுத்தியது. பெரியம்மாவிடம் ஓடிப்போய் விஷயத்தைச் சொன்னான்.
‘அது… தன்பாட்டில்லை வளரும். விட்டுப்போட்டுப் போய் பாக்கிற அலுவலைப் பார் தம்பி!”

அதைக் கேட்டதும் அவனுக்கு “சப்”பென்று போனது. இந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டு வந்து இன்றைக்கு வளரும்… நாளைக்கு வளரும் என்று பார்த்துக்கொண்டிருக்கக் குருத்தும் கருகி வாழைத்தண்டும் நுனிப்பகுதியிலிருந்து கருகத் தொடங்கியது. வெயில் சூடாக இருக்குமென நினைத்து தண்ணீரை அடிக்கடி ஊற்றினான். எனினும் பயனில்லை. மனதில் வைத்திருந்த அற்பசொற்ப நம்பிக்கைகளும் போய்விடும் போலிருந்தது.
வேலி அடைக்க வரும் கந்தையாண்ணையிடம் விஷயத்தைச் சொன்னான். அவருக்குத் தோட்ட அனுபவங்களும் கொஞ்சம் இருக்கிறது.

கந்தையாண்ணை வந்து… வாழைக்குட்டியைப் பார்த்தார். கருகிய பகுதியைத் தொட்டுப் பார்த்தார். வாழைக்குட்டியின் அடிப்பகுதியில் மெதுவாக நகத்தினால் நுள்ளினார். பிறகு விரலால் வாழையடி மண்ணைத் தோண்டிப் பார்த்தார். இப்பேர்ப்பட்ட பரிசோதனைகளின் பின்னர்…

‘ஏன் இவ்வளவு தண்ணி விட்டனீங்கள்? கிழங்கு அழுகிப்போயிருக்குமே!” என அபிப்பிராயப்பட்டார்.

‘தண்ணி நெடுக விடயிக்கையே சொன்னனான்… கேட்டாத்தானே..!” என்றான் குட்டித்தம்பி. அவனுக்கு ஒரு குட்டுப் போட்டு அனுப்பிவைத்தான்.

‘பறவாயில்லை… இனிக் கொஞ்ச நாளைக்குத் தண்ணி விடவேண்டாம். வாழைக்குட்டியைக் குறுக்காய் வெட்டிவிடுங்கோ. சரிவரும்..!” எனப் பரிகாரம் சொல்லிவிட்டுப் போனார் கந்தையாண்ணை.

வாழைக்குட்டியைக் குறுக்காக வெட்டுவதென்பது அவனுக்கு முடியாத காரியமாகப் பட்டது. கத்தி கொண்டு வெட்டுவதென்பது ஒரு சீவனை அழிப்பதற்குச் சமானமாகுமே? அதுவும் எங்கெல்லாமோ தேடி இவ்வளவு ஆசையோடு கொண்டுவந்த வாழைக்குட்டியை வெட்டுவதாவது? நல்ல கதை! கந்தையாண்ணை மடக்கதை பேசுகிறார்!

‘ஆருக்காவது வருத்தமெண்டால் “ஒப்பிரேசன்” செய்யிறதில்லையா…? கனக்க யோசிச்சு மண்டையப் போட்டு உடைக்காமல், அந்தாள் சொன்னமாதிரி வெட்டிவிடுங்கோ சரிவரும்..!” என மனைவி சொன்னாள்.

‘சரி” என அவன் கத்தியை எடுத்து வாழைக்குட்டியின் காய்ந்த பகுதியை வெட்டினான். எனினும் அவனுக்கு ஒரு சந்தேகம்… இனி இது உருப்படுமோ என்னவோ?

என்ன ஆச்சரியம்! அடுத்தநாட் காலையே ஒரு சின்னி விரல் தடிமனில் குருத்து வெளியே தள்ளியிருந்தது! கந்தையா… உனக்கு நன்றி ஐயா!

பிறகு அதைப் பிடிக்க முடியவில்லை. அப்படியான ஒரு நேரத்தில்தான் அவனுக்கு வெளிநாட்டு வேலைக்கும் அழைப்பு வந்தது. வெளிநாட்டில் ஒரு வேலைக்காக ஏற்கனவே முயன்றுகொண்டிருந்தது உண்மை! அது இப்படித் திடுதிப்பென்று வந்து வீட்டில் எல்லோரையும் பிரியவேண்டிய கவலையை ஏற்படுத்தும் என்று நினைத்திருக்கவில்லை.

அது பழைய கதை. இப்பொழுது அந்த வாழை சுமக்க முடியாத குலையுடன் நிற்கிறது.

அன்று மாலை பெரியம்மா வீட்டுக்குப் போனான். வெளிநாட்டுப் புதினங்களைவிட ஆனைவாழை குலை போட்டிருக்கும் செய்தியைச் சொல்லி மகிழ்ந்தான். வாழை மெலிவாக இருப்பது பற்றியும் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்யலாமா என்றும் விசாரித்தான். பொதுவாக ஆனைவாழைக்கு அதிக கவனம் இல்லாவிட்டாலும் தண்ணீர் ஒழுங்காகக் கிடைத்தாலே வளர்ந்து பயன் தரும். மற்ற வாழைகளுக்குப் பிடிக்கும் நோய்கூட அதை இலகுவில் அண்டுவதில்லை. எனவே ஒன்றுக்கும் கவலைப்படாமல் போகுமாறு பெரியம்மா கூறியதுகூட அவ்வளவு திருப்தியளிக்காமல் வந்தான்.

காலையில் எழுந்ததும் கிணற்றடிக்கு வந்து வாழையைப் பார்த்துக்கொண்டு நிற்பான். அது அவனுக்கு ஒரு பொழுதுபோக்காகவே அமைந்துவிட்டது. காய்கள் எந்த அளவு பெருத்திருக்கின்றன? எத்தனை நாட்களில் முற்றிப் பழுக்கும்?
இப்படியாக ஒருசில மாதங்கள் கடந்திருக்கும். ஒரு நாள் மத்தியானம்போலக் கிணற்றியிலிருந்து குட்டித்தம்பி மூச்சுத் தெறிக்க ஓடிவந்தான். அவனை முந்திக்கொண்டு நாய்க்குட்டியும் ஓடி வந்து நின்றது.
‘ஆனைவாழை முறிஞ்சு போச்சு!”

அவனது மனைவியும் அம்மாவும் கிணற்றடிப் பக்கம் ஓடினார்கள். அவனுக்கு அது நம்ப முடியாத செய்தியாக இருந்தது. காலையிலேகூட அவன் பார்த்தபொழுது நல்ல வாட்டசாட்டமாக நின்றது. அதற்குள்ளே என்ன நேர்ந்தது இந்த வாழைக்கு? அவன் வாழையைப் பார்க்க… அவர்கள் அவனது முகத்தைப் பார்த்தார்கள்.

வாழை வேலியின்மேல் முகம் குப்புற விழுந்து கிடந்தது. வேலியின் கதியால்கள் தாங்கிக் கொண்டதால் துண்டுபட்டு முறிந்து போகாமல் இருந்தது. குலையும் அடிபட்டுக் காயப்படாமல் இருந்தது.
‘குலையை வெட்டிக்கொண்டு வந்து வையுங்கோ…. பழுக்கும்..!” என அம்மா கூறினாள்.

‘இன்னும் முத்தியிராது… எங்கை பழுக்கப் போகுது?” என அவன் வேண்டாவெறுப்பாகப் பதில் கூறிவிட்டு… ‘ஏன் இருந்தாப் போலை விழுந்தது? காத்துக்கூடப் பெரிசாய் அடிக்கையில்லை” எனக் கவலைப்பட்டான்.
உண்மையில் காற்றுப் பலமாக வீசவேயில்லை. மற்ற வாழைகள் எல்லாம் கம்புமாதிரி நிற்க இந்த வாழை ஏன் முறிந்துபோனது என்பது அவனுக்குப் புதிராகவே இருந்தது.

‘அதுக்கொரு சப்போர்ட்டாக முண்டு கொடுத்திருக்கலாமே… முறிஞ்சிருக்காது..!” என மனைவி அபிப்பிராயப்பட்டாள்.

வாழையைத் தாங்கி நிற்கக்கூடியதாக ஒரு முண்டு கொடுத்திருக்கலாம்தான். ஆனால் அதற்கு அளவான உயரமான மரம் கிடைக்காததாலும் இது அவ்வளவு காற்றுக்காலம் அல்ல என்பதனாலும் அந்த எண்ணத்தைப் பெரிதுபடுத்தாமல் விட்டிருந்தான்.

இனி அதையெல்லாம் எண்ணிப் பயனில்லை. “எப்படியாவது போகட்டும்..” என அவன் அந்த விஷயத்தை மனதைவிட்டே தூக்கியெறிந்தான். வாழை கவனிப்பாரற்று வேலியின் மேலேயே கிடந்தது. லீவில் வீட்டுக்கு வந்தவனுக்குத் திரும்பப் போகவேண்டிய நாள் நெருங்கிக்கொண்டு வர… அது மற்ற விஷயங்கள் எல்லாவற்றையும்விட மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

அவனது மனைவி… அம்மா… குட்டித்தம்பி எல்லோரையும் பிரிந்து செல்லவேண்டிய அந்த நாள் பார்த்துக்கொண்டிருக்க வந்து சேர்ந்தது. அன்று இரவு பிளேன். காலை றெயினில் கொழும்புக்குப் புறப்படவேண்டும்.
அவன் பயணத்துக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது குட்டித்தம்பியும் நாய்க்குட்டியும் போட்டி போட்டுக்கொண்டு ஓடிவந்தார்கள்.

‘வாழைக்குலை பழுத்திட்டுது!”

‘சும்மா!” என்றாள் அவனது மனைவி.

‘உண்மைதான் வந்து பாருங்கோ… வாழைமரத்திலை கிளிப்பிள்ளையள் வந்திருக்கினம்!”

மனைவியும் அம்மாவும் குட்டித்தம்பியோடு கிணற்றடிக்கு ஓடினார்கள். அவன் எதனாலும் பாதிக்கப்படாதவன்போல நின்றான்.

றெயினுக்கு நேரமாக… இனிமேலும் நிற்கமுடியாது எனப் புறப்பட ஆயத்தமானான். மனைவி சாப்பாட்டுப் பார்சலைக் கொண்டுவந்தாள்.

‘இந்தாங்கோ! ஏன் வாழை முறிஞ்சுது… முறிஞ்சுது எண்டு கேட்டியள். உங்கடை வாழை உங்களை மறக்கயில்லை..!” என்றவாறு பழங்களைப் பார்சலோடு சேர்த்து பைக்குள் வைத்தாள்.

இன்னொரு வாழைப்பழத்தையும் உரித்து அவனிடம் கொடுத்து “சாப்பிடுங்கோ..!” என்றாள். அப்பொழுது அழுகை முந்திக்கொண்டு வந்தது.

போவதற்கு முதல் வாழை மரத்தைப் பார்க்கவேண்டுமென்ற உந்துதல் பிறக்க அவன் கிணற்றடிப்பக்கம் போனான்.

அதைச் செம்மையாக வெட்டிப் பாட்டத்தில் போட்டிருந்தார்கள்.

அதன் கதை முடிந்துவிட்டது.

– மல்லிகை – 1986 –
rajsiva50@gmail.com