அத்தியாயம் ஒன்று: முதற்காதல்!
மாயவன் வசிக்கும் தொடர்மாடிக் கொண்டோக் கட்டடத்திலிருந்து எதிரே நோக்கினால் அருகில் விரிந்திருக்கும் பூங்காவின் வனப்பும், தொலைவில் ‘டொராண்டோ’ மாநகரின் மோனத்தில் தவமியற்றும் உயர்மாடிக் கட்டடங்களும், அவற்றுக்கிடையில் உயர்ந்த கோபுரமான சி.என். கோபுரமும் தெரியும். அந்திப்பொழுதுகளில் அல்லது மெல்லிருள் கவிந்திருக்கும் இரவுகளில் அங்கிருந்து சுற்றுச்சூழலை, நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானைப்பார்ப்பதைப்போல் இன்பம் வேறுண்டோ? அவனுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில் இவ்விதமாகப் பொழுதைக் கழிப்பது மிகவும் விருப்பத்துக்குரியதொன்று. அவனது அபிமானக் கவி பாரதியின் பாடலொன்று நினைவில் சிறகடிக்கின்றது சிட்டுக்குருவியென.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!
சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்
முக்தியென்றொரு நிலை சமைத்தாய் – அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள்
பரமா பரமா பரமா
‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’ மாயவனின் சிந்தனை அவ்வரிகளின் மீதே சுற்றிச்சுற்றிப்படருகின்றது. இப்பிரபஞ்சம்தான் எத்தனை எத்தனை கோடி இன்பத்தை இங்கு புதைத்து வைத்திருக்கின்றது. இயற்கையின் ஒவ்வொரு துளியிலும் படைப்பின் பேரதிசயம் உள்ளடங்கியல்லவா இருக்கிறது.
“சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்”
யார் இவ்விதம் இவ்வுலகை இவ்விதம் அமைத்தது? யார்? மாயவனின் சிந்தனை மேலும் மேலும் சிறகடித்துப்பறக்கின்றது.
அன்றும் இருள் கவிந்திருக்கும் இரவுப்பொழுதொன்றில் அவ்விதமே நகரை, இரவு வானை, கொட்டிக்கிடக்கும் சுடர்களை இரசித்தபடியே சிந்தனையில் மூழ்கிக்கிடந்தான் அவன். உள்ளேயிருந்த அவனது அலைபேசியில் யாரோ அழைக்கும் மணியொலி கேட்டது.
“இஞ்சாரும். ஒருக்கா அந்தப்போனைக் கொண்டு வந்து தாருமேன்”
‘பிக் பாஸில்’ மூழ்கிக் கிடந்த பானுமதி , அவனது இல்லாள், பார்த்துகொண்டிருந்த ‘பிக் பாஸை’ தற்காலிகமாக நிறுத்திவிட்டு , சாம்சங்கை எடுத்துக்கொண்டு வந்தாள். “போகேக்கையே போனையும் கொண்டு போயிருந்தாலென்ன?” என்று கூறவும் தவறவில்லை.
“உங்களது நண்பர் கேசவன் தான்.. லைனிலை..” என்றவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக மெதுவான குரலில் மறக்காமல் “நான் சொன்னதையும் அவரிடம் கேட்டாலென்ன? எத்தனை நாளாய்க்கேட்டுக்கொண்டிருக்கிறன்” என்றாள்.
போனை வாங்கி ” என்னடா கேசவா இந்தச்சமயம்.. ஏதாவது நியூஸ்” என்று கேட்டான் மாயவன்.
“சும்மா அடிச்சனான். என்ன மச்சான் செய்யிற”
“வேறை என்ன.. இயற்கையின் அழகில் குளித்துக்கொண்டிருக்கிறன்..” சிரிக்கின்றான் மாயவன்.
“உனக்கென்னடா காப்புக் கையிலை நேரத்துக்கு நேரம் சாப்பாடு. என்னைப்போலவா.. ” என்றான் மறுமுனையிலிருந்து கேசவன்.
“ஏன் நீயும் விருப்பமென்றால் காப்புக் கையாலை சாப்பிடலாம் தானே. யார் உன்னைத் தடுத்தது?”
அப்பொழுதுதான் பானுமதி நினைவூட்டிய விடயம் ஞாபகத்துக்கு வந்தது. அவளுக்குத் தானும் வேலையும் கையுமாக வாழும் எந்தவிதச் சோலி சுரட்டுகளுமில்லாமல் வாழும் கேசவன் மேல் நல்ல அபிப்பிராயமுண்டு. எப்படியாவது ஸ்கார்பரோவிலை அவளது பெற்றோருடன் வாழ்கின்ற , திருமணத்துக்குத் தயாராக நிற்கின்ற அவளது தங்கை ரேவதிக்கு அவனைக் கட்டிப்போட வேண்டுமென்று அவளுக்கு ஆசை. அதுதான் எப்பொழுதும் அவனிடம் கேட்டுப்பார்க்கும்படி நச்சரித்துக்கொண்டேயிருக்கின்றாள். ரேவதிக்கும் கேசவனை அவன் அடிக்கடி வருவதால் அறிமுகமுண்டு. அவளுக்கும் கேசவன் மேல் நல்ல அபிப்பிராமுண்டு என்பதை பானுமதி அறிந்திருந்தாள். அதனால் அவளுக்கு இவ்விதமானதொரு எண்ணம் தோன்றியதோ?
“ஏண்டா ஃபிரீயாயிருந்தால் வாவேன். இங்கை பானுமதி இட்லி செய்துகொண்டிருக்கிறாள்..:
கேசவனுக்கு பானுமதி தயாரிக்கும் பூப்போன்ற இட்லிகளை உண்பதில் பேரவா. எனக்கும் பானு தயாரிக்கும் இட்லிகளென்றால் நல்ல விருப்பம். பூப்போல கைக்கடக்கமாக அவள் செய்யும் இட்லிகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
அவனும் ஈஸ்ட்யோர்க்கில் அருகில்தான் விக்டோரியா பார்க்கும் , டான்ஃபோர்த் சந்திக்கண்மையிலுள்ள ‘கொண்டோ’ ஒன்றில் வாழ்கின்றான். நகரிலுள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனமொன்றில் தகவல் தொழில் நுட்ப விற்பன்னராகப் பணி புரிந்துகொண்டிருந்தான்.
“வந்தால் போச்சு.., வரேக்கை ஏதாவது வாங்கி வரவேண்டுமா? மனுசிட்டை கேட்டுச் சொல்லு..”
மாயவன் உள்ளே திரும்பி “பானு, கேசவனும் சாப்பிட வருகிறானாம். ஏதாவது வாங்கி வரவேண்டுமென்றா சொல்லும். வரும்போது வாங்கி வருவான்” என்றான்.
சிறிது நேரம் யோசித்த பானுமதி “வரேக்கை தமிழ்க்கடைப்பக்கம் போனா தோசைத்தூள் வாங்கி வரச்சொல்லுங்கோ” என்றாள்.
“கேசவா, வருகிற வழியிலை தமிழ்க்கடை ஏதாவதுக்குப் போனியென்றால் தோசைத்தூள் வாங்கி வா. இட்லிக்கு நல்லா இருக்கும்”
“ஓகே. வாங்கிக் கொண்டு வாறன்” என்று கூறிவிட்டு மறுபுறத்தில் கேசவன் போனை வைத்தான்.
சிந்தனை சிறிது கேசவன் மேல் படிகின்றது. அவன் மாயவனுக்குக் கனடாவில் அறிமுகமான நண்பர்களிலொருவன். அவன் தகவல் தொழில் நுட்பக் கோர்ஸ் ஒன்றை எடுக்கப்போனபோது ‘சென்டானியல் கொலிஜ்’ஜில் அறிமுகமானவன். அவனை விட ஐந்து வயதுகள் குறைந்தவன். ஆனால் நட்புக்கு அந்த வயது வித்தியாசம் தடையாக இருந்ததில்லை. அவர்களிருவருக்குமிடையில் எந்தவித ஒளிவு மறைவுமில்லையென்னுமளவில் அவர்களுக்கிடையிலான நட்பு விளங்கியது. வயது முப்பத்திரண்டு. இன்னும் திருமணம் செய்யவில்லை. அதில் அவனுக்குப் பெரிதும் ஆர்வமில்லாமலிருந்தது. அதற்கு முக்கியமானதொரு காரணமுமிருந்தது. அது பற்றி அவன் மாயவனுக்கு முன்பொருமுறை கூறியுமிருக்கின்றான்.
அவன் அவனது பதின்ம வயதுகளில் அவனது வீட்டுக்கருகில் வசித்து வந்த பெண்ணொருத்தியை மனப்பூர்வமாக விரும்பியிருந்தான். அவள் மேல் அவன் உயிரையே வைத்திருந்தான். அவளுக்கும் அவன்மேல் சிறிது விருப்பமிருந்ததுபோல் அவன் உணர்ந்திருக்கின்றான். தனக்குள்ளாகவே கற்பனைக்கோட்டைகள் கட்டி மகிழ்ந்திருந்தான். இந்நிலையில் நாடிருந்த போர்ச்சூழலில் அவர்கள் பிரிந்து விட்டார்கள். ஆளுக்காள் திசை மாறிப்போய் விட்டார்கள். அவள் எங்கு இருக்கின்றாள் என்பதே அவனுக்குத் தெரியாது. ஆனால் அவனால் அவளை ஒருபோதுமே மறக்க முடியவில்லை. அவளில்லாத வாழ்வொன்றை அவனால் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை. அதுவே அவன் திருமணம் செய்வதில் ஆர்வமற்றிருப்பதற்கு முக்கிய காரணம். ஒருமுறை அவனே தன் காதற் கதையைக் கேசவன் மாயவனுக்குக் கூறியிருந்தான். அவனது நண்பனின் உளவியலை நன்கு உணர்ந்து புரிந்துகொள்ள மாயவனால் முடிந்தது. ஏனெனில் மாயவனும் அவ்விதமான அனுபவமொன்றினை அவனது பதின்ம வயதுகளில் அனுபவித்திருக்கின்றான்.
முதற்காதல் அனுபவங்கள் வாழ்க்கையை பாதிப்பது மட்டுமல்ல இருக்கும் மட்டும் அழியாது வாழ்வு முழுவதும் தொடர்ந்தும் வருமொரு மானுட அனுபவம். அதற்காகத் திருமணமே செய்யாமல் பிடிவாதமாக இருப்பதில் மாயவனுக்குச் சம்மதமில்லை. அவன் கேசவனுக்குப் பல தடவைகள் இது விடயத்தில் எடுத்துக்கூறியிருக்கின்றான். ஆனால் அவனால் கேசவனின் மனப்போக்கை இதுவரையில் மாற்றவே முடியவில்லை.
இன்றைக்கு அவன் வரட்டும். இது விசயமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிப்பார்க்க வேண்டும். இவ்விதம் எண்ணிக்கொண்டான் மாயவன்.
மீண்டும் சிந்தனை முதற் காதல் பற்றிப் படர்கின்றது. மாகவி பாரதியையே முதற் காதல் அனுபவம் விட்டு வைக்கவில்லையே. சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம். அவனுக்கு இலேசாகச்சிரிப்பும் வருகின்றது. அவனது சுயதரிதைக் கவிதையில் வரும் வரிகள் ஞாபகத்துக்கு வந்தன. உண்மையில் மாகவி பாரதிக்கு எத்தனை காதல் அனுபவங்கள் இருந்தன? தன் சுயசரிதையின் ஓரிடத்தில் “ஒன்ப தாயபி ராயத்த ளென்விழிக் கோது காதைச் சகுந்தலை யொத்தனள்” என்கின்றார். மாமுனிவரையே வென்ற மன்மதனின் வில் முன் ஏழைக்குழந்தையான நான் என் செய்வேன் என்று கூறும் பாரதி இன்னுமொரிடத்தில் ‘ஆங்கொர் கன்னியைப் பத்துப் பிராயத்தில் ஆள் நெஞ்சிடை யூன்றி வணங்கினன்’ என்று குறிப்பிடுகின்றான். முதற் குறிப்பிட்ட பெண்ணுக்கு வயது ஒன்பது. இரண்டாவதாகக் குறிப்பிட்ட பெண்ணின் வயது பத்து. பாரதிக்கு ஒன்பது வயதிலும், பத்து வயதிலும் அவரது காதலுக்குரிய இரு பெண்கள் இருந்தனரா? தொடர்ந்து ‘ஈங்கொர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள் எந்தை வந்து மணம்புரி வித்தனன்’ என்று குறிப்பிடுகின்றார். அதன் படி அவர் பன்னிரண்டு வயதுச் செல்லம்மாவைத் தந்தையின் ஏற்பாட்டில் மணம் செய்கின்றார். அவ்விதம் தந்தை தனக்கு வலிந்து திருமணம் செய்ததில் தீங்கு இருப்பதாக அவன் கருதுகின்றான். ஆனாலும் அதனை எதிர்க்கும் சக்தியற்றவனாக இருக்கின்றான். இதனையே ‘தீங்கு ம்ற்றிதி லுண்டென் றறிந்தவன் செயலெ திர்க்குந் திறனில நாயினேன்’ என்ற வரிகள் புலப்படுத்துகின்றன. தழல் விட்டு எரிந்த காதல் எவ்வளவு என்பதையும் அறிந்திலேன் என்கின்றான். அதே சமயம் முதலில் காதலித்த பெண்ணின் மீதான காதலே நிலைத்து நிற்க வேண்டுமென்றும் அவன் எண்ணவில்லை. திருமணத்திலும் நினைவைச் செலுத்த முடியாமலும் அவன் உணர்கின்றான். அறிவு முதிர முன்னர் ஏற்பட்ட காதலும், கடமைக்காகப் புரிந்த மணமும் அவனை வாட்டுகின்றன. இதனையே “கற்றுங் கேட்டும் அறிவு முதிருமுன், காத லொன்று கடமையொன் றாயின’ என்ற வரிகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
‘ஒன்ப தாயபி ராயத்த ளென்விழிக்
கோது காதைச் சகுந்தலை யொத்தனள்’
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்
என்செய் கேன்? பழியென் மிசை யுண்டுகொல்?
அன்பெ னும்பெரு வெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே?
முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்
முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே? ….
ஆங்கொர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆள் நெஞ்சிடை யூன்றி வணங்கினன்;
ஈங்கொர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்
எந்தை வந்து மணம்புரி வித்தனன்.
தீங்கு ம்ற்றிதி லுண்டென் றறிந்தவன்
செயலெ திர்க்குந் திறனில நாயினேன்.
ஓங்கு காதற் றழலெவ் வளவென்றன்
உளமெ ரித்துள தென்பதுங் கண்டிலேன்.
மற்றொர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன்
மாத ராளிடைக் கொண்டதொர் காதல்தான்
நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன்;
நினைவை யேயிம் மணத்திற் செலுத்திலேன்;
முற்றொ டர்பினில் உண்மை யிருந்ததால்
மூண்ட பின்னதோர் கேளியென் றெண்ணினேன்.
கற்றுங் கேட்டும் அறிவு முதிருமுன்
காத லொன்று கடமையொன் றாயின!
மாகவியையே முதற்காதல் அனுபவங்கள் இவ்விதம் வாட்டி வதக்கினால், சாதாரண மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம் என்றொரு எண்ணமும் கூடவே எழுந்தது. கேசவன் மீதான அவனது முதற்காதல் அனுபவங்களையும், அவற்றின் பாதிப்பையும் மாயவனால் உணர முடிகின்றது. ஆனால் அதற்காக நிறைவேறாத காதலுக்காக வாழ்வை வீணாக்குவதா? கேசவன் ஏன் இதனை உணர்கின்றானில்லை. அவனிடம் இதுபற்றி விரிவாகக் கதைக்க வேண்டும். முதலில் அவனது மனத்தை இந்த விடயத்தில் மாற்ற முடியுமா என்று பார்க்க வேண்டும். மாகவி பாரதியின் வாழ்க்கையை அவனுக்கு விளக்கி அவனது பிடிவாதத்தை மாற்ற வேண்டும். அதன் பின்பே பானுவின் ஆசையை அவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இவ்விதமொரு சிந்தனையும் கூடவே எழுந்தோடியது.
அதே சமயம் அவனுக்குத் தன் வாழ்க்கையும் கூடவே நினைவுக்கு வந்தது. அவன் மட்டும் இந்த முதற்காதல் அனுபவத்துக்கு விதிவிலக்கானவனா? ஆனால் அதன் தாக்கத்திலிருந்து அவனால் மீண்டு வர முடிந்தது. ஆனால் அவ்விதம் மீண்டு வருதலென்ன அவ்வளவு இலேசானதாகவா இருந்தது. அவ்வயதில் அவ்வனுபவத்தால் தான் அடைந்த உணர்வுகளை எண்ணிப்பார்த்தபோது அவனால் கேசவனை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. மீண்டும் மாயவனின் சிந்தனை அவனது முதற் காதல் அனுபவங்களையொட்டிப் பரவியது.
அவனது சிந்தனை அவனது முதற் காதல் அனுபவங்களை மீண்டும் அசை போட ஆரம்பித்து விட்டது. அவனது பதினாறாவது வயதில் அவன் அடைந்த அனுபவம் அது. அந்தக் கண்களும், புன்னகையும், இரட்டைப்பின்னல்களுடன் கூடிய கூந்தலும் இன்னும் பசுமையாக நெஞ்சில் பதிந்து கிடக்கின்றன. கண்ணுக்கினியாள் தான் அவளது பெயர். அவள் அவனுடன் கல்விப்பொதுத்தராதர (உயர்தரம்) டியூசன் வகுப்பில் கணிதப்பாட வகுப்பில் ஒன்றாகப் படித்தவள். அவளை அவனுடன் டியூசன் வகுப்புக்கு முன்னரே பல தடவைகள் பார்த்திருந்தான். ஆனால் அவையெல்லாம் அவனது அவள் மீதான கவனத்தை ஈர்த்திருக்கவில்லை ஒரேயொரு சந்தர்ப்பத்தைத்தவிர. ஒருமுறை அவன் தனது சகோதரியுடன் வீட்டின் முன், கம்பி போட்ட கதவுக்குப் பின்னால் உரையாடிக்கொண்டிருந்தபொழுது , மாலை நேரத்துத் தென்றலென அவள் மார்புறப்புத்தகங்களை அரவணைத்தபடி அவர்களது வீட்டைக் கடந்து சென்றாள். அவளை அவளது சகோதரிக்கு முன்பே நன்கு தெரியும். அவளைக்கண்டதும் ‘கண்ணூ’ என்று பெருங்குரலெடுத்து அவளை அழைத்தாள். இதற்கிடையில் சில அடிகள் கடந்து சென்றிருந்த அவள், அழைத்தது யாராகவிருக்கும் என்ற சிந்தனையுடன், புன்னகை தவழத் திரும்பிப்பார்த்தாள். அவள் திரும்பிப்பார்த்த இடத்தில் அவன் நின்று கொண்டிருந்தான். அவனைக்கண்ட அவள் முகத்தில் ஒரு கணம் வியப்பு. மறுகணம் அவனது தங்கையைப் பார்த்துப் பதிலுக்கு நட்புரீதியாகப் புன்னகைத்தபடியே தன் பயணத்தைத்தொடர்ந்தாள் அவள். ஆனால் அந்த மாலைப்பொழுது, இரட்டைப்பின்னல்கள், சாந்துப்பொட்டுடன் புன்னகைத்தபடி தென்பட்ட அவளது முகம், அந்தக்கணம் அப்படியே அவன் மனத்தில் ஆழப்பதிந்துபோய் விட்டன. அதுவரை அவளைப் பல தடவைகள் பார்த்திருந்தாலும் அவனது கவனத்தைக் கவர்ந்து அவனது நெஞ்சின் ஆழத்தில் சென்று அவள் குடியேறியது அந்த மாலைப்பொழுதின் அந்தக் கணத்தில்தான். மறக்க முடியாத கணங்களிலொன்றாக அக்கணமும் அவனிதயத்தில் நிரந்தரமாகத் தங்கி விட்டது.
இப்பொழுது மீண்டும் கேசவன் பற்றி எண்ணியதும் அவனுக்கு அவனது சொந்த அனுபவத்தின் நினைவுகள் எழத்தொடங்கி விட்டன. அவனுக்குத் தெரியும் அந்த முதற்காதல் அனுபவங்கள் எவ்வளவு வலிமையானவை என்று. ஆனால் அவற்றைக் கடந்து வரவேண்டியதும் தவிர்க்க முடியாதுதான். மானுட வாழ்வின் முக்கியமான , வளர்ச்சிக்குரிய ஒரு சான்றே அந்த முதற்காதல் அனுபவம்தான். தவிர்க்க முடியாத வளர்ச்சிப்படிக்கட்டு அது. கேசவன் அதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
கேசவன் வரட்டும். அவனிடம் இதுபற்றித் தீவிரமாகக் கதைக்க வேண்டும். இவ்விதம் எண்ணத்திலாழ்ந்தபடியே மாயவன் கேசவன் வரவை எதிர்நோக்கி நின்றான்.
[ தொடரும் ]