இரவு முழுதும்
பூக்களுடன்
பேசிக்கொண்டிருந்தேன்.
அறைக்குள்
திரும்பிய போது
காற்று நெருப்பாய்
வீசியது.
கவிதை பற்றி,
இன்றைய அரசியல் பற்றி,
நேற்றைய தோல்விகள் பற்றி,
நாளை… பற்றியும்
மட்டுமே பேசினோம்..
காற்றுடன் கைகுலுக்கி
சமாதானமாகிவிட முடியவில்லை.
ஒன்றில்,
பூக்களுடன் நட்புக் கொள்ளவேண்டும்
அல்லது,
பூக்கள் பற்றிய புரிதல்
காற்றுக்கு வேண்டும்.
செடியை அல்லது மரத்தை
அழைத்துவர சம்மதமில்லை..
காற்று
பெருமூச்சுடன்
வெளியே போக எத்தனித்தது.
தடுக்கவில்லை..
குழந்தைகள்
செடியை அசைத்து
குதூகலத்துடன்
பூக்களுடன்
பேசிக்கொண்டிருந்தனர்..
வெளிச்சம்
இப்போது
மௌனத்துடன் கைகுலுக்கிக்கொண்டது
07/09/2017