ஆய்வு: பழமொழி நானூறு உணர்த்தும் அரசியல் அறம்

- பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலம்பட்டி, திருமங்கலம், மதுரை - 625 706. -பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பழமொழிநானூறு பல அரசியல் கருத்தாக்கங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது. அரசின் இயல்புகளை முறையே பாடல்கள் 231 முதல் 257 வரையிலும், அரசினை ஆளும் அரசனுக்குத் துணையாக நிற்கும் அமைச்சர் குறித்தும் முறையே பாடல்கள் 258 முதல் 265 வரையிலும், மன்னரைச் சேர்ந்தொழுகும் தன்மைக் குறித்தப் பாடல்கள் முறையே 266 முதல் 284 வரையிலும், மன்னரின் அங்கத்தினராயிருக்கும் படைவீரர் குறித்த பாடல்கள் முறையே 311 முதல் 326 வரையிலும் இடம்பெற்றுள்ளன. ஆக பழமொழிநானூறில் 44 பாடல்கள் அரசியல்பு தொடங்கி படைவீரர் உள்ளிட்ட தன்மைகளை ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் வரும் பழமொழிகளின் வழி வலியுறுத்தி நிற்கின்றன எனலாம்.

தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் பழமொழியை முதுமொழி, முதுசொல் என்று குறிப்பிடுகிறது. அதற்குச் சான்றாக முதுமொழி எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை,

“நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப.” (பழமொழி.167)

என்னும் நூற்பா விளக்குகிறது. நுண்மை, சுருக்கம், தெளிவு, மென்மை ஆகிய இயல்புகளைக் கொண்டு கருதிய பொருளைக் காரணத்தோடு முடித்துக் கூறுதல் முதுமொழி ஆகிறது. முதுமொழியாகிய பழமொழிகள், பழமொழிநானூறின் ஒவ்வொருப் பாடலின் இறுதியிலும் இடம்பெறுகின்றன. இம்முதுமொழிகள் சொல்லப்பட்டதன் நோக்கமே சொல்லவந்த கருத்தைக் கூர்மைப்படுத்துவதற்கே எனலாம். பழமொழிநானூறில் வரும் அரசியல் குறித்தப் பழமொழிகளும் அத்தன்மையுடையதாகும். அரசியல் கொள்கைகளைப் பழமொழிகளின் வழி கூர்மைப்படுத்த முனைகின்றன.

“பழமொழிகள் எனப்படுபவை புதியனவாக அமைக்கப்படாது வழிவழியாக மக்களிடையே வழங்கிவரும் சுருதியுத்தி அனுபவங்களுக்கு இயைந்த அறிவுரை வாக்குகளாகும். இவை கருத்துக்களைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் கேட்போர் உளங்கொள்ளும் வகையிலும் தெரிவிக்கின்றன. இவை பொதுமக்களின் அனுபவம் வாயிலாக அவர்களது உணர்ச்சியினின்று வெளிப்படுவன என்பார் ஆ.வேலுப்பிள்ளை.” (தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்,பக்.73,74) அரசன் நீதி கூறுகின்றபோது தனக்கு இவர் நண்பர். தனக்கு இவர் பகைவர் எனக் கருதுவானாயின் அது அவனுடைய செங்கோல் தன்மைக்குக் குற்றமுடையதாகும். தனக்கு மிக்க வேண்டியவராயினும் தகுதியற்ற செயலைச் செய்கின்றபோது வன்கண் உடையவனாகி அவனைத் தண்டிக்க மனமில்லாதவன் அரசினை ஆளும் தகுதியில்லாதவன் எனும் கருத்தியல் பழமொழி நானூறில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை, “எங்கண் இணையர் எனக்கருதின் ஏதமால்
தங்கண்ண ரானும் தகவில கண்டக்கால்
வன்கண்ண னாகி ஒறுக்க ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான் அரசு.” (பழமொழி.241)

என்னும் பாடல் வரிகளும் உணர்த்துகின்றன. நீதி சொல்லும் முறை அறிந்து செல்வம் உடையவருக்கும் வறுமை உடையவருக்கும் அரசன் நடுநிலையிலிருந்து திரியாதவனாய் இருவர் மனமும் ஒப்புமாறு நீதி கூறவேண்டும். அவ்வாறு நடுவுநிலை திரிந்து நீதி சொல்வானேயானால் அது ஒரு தாயினது தனங்களை உண்ணும் குழந்தைகளுக்கு ஒருபக்கம் நீரொழுகி மறுபக்கம் பால் ஒழுகும் வஞ்சனைக்கு நிகரானது.

“முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும்
இறைதிரியான் நேரொக்க வேண்டும் – முறைதிரிந்து
தேரொழுகா னாயின் அதுவாம் ஒருபக்கம்
நீரொழுகிப் பாலொழுகு மாறு.” (பழமொழி.244)

மேற்கண்ட இப்பாடலடிகளின் கருத்தை உற்று ஆராய்கின்றபோது அக்காலத்தே தவறிழைத்தவருக்கு நாட்டை ஆண்ட அரசன் ஒருசார்பு நின்றும் நீதி கூறியிருக்கிறான் என்பது தெளிவு. இதனைக் கண்டிக்கும் பழமொழிநானூறு ஆசிரியர் தம் பாடலின் வழி அரசன் நீதி வழங்கும் முறை எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கிறார் எனலாம்.

பகை மன்னர்களிடையே சிறிது கொடுங்கோன்மை கொண்டாலும், அதனைவிட தன் அரசின் கீழ் இயங்கும் குடிமக்களிடத்தே செங்கோல் தன்மை கொண்டு ஒழுகுதலே வெற்றியைத் தரவல்லதாகும். செங்கோல் புரியும் அரசனுக்கே மக்கள் தம் உடைமைகளை அவனுக்காக அளிப்பர். இதனையே,

“அங்கோல் அவிர்தொடி அழியான் ஆயினும்
செங்கோல் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவரால்
வெங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிதெனினும்
தண்கோல் எடுக்குமாம் மெய்”    (பழமொழி.251)

என்கிற பாடலின் கருத்தியலும் கொண்டிருப்பதை உணரமுடிகிறது. குடிகளைத் துன்புறுத்தும் அரசன் கூற்றுவனாகிய எமனுக்கு ஒப்பானவனாக இருப்பான் என,

“கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து குறிப்பறிந்து
மாற்றம் உடையாரை ஆராய தாற்றவும்   
முல்லை புரையும் முறுவலாய் செய்வதென்
வல்லை அரசாட் கொளின்.” (பழமொழி.255)

என்னும் இப்பாடல் சித்தரிக்கின்றது.

மலைப்பகுதியிலே நிறைந்து ஒழுகுகின்ற குளிர்ந்த நீரின் பெருக்கம், மலையிடத்தே பெய்த மழையின் அளவைக் காட்டும், அதுபோல பகைவரை வெல்லுகின்ற சினத்தையுடைய அரசனது கல்வியின் தன்மையையும், அவனின் நீதி உரைக்கும் முறையையும் அவனது அவையே அறிவிக்கும். இக்கருத்தினையே,

“கல்வி யகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல்சின வேந்தன் அவைகாட்டும் – மல்கி
தலைப்பாய் இழிதரு தண்புனல் நீத்தம்
மலைப்பெயல் காட்டுந் துணை”    (பழமொழி.259)

என்னும் இப்பாடலும் விளக்குகின்றது. அதாவது, அரசனின் கல்வி கேள்வியறிவை அவன் தன்னகத்தே வைத்திருக்கும் அமைச்சர்களின் வழி விளங்கும் என்பதாகும். இதனால் தேர்ந்த அறிவுடைய அமைச்சர்களை ஒரு அரசன் கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

பேசத்தகாதவற்றைப் பேசியவர் நாவினைப் பருந்து எறிந்துண்ணாது என்று கருதி, செருக்கு கொண்டு இறுமாப்புடன் இருப்பவர்கள், ஒருவர் தம்மொடு மாறுபட்டு நின்றால் அவர் தான் நினைத்ததைத் தவறாது முடிக்க வல்லாரை வெகுளச் செய்து பலிபீடத்தின் மேலிட்ட உணவினை உண்பராய் அரசரை இகழ்ந்து பேசிச் செருக்குறுதல் ஆகாது என்ற கருத்து புலப்படுகிறது. இதனை,

“உரைத்தவர் நாவோ பருந்தெறியா தென்று
சிலைத்தெழுந்து செம்மாப் பவரே – மலைத்தால்
இழைத்த திகவா தவரைக் கனற்றிப்
பலிப்புறத் துண்பார் உணா.” (பழமொழி.296)

என்ற பாடலும் புலப்படுத்துகிறது. மேலும், அரசாட்சியின் முக்கிய அம்சமாக விளங்கும் அரசன் என்பவன் மன்னன், வேந்தன், இறைவன், அரசாள்வோன் எனும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெற்றிருப்பதை 248, 244, 245, 249, 255 போன்ற பழமொழிநானூறு பாடல்கள் வழி அறியமுடிகிறது.

அரசமைப்பில் அரசனே தலைசிறந்தவனாகத் திகழ்கிறான். அவனது ஆட்சி சிறப்புடையதாகத் திகழ வேண்டுமென்றால், மக்கள் மீது காட்டுகின்ற கருணை மனப்பான்மையும், செங்கோலின் தன்மையும் சிறப்புற அமையவேண்டும். இச்செங்கோல் கொடுங்கோலாகத் திகழ்ந்தால் அவனது ஆட்சியில் மக்கள் சமூக நெறிமுறைகளை மீறிச்செல்லும் பாங்குடையவராக மாறுவர். ஆதலின், அரசன் ஆட்சி செலுத்தும் அதிகாரத்தையும், அதன் ஒழுங்குமுறைகளையும் கற்றறிந்த புலவர்கள் பலர் எடுத்துரைத்துள்ளனர். களப்பிரர் ஆட்சியில் ஏற்பட்ட குழப்பங்களால் தெளிந்த ஒரு அரசமைப்பு உருவாகவும், அவ்வரசமைப்பில் உள்ள அரசன், அமைச்சன், படைவீரர் போன்றவர்களின் கடமைகள் வரையறுக்கப்பட்டன. நிர்வாகத்தில் வரிவசூல், குற்றத்திற்குரிய தண்டனை, நீதி போன்றவை பேசப்பட்டன. இவற்றை வலியுறுத்திப் பேசுவதற்கு அக்கால அரசியலமைப்பினை உணர்ந்திருந்தல் அவசியமாகும். அரசன் தனது பகையரசனை வெல்ல மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளையும், அதனைச் சார்ந்திருப்பாருக்குரிய தகுதிப்பாடுகளையும் அறிந்திருந்தல் அவசியமாகும். மேலும், தன்னோடு மாறுபடுகின்ற எளிய அரசர்களையும் உடனே வெல்ல வேண்டும் என பழமொழிநானூறு 249 ஆம் பாடல் விளக்குகிறது. இப்பாடல் எளிய நிலப்பரப்பையும், படைகளையும் உடையவன் என்று கருதிப் போர் மேற்கொள்ளாமல் இருத்தல் கூடாது என்றும், அவ்வாறு இருப்பாரேயானால் அப்பகை பின்பு வளர்ந்து தம்மையே அழித்துவிடக் கூடியதாக அமைந்துவிடும் என்ற எச்சரிக்கையையும் அறிவுறுத்துகிறது.

பழமொழிநானூறு 250 ஆவது பாடலானது, தமது படைகளைத் திரட்டி வெற்றியை வேண்டுகிற அரசன் படைகளிடம் அன்புமொழி பாராட்டி தமது படைகளைக் கட்டுப்பாட்டில் வைத்து செயலாற்றினால் தான் வெற்றி பெற இயலும் என்ற உளவியல் கருத்தையும் இங்கு வெளிப்படுத்தியுள்ளது. இச்செயலால் அரசன் படைவீரர்களைப் புகழ்ந்துரைத்தால் அவர்களின் அன்பு முழுவதும் கிடைக்குமென்றும் அதன்மூலம் எதிரிப்படையை எளிதில் முறியடிக்கலாம் என்ற அரசியல் உத்தியும் வெளிப்படுவதை அறியமுடிகிறது. முடியாட்சி கால அரசியலில் அரசனே ஆற்றல் உடையவன் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் அரசன் ஆணையின் கீழ் பிறர் தமது ஆணையைச் செலுத்த முடியாது என்னும் அரசியல் கருத்தினை பழமொழிநானூறு 252 வது பாடல் எடுத்துரைக்கிறது.

அரசனது ஆட்சிச்சிறப்பு அவனது நேர்மையான ஆட்சி முறையினைப் பொறுத்தே அமையும். அவ்வாறின்றி, மக்களின் நலனில் அரசன் அக்கறை செலுத்தாத பொழுது அவ்வாட்சியினை மாற்றும் போக்குடையவர்களாக மக்கள் மாறும் நிலையும் உருவாகும். அதனால்தான், அரசனின் வெற்றி அவன் தம் மக்களிடம் செலுத்தும் செங்கோன்மையிலேயே அடங்கியுள்ளது என்பர். அரசன் தனது பகையரசர் மீது கொடுங்கோன்மை செலுத்துவது அரசஅறம். அதேபோல் தம் மக்களிடம் செங்கோன்மையை விடாதிருத்தலும் வேண்டும். அதுவே அரசனுக்கு வெற்றியைப் பெறும் வழியாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதை பழமொழிநானூறு 251 பாடல் வழி அறியமுடிகிறது.

குடிமக்களை ஆக்கவும், அழிக்கவும் அரசர்களால் மட்டுமே முடியும் எனக்கூறுவதன் வாயிலாக அரசனது அதிகாரச்சிறப்பு பழமொழி 253 ஆவது பாடலில் பேசப்படுகின்றது. குடிமக்களை முறையின்றித் துன்பம் செய்யும் அரசன் கூற்றுவனாகக் கருதப்படுவான் எனக் கூறுவதன் மூலம் இச்செயல் மன்னனை நேர்வழியில் செல்லத்தூண்டுவதாக அமைகிறது. – (பழமொழி. 255) அரசன் வஞ்சனையுடையவர்களைத் தலைமைச் செய்து சேர்ந்திருத்தல் கூடாது எனக்கூறுவதன் வாயிலாக, பெருமைத் தரத்தக்க செயலை அரசன் தகுதியற்றவர்களிடம் தரக்கூடாது என்பதனை பழமொழிநானூறு 256, 257 ஆகிய பாடல்கள் வலியுறுத்துகிறது. அரசன் என்பவன் பகைவர்களையும் முதலில் நட்பு பாராட்டும் நோக்கமுடையவனாக இருக்கவேண்டும். – (பழமொழி.258) அரசன் பெரியவர்களைச் சாhந்திருப்பவனாக அல்லது சார்பாகப் பெற்றிருப்பவனாக இருந்துவிட்டால் அடைய முடியாதது என்று எதுவுமில்லை என்கிறது. – பழமொழி. 258

பழமொழிநானூற்றின் ஆசிரியர் முன்றுறையரையனார் பழமொழிநானூறு 260 ஆவது பாடலில், அமைச்சரை ‘பக்கத்தில் இருப்பவர்’ என்றும், அரசனின் முக்கிய அதிகாரியாகயும் வரையறை செய்கிறார். அரசன் செங்கோன்மையுடையவன் அல்லது கொடுங்கோலன் என்று மக்கள் போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் அமைச்சர்களே காரணமானவர்கள் என்பர். ஏனெனில் அரசன் இன்ன தகுதிகளைப் பெற்றவன் என்று வரையறை செய்து அவனுக்கு அமைச்சரானவர் நல்லவற்றையும், தீயவற்றையும் எடுத்தோதும் நிலையில் நின்று நீதிகளை அறிந்து ஆட்சியமைக்குமாறு அரசனுக்கு அறிவுறுத்தும் செயலானது அமைச்சரைச் சேரும். எனவே, அரசியலில் அமைச்சர் பிரிக்க முடியாத ஓர் அங்கமாவார். அரசன் தமது அமைச்சரோடு ஆலோசனை செய்யாது எக்காரியம் நிகழ்த்தினாலும் அச்செயல் தீமையாகவும் முடியுமென்று பழமொழி நானூற்றின் 262 ஆவது பாடல் சான்றுரைக்கிறது.

நீதி, அநீதிகளை எடுத்துக்கூறும் அமைச்சர்களோடு வாழும் அரசன் அவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயலாற்ற வேண்டும். அமைச்சர்கள் தன் பணியில் தூய்மை இழந்தவர்களாக இருந்தால் அந்நாட்டில் வாழும் உயிர்கள் பிழைப்பது அரிதாகிவிடும் என பழமொழி நானூறின் 263 ஆவது பாடல் குறிப்பிடுகிறது. தீய அமைச்சர்களை அரசன் தன் அவையில் பெற்றிருந்தால் வரிவிதிப்பு முறையிலும் இன்னபிற ஆட்சியமைப்பிலும் கொடுங்கோன்மையை வெளிப்படுத்தி மக்களைத் துன்புறுத்த காரணமாவான். அறிவுமிக்க அமைச்சர்களின் செயலே நல்லவற்றை செய்யும், தீயவற்றை விலக்கும். இதுபோன்ற அமைச்சர்களின் பெருமைகள் யாவும் பழமொழிநானூறு பாடல் எண் 264, 265, 266 ல் முறையே பேசப்பட்டுள்ளன. மேற்கண்ட இக்கருத்தின் வாயிலாக அரசவையில் அமைச்சர் என்பவர்கள் பிரிக்கமுடியாத அரசியலமைப்பின் ஓர் அங்கமாகத் திகழ்ந்தனர் எனலாம்.

மன்னரோடு மிக அணுக்கமாக உறவுகொண்டவர்கள் அவன் ஏவிய செயலை மறுக்காமல் முந்திக்கொண்டு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அக்காலச் சமூக அமைப்பில் அரசன் சில செயல்களைக் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே ஒப்புவித்துள்ளான் என்பதனை அறியமுடிகிறது. அவ்வாறு மன்னரின் ஏவலுக்கு செவிசாய்த்து பணியினை செய்துமுடிப்பவர்கள் கட்டுண்டு வாழ்பவர், திறனுடையவரைச் சார்ந்தவர், மன்னருக்கு உயிருக்குயிரானவர் என்ற பல சொற்களில் முன்றுறை அரையனார் வரையறுத்துக் கூறுவதன் வாயிலாக அரசனின் பொறுப்புகளைச் செய்யும் அவனது நட்பினர் சிலர், அல்லது அரசனால் நம்பப்பட்டவர்கள் சிலர் அக்காலச்சூழலில் இருந்தார்கள் என பழமொழிநானூறு 267, 268 ஆவது பாடல் வழி அறியமுடிகிறது.

அரசனின் ஏவல் பணியினை செய்துமுடித்தவனின் செயலால் அவ்வரசன் உவகை கொள்ளவேண்டும். அப்புகழானது அரசனைச் சாராது, செய்தவனையேச் சாரும் என்று கூறுவதன் வாயிலாக மன்னரைச் சார்ந்தவர்களுக்கு உற்சாக மூட்டப்பட்டுள்ளது. அரசனால் மதிக்கப்பட்டவர்கள் ஏனையோராலும் மதிக்கப்படுவார்கள் என்றும், தம்முடைய காரியத்தைத் தவறான வழியில் மேற்கொள்ளாமல் அரசன் குறிப்பறிந்து நிறைவேற்றுதலே சிறப்பானது என்று கூறப்பட்டது. இதன் மூலம் அரசனிடம் நெருக்கமாக உறவு கொண்டவர்கள் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தாமல் செய்யும் பணியானது செவ்வனே செய்யப்படவேண்டும் என்னும் கருத்து பழமொழிநானூறு 271, 275, 276 ஆகிய பாடல்கள் வழி அரசியல் அறமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசனுக்காக இன்னுயிரையும் மாய்க்கும் பொழுது அவன் விரும்புவனவற்றையும் விட்டுவிடவேண்டும். அரசன் கெட்ட விடத்து அவனை இகழாமலும், செருக்குடைய அரசனைச் சார்ந்தவர்கள் பயன்படாதவற்றை கூறக்கூடாது என்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அறிவுடையோர் அரசனிடம் தம் பொருளைக் கொடுத்து தனக்கான செயல்களைச் செய்து கொள்ளுதலும் உண்டு. அரசனைக் கொல்லக் கருதுபவர்கள் தம்முடைய இறுதிநாளை அடையும் சூழலும் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏனெனில், அரசனைச் சூழ்ச்சியால் வீழ்த்த நினைக்கும் செயலின் வெளிப்பாடு அரசனின் கவனத்திற்குப் புலப்படுமானால் தீமை செய்தவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்கப்படும். எனவே, தண்டனைக்கான சட்டங்கள் அரசநியதியின் படி நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதனை பழமொழிநானூறு 277, 278, 279, 280, 281 ஆகிய பாடல்கள் வழி அறியமுடிகிறது.

அரசன் தீமை செய்யும் காலத்தும், அவனுக்கு நெருக்கமானவர்கள் தீமை செய்யாமையும், அரசன் நெறிதவறும் பொழுது அவனது அன்பிற்குரியோர் சூழலறிந்து பொறுமையாக அவனைத் திருத்துதலும், உண்மை நிலையினை எடுத்துரைத்தலுமான நெறிமுறைகளை அரசனைச் சார்ந்தவர்கள் பின்பற்றவேண்டும் என்ற அரசநெறிமுறைகள் பழமொழிநானூறு 282, 283, 284, 285, 286 ஆகிய பாடல்கள் வகுத்துக்கொடுத்துள்ளன. அரசனானாலும், அவன் ஆட்சியில் உள்ள அமைச்சர் படை வீரர்கள் தமது பகைப்புலத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். அதுவே தம் நாட்டினைப் பாதுகாத்துக் கொள்ளவும், எதிரிநாட்டினைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் ஒரு வாய்ப்பாக அமையும். எதிரிகள் தம்மொடு எவ்விதங்களில் பொருதப்போகிறார்கள் என்று அறிந்தால் வெற்றி எளிதாகும். ஆதலினால் தம் பகைவரின் சூழ்ச்சியை அல்லது திறமையை அறிந்து கொள்ளல் அரசியலில் முக்கியமாகக் கருதப்பட்டது. அரசன் என்பவன் எத்தனைப் படை வலிமையோடு இருந்தாலும், அவனுக்கென்ற தனி வலிமையுடையவனாக இருத்தல் வேண்டும். தமக்கு அனைவரும் பாதுகாப்பு அரணாக இருந்துவிட்டால், சூழ்ச்சியால் அரசனை ஒழித்துக்கட்டுவர். இதுபோன்ற நிகழ்ச்சி அக்கால அரசியலில் நடந்திருக்கவேண்டும். அதனாலே இவ்வாறு அறிவுரை கூறப்பட்டதெனலாம்.

பகைவர்களை நிரந்தரமாக அழிக்க அவர்களின் நண்பர்களையும் அறிந்து அழித்தால்தான் அப்பகையை முழுமையாக அழிக்கமுடியும். இல்லையெனில், ஒருநாள் நண்பர்கள் சேர்ந்து பெரும்படையுடன் போரிடவருவர். எனவே, பகைவர் மாறுபட்டு எழுவதற்கு முன்னரே, அவரை அழிக்கவேண்டும். காலம் தாமதித்தால் வரும் பகைவர்களை எதிர்கொள்ளத் திறனற்று போய்விடும். – (பழமொழி. 287) ஒரு மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை அழித்து அவனது குடிகெட்டுப் போகுமாறு எவரேனும் போரிட வந்தால், பொய்யுரைத்தேனும் அவனது குடி அழியுமாறு செய்துவிடவேண்டும் எனக்கூறுவதில் புலப்படும் கருத்தாவது, தமக்கு உறவில்லாத பகைவரை இவ்விடத்தில் நட்பாகக் கொள்ளுதல் இயலாது எனக்கூறப்பட்டுள்ளது. – பழமொழி. 288, 289, 290

பகையரசனின் வலிமையறிந்தே போர் தொடுக்கவேண்டும். வலிமையானவர்கள் பலரும் ஒன்றிணைந்த படையோடு துணிந்து நின்று போரிடுவது தீமையை விளைவிக்கும் எனக் கூறுவதிலிருந்து, ஆற்றலுடையவனோடு மோதும் படையானது வெற்றி வாய்ப்பை இழந்து தம் நாட்டையும் இழக்க நேரிடும். இச்செயலானது, நல்ல காலத்தில் எழுந்த தீவினையாகும். (பழமொழி. 291 – 295) பிறரை இகழ்ந்து பேசுதலை எப்போதும் தவிர்க்கவேண்டும். பழைய பகைவர்களை சூழ்நிலையால்கூட அரசன் நட்புறவுக் கொள்ளகூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசன் தமது பகைவர்களை வேரோடு களைய வேண்டும். அதனில் எஞ்சியவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் போரிட நினைப்பர். குறிப்பாக, தம்மில் வலிமைக் குறைந்தவர்களை எப்போதும் தாக்குதல்கூடாது. வீரமுடையவராக இருந்தாலும் படையினது வலிமை அவசியமாகக் கருதப்பட்டது. – பழமொழி. 298 , 304, 311.

போரில் பகைவர்களை அழிக்கும் மார்க்கம் புலப்படாத பொழுது பகைவனாய் இருக்கும் இரண்டினுள் ஒன்றைத் தமக்கு சார்பாகக் கொள்ளவேண்டும். மேலும், மாறுபட்டு எழும் அரசனை வெல்ல அவனது பகைவரைத் துணையாகக் கொள்ளவேண்டும். இவ்வாறு கூறுவதன் மூலம், வெற்றியைப் பெறுவதற்குத் தம் வலிமையும், தம் மாற்றார் வலிமையும் தெரிந்து செயல்படுவதோடு, பகைவரின் பகையை நட்பாகக் கொள்வதால் வெற்றியை எளிதாக அடையலாம் என்றும், தம் எதிரியை அழிக்க அவர்களுக்குள் உட்பகையை வளர்த்துவிடுவதும், போரை விடச் சூழ்ச்சியே வெற்றி பெறுவதற்கானப் போர்த்தந்திரம் என்றும் முன்றுறையரையனார் வலியுறுத்தியுள்ளார். (பழமொழி. 305)

தொடக்க காலத்தில் போர் ஆநிரைகளைக் கவர்வதற்காக நடத்தப்பட்டது. கால வளர்ச்சியில் பிறநாட்டுச் செல்வங்களையும், நிலப்பரப்புகளையும் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணம் உதித்த போது, அந்தந்த தொழிலுக்கு ஏற்றவாறு வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். இவ்வீரர்களுக்கு முக்கியப்பணியாக நாட்டைக் காப்பதும், அயலவர்கள் போரிடும் எண்ணத்தோடு நெருங்கும் பொழுது அவர்களை எதிர்த்து போரிடுவதுமாகும். வீரர்கள் எனப்படுபவர்கள் மனஉறுதியோடு நின்று எவ்வாறாயினும் வெற்றியை ஈட்டுபவர்களாகத் திகழவேண்டும். தம் அரசனைக் காக்க உயிரைக் கொடுத்தாயினும் பகையை வெல்லத் துணிதல் வேண்டும். புறமுதுகிட்டு ஓடும் பகைவர்களை ஒருபோதும் தீண்டக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. – (பழமொழி. 312 – 323) கடமையும், நேர்மையும் காக்கும் வீரர்கள், தம்முன்னோர்களின் புகழ்பாடி உணவுபெறுதல் கூடாது. அவ்வாறு செய்யும் செயலானது கணிகையர் தம் மேனியழகைக் காட்டி பயன்பெறுவதற்கு ஒப்பாகும் எனப் போரில் பங்குபெறாத வீரர்கள் மிகவும் இழிவாகப் பழித்துக் கூறப்பட்டுள்ளனர். – பழமொழி. 324, 325

பண்டைக்காலத்தில் பெரும்வேந்தர்களும் பெண்கேட்டுச் செல்லும் அளவிற்குச் செல்வந்தர்களாக நிலக்கிழார்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை சங்கஇலக்கியம் வாயிலாக அறியமுடிகிறது. ஏனெனில், சமூக மதிப்பை உயர்த்துவதற்கும், நிலப்பரப்பைத் தன்னரசோடு இணைத்து ஆட்சியமைப்பை விரிவுபடுத்துவதற்கும் இச்செயல் ஏதுவாக அமைந்துள்ளது. இதனையே,

“இருகயல் உண்கண் இளையவளை வேந்தன்
தருகென்றாற் றன்னையரு நேரார் – செருவறைந்து
பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால்
வழைக்காய் உப்புறைத்த லில்” (பழமொழி – 327)

என்னும் பாடல் எடுத்துரைக்கின்றது. இப்பாடலில் பெண் மறுத்ததற்கான அடிப்படைக் காரணங்களாக பிறப்பின் குலப்பெருமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்காரணத்தினால் வேந்தர்கள் படையெடுத்து அவர்களை அழிக்கமுற்பட்டுள்ளனர் என்னும் கருத்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அறஇலக்கியக் காலகட்டத்தில் நீதிமன்றங்கள் என்னும் அரசவையானது அரசனின் தலைநகரங்களில் இருந்தன. கிராமங்களில் ‘மன்றம்’ என்னும் பெயரில் அவை செயல்பட்டன. நீதிகளை நிலைநாட்டுவதற்குத் தனிப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசனின் முன்றில் நீதிமன்றமாகவும் இருந்தன. அரண்மனை வாயிலில் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. மனுநீதிச் சோழனிடம் கன்று மணி அடித்து நீதி கேட்டதாக வரலாறுகள் எடுத்துரைக்கின்றது. (பழமொழிநானூறு – 243, 319) சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் பழமொழிநானூறில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கரிகாலன், கொற்கைப் பாண்டியன், செம்பியன் சேரமான், மனுநீதிச் சோழன் போன்றோரைக் குறிப்பிடலாம்.

கரிகாலன் இளைஞனாக இருந்தபோது வழக்குரைக்கும் பொருட்டு நரைமுடியுடைய முதுமக்கள் மன்னனின் இளமையைக் கண்டு தயக்கமுற்றனர். இதனை உணர்ந்த மன்னன் தானும் நரைமுடிதரித்து வழக்குரையைத் தீர்த்தான் என்ற வரலாற்றுச் செய்தியைப் பழமொழிநானூற்றின் 6 வது பாடல் எடுத்துரைக்கிறது. கருவூரிலே இருந்த கரிகாலனின் பெரும் சிறப்பால் பலரும் வேண்டி அவனைச் சோழ நாட்டிற்கு அரசனாக்கிய செய்தியைப் பழமொழிநானூற்றின் 230 ஆம் பாடலும், இளம் வயதியிலேயே இரும்பிடர்த்தலையார் என்பவரைத் தனக்குத் துணையாகப் பெற்று தம் பகைவர்களை வென்று குற்றமற்ற செங்கோலாட்சி செலுத்திய செய்தியைப் பழமொழிநானூற்றின் 239 ஆம் பாடலும் பதிவு செய்துள்ளது.

மனுநீதிகண்ட சோழ மன்னன் பசுங்கன்றைத் தேர்க்காலினால் கொன்ற குற்றத்திற்காகத் தன் இளங்குமாரனையும் தேர்க்காலில் இட்டு உயிரை வதைத்த செய்தி இந்நூலில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. – (பழமொழி. 242) மேலும், பழமொழிநானூறு தோன்றிய காலக்கட்டங்களில் கல்வியும், பண்பும் அமைந்த அறிஞர்குழு ஒன்று நீதிமன்றமாக, அவை என்னும் பெயரில் செயல்பட்டன என்னும் செய்தியினை,

“கல்வியகலமும் கட்டுரை வாய்ப்பாடும்
கொல்சின வேந்தன் அவைகாட்டும்”    (பழமொழி.259)

என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன. கரிகாலன் நீதி கூறிய முறைமையைச் சிறப்பித்துக்கூறும் ‘உரைமுடிவு காணான் இளையோன்’ என்னும் பழமொழிநானூறு தொடரால் அறியலாம்.

வாதி மற்றும் பிரதிவாதிகளின் உரைகளைக் கேட்டும், அறிவுடைய அமைச்சனின் வாதங்களைக் கொண்டும் அரசன் தீர்ப்புக் கூறுவது முக்கிய கடமையாகும். அவ்வரசன் நீதியுரைக்கும் பொழுது தமக்கு நெருக்கமானவர், நெருக்கமற்றவர் என்ற பாரபட்சம் காட்டாது நீதி வழங்கவேண்டும். பெரியோர் சிறியோர், இளமை முதுமை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக் கருதி நீதி வழங்குதல் கூடாது. எனவே, அக்கால அரசியலில் நீதி வழங்கும் முறைமையில் மிகவும் கண்டிப்புக் காட்டப்பட்டது என்பதனை உணரமுடிகின்றது. – (பழமொழி.212, 243)

அவைகளிலோ அல்லது மன்றத்திலோ வழக்காயும் பொழுது சாட்சிகளைத் தீர விசாரித்தே நீதி வழங்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் சூளுரையினாலும் நீதி ஆராயப்படும். இச்சூளுரை வழக்கு முறையில் வாதிடுபவர் தனது கையைக் குடத்தினுள் விடவேண்டும். அக்குடத்தில் இருக்கும் நாகமானது அவரைத் தீண்டவில்லையெனில் அவன் நிரபராதி. தீண்டினால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இம்முறையில் நல்லவர்களும் இழப்பினைச் சந்தித்திருக்க வேண்டும். இக்காரணத்தினால்தான் இந்நூலாசிரியர் சாட்சியில்லாமல் கடன் கொடுப்பது தீமையில் முடியும் என்கிறார். பழமொழி. 341.

அரசாட்சி செம்மையாகத் திகழச் செல்வம் வேண்டும். அச்செல்வம் மக்களிடமிருந்து வரியாகப் பெறப்பட்டது. ஆதலால், வரிதிரட்டும் நோக்கமும் செயலும் நன்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட வரியானது சொந்தச் செலவு, பொதுச்செலவு போன்றக் காரணங்களுக்குச் செலவிடப்பட்டது. சங்ககால தமிழரிடம் வரி வசூலிப்பதில் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்பட்டன என்பர். அதற்கு மாறாக செயல்படும் அரசு கொடுங்கோன்மை ஆட்சியாக இகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அரசன் என்பவன் மக்களிடம் மிகுதியாக வரி வசூலித்தலைத் தவிர்த்து அன்புமொழிக் கூறி காலமறிந்துப் பெறவேண்டும். அவ்வாறு மக்களிடமிருந்து பெற்றப் பொருளைக் காத்தல் மன்னனின் தலையாயக் கடமையாகக் கருதப்பட்டது. மக்களைத் துன்புறுத்தி பெற்ற வரியானது மயிலினது உச்சிக் கொண்டையை அறுத்து அம்மயிலுக்கே உணவாகக் கொடுப்பதற்கு இணையானது எனக்கூறப்பட்டுள்ளது. இச்செயலை மண்ணில் மக்களினம் நிலைத்திருக்கும் வரை எந்நாளும் போற்றமாட்டார்கள் எனவும் விதந்துரைக்கப்பட்டுள்ளது. இதனையே,

“அடைய வடைந்தாரை அல்லவை செய்து
கொடை வேந்தன் கோல்கொடிய னாகிக் குடிகள்மேல்
கூட்டறப்பக் கொண்டு தலையளிப்பின் அஃதன்றோ
சூட்டறுத்து வாயி லிடல்”    (பழமொழி.247)

என்னும் இப்பாடல் உணர்த்துகின்றது. இவ்வாறு மக்களைத் துன்புறுத்திப் பெற்ற வரியினைக் கொண்டு தன் மக்களுக்குச் செய்யும் நற்செயலும் வீணற்றதாகவே அமையும் என்பர்.

நிலவரியைத்தவிர மற்ற சில வரிகளும் பொருளாகப் பெறப்பட்டன. இறக்குமதி, சுங்கம் ஆகியன வருவாயாகவும் அமைந்திருந்தன. சங்க இலக்கியத்திற்கு உரை வகுத்தவர்கள் யாவரும் நிலவரி என்பது மொத்த மகசூலில் ஆறில் ஒரு பங்கு என்பர். சுங்க வரியானது இறக்குமதி, ஏற்றுமதி மட்டுமல்லாமல் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பாதசாரியாக சென்றாலும் அதற்கும் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆறுகளைக் கடக்கும் ஓடக்காரர்களிடமும் சுங்க வரியானது பெறப்பட்டுள்ளது. – பழமொழி. 2

நிலவரி தவிர ஏனைய வரிகள் யாவும் பொருளாகப் பெறப்பட்டன என்றும், நிலவரிக்கு அடுத்தபடியாக அரசாங்கக் கருவூலத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தருவது சுங்கவரியாகும். அரசர்கள் குடிமக்களிடம் வாங்கும் இறைப்பொருள்களைக் காலமறிந்து வருத்தாது வாங்கவேண்டுமென்றும், அதனை மக்களும் பயன்பெறும் வகையில் சிறிதுசிறிதாக துன்புறுத்தாமல் பெறவேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. – (பழமொழி.245, 246, 247) மக்களைத் துன்புறுத்தி வரி வாங்கும் அரசனுடைய ஆட்சி கொடுங்கோன்மையாகக் கருதப்படும். இவ்வாறான செயலை, பசித்த சேவலுக்கு அதன் கொண்டையை உணவாகக் கொடுப்பதற்குச் சமம் எனக்கூறப்பட்டது. மக்கள் தம் வாழ்வியலின் பருவமறியாது கொடுங்கோல் ஆட்சி செலுத்தும் அரசனின் செயலில் விரக்தியடைந்திருப்பர். இவ்வாறான சூழ்நிலையில் அமைதியற்ற நாட்டிலே அமைதியை வலியுறுத்தி புலவர்களும், அறிஞர்களும் அரசியல் அறங்களை எடுத்துரைத்துள்ளனர். இதுவே, அக்கால சமுதாயப் பின்னணியாக இருந்திருக்க வேண்டும் எனத் அறியமுடிகின்றது.

பார்வை நூல்கள் :
1. இராசமாணிக்கம், இரா., (உ.ஆ) – ‘பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்’ (மூலமும் உரையும்) கழக வெளியீடு, திருநெல்வேலி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். சென்னை. முதற்பதிப்பு – 1947.
2. நச்சினார்க்கினியர்., (உஆ) (எழுத்து, சொல், பொருளதிகாரம்)
3. சேனாவரையார்., (உ.ஆ) உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்,
4. பேராசிரியர்., (உ.ஆ) கணேசையர் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2007, சென்னை13.

cmkm.muthukani@gmail.com

* கட்டுரையாளர் – – பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலம்பட்டி, திருமங்கலம், மதுரை – 625 706. –