தொடர் நாவல்: எத்தனைகோடி இன்பம்! (2)

அத்தியாயம் இரண்டு: இரவு வானம்!

தொடர் நாவல்: எத்தனைகோடி இன்பம்!வ.ந.கிரிதரன்கேசவனும் மாயவனும் பால்கணியிலிருந்தபடி உரையாடிக்கொண்டிருந்தார்கள். இருவருமே ஒருவிதத்தில் ஒரே மாதிரியான மனப்போக்கினைக் கொண்டவர்கள். இரவு வானை, கொட்டிக்கிடக்கும் சுடர்களை இரசித்தபடியே , பியர் அருந்தியபடி அவர்களின் உரையாடலும் தொடர்ந்தது.

மாயவனுக்கு மீண்டும் மனைவியின் கோரிக்கை நினைவுக்கு வந்தது.

“கேசவா, இன்னும் எத்தனை காலம் தான்  உன் நிறைவேறாத காதலுக்காக உன் வாழ்க்கையை வீணாக்கப்போகின்றாய்?”

அதற்குச் சிறிது சிந்தனையிலாழ்ந்த கேசவன் கூறினான்:

“எனக்கு அவள் நிலை தெரிய வேண்டும். அவ்வளவுதான். அவளுக்கு மட்டும் திருமணமாகியிருந்தால் அவளை மனதார வாழ்த்தி விட்டு என் வாழ்க்கையைத் தொடர்வேன். அதுவரையில் என்னால் அடுத்த நகர்வை எடுக்கவே முடியாது”

“ஒருவேளை அவளைப்பற்றிய தகவல்களை அறிய பல ஆண்டுகள் பிடித்தால் என்ன செய்யப்போகின்றாய்? அதுவரை உன் வாழ்க்கையை வீணாக்கப்போகின்றாயா?”

“மாயவன் அண்ணே, எத்தனை ஆண்டுகளென்றாலும் பரவாயில்லை. அவளது நிலை அறியும் வரையில் காத்து நிற்பேன். அந்த என் முடிவில் எந்தவித மாற்றமுமில்லை. அவ்வளவு தூரத்துக்கு அவள் என் நெஞ்சில் பதிந்து விட்டாள். உனக்கு ஒன்று தெரியுமா?”

“என்ன..?”

“அவளைக் கடைசியாகக் கண்ட நாளிலிருந்து இன்றுவரையில் ஒவ்வொரு நாளும் முழித்திருக்கும் நேரமெல்லாம் அவளை நினைத்துக்கொண்டுதானிருக்கிறன். அவளது நினைவு தோன்றுவதை என்னாலை தடுக்கவே முடியவில்லை. அவ்வளவுக்கு நெஞ்சின் ஆழத்தே பதிந்து கிடக்கின்றாள். அவளது நிலையை அறிய வேண்டும். அதற்குப்பின்தான் எல்லாமே..”

கேசவனின் வைராக்கியம் மாயவனுக்கு நன்கு புரிந்தது. இவனது மனத்தை மாற்ற வேண்டுமென்றால் முதலில் அவனது அந்தக் காதலுக்குரியவள் பற்றிய தகவல்களை அறிய வேண்டும். அதற்குப்பின்னரே அவனது மனம் மாறும். மாயவனின் சிந்தனை பல்திசைகளிலும் பயணித்தது. திடீரென அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

” ஏன் கேசவா, எனக்கொரு  யோசனை தோன்றுது. என்னவென்றால்..”

‘என்ன மாயவன் அண்ணே! சொல்லுங்கோ”

“நீ உன்னுடைய அந்தப்பெண்ணின் பெயர் விபரங்களைத் தா. நான் விசாரித்துப்பார்க்கிறன். நீயும் விசாரித்துப்பார். நான் ஃபேஸ்புக்கிலையும் போட்டுப்பார்க்கிறன். எனக்கென்றால் எப்படியாவது அவளைப்பற்றிய விபரங்களைக் கெதியிலை பெறலாமென்றுதான் படுகுது.”

கேசவனுக்கும் அது சரியென்றே தோன்றியது. தான் ஏன் இதை இவ்வளவு காலமும் முயற்சி செய்து பார்க்கவில்லையென்றொரு சிந்தனையும் அவனுள்ளத்தில் ஓடி மறைந்தது. அதற்கும் அததற்குரிய காலம் வரவேண்டும் என்றொரு சிந்தனையும் ஓடி மறைந்தது.

“அண்ணே, அவளுடைய முழுப்பெயர் யமுனா ராஜதுரை. தகப்பன் ராஜதுரை மாஸ்ட்டர் என்றுதான் அறியப்பட்டவர்”

மாயவனுக்கு நிச்சயம் யமுனா பற்றிய விபரங்களை விரைவில் அறிந்து விடலாமென்று தோன்றியது.

“ஏன் கேசவா, உன்னிடம அவளுடைய புகைப்படமேதாவது இருக்குதா?”

“ஒன்றுமேயில்லை மாயவன் அண்ணே!”

அதன் பிறகு பல்வேறு விடயங்களைப்பற்றி அவர்களது உரையாடல் தொடர்ந்தது.

அன்றிரவு கேசவன் விடைபெற்றுச் சென்ற பின்னரும் மாயவனுக்குத் தூக்கம் வந்த பாடாகவில்லை. பால்கணியிலேயே அமர்ந்திருந்தபடி வானத்துச் சுடர்களைப்பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். எப்படியாவது யமுனாவைப்பற்றி அறிந்து கொள்ளவேண்டுமென்று மனத்தில் தீர்மானித்துக்கொண்டான். இதற்கு முதற்படியாக இணையத்தில் அவளைப்பற்றித் தேடிப்பார்க்க வேண்டும்  என்றும் முடிவு செய்தான். முகநூலில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருப்பதால் நிச்சயம் முகநூல் உதவி செய்யலாமென்று எண்ணிக்கொண்டான். அதன்பின்னர் சிந்தனையைக் கேசவனிலிருந்து திருப்பி இரவு வானத்துச் சுடர்களின் மீது செலுத்தினான்.

இருண்டிருந்த நகரத்து இரவு வானம் நட்சத்திரங்களால் நிறைந்திருந்தது. நகரத்து இரவு வானென்றதால் ஊரிலுள்ள இரவு வானைப்போல் நிறைந்திருக்காவிட்டாலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சுடர்கள் சுடர்ந்து கொண்டிருந்தன. எத்தனை தடவைகள் பார்த்தாலும் அவனுக்கு இரவு வான் அலுப்பதில்லை. நெஞ்சில் களிப்பினை, இருப்பு பற்றிய தேடல் மிகுந்த சிந்தனைகளை அது ஏற்படுத்தி விடுவது வழக்கம். ஒளியாண்டுத்தொலைவுகள் அவனை எப்பொழுதும் பிரமிக்க வைத்தன. எவ்வளவு அற்புதமாக விரிந்து கிடக்கின்றது இந்த இயற்கை

“பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லையில்லா வெளி வானிலே
நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் ” செய்தவர் யார்?

“விண்டுரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான் வெளியினை” அமைத்தவர் யார்?

தன்னைப்போல் தொலைவிலொரு சுடரைச் சுற்றிவரும் கோளொன்றில் படுத்திருந்தபடி இன்னுமொரு உயிரும் சிந்தனையில் ஆழ்ந்து கிடக்குமோ? அல்லது தன்னிலும் அதிகமான அல்லது கீழ்மை நிலையிலுள்ள நிலையிலிருந்து அது கிடக்குமோ? பல் பரிமாணங்களில் புதிராக விளங்குமோ? சிந்தனை பல் வழிகளிலும் கிளைவிட்டுச் சிறகடித்தது.

முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்
அனுப்புகின்றேனிச் செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
‘காலத்தின் மாய’ வேடங்கள்.
ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன்.
எங்கேனுமோரிடத்தில்
நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
ஆம்!
வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
காடுகளில் , குகைகளில் அல்லது
கூதற்குளிர்படர்வரைகளில்
உன்
காலத்தின் முதற்படியில்…
அல்லது
விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக் கிடக்கும் மமதையிலே..
சிலவேளை
போர்களினாலுந்தன் பூதலந்தனைப்
பொசுக்கிச் சிதைத்தபடி
அறியாமையில்…
ஒருவேளை
அதியுயர் மனத்தன்மை பெற்றதொரு
அற்புதவுயிராய்…
ஆயினும் உன்னிடம் நான்
அறிய விரும்புவது ஒன்றினையே..
‘புரியாத புதிர்தனைப் புரிந்தவனாய்
நீயிருப்பின்
பகர்ந்திடு.
காலத்தை நீ வென்றனையோ?
அவ்வாறெனின்
அதையெனக்குப் பகர்ந்திடு.
பின் நீயே
நம்மவரின் கடவுள்.
காலத்தை கடந்தவர் தேவர், கடவுளென்பர்
நம்மவர்.
இன்னுமொன்று கேட்பேன்.
இயலுமென்றா லியம்பிடு.
இவ்வாழ்வில் அர்த்தமுண்டோ?
இதனை நீ அறிந்தனையோ?
உண்டெனில் அர்த்தம் தானென்ன?
சிலர்
அர்த்தமற்ற வாழ்வென்பர்.
யான்
அவ்வாறல்லன்.
அர்த்தம்தனை நம்புபவன். ஆயினும்
அதனையிதுவரை அறிந்திலேன்.
அதனை நீ அறிந்திடின்
அதனையிங்கு விளக்கிடு.
அது போதும்!
அது போதும்

[தொடரும்]

ngiri2704@rogers.com
23.10.2017 / 26.10.17

 

அத்தியாயம் ஒன்று: முதற் காதல் ..வாசிக்க