ஆய்வு: நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலைப்பாடு

முன்னுரை.
ஆ. இராஜ்குமார்,தமிழ் இலக்கிய மரபுகளுக்கெல்லாம் தனி சிறப்பாக இருப்பது அக மரபே ஆகும். அகத்திணையில் தோழிப்பாடல்களே அதிகம். சங்க காலம் கடந்து பிற்காலத்தில் தோன்றிய நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலையை அறிவதே இக் கட்டுரையாகும்.

தோழி
தோழி என்ற சொல்லை தோழூூ இ எனப் பிரித்தால் ‘இ’ என்பது பெண்பால் விகுதியைக் குறிக்கின்றது. தோளோடு தோள் நின்று உழைத்தல், தோள் கொடுத்தல் என்பன உதவுதல் என்ற பொருளில் இருந்தே தோழி என்ற சொல்லானது தோன்றியது. இகுனை, பாங்கி, சிலதி, இணங்கி, துணைவி, சேடி, சகி போன்ற சிறப்பு பெயர்களால் தோழியினை அழைக்கின்றனர்.

தோழி இல்லையேல் காதல் இல்லை, அகப்பொருளும் இல்லை என்று சுட்டும் அளவிற்கு சிறப்பைப் பெற்றுள்ளாள். தலைவியும் தோழியும் ஒட்டிப்பிறந்த கவைமகவு போன்று ஒற்றுமையுள்ளவர்கள். களவு, கற்பு என்னும் இருகோள்களிலும் தோழி இணைந்தே காணப்படுவாள். சங்க இலக்கியங்களில் தலைவி பெறும் முக்கியத்துவத்தில் தோழி பங்கு மிகப் பெரியதாக உள்ளது. தலைவி வருந்தினால் அவளைத் தேற்றுவது அவளுக்காக நற்றாயிடமும் செவிலியிடமும் அதிகப்படியாக தலைவனிடமும் வருந்துவது தோழியே. தோழியின் பண்புகளுள் சிறந்ததாகப் போற்றப்படுவது அறத்தோடு நிற்றல். தமர் வரைவு காப்பு மிகும் போது, காதல் மிகுதியாலும் நொது மலர் வரைவின் போதும், தமர் வரைவு மறுத்தபோதும், செவிலி குறிபார்க்கும் இடத்திலும், வெறியாட்டிடத்திலும், பிறர் வரை வந்த வழியிலும், அவரது வரைவு மறுத்த வழியிலும் தலைவனுக்காக துணை நிற்பவள் தோழியே.

இவ்வாறு தலைவிக்கும், தலைவனுக்கும் அறத்தோடும், தன் மனநிலையில் இருந்து வேறுபடாமல் தோழி துணை நிற்கிறாள். சில இடங்களில் தலைவனை ஆற்றுப்படுத்தும் வகையிலும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் கண்டித்தும் தலைவனை உரிய நேரத்தில் தலைவியை மணந்துக் கொள்ளுமாறும் தூண்டலாகவும் தோழி விளங்குகிறாள். இது சங்க மரபு இது நந்திக்கலம்பகத்திலும் தொடர்கிறது.

நந்திக்கலம்பகம்

தமிழ்மொழியில் தோன்றிய முதல்கலம்பக நூல் நந்திக்கலம்பகம். ஆரசர் மீது பாடப்பட்ட கலம்பக நூலுக்கு நந்தி கலம்பகம் ஒன்றே சான்றாக உள்ளது. இந்நூலை இயற்றிய புலவரின் வரலாறு கிடைக்கவில்லை. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடை தலைவன் பல்லவக்குலத்தை சார்ந்த மன்னன் நந்திவர்மன் ஆவான். இவனை முன்றாம் நந்தி வர்மன் என்றும் வரலாறுகள் கூறுகின்றன. காலம்
நந்திவர்மன் அரசாண்ட காலம் கி.பி 847 முதல் 872 வரை என்பார் மயிலை சீனி வேங்கடசாமி . நந்திவர்மனின் தந்தை பெயர் தந்திவர்மன் என்றும் தாயார் அக்களநிம்மதி என்றும் வரலாறுகள் கூறுகின்றன.

தோழி – தலைவன்
தலைவின் நிலைப்பாட்டை தலைவனுக்கும், தலைவனின் நிலைப்பாட்டை தலைவிக்கும் தெரிவிக்கும் செயலை செய்பவள் தோழி ஆவாள்.

சந்திரனின் கதிரானது என்றும் குளிர்ச்சியை தருவதாகும் ஆனால் நந்திவர்மனின் மேல் காதல் கொண்ட பெண் ஒருத்திக்கு அது தீயாக (காதல் தீ) வருத்த கண்ணுறங்காத தலைவி சோர்வுற்று இருப்பதை கண்டு தோழி தலைவனிடம் விரைந்து தலைவியை வரைந்து கொள் என்கிறாள். இதனை
…………………………………………

நிலவின்கதிர் நீள்எரி யாய்விரியத்
துஞ்சா நயனத்தொடு சேரும் இவட்கு
அருளாதொழி கின்றது தொண்டைகொலோ
(நந்தி….11)

என்ற நந்திகலம்பக பாடல் மூலம் அறியமுடிகிறது. தலைவன் நீன்ட நாட்களாக தலைவியை பார்க்க வரவில்லை தலைவி மாலை பொழுதை கண்டு மயங்கி ஒளி மிகுந்த தம் கண்களில் மாலைமாலையாகக் கண்ணிர் வழிய அழுவதைக் கண்டால் அவளுக்கு என்னால் என்ன ஆறுதல் கூறயியலும் விரைந்து தலைவியை திருமணம் செய்து கொள் என்று தோழி வேண்டுகிறாள். இதை

கோவே மலை மலையாகக் கோவே வண்டுநீலவெண்கண்
கோவே மலை மலையாகக் கொண்டால் கூறும் ஆறறியேன்
கோவே மலை நீண்முடியார் கொற்றநந்தி கச்சியுளார்
கோவே மலை யுள்ளும் எங்கள் கோவே கொம்பர் ஆனாரே. ( நந்தி 50)

என்ற பாடல் மூலம் தோழி தலைவிக்காக தலைவனிடம் வேண்டுவதையும் தலைவின் நிலையை தலைவனுக்கு கூறும் நிலையை காணமுடிகிறது. நந்தி கலம்பக பாடல்களான 54,57,67,79,83 போன்றவைகள் தலைவனை வரைவுக்க வேண்டும்படியாக அமைகிறது. இதேப்போல் சங்கயிலக்கியத்தில். தோழி எம்தாய் எம் மீது மிகுந்த அன்புடையவள், எமது தந்தையும் நிலத்தில் நடந்தால் எம் கால்கள் சிவந்து விடும் என்று கருதி எங்கும் செல்ல அனுமதிப்பதில்லை. நான் என் பெற்றோர் மீது கொண்ட அன்பும், என் தலைவன் மீது கொண்ட அன்பும் என இருதலையை கொண்ட ஒரு பறவை இருப்பது போல வாழ்கிறேன். குறிஞ்சித் திணையில் இரவில் வேங்கை மலரைக் கண்ட யானை புலி எனக் கருதி அச்சத்தில் அருகில் இருந்த மூங்கிலை ஒடித்துக் காட்டின் உள்ளே செல்லும், இந்த இரவு நேரத்தில் நீ தலைவியைச் சந்திக்க வருகிறாய் இதனால் நாங்கள் இரவு முழுவதும் அச்சத்தில் இருக்கிறோம். தலைவனே நீ விரைவில் எங்கள் அச்சத்தையும், துன்பத்தையும் நீக்கும் வகையில் தலைவியை திருமணம் செய்துக் கொள்வாயாக, என தங்களின் மனத்துயரை தோழி தலைவனிடம் முறையிடுகிறாள். இதை

“ யாயே, கண்ணினும் கடுங்கோ தலளே    எந்தையும் நிலன்உறப் பெறாஅன் : சீறடிசிவப்ப    எவன்! இல! குறுமகள் இயங்குதி? என்னும்: யாமே: பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின், இருதலைப் புள்ளின் ஓர்உயிர் அம்மே :”3 ( அக : 12: 1-5)

என்ற இவ்வரிகள் மூலம் அறியமுடிகிறது. மேலே கூறப்பட்ட பாடல்களின் மூலம் தோழியானவள் களவு வாழ்வை நீட்டித்துச் செல்லும் தலைவனை விரைவில் கற்பு வாழ்வை பெற்றிடவும் தலைவியின் மீது தோன்றிய அலரினையும் நீக்கிடவும் தோழி அறிவுறுத்துகிறாள். சங்கயிலக்கியம் கூறுவதைப்போலவே நந்தி கலம்பகமும் வரைவுக்கடாதல் பற்றி கூறுகிறது.

தோழி அறத்தோடு நிற்றல்.
அகப்பொருள் இலக்கியத்துறையில் ஒரு திருப்புமுனையாக அமைவது அறத்தொடு நிற்றல் துறையாகும். சங்க இலக்கியத்தில் களவு வாழ்க்கையைக் கற்பு வாழ்க்கையாக மாற்றும் முதன்மை பெற்றத் துறையாக விளங்குகிறது. இதனை ம.ரா.போ. குருசாமி “களவையும் காந்தர்வத்தையும் இனங்கண்டு அறியக் கூடிய துறை ஒன்று களவியல் பகுதிக்கு உரியதாய் உள்ளது. அந்தத் துறைதான் அறத்தொடு நிற்றல்” என்பார். அறம் என்பது கற்பு அறத்தொடு நிற்றல் என்பது கற்பைத் தன்னிலையினின்றும் தவறாமல் நிலைநிறுத்துதல் என்று பொருள்படும்.

தலைவியை பிரிந்த தலைவன் நீண்ட நாட்களாக தலைவியை பார்க்க வரவில்லை இதனால் தலைவன் நினைப்பிலே தலைவியுள்ளால். தலைவியின் நிலையை அறிந்து மனம் வருந்தி தோழியிடத்தில் வினவும்போது தலைவி நடந்தவை அனைத்தையும் நான் உறுதியாக கூறுவேன் என்று அறத்தோடு நிற்கிறாள். இதை

துயக்குவித் தான்துயில் வாங்குவித் தான்துயில் வித்திவளை
வயக்குவித் தானுள்ளம் வஞ்சனை யால்மலர்க் காவகத்து
முயக்குவித் தான்துகில் வாங்குவித் தான்முனம் நின்றிவளை
முயக்குவித் தான்நந்தி மானோதயன் என்று வட்டிப்பனே!
(நந்தி.. 63)

தலைவன் இவளைச் சோரும்படி செய்தான். தூக்கத்தைப் போகும்படி செய்தான். முன்பொருநாள் தூங்கச்செய்து மயங்குமாறு செய்தான். முலர்ச்சோலையில் இவள் மனதைத் தன்வசமாக்கி வஞ்சனையால் தன்னைக் கூடுமாறு செய்தான். அவன் தந்த ஆடையை வாங்கிக்கொள்ளச் செய்தான். எதிர்நின்று இவளை மயங்கச் செய்தானென நான் உறுதியாகக் கூறுவேன். என்ற நந்திக் கலம்பக பாடல் மூலம் அறியமுடிகிறது.
தலைவி இவ்வளவு நேரம் சோகமாக இருந்து விட்டு திடிரெண மகிழ்ச்சியாக இருக்கிறாளே இதற்கு காரணம் யாது என செவிலித்தாய் தோழியிடம் கேட்க தோழி தேன்நிறைந்த தொண்டை மாலையைப் பார்த்தபின் அதுவே அவளுக்குக் கைவளையையும், உயிரையும் கொடுத்தது. என்கிறாள் இதை

நறைகெழு தொண்டையோன் தொண்டை கண்டபின்
இறைகெழு சங்குயிர் இவளுக்கு ஈந்ததே!
(நந்தி 66)

என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது. இதேப்போல் சங்கயிலக்கியத்தில்

‘இன்உயிர் கழிவது ஆயினும் நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோய்எனச் செப்பாதிமே’
(அக-52)

எனும் அகநானூறு பாடலிலும்

“வலையும் தூண்டிலும் பற்றி பெருங்கால்
திரைஎழு பௌவம் முன்னிய
கொலைவெஞ் சிறாஅர் பாற்பட்டனளே”9
(நற்றிணை 207)

என்ற நற்றிணை பாடலும் செவிலித்தாய்க்கு தோழி அறத்தோடு நிற்றலை அறியமுடிகிறது. நந்தி கலம்பகத்தில் அறத்தோடு நிற்றல் துறையில் இருபாடல்கள் மட்டுமே உள்ளது. அவை இரண்டும் செவிலித்தாய்க்கு தோழி அறத்தோடு நிற்றலை உரைக்கின்றன.

இற்பழித்தல்
தோழி தலைவியின் துன்பங்களை கண்டிரங்கி, தலைவன் குணங்களைப் பழித்துறைப்பது பல சங்க பாடல்களில் காணமுடிகிறது அதுப்போல் நந்திகலம்பகத்தில்

ஆகிடுக மாமை அணிகெடுக மேனி
அலரிடுக ஆரும் அயலோர்
போகிடுக சங்கு புறகிடுக சேரி
பொருபுணரி சங்கு வளைமென்
நாகிடறு கானல் வளமயிலை ஆளி
நயபரனும் எங்கள் அளவே
ஏகொடிய னாகஇவை இயையும் வஞ்சி
இனியுலகில் வாழ்வ துளதோ?

தலைவியின் பசலை உண்டாகுக உடலழகு கெடுக , அயலார் அனைவரும் பழி கூறுக கைவளைகள் கழன்று போகுக, ஊரார் புறங்கூறுக. கரையில் வந்துமோதும் அலையையுடைய கடலில் மென்மையான வென்சங்கை எடுத்தெறியும் உப்பங்கழிகளைக் கொண்ட மயிலாபுரி ஆள்பவனும் நீதியில் உயர்ந்த தலைவன் எங்களுக்கு மட்டும் கொடியோன் ஆகுக. இந்நிலைப்பட்ட கொடிபோன்ற தலைவி இனி இவ்வுலகில் வாழ்ந்திருப்பது உன்டோ?. என்று தலைவி நிலை கண்டு தோழி தலைவனை பழித்துரைக்கிறாள்.

முடிவுரை
சங்கயிலக்கியத்தில் உள்ள தோழியின் நிலைப்பாடே நந்திக் கலம்பகத்திலும் இடம்பெற்றுள்ளது. நந்திவர்மன் இக்கலம்பகத்தை கேட்டே உயிர்விட்டான் என்பதை தொண்டை மண்டல சதகம் உறுதிப்படுத்துகிறது. நந்திக்கலம்பகதின் இலக்கிய நயம் மிக்கதாகஉள்ளது. மேலும்.மேலும் ஆர்வத்தை தூண்டும்விதமாக பாடல்கள் அமைந்துள்ளன. நந்திக்கலம்பக காலத்திலும் சங்கயிலக்கிய மரபு நிலைத்திருந்தது என்பதை தெளிவாக அறியமுடிகிறது. சங்கபாடல்களைப்போலவே தோழியின் நிலை மிக முக்கிமானதாக, மேன்மையானதாகவும் இந்நூலில் காட்டப்பட்டுள்ளது.

துணை நூல்கள்
1) நந்திக்கலம்பகம் NCBH சென்னை. முதல் பதிப்பு டிசம்பர் 2013
2) அகனானூறு தெளிவுரை புலியுர்க் கேசிகன். ஆறாம் பதிப்பு(1997)
3) நற்றிணை தெளிவுரை புலியுர்க் கேசிகன்.

arajkumartamil88@gmail.com

* கட்டுரையாளர் – – ஆ. இராஜ்குமார், ஆய்வியல் நிறைஞர், பெரியார் பல்கலைகழகம் சேலம் 11 –