இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் இன்று புதன் கிழமை காலை மட்டக்களப்பில் காலமானார். கோபு என அழைக்கப்படும் இவர் வீரகேசரியில் 1953 இல் முதலில் ஒப்புநோக்காளராகவே இணைந்தவர். அதன் பின்னர் ஆசிரிய பீடத்தில் ஒரே சமயத்தில் அலுவலக நிருபராகவும் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர். அக்காலப்பகுதியில் அவர் பெற்ற மாதச்சம்பளம் 72 ரூபாதான். 1960 இல் வீரகேசரியில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது அந்த வேலையை இழந்து யாழ்ப்பாணம் சென்று ஈழநாடு பத்திரிகையில் இணைந்தார். கோபு, வீரகேசரி, ஈழநாடு, ஆகியனவற்றில் மாத்திரமின்றி ஈழமுரசு, தினக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், சுடரொளி முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். 1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையடுத்து இந்திய அமைதிப் படை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டது. இந்தியப்படையினரால் சுமார் இரண்டு மாதங்கள் சிறைவைக்கப்பட்டார்.
தனது சிறை அனுபவங்களை ஜூனியர் விகடனில் தொடராக எழுதினார். ஈழமண்ணில் ஒரு இந்தியச்சிறை என்ற தலைப்பில் அவர் எழுதிய குறிப்பிட்ட தொடர் பிரான்ஸில் குகநாதன் வெளியிட்ட பாரிஸ் ஈழநாடு வார இதழிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டது. பின்னர் தனி நூலாக வெளியானது. ஏற்கனவே அவர் இதழ்களில் பதிவுசெய்த ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பாக ‘ அந்த ஒரு உயிர்தானா உயிர்’ என்ற நூலையும், பத்திரிகைப்பணியில் அரை நூற்றாண்டு, முடிவில்லாப்பயணத்தில் முடியாத வரலாறு ஆகிய நூல்களையும் வரவாக்கியுள்ளார். போர்க்காலத்தில் இயக்கங்கள் மற்றும் இலங்கை இந்திய படைகளுக்கு மத்தியில் பத்திரிகையாளர்கள் எத்தகைய இன்னல்களை அனுபவித்திருப்பார்கள்? என்பதை கோபலரத்தினத்தின் குறிப்பிட்ட நூல்கள் ஆழமாகப்பதிவு செய்துள்ளன. இவருடைய நீண்ட கால பத்திரிகைப்பணியை பாராட்டி, விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விருது வழங்கியும் கௌரவித்திருக்கிறார்.
letchumananm@gmail.com