தோழர் வேலனின் ‘தேசிய இயக்கம் துயிலெழல்’ மற்றும் ‘தேசிய இயக்கங்களின் காலம்’ ஆகிய நூல்களை முன் வைத்துச் சிறு குறிப்புகள்…. வ.ந.கிரிதரன் –

தோழர் வேலனின் 'தேசிய்  இயக்கம் துயிலெழல்' மற்றும் 'தேசிய இயக்கங்களின் காலம்' ஆகிய நூல்களை முன் வைத்துச் சிறு குறிப்புகள்.... வ.ந.கிரிதரன் -தோழர் வேலனின் ‘தேசிய  இயக்கம் துயிலெழல்’ மற்றும் ‘தேசிய இயக்கங்களின் காலம்’ ஆகிய நூல்களின் வெளியீடு கடந்த ஞாயிறன்று (3.12.2017) ‘டொராண்டோ’வில் நடைபெற்றபோது நான் ஆற்றிய சிற்றுரையினை ஒரு பதிவுக்காக இங்கு பதிவிடுகின்றேன்.  வ.ந.கிரிதரன் –


தோழர் வேலனை எனக்கு முகநூல் வழியாகத்தான் அறிமுகம். அவரது இயற்பெயர் கூட இதுவரையில் நான் அறிந்ததில்லை. ஆனால் அவரது மார்க்சியப்பார்வை பற்றி அவரது இணைய எழுத்துகளினூடு, நூல்களின் வாயிலாக அறிந்திருக்கின்றேன்.. இன்று இங்கு நான் அவரது இந்நிகழ்வில் வெளியிட்டப்படவுள்ள நூல்கள் இரண்டைப்பற்றிச் என் நோக்கைப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றேன். இந்நூலிலுள்ள கட்டுரைகள் பல அவரது வலைப்பதிவிலுள்ள கட்டுரைகளே. இக்கட்டுரைகளில் அவர் தேசம், தேசியம், ஈழத்தமிழர்களின் தேசியப்போராட்டம், பின் நவீனத்துமும் , மார்க்சியமும், தேசிய விடுதலைப்போராட்டமும் போன்ற பல விடயங்களைப்பற்றிய தனது உறுதியான பார்வையினைப் பகிர்ந்திருக்கின்றார். ஆனால் அவரது உறுதியான் பார்வை தெளிவானதா இல்லையா என்பது பற்றிச் சிறிது பார்ப்போம். அதற்கு முன்னர் இத்தொகுதிக் கட்டுரைகளைப்பொறுத்தவரையில் முக்கியமான குறைபாடுகளாக நான் கருதுவது: இலக்கணப்பிழைகள். இலக்கணப்பிழைகள் என்னும்போது சில பிழைகள் வாசிப்பின் புரிதலைத் தடுப்பதில்லை. உதாரணமாக எழுவாய்க்குரிய பயனிலை சரியாக அமையாது போவதுமோரிலக்கணப்பிழை. ஆனால் அப்பிழைகள் புரிதலைத் தடுப்பதில்லை. மாறாக முடிவற்றுத் தொங்கும் வாக்கிய அமைப்புகள், குழப்பமான சொற்தொடர்கள் ஆகியன வாசகர்களின் புரிதலுக்குச் சவாலாக இருப்பவை. அவ்விதமானவற்றை வாசிப்பின்போது அவதானித்தேன். இந்நூலிலுள்ள கட்டுரைகள் கூறும் விடயங்களில் கையாளப்பட்டுள்ள சொற்பதங்களே சாதாரண வாசகர்களுக்குப் புரியாதவை. இந்நிலையில் இவ்விதமான இலக்கணத்தவறுகள் அவர்கள்தம் புரிதல்களைச் சிரமத்துக்குள்ளாக்குகின்றன. இத்தவறுகள் எதிர்காலப்பதிப்புகளில் களையப்படுதல் அவசியம்.

அடுத்த முக்கிய குறைபாடாக நான் கருதுவது இந்நூல் பொதுவான வாசகர்களுக்காக எழுதப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். மார்க்சியப்புரிதல்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே எழுதப்பட்ட நூல்கள் அல்ல இவை.  இந்நிலையில் இவற்றில் கையாளப்பட்டுள்ள சொற்பதங்களுக்குரிய விளக்கங்கள் நூலின் இறுதியில் இடம் பெற்றிருந்தால் வாசகர்களுக்கு மிகுந்த பயனைத் தந்திருக்கும் எனக்கருதுகின்றேன். உதாரணமாக திருத்தல் வாதம், பாகுபாட்டுச் சிந்தனைகள், தாராளவாதம், தரகு வர்க்கம் போன்ற பல சொற்கள் இந் நூலிலுள்ள கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கின்றன. அவை பற்றிய விளக்கங்கள் சாதாரண வாசகர்கள் பலருக்கு மிகுந்த உதவியாகவிருந்திருக்கும். இதுவும் என் நிலைப்பாடு.

இனி நூல்களுக்குள்ளே செல்வதற்கு முன்னர் ‘தேசிய இயக்கங்களின் காலம்’ நூலின் முன்னுரையாக அவர் எழுதிய சிறு குறிப்பு என் கவனத்தை ஈர்த்தது. அதில் அவர் பின்வருமாறு எழுதியிருப்பார்:

“தேசிய இயக்கங்களின் காலம் (பக்கம் 4) சிறு குறிப்பு: ” அரசியல் கட்டுரைகள் பல வருடங்களாக எழுதி வருகின்ற போதிலும் தேசிய இனங்களின் சமூக ஒழுங்கமைவின் வளர்ச்சியில் தேசியக் கட்டம் பற்றிய கொச்சையான புரிதலே இவ்வளவு காலம் இருந்துள்ளது. இன்று பழைய கட்டுரைகளை மீள வாசிக்கின்றபோது அடிப்படையில் முரண்பாடுகளை காண முடிகின்றது.  ஆனால் அவற்றை அறிவுத்தேடலின் வளர்ச்சிப்போக்கில் வந்தடைந்த கருத்தாகவே கொள்ள முடிகின்றது.மனித வளர்ச்சிப்போக்கினை வெறும் கேள்வி ஞானத்திலும் , வெறும் வாய்ப்பாட்டு வாதத்தின் விளைவாக ஏற்பட்ட தவறாகும். சமூக வளர்ச்சிப்போக்கை இடையறாது சுயமாக கேள்விக்குட்படுத்தி கற்று வந்த விளைவே இதுவாகும்.  இவற்றை வந்தடைய சமூக விஞ்ஞான ரீதியாக சிந்திப்பதன் ஊடாகவே சாத்தியமாகும்”

இக்கூற்று உண்மையில் வரவேற்கத்தக்கது. இதில் அவர் தன் இதுவரை கால  எழுத்துக்களைச் சுருக்கமாக மீளாய்வு செய்கின்றார். அவற்றிலுள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றார். அவை அவரது அறிவுத்தேடலின் பரிணாம வளர்ச்சியின் விளைவுகளே என்றும் , தொடர்தும் சமூக விஞ்ஞானரீதியாக சிந்திம் பலரும் அவற்றிலிருந்து பாடம் படிப்பதற்குப் பதில் தொடர்ந்துக் சுட்டிக்காட்டிக்கொண்டே, குற்றஞ்சாட்டிக்கொண்டேயிருப்பார்கள். இவ்விதமான தவறுகளெல்லாம் அறிவுத்தேடலின் வளர்ச்சிப்போக்கில் வந்தடைந்தவைகளாகவே கண்டு, விமர்சித்து , உள்வாங்கி அடுத்த கட்டத்துக்கு இன்னும் ஆரோக்கியமாக நகர வேண்டும். இதனையும் நாம் மனத்திலிருத்த வேண்டும்.

இனிச்சுருக்கமாக இந்நூல்களிலுள்ள என் கவனத்தை ஈர்த்த மேலும் சில கருத்துகளைப்பற்றிச்சிறிது சிந்தனையினையோட்டுவோம். சிற்றுரை என்பதால் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் நூல்களை வாசித்தபொழுது எனக்கு எழுந்த எண்ணங்களில் முக்கியமான சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ளலாமென்று எண்ணுகின்றேன். இந்நூலின் தலைப்புகள்: ‘தேசிய இயக்கங்களின் காலம்’, ‘தேசிய இயக்கம் துயிலெழல்’. தேசியப் போராட்டங்களைப்பற்றிய நூல்கள். இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தேசியப் போராட்டம் பற்றி, சுய நிர்ணயப்போராட்டம் பற்றி மார்க்சியரீதியிலான தோழர் வேலனின் புரிதல்களில் சிலவற்றைப்பார்ப்போம்.

1.’ பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையின் பெயரால் தேசங்களின் இருப்பை மறுத்துக்கொண்டு ஓர் அடியும் முன்னேற முடியாது. ஏனெனில் இது தேசிய இன இயக்கங்கள் துயிலெழும் காலமாகும்’. [பக்கம் 156] இவ்விதம் முடிகின்றது ‘தேசிய இயக்கம் துயிலெழும் காலம்’ நூலின் இறுதிக்கட்டுரை. இந்நூலின் கட்டுரைகள் அனைத்திலுமிருந்து தோழர் வேலன் வந்தடையும் இறுதி முடிவாக நாம் இதனைக் கருதலாம். காரணம்:  அவ்வளவு முக்கியத்துவம் இவ்விறுதி அடிக்கு  அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம். நூலின் தலைப்பே அதுதான். பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையை விடத் தேசிய இனங்களின் தேசங்களின் இருப்பு அதாவது இன்னொரு வகையில் கூறப்போனால் தேசிய இனங்களின் போராட்டம் முக்கியமானது. அவ்விதமானதொரு தொனியினையே நான் மேற்படி கூற்றிலிருந்து அறிகின்றேன். உணர்கின்றேன்.

2.  அதே பக்கத்தில் அவர் இவ்வாறும் கூறுவார்: ” தேசியக் கட்டத்தை விளங்காது தமிழ் தேசிய வெறியை தூண்டிவிட்டு லாபம் தேடுவோர், வர்க்க சிந்தனையற்ற தேசிய வாதம் எந்த பலனையும் தராது என் வகுப்பெடுத்துக்கொண்டே இருக்க முடியும்.” [பக்கம் 156] தேசிய வெறியைத் தூண்டி விட்டு இலாபம் தேடுவோர் என்கின்றார். இவர்கள் நிச்சயம் வர்க்கச் சிந்தனையற்றவர்கள். ஆனால் அடுத்து இவர் கூறுவது குழப்பத்தைத்தருகின்றது. ‘வர்க்க சிந்தனையற்ற தேசிய வாதம் எந்த பலனையும் தராது என் வகுப்பெடுத்துக்கொண்டே இருக்க முடியும்’ என்கின்றார். அதன்படி வர்க்கச்சிந்தனையற்ற தேசிய வெறியர் , வர்க்கச்சிந்தனையற்ற தேசிய வாதத்தைப்பேசும் தேசிய வெறியர் ‘வர்க்க சிந்தனையற்ற தேசிய வாதம் எந்த பலனையும் தராது’ என்று வகுப்பெடுத்துக்கொண்டே இருக்க முடியும் என்ற கூறுவதான அர்த்தத்தையல்லவா மேற்படி கூற்று தெரிவிக்கின்றது. இங்கு ஆசிரியர் என்ன கூற வருகின்றார். தானும் குழம்பி வாசகர்களையும் குழப்பி விடுகின்றாரா? இதனை ஆசிரியரே விளக்க வேண்டும். இவை போன்ற வாக்கிய அமைப்புகள் பலவற்றை அவ்வப்போது மேற்படி நூல்களில் அவதானித்தேன். இதற்கு முறையான மீள் வாசிப்பும், புரூவி ரீடிங்கும் மிகவும் அவசியம்.

3. மேலும் இதே பக்கத்தில் அவர் குறிப்பிடும் ஒத்தோடி அரசியலுக்கான வரைவிலக்கண்மும் கவனிக்கத்தக்கது.  அதில் அவர் கூறுவார்: ‘ஒவ்வொரு நாட்டிலுமுள்ள புரட்சியாளர்கள் தங்கள் சொந்தத் தேசத்தில் உள்ள ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகப்போராட வேண்டும். சொந்தத் தேசத்தின், நாட்டின் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடாது விட்டு தம் சக்திக்கு ஏற்ப இயங்கும் சக்திகளை மொத்தமாக இயங்க விடாது செய்யும் சிந்தனை வடிவம் என்பது ஆளும் வர்க்கத்திற்கான ஒத்தோடி அரசியலாகும்.” [பக்கம் 156] இவ்விதம் ஒத்தோடிகள் என்னும் பதத்தை எளிமைப்படுத்துவது தவறான விளைவுகளையும், அர்த்தங்களையும் ஏற்படுத்தும்.  மொத்தமாக இயங்க விடாது செய்யும் சிந்தனை வடிவம் என்று இவர் எதனைக்குறிப்பிடுகின்ரார்? படை பலத்துடன் கூடிய அரசு கூட போராட்டங்களை மொத்தமாக இயங்க விடாது செய்வதில்லை. நாட்டின் சட்ட திட்டங்களுக்கமைய நடைபெறும் போராட்டங்கள் நடக்கவே செய்கின்றன. ஆனால் இருக்கும் சட்டங்களுக்கெதிராக நடைபெறும் பட்சத்தில், அவ்வகையான சட்டங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றைப்பாவித்து அவ்வகையான அரசுகள் போராட்டங்களை நசுக்க முற்படுகின்றன. ஆனால் அவ்வாறான நடவடிக்கைகளால் கூட மொத்தமாக இயங்க விடாது செய்ய முடியாது. இந்நிலையில் ஒத்தோடிகளின் சிந்தனை வடிவம் எவ்விதம் அதனை ஆற்றுகின்றது. ஆசிரியர் இதனைச் சிறிது விளக்கவேண்டும். மேலும் ஒடுக்குமுறை அரசுடன் இணைந்து ஆயுதரீதியில் இயங்கும் அமைப்புகளை ஒத்தோடிகள் என்று கூறலாம். போராட்டம் பற்றிய மாற்றக்கருத்துகளைக் கொண்டவர்களை ஒத்தோடிகள் என்று கூற முடியாது. உதாரணமாக வர்க்கப்போராட்டத்தினூடான தேசிய விடுதலையினை வேண்டும் அமைப்பானது வர்க்கப்போராட்டமற்ற தேசிய விடுதலையினை முன் நிறுத்தும் அமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானதாகும். அதற்காகப் பின்னது கூற முடியாது முன்னதன் சிந்தனை வடிவம் அரசுக்கு உதவுகின்றது. அதனால் அவ்வமைப்பினர் அரசின் ஒத்தோடிகள் என்று. இவ்விதம் மிகவும் இலகுவாக ஒத்தோடிகள், துரோகிகள் என்னும் பதங்கள் பாவிக்கப்படுவதைத்தவிர்ப்பது நல்லது. பதிலாக ஆரோக்கியமான தர்க்கரீதியில் தம் அரசியற் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வழிகளைத் தவர்க்க முனையாமல் இயங்குவது ஆரோக்கியமானது.

தோழர் வேலனின் 'தேசிய இயக்கம் துயிலெழல்' மற்றும் 'தேசிய இயக்கங்களின் காலம்' ஆகிய நூல்களை முன் வைத்துச் சிறு குறிப்புகள்.... வ.ந.கிரிதரன் -

நிகழ்வில் இடமிருந்து வலமாக: எழுத்தாளர் மெலிஞ்சி முத்தன் (மறைந்திருப்பவர்), தோழர் ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ட்டர்) , எழுத்தாளர் வ.ந.கிரிதரன் & தோழர் யோகா வளவன் –

இந்நூலின் முக்கிய உள்ளடக்கமாக ஆசிரியர் தான் அறிந்த மார்க்சிய , லெனிசின , மாவோயிசக் கோட்பாடுகளை விபரிப்பதையே குறிப்பிடலாம். அவ்வப்போது அவர் அவற்றின் அடிப்படையிலான தனது கருத்துகளையும் முன் வைக்கின்றார். தேசிய விடுதலைப்போராட்டங்கள் பற்றிய,  வர்க்கப்போராட்டம், தேசிய விடுதலைப்போராட்டம் மற்றும் பின் நவீனத்துவ நுண்ணரசியல் பற்றிய அவரது கருத்துகள் பல முறையான தர்க்கங்களுக்குரியவை.  நூலில் பல இடங்களில் அவர் பாரம்பரிய இடதுசாரிகள் என்று பல தடவைகள் குறிப்பிட்டு அவர்களை ‘லெனின் முன் வைக்கின்ற வர்க்க வளர்ச்சிப்போக்கில்  தேசிய இயக்கம் எவ்வாறு தோன்றுகின்றது  என்பதை விளங்கிக்கொள்ளாத பாரம்பரிய இடதுசாரிகள்’ என்றும் குறிப்பிடுகின்றார். [பக்கம் 28; ‘தேசிய இயக்கங்களின் காலம்’] . இவர்களைப்போலவே ஜே.வி.பி.யும் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றார். இவ்விதம் இவர் குறிப்பிடும் பாரம்பரிய இடதுசாரிகள் யார்? தமிழர்களா? சிங்களவர்களா? வட இலங்கையரா? தென்னிலங்கையரா? இவ்விதமான பொதுவான கூற்று இவர் கூற வரும் விடயங்களைப்பற்றிக் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. ஏனென்றால் இலங்கையில் மார்க்சியத்தை நன்கு புரிந்த , அறிந்த மார்க்சிய அறிஞர்கள், அரசியல்வாதிகள் பல்லினங்களிலும் இருக்கின்றார்கள். இருந்திருக்கின்றார்கள். தோழர் வேலன் இவ்வகையான பாரம்பரிய இடதுசாரிகளைப்பற்றிய தனது புரிதலில் மேலும் ‘தேசிய இனப்போராட்டங்கள் பாட்டாளி வர்க்கத்தைப் பிரிக்கின்றது என்று பேரினவாத, பாரம்பரிய  இடதுசாரிகளிடையே  உள்ள மனப்பாட்டுவாதமாகும்.” [பக்கம் 28’ ‘தேசிய இயக்கங்களின் காலம்’]  என்றும் கூறுகின்றார். அத்துடன் தேசியப்போராட்டம் வர்க்கப்போராட்டமே என்றும் தோழர் வேலன் ஆணித்தரமாகக் கருதுகின்றார். அதனைத்தான் அவரது ‘ தேசம் – தேசிய உரிமை என்பதைத் துடக்காகப் பார்ப்பது மாத்திரம் அல்ல, அதனை வர்க்கப்போராட்டமே என்பதை மறுக்கும் அணுகுமுறை தொடர்கின்றது.’ என்னும் கூற்று [பக்கம் 29; ‘தேசிய இயக்கங்களின் காலம்’ ]

வர்க்கப்போராட்டமென்பது மக்களைத் தொழிலாள வர்க்கங்களாக அணிதிரட்டி நடத்தப்படும் போராட்டம். சகல இன மக்களையும்  தொழிலாள வர்க்கரீதியில் அணி திரட்டி நடைமுறையிலிருக்கும் சுரண்டல் சமுதாய அமைப்பினை அடியோடி மாற்றி, அதனிடத்தில் சிறுபான்மை வர்க்கமான முதலாளி வர்க்கத்தின் கையிலுள்ள ஆட்சியினை நீக்கி  பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை இடைக்காலத்தீர்வாக வைப்பதற்காக நடத்தப்படும் போராட்டம். இது நான் புரிந்து கொண்டது. தேசியப் போராட்டமென்பது தேசிய இனமொன்று அது தன் தேசம் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளுக்கெதிராக  நடத்தும் போராட்டம். தேசியம் என்பதும் நிலவும் சமூக, அரசியற் சூழல்களுக்கேற்ப மாறுபடும் தன்மை மிக்கது. உதாரணமாக  சுதேசி, விதேசியினருக்கான போராட்டக்காலத்தில் பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய தேசமொன்றின் போராட்டமானது அத்தேசத்தினை மையமாக வைத்து நடத்தப்படும் காலகட்டத்தில் இலங்கையர் , இந்தியர் என்னும் தேசியங்களை முன் வைத்துப் போராட்டங்கள் நடத்தப்படலாம். இவ்விதமான தேசியப் போராட்டங்களை எவ்விதம் வர்க்கப்போராட்டம் என்றழைப்பது?

இந்நூலிலுள்ள கட்டுரைகளின்படி தோழர் வேலன் பின்நவீனத்துவ அரசியல் வெறுத்தொதுக்குகின்றார். காரணம் அது பெண்ணியம், தலித் மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி தேசியப் போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளி விடுகின்றது. இவ்விதமானதொரு தொனியினையே நூலிலுள்ள கட்டுரைகளை வாசித்தபோது உணர்ந்தேன். முதலில் மார்க்சியம் என்பது ஒரு தத்துவம். பின் நவீனத்துவம் என்பது ஒரு போக்கு. அதற்கென்று ஒரு தனியான தத்துவம் மார்க்சியல் போல் இல்லை.

தோழர் வேலன் சாதிப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியது அவசியமென்பதை ஒத்துக்கொள்கின்றார். ஆனால்  அதனைத் தேசிய இனப்போராட்டத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் முன்னுக்குக் கொண்டு வரக்கூடாது என்பது அவரது நிலைப்பாடு. அதனை தேசிய இனத்திலுள்ள அக முரண்பாடுகளிலொன்றாக அவர் கருதுகின்றார். தலித் பிரச்சினைகள், பெண்கள் பிரச்சினைகள் எல்லாமே இவ்வகையான அக முரண்பாடுகள். இவை வெவ்வேறு தளத்தில் தீர்க்கப்பட வேண்டியவையாகும். [பக்கம் 78; சாதிய வாதம் கட்டுரை; தேசிய இயக்கம் துயிலெழும் காலம்.] அவர் கூறும் பின்வரும் கூற்றுகள் அதனையே புலப்படுத்துகின்றன:

1. ‘தமிழ் தேசத்தின் போராட்டம் மக்களை கையாண்ட முறையில் ஏற்பட்ட தவறுகளை முன்னிறுத்தி அந்தச் சமூகத்தைப் பிரிப்பதன் மூலமாகத் தமிழ் தேசத்தில் பிளவை ஏற்படுத்தும் ஒடுக்குமுறையாளரின் திட்டத்துக்கு பலியாகி விட முடியாது.” [பக்கம் 83; தேசிய இயக்கம் துயிலெழல் – சாதியவாதம் கட்டுரை] அத்துடன்’ இந்தச் சக்திகள் தேசத்தின் சிதைவை விரும்புகின்றது என்பது வர்க்கப்போராட்டத்தின் வளர்ச்சிப்போக்கை புரிந்து கொள்ளாத  எதிர்ப்புரட்சிகர சிந்தனையாகும்’
[பக்கம் 84].

2. ‘மொழி, நிலம், பண்பாடு, பொருளாதார வாழ்விற்கு அப்பால் உள்ளவற்றை தேசியத்திற்குள் கொண்டு வர முடியாது. இங்குதான் தலித்தியத்தினை தேசியத்துடன் ஒப்பிடுவது அடிக்கட்டுமானத்தினை மறுப்பதன் விளைவாகும்” [பக்கம் 84].

அத்துடன் இவர் தீண்டாமைப்போராட்டங்களை ஆதரிக்கின்றார். அவ்வகையான போராட்டங்களின் வெற்றி ஈழப்போராட்டத்தினை நடத்தும் அளவுக்கு வெற்றியைத் தந்தது என்கின்றார். ஆனால் தலித்தியம் என்னும் கோட்பாட்டினை இவர் எதிர்க்கின்றார்.  அது ஒடுக்கப்படும் மக்களின் உயர் வர்க்கத்தினருக்குச் சார்பானதாகும் என்கின்றார். சாதியினை அடிக்கட்டுமானமாகப் பார்க்கும் கருத்துமுதல்வாதம் என்கின்றார். இவ்விதமாகத் தோழர் வேலனின் சிந்தனையோடுகின்றது. [பக்கம் 84]

இவற்றைப்பற்றி விரிவாக, எளிமையாக, தர்க்கரீதியாக வாசகர்களுக்கு விளங்கப்படுத்தாமல் மாறி மாறிச் சொற்களை வைத்து விளையாடும் எழுத்து நடை வாசிப்பவருக்கு இவர் என்ன கூற வருகின்றார் என்பதையிட்டு ஒரு வித தெளிவற்ற தன்மையினையும் , குழப்பத்தையும் தருகின்றது. இவர் யார் மார்க்சியவாதியா? மார்க்சியத்தை வைத்துச் சொற்சிலம்பமாடும் வெறும் குழப்பவாதியா என்னுமொரு கேள்வியினையும் வாசகர் மத்தியில் எழுப்புகின்றது. எனக்கும் இவர் என்ன கூறுகின்றார்? என்ன கூற வருகின்றார் என்பதை அறிவதற்குப் பெரிதும் சிரமமாகவிருந்தது. எங்களைப்போன்ற அதிகம் வாசிப்பவர்களுக்கே இவரது எழுத்து நடை குழப்பத்தைத் தருவதாகவிருந்தால் , சாதாரண வாசகர்களுக்கு எவ்விதமிருக்கும். என்னைப்பொறுத்த வரையில் நான் இவரது நல்ல எண்ணத்தைச் சந்தேகிக்கவில்லை. ஆனால் கூற வந்த விடயத்தை ஒழுங்குபடுத்தி, முறையான அதே சமயம் தெளிவானதொரு தர்க்கமாக இவர் வழங்குவது மிகவும் அவசியம். அறிந்தவற்றை அப்படியே வாந்தியெடுக்க வேண்டுமென்ற தேவையில்லை. அவற்றைப்புரிந்துகொண்ட அடிப்படையில் தன் கருத்துகளைத் தெளிவாக முன் வைக்கும் எழுத்து நடை மிகவும் அவசியம். அது இந்நூல்களில் இல்லாதது மிகப்பெரிய குறைபாடாக நான் கருதுகின்றேன்.

தோழர் வேலனின் 'தேசிய்  இயக்கம் துயிலெழல்' மற்றூம் 'தேசிய இயக்கங்களின் காலம்' ஆகிய நூல்களின் வெளியீடு கடந்த ஞாயிறன்று (3.12.2017) 'டொராண்டோ'வில் நடைபெற்றபோது

நிகழ்வில் இடமிருந்து வலமாக: தோழர் மார்க்கு, எழுத்தாளர் மெலிஞ்சி முத்தன் (மறைந்திருப்பவர்), தோழர் ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ட்டர்) , எழுத்தாளர் வ.ந.கிரிதரன் & தோழர் யோகா வளவன் –

இந்நூல்களில் தோழர் வேலன் முன் வைத்திருக்கும் தேசங்களின் சுயநிர்ணக்கோட்பாடுகள் பற்றிய கருத்துகளும் அவரையொரு தேசியவாதியாக நின்று மார்க்சியத்தைப்பார்க்குமொருவராகவே என்னால் இனங்காண முடிகின்றது. இத்தருணத்தில் இமயவரம்பனின் ‘தேசியம் அன்றும் இன்றும்’ என்னும் நூலில் ‘மார்க்சியமும் தேசியமும்’ கட்டுரையில் வரும் சில வரிகளையும் குறிப்பிட விரும்புகின்றேன்:

“மார்க்சியம் தேசங்களதும் தேசிய இனங்களதும் சுய நிர்ணயம் பற்றிய நிலைபபட்டைத் தேசியவாதத்தை வலியுறுத்தும் நோக்கில் மேற்கொள்ளவில்லை. தேசியவாதம் ஈற்றில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பிளவுபடுத்தும் ஒரு கருவியாகப் பயன்படுவதை அது உணருகின்றது.  தேசியத்தின் பெயராலேயே  தேசங்களும் , தேசிய இனங்களும் ஒடுக்கப்படுகின்றன.  மார்க்சியவாதிகள்  பிரதானமாக எதிர்ப்பது இந்த ஒடுக்குமுறைதலையே.  ஒரு தேசமோ தேசிய இனமோ தனது ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகக் கிளர்வதை அது ஆதரிக்கின்றது.  மற்றப்படி தேசிய இனங்களும் தேசங்களும் பிரிந்தும் பிளவுபட்டும் இருக்க வேண்டுமென்பது அவர்களது நோக்கமல்ல. குறுகிய தேசியவாதத்தின் நிலைப்பாடு மார்க்சியத்திற்கு உடன்பாடானதல்ல. ஏனெனில் மார்க்சியவாதிகள் தேசம், மொழி, இனம், மதம், சாதி, பிரதேசம் போன்ற வேறுபாடுகள் மக்களைப் பிளவுபடுத்துவதை விரும்புவதில்லை. ஒவ்வொரு இனத்து மக்களும் தமது தனித்துவத்தைப் பேணுவதை அனுமதிப்பதன் மூலமே பல்வேறு இனத்து மக்களும் ஒருமைப்பட முடியும் என்பது மார்க்சிய நிலைப்பாடு.  இவ்வாறு அவர்களது தனித்துவத்தையும், உரிமைகளையும் உறுதிப்படுத்த வல்ல சமுதாய அமைப்புகளை அவர்கள் ஆதரிக்கின்றார்கள். இத்தகைய அமைப்புகள் மக்களது சுய விருப்பின் பேரிலேயே அமையவேண்டும் என்பதாலேயே சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்படுகின்றது.” [பக்கம் 26;  ‘தேசியம் அன்றும் இன்றும் – இமயவரம்பன்’]

இறுதியாக இந்நூல்கள் பற்றிய விமர்சனக்குறிப்பில் விடியல் வலைப்பதிவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைச்சுட்டிக்காட்டுவது அவசியமென்பதால் அவற்றையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்:

“தேசிய இனக்களின் காலம் என்பதை நிரூபிக்க இலங்கையை ஒரு மாதிரியாக எடுத்துள்ள இந்நூல்;
1. சாதிய இனக்குழுமங்களின் உரிமைக்கான போராட்டங்களை முற்றாகவே மறுக்கின்றது.
2. இஸ்லாமியரின் தேசிய இனத் தனித்துவம் எந்த இடத்திலும் வலியுறுத்தப்படவில்லை. எள்ளி நகையாடும் போக்கு இளையோடி நிற்கின்றது.
3. மலையகத் தமிழர்களின் தேசிய இனத் தனித்துவம்  பற்றியும் எதுவுமேயில்லை.
4. வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையேயான பிரதேச வேறுபாட்டை வெறுக்கத்தக்க ஒரு போக்காகவே நோக்குகிறது. யாழ்குடாநாட்டின் சமூக உருவாக்கத்தையும் கிழக்கின் சமூக உருவாக்கத்தையும் தனித்தனியாக எடுத்துக் கொண்டால், சமூக விழுமியங்கள், சமூக நியமங்கள் ஆகியவற்றின் பக்கத்தில் யாழ்குடாநாடு தாழ்ந்தது, கிழக்கு உயர்ந்தது. வடக்கின் பண்பாட்டுக் குறியீடு ஆறுமுகநாவலர், கிழக்கின் குறியீடு விபுலானந்தர். மடுவும் மலயுமாக நிற்கும் இவ்விருவரையும் ஒப்பிட்டால் குடாவிற்கும், கிழக்கிற்கும் இடையேயான வேறுபாடு புரியும். ஆகவே, குடாவின் பண்பாட்டு ஆக்கிரமிப்பில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை கிழக்கிற்கு உண்டு. இதனால், கிழக்கு நடத்தும் போராட்டம் சமூகநீதிக் கண்ணோட்டதில் இருந்து பார்த்தால் முற்போக்கானதே. இதை அர்த்தமற்ற பிரதேசவேறுபாடென்று வகைப்படுத்திக் கொள்ளக்கூடாது.
5.  இதே போன்றதுதான் குடாநாட்டிற்கும் வன்னிக்கும் இடையேயான வேறுபாடுமாகும். பிரதேச வேறுபாடுகள் செயற்கையானவையல்ல. சமூக உருவாக்கத்தில் உள்ள அசமத்துவமான வழர்ச்சியே அதற்கான காரணங்க ளாகும். தேசிய இன உருவாக்க நிகழ்வின் போது இவை தீர்க்கப்பட்டேயாகவேண்டும். ஆனால் அத் தீர்வு சமூகவளர்ச்சிக்குச் சாதகமான முறையில்தான் அமைய வேண்டுமே தவிர பாதகமான முறையிலோ அல்லது அதைத் தடுக்கக்கூடிய முறையிலோ அமையக்கூடாது.
6. சிங்களத் தேசிய இனம் முற்றாகவே புறக்கணிக்கப்படுகிறது. இந்நூலாசிரியர் ஒரு தேசியவாதியாக, ஏன் தேசிய இனவாதியாக ஒரு இருந்திருந்தாலுங்கூட இவ்வித கேள்வி கேட்கமாட்டேன். அவர்களுக்கு இவ்வித கேள்வி புரிகிறதோ இல்லையோ என்பதல்ல பிரச்சனை. அவர்களிடம் அவ்வித கேள்வி கேட்பது தவறென்பதுதான் பிரச்சனை. தேசியவாதம், தேசிய இனவாதம், மார்க்ஸிஸம் ஆகியன கண்ணோட்டம் சார்ந்த பிரச்சனைகளாகும். பட்டறிவு, நூலறவு ஆகிய இரண்டினதும் துணைகொண்டு ஒருவர் தானே தனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் ஒன்றுதான் கண்ணோட்டமாகும். அதையாரும் யார்மீதும் திணிக்க முடியாது. இவ்விதம் திணிக்க முற்படுவது கருத்தியல் வன்முறையாகும். கருத்தியல் வன்முறை ஆயுத வன்முறைக்கு இட்டுசென்ற அவலத்தை கண்டவர்களல்லவா நாம்? தோழர் வேலன், இந்நூலில் தன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் எனப் பெருமையுடன் பல இடங்களில் சொல்லிக்  கொள்வதால்தான் இக்கேள்வி. தேசிய இனங்களின் காலம் பற்றிய மாதிரி ஆய்வில் சிங்களத் தேசிய இனம் உள்ளடக்கப்படாதது ஏன்? அவ்விதமானால் நூலின் தலைப்பை ஆளப்படும் தேசிய இனங்களின் காலம் எனக் குறிப்பிட்டிருக்கலாம்.  ” [https://vidiyalgowri.blogspot.ca/2017/06/blog-post_45.html]

அத்துடன் விடியல் வலைப்பதிவில் பின்வருமாறும் கூறப்பட்டுள்ளது: “இத்தவறுக்கான காரணம் என்ன? சிங்கள தேசிய இனந்தான் பிரதான எதிரியெனக் கருதியதேயாகும். இதுதான் தேசிய வாதிகளின் பொதுவான கருத்தாகும். ஒரு மார்க்ஸிஸ்ட் என்ற முறையில் தோழர் வேலனின் கருத்தும் இதுதானா? சிங்கள் தேசிய இனத்தையும் நான்காம் உலகத்துள் கொணர்வது எவ்விதம் என்பதுதான் ஒரு மார்க்ஸிஸ்டின் குறிக்கோளாக இருக்கவேண்டும்”

இவற்றுடன் நானும் உடன்படுகின்றேன். தோழர் வேலன் மார்க்சியவாதியாக அல்லாமல் தேசியவாதிகளிலொருவராக நின்று மார்க்சியக் கோட்பாடுகளை அணுகுகின்றாரோ என்னும் சந்தேகத்தையே அவரது எழுத்துகள் ஏற்படுத்துகின்றன. அவ்விதமானதொரு முடிவுக்கு வரவே இத்தொகுப்புகளிலுள்ள கட்டுரைகளில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் எனக்குப் புலப்படுகின்றன.

மார்க்சியம், தேசங்களின் தேசிய இனப்போராட்டங்கள், தேசங்களின் சுய நிர்ணயம், தலித்துகளின் உரிமைப்போராட்டம், பெண்களின் விடுதலை, வர்க்கப்போராட்டம் பற்றியெல்லாம் தோழர் வேலனின் கருத்துகள் பலவற்றில் எனக்கு உடன்பாடில்லை என்ற போதும் இவ்விதமானதொரு போக்கு புதிதானதொன்றல்ல. மார்க்சியவாதிகள் அனைவரும் ஒரே மாதிரியான சிந்தனைப்போக்கைக்கொண்டவர்கள் அல்லர். மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களைப்பற்றிய முரண்பட்ட தர்க்கங்கள் இருந்து வந்துள்ளன. தொடர்ந்தும் வரவுள்ளன. இவ்வகையான தர்க்கங்களினூடு ஆரோக்கியமான பாதையினைக் கண்டு பயணிப்பதில்தான் மானுடகுலத்தின் அனைத்துப் பிரிவுகளுக்குமான தீர்வு அல்லது விடுதலை தங்கியுள்ளது. எனவே தொடர்ந்து விவாதிப்போம். அவ்வகையான தொடர்ச்சியான தர்க்கங்களுக்குத் தோழர் வேலனின் இந்நூல்கள் வழி சமைத்துள்ளன. அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தன.

ngiri2704@rogers.com

புகைப்படங்கள்: நன்றி – சிவவதனி பிரபாகரன் முகநூல் & தோழர் வேலனின் ‘யு டியூப்’ காணொளிகள்.