மகாஜனாவின் முத்தமிழ் விழா

மகாஜனாவின் முத்தமிழ் விழா  அண்மையில் 28-10-2017 அன்று மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா ரொறன்ரோ, 2740 லோறன்ஸ் அவென்யுவில் உள்ள கல்லூரி மண்டபத்தில் அரங்கம் நிறைந்த நிகழ்வாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழா ஒருங்கமைப்பாளர் கந்தப்பு சிவதாசனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றி தேசிய கீதம், கல்லூரிக் கீதத்துடன் விழா சரியாக 5:31 க்கு குறித்த நேரத்தில் ஆரம்பமானது. எழில் மதிவண்ணன், கிருஷ்ணகுமார் சியாமளன், சக்திதரன் தர்சனன், தர்சனா சக்திதரன், சோபிகா ஜெயபாலன் ஆகியோர் தேசிய கீதம் இசைத்தனர்.  கல்லூரிக் கீதம் இசைப்பதில் செயற்குழு உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

திரு. ரவி சுப்பிமணியம், திருமதி வனஜா ரவீந்திரன், திரு. க. மணிவண்ணன், திருமதி சுதர்சினி மணிவண்ணன், கவிஞர் சேரன், வைத்திய கலாநிதி சொ. செந்தில்மோகன், வைத்திய கலாநிதி சுபாதினி செந்தில்மோகன், திரு. பாலா முருகேஷ், திருமதி பவானி பாலசுப்பிரமணியம், திரு சிங்கராஜா ஸ்கந்தராஜா, திருமதி கமலா ஸ்கந்தராஜா ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். வரவேற்புரையை உபதலைவர் க. புவனச்சந்திரன் நிகழ்த்தினார். முன்னாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் ஆரம்பித்து வைத்த நேரக்கட்டுப்பாட்டை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதை இவ் விழாவில் அவதானிக்க முடிந்தது.

முதல் நிகழ்ச்சியாக இசைக்கலாபாரதி ஹரணி ஸ்கந்தராஜா வழங்கிய ‘விரலிசை ஜாலம்’ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பரதக்கலாவித்தகர் சியாமா தயாளனின் மாணவிகள் வழங்கிய ‘ஓம் சிவோகம்’ என்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. ஆடலரசி செந்தில்செல்வி சுரேஸ்வரனின் ‘நர்த்தன சங்கமம்’ நடன நிகழ்வைத் தொடர்ந்து மகாஜனன் நாகமுத்து சாந்திநாதன் நெறியாள்கையில் ‘எழுதாத பக்கங்கள்’ என்ற நாடகம் இடம் பெற்றது. தொடர்ந்து கணிதம், பொதுஅறிவு போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து முத்தமிழ் விழாவிற்கும், மகாஜனன் மலருக்கும் ஆதரவு வழங்கியோர் கௌரவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சங்கத் தலைவர் சிங்கராஜா ஸ்கந்தராஜா அவர்களின் உரையும், பிரதம் விருந்தினர் ரவி சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர் கவிஞர் சேரன் ஆகியோரின் உரைகளும் இடம் பெற்றன.

தொடர்ந்து ‘மகாஜனன் மலர் – 2017’ வெளியிடப்பட்டது. மலராசிரியர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் எம்மினத்திற்கு ஆதரவு தந்த கனடா நாட்டின் 150 வது பிறந்தநாளைப் பற்றிச் சிறப்புரையாற்றினார். மேலும் அமரர் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் நினைவாக ரொறன்ரோ மல்வேன் பூங்காவில் மரம் ஒன்று ஏற்கனவே நடப்பட்டு அதன் கீழ் இருக்கை ஒன்றும் அமைய இருப்பதை எடுத்துக் கூறினார். அதைத் தொடர்ந்து மலராசிரியர் குரு அரவிந்தனிடம் இருந்து முதற்பிரதியை சங்கத் தலைவர் சிங்கராஜா ஸ்கந்தராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார். சிறப்புப் பிரதிகளை கவிஞர் சேரன், அதிபரின் மகன் க. மணிவண்ணன், பிரதம விருந்தினர் ரவி சுப்பிரமணியம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து சண்முகநாதன் இரமணீகரன் வழங்கிய ‘சிங்கம் ஒன்று சோலைக்குள்’ என்ற நாடகம் இடம் பெற்றது. தொடர்ந்து தாமிரா றஜீகரனின் பாடலுக்கு ஜனனி ஜயந்தனின் நடன அமைப்பில் ‘ஆடவா நடனமாடவா’ என்ற நாட்டிய நிகழ்ச்சி இடம் பெற்றது. இறுதியாக நாகராஜா சசிகரனின் ‘திரைஇசை நடனம்’ இடம் பெற்றது. எந்தவொரு தொய்வும் இல்லாமல் அத்தனை நிகழ்ச்சிகளும் மிகவும் தரமானவையாக அமைந்திருந்தன. அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பல பிள்ளைகள் கலைநிகழ்வுகளில் பங்குபற்றித் தங்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். இந்த விழா சிறப்பாக அமையத் தன்னார்வத் தொண்டர்களாகப் பாடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவராவார்.

மகாஜனாவின் முத்தமிழ் விழா

– மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா ரொறன்ரோ நிகழ்வில்..-

நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக திரு. ரி.பி.ஏ. ரஞ்சித்குமார், செல்வி கேசினி ஸ்ரீராம் ஆகியோர் மிகவும் சிறப்பாக நிகழ்வைக் கொண்டு நடத்தினர். செல்வி கேசினியின் முதலாவது மேடை நிகழ்வைச் சிறப்பாகச் செய்து முடித்தமைக்காக அவருக்கு எனது பாராட்டுக்கள். ஒலி, ஒளி அமைப்புக்களில் சில குறைகள் இருந்தாலும் பெரியவர்கள், இளையோர், சிறுவர்களுக்கு ஏற்றமாதிரிப் பலவகையான நிகழ்ச்சிகளும் இம்முறை இடம் பெற்றதால் நிகழ்வு மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாகப் பலரும் பாராட்டியிருந்தனர். இறுதியாக மன்றச் செயலாளர் முத்துலிங்கம் மதிவண்ணனின் நன்றியுரையுடன் விழா இனிதே முடிவுற்றது. தமிழ் மொழியை மட்டுமல்ல, முத்தமிழான இயல் இசை நாடகத்தை இந்த மண்ணில்  வளர்ப்பதிலும், அதை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பதிலும் மகாஜனா தன் பங்களிபபைத் தொடர்ந்தும் செய்து வருவது பாராட்டுக்குரியது.

மேலும் சில மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்க முத்தமிழ் விழாக் காட்சிகள் – 2017!

kuruaravinthan@hotmail.com