“கூட்டமைப்பில் உள்ளவர்களில் தமிழரசு கட்சியை தவிர ஏனையவர்கள் ஆயுத குழுக்களில் இருந்து வந்தவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்” என்ற செய்தி பற்றி முகநூலில் வாதப்பிரதிவாதங்கள் செல்வதை அவதானித்தேன். அது பற்றிய என் நோக்கு இது:
உண்மைதானே பெருமைப்பட வேண்டிய விசயம்தானே. ஆனால் சிறு திருத்தம். அவர்கள் வெறும் ஆயுதக் குழுக்கள் அல்லர். ஆயுதம் தாங்கி விடுதலைக்காகப் போராட எழுந்தவர்கள். ஒரு கட்டத்தில் ஆயுதம் தூக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது, தம் கனவுகளை, உறவுகளை எல்லாம் விட்டு விட்டுத் தம்மை விடுதலைக்காக அர்ப்பணித்துப் போராடப் புறப்பட்ட அவர்கள் ஆயுதமேந்திய விடுதலைப்போராளிகள். அவர்களை வெறும் ஆயுதக் குழுக்களாகச் சுருக்குவதன் மூலம் அப்போராட்டக்காலக் கட்டத்தில் இந்தியாவில் சென்று ஒதுங்கிய அல்லது அரசியலில் இருந்து ஒதுங்கிய மிதவாதக் கட்சியான தமிழரசுக்கட்சி ஏதோ முக்கியத்துவம் வாய்ந்த கட்சிபோலச் சுமத்திரன் சித்திரிக்க முனைவது நகைப்புக்கிடமானது. ஆயுதக் குழுக்கள் வேறு. ஆயுதமேந்திய விடுதலைப்போராளிகள் வேறு. சட்டத்தரணிக்கு இந்த உண்மைகூடத் தெரியவில்லையே.
ஈழத்தமிழர்தம் விடுதலைக்காக ஆயுதமேந்திய விடுதலைபோராட்ட அமைப்புகளில் தவறுகள் நடைபெற்றிருந்தபோதும், அவற்றுக்கப்பால் அவர்களது போராட்டம் , நோக்கம் . உயிர் அர்ப்பணிப்பு ஆகியன கொச்சைப்படுத்தப்பட முடியாதவை.
தற்போதுள்ள சூழலில் தமிழர் அனைவரினதும் முரண்பாடுகளுடன் கூடிய ஒற்றுமை அவசியம். அதன் மூலமே ஒரு தீர்வுக்கான் சாத்தியமுண்டு. இரு பக்கங்களிலும் தம் அரசியல் சுய இலாபங்களுக்காக மக்களின் ஒற்றுமையினைக் குழப்புவதற்கு முனையும் சக்திகள் உள்ளன. இவற்றுக்குப் பின் தம் தேசிய நலன்களை மையப்படுத்திய உள்நாட்டு, உப கண்ட மற்றும் சர்வதேசச் சக்திகளுள்ளன. ஆனால் அவற்றின் இடையூறுகளைத் தவிர்க்க முடியாது. அவற்றை விளங்கிச் சரியான பாதையில் , ஒற்றுமையுடன், தீர்க்கதரிசனத்துடன் செல்வது, செயற்படுவது நல்லது.