நானறிந்தவரையில் இலங்கையில் பல படைப்பாளிகள் ஆசிரியர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியன வற்றில் விரிவுரையாளர்களாகவும், இலக்கியத்துறை சார்ந்த கலாநிதிகளாகவும் பேராசிரியர்களாகவும் கல்விப்பணிப்பாளர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். அதனால் இத்தகைய படைப்பாளிகளிடம் கல்வி கற்ற மாணவர்களும் பின்னாளில் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்தவகையில் இந்தப்பதிவில் சொல்லப்படும் ஏ. இக்பால் அவர்கள் ஆசிரிய பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட படைப்பாளியாக மாத்திரம் திகழவில்லை, இவரும் தமது மாணவர்கள் சிலரை படைப்பாளியாக்கியிருக்கிறார்.
” நீ என்ன எழுதினாய்..? என்ன சாதித்தாய்..? என்று சொல்வதிலும் பார்க்க எத்தனைபேரை உருவாக்கினாய்..? என்பதில்தான் உனது ஆளுமை தங்கியிருக்கிறது” என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார்.
கிழக்கிலங்கையில் அக்கரைப்பற்று ரோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் இக்பால் கல்வி கற்ற காலத்தில், அங்கு கடமையாற்றிய ஆசிரியர்களான படைப்பாளிகள் எம்.வை.எம். முஸ்லிம், மற்றும் அ.ஸ.அப்துஸ்ஸம்மது ஆகியோரால் நன்கு இனங்காணப்பட்டு எழுத்துலகிற்கு அறிமுகப்படத்தப்பட்டவர். அங்கு “கலாவல்லி” என்ற கையெழுத்து இதழின் ஆசிரியராக இயங்கியிருக்கும் இக்பால், பிற்காலத்தில் தென்னிலங்கையில் தர்கா நகர் சாஹிராக்கல்லூரியில் ஆசிரியப்பணி ஏற்றதும் அங்கு படிப்பு வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி சில மாணவர்களை இனங்கண்டு எழுத்துலகத்திற்காக வளர்த்திருக்கிறார். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள், திக்குவல்லை கமால், தர்காநகர் ஸபா ஆகியோர்.
இந்தத்தகவல்களிலிருந்து எம்மவர் மத்தியில் நடந்திருக்கும் இலக்கியத் தொடர் அஞ்சல் ஓட்டத்தை அவதானிக்க முடியும்.
கிழக்கிலங்கை அக்கரைப்பற்றில் 1938 இல் பிறந்து தென்னிலங்கையில் தர்கா நகரில் 2017 இல் இறுதி மூச்சை விட்டவர்தான் கவிஞர் ஏ. இக்பால்.
எனது இனிய நண்பரும் ஆசிரியரும் கவிஞரும் ஆய்வாளரும் சமூகச்செயற்பாட்டாளரும் பன்முக ஆளுமைகள் கொண்டவருமான ஏ. இக்பால் அவர்கள் மறைந்தவுடன் கனடாவில் வதியும் நண்பர் வ.ந.கிரிதரன் நடத்தும் ‘பதிவுகள்’ இணையத்தில் தரப்பட்டிருந்த தகவலில் அவரது பிறந்த ஆண்டு தவறாக பதிவாகியிருந்ததை கண்டவுடன் தாமதமின்றி தொடர்புகொண்டு அதனை திருத்துமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதனைத்திருத்தினார். நாட்கள் கடந்த நிலையில் ஏ. இக்பால் அவர்களின் பிறந்த திகதி 11-02-1938 என்பதை நண்பர் மேமன்கவி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் (109 ஆவது இதழ்- ஐப்பசி 2017) பதிவுசெய்துள்ள அஞ்சலிக்குறிப்பில் காணமுடிகிறது. எனினும் ஏ. இக்பால் . 1953.12.11 ஆம் திகதிதான் பிறந்தவர் என்ற தவறான தகவல்தான் நூலகம் இணையத்தில் தற்போதும் இருக்கிறது. என்னைவிட மூத்தவரான ஏ. இக்பால் 1953 இல் எப்படி பிறந்திருப்பார் என்ற சந்தேகத்துடன்தான் அவரது மறைவு பற்றிய செய்தி ‘பதிவுக’ளில் வெளியானபோது கிரிதரனை தொடர்புகொண்டேன். எதிர்காலத்தில் எம்மத்தியில் வாழ்ந்த – வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஆளுமைகள் பற்றிய பதிவுகளை எழுதுபவர்களுக்காகவே இந்தச் சிறிய தகவலை தெரிவித்துவிட்டு, மறைந்த நண்பர் ஏ. இக்பாலுடனான எனது நட்புறவின் ரிஷிமூலத்திற்கு வருகின்றேன்.
நான் இலக்கியப்பிரவேசம் செய்த 1970 காலப்பகுதியில் இலங்கைத்தலைநகரில் விவேகானந்தா வித்தியாலம், கொழும்பு தமிழ்ச்சங்கம், கொள்ளுப்பிட்டி தேயிலை பிரசாரசபை மண்டபம், கோட்டை தப்ரபேன் ஹோட்டல் ஆகியனவற்றில்தான் அடிக்கடி இலக்கியக்கூட்டங்கள் நடைபெறும். அவ்வாறு நடந்த ஒரு கூட்டத்தில்தான் ஏ. இக்பாலை முதல் முதலில் சந்தித்தேன். இடம்: ஹோட்டல் தப்ரபேன். கொழும்பு சாஹிராக்கல்லூரியின் அதிபரும் செனட்டரும் தமிழ் அறிஞருமான அஸீஸ் அவர்கள் மறைந்ததும் அவருடைய இறுதிநிகழ்வுகள் நடைபெற்ற மையவாடியில் அவரது மாணவர்களான எச்.எம். பி. மொஹிதீனும் தினகரன் ஆசிரியர் ஆர். சிவகுருநாதனும் சந்திக்கின்றனர். அறிஞர் அஸீஸ் நினைவுகள் பற்றிய தொடர்கட்டுரையை தினகரனில் எழுதுவதற்கான ஆலோசனை அச்சந்திப்பில் உரையாடப்படுகிறது. எச்.எம்.பி. மொஹிதீன் தினகரனில் எழுதத்தொடங்குகிறார். அதற்கு நல்ல வரவேற்பிருந்தமையால் அதனை நூலாக்கி வெளியிடுகிறார். அதற்கு எதிர்வினையாற்றி மற்றும் ஒரு நூல் வெளிவருகிறது. அதனை எழுதியவர்கள் எம். எச். எம். ஷம்ஸ் – ஏ.இக்பால் – எம்.எஸ்.எம். இக்பால் ஆகியோர். இவர்கள் மூவரையும் அன்றுதான் சந்தித்தேன். அந்த எதிர்வினை நூலில் பேராசிரியர் கா. சிவத்தம்பியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தாலும், சுமார் 60 பக்கங்கள் வரையில் நீண்டிருந்த முன்னுரையை எம். எச். எம். ஷம்ஸ் – ஏ.இக்பால் – எம்.எஸ்.எம். இக்பால் ஆகிய மூவரும்தான் எழுதியிருந்தார்கள். இவர்களில் யாரோ ஒருவர் அல்லது இருவர், அல்லது மூவருமே கலந்தாலோசித்து அந்த முன்னுரையை எழுதியிருக்கவேண்டும். கைலாசபதி, எஸ். எம். கமால்தீன், டொமினிக்ஜீவா, பிரேம்ஜி ஞானசுந்தரன், எஸ். பொன்னுத்துரை, இளங்கீரன் உட்பட பலர் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட முன்னுரையுடன் வெளியான நூலின் வெளியீட்டுவிழாவில் உரையாற்றியவர்களின் பேச்சுக்களிலிருந்து அந்த நூல் பெரும்சலசலப்பை ஏற்படுத்தப்போகிறது என்பது தெளிவாகியது.
இக்கூட்டத்திலிருந்த எச்.எம்.பி. மொஹிதீன் அனைத்தையும் மௌனமாக ரசித்து – சிரித்துவிட்டு மௌனமாக வெளியேறினார். நானும் ஒரு பிரதியை வாங்கிச்சென்று படித்தேன். அந்த முன்னுரையில் பல வார்த்தைப்பிரயோகங்கள் கர்ண கடூரமாக இருந்தன. தங்கள் கண்ணியத்தை காக்கவிரும்பிய சிலர் அந்த நூலுக்கு எதிர்வினையாற்ற முன்வரவில்லை. ஆனால், தனக்கெதிராக வரும் சின்னவிமர்சனத்தையும் தாங்கிக்கொள்ள முடியாத எஸ்.பொ. வெகுண்டார். ஒருநாள் முழுவதும் கண்விழித்திருந்து அவர் எழுதிய எதிர்வினை நூல்தான் இஸ்லாமும் தமிழும் . இக்பால்கள் இருவரும் ஷம்ஸ் உம் இணைந்து குறிப்பிட்ட விமர்சன நூலை எழுதியிருந்தமையால், இவர்களை ” இக்குவால்ஷ்” என வர்ணித்து, எஸ்.பொ. தமது நூலில் தனது வாதங்களை அடுக்கியிருந்தார். வாதங்களிடையே தமக்கேயுரித்தான எள்ளல்களுடன் அவர்கள் மூவரினதும் தனிப்பட்ட வாழ்க்கையையும் ஆராய்ந்திருந்தார். அதனால் எஸ்.பொ.வின் இஸ்லாமும் தமிழும் இலக்கிய உலகில் பலரையும் முகம்சுழிக்கவைத்தது. சிறிது காலம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆயினும் அதற்கு முன்னர் வந்த இரண்டு நூல்களையும் தேடி எடுத்து படிப்பதற்கும் பலரிடத்தில் ஆவலைத் தூண்டவைத்தவர் எஸ்.பொ. எனினும் எஸ்.பொ.வின் எதிர்வினை நூலுக்கு எவரும் பதில்சொல்லாமல், தத்தம் கண்ணியம் காத்தனர். மலக்கும்பத்திற்கு அடித்தால் என்ன நடக்கும் என்பது தெரியும்தானே…?!. ‘முகநூல் மேதைகள்’ தோன்றாத அக்காலத்தில், எமது மூத்த எழுத்தாளர்கள் இப்படித்தான் மோதிக்கொண்டார்கள். தமது மேதமையை வெளிப்படுத்தினார்கள்.
அக்காலப்பகுதியில் நான் சந்தித்த ஷம்ஸ், மற்றும் ஏ. இக்பாலும், எம்.எஸ்.எம். இக்பாலும் உரையாடல்களின்போதும் வெடிப்புறப்பேசுவதை அவதானித்திருக்கின்றேன். இவர்களில் எம். எஸ். எம் .இக்பாலுடன் பேசுவதற்கு எனக்கு தயக்கமிருந்தது. அவர் எனது இலக்கிய நண்பர்கள் சிலர் பற்றி கொண்டிருந்த கடும்கோபம்தான் காரணம். ஒரு மூத்த முஸ்லிம் அறிஞரை “கலாசார கழுகு” என்றெல்லாம் அவர் வர்ணிக்கும்போது பயந்துவிடுவேன். அதனால் அவருடன் மாத்திரம் மிகவும் எச்சரிக்கையுடன் பழகுவேன். அவர் அச்சமயம் கொழும்பில் மத்தியமகா வித்தியாலயம் வீதியில் (முன்னர் அதனை பாபர் வீதி என அழைப்பார்கள்) மணிக்கூண்டு கோபுரத்திற்கு அண்மையிலிருந்த தொடர்குடியிருப்பு ( தோட்டம் என்று முன்னர் அழைப்பார்கள்) வீடொன்றில் குடும்பத்தினருடன் வசித்துவந்தார். அவரும் தமது வீட்டில் நூற்றுக்கணக்கான நூல்களை சேமித்துவைத்திருந்தார். ஒருநாள் அவரையும் சந்திப்பதற்கு புத்தளத்திலிருந்து வந்த எனது மற்றும் ஒரு இலக்கிய நண்பர் ஜவாத் மரைக்காருடன் சென்றிருந்தேன். இவர் புத்தளம் நுரைச்சோலை பகுதியிலிருந்து சோலைக்குமரன் என்ற புனைபெயரில் புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார். இந்த இக்பால் ஒரு நாள் திடீரென்று மாரடைப்பு வந்து மரணமானதை கேள்விப்பட்டு, அவ்வேளையில் கொழும்பு வந்திருந்த மல்லிகை ஜீவா அவர்களையும் அழைத்துக்கொண்டு அந்த வீட்டிற்குச்சென்று அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினேன்.
ஏ. இக்பால் கிழக்கிலங்கையில் அக்கரைப்பற்றில் பிறந்து பின்னாளில் தென்னிலங்கை தர்கா நகர் வாசியானவர். ஷம்ஸ் தென்னிலங்கையில் திக்குவல்லையை சேர்ந்தவர். கொழும்பில் ஆசிரியராக பணியாற்றினார். எம். எஸ். எம். இக்பால் கொழும்பு வாசி. இவர் எழுதியதைவிட பேசியதுதான் அதிகம். இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் இயல்புகள் கொண்டிருந்தவர்கள்தான் இந்த மூன்று இணைபிரியாத எழுத்தாளர்களும். மும்மூர்த்திகள் என்றும் சொல்லலாம். ஆனால், இவர்களுக்கு அக்காலப்பகுதியிலிருந்த மூத்த விமர்சகர்கள், படைப்பாளிகளிடத்தில் கடுங்கோபம் நீடித்திருந்தது. அதன் விளைவுதான் இவர்கள் எழுதிய எச்.எம். பி. மொஹிதீன் எழுதிய அறிஞர் அஸீஸ் நூலுக்கு எதிர்வினையாற்றிய நூல். யதார்த்தவாதி வெகுஜனவிரோதி என்பார்கள். அவ்வாறு தமது பேச்சிலும் எழுத்திலும் இயங்கியவர்களில் நான் அறிந்த சிலரில் எஸ்.பொ. மற்றும் குறிப்பிட்ட ஷம்ஸ் மற்றும் இரண்டு இக்பால்களும் முக்கியமானவர்கள். ஏ. இக்பால் நேருக்கு நேர் பேசும் இயல்புகொண்டிருந்தமையால் தனிப்பட்ட வாழ்விலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியவர். ஆசிரியப்பணியில் அதனால் இடமாற்றங்களையும் சந்தித்தவர். இவரது தொடர் பத்திகளும் இவரது எழுத்தின் தீவிரத்தால் திடீரென்று நிறுத்தப்பட்டிருக்கின்றன. எழுத்தின் மூலம் கலகம் எழுப்பிய இவரும் அதற்காக புனைபெயர்களை சூட்டிக்கொண்டவர்தான். இவருடைய புனைபெயர்கள்: லப்கி, அபூஜாவித், கீர்த்தி, கலா, அல்முஜீப்.
கல்வித்துறையில் ஆசிரியராக வளர்ந்து, தமிழ்ப்பாட நூல் ஆலோசகர், இஸ்லாமிய பாடநூலாக்கக் குழு ஆலோசகர், ஆசிரிய கலாசாலை வருகைதரு விரிவுரையாளர், கல்வியியற் கல்லூரி போதனாசிரியராகவும் விளங்கியிருப்பவர். இலக்கிய அமைப்புகளிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. முற்போக்கு எழுத்தாளர் முகாமைச்சேர்ந்த சிலருடன் இவருக்கு கருத்தியல் ரீதியில் முரண்பாடுகள் இருந்தபோதிலும் இச்சங்கத்தின் மட்டக்களப்பு பிராந்திய கிளையிலும் அங்கம் வகித்து இயங்கியவர். இவர் முஸ்லிம் கலைச்சுடர் மணிகள், மௌலானா ரூமியின் சிந்தனைகள், மறுமலர்ச்சித் தந்தை, பண்புயர் மனிதன் பாக்கீர் மாக்கார், கல்வி ஊற்றுக் கண்களில் ஒன்று, நம்ப முடியாத உண்மைகள், பிரசுரம் பெறாத கவிதைகள், ஏ. இக்பால் கவிதைகள் நூறு, இலக்கிய ஊற்று , மாயத் தோற்றம், வித்து, மெய்ம்மை, புதுமை முதலான நூல்களையும் வரவாக்கியிருப்பவர். இலங்கையிலும் தமிழகத்திலும் நடைபெற்ற இலக்கிய மாநாடுகளிலும் கட்டுரைகள் சமர்பித்திருக்கிறார். இலங்கை வானொலியிலும் இக்பாலின் உரைச்சித்திரங்கள் பல ஒலிபரப்பாகியுள்ளன. சாகித்திய விருது உட்பட பல இலக்கிய அமைப்புகளின் பாராட்டுப்பட்டங்களும் பெற்றவர்.
“ஏ.இக்பாலின் ஆசிரியபயிற்சி மாணவி ஏ.எச். ரஜபுன்னிஸா ” கவிஞர் இக்பால் கவிதைகள் ஒரு மதிப்பீடு என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரை பின்னர் நூலுருப்பெற்றுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ரிஸ்வினா ” இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிஞர் ஏ. இக்பாலின் படைப்பிலக்கியங்கள் ” என்ற ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். ரமீஸ் அப்துல்லாவின் ” அம்பாறை மாவட்ட சிறுகதை வளர்ச்சி என்ற ஆய்வு இக்பாலின் புலமையை வேறும் பல தளங்களுக்கு பதிய வைத்தன.” என்று இவரது மாணவரான தர்கா நகர் ஸபா, நீர்வை பொன்னையன் தொகுத்திருக்கும் “இலங்கை முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்கள்” நூலில் இக்பால் பற்றிய கட்டுரையில் பதிவுசெய்துள்ளார்.
நண்பர் இக்பாலுடன் எனக்கிருந்த தொடர்பு 1987 இல் எனது புலப்பெயர்வுடன் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தாலும், 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தவேளையில் தர்கா நகரிலிருந்து வருகை தந்து கலந்துகொண்டார். மீண்டும் 2011 ஜனவரியில் மாநாடு நான்கு நாட்கள் நடந்தவேளையிலும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தத்தொடர்புகளினால் எமது விட்டுப்போன உறவு மீண்டும் துளிர்த்தது. அச்சமயம் அவருடைய விடாமுயற்சியினால் தர்கா நகரில் தோன்றிய படிப்பு வட்டத்தைச்சேர்ந்த அன்பர்களினால் தொகுத்து வெளியிடப்பட்ட ‘ ஏ. இக்பால் ஐம்பது வருட இலக்கிய ஆவணம்’ என்னும் தகவல் களஞ்சிய தொகுப்பினை எனக்குத்தந்தார். இந்தத்தொகுப்பு இவரது பலம், பலவீனம், இயல்புகள், பணிகள், ஆளுமைப்பண்பின் சிறப்புகள் அனைத்தையும் சொல்லியிருக்கிறது.
இக்பாலின் துணைவியாரின் மறைவுச்செய்தியை நண்பர் திக்குவல்லை கமால் தெரிவித்ததும் தொலைபேசி ஊடாக அனுதாபம் தெரிவித்தேன். பின்னர் தர்கா நகரில் நுழைந்து அட்டகாசம் புரிந்து முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு இனவாத சக்திகள் சேதமிழைத்ததை அறிந்து உடனடியாக இக்பாலுடன் தொடர்புகொண்டு அவரது பாதுகாப்பு குறித்து கவலையுடன் உரையாடினேன். குழப்பத்தின் பின்னணியை விளக்கினார்.
2013 ஆம் ஆண்டில் இவருக்கு பவளவிழா வந்தபோது திக்குவல்லை கமால் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். ஞானம், மல்லிகை, குளம், படிகள் முதலான இலக்கிய இதழ்கள் இக்பாலை பாராட்டி அட்டைப்பட அதிதியாக கௌரவம் வழங்கியிருக்கின்றன.
நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் இவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்களும் இன்றில்லை. இவரது நண்பர் வட்டத்தைச்சேர்ந்திருந்த ஷம்ஸ், எம்.எஸ்.எம். இக்பாலும் இன்றில்லை. இறுதியாக இவரும் இன்றில்லை. காலம் தரித்து நிற்பதில்லை. எவருக்காகவும் காத்திருப்பதுமில்லை. அது தனது கடமையை செய்துகொண்டிருக்கிறது. காலத்தில் வரும் மனிதர்கள், தங்கள் ஆளுமையை காலத்தில் பதிந்துவிட்டு அகன்றுவிடுகிறார்கள். அந்தப்பதிவுகளிலிருந்துதான் வரலாற்றைத் தேடுகின்றோம். இக்பாலை இனம்கண்டு வளர்த்துவிட்ட எழுத்தாளர்கள், இக்பால் இனம் கண்டு வளர்த்துவிட்ட எழுத்தாளர்கள், இவர்களினால் இனம்காணப்பட்டு வளர்த்துவிடப்படவிருக்கும் எழுத்தாளர்கள்….. என்று இலக்கிய சரித்திரம் எழுதப்படும். என்ன எழுதினோம்…? என்ன சாதித்தோம்…? எத்தனை பேரை உருவாக்கினோம்….? முதலான கேள்விகளுக்கான விடைகளையும் மறைந்த இக்பாலின் வாழ்க்கை சரிதையிலிருந்து அறிந்துகொள்வதற்கு முயற்சிப்போம்.
letchumananm@gmail.com