முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு) கவிதைகள்!
1. வரவேற்போம் தீபாவளியை
தீய எண்ணங்களை
தொலைத்துவிட…
நல்லெண்ணங்களை
நம் நினைவில் நிறுத்த…
வரவேற்போம் தீபாவளியை!
உணர்வுகளைத் தொலைத்துவிட்ட
தீவுகளாகிப் போன
நம் வாழ்வில்
வசந்தம் வீச…
வரவேற்போம் தீபாவளியை!
மின்னஞ்சல் அனுப்பி அனுப்பியே
உறுதியான நட்பில்
தற்காலிகமாய்
மறந்துபோன முகங்களை
தேடும் முயற்சியாய்…
வரவேற்போம் தீபாவளியை!
நேற்றுவரை
காதலர்களாய்…
இன்றுமுதல்
கணவன் மனைவியாய்…
இல்லற பந்தத்தில்
இணைத்த பூரிப்பில்
வரவேற்போம் தீபாவளியை!
உண்மையான அன்பு
நம் குடும்பத்தினரிடம் மட்டுமே
கிடைக்கும் என்று
உணரவைக்கும்
திருவிழா ஆதலால்
வரவேற்போம் தீபாவளியை!
புத்தாடை அணிந்து
பட்டாசு வெடித்து
வாழ்வை இரசித்திட…
வரவேற்போம் தீபாவளியை!
தீய எண்ணங்களை
தொலைத்துவிட…
நல்லெண்ணங்களை
நம் நினைவில் நிறுத்த…
வரவேற்போம் தீபாவளியை!
2. காதல் கூட்டணி!
நாளிதழ், சுவரொட்டி,
ஒலிபெருக்கி, இணையதளம்,
வானொலி, தொலைக்காட்சி
இவற்றின் மூலம்
எத்தனையோ
அரசியல் கூட்டணிக்கட்சிகள்
பிரச்சாரம் செய்கின்றன!
ஆனால்…
ஒலியின்றியே
விழிகளால் மட்டுமே
பிரச்சாரம் செய்யும்
ஒரே கூட்டணி
நம் காதல்கூட்டணி!!
3. குறிஞ்சி வெண்பா
அரிதாய்ப் பூக்கும் ஆண்டுக்கொரு மலரே
மறவோம் நாங்கள் மலருனையே – பிரிவோம்
உறவாய் மீண்டும் உருவம் பெற்றுக்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு
அழகான மலருனக்கு ஆணவமே இல்லையடி
உழவன் கழனியிலும் உனைக்காணோம் – தலைவன்
அருகினி லிருக்க அரிதாய்ப் பூக்கும்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு
முருகனுக்கு உகந்ததென்று மலருனையே சொல்வாரே
அரிதாகக் கிடைத்திடுவாய் ஆண்டுக்கொருமுறை – இறைவனாம்
முருகன் அருளோடு மலைகளில் காடுகளில்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு
4. ஆசை
அன்பே…
நான்
அமைச்சராகலாமென்று
ஆசைப்பட்டேன்!
இடைத்தேர்தலில் போட்டியிட்டேன்!
உன்
இடைபார்த்துத் தோற்றேன்!
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்!
உன்
ஜடைபார்த்துத் தோற்றேன்!!
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்!
உன்
நடைபார்த்துத் தோற்றேன்!!
உன் கணவனாகலாமென்று
ஆசைப்பட்டேன்!
உன்னை
காதலித்துக் கொண்டிருக்கிறேன்!
5. சோகம்
நேற்று நீ
என்னுடைய காதலி
இன்று நீ
வேறு ஒருவனுக்கு மனைவி
எப்போதும்
என் நினைவினில் இருக்கும்!
என் பெயரைப் போலவே
உன் நினைவுகளும்…
தயவுசெய்து
இனி என்னை
நேசிக்கவோ…
என் கவிதைகளை
வாசிக்கவோ
செய்யாதே…!
பச்சிளங்குழந்தை
நீ!
உன் பிஞ்சு உள்ளத்தால்
தாங்கிக் கொள்ள முடியாது!!
என் கண்களில் இருந்தும்
என் கவிதைகளில் இருந்தும்
வழிந்திடும் சோகத்தை…
6. சொல்லி விடாதீர்கள்
பேன்ட் சட்டை அணிந்த
அனைவருமே
அவன் கண்களுக்கு
கோடீஸ்வரர்கள் தான்
நானும் அப்படித்தான்
தெரிந்திருக்கக் கூடும்!
நான் அவனைக்
கடந்துபோன அந்த சில
நொடிகளில்…
நடைபாதையில்
அமர்ந்திருந்தான் அவன்
கைகளை நீட்டி
என்னிடம் எதையோ
எதிர்பார்த்தபடி…
நிச்சயமாய்
என்னிடம் அவன்
பணத்தையோ உணவையோ தான்
எதிர்பார்த்திருக்கக் கூடும்
கல்வி வணிகமாகிப் போன
எங்கள் பண(ஜன)நாயக நாட்டின்
விலைவாசி ஏற்றத்தால்
இப்பொழுதெல்லாம்
நானுங்கூட அவனைப்போல்
ஒரு நாளைக்கு ஒருமுறையோ
இரு நாட்களுக்கு ஒருமுறையோ தான்
அரைகுறை வயிறோடு
உணவருந்துகிறேன்
என்ற உண்மையை
யாரும் அவனிடம்
சொல்லிவிடாதீர்கள்…
7. துளிப்பா
வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும்
தற்காலிகமாய் வேலைகிடைத்தது!
தேர்தல் பிரச்சாரத்தில் கோசம்போட…
munaivendri.naa.sureshkumar@gmail.com
ஜுமானா ஜுனைட் (இலங்கை )கவிதைகள்!
1. இயற்கை வாதிக்கிறது இப்படி…
அந்தி வெளிச்சம் வருகிறது..!
காற்றே வழிவிடு
ஆயிரங்கொண்டலோடி
வருகிறது
மின்மினிப் பூதமாய்
சூரியன் மறைகிறான்
சிவந்த கனல்களால்
விண்ணிலே உரசுகிறான்….
மேற்கிலே
உலை மூட்டுகிறான்
மேக கணங்களும்
தீப்பிடிக்கின்றன ….
அந்தி வெளிச்சம் வருகிறது
காற்றே வழிவிடு!
அவசரமாய்
மறைந்து விடப்போகிறது
கதிரவனின் தோல்
உரிந்து விட்டதோ?
கடலும் படம் எடுக்கிறது
ஓசை படாமல்
ஒப்பாரி வைக்கிறது
அந்தி வெளிச்சம் வருகிறது
ஆனால்
சூரியன் மறைகிறது …
சூரியன்
மறையும் போதும்
சுகமான வெளிச்சங்கள் …
2. இனிக்கும் நினைவுகள்..
இனிப்பின் சுவை
இதுதான்… சின்ன வயதில்…
எங்கள் நினைவில்…
சவர்க்கார முட்டையூதி
சுவரில் வைத்து உடைத்தோம்…
பட்டம் செய்து பறக்க விட்டோம் – அதில்
நாமும் கற்பனையில் பறந்தோம்…
நிலாச்சோறு சமைத்து வேடிக்கை பார்த்தோம்
மழையில் நனைந்து ஓடிப்பிடித்தோம்
வாழை நாரில் பூக்கள் தொடுத்து
வீணை செய்து கீதம் இசைத்து
கூட்டாய் விளையாடினோம்..
முற்றத்து மணலில் வீடு கட்டி
உள்ளே சென்றோம் உடைந்ததுவே
வெள்ளத்தில் காகிதக் கப்பல் விட்டு
நாமும் சென்றோம் கற்பனையிலே…
என்ன சொல்ல, என்ன சொல்ல
எல்லாம் இன்று ஞாபகமே
இனிப்பின் சுவையும், இன்ப நினைவும்
இதுதான் வேறு இல்லையே.!
களிமண் உருட்டி
சட்டி, பானை செய்தோம்
வேப்ப மர நிழலிலே
அடுப்பு மூட்டி விளையாடினோம்
இன்னும் சொல்ல, இன்னும் சொல்ல
நேரம் இங்கு போதவில்லை
அன்று கொண்ட ஆனந்தமே
உண்மை, உண்மை வேறு இல்லை!
3. காலம் ஒரு கணந்தான் ….
மெழுகுவர்த்தியாய்
உருகி
வெளிச்சங்கொடு …
“சோனாமாரி”யிலும்
அணையாதே!
மேக கணங்களாய்
உழை…
மழைத்துளிகளாக
சேவை செய்…..
பூமியைப்போல
பொறுத்திடு …
அகழ்வாரை
அன்போடு நோக்கு….
மின்னலிடம்
வெளிச்சங் கேள் ….
இடியைத் தாங்கும்
இதயம் பெறு …
காற்றிலே
கீதம் அமை …
கைப்பிடிக்குள்
உலகம் எடு …
கால வெள்ளத்தோடு
கல்லாக உருளாதே,
பாறையாய் நில்லு.,
சந்தோஷச் சிறகில்
பறவையாய்ப் பற …
பனித்துளியாய் வாழ
இலையிடம்
இடங்கேள் …
சூரியன் சுட்டாலும்
அழியாமல் வாழ் …
தேனீயாய் சுற்று …
எறும்பாய் உழை …
தென்றலாய் வீசு …
மழையாய்ப் பொழி …
4. தீர்க்கப் படாத சமன்பாடுகள்…
மேலும் பூரணப்படுத்தப்படாத
பக்கங்கள்
இருக்கட்டும் –
இன்னும் தீர்க்கப்படாத
சமன்பாடுகளைத்
தீர்ப்பதற்கு…
நீருக்குள் பிடித்த
நிலா
கையில் இருந்து
எவ்வளவு தூரம்..?
நீங்காத நினைவுகள்
இதயத்திலே
எந்த பாகம்..?
தொலைந்து போன
கால வெள்ளம்
எந்தக் கடலில் சங்கமிக்கும்?
தொல்லை கொடுக்கும்
சுவாச காற்று
வளியில் என்ன சதவீதம்..?
ஒரு துளிக்கண்ணீர்
விழுந்துடைந்தால்
இதயத்தில் எத்தனை
சுமை நீங்கும்..?
ஓருயிர் செற்று
மடிகையிலே
எத்தனை கண்ணீர்
துளி சேரும்..?
தீர்வு கிடைக்கும் வரை
அப்படியே இருக்கட்டும்
அவை !
உலகு ஓயும் முன்பு
எப்போதாவது
அவை
தீர்க்கப்படட்டும்!!
.
சம்பூர் சனா கவிதைகள்!
1. காத்திருப்பேன் …
விடியாத இரவுகளின்
வெளிச்சங்கள்
உன்னை
நினைக்கும் போது
அணைந்து போகின்றன ….
அணைந்து போன
நம்
உறவின்
உஷ்ணம்
ஆறிப் போக முன்பே
மீண்டும்
உன் சுவாசம்
வருமா
என் பக்கம்…?
உன் வார்த்தைகளின்
நாதம்
என்னுள்
எதிரொலிக்கும் போது
இதயமே
குதூகளிக்கின்றது –
என்பதை
நீயும் அறிந்தால்
நிச்சயம் வருவாய்
என் பக்கம்
விடிந்துவிட முன்பே..!
என் இரத்தத்தில்
ஊறிய
உணர்வாக
நீ ஆகிவிட்டாய்
என்பதை
நீ அறிந்து கொள்ளும் போது –
வருவாய்
ஒருநாள்
நிச்சயம் …!!
2. இனி நீயே கதையெழுது…
பிரிவைப் பற்றி
நாம் கதைத்தால்
நீ அழுதிட முன்பே
உன் கண்களில் நீர் வடியுமே
அதை மறந்து போனாயா..?
உன் வார்த்தைகளை
நேசித்தேன்-
அது தெரிந்தும் நீ
சொற்களில் ஏன்
முட்களை வைத்தாய்..?
உன் நிழலாக
நானும்
என் நிழலாக
நீயும்
தொடர்ந்ததை தான்
மறந்து போனாயா?
தொடர்கதை தான்
எழுதுகிறாயா?
நீயும் ஒரு
தூரத்து “மை”ப்போத்தலா..?,
ஆறாம் விரல் தந்தாய்
அதனாலா?
இல்லை
இனி நீயே கதையெழுது
இதோ
வந்துவிடுகிறேன்
ஒரு கருவாக நானும்…
உன் கதைக்குள்
உருவாக..!
அழுதாலும்
அழவேண்டும்
உன்னைப்போல்!,
சிரித்துக்கொண்டே…
நீ அழுதாலும்
நீர் வரும்
சிரித்தாலும்
நீர்வரும்
எப்போது அழுதாயோ
உண்மையாக!?
உனக்காக
வெள்ளைத் தாள்கள்
வானம் நிறைய…
இனி
நீயே கதையெழுது
விரைவாக…
பனிக்காற்றில்
உன் வார்த்தை
பூப்போல
பறக்கட்டும்
சிறக்கட்டும்
ஜொலிக்கட்டும்!!
வீடு; உறவு!
– பிச்சினிக்காடு இளங்கோ –
வெயிலை விரட்டி
அரவணைக்கும்
மரத்துக்கு எத்துணைப்
பெரியமனசு!
திட்டங்களில் நாங்களில்லை
தேர்தலிலும் கவனிக்கவில்லை
தலைவர்களின்
பிறந்தநாள் இறந்தநாள்
நிகழ்வுகளிலும்
எங்கள் மீதான நினைவுகளில்லை
எப்படி நாங்கள்
கணக்கில் வராத வரவுகளானோம்?
தீர்க்கப்படாத கடன்களானோம்?
தனியாய் நின்று
துணையாய் நிற்கும்
மரங்களுக்குத்தான்
ஈரமும் கனிவும்
இயற்கையாய்.
மரத்தோடு முடிவதே
மூச்சு.
நெஞ்சிற்கு நீதி
– மன்னார் அமுதன் –
கஞ்சிக்கும் கூழுக்கும் நீதியொன்று – பணம்
காய்த்த நல் மரத்திற்கு நீதிவேறு – என
நெஞ்சினைக் கல்லாக்கி நீதி சொல்லும் -அந்த
நீதிமான்களைக் காலம் வெல்லும்
கிஞ்சித்தும் அஞ்சாமல் கொடுமை செய்யும்
கீழான மனிதர்தம் பாதம் தொட்டு – நல்ல
மேலான பதவிகள் கேட்டுநிற்கும்- இவர்கள்
நிலையினைப் பார்த்தாலே உள்ளம் வெட்கும்
பாருக்குள் எங்கோவோர் மூலையிலோ -நல்ல
பண்புகள் கொண்டவரைச் சாலையிலோ -கண்டு
கதைக்கையில் ஒருதுளி நீர்திரளும் -அந்த
நீரினில் ஒருபுறம் நீதி தவழும்
தீண்டத் தீண்ட…..
வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்)
அன்பின் தீண்டல்
ஆத்மார்த்தமானால்
ஆன்மாவின் திருப்தி
அளவிறந்தது.
அறிவின் தீண்டல்
குறியான தவமானால்
முறியாது உயரலாம்.
அறியாமையிருள் விலகும்.
முரண்பாடுகளின் தீண்டலில்
சமன்பாடு விலகும்.
ஐயப்பாடு விரியும்.
ஒருமைப்பாடு அழியும்.
நட்பின் தீண்டல்
நல்லிரசாயனக் கலவையானால்
அல்லி நெஞ்சில் மலரும்.
நலமற்ற சுயநலமானால் நஞ்சாகும்.
நாகரீகம் தீண்டலால்
நற்பழமை அழியும்.
ஆகாத பழக்கங்களிற்கு
ஆன்மா அடிமையாகும்.
மழலையின் தீண்டலில்
மானுடன் உயிர்க்கிறான்.
மானுடத் தீண்டலில்
மழலையின் நம்பிக்கையூன்றும்.
தீண்டுதலால் உணர்வும்
சீண்டப்படும், நரம்பு
மண்டலமும் தூண்டப்படும்.
ஆண்டகையாகிறான் மனிதன்.
தீண்டுங்கள் மீண்டும்
மீண்டும் தீண்டுதலால்
மாண்டிடாத சக்திகள்
மூண்டெழுந்து சாதிக்கும்.
இயலாமைக்காக….
கலைமகள்ஹிதாயாறிஸ்வி (இலங்கை)
இலங்கை மண்ணில் ,
இயற்க்கைஅழிவுகளையெல்லாம் ..,
தாங்கிக்கொண்டிருக்கிறேன் ..நான் ..!
மாணிக்க கற்கலைத்தேடி ..,
புதைகுழிக்குள் ,
மண்சரிவால்
நசுக்கப்படவள்
நான் ..!
வேதனை எலிகளால் அரிக்கப்பட்ட,
பிடவைப் புத்தகம் ..!
இலட்சியத்தைதேடி
தென்றலாய் பறந்து
விதியின் …,
சதியில் சிக்கி ..,
நொடிந்து போனேன் .!
கதறுகின்றேன் …
துடிக்கிறேன் ..
இலட்சியங்கள் தோற்றதற்காகவல்ல ..,
என்
இயலாமைக்காக…,
ஆயின்,
மீண்டும் முயன்றால்
முடியாமல் போய்விடுமா?
இனி
‘இன்று புதிதாய்ப் பிறந்தேன்’ என
மூச்சுஅடங்கி
புதைகுழிதரிசிப்பது வரை
தொடர்வேன்; அதுவே
புனிதம் தரும்
மகிழ்ச்சி பெறும் ….!!