– அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதித் தமிழகத்தில் பாரி பதிப்பக வெளியீடாக 1966இல் வெளியான நூல் ‘வெற்றியின் இரகசியங்கள்’. வாழ்வின் வெற்றிக்கு அறிவுரைகள் கூறும் சிறந்த தமிழ் நூல்களிலொன்று. இந்நூலில் அ.ந.க மனத்தின் தன்மைகளை, அது பற்றிய நவீன அறிவியற் கோட்பாடுகளையெல்லாம் மிகச்சிறப்பாக, துள்ளு தமிழ் நடையில் எழுதியிருக்கின்றார். அந்த வகையில் சிறந்த உளவியல் நூலாகவும் இதனைக் கொள்ளலாம். இந்நூல் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளிவரும். –
3. எமில்கூ காட்டிய வழி!
மனத்தின் இயல்புகளை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து அதை ஒரு அறிவுத் துறையாக பிராய்ட், ஜூங், அட்லர் போன்றவர்கள் வளர்த்து வர பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த ட்ரோய்ஸ் நகரில் பிறந்த எமில்கூ என்ற வைத்தியர் மனோதத்துவத்தை மனிதனுக்கு உடனடியான பலன்களைத் தரத்தக்க ஒரு கலையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு அதில் பெரிய வெற்றியும் ஈட்டினர். அவர் தாம் கண்டுபிடித்த மனோதத்துவ முறைக்கு (Auto Suggestion) ‘சுய மந்திரம்’ அல்லது ‘சுய வசியம்’ என்று பெயரிட்டார். இந்த முறையினால் ஒருவன் தனது கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கவும், நல்ல பழக்கங்களை வளர்க்கவும் முடியுமென்பது அவர் சித்தாந்தம். அதுமட்டுமல்ல. உடல் நோய்களில் பல மனப்பிராந்திகளால் ஏற்படுகின்றனவென்றும் சுயமந்திர முறையினால் அவற்றை வேரோடு கல்லி வீச முடியுமென்றும் அவர் திடமாக நம்பினர். இன்னும், ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் அரும்பெரும் சாதனைகளைச் செய்து முன்னேற விரும்பினால் அதற்கும் இச்சுயமந்திர சக்தியை உபயோகிக்கலாம் என்பது அவர் கருத்து. இக்கருத்துக்களின் அடிப்படையில் அவர் செய்த பரிசோதனைகள் மிகவும் ஆச்சரியமான பலன்களை நல்கவே 1910-ம் ஆண்டில், அதாவது தமது 53-வது வயதில் நான்சி என்னும் இடத்தில் சுயவசிய சிகிச்சை நிலையம் ஒன்றையும் அவர் நிறுவினார். இங்கு அவர் அடைந்த வெற்றிகள் ஐரோப்பா முழுவதிலும் அவருக்குப் பெரும் புகழைக் கொடுத்தது. உலகம் முழுவதும் எமில்கூவின் முறைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தது.
எடுத்த எடுப்பில் பார்த்தால் கூவின் முறைகள் சிறு பிள்ளைத்தனமானவையாகத் தோன்றும். சிலருக்கு அவை: ஒரு பைத்தியக்காரனின் கேலிக்கூத்துப் போலவும் தோன்றக்கூடும். ஆனால் ஆரம்பத்தில் அவை பரிகசிக்கத்தக்கவையாகக் காட்சியளித்தாலும் நாளடைவில் அவற்றின் அபார சக்தியை எவரும் நன்கு உணரவே செய்வார்கள். சோர்ந்திருந்த உள்ளம் சுறுசுறுப்புப் பெறும்போது, நைந்திருந்த, நரம்புகளில் புது உணர்ச்சி ஏறும்பொழுது, கூன்விழுந்த முதுகு குத்திட்டெழும்போது யார்தான் சுயவசிய முறையின் சக்தியை மறுக்க முடியும்?
இந்நூலின் ஆரம்பத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முயற்சி அத்தியாவசியம் எனக் குறிப்பிட்டோம். ஆனால் முயற்சி என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை நாம் சரியாக விளங்கிக் கொண்டால்தான் அதனை முறையாக மேற்கொண்டு நாம் முன்னேற்றத்தை எய்தலாம். சிலர் முயற்சி என்றதும் மாடுபோல் உழைத்தல் என்று எண்ணி விடுகிறார்கள். சிந்தனையற்ற வெறும் உழைப்பினால் தேவைக்கதிக களைப்பு ஏற்படுமே தவிர பிரயோசனம் அதிகம் இருக்காது. உதாரணமாக ஒரு வாழை மரத்தை, நாம் வெட்டி வீழ்த்த வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். அதற்குக் கூர்மையுள்ள பெரிய கத்தியொன்றைக் கையில் எடுத்து அதனால் வெட்டி வீழ்த்த வேண்டும். அப்படிச் செய்யாது ஒரு சவர அலகைக்கொண்டு இவ்வேலையைச் செய்ய முயன்றால் அதனால் காலம் விரயமாகும். கைகள் வலிக்கும். சில சமயம் விரல்கள் வெட்டுக் காயத்துக்கும் ஆளாகும். இன்னும் வேலை முடிவதற்குள் சவர அலகு இரண்டாக முறிந்து விடவும் கூடும். வாழை மரமும் வெட்டப்படாது தப்பித்துக் கொள்ளும்! ஆகவே முயற்சி என்பது கடின உழைப்பன்று. புத்திசாலித்தனமான, விவேகமான உழைப்பு. அறிவின் துணையோடு மேற்கொள்ளப்படும் முயற்சிதான் பலன்தர வல்லது என்பதை நாம் மனதிற் கொள்ள வேண்டும்.
எமில்கூ கடின உழைப்பால் வெற்றி கிட்டும் என்ற கொள்கையைக் கண்டித்தார். ஒரு வேலையை நாம் மேற்கொள்ளும்போது அவ்வேலை எளிது என்றும் அதை எம்மால் செய்து முடிக்க முடியும் என்றும் நாம் நம்ப வேண்டும். இவ்வித தன்னம்பிக்கையுடன் செய்யும் முயற்சிதான் வெற்றிபெறும் என்பது அவர் கருத்தாகும். அவர் சொல்வதைக் கேளுங்கள்: ‘முடியுமானல் எப்பொழுதும் நீங்கள் செய்யப்போகும் வேலை எளிது என்று எண்ணுங்கள். இந்த மனநிலையில் அவசியத்துக்கு அதிகமாக உங்கள் சக்தியை நீங்கள் செலவிடும்படி நேரிடாது. ஆனால் நீங்கள் செய்யவிருக்கும் வேலையைக் கடினமானது என்று நீங்கள் எண்ணினால் அவ்வேலைக்கு உண்மையாகத் தேவையான சக்தியிலும் பார்க்கப் பத்து, இருபது மடங்கு சக்தியைநீங்கள் செலவிடும்படி நேரிடும். வேறு வார்த்தைகளில் சொல்லப் போனல் உங்கள் சக்தியை நீங்கள் வறிதே விரயம் செய்யும் நிலைமை ஏற்படும்.
இங்கு எம் முன்னால் ஒரு கேள்வி பிறக்கிறது. விவேகமான முயற்சி என்றால் என்ன? தன்னம்பிக்கையுடன் செயலாற்ற எம்மனதை நாம் எப்படித் தயார் செய்வது? என்பனவையே அவை. இதனை நாம் புரிந்துகொள்ள சங்கல்பம், கற்பனை ஆகிய இரு விஷயங்கள்பற்றி எமில்கூ கொண்டிருந்த அபிப்பிராயங்களை நாம் ஆராய்ந்தறிய வேண்டும்.
மனிதன் தன் வெளிமனத்தின் சக்தியால் என்ன சங்கல்பங்களைச் செய்து கொண்டாலும் உள்மனத்தின் ஆசைகள் அவற்றை எப்படி அழித்து விடுகின்றன என்பதை சென்ற அத்தியாயத்தில் குடிகாரன் உதாரணத்தில் நாம் கண்டோம். வெளிமனத்தின் சங்கல்பத்தைவிட உள்மனத்தின் கனவும் கற்பனையும் எத்தனை வலுவுள்ளது என்பதை அது நன்கு காட்டுகிறது.
‘சுய ஆளுமை’ என்ற தமது நூலில் கற்பனையின் சக்தியை எமில்கூ பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறார்: “30 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்டு ஒரு பலகையை நாம் நிலத்தில் போடுகிறோ என்று வைத்துக் கொள்வோம். இந்தப் பலகையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்கு அடி சறுக்காமல் எவராலும் நடந்து செல்ல முடியும் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால் இப் பரிசோதனையின் சூழ்நிலைகளை ஒரு சிறிது மாற்றிப் பாருங்கள். அதே 30 அடி நீள 1 அடி அகலப் பலகையை இரு உயர்ந்த தேவாலயக் கோபுரங்களுக்கிடையே ஆகாயத்தில் நிறுத்துங்கள். இப்பொழுது அதில் எத்தனை பேரால் ஒரு சில அடிகளையேனும் கடக்க முடியும்? இரண்டடி நடக்கு முன்னரே பலருக்குக் கைகால்கள் நடுங்க ஆரம்பிக்கும். உங்கள் மனது எத்தனை திட்டமிட்டுத் திடசங்கல்பம் செய் திருந்த போதிலும், சில அடிகள் நடப்பதற்குள்ளேயே உங்கள் கால்கள் பின்னும்; கீழே விழுந்து விடுவீர்கள்.
பலகை நிலத்தில் இருக்கும்போது ஏன் இவ்விதம் நீங்கள் விழவில்லை? பலகை நிலத்திலிருந்து உயர்த்தப்பட்டதும் ஏன் நீங்கள் விழும்படி நேரிடுகிறது? காரணம் இது தான் நிலத்தில் பலகை கிடக்கும்போது பலகையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்குப் போதல் இலகுவான விஷயம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் பலகை உயர்த்தப்பட்ட பின்னர் உங்கள் கற்பனை நான் விழுந்துவிடக் கூடும் என்ற அச்சத்தை உண்டு பண்ணுகிறது.
இந்த நிலையில் உங்கள் திடசங்கல்பம் செயலற்றதாகிறது. விழுந்து விடுவோம் என்ற சித்திரம் உங்கள் மனதில் மின்னல்போல் பளிச்சிட நீங்கள் பயத்தால் நடுங்குகிறீர்கள். எனவே சங்கல்பம் தோற்கிறது. கற்பனை வெல்கிறது! என்னால் முடியாது என்று நீங்கள் எண்ணினால் நிச்சயம் உங்களால் அது முடியாதுதான். வீடு கட்டும் தொழிலாளர் உயரப் பலகையில் நடக்கும் இவ்வேலையைச் சர்வ சாதாரணமாகச் செய்கிறார்கள். அது எப்படி அவர்களால் முடிகிறது? அவர்கள் தம்மால் அவ்வேலையை இலகுவில் செய்ய முடியும் என்று நம்பிச் செயலாற்றுவதே அதற்குக் காரணம்.”
கற்பனையின் சக்தியையும் வெறும் மனோகல்பத்தின் பலவீனத்தையும் இவ்வுதாரணம் நமக்கு நன்கு விளக்கு கிறது. நாம் விழப் போகிருேம் என்ற எண்ணம் பலருடைய மனதில் ஒரு சித்திரமாகத் தோன்றுகிறது. அச் சித்திரத்துக்கு முன்னால் எனது முயற்சிகள் வீணாகிவிடுகின்றன. தோல்வி பெறுகின்றன. இத்தகைய தோல்விகளை எதிர்க்க மேலும் மேலும் நாம் சங்கல்பத்தை அதிகமாக மேற்கொண்டால் தோல்வி இன்னும் பெரிய தோல்வியாக முடியுமே அல்லாமல் வெற்றி ஏற்படாது!
உதாரணமாக ஒருவரது பெயர் உங்கள் மனத்தில் புகுந்துகொண்டு வெளியே வர மறுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அப்பெயரை வெளியே இழுத்தெடுக்க எவ்வளவோ முயற்சி எடுக்கிறீர்கள். உங்கள் சொந்த அனுபவத்தை இவ்விஷயத்தில் நினைவு கூர்ந்து பாருங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக பெயரை இழுத்தெடுக்க முயற்சிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அப்பெயர் மேலும் மேலும் புதைந்துகொண்டு செல்வதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
ஏன்? சிலர் கடும் சிரிப்புக்கு ஆளாகுவதை நீங்கள் காண்கிறீர்கள். அவர்கள் அதை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக அடக்க முயற்சிக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ் வளவு அந்தச் சிரிப்பு பீறிப் பீறி வெளிவரும். சங்கல்பம் சிரிப்பை அடக்க முயலுகிறது. ஆனால் கற்பனையோ சிரிப்பைக் கட்டவிழ்த்து விடுகிறது. இதில் பெயரைப் புதைந்திருந்த இடத்திலிருந்து மீட் டெடுக்க முனைந்தவரின் மனதில் இருந்த எண்ணம் என்ன? நான் இன்னாரின் பெயரை நினைவுகூற விரும்புகிறேன். ஆனால் அது என்னால் முடியவில்லை’ என்பதுதான் அது. சிரிப்பை அடக்க முடியாது கஷ்டப்பட்டவர் மனதில் இருந்த எண்ணம் என்ன? நான் சிரிப்பை அடக்க நினைக் கிறேன். ஆனால் அது என்னுல் முடியவில்லை” என்பதே அது.
இரண்டு சந்தர்ப்பங்களிலும், வெற்றி பெறவேண்டும் என்ற சங்கல்பம் வெளி மனதில் இருந்தாலும், உள்மனதில் முடியவில்லை-முடியாது என்ற கற்பனை தோன்றி விட்டதால் சங்கல்பத்துக்கும் கற்பனைக்கும் போர் மூள்கிறது” போரில் வெற்றி கற்பனைக்கே!
கூவின் கூற்றின் பிரகாரம் இப்படிப்பட்ட போராட்டத்தில் என்றும் எப்பொழுதும் எவ்விடத்திலும் கற்பனைக்கே வெற்றி. இதற்கு விதிவிலக்கே இல்லை. இன்னோர் உதாரணமாகப் போர்க்களத்தில் ஒரு காட்சியைப் பார்ப்போம். அங்கு படை வீரர்கள் திடமனத்தோடு அணிவகுத்துச் செல்கின்றனர். தளபதி சிங்கம் போல் நெஞ்சை நிமிர்த்தி சுறுசுறுப்பாக முன்னே நடக்கிறான். அவன் கண்களில் வீரம் கொப்பளிக்கிறது. பேச்சில் துணிவு துள்ளி விளையாடுகிறது. வீரர்கள் மனதிலே அவனது தோற்றம் வெற்றி பெறுவோம் என்ற கற்பனையைத் தூண்டி விடுகிறது. ஒரு சிலர் மனதில் வெற்றி விழாவின் காட்சியே பளிச்சென்று தோன்றி விடுகிறது. அதோ, எதிரி சின்னபின்னமாகிறான், வெட்டுண்டு வீழ்கிறான், எங்கள் கால்களில் விழுந்து கெஞ்சுகிறான். அவன் காயங்களைப்பார். இரத்தம் சொட்டுகிறது. பாவம் எதிரிகள் தோற்றுவிட்டார்கள். எங்கள் கொடி எழுந்து பறக்கிறது. அதோ அவர்கள் கொடி அந்தோ, அலங்கோலமாக மண்ணில் வீழ்ந்து கிடக்கிறது.
இந்தக் கற்பனை உள்ளத்திற்கும் காலுக்கும் வலுவேற்றி முன்னேறிச் செல்கிறது படை, முடிவில் வெற்றி வாகையும் சூடுகிறது! ஆனால் தளபதி தளர்ந்தவனுயிருந்தால், பேச்சிலும் நடையிலும் கோழைத்தனம் வெளியே தெரிந்தால், படை வீரர் உள்ளத்தில் எத்தகைய சித்திரம் உண்டாகும்? எதிரி தங்களை அடித்து உதைத்துக் கொல்லுவது போலும் காட்சிகள் தோன்றும். அது அவர்களைத் தோல்விக்கே முற்றாகத் தயார் செய்துவிடும். அதன் பயன்? நெஞ்சுரம் குன்றும். செயல் திறமை குறையும். தோல்வி அடைவார்கள். ஒட்டம் எடுப்பார்கள்!
மனிதர்கள் பொதுவாக ஆட்டு மந்தையைப் போன்றவர்கள். இதில் ஆச்சரியமெதுவுமில்லை. பார்க்கப் போனால் மனிதனும் ஒரு பாலுண்ணி (Mammal) மிருகந் தானே? காட்டில் வாழும் மிருகங்கள் பலவும்-யானை உட் பட – மந்தை மந்தையாகத்தானே வாழ்கின்றன? மனிதனும் மந்தை வாழ்வு வாழ விரும்பும் பாலுண்ணி ஐந்து என்பதனால்தான் சமுதாயம் என்ற கூட்டமைப்பை உண்டாக்கி வாழத் தொடங்கினான் அவன். ஆனால் இந்த மந்தை வாழ்வுக்குள் அவன் ஒரு தனி வாழ்வை நாளடைவில் தனக்கென வகுத்துக்கொண்டு விட்டாலும், மந்தையின் இயல்புகளையும் அவன் அடியோடு இழந்துவிடவில்லை. ஒரு நாட்டில் பொதுஜன இயக்கங்களோ, புரட்சி இயக்கங்களோ நடக்கும் பொழுதும், யுத்தங்கள் நடக்கும்பொழுதும் இதை நாம் தெளிவாகக் காணக் கூடியதாயிருக்கிறது.
ஒரு கூட்டம், அது ஒரு இன வெறிக் கூட்டம் என்று வைத்துக் கொள்வோம். வீதியில் செல்கிறது. வீதியிலே பிற இனத்தார்கள் வருகிருர்கள். கூட்டத்தின் முன்னணி யில் நிற்கும் நால்வர் ஆவேசத்துடன் “அதோ அதோ வருகிறாகள். தொலைத்துக் கட்டுவோம். வீசி எறிவோம்!” என்று கூச்சலிட்டுப் பாய்ந்து செல்கிறார்கள் உடனே அங்கு நாம் காணும் காட்சி வியப்பூட்டுவதாகும். அதிக இடை வெளிகளுடன் சிதறி வந்த மனித மந்தை அந்த நால்வருக்குப் பின்னால் இடைவெளியின்றி நெருங்கி நிற்கிறது. வீறு பெறுகிறது. வேகமடைகிறது. பாய்கிறது. அச்சம், தயக்கம் இரக்கம் என்பன காற்றில் பறக்கின்றன. வெறி பீடிக்கிறது. வந்தவர்கள் அங்குமிங்கும் இழுக்கப்படுகிறார்கள். அடிக்கப்படுகிறர்கள். உதைக்கப் பெறுகிறார்கள், நிலத்தில் விழுத்தி நொருக்கப்படுகிறார்கள். நெஞ்சில் மிதிக்கப்படுகிறார்கள். கதறக் கதற, இரத்தம் கக்க வீதிக் கரையில் வீசப்படுகிறார்கள்! இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்ன? முன்னே வந்த நால்வரும் தம் இனத்துக்காகச் செய்யும் பணியில் தாம் கலந்து கொள்ளாது இருக்கமுடியாது என்ற கற்பனை நம்பிக்கை-அவர்கள் உள்ளத்தில் எழுந்து விடுவதும், இன எதிரியை ஒழிப்பது இவ்விடத்தில் மிக இலகுவானதே என்று அவர்கள் நம்புவதுமேயாகும்.
சில கொலைகாரர்கள் கொலை செய்தபின்னர் நீ ஏன் இக்கொலையைச் செய்தாய்’ என்ற கேள்விக்கு ‘ என்னல் அதைத் தவிர்க்க முடியவில்லை. என்னை ஏதோ உந்தித் தள்ளியது. என்னுல் அதை எதிர்த்து நிற்க முடியவில்லை”* என்று சொல்லுவதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆம், அறிவு ஆவேசத்துக்கு முன்னர் அடிபணிந்து விடுகிறது. ஆவேசம் வெற்றி பெற்றுவிடுகிறது. அறிவு வெளிமண் இயக்கம், ஆவேசம் உள்மன இயக்கம். அறிவு எம் சங்கல்பத்தைத் தூண்டுவது. ஆவேசம் எம் கற்பனையையும் கனவுகளைத் தூண்டுவது.
மேற்கண்ட நிகழ்ச்சிகள் நமக்கு ஒன்றைக் காட்டுகின்றன. நாம் எம் அறிவைப் பற்றியும் சங்கல்பத்தைப் பற்றியும் மிகைப்பட நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் எமது உள் மனத்தின் அடிமைகளே. உள் மனதின் ஆவேசங்களே, எமது கற்பனைகளே எம்மைக் கட்டியாளுகின்றன. நாம் வெறும் பாவைகள். சூத்திரக் கயிறு நனவிலி மனதில் இருக்கிறது. அறிவு எம்மை வழி நடத்தவில்லை. சங்கல்பங்களால் உபயோகமில்லை. நாம் பம்பரங்கள். நாம் காணும் கனவுகளும் செய்யும் கற்பனைகளுமே எம் வாழ்க்கையின் உருவத்தை நிர்ணயிக்கின்றன. பம்பரங்களை ஆட்டுவிக்கின்றன.
கற்பனை என்பது ஒரு காட்டாறு. அதில் தப்பித் தவறி விழுந்தவரை அது அப்படியே அள்ளி இழுத்துச் செல்கிறது. எமது சங்கல்பம் எம்மைக் கரையை நோக்கி இழுக்கிறது. ஆனால் காட்டாற்றின் வேகத்தின் முன்னர் நாம் எம்மாத்திரம்? நாம் அள்ளுப்பட்டுச் சென்று விடுகிறோம். ஆனால் இக் காட்டாற்றின் பெரும் சக்தியை எமது விவேகத்தினல் நாம் எமக்குச் சாதகமாக்கும் வழிகளும் இல்லாமல் இல்லை என்பதுதான் எமில்கூ கண்டுபிடித்த சுய வசியம் என்னும் இரகசியம். ஆனால் இந்த இரகசியத்தின் முக்கிய அம்சமென்ன வென்றால் காட்டாற்றின் வேகத்தை நாம் நன்குணர்ந்து கொண்டு அதுபோகும். திசையிலே எமது ஒடத்தை நாம் செலுத்த வேண்டும் என்பதேயாகும். எதிராறு நீந்தி நாம் வெற்றி காண முடியாது. காற்று வீசும் திசையை அறிந்து பாயை அதற்கேற்ப விரித்தால் தான் படகு கடலில் முன்னேறிச் செல்ல முடியும். விஞ்ஞானிகள் செய்வதும் இதுதான். இயற்கை நியதி களைக் கண்டு பிடித்து அந்தக் கண்டுபிடிப்புகளுக்கேற்ப எமது காரியங்களைச் செய்யவேண்டும். கற்பனையின் சக்தியை உள்மனதின் ஆவேசக் கனவுகளின் சக்தியைக் கண்டறிந்த, கூ, அது ஒரு காட்டாறு என்பதை விளங்கிக் கொண்ட கூ, அக் காட்டாற்றின் திசையைத் தொழிற்சாலைக்குத் திருப்பி அதனால் சக்கரங்களைச் சுழலவைத்து, நீர் மின்சாரசக்தியை ‘உண்டாக்கி, தொழிற்சாலையிலுள்ள யந்திரங்களை எப்படி இயக்கலாம் என்பதற்கும் வழிகாட்டினர்.
தன்னுடைய இந்த சித்தாந்தத்தை அவர் ஒரு உதாரணத்தின் மூலம் பின் வருமாறு விளக்குகிறார் :- “கற்பனை என்னும் உள்மன இயக்கத்தை கடிவாளமோ சேணமோ அற்ற ஒரு குதிரைக்கு ஒப்பிடலாம். இப்படிப்பட்ட நிலையில் அதில் ஏறி வீற்றிருக்கும் ஒரு மனிதன் என்ன செய்ய முடியும்? குதிரை சென்ற வழியில் தானும் செல்லவேண்டியதுதான். இவ்வாறு குதிரையை தன்னிஷ்டமாக ஒட விட்டால் அது அங்குமிங்கும் ஒடி முடிவில் எங்காவது ஒரு குழியில் போய் விழும். குதிரையில் ஏறியிருப்பவனும் குழியில் விழவேண்டியதுதான். ஆனால் குதிரை மீதுள்ளவன் எவ்விதத்திலேனும் ஒரு கடிவாளத்தையும் சேணத்தையும் குதிரைக்கு மாட்டி விட்டால் அதன்பின் குதிரை எஜ மானனல்ல, அதன் மீது வீற்றிருப்பவனே எஜமானன். பின்னர் குதிரை அவனை நினைத்த இடத்துக்கு இழுக்க முடியாது. குதிரை வீரனே தான் வேண்டிய இடத்துக்குக்குதிரையைப் போகச் செய்வான்.”
இவ்வாறு உள்மனம் என்ற குதிரையைக் கட்டியாளும் கடிவாளமும் சேணமும் தான் சுய மந்திரம் அல்லது ‘சுய வசியம்’ என்று அழைக்கப்படும் கூவின் முறையாகும். இந்த ‘சுய வசிய’ சக்தி கூவின் கரத்தில் தெளிவான ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பாக வெளிவந்த போதிலும் உலகம் தொடங்கிய நாள் தொடக்கம் இது மனித உள்ளத்தையும் செயலையும் உருவாக்கும் சக்தியாக நிலவி வரவே செய்திருக்கிறது. கூ இச் சக்தியைத் தனிப் படுத்தி விளங்கிக் கொண்டதோடு ஒரு மனிதன் அதனைத் தான் விரும்பும் வேளையில் திட்ட மிட்டு உபயோகிக்கத்தக்க ஒரு கருவியாகவும் மாற்றித் தந்தார். இதுவே மனோதத்துவ உலகில் அவர் புரிந்த சாதனையாகும்.
வாழ்கையில் நாம் செய்யும் எவ் வேலைகளுக்கும் தன்னம்பிக்கையே காரணமாயிருக்கிறது. ஒரு குழந்தை நடக்.கப் பழகுவது கூடத் தன்னம்பிக்கையினலேயே. தவழும் குழந்தை நடக்கும் குழந்தையையும், நடந்து திரியும் குழந்தை தாயையும் இதரர்களையும் காணுகிறது. குழந்தைக்கு வெளிமனதின் சங்கல்பம் செய்யும் திறமை கிடை.யாது. ஆனால் கண்டதைச் சித்திரமாக்கி பதிய வைத்துக் கொள்ளும் உள்மன்ம், நனவிலி அதனிடம் இருக்கவே இருக்கிறது. இந்நனவிலியில் தானும் நடப்பது போன்ற காட்சி தோன்ற, தனது கால்களை ஊன்றி எழவும் நடக்கவும் முயற்சிக்கிறது குழந்தை. தன்னால் நடக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இருப்பதனாலேயே அது இதில் சீக்கிரமே வெற்றி பெற்றும் விடுகிறது. நடக்கும் குழந்தை சிறிது காலத்தில் ஒடுகிறது, பாய்கிறது, குதிக்கிறது, ஆடுகிறது. இவற்றில் எல்லாம் குழந்தையின் நனவு மனத்தைவிட நனவிலிச் சித்திரமே அதிகம் செயலாற்றுகிறது. ஏனெனில் குழந்தையிடம் சிந்திக்கும் நனவு மனத்தைவிட விஷயங்களைச் சித்திரமாகக் காணும் நனவிலி மனமே பலம் பெற்று விளங்குகிறது.
சிந்திக்கும் மனம், சங்கல்பம் செய்யும் மனம் வளரவளர நாம் அதில் அதிக நம்பிக்கை வைக்கத் தொடங்குகிறோம். அதனல் சில காரியங்களைச் சாதிக்க முனைகிறோம். அக்காரியங்கள் நனவிலிச் சித்திரத்துக்கும் ஒத்ததாயிருந்தால் வெற்றி கிட்டுகிறது. இல்லாத விடத்துத் தோல்விக் காணுகிறோம். நனவு மனம் வருந்துகிறது. வாழ்க்கை கசக்கிறது. ‘இவ்வித வாழ்க்கையால் என்ன பயன்’ என்று கூட எண்ண ஆரம்பித்துவிடுகிறோம். இந்த நிலையை மாற்றவே சுயவசிய முறை உதவுகிறது. நனவு மனத்துக்கும் நனவிலி மனத்துக்கும் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தி வாழ்க்கையின் பலதுறைகளிலும் வெற்றி காண்பதற்கே சுயவசிய முறை தேவைப்படுகிறது.
எமது வாழ்க்கையை நாம் எடுத்துக் கொண்டால் நாம் எப்பொழுதுமே தர்க்கத்துக்கியைந்த முறையில் நடப்பதில்லை. உதாரணமாக மேடையில் பேசும் கலையை எடுத்துக் கொள்வோம். நல்ல ஆரோக்கியமும், தோற்றமும் உள்ளவர்தான் மோகன். தெளிந்த சிந்தனையும், படிப்பும் நல்ல குரலும் அவருக்கு அமைந்திருக்கிறது. கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களும் அவரது நண்பர்களே, அவர் கருத்துக்களைக் கேட்பதற்கு ஆசையுடன் இருப்பவர்கள். இருந்தாலும் பேசத் தொடங்குதற்கு எழும்பியதும் மோகன் நெஞ்சில் ஏதோ ஒரு பாறாங்கல் வந்து அழுத்துவது போல் இருக்கிறது. கழுத்திலே வேர்வை சொட்டுகிறது. கால்கள் உதறத் தொடங்குகின்றன. வாய் குழறுகிறது. சொற்கள் தடுமாறுகின்றன. மிகவும் கஷ்டத் துடன் ஏதோ சில வார்த்தைகளை முணு முணுத்துவிட்டு மெல்ல உட்கார்ந்துவிடுகிருர் அவர். தர்க்கரீதியாகப் பார்த்தால், சிந்திக்கும் மனத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்தச் சம்பவம் இப்படி நிகழ்ந்திருக்க வேண்டியதில்லை. பேச்சாளருக்கு வேண்டிய எல்லாக் குணுதிசயங்களும் அவரிடம் நிறைய இருந்தும் அவர் தம் முயற்சியில் தோல்வி கண்டார். ஏன்? அவரிடம் எல்லாப் பண்புகள் இருந்தும் ஒரு பண்பு இருக்கவில்லை. அது தான் தன்னம்பிக்கை. அவருடைய உள்ளத்தில் தவறான பய உணர்ச்சிகள் தோன்றிவிட்டன. அவர் தாம் பரிகசிக்கத் தக்க முறையில் நடந்து கொள்வேனே என்று அஞ்சினார். பொருத்தமான வார்த்தைகள் வராது விட்டால் என்ன செய்வது என்று பயந்தார். இந்தப் பயங்கள் அவரது நனவிலியை ஊடுருவின. அதன் பயனாக அவர் உள்ளத் திலெழுந்த சித்திரம் ஒரு தோல்விச் சித்திரம். கால் நடுங்கும், வாய்குழறும், பேசவராது அவர் எண்ணினர். அவர் எண்ணிய எண்ணம் அப்படியே ஒரு சிறியமாற்றமுமின்றி நடந்தேறியது.
உண்மையில் “நான் வெற்றி பெறுவேன்? என்று திண்ணமாக எண்ணுபவன்தான் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவ்தை எவராலும் தடுக்கமுடியாது. அதேபோல் நாம் எங்கே வெற்றி பெறப் போகிறோம். தோல்வி அடைந்தே தீருவோம் என்ற எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சி படுதோல்வியாகவே முடிவதையும் யாராலும் தடுக்க முடியாது.
நாம் முன்னே கூறிய பேச்சாளராகிய மோகன் தன்னம்பிக்கை நிறைந்த உள்ளத்தைப் பெற்றிருந்தால் எப்படி நடந்திருப்பார்? “என்னால் நன்கு பேசமுடியும். என் குரல் இனியது. மனதைக்கவர்வது. நான் எனது கருத்துக்களை ஒழுங்குற அமைத்து வைத்திருக்கிறேன். எனக்கு எப்போதுமே வார்த்தைப் பஞ்சம் கிடையாது. அருவி போல் சொற்கள் தங்கு தடையின்றி ஒடும். என் பிரசங்கத்தை எல்லோரும் மெச்சுவார்கள். நண்பர்கள் கைதட்டி ஊக்கம் அளிப்பார்கள்’ என்பன போன்ற எண்ணங்கள் அவர் உள்மனதில் வெற்றிச் சித்திரத்தை எழுதியிருக்கும். வெற்றியும் பெற்றிருப்பார்!
வேர்ஜில் என்ற லத்தீன் கவிஞன் அவர்கள் வலியவர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் தாம் வலியவர்களாக இருப்பதாக எண்ணுவதுதான்’ என்று கூறியதும் இங்கு நினைவு கூரத்தக்கதாகும். எண்ணத்தின் சக்தியைப் பற்றி எமில் கூ கூறிய சில வார்த்தைகள் பின் வருமாறு :-
*உங்களுக்கு இருக்கக் கூடிய நோய்களைப் பற்றி எண்ணுவதிற் காலத்தைச் செலவிட வேண்டாம். ஏனெனில் உங்களிடம் உண்மையான நோய்கள் இல்லாவிட்டால் அவை உங்கள் எண்ணத்தின் சக்தியால் தோன்றி விடவும் கூடும்.”
*நீங்கள் விரும்புவது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்புங்கள், அப்பொழுது அது கிடைத்தே தீரும்.”
*ஒருவன் சுய ஆளுமை பெற நான் சுய ஆளுமை பெற்று வருகிறேன் என்று திடமாக நம்பினுல் போதும்??
எமது எண்ணங்கள், நல்லவையும் சரி தீயவையும் சரி பின்னால் செயலாகி வாழ்க்கை அனுபவமாகின்றன. நாம் தான் நம்மை உருவாக்குகிறோம். சூழ்நிலைகள் அல்ல.? நான் வாழ்க்கையில் “வெற்றி அடைவேன்? என்ற எண்ணத்துடன் வாழ்க்கையைத் தொடங்கும் ஒருவன் நிச்சயமாக அதில் வெற்றி பெறுகிறான், ஏனென்றால் அவன் அந்த இலட்சியத்துக்காக வேலை செய்யவும் தொடங்கி விடுகிறான். வெற்றி அடைவேன் என்று தீர்மானித்துக் கொண்டவன் முன்னால் ஒரே ஒரு சந்தர்ப்பம் தான் வருகிறதென்றும் அந்த சந்தர்ப்பம் என்ற உருவத்தின் தலையில் ஒரே ஒரு மயிர்தான் இருக்கிறதென்றும் வைத்துக் கொண்டால் கூட, அவன் அந்த ஒரே ஒரு மயிரைப்பற்றிக் கொண்டே முன்னேறி விடுகிறான். இன்னும் வெற்றியை உண்மையாக அபேட்சிப்பவன் வெற்றிக்குரிய சூழ்நிலைகளை எப்படியோ உண்டாக்கிக் கொண்டு விடுகிறான். அதே நேரத்தில் எப்பொழுதும் தன் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கும் ஒருவன் எந்தக் காரியத்திலும் ஒருபோதும் வெற்றி பெறமாட்டான். அவன் முன்னால் ஆயிரம் சந்தர்ப்பங்கள் தலை நிறைந்த மயிர்களுடன் விளங்கினலும் அவை அவன் கண்களுக்குத் தெரிய மாட்டா. நீட்டியவுடன் கைக்கு அகப்பட இலட்சம் மயிர்கள் இருந்தாலும் அவன் கைக்கு ஒற்றைமயிர் கூட அகப்படாது. அவன் சிருஷ்டிக்கும் சூழ்நிலைகள் பொதுவாக வெற்றிக்குப் பதில் தோல்வியைத் தரும் பாதகமான சூழ்நிலைகளாகவே இருக்கும். இதற்கெல்லாம் விதியைக் குறை கூறா தீர்கள். நீங்கள்தான் குற்றவாளிகள்.”
தோல்வியை நினைத்து அஞ்சுவது தோல்வியை நிச்சயம் கொண்டுவரும். அதேபோல வெற்றியின் எண்ணம் வெற்றியைக் கொண்டு வரும். வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் பாதையில் வரும் தடைகளை எல்லாம் உடைத் தெறிந்து செல்லவல்லது.”
சுய வசியம் என்பது நாமே நம் மனதை மாற்றிச் சரியான பாதையில் செலுத்துதற்கு உபயோகிக்கும் ஒரு உளவியல் வித்தையாகும். இதனை கனவுச் சுயவசிய முறை என்ற பெயரால் எமில்கூ அழைக்கிறார், தமது முறைக்கு இப்பெயரை அவர் சூட்டுதற்குக் காரணம் கனவிலிச் சுய வசிய இயக்கத்திலிருந்து தம் முறையைப் பிரித்துக் காட்டுதற்கேயாகும். இந்நனவிலிச் சுயவசிய இயக்கம் நமக்குத் தெரியாமல் என்றும் எப்பொழுதும் இவ்வுலகில் இயற்கை யாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்றாகும். அது தான் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் அது இன்றைக்கு என்ன நிலையில் இருக்கிறதோ அந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது.
இங்கு சுயவசியம் என்னும் சக்தியின் அடிப்படை நியதி என்ன என்பதை நாம் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்வது அவசியம்: எம் நனவு மனத்தில் உதயமாகும் எந்த ஒரு எண்ணமும் நனவிலியால் அங்கீகரிக்கப்பட்டு விட்டால், அது அங்கே நிலைபெற்று எங்கள் வாழ்க்கையை என்றும் மாற்றும் சக்தியாக என்றும் இயக்கும் சக்தியாகச் செயலாற்றத் தொடங்கி விடுகிறது. இவ்வாறு வலுப்பெற்ற எண்ணம் எப்படியும் நிறைவேறியே தீரும். இதுவே சுய வசியத்தின் அடிப்படை நியதி. ஒரு தந்தைக்கும் தாய்க்கும் நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதில் ஒருவன் ஒரு டாக்டராகிறான். இன்னுனொருவன் கவிஞனகிறான். மற்றவன் ஒரு நடிகனகிறான். நாலாவது மகன் ஒரு சண்டியன் அல்லது ரெளடியா கிறான். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவரவர் நனவிலியில் காணப்படும் வாழ்க்கையின் இலட்சியமே யாகும். எப்படி என்று பார்ப்போம்.
டாக்டராக வந்த சந்திரன் சிறுவயதில் ஒரு டாக்டரைக் கண்டு அவர் நடை உடை பாவனைகளைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்திருக்கலாம். அவரது அன்புக்குப் பாத்திரமாகி இருக்கலாம். நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அவரது சேவையின் சிறப்பை நேரில் கண்டு உள்ளம் மகிழ்ந்திருக்கலாம். அவரது முகத்தின் புன்னகையால் அடிமையாக்கப்பட்டிருக்கலாம். இளம் உள்ளத்தில் “இவரல்லவோ உயர்ந்த மனிதர், இவர் மாதிரியல்லவோ மனிதர் இருக்க வேண்டும்!?? என்ற எண்ணம் தோன்றி இருக்கலாம். உலகம் அவரை விரும்பிப் போற்றுவதைக் கேட்டு இப்படிப்பட்ட பொதுஜன அன்பைப் பெறுவதல்லவோ வாழ்க்கையின் வெற்றி என்று கருதி இருக்கலாம். இவை இயற்கையாக நனவு மனதில் எழும் எண்ணங்கள். அவை நனவிலியில் இறங்குகின்றன. இவ்வெண்ணக் கோவை அங்கே ஒரு மாறாச் சித்திரமாக எழுதப்பட்டு விடுகிறது. எனவே அதுவே வாழ்க்கையின் இயக்கமாகிறது. மாணவப் பருவத்தில் சந்திரனை இழுத்துச் சென்ற இலட்சியம் இதுவே. இதன் முடிவாக அவனே ஒரு டாக்டராகி விடுகிறான். நனவு மனத்திலெழுந்த எண்ணம், நனவிலியால் அங்கீகரிக்கப் பட்டு நிலைபெற்ற திண்ணிய எண்ணமாகி விட்டதால் எண்ணிய எண்ணியாங்கு எய்தப்பட்டுவிட்டது. நனவிலி மனதின் அங்கீகாரம் இல்லாத எண்ணம் திண்ணிய எண்ணமாவதில்லை. வெற்றியும் பெறுவதில்லை. ஆனால் இது சந்திரனால் கனவுச் சுயவசிய முறையால் எய்தப் பெற்ற வெற்றியன்று. நாம் அறியாமலே எம்மைச் சுற்றியும் எம்முள்ளத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயற்கையான நனவிலிச் சுயவசிய இயக்கத்தால் ஏற்பட்ட பலன் இது. கவிஞனன கணேசு கவிஞனானதும் இப்படித்தான். அவனது மாமனின் நண்பன் இன்பதாசன் ஒரு கவிஞன் அவனைச் சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் வாயைப் பிளந்து கொண்டு, செவிகளைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். “ஆகா எப்படிப் பட்ட கருத்து, நல்ல உபமானம்!’ என்றெல்லாம் மெச்சுவார்கள். ஒருமுறை அவனது பாட்டை வியந்து மக்கள் மன்றமொன்று அவனுக்குத் தங்கப்பதக்கமும், மல்லிகை மாலையும் சூட்டியது. ‘புதுமைப் புலவன்’ என்ற பட்டமும் அவனுக்கு அளிக்கப்பட்டது. கணேசின் பிஞ்சுள்ளத்தில் இன்பதாசனின் இவ் வெற்றி பெரியதோர் உணர்ச்சியை உண்டாக்கியது. கவிஞனுக்கு இருக்கும் மதிப்பு வேறு யாருக்கிருக்கிறது? இதுவல்லவோ வாழ்வு!’ என்ற எண்ணம் நனவு மனதில் தோன்றி நனவிலியில் வீழ்ந்து விட்டது, அதன் பயன்? கவிஞனாக வேண்டும் என்ற அந்த எண்ணமே அவன் நனவிலி மனதை ஊக்குவிக்குஞ் சக்தியாகியது. வாழ்க்கையின் இலட்சியமாகியது. அதனல் தான் கணேசு கவிஞனானன். நடிகன் நடிகனானதும், ரெளடி ரெளடியாகியதும் அப்படித்தான். ரத்தினம் ரெளடியானது எப்படி? சின்னஞ் சிறு பையன் உள்ளத்திலே அவன் காணும் காட்சிகள் எல்லாம் அப்படியே சித்திரமாக நிலை பெறுகின்றன. வீதியிலே நாலுபேரை தன்னந்தனியாக எதிர்த்து முறியடித்த முரட்டு முத்துலிங்கத்தைப் பார்த்திருக்கிறான் ரத்தினம், ஒருநாள். என்ன உடம்பு? இரும்பா இது? அல்லது கருங் கல்லா? தசை நார்கள் இப்படியல்லவா இருக்க வேண்டும்? தோள்பட்டிகள் போல் அவை துள்ளித் துடித்து இறுகி நிமிர்ந்து நிற்கும் காட்சியே காட்சி. அத்துடன் முத்துலிங்கம் முகம்கூட எவ்வளவு அழகாயிருக்கிறது. மீசையைப்பார்! இரு கரிய பிறைச் சந்திரன்கள் போல் அவை அவன் நாசியின் இருபுறங்களிலும் எழுந்து நிற்பது எவ்வளவு கவர்ச்சியாயிருக்கிறது! மதுரை வீரன் போல், கட்ட பொம்மன்போல் காட்சியளித்து முத்துலிங்கம் ரத்தினத்தின் நனவு மனத்தின் வழியால் நனவிலி மனதில் இறங்கி விட்டான். அதன் பயன்? நாளடைவில் தானும் ஒரு ரெளடியாகி சமுதாயத்தில் ஒரு வகை மதிப்பையும் பெற்று விட்டான். எண்ணிய எண்ணியாங் கெய்தி விட்டான், எண்ணிய எண்ணம் திண்ணியதாயிருந்ததால்!
மேற்கண்ட உதாரணங்களிலிருந்து நமக்குத் தெரிவதென்ன? நம் வாழ்க்கையை நனவிலிச் சித்திரங்களே நிர்ணயிக்கின்றன என்பதாகும். நனவிலியில் நல்ல சித்திரங்கள் விழுந்திருக்குமேல் நல்ல வாழ்க்கை, நனவு மனமும் ஏற்று மகிழும் வாழ்க்கை நமக்குக் கிடைக்கும். இல்லாத பட்சத்தில் நனவு மனம் எண்ணி எண்ணி வெதும்பும் வாழ்க்கை. தான் சித்திக்கும். இயற்கையாக நிகழும் நனவிலிச் சுய வசியம் தற்செயலாக நல்ல சித்திரத்தை உள் மனதில் எழுதி விட்டால் முயற்சி இல்லாமலே வெற்றி கிடைத்து விடலாம். இது எதைப்போல் என்றால் கடற்கரையில் அகப்பட்ட கரடுமுரடான கருங்கற்களில் சில இயற்கையாக, ஏற்படும். அலைகளின் தாக்குதலினுலும், மழை காற்று வெய்யில் போன்ற இயற்கைச் சக்திகளின் தாக்குதல்களின. லும், இதர கற்கள், மணல், உயிர்ப்பிராணிகள் என்பவற்றின் உராய்ஞ்சலினலும் தமது கரடு முரடான தோற்றத்தை இழந்து, வாளிப்பான ரப்பர்ப்பந்து போன்ற உருண்டை வடிவம் பெற்றுக் காட்சி அளிப்பதுபோலாகும். ஆனால் இவ்வித மாற்றம் எல்லா இடத்திலும் எல்லார் விஷயத்திலும் எல்லாத்துறைகளிலும் எப்பொழுதும் ஏற்படாது. உதாரணமாக ஒருவனின் நனவிலிச்சித்திரம் பணத்துறையைப் பொறுத்த வரையில் நன்றா அமைந்து அதன் பலனக அவன் அத்துறையில் வெற்றியும் பெறக்கூடும். ஆனால் அதே மனிதனின் மனதில் சமுதாயத்தில் மற்றவர்களுடன் ஒட்டிப்பழகி மதிப்பைப் பெறும் துறையிலோ கல்வித் துறையிலோ தேகாரோக்கியத்திலோ ஒரு பெண்ணின் உள்ளத்தைக் கவரும் காதல் துறையிலோ நனவிலி மோசமான சித்திரங்களை எழுதி வைத்திருக்கலாம். அப்படிப்பட்டவன் லட்சாதிபதியாகியும் எந்த நேரமும் துன்பத்தில் உழலும் துர்ப்பாக்கியசாலியாகவே விளங்குவான்.
இப்படிப்பட்ட வாழ்க்கைக்கு ஆளான கோடீஸ்வரர்கள் பலர். உதாரணமாக அல்பிரெட் நோபலின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளலாம். இன்று உலகெலாம் போற்றும் நோபல் பரிசைத் தோற்றுவித்த இப்பெருங் குபேரர் தம் வாழ்க்கையின் பெரும் பகுதியைத் தன்னந்தனியாகவே கழித்தார். காரணமென்ன? ஒரு பெண்ணின் இதயத்தைக் கவர்ந்து அதில் ஆட்சி செலுத்த அவருக்கு முடியவில்லை. இத்துறையில் அவர் எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணான. இதை அவரே வெளியில் சொல்லி ஏங்கி இருக்கிறார், அவர் உள்ளம் அன்புக்காக அழுதது. ஆனால் அது கிட்டாமலே அவர் இறந்துபோனார்!
இதுபோவே இன்னொருவன் ஏழையாயிருக்கக் கூடும். இருந்தும் ஒரு பெண்ணின் அன்பும், குழந்தைகளின் அன்பும், ஊரார் அன்பும் அவனுக்குத் தாராளமாகக் கிடைத்து வரக்கூடும். இந்தத் துறையில் அவன் நனவிலிச் சித்திரம் நன்றாக அமைந்திருப்பதே இதற்குக் காரணம். ஆனால் அவன் நனவிலி பணத்துறையைப் பொறுத்தவரையில் மோசமான சித்திரங்களை எழுதி வைத்திருந்தால் இந்த அன்புகளுக்கிடையேயும் அவன் துன்ப வாழ்க்கையே வாழ வேண்டி நேரிடும். பணமிருந்தும் அன்பு கிட்டாதவன் அத்தனிமையைத் தாங்க முடியாது தற்கொலை செய்து கொள்கிறான். அமெரிக்க கோடீஸ்வரர் பலர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதைப் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அதேபோல் அன்பும் ஆதரவும் இருந்தும் பணமில்லாக் கஷ்டத்தால், வறுமைக் கொடுமையால் தற்கொலை செய்த வர்களைப்பற்றியும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இவை எல்லாம் நமக்கு எதைக்காட்டுகின்றன? நனவிலிச் சுயவசியம் என்ற இயற்கையின் குருட்டு இயக்கத்தை நாம் நம்பியிருக்க முடியாது என்பதைத் தான். சில வேளைகளில் இவ்வியக்கம் சில துறைகளிலோ ஒரு துறையிலோ நன்மை பயக்கும் சித்திரங்களை நமது நனவிலியில் எழுதி வைத்திருக்கும். அதே சமயத்தில் இன்னும் சில துறைகளில் நமது வாழ்க்கையைச் சீரழித்துக். குட்டிச் சுவராக்கும் இருண்ட படங்களையும் வனரந்துவைத்திருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அத்தகைய படங்களை அடியோடழிந்து அவற்றுக்குப்பதிலாக நல்ல படங்களைத் தீட்ட எமில்கூ கண்டுபிடித்த நனவுச் சுயவசியமுறை எமக்கு அவசியமாகிறது. கூ காட்டும் இந்த நனவுச் சுயவசியமுறை வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ஒரு தீபம் தன் வாழ்க்கையைச் செப்பனிட்டு வளமுள்ளதாக்க விரும்பும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இத்தீபத்தைத் தன் கையிலே எடுத்துக்கொள்ளட்டும்.
[தொடரும்]