இலங்கையிலிருந்து வெளியாகும் லக்பிமா (lakbima) சிங்களத் தினசரிப்பத்திரிகையின் 18.03.2018 ஞாயிறு பதிப்பில் எனது சிறுகதையான ‘நடுவழியில் ஒரு பயணம்’ சிறுகதையின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இச்சிறுகதை டிசம்பர் 2006இல் ‘பதிவுகள்’ மற்றும் ‘திண்ணை’ ஆகிய இணைய இதழ்களில் வெளியாகிய சிறுகதை. இச்சிறுகதையினைத் தமிழிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவர் எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப் படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த. அவருக்கும், லக்பிமாவில் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பானவருமான எழுத்தாளர் கத்யான அமரசிங்க (Kathyana Amarasinghe) அவர்களுக்கும் நன்றி. இச்சிறுகதை வெளியான ‘லக்பிமா’ : http://epaper.lakbima.lk/last_18_03_18/manjusawa.pdf
ஏற்கனவே எனது இன்னுமொரு சிறுகதையான ‘உடைந்த காலும், உடைந்த மனிதனும்’ சிறுகதையினை ஜி.ஜி.சரத் ஆனந்த சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்து ‘லங்கஇரிடா’ (Lankairida)) பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். அச்சிறுகதை ‘லங்கஇரிடா’வின் பெப்ருவரி 18, 2018 பதிப்பில் வெளியாகியுள்ளது.
‘நடுவழியில் ஒரு பயணம்’ சிறுகதையினை முழுமையாகக் கீழே வாசிக்கலாம்:
நடுவழியில் ஒரு பயணம்’ – வ.ந.கிரிதரன் –
பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். ‘டவரின்’ வீதியும் ‘புளோர்’ வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு ‘தொராண்டோ’ நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ அல்லது இருப்பிடங்களை அறிந்து கொள்வதோ மிகவும் இலகுவானது). ‘பஸ்’சை எதிர்பார்த்து நின்றிருந்தான். காலம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு பாதுகாவற் பணியினை முடித்துக் கொண்டு என்னிருப்பிடம் திரும்புவதற்காக ‘பஸ்’ தரிப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் அவனை நோக்கினேன். நள்ளிரவில் பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் ‘பஸ்’சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகள். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம் நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் மூலம் நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான் அறிந்து கொண்டவை, உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம். ‘லாண்ட்ஸ்டவு’னுக்கருகிலிருந்த கேளிக்கை விடுதியான ‘ஹவுஸ் ஆவ் லங்காஸ்டர்’இலிருந்து நிர்வாண நடனமாதர் சிலர் வெளியில் வந்திருந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி மல்லர்களைப் போன்ற தோற்றமுடைய இரு வெள்ளையர்கள் , பார்வைக்கு இத்தாலியர்களைப் போலிருந்தார்கள், அப்பெண்களுடன் அளவளாவியபடி கவசங்களாக நின்றார்கள். வீதியின் அடுத்த பக்கத்தில், வடபுறத்தில், சில கறுப்பின போதை மருந்து விற்றுப் பிழைக்கும் சுய வியாபாரிகள் சிலர் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தபடியிருந்தார்கள். மேலும் சிலர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள் என்னைப் போல். இததகையதொரு சந்தர்ப்பத்தில்தான் நான் அவனை அந்த பஸ் தரிப்பிடத்தில் சந்தித்தேன்.
“ஏ! நண்பா! எப்படிச் சுகம்” என்று உரையாடலினைத் தொடர்ந்தேன்.
“நான் நல்லாத்தானிருக்கிறேன். நீ எப்படி?”யென்றான். அப்பொழுதுதான் கவனித்தேன் அவன் போதை இன்னும் தணியாததை.
“நானும் நலமே! நன்றி!” என்றேன்.
அவன் அவ்வழியால் சென்று கொண்டிருந்த டாக்ஸிகள் சிலவற்றை மறித்தான். ஒருவராவது அவனுக்காக நிற்பாட்டுவதாகத் தெரியவில்லை.
“பார். கறுப்பினத்தவனென்றதும் ஒருத்தனாவது நிற்பாட்டுகிறானில்லை. அங்கு பார். அந்த கறுப்பின டாக்ஸிச் சாரதி கூட நிற்பாட்டுகிறானில்லை” என்றான்.
“அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பத்திரிகைகளில் பார்த்திருப்பாயே. எத்தனை தடவைகள் அவர்கள் தாக்கப்பட்டிருப்பார்கள். சிலர் கொல்லப்பட்டுமிருக்கிறார்களே. மிகவும் ஆபத்தான பணிதான். உனக்கென்ன டாக்ஸிதானே வேண்டும். நான் மறிக்கவா?” என்றேன்.
“அவ்விதம் செய்தால் நன்றியுள்ளவனாகவிருப்பேன்” என்றான்.
“அது சரி. நீ எங்கு போக வேண்டும்?”
“கோடன் ரிட்ஜ் தெரியுமா? ‘டான்வோர்த்’ வீதியும் ‘மிட்லாண்ட்’ வீதுயும் சந்தியும் சந்திக்குமிடத்திற்கண்மையில்..” என்றான்.
“ஓ! நீ கிழக்கினிறுதியில் (East End) இருக்கிறாயா? நல்லதாகப் போயிற்று. நானும் உன்னிருப்பிடத்திற்கப்பால்தானிருக்கிறேன். வேண்டுமானால நாமிருவருமே டாக்ஸி கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே. நீ என்ன சொல்கிறாய்?” என்று அவனை நோக்கினேன்.
‘மிகவும் அருமையான யோசனை நண்பனே!” என்றான்.
அவ்வழியால் வந்த டாக்ஸியொன்றினை மறித்தேன். உடனேயே போட்டி போட்டிக் கொண்டு வந்து நின்றார்கள். அவன் சிரித்தான்:
“பார்த்தாயா. இவ்வளவு நேரமாக நான் மறித்துக் மொண்டு நிற்கிறேன். ஒருத்தராவது நிற்கவில்லை. நீ ஒரேயொரு தரம்தான் மறித்தாய். பார்! என்ன மாதிரி போட்டி போட்டுக் கொண்டு வந்து நிற்பதை.”
நின்ற டாக்ஸியில் இருவரும் ஏறியமர்ந்தோம். டாக்ஸி சாரதி பங்களாதேசைச் சேர்ந்தவன். செல்லும் இடத்தைக் கூறி விட்டுச் சாரதியைப் பார்த்து “பாகிஸ்தானா” என்றேன். “இல்லை, பங்களாதேஷ்” என்றான். அவனுடன் சிறிது உரையாடி விட்டு என் கவனம் அருகிலிருந்த சோமாலியனைப் போன்ற தோற்றத்திலிருந்தவன் பக்கம் திரும்பியது.
“எந்த ஊர்? சோமாலியாவா?” என்றேன்.
“இல்லை. எரித்திரியா” என்றான்.
எனக்கு எப்பொழுதுமே எரித்திரியா மீது அதன் மக்கள் மீது மிகுந்த அனுதாபமும், மதிப்புமுண்டு. இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில், யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சமாதான ஊர்வலமொன்றில் பங்கேற்றுவிட்டு கனடா திரும்பியிருந்த தான்சானியா நாட்டைச் சேர்ந்த முதியவரொருவரை ‘டொராண்டோ பல்கலைக் கழகத்தில்’
நடைபெற்ற கூட்டமொன்றில் சந்தித்ததிலிருந்து எரித்திரியா மீதான என் ஆர்வம் அதிகரித்திருந்தது. எரித்திரியா விடுதலைப் போராட்டத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டதோடு ஆதரவாளராகவும் விளங்கி அதன் பயனாக சிறைவாசமும் அனுபவித்திருந்த அந்த முதியவர் எரித்திரியா மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றி நன்கு அறிந்திருந்தார். போராளிகளினதும், மக்களினதும் முழுமையான ஒத்துழைப்பின் மூலம் விடுதலைப் பெற்ற நாடு எரித்திரியா என்பாரவர்.
“உன் நாட்டு மக்களின் விடுதலைப் போராட்டத்திலும் அதன் வெற்றியிலும் போராளிகளினிடத்திலும் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவன் நான். எபப்டி உங்களால் இதனைச் சாதிக்க முடிந்தது?”
“ஆரம்பத்தில் 1961இல்தான் எரித்திரியா விடுதலை அமைப்பு ஆரம்பமானது. அதில் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் எல்லோருமே அதிக அளவில் அங்கம் வகித்தார்கள். பின்னர் கிறிஸ்தவர்களினால் எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பு உருவானது. இரு அமைப்புகளிற்குள்ளும் ஏற்பட்ட பகைமையினை உணர்ந்த எதியோப்பிய அரசு சரியான தருணத்தில் தாக்கவே எம்மண்ணின் பல பகுதிகள் மீண்டும் அவர்கள் வசம் வீழ்ந்தன. பின்னர் ஏற்பட்ட சூழல்களினால் எரித்திரியா விடுதலை அமைப்பு ஓரங்கட்டப்பட்டது. எதியோப்பியாவில் உருவான திக்ராய விடுதலை அமைப்பும் எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பும் ஒன்றிணைந்து எதியோப்பிய அரசுக்கெதிராகத் தொடுத்த போரின் விளைவாகவே நாடு விடுதலை பெற்றது”
இவ்விதம் கூறி விட்டு அவன் சிறிது சிந்தனையில் ஆழ்ந்து போனான்.
“எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பு கிறித்தவர்கள் அமைப்பென்று கூறினாயே? உங்கள் நாட்டுச் சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் கிறித்தவர்களா…”
“இல்லை… முஸ்லீமகள்..”
“அப்படியென்றால் எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பில் முஸ்லீம்கள் இருக்கவில்லையா?”
“இருந்தார்கள்… முஸ்லீம்கள் , கிறித்தவர்கள் நிறைய எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பில் இருந்தார்கள். ஆரம்பத்தில் முஸ்லீம்களின் ஆதிக்கம் இருப்பதாகக் கூறி எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பு உருவானாலும் பின்னர் தாங்கள் வெளியேறியது எரித்திரியா விடுதலை அமைப்பின் அதிகார வேட்கையினை எதிர்த்தேயென எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பினர் கூறினார்கள். இதன் மூலம் எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பினர் தங்களை அனைத்து
மக்களினதும் அமைப்பாக மாற்றி விட்டார்கள்.”
எனக்கு மிகவும் ஆச்சரியமாகவிருந்தது. அன்று அந்த எரித்திரிய நண்பனை அவனிருப்பிடத்தில் விட்டு விட்டு என்னிருப்பிடம் திரும்பியபோது அதிகாலை இரண்டினைத் தாண்டி விட்டிருந்தது. தற்செயலானதொரு நடுவழி நள்ளிரவுச் சந்திப்புக் கூட எவ்விதம் பல விடயங்களைப் போதித்து விட்டது.
மேற்படி சந்திப்பின் மூலம் நான் பல விடங்களை அறிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக இதுவரை நான் அறியாமலிருந்த சக கனடியனொருவனின் பூர்வீகம் பற்றி, அவன மண்ணின் போராட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. தற்செயலாக நடைபெறும் ஒரு சில நடுவழிப் பயணங்கள் கூட சிற்சில சமயங்களில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விடுகின்றன என்பதற்கு இச்சந்திப்பொரு உதாரணம்.
அன்றிரவு படுக்கையில் சாய்ந்த பொழுது இன்னும் போரின் உக்கிரத்துள் வதங்கிக் கொண்டிருக்கும் என் நாட்டின், என் மக்களின் ஞாபகங்கள் தான் எழுந்தன. நான் ஆனந்தமாகச் சயனித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் அங்கு ஒரு பச்சிளங் குழந்தையின் மெல்லுடல் குண்டுகளால் துளைக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஓரிளம் பெண்ணின் அநாதரவான ஓலத்தால் ஒரு கிராமத்தின் நள்ளிரவு அதிர்ந்து கொண்டிருக்கலாம். கனவுகளும் கற்பனைகளுமாக வாழ்வைத் தொடங்கிய ஓரிளங்குடும்பத்தின் இருப்பே மிருக வெறி பிடித்த மனிதர் சிலரால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கலாம். ‘ஷெல்’களால், பெருகும் இரத்த ஆறால் இன்னும் என்னெவெல்லாமோ நடந்து கொண்டிருக்கலாம்.
– பதிவுகள் டிசம்பர் 2006; இதழ் 84
ngiri2704@rogers.com
நன்றி: பதிவுகள், திண்ணை
மேலுள்ள சிறுகதையான ‘நடுவழியில் ஒரு பயணம்’ ‘திண்ணை’யில் வெளியானபோது எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன் எழுதிய எதிர்வினை:
வணக்கம் கிரிதரன்,
உங்கள் நடுவழியில் ஒரு பயணம் திண்ணையில் படித்தேன். நல்ல பதிவு.
‘பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் ‘பஸ்’சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகளிலொன்று. இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம் நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் மூலம் நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான் அறிந்து கொண்டவை உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம். ‘
எனக்கும் பிடித்தமான பொழுதுகளில் இது ஒன்று. பல விடயங்களை உள் வாங்கி பல்வேறு கோணங்களிலும் சிந்திக்க வைக்கும் பொழுதுகள் அவை.
‘அன்றிரவு படுக்கையில் சாய்ந்த பொழுது இன்னும் போரின் உக்கிரத்துள் வதங்கிக் கொண்டிருக்கும் என் நாட்டின் என் மக்களின் ஞாபகங்கள் தான் எழுந்தன. நான் ஆனந்தமாகச் சயனித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் அங்கு ஒரு பச்சிளங் குழந்தையின் மெல்லுடல் குண்டுகளால துளைக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஓரிளம் பெண்ணின் அநாதரவான ஓலத்தால் ஒரு கிராமத்தின் நள்ளிரவு அதிர்ந்து கொண்டிருக்கலாம். கனவுகளும் கற்பனைகளுமாக வாழ்வைத் தொடங்கிய ஓரிளங்குடும்பத்தின் இருப்பே மிருக வெறி பிடித்த மனிதர் சிலரால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கலாம். ‘ஷெல்’களால்இ பெருகும் இரத்த ஆறால் இன்னும் என்னெவெல்லாமோ நடந்து கொண்டிருக்கலாம்.’
உண்மை. நானும் கூட சாப்பிடும் பொழுதுகளில் நான் இப்படிச் ரசித்துச் சுவைத்துச் சாப்பிடும் போது அங்கு இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கலாம் என்று எண்ணி வேதனை அடைவேன்..
நட்புடன்
சந்திரவதனா