வாசிப்பும், யோசிப்பும் 277: அஞ்சலி: இதழாசிரியர் ம.நடராஜனின் மறைவு! | கவிதை: பரிணாமம் |

'புதிய பார்வை' ஆசிரியர் ம.நடராஜன்அண்மையில் மறைந்த ‘புதிய பார்வை’ சஞ்சிகையின் ஆசிரியரான ம.நடராஜனுக்கு இலக்கியம், அரசியல் என இரு முகங்கள். கலை, இலக்கியரீதியில் அவரது ‘புதிய பார்வை’ சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. அந்த வகையில் அதன் ஆசிரியரான ம.நடராஜனும் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்தவர்களிலொருவராகின்றார். முனைவர் ம.நடராஜன் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளிலும் அப்பிமானம் பெற்றவர். ‘மகளிர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு’ என்னும் தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். அரசியலைக் கடந்து கலை, இலக்கியவாதிகள் மத்தியிலும் நட்பினைப் பேணியவர். 1967இல் தமிழகத்தில் நடைபெற்ற தனது மாணவப்பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு ‘சுபமங்களா’ வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் , அதே சாயல் மிக்க வடிவமைப்புடன் வெளியான சஞ்சிகை ‘புதிய பார்வை’. அக்காலகட்டத்தில் அதன் இணை ஆசிரியரான பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’ நாவல் தொடராக வெளியாகிக்கொண்டிருந்தது.

புதிய பார்வை சஞ்சிகை விடயத்திலும், அதன் ஆசிரியர் ம.நடராஜன் மீதும் என் மனத்தில் மென்மையான உணர்வுமுண்டு. அதற்குக் காரணமுமுண்டு. 1996இல் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மங்கை பதிப்பகத்துடன் (கனடா) இணைந்து வெளியிட்ட எனது நூலான ‘அமெரிக்கா’ (அமெரிக்கா சிறு நாவல் மற்றும் சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு) வெளியானபோது புதிய பார்வை அதற்கு புத்தக மதிப்புரையொன்றினை எழுதி தனது மே 1997 இதழில் வெளியிட்டிருந்தது. அதனை ஜி.சுவாமிநாதன் என்பவர் எழுதியிருந்தார். ‘அமெரிக்கா’தான் தமிழகத்தில் வெளியான எனது முதலாவது நூல். ஆனால் அந்த நூலுக்கு மதிப்புரை எழுதி என் நூலுக்கு வரவேற்பு கொடுத்திருந்த ‘புதிய பார்வை’ சஞ்சிகை மீது அந்த விடயத்தில் எனக்கு எப்பொழுதுமே மதிப்புண்டு. குறை நிறைகளுடன் அமைந்திருந்த அந்த விமர்சனம் வெளியான ‘புதிய பார்வை’ சஞ்சிகைப்பக்கத்தினையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள். இதழாசிரியர் ம.நடராஜனின் மறைவு அவர் பற்றிய , ‘புதிய பார்வை’ சஞ்சிகை பற்றிய நினைவுகளைத் தோற்றுவித்து விட்டது. முனைவர் ம.நடராஜனின் அரசியல் பல்வேறு விமர்சனங்களைக் கொண்டதாகவிருந்தாலும், அவரது கலை, இலக்கியப்பங்களிப்பு, மொழி மீதான பற்றுதல் போன்றவற்றை யாரும் சந்தேகிக்க முடியாது. இத்தருணத்தில் அவர் தனது சஞ்சிகையான ‘புதிய பார்வை’ மூலம் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிய ஆரோக்கியமான , விதந்திடவேண்டிய பங்களிப்பினை நினைவு கூர்கின்றேன்.

– ‘புதிய பார்வை’ சஞ்சிகையில் வெளியான ‘அமெரிக்கா’ பற்றிய மதிப்புரை. –


கவிதை: பரிணாமம் – வ.ந.கிரிதரன் –

ஒரு காலத்தில் நான் தேசியவாதியாகவிருந்தேன்.
ஆண்ட பரம்பரையின் பெருமைகளில் மனதொன்றிக்
கற்பனைகளில் மூழ்கியிருந்தேன்.
பின்னுமோர் சமயம் நான் இடதுசாரித்தேசியவாதியானேன்.
தேசியம் கலந்த புரட்சியில் மனதொன்றியிருந்தேன்.
பின்னர் நான் மானுட வாதியானேன்.
யாதும் ஊரே! யாவரும் கேளிர் என்னும்
என் மூதாதையின் அன்றைய நோக்கில்
வியந்து கிடந்தேன்.
இன்று நானோர் பிரபஞ்சவாதி.
எதனையும் பிரபஞ்ச நோக்கில் வைத்து
அணுகுகின்றேன்.
தேசியத்தை, மார்க்சியத்தை, மானுடநோக்கினை
அவற்றின் நிலையில் வைத்து அணுகுகின்றேன்.
பிரபஞ்ச நோக்கில், மானுட நோக்கில்,
வைத்து அனைத்தையும் அணுகுகின்றேன்.
ஒரு சமயம் முரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாக
அணுகினேன். இன்றோ?
நட்புரீதியில் அவற்றைக் கையாள்கின்றேன்.
இன்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டாதீர்கள்!
கிணற்றுக்குள்ளிருந்து கத்தும் நுணல்களாக இருக்காதீர்கள்.
வெளியில் வாருங்கள்!
விரிந்து கிடக்கும் நீல வானைப் பாருங்கள். ஆங்கு
கொட்டிக் கிடக்கும் நட்சத்திரக் குவியல்களைப் பாருங்கள்.
வெளியினூடு அதி வேகங்களில் விரையும்
சுடர்க்கூட்டங்களைப் பாருங்கள்.
‘காலவெளி’யின் மாயா ஜாலங்களைப் பாருங்கள். அவற்றில்
மனதைப் பறிகொடுங்கள்.
பிரமாண்டமானதொரு வெளியில் விரையுமொரு வாயுக் குமிழிக்குள்
வளைய வரும் இருப்பைப் பாருங்கள்.
வெளியில் வாருங்கள். விரிந்து கிடக்கும் வானைத்தைப்போல
உங்கள் மனமும் விரிவதை அறிவீர்கள்.
புரிந்துகொள்வீர்கள்.

ngiri2704@rogers.com