நனவிடை தோய்தல்: தாயே! தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!

மகேஸ்வரி நவரத்தினம் (மங்கையற்கரசி, மங்கை) டீச்சர்!அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அம்மா எழுந்து விடுவா எவ்வித அலாரமும் இல்லாமல். குருமண்காட்டுப் பிரதேசத்தித்தின் சேவல்கள் ஆங்காங்கே தம் காலைக்கச்சேரிப் போட்டியினை ஆரம்பித்துவிடும் கூவல் ஒலிகள் தவிரப் பெரிதாக வேறெவ்வித ஒலிகளுமற்ற காலைப்பொழுதில் அம்மா அந்த அதிகாலை நேரத்தில் எழுந்து விடுவதற்குக் காரணமுண்டு. குழந்தைகள் நாம் ஐவர். வவுனியா மகாவித்தியாலயத்துக்கு நடந்து செல்ல வேண்டும். அம்மாவும் அங்குதான் ஆசிரியையாகப் படிப்பித்துக்கொண்டிருந்தார். ‘நவரத்தினம் டீச்சர்’ என்றால் தெரியும். அனைவருக்கும் காலை, மதிய உணவு தயாரித்து, அவற்றை உணவுக்`கேரியரி`ல் அல்லது வாழை இலையில் பார்சல்களாகக் கட்டி, பாடசாலை தொடங்குவதற்குள் அனைவரையும் கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும். செல்லும் வழியில் அன்று வவுனியா எம்.பி.ஆகவிருந்த தா.சிவசிதம்பரத்தின் வீடிருந்தது. அதற்குப் பக்கத்தில் ஸ்டேசன் ‘றோட்டி’ல் இராமச்சந்திரன் டீச்சர் வீடிருந்தது. அவர் ஒரு மொரிஸ் மைனர் கார் வைத்திருந்தார். சில சமயங்களில் அவருடன் அவர் காரில் பாடசாலை செல்வதுண்டு. அவரது கணவர் சட்டத்தரணி. மகன் இறம்பைக்குளக் ‘கான்வென்’டில் படித்துக்கொண்டிருந்தார். அவர்களை இறக்கிவிட்டு அனைவரும் மகா வித்தியாலயம் செல்வோம்.

அதிகாலை நேரங்களில் ஸ்டேசன் ‘றோட்டின்’ ஒரு புறத்தே பசிய வயல்கள் காட்சியளித்தன. பச்சைக் கிளிகள், குக்குறுபான்கள், ஆலாக்கள், மைனாக்கள், காடைகள், சிட்டுக் குருவிகள், மாம்பழத்திகள், நீண்ட வாற் கொண்டை விரிச்சான் குருவிகள், நீர்க்காகங்கள், மணிப்புறாக்கள்,.. எனப்பல்வகைப்புள்ளினங்களின் மலிந்திருக்கும் வனப்பிரதேசங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. இயற்கையின் தாலாட்டில் எந்நேரமும் தூங்கிக் கிடக்கும் வன்னி மண்ணின் அதிகாலப்பொழுதுகளை எண்ணியதும் கூடவே அம்மாவுடன் பாடசாலைக்குச் சென்ற பருவங்கள் படர்ந்த நினைவுகள் , அவருடன் வாழ்ந்த அனுபவங்கள் சிந்தையில் படம் விரிக்கின்றன.

இன்று (மார்ச் 26) அம்மாவின் நினைவுகள் அதிகமாக எழுகின்றன. அவருடன் வாழ்ந்த இனிய பொழுதுகள் நினைவிலெழுகின்றன. இனிமையான பொழுதுகள் அவை. காரணமுண்டு: இன்று அம்மாவின் நினைவு நாள். இருப்புள்ளவரை இருக்கப்போகும் நினைவுகள். காலம் மாறி விட்டது. காட்சிகள் மாறி விட்டன. ஆனால் நினைவுகள் மாறுவதில்லை. நிலையாக இருந்து விடுகின்றன. நினைவுகளின் தோய்தல்கள் மானுடப்பிறப்புக்கு இன்பம் சேர்க்கின்றன. அம்மா பற்றிய நினைவுகளும் அவ்விதமான நினைவுகள். இருப்புக்கு இன்பம் சேர்க்கும் நினைவுகள்.

தாயே! தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!

தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை
உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!
எங்கு சென்றாய் ?
நினைவுக் கோளத்தினொரு
சித்தவிளையாட்டாய்
இருந்து நீ சென்றதெல்லாம்
அன்னையே! என்
எண்ணப் பறவைகளின் வெறும்
சிறகடிப்போ ? இருந்தவிருப்பை
இதுவரை நான் இவ்விதம்
உணர்ந்தேனா ? இருப்புணர்ந்து
புரிவதற்கு உன்னிருப்பேயொரு
காரணியாயமைந்த விந்தையென்னே!
உன்னிழல் தொடர்ந்து வரும்
குஞ்சுகளாய் வருமெமையரவணைத்தாய்.
காத்து நின்றாய்.
உணர்வெல்லாம் காற்றாக நீ போனதினால்
நனவாய்க் கனவாய் வந்து வந்து
மோதும் செயலென்னே!
என்றேனும் உனைப்பற்றி நீ எண்ணியதுண்டா ?
நாம் நன்றாயிருந்தாலது போதுமென
உன்பணிசெய்து கிடந்தாயே ?
தாயே!உனை நாமெங்கினிக் காண்போமோ ?
இங்கு நீ இருந்ததெல்லாம்,
இங்கு நீ நடந்ததெல்லாம்,
இங்கு நாம் திரிந்ததெல்லாம்
இருந்ததொரு இருப்போ ?
விரியும் வினாக்கள் விடைநாடிச்
சிறகடிக்கும் சிட்டுக்களாய்
சித்தவானினிலே.
விடை தெரியா விடைநாடும்
வினாக்கள் பல சுமந்து
ஒட்டகமாயிப் பாலையிலே
காலையும் மாலையுமாய்
பயணமின்னும் தொடருமோ ?
பயணத்தின் ஒளித்தெறிப்பெல்லாம்
கானற் காட்சியாய் கடந்ததுவோ ?
பாலையும் கானலோ ?
இப்பயணமும் கானலோ ?
இங்கு இப் பயணமும்
கானலோ ?
நெஞ்சிலுரமூட்டியெமை வளர்த்தாய் தாயே!
அஞ்சிடாதுளம் தந்தெமை வார்த்தாய்.
நீ இருந்ததெல்லாம் தாயே! வெறும் நிழலா ?
நீ இருந்ததெல்லாம் தாயே! வெறுங் கனவா ?
உன்னிருப்புமென்னிருப்பால் விளைந்ததொரு
பொய்யானதொரு மெய்யோ ? தாயே!
பொய்யானதொரு மெய்யோ ?
உனது சொல்லும் செயலும்
உணர்வும் பரிவும்
பரவிக்கிடக்கும் வெளிக்குள்
வெளியாய் பரவிக் கலந்தாய்.
மீண்டுமொருமுறை
‘நான் ‘ ‘ஏன் ‘ ‘யார் ‘ என
ஆய்ந்திட வைத்துச் சென்றாய் ?
தாயே!
ஆயினுன் உயிரின் உறவின்
உதிரத் துளியாய் இன்னுமிங்கே
இருக்குமென் இருப்பில் நான்
உனைக் கண்டு தெளிவேன். அதனால்
உனைப் புரிந்தேனிந்த
உலகை அறிந்தேன். ஏன்
எனையும் தெரிந்தேன். என்
இருப்பில் இருந்த
உன்
இருப்பின் பொருள் உணர்ந்தேன்.
தாயே! பொருள் கண்டேன்.

– அம்மா நினைவாக அவரது மறைவின்போது எழுதிய கவிதை –

ngiri27042rogers.com