“மன நலம் மன்னுயிர்க் காக்கம்” என்கிறார், வள்ளுவர்.
மனநலம் என்பது மனநலப் பிரச்சினை இல்லாதநிலை எனப் பொருள்படாது. வாழ்க்கையை அனுபவிக்கவும் அதன் சவால்களுக்கு முகம் கொடுக்கவும்கூடிய ஒரு திறனே மனநலம் ஆகும். தனிப்பட்ட ஆளுமை, சூழல் மற்றும் சமூக, பொருளாதாரக் காரணிகள் ஒருவரின் மனநலத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. உணர்ச்சிகளைக் கையாளக்கூடிய திறனும், சமூகத் தொடர்புகளும் மனநலத்தைப் பேணுவதற்கு ஒருவருக்கு அவசியமானவையாக இருக்கின்றன. ஒருவருடைய நல்வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அல்லது ஒருவரால் கையாள முடியாத ஒரு நிலைமை stress அல்லது மன அழுத்தம் எனப்படுகிறது. தேவைக்கும் இருப்புக்கும் இடையிலுள்ள சமனின்மை அல்லது கையாளக்கூடிய திறனை மீறிய ஒரு நிலையே – மன அழுத்தம் என்கிறார், உளவியலாளர் – Richard S. Lazarus.
அச்சுறுத்தல் அல்லது அபாயம் ஒன்றிருப்பதாக ஒருவர் உணரும்போது, மன அழுத்தம் அவரது உடலின் இயல்பான எதிர்வினையாக அமைகிறது. உடல் வலி, துன்புறுத்துகின்ற ஒரு நெருங்கிய உறவு போன்ற வெளிப்புறக் காரணியாகவோ அல்லது நோய், பதற்றம் போன்ற உள்புறக் காரணியாகவோ அது இருக்கலாம். அந்நிலையில், அதிரினலீன், கோட்டிசோல் எனப்படும் இரசாயனப் பொருள்களை உடல் அதிகளவில் சுரக்கிறது. அவை அதிகரித்த இதயவடிப்பு, வியர்வை, இறுகிய தசைகள் என்பவற்றை விளைவாக்குகின்றன. அந்த அபாயகரமான அல்லது சவாலான நிலைக்கான பதிலளிப்பை மேம்படுத்துவதற்கு இந்தச் செயல்கள் யாவும் உதவுகின்றன.
உதாரணத்துக்கு வீதியைக் கடந்துகொண்டிருக்கும்போது கார் ஒன்று வேகமாக வருகிறது எனில் அது எங்களைக் காயப்படுத்தலாம் என்ற எங்களுடைய சிந்தனை, பயம் என்ற உணர்ச்சியை வரவழைக்க, சுரக்கப்படும் அந்த ஓமோன்கள் பதற்றமும் பரபரப்புமாக அவ்விடத்தை விட்டு உடனே வேகமாக ஓடுவதற்கான செயலாக்கத்தை எங்களில் விளைவாக்குகின்றன. இங்ஙனம். ஏதோ ஒருவகையில் எங்களில் மன அழுத்தத்ததை ஏற்படுத்தக்கூடிய ஒரு தூண்டியை நாங்கள் அனைவருமே அடிக்கடி சந்திக்கின்றோம். அது நேரமின்மையால் அல்லது முயற்சி பயன் அளிக்காமையால் உருவானதாகதாகவோ அல்லது உறவுப் பிரச்சினையால் அல்லது உரிமை கோரல் போராட்டத்தால் ஏற்பட்டதாகவோ இருக்கலாம்.
இந்தச் சிந்தனை, உணர்ச்சி, செயல் என்ற மூன்றும் ஒரு முக்கோணத் தொடர்பில் இயங்குகின்றன. சிந்தனை, உணர்ச்சி அல்லது செயலுக்குக் காரணமாகலாம்; அதே போல உணர்ச்சி, சிந்தனை அல்லது செயலுக்குக் காரணமாகலாம்; செயல், சிந்தனை அல்லது உணர்ச்சிக்குக் காரணமாகலாம்.
ஆதிகால மனிதனுக்கு விலங்குகளுடன் போராடுவதற்கு அல்லது அவற்றிலிருந்து தப்பி ஓடுவதற்கு மன அழுத்தத்தின் போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் உதவின, ஆனால் எங்களுக்கு மன அழுத்தத்தைத் தருகின்ற சூழ்நிலைகளில் பெரும்பாலானவற்றுடன் போராடவோ அல்லது அவற்றை விட்டு விலகி ஓடவோ முடியாத நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். மன அழுத்தம் தரும் அந்தச் சூழ்நிலைகளைச் சமாளித்தோ அல்லது அவற்றுக்குத் தீர்வு கண்டோ அவற்றிலிருந்து வெளியேற வேண்டிய நிலையே எங்களுக்கு உள்ளது.
மன அழுத்தம் எப்போதுமே உறவு முறிவு, இறப்பு, வேலை இழப்பு, பணப் பிரச்சினை, நோய் போன்ற துன்பமான நிகழ்வுடன் தொடர்பானதாக இருக்கவேண்டுமென்பதில்லை. பரீட்சை, பதவி உயர்வு, திருமணம், புது வீடு வாங்கல் போன்ற எங்களுடைய முன்னேற்றத்துக்கு உதவும் விடயங்களாகவும் அவை இருக்கலாம்.
ஆனால். எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லாத மன அழுத்தம் நீண்டகாலத்துக்கு எங்களுடன் இருக்கும்போது, எங்களின் பார்வைப் பரப்பை அது மூடு பனி போல மறைத்துவிடுகிறது. பிரச்சினைக்கு வெளியே எங்களால் பார்க்க முடியாதுள்ளபோது அது மன அழுத்தத்துக்குக் காரணமாகிறது. அந்தக் கட்டத்தில் கிரகிப்பதற்கோ, முடிவுகளை எடுப்பதற்கோ, அல்லது தன்னம்பிக்கையை உணர்வதற்கோ எங்களால் முடியாமல் இருக்கும்.
ஆதரவு இல்லாதவர்கள், மன அழுத்தத்துக்கான பல்வேறு தூண்டிகளைக் கொண்டிருப்பவர்கள், தங்களுடைய உணர்ச்சிகளைக் கையாளத் தெரியாதவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள், எதையும் எதிர்மறையாகப் பார்ப்பவர்கள், துன்புறுத்தலுக்குள் வாழ்பவர்கள் ஆகியோருக்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலைகளில் சில, பெண்களின் முக்கியமான பிரச்சினைகளாக இருக்கின்றன.
உயிரியல், சமூக காரணிகள் பெண்களுக்கு எதிராக இயங்குவதால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வீதம் பெண்களில் அதிகமானதாக உள்ளது. உயிரியல் காரணிகள் எனப் பார்க்கும்போது, மாதவிடாய், மகப்பேறு, மாதவிடாய் நின்று போகும் காலம் போன்ற நேரங்களில் உடல் இயக்கங்களை ஒழுங்காக்கும் ஓமோன்களின் ஏற்றமும் இறக்கமும் பெண்களில் அதிகமாகக் காணப்படுகிறது. அந்த நிலைகளில் ஏற்படும் மன அழுத்தம், சூழலில் ஆதரவு கிடையாத போது பன்மடங்காக்கப்படுகிறது.
சமூகத்தின் எதிர்பார்ப்பு பெண்களைப் பொறுத்தளவில் மிக அதிகமாக உள்ளது, கலாசாரத்தின் காவலர்கள் பெண்கள்தான் என்ற தோரணை ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரிடமும் பரவியுள்ளது. வேலை பார்த்தாலும் வீட்டுவேலைகளும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் பெண்களுக்கு இருக்கிறது. பிள்ளைப் பராமரிப்பு, பெற்றோர், மாமன் மாமியர் பராமரிப்பு, கணவனுக்குச் செய்யும் பணிவிடைகள், பிள்ளைகளினது செயற்பாடுகளின் அட்டவணையைப் பேணல் என மன அழுத்தமான ஒரு சூழலில்தான் பெண் எந்த நேரமும் வாழ்கிறாள். பிள்ளைகள் செய்யும் பிழைகள்கூட தாயின் வளர்ப்புத் தவறாகவே பார்க்கப்படுகின்றன.
அனேகமான சூழல்களில், அது வேலை செய்யும் இடமாக இருந்தாலென்ன, அல்லது வீடாக இருந்தாலென்ன பெண்கள் அதிகாரமற்ற ஒரு நிலையிலேயே உள்ளார்கள். வேலையிடத்தில் இருக்கும் பாலின வேறுபாடு, குடும்பப் பொறுப்புகள், சமனற்ற ஊதியம், போதுமான ஆதரவு கிடையாத நிலை என்பன பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக துன்புறுத்தலுக்கு அல்லது குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணை மன அழுத்தம் பல வழிகளில் தாக்குகிறது. அந்த வீட்டில் அவள் எந்த நேரமும் பயத்துடனேயே வாழ்கிறாள். விலகிச் செல்லமுடியாத அளவுக்கு நிதி நிலைமையும் சமூக அழுத்தமும் இருந்தால், தினமும் 24 மணி நேரமும் அந்தத் தாங்கொணாத்துயருடனேயே அவள் வாழவேண்டியிருக்கும். பாலியல் தொந்தரவு, பாலியல் வன்புணர்வு என பாலியலை அடிப்படையாகாக் கொண்ட வன்முறைக்குட்படும் பெண் அதன் மன வலியிலிருந்து மீள்தல் என்பது இலேசான ஒரு விடயமல்ல. எவரை, எங்கு பார்த்தாலும் என்னால் போராட முடியுமா, தப்பி ஓட முடியுமா என்ற பதற்றம் அவளைப் பின் தொடர்ந்துகொண்டே இருக்கும். அத்துடன் தாயுடனேயே பொதுவாகப் பிள்ளைகள் வாழ்வதால், வருமானம் குறைந்த ஒற்றைப் பெற்றோராக இருக்கும் பெண்ணுக்கு இந்த நிலைமை மேலும் மன அழுத்தத்தை அவளுக்குள் வளர்க்கும். தற்போது பெண்களால் வழி நடத்தப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் எங்களுக்குத் தெரிந்த ஒரு யதார்த்தம்தான். இவையெல்லாம் பெண்களைப் பிரத்தியேகமாகப் பாதிக்கும் சில பிரச்சினைகள் ஆக இருக்கின்றன.
குறித்த ஒரு பிரச்சினையை இனியும் சுமக்க முடியாது என்ற சிந்தனை மனதில் உருவாகும்போது – அது சலிப்பை விளைவாக்க – செய்யவேண்டிய செயலான முயற்சி கைவிடப்படுகிறது. ஊத, ஊத பலூன் ஒன்று பெருத்துப் பெருத்து இறுதியில் அந்த வளியின் கனவளவு அதிகரிப்பைத் தாங்க முடியாது வெடிப்பது போல – சமாளிக்க முடியாத கட்டத்தை அடையும் மன அழுத்தம் சூழ்நிலையாலான மனச் சோர்வாகிறது. அந்த நிலை வராமல் தடுத்தலுக்கு மன அழுத்தத்தைக் கையாளத் தெரிவது அவசியமாகவுள்ளது.
மன அழுத்தத்தைத் தூண்டும் சூழல் காரணிகள் தூண்டிகள் எனப்படுகின்றன. அவை சத்தமாகவோ, ஆக்ரோஷமான நடத்தையாகவோ, திரைப்படங்களில் அல்லது தொலைக்காட்சியில் வரும் சில காட்சிகளாகவோ இருக்கலாம். தூண்டிகள் எவ்வளவு வலுவானவையாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அதிகமாக மன அழுத்தமும் இருக்கும். உதாரணத்துக்கு வன்முறையைக் கையாளும் கணவர் ஒருவர் ஏதாவது கோபத்தில் சத்தமாகக் கதைக்கும்போது பிள்ளையும் அடம்பிடித்தால், தன்னுடன் சேர்ந்து பிள்ளையும் அடிவாங்கப் போகிறதோ என அந்த மனைவியின் மனம் கிலேசமடையும். எதிர்த்துப் பேசிய மனைவியை அடித்துக் கொலை என வானொலிச் செய்தியில் அந்த நேரம் சொல்லப்பட்டால் தானும் கொலைசெய்யப்பட்டுவிடுவேனோ என்று கூடப் பயம் வரலாம். நான் சந்தித்த பெண்ணொருவர் வீட்டில் சண்டை வரும் நேரங்களில் படுக்கைக்குப் போகமுன்னர் வீட்டிலுள்ள கத்திகள் போன்ற கூரான பொருள்களை எல்லாம் ஒளித்துவைத்துவிட்டே படுக்கச் செல்வாராம், அந்த மன அழுத்தம் பற்றி நீங்கள் கற்பனைசெய்து பார்க்க முடியும்.
கட்டுப்படுத்த முடியாதளவில் நீண்டகாலத்துக்கு மன அழுத்தம் இருக்கும்போது ஏற்படும் sugar cravings நிறை அதிகரிப்புக்குக் காரணமாகலாம் அல்லது பசியற்றுப் போக நிறை இழப்பு ஏற்படலாம். மேலும் இரைப்பை குடல் சார்ந்த பிரச்சினைகள், தோல் வருத்தங்கள், நிர்ப்பீடனத் தொகுதிச் செயல் இழப்பு, உயர் இரத்த அழுத்தம், கருக்கட்ட முடியாத தன்மை, இதய நோய்கள், பக்கவாதம், கிரகிப்பதில் சிரமம், ஞாபகசக்திப் பிரச்சினை, தன்னம்பிக்கை இன்மை, தீர்மானம் எடுப்பதில் பிரச்சினைகள், விரைவில் எரிச்சலடையும் தன்மை, தொடரும் கவலை, தலையிடி, வயிற்றோட்டம், வாந்தி, களைப்பு, உடலுறவில் நாட்டமின்மை, நித்திரை கொள்ள முடியாமை, மற்றவர்களிலிருந்து தனித்திருத்தல், கடமைகளைப் புறக்கணித்தல் போன்ற உடல்ரீதியான மற்றும் மனரீதியான பிரச்சினைகள் மன அழுத்தத்தால் ஏற்படுகின்றன.
மன அழுத்தத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்
1. குறுகிய கால மன அழுத்தம்
அண்மையில் நடந்த சம்பவங்கள் அல்லது அண்மித்த எதிர்காலச் சவால்களைப் பற்றி நினைப்பதால் உருவாகும் மன அழுத்தம் இது. அது அந்தப் பிரச்சினை தீர்வானதும் குறைந்துவிடும் அல்லது இல்லாமல் போய்விடும். இவை தலையிடி அல்லது வயிற்றுக் குழப்பத்தை உருவாக்கலாம். உதாரணத்துக்கு, இரவில் தனிய நடந்துபோகும் ஒரு பெண்ணுக்கு எவராவது பின் தொடர்ந்து கடத்திவிடுவார்களோ, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப் படுவேனோ என்ற அச்சம் இருக்கும். இதை வாசிக்கும் பெண்கள் அனுபவித்திருக்கலாம். நீண்டகாலத்துக்கு இப்படி அடிக்கடி நிகழ்ந்தால் அது ஆபத்தானதாக அமையலாம்.
2. அடிக்கடி நிகழும் குறுகிய கால அழுத்தம்
மன அழுத்தத்துக்கான தூண்டிகளுடன் வாழ்பவர்கள், அடிக்கடி குறுகிய கால மன அழுத்தத்துக்கு உட்படுகிறார்கள். அதிகரித்த வேலைப் பழு உள்ள, அல்லது தொடர்ந்து அளவுக்கதிகமாகக் கவலைப்படும் ஒருவருக்கு இது நிகழலாம். துன்புறுத்தும் ஒரு உறவில் இருக்கும் பெண்களுக்கு இது மிகவும் பொருந்தக்கூடியதாக உள்ளது.
உதாரணத்துக்கு, வீட்டில் ஒரு சண்டை நடந்தபின்னர் பெண்ணுக்கு உடலுறவில் நாட்டமிராது. எனவே அன்று இரவு படுக்கப் போகும்போது வல்லுறவு நடக்கலாம் அல்லது சண்டை பெருக்கலாம் என்ற அச்சத்திலான மன அழுத்தம் அந்தப் பெண்ணுக்கு இயல்பாக இருக்கும்.
3. நாள்பட்ட / நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும் மன அழுத்தம்
இது ஆபத்தானது, தொடர்ந்திருக்கும் வறுமை, முரண்பாடுகள் நிறைந்த குடும்பம் அல்லது சந்தோஷமற்ற திருமண வாழ்வு இதற்குக் காரணமாகலாம். மன அழுத்தத்துக்குக் காரணமான தூண்டிகளிலிருந்து விலக முடியாத அல்லது தீர்வுகளைத் தேடுவதை நிறுத்திய ஒருவருக்கு இது ஏற்படலாம். துன்புறுத்தும் ஒரு உறவில் இருந்து விலக முடியாமல் இருக்கும் பெண்களுக்கும் உணர்வதிர்ச்சிக்கு உட்பட்டவர்களுக்கும் (traumatic experience) இது பொருந்தக்கூடியது. இவர்களுக்கு மனச் சோர்வு ஏற்படும் சாத்தியமும் அதிகமாக இருக்கும். பிள்ளைகளையும் வீட்டையும் கவனித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்குத் தன் வயதான அல்லது நோய்வாய்ப்பட்ட பெற்றோரைப் பராமரிக்க முடியாதுள்ளபோது அல்லது பராமரிக்கும்போது இவ்வகையான மன அழுத்தம் ஏற்படலாம். நான் சந்தித்த ஒரு பெண் படுக்கையாக இருக்கும் மாமியாரையும் தனது 3 குழந்தைகளையும் மாமனாரையும் பிள்ளையைப் பராமரிப்பது போல அவரது கணவரையும் பராமரிக்கிறார். அவருக்கு இருக்க்கூடிய மன அழுத்தத்தின் அளவு பற்றி சிந்தியாத துணைவருடனான வாழ்வு எப்படி இருக்கும் என்பதை உங்களுடைய ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இவ்வகையான பிரச்சினைகளுக்கு சமூகரீதியான மாற்றமே தேவைப்படுகிறது. பிள்ளைப் பராமரிப்பு, வயதானோர் பராமரிப்பு வசதிகள் கட்டுபடியாகக்கூடிவையாக அமைந்திருந்தால் பெண்களுக்கு உதவிசெய்யும். அத்துடன் கலாசாரீதியான முடிவுகள் மாற்றப்படவேண்டும். எங்கடை நாட்டிலை அப்படித்தானே செய்தவை என்ற நிலைப்பாடும் பெண்களில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களும் நிறுத்தப்பட வேண்டும்.
மன அழுத்தத்தை குறைப்பதற்கு அல்லது அதனைக் கையாளுவதற்கு ஒரு வழியாக மன அழுத்தத்தை உருவாக்கும் விடயத்திலிருந்து எங்களுடைய மனதைத் திசை திருப்ப நாங்கள் முயற்சிக்கலாம். மன அழுத்தத்தைத் தரும் விடயத்தை எப்போதும் நினைத்துக் கவலைப்படாமல் அதற்கென ஒரு நேரம் ஒதுக்கலாம். இது mindfulness எனப்படுகிறது. அந்தச் சிந்தனை வரும் போது அதைத் தவிர்க்காமல் அதை அப்படியே உணரலும் அந்த உணர்ச்சிகளைப் பெயரிடலும் எவ்வளவு அவசியமோ அதனை எப்போதும் நினையாமல் இருத்தலும் அந்தளவுக்கு முக்கியமாகும். அதற்கு வாசித்தல், படம் பார்த்தல், நண்பர்களை அழைத்துக் கதைத்தல் என்பவை உதவும். அதேபோல மனதை அமைதிப்படுத்த சமைக்கலாம், பாட்டுக் கேட்கலாம் அல்லது வெளியில் போய் உணவகம் ஒன்றில் சாப்பிடலாம். அணைப்பதும் நல்லது, தொடுகை ஒட்சிரோசனை உடல் உருவாக்குவதற்கு உதவுகிறது, கோட்டிசோலினதும் அதிரினினலினதும் விளைவுகளைச் சமப்படுத்த ஒட்சிரோசன் உதவும். ஒருபோதும் what if, அதாவது அப்படியிருந்தால் நல்லாயிருக்குமே, இப்படி செய்திருக்கலாமே என நினைப்பதைத் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தின் பதட்டத்தைக் குறைப்பதற்கு, மனதில் உள்ள கவலையை அல்லது கோபத்தை ஒரு பலூனினுள் அனுப்புவதகாக பாவனை செய்து அதனை ஊதுதல் அல்லது காற்றைப் பலமாக வாயினால் வெளியிடல் உதவலாம். அல்லது தலையணையில் கோபம்தீரும் வரை அடிக்கலாம்.
மன அழுத்தத்தை உருவாக்கும் காரணிகள் பற்றிப் பட்டியலிடல், அதனை அங்கீகரித்து அந்த அழுத்தத்திலிருந்து வெளியேற எங்களுக்கு உதவிசெய்யும் – அவற்றில் எவற்றை, எப்படித் தீர்க்கலாம் என ஆராய்ந்து, தீர்ப்பதற்குச் சுலபமாக சிறிய விடயத்தில் ஆரம்பித்தால் அது தன்னம்பிக்கையை நாங்கள் மீளவும் பெறுவதற்கு உதவிசெய்யும். அத்துடன், விட்டுக்கொடுத்தல், முன்னுரிமைகளைத் தீர்மானித்தல், முடிந்ததைச் செய்தல், முடியாவிடில் முடியாது எனச் சொல்லல், எங்களை நாங்களே கவனித்தல் என்பன மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு அவசியமானவையாக உள்ளன.
ஆரோக்கியமான உணவுண்ணல், ஒழுங்கான தேகப்பியாசம் செய்தல், விருப்பமான பொழுதுபோக்குக்கென நேரம் ஒதுக்கல், மன அழுத்தத்தைச் சமாளிப்பதற்குக் கற்றுக்கொள்ளல், போதுமானளவு நேரம், 7-9 மணி நேரம் நித்திரை கொள்ளல், உதவி தேவையான போது குடும்பத்தவரிடமும் நண்பர்களிடமும் கேட்டல், அவர்களுடன் எங்களுடைய பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளல் என்பன எங்களைக் கவனிப்பதற்கு நாங்கள் செய்ய வேண்டிய செயல்களாகும்.
நம்பிக்கைக்கு உரிய ஒருவருடன் கதைப்பது, பிரச்சினையை வித்தியாசமான விதத்தில் பார்க்க உதவக்கூடும், அல்லது குறித்த ஒருவரிடம் சொல்லி அழுவதில் ஓர் ஆறுதல் கிடைக்கலாம், அதன்பின் எங்களின் மனதில் ஒரு தெளிவு வரக்கூடும்.
மேலும், மற்றவர்களுக்கு உதவிசெய்தல் எங்களைப் பற்றி நாங்கள் நன்றாக உணர வழிவகுக்கும். என்னுடைய தமிழ் ஆசிரியர் வேலையும், மொழிபெயர்ப்பாளர் வேலையும் ஒரு மனநிறைவைத் தருவதன்மூலம் என்னுடைய மன அழுத்தத்தை நான் கையாள்வதற்கு எனக்கு உதவிசெய்கின்றன. இவற்றுடன் ஆரோக்கியப் பராமரிப்பாளர் ஒருவருடன் கலந்தாலோசனை செய்தலும், ஈடுபாட்டுடன் பிரச்சினை தீர்க்கும் வழிகள் ஆக உள்ளன.
நாள் முழுக்க படுக்கையில் இருத்தல், தனித்திருத்தல் என்பன மூலம் பிரச்சினையைத் தவிர்க்க முயற்சித்தல் எங்களுக்கு எவ்வகையிலும் உதவிசெய்யமாட்டாது.
பிரச்சினையை ஏற்றுக்கொள்ளலும், மன வலியைத் தவிர்க்க முடியாது, ஆனால் அந்தத் துயரத்தினுள் மூழ்வதைத் தவிர்க்கலாம் என்ற தெளிவும், சிந்தனை, உணர்ச்சி, செயல் என்ற அந்த முக்கோண நிலையில் உருவாகும் எதிர்மறையான சுழற்சியை நிறுத்துவதற்கு உதவிசெய்யலாம். உணர்ச்சிரீதியாகப் பலத்தை உணரும்போது மன அழுத்தத்தைக் கையாளும் வல்லமை எங்களுக்கு வந்துவிடும்.
ஆனால் மன அழுத்தம் வன்முறையின் விளைவால் ஆனதாக இருப்பின் மேல் கூறியவை பெரிதாகப் பயனளிக்காது. “Men are afraid that women will laugh at them. Women are afraid that men will kill them” என Margaret Atwood என்ற நாவலாசிரியரின் மேற்கோள் ஒன்று கூறுகிறது. அனேகமான பெண்கள் கொலைசெய்யப்படுவது அவர்களுடைய நெருங்கிய உறவுகளினாலேயே என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். இதற்கு சமூக மாற்றமே அவசியம். சமூகம் மாற வேண்டும், பாலியல் சமத்துவம் சிறுவயதிலேயே கற்பிக்கப்பட வேண்டும். விரும்பியதைப் பெறுவதற்கு வன்முறையும் ஒரு வழி என்ற மனப்பாங்கு அகற்றப்பட வேண்டும். விவாகரத்தான பெண்ணை சமூகம் பார்க்கும் பார்வைகள் மாறவேண்டும்.
சில பெண்களுக்குத் தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பதோ தொலைபேசியில் நாளைக் கழிப்பதோ உதவி செய்யலாம். நாடகங்களில் நேரம்செலவழிப்பதைப் பற்றி வேறுபட்ட பார்வைகள் இருந்தாலும்கூட நாடகத்தில் வரும் பாத்திரத்தின் வாழ்வினை தன்னுடையதுடன் ஒப்பிட்டு அவர்கள் ஆறுதலடையலாம் அல்லது ஒரு திசை திருப்பலாக இருக்கலாம். வாழ்க்கையின் பல கட்டங்களில் பலவகையான மன அழுத்தங்கள் வந்தபோதும், அதிலிருந்து மீள எனக்குதவியது என்னுடைய நண்பர்களும் என்னுடைய எழுத்தும்தான். உங்களுடைய மன அழுத்தங்களில் இருந்து மீள்வதற்கு, அதிலிருந்து மீள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு எது உதவுகிறதோ, அதை இறுக்கிப் பிடித்துக்கொள்ளுங்கள்.
sri.vije@gmail.com