முன்னுரை
தமிழ் இலக்கணங்களில் பகுப்பாய்வுகளின் வழி நம் முதாதையோர் வாழ்ந்து பயன்படுத்திய இலக்கண மரபுகளை முதற்இலக்கணம் வாயிலாக அறியமுடிகிறது. சொற்களைக் கையாளும் முறையிலும், பயன்படுத்தும் முறையிலும் இலக்கணங்களின் பங்கு அளப்பறியது. சொற்களை பயன்படுத்தும் பொது காலம், இடம், சூழல் பொருத்து அமையும். அப்போது வினைச் சொற்களின் பங்கு மிகமுக்கியமானதாக அமையக் கூடும்.
தொல்காப்பியரின் காலத்தில் வழங்கப்பட்ட வினைச்சொற்கள் வாயிலாக முக்காலத்தில் பயன்படுத்திய சொற்களை அறியமுடிவதோடு ஒருவரிடம் ஒரு செயலை அல்லது வேலையை கூற முற்படும் போது அவர் அவ்வேலையை பணிவாக கூறவும், கேட்டுக்கொண்டதற்கு இணங்க விரைந்து செய்து முடிக்க ஏவல் வினையை பயன்படுத்திலுள்ளனர். இவ் ஏவல் வினையை பயன்படுத்தும் போது ஏன், யா, ஓ, ஏ என்றும் வினாக்குறியீடுகள் ஏவல் வினைகளில் இணைக்கப்படுதல் தமிழ் மொழியில் காணப்படும் ஒருவகை மரபாக அமைந்துள்ளது.
பொதுவாக மக்கள் மனம் பிறர் ஏவுவதை விரும்புவதில்லை அது ஏவலேயாயினும் அன்போடும் பணிவோடும் கூறவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய கோட்பாடுகளை கொண்டு தொல்காப்பியர் கூறப்படும் ஏவல் வினையை ஆராய்வதாகவும் வினையில் வினாவின் ஆற்றல் குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமையக்கூடும்.
தொல்காப்பியரின் முன்னிலை வினையும் ஏவலும் வேறுபடுத்திக் காட்டவில்லை (தொல். சொல் 223, 224) இந்நூற்பாக்களின் ஏவல் வினையினை சுட்டியுள்ளார். மேலும் (நேமி.45), (நன்:330), (இல.வி.236 616) ஆகிய இலக்கண நூல்களும் தொல்காப்பியத்தை ஏற்கிறது. (தொல். எச். 210,214) ஆகிய நூற்பாக்களில் ஏவலில் வரும் குறிப்பொடுத் தோன்றும் பவணந்தியார் முன்னிலை வினைய வினையிலிருந்து ஓரளவு வேறுபடுத்தி காட்டியுள்ளார் எனலாம் (நன் 335, 337). மேலும்,
முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே (தொல்.சொல். 452)
என்றும்
முன்னிலை முன்ன ரீயு மேயும்
அந்நிலைமரபின் மெய்யூர்ந்து வருமே (முத். 760)
தொல்காப்பியரின் ஏவல் முன்னிலையில் மட்டும் வழங்கும். (வீர. 79), (நன். 336), (இல.வி. 358), (தொன்.வி. 113) இவ்விளக்கணங்களை ஏற்பதோடு. முன்னிலையில் ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு என்றும் குறிப்பிடுகிறார்.
உண்ணுதி, உண்டி போன்ற இகர விகுதி பெற்ற சொற்களும் (தொல். சொல். 223) ஒருமையிலும் உம் விகுதி பெற்ற சொற்கள் பன்மையிலும் வழக்கிலுள்ளன என்பார். பேச்சு வழக்கில் செல், வா, போ என்பன போன்ற சொற்கள் ஒருமையிலும், வாரும், செல்லும், வாருங்கள், செல்லுங்கள், செய்யுங்கள் என்று சொற்கள் பன்மையிலும், உயர்வு காரணமாகவும் வரும்.
வினாவும் ஏவலும்
ஒருவர் மற்றொருவரிடம் ஒரு செயல் செய்ய கூறும் போது அவர் அந்த ஏவுவதை விரும்புவதில்லை. அந்த ஏவலேயாயினும் அன்போடும், பணிவோடும் கூறவேண்டுமென எதிர்பார்க்கிறார். ஆகவே ஒருவர் மற்றொருவரிடம் ஏவும் போது கட்டளையாகக் கூறாமல் தனது விருபத்தை தெரிவிக்கும் பொருட்டு பணிவான ஏவலை அமைத்துக் கொள்ளுகின்றனர். எடுத்துக் காட்டாக, ‘இதை செய்’ என்பதற்கு பதிலாக ‘இதை செய்து தருகிறாயா’ என்று பணிவுடன் கேட்கிறோம். ‘தருகிறாயா’ இது வினாவாக இருந்தாலும் ‘செய்’ என்னும் ஏவலைக் குறித்து நிற்கிறது. இதனை மறைவான ஏவல் என்றும் கூறலாம். இப்படி கூறுகையில் நாம் கட்டளையாக கூறவருவதை மறைத்து தம் விருப்பத்தினை தம் விரும்பும் ஏவலை தெரிவிக்கப் பயனுள்ளதாக அமைகிறது. வாயேன் இச்சொல்லில் ‘வா’ என்று கூறுகையில் வருகையை குறிப்பதாகவும் இதில் ‘ஏன்’ என்ற வினாவைச் சேர்த்து அன்பு கலந்த ஏவலாக மாற்றி வாயேன் என்றழைக்கிறோம். அப்படியே ‘வாரும்’ ‘வாருங்கள்’ என்றால் போது ‘வாருமேன்’ ‘வாருங்களேன்’ என்று கூறியழைக்கிறோம். ஏவலை விடுக்கும் போது அந்த ஏவலோடு வினாவை இணைத்துத் தாம் விரும்பும் ஏவலை அன்போடு அழைக்கும் வழக்கு சங்க காலத்திலிருந்து வழக்கிலுள்ளது. சங்க இலக்கியத்திலும், இலக்கண ஆசிரியர்களும் தமது நூல்களில் பதிவுச் செய்துள்ளனர். முதற் இலக்கண நூல்களான, தொல்காப்பியத்திலும், நன்னூலிலும் ,
ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா அ
(தொல். எழு. 32)
பிற இலக்கணங்களிலும்,
(வீ 3,4),( நன்.67), (இல.வி.6), (மு.வீ. 17.30), (ஏழா.இ. 239, 233, 234)
வினா எழுத்துக்கள் பற்றி வழி அறிய முடிவதோடு,
யாவென் வினாவின் ஐயென இறுதியும்
ஆ யியல் திரியாது என்மனார் புலவர்
ஆவயின் வகரம் ஐயொடுங் கெடுமே (தொல். எழு. 178)
எ யா முதலும் ஆஒ வீற்றும்
ஏ யிரு வழியும் வினாவா கும்மே ( நன். 67)
என்றும்,(தொல்.எழு.178), (நன்.202), (மு.வீ.212, 216), ஆகிய நூற்பாக்களும், இலக்கண் ஆசிரியர்கள் அவர்களது காலத்தில் வழங்கப்பட்ட வினா வகையினை பதிவுச்செய்துள்ளனர்.
முன்னிலை விகுதியாக ‘மின், அடைநிலையாகிய ‘சின்,’ முன்னிலை அசைச்சொற்களாக ‘மியா’, ‘மோ, ஏ’ என்றும் இலக்கணத்தார்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில்,
‘மின்’
தொல்காப்பினாளும், பவணந்தியாளும் ‘மின்’ என்ற முன்னிலை விகுதியை குறிப்பிட்டுள்ளனர்.
இர் ஈர் மின் னென வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்
சொல்லோ ரன்யை என்மனார் புலவர் (தொல், சொல். 225)
(நன் 334,337), (இல.வி. 238), (மு.வீ. 619) ஆகிய இலக்கணங்களில் ஏவல் என்று தெளிவுப்படுத்திக் காட்டியுள்ளனர். ՙமின்՚ விகுதிக்கு சான்றாக உண்மின், சென்மின், நடமின், போற்றுமின் என்று முன்னிலை ஒருமையை நன்னூல் உரையாசிரியர் விளக்கம் அளிக்கின்றனர். முத்துவீரியமும்
இர் ஈர் மின்னீ றாம்பெயர்க் கிழவி
பல்லோர் மருங்கினும் பவொடுஞ் சிவணும் (மு.வீ. 619)
தொல்காப்பியரும், நன்னூலாரும், இலக்கண ஆசிரியர்களும் குறிப்பிடாது போயினும் ‘செய்யும்’ என்றும் வாய்பாட்டு ஏவல்கள் சங்க காலத்தில் வழங்கியுள்ளன என்பதை எவரும் மறுத்தல் இயலாது. விகுதியைக் குறிப்பிடுகையில் ‘உம்’ என்பதை ஏவல் பன்மை விகுதியாகக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் அதனைக் குறிப்பிடாது விட்டுவிட்டனர் எனலாம்.
உண்ம் (புறம். 178), தின்ம் (புறம். 150) ஆகிய வினைச்சொற்கள் சங்ககாலத்தில் வழங்கியுள்ளதை காணமுடிகிறது. தற்காலத்தில் உண்ணும், கொள்ளும், தின்னும் என்று வழங்கும் சொற்களின் உகரம் கெட்ட உருவமேயாகும். சேர்மின் (புறம்.9) உண்மின், சென்மின் போன்ற சொற்களும் சங்ககாலத்தில் ஏவற் பன்மையில் வழங்கியுள்ளன.
தற்காலத்தில் நீர்செய்யும், நீர் செய்யுமேன் என்றும் ஏவல்வினைகள் பயன்படுத்தியுள்ளனர். ՙசெய்யுமேன்՚, ՙசெய்மேன்՚, இச்சொற்கள் செய்மின் என மாற்றம் அடைந்து வழங்கியிருக்கலாம். என கருத இடமுண்டு செய்யுமேன் என்னும் வினையில் ஏவல் குறித்து நிற்பது ‘உம்’ விகுதியோயாகும் ‘ஏன்’ வினாவாகவும் அதுவே ՙஎன்՚ என்று மாறிப் பின்னர் ՙஇன்՚ எனத்திரிந்திருக்கலாம். எனவே சென்மின், உண்மின், உண்மின் என்பன
செல் – உம் – ஏன் உண் – உம் – ஏன்
>சென்ம் – ஏன் >உண்ம் – ஏன்
>சென்மேன் >உண்மேன்
>செண்மின் >உண்மின்
என்று சென்மின், உண்மின் என்ற உருவங்களை அடைந்திருக்கலாம். உம் ஏவல் பன்மை விகுதியாகும் இன் (>என் > ஏன்) (தொல். சொ. 274) வினாக்குறி ஏவலை அன்புடன் தெரிவிக்கப் பயனுள்ளதாக அமைகிறது. ‘மின்’ என்னும் வடிவம், இலக்கண நூலார் ‘உம்’ என்பதைப் பன்மை விகுதியாகக் கொண்டுக் கொள்ளாததால் பிறழ்பிரிப்பினால் (Meta malysis) கொண்ட தவறான விதியேயாகும்.
‘சின்’
‘சின்’ என்னும் ஒரு அடைநிலையைத் தொல்காப்பியர் அசைநிலையை முன்னிலைக்கும் சிறப்பாகக் கூறிப் பின்னர் மூவிடங்களுக்கும் வரும் என்பதை (தொல். சொல் 275, 276) குறிப்பிடுகிறார்.
மியா இக மோ மதி இகும் சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை அச்சொல்
(தொல். சொல். 275)
அவற்றுள்
இகுமுன் சின்னும் ஏனை இடைத்தொடும்
தகுநிலை உடைய என்மனார் புலவர் (தொல். சொல். 276)
(இல.வி. 276), (தொன்.வி. 137), (மு.வீ. 663, 665) ஆகிய இலக்கண நூற்பாக்களின் வழியும் பவணந்தியார் அதனை மூவிடங்களுக்கு உரிய அசை நிலையாகக் குறிப்பிடபடுவதோடு. (நன். 441). சங்க இலக்கியங்களும் இது மூவிடங்களிலும் வழங்குகின்றது. இதன் வடிவம் ՙசின்՚ என்று ‘இசின்’ ஆகும் என்று நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுகிறார். இதன் வடிவம் ‘இசின்’ என்று உரையாசியர் தரும் எடுத்துக்காட்டுக்களை நோக்கும் போது எளிதாக புரிந்துக்கொள்ள முடியும்.
இதனை தன்மை, படர்க்கை இடங்களில் இறந்த காலத்திலும், முன்னிலையில் பெரும்பாலும் ஒருமை ஏவலிலும், சில இடங்களில் இறந்த காலத்திலும் வழங்குவதை சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. ஏவல் ஒருமையில் வழங்கும் சில வடிவங்களேயாகும். ‘பெற்றசின்’ (புறம். 125) ‘உரைத்திசின்’ (குறு. 63) எனும் சொற்கள் முன்னிலை, ஏவல் ஒருமையில் வழங்கும் என்றும், அவைகளைப் பிரிப்பின் வந்து-இசின், உரைத்து – இசின் என்றழைக்கலாம். ‘இசின்’ என்பதன் பழமையாது எனக் கவனிப்போம் இது ஈ என்றும் அடிச்சொல்லைக் கொண்டு ஈகு (+ஏன்) என வழங்கிய துணைவினையாக இருக்கலாம்.
தற்காலத்தில் தந்திடேன், வந்துளேன், செய்திடேன் என துணைவினையை ஏவலில் அமைத்துக் குறிப்பிடுவதை காண்கிறோம். எனவே வந்திசின், உரைத்திசின் என்ற சொற்கள் மிகப்பழங்காலத்தில் வந்தீகேன், உரைத்தீகேன் என வழங்கி இருக்கலாம். வந்து உரைத்து என்பவற்றிலுள்ள – ந்த் -, -த்- என்பன இங்கு காலங்காட்டுதல் இல்லை. ஈ என்னும் அடிச்சொல்லை ஏவலில் வழங்கும் என டாக்டர் சதாசிவம் குறிப்பிடுகின்றார். –கு- என்பது, ஆகு நோகு என்பனவற்றில் வருகின்றது போன்ற சொல் துணை உருபு (formative suffix) ஆகும். இன் என்பது ஏன் என்பதன் திருபாகும்.
ஏன் என்னும் வினாக்குறி இங்கும் ஏவலை அன்போடும் தெரிவிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் வடிவம் கால போக்கில் மாறிவிட்டது. இன்று இலக்கண நூலார் தவறாகப் பிரித்து நமக்குச் “சின்” என்ற ஒரு அசைநிலையைத் தந்துள்ளனர்.
வந்து – ஈ (கு) – ஏன்
வந்து – இகு – ஏன்
வந்து – இசு – ஏன்
வந்து – இசின்
வந்திசின்
ஈ துணைவினையடிச் சொல் கு – முன்னர் விளக்கப்பட்டது. ஈ>இ, என்ற மாற்றம் ஒப்புமையாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் பெரும்பாலான துணைவினைகள் குறிய உயிரோடு தொடங்குகின்றன. எ-கு. அருள், விடு, இரு, கு>சு அண்ண வினமாதல் (Palatalization) முன்னர் உள்ள அண்ணலின் உயிரின் ஆற்றலால் மாறி இருக்கலாம். ஏன்> என் >இன் என மாற்றம் பெற்றிருக்கலாம்.
ஈ(கு) என்னும் துணைவினை (Auxiliary verb) இப்போது வழக்கிலிருந்து விட்டது. சின் (<இசின் < ஈகு >ஏன்) அசைநிலை கூறுவது நூற்பாவில், நன்னூலார் இருந்து இட்டு போன்ற துணைவினைகளை அசைநிலைகள் எனக் கூறுவதும் (நன் 441) இம்முடிவை உறுதி செய்து நிற்கின்றது.
மியா
மியா-வை முன்னிலை அசைச் சொல் என்று இலக்கணலாளர்கள் குறிப்பிடுவதோடு, (தொல். சொல் 275) குறிப்பிடுகின்றது. இதனை விளக்கும் வகையில் கேண்மியா, சென்மியா என்பனவற்றை கூறலாம் இவை ஏவல் பொருளில் வருவனவும், சங்க இலக்கியங்களும் இதனை விளக்கியுள்ளது.
தொல்காப்பியர் ஒரு இடத்தில் மட்டும் ‘உரையசைமியா’ (தொல் எழு. 224) என்று குறிப்பிடுகிறார். (வீ. 24), (நன். 171, 172), (இல. வி. 89,90), (தொன். வி. 32), (மு.வீ. 248, 258) ஆகிய இலக்கணங்களில் ஏவலைக் குறித்து நிற்கின்றன என்று தெளிவு. சங்க இலக்கியத்தின் பார்வையில் ஒருமையில் வழங்குகின்றது. இத்தகைய ஒருமை வழக்குகளுக்கு அமைதி கூறுதல் இயலும். முதன்முதலில் பன்மையில் வழங்கி பின்னர் உயர்வு ஒருமையில் (Honorific singular) இடம் பெற்றிருக்கலாம். முன்னர் விளக்கியப்படி ‘கேண்மியா’ , ‘சென்மியா’ என்ற சொற்கள் அமைப்பை. ՙஅல்வழி யாமா மியாமுற்று முன்மிகா՚(நன். 171)
கேள் – உம் – யா செல் – உம் – யா
கேளும் – யா செல்லும் – யா
கேண்ம் – யா சென் – யா
கேண்மியா செண்மியா
ՙயா՚ என்பது வினாக்குறியே கோளும், செல்லும் என்று கூறுவதை விட கேண்மியா, சென்மிய என்று கூறுவதை ஏவலை அன்போது தெரிவிக்க முடிகிறது.
மியா முன்னிலையில் வரும் என்று குறிப்பிட்டிருப்பதும் தொல்காப்பியனார் அது ஏவல் குறிக்கும் என்று புலப்படச்செய்வதும் ՙஉம்՚ என்னும் ஏவற் பன்மை விகுதி அல்லது அதன் வேறுபட்ட வடிவம் அங்கு உள்ளது என்பதை ஆய்வாளர் அறிந்து கொள்ள செய்யும் எனவே மியா ஒரு அசைச்சொல் என்று என்பது தெளிவாகிறது.
மோ
அசைச்சொற்களில் ՙமோ՚ ஒரு முன்னிலையசைச் சொல் என்று தொல்காப்பியனாரும் நன்நூலாரும் (தொல் சொல் 275) குறிப்பிட்டுள்ளனர். இச்சொல் முன்னிலையில் வழங்கும் என்று அவர்கள் கூறாமலே தெளிவாகிறது. ՙமோ՚ என்ற அசைச்சொல் சங்க இலக்கியங்களில் உரைமோ (ஐங். 66) உள்ளுமோ (புறம். 48) மொழிமோ (குறுந்.2:2) என்று ՙமோ՚ அசை வழங்கியதை காணலாம். இச்சங்க பாடல்களில் வழி ՙஉம்՚ ஏவற்பன்மை விகுதியாக உள்ளது, ՙஓ՚ வினாக்குறி ஏவலை அன்புடன் உணர்த்தப்படுகின்றது.
ՙமோ՚ என்பதை அசைச்சொல் எனக் கொண்டிருக்கலாம். இவ்வுறுப்புடன் வழங்கும் சொற்கள் ஒருமையால் வழங்கினாலும் உயர்வு ஒருமையைக் குறிப்பனவேயாகும்.
சொல் – உம் – ஓ உள் – உம் – ஒ
செல்லும் – ஓ உள்ளும் – ஒ
சென்ம் – ஓ உள்ளுமோ
சென்மோ
ஏ
முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே (தொல். சொல். 934)
தொல்காப்பியரின் நூற்பாவை அப்படியே நன்நூலார் எடுத்தாளுகின்றார். எனினும் தொல்காப்பியர் ‘எச்சவியலில்’ கூறியது போன்று அதற்கு ஒப்பான ‘பொதுவியலில்’ கூறயது ஒருமை விகுதிகளைக் கூறும் நூற்பாவுக்கும், முன்னிலை ஒருமை விகுதிகளை கூறும் நூற்பாவுக்கும், இடையில் (நன். 336) வைத்துள்ளார். மேலும் (மு.வீ. 79), (நன்.336), (இல.வி.358), (மு.வீ 760), (தொன்.வி 113), (ஏழா.இ.243, 244) ஆகிய இலக்கணங்களில் கூறப்பட்டுள்ள ஏவல்வினையை இருந்தபோதிலும் உரையாசிரியர்கள் ஏவலைப் பற்றி கூறும் நூற்பாவாகவே கருதுகின்றனர்.
தொல்காப்பியர் ‘முன்னிலை’ என மட்டும் கூறினார் ஒருமையா பன்மையா எனத் தெளிவுப்படுத்தவில்லை. சங்கரநமச்சிவாயர் ‘முன்னிலை ஏவல் முற்று’ எனக் குறிப்பிடுகிறார் இளம்பூரனார் ஈ, ஏ என்றும் இடைச் சொற்கள் முன்னிலைக்கண் ஆனவை என்கிறார். உரையாசிரியர்கள் சென்மே, நின்மே என்றும் எடுத்துக் காட்டுகளைத் தருகின்றனர். சங்க இலக்கியங்களில் செய்ம்மே (புறம். 46) களைமே (புறம். 145) பிரிமே (ஐங். 308) என்ற சங்க பாடல்களின் வழி அறியலாம்.
செய் – உம் – ஏ பிரி – உம் – ஏ
செய்யும் – ஏ பிரியும் – ஏ
செய்ம் – ஏ பிரிமே
செய்ம்மே
இவைகளில் ஏவற்பண்மை விகுதி ‘உம்’ உயர்வு ஒருமையில் வழங்குதலை காணமுடிவதோடு. ‘ஏ’ முன்னிலை இடைச்சொல் வினாக்குறிய ஆகும். ஏவலை அன்புடன் தெரிவிக்கப் பயனுள்ளதாக அமைகிறது.
முடிவாக
இவையனைத்தும் நோக்கும் போது ஏன், யா, ஓ, ஏ என்னும் வினாக்குறியீடுகள் ஏவல் வினைகளில் இணைக்கப்படுதல் தமிழ் மொழியில் காணப்படும் ஒரு இயல்பு. ஒருவரிடம் கூறப்படும் ஏவல் தன்மையை குறைத்து தாம் விரும்பும் ஏவலை அன்போடு தெரிவிக்க ஏவல்வினைகளோடு வினாக்குறியை இணைப்பது தமிழ் மரபாகும். அவ்வாறு இணைத்தலைத் திருத்திய பண்பட்ட முறையில் தெரிவிக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.
பயன்பட்ட நூல்கள்
1. பாலசுந்தரம் – 2012 – தொல்காப்பியம் – சொல்லதிகாரம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்
2. தாமோதரன்.அ. 1999 – நன்னூல் முலமும் விரித்தியுரையும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
3. தாமோதரன் பிள்ளை சி.வை.2008 – வீரசோழியம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
4. கோவிந்தராச முதலியார் (ப.ஆ) 1973 நேமிநாதம் – உரையுடன், திருநெல்வேலி, தென்னிந்திய, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் திருநெல்வேலி,-6
5. வரதராசனார் ச (ப.ஆ) 2004 நேமிநாதம், எம்.வெற்றியரசி குடியிருப்பு, ஆதம்பாக்கம் – சென்னை
6. முத்துவீர உபாத்தியாயர் – 1974 – முத்துவீரியம், கழக வெளியீடு, சென்னை
7. கோபாலையர் தி.வே 1990 – இலக்கண கொத்து, (ப.ஆ) சரசுவதி மகால் நூலகம் – தஞ்சை
8. கோபாலையர் தி.வே 1990 – பிரயோக விவேகம், (ப.ஆ) சரசுவதி மகால் நூலகம், தஞ்சை
9. சேயொளி (ப.ஆ) 1973 இலக்கண விளக்கம் – சொல்லதிகாரம்,மூலமும் உரையும், கழக வெளியீடு – சென்னை
10. காசுமான்.மீ 2005 தமிழ்க் காப்பு இயம், காசுமான் பதிப்பகம் நந்தன்காடு, மார்த்தாண்டம்
11. பாலசுப்பிரமணியன். கு.வெ. 2014 புறநானூறு – மூலமும் உரையும், (ப.ஆ) நியுசெஞ்சுரி புக் ஷவுஸ்(பி)லிட், 41-பி, சிட்கோ இண்டஸடியஸ், எஸ்டேட் சேன்னை – 98
12. பாலசுப்பிரமணியன். கு.வெ. 2014 ஐங்குநுறூறு – மூலமும் உரையும், (ப.ஆ) நியுசெஞ்சுரி புக் ஷவுஸ்(பி)லிட், 41-பி, சிட்கோ இண்டஸடியஸ், எஸ்டேட் சேன்னை – 98
13. Dr. Sathasivam A. 1958 – The suffix ‘Cin’ in (ankam Tamil Culture.Vel. VII – 140)
14. மே. இசரயேல் 1964 – மியா ஒரு அசைச் சொல்லா அன்றோ, தமிழ்ப்பொழில் துணர் 40, மலர். 1 பக்-4-8, வதராசனார் மு. 1954 – மொழியியற் கட்டுறை, ப.250, அணைத்திந்திய அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்., அறவாணன் க.ப. 1975 – தொல்காப்பிய ஒப்பியல் ஜைனா இஞைர் மன்றம், சென்னை.
15. அருள். வி (ப.ஆ.) 2008 – ஏழாம் இலக்கணம் – மெய்யப்பன் பதிப்பகம், புதுதெரு, சிதம்பரம்
masathyaraj@gmail.com
* கட்டுரையாளர் – மா. சத்யராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 636 011 –