“அன்புள்ள முருகபூபதி, நலம், நாடுவதும் அதுவே!” இவ்வாறு தொடங்கும் நீண்ட கடிதத்தை, ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் பிரபல நாவலாசிரியருமான இளங்கீரன் எங்கள் நீர்கொழும்பு ஊரிலிருந்து 19 செப்டெம்பர் 1989 திகதியிட்டு எழுதியிருந்தார். அதற்கு 24 – 10 – 1989 ஆம் திகதி நானும் பதில் அனுப்பியிருந்தேன். நான் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன். வருவதற்கு முன்னர் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கொழும்பில் புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்திருந்த முஸ்லிம் லீக் வாலிபர் சம்மேளனத்தின் மண்டபத்தில் அவருக்கு மணிவிழா பாராட்டு நிகழ்ச்சியையும் ஒழுங்குசெய்துவிட்டுத்தான் விடைபெற்றேன். இலக்கிய உலகில் இளங்கீரனும் எனக்கு மற்றுமொரு ஞானத்தந்தை. அவருடைய இயற்பெயர் சுபைர். அவருக்கு முதலில் தெரிந்த தொழில் தையல்தான். அதன்பின்னர் முழுநேர எழுத்தாளரானார். பெரிய குடும்பத்தின் தலைவர். வாழ்க்கையில் பல தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர். துவண்டுவிடாமல் அயராமல் இயங்கினார். சிறுகதை, நாவல், தொடர்கதை, நாடகம், விமர்சனம், வானொலி உரைச்சித்திரம் , இதழியல் என அவர் கைவைத்த துறைகளில் பிரகாசித்தார். கைலாசபதி தினகரனில் பிரதம ஆசிரியராக இருந்த காலத்தில் இளங்கீரனின் தொடர்கதைகள் வெளியானது. அதில் ஒரு பாத்திரம் பத்மினி. அந்தப்பாத்திரம் கதையின் போக்கில் இறக்கநேரிடுகிறது. அதனை வாசித்த அக்கதையின் அபிமானவாசகர் ஒருவர், ” பத்மினி சாகக்கூடாது” என்று வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். இவ்வாறு வாசகரிடம் தமது பாத்திரங்களுக்கு அனுதாபம் தேடித்தந்தவர் இளங்கீரன் என்ற தகவலை கைலாசபதி தாம் எழுதிய நாவல் இலக்கியம் என்ற விமர்சன நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பாரதி நூற்றாண்டு காலத்தில் இளங்கீரன் எழுதிய மகாகவி பாரதி நாடகமும் இருதடவைகள் மேடையேறியிருக்கிறது. அவர் எழுதிய பாலஸ்தீன் என்ற நாடகத்தை அன்றைய அரசு தடைசெய்தது. இலங்கை வானொலியில் அவர் எழுதி ஒலிபரப்பான சில நாடகங்கள் “தடயம்” என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. கொழும்பிலிருந்து மரகதம் இலக்கிய இதழையும் நடத்தியிருக்கும் இளங்கீரன், தோழர் சண்முகதாசனின் இலங்கை கம்யூனிஸ்ட் ( பீக்கிங் சார்பு) கட்சி வெளியிட்ட தொழிலாளி ஏட்டிலும், குமார் ரூபசிங்க நடத்திய ஜனவேகம் வார இதழிலும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். பல வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மாநகர சபைத்தேர்தலிலும் ஒன்றிணைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். இருபத்தியைந்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் பன்னூலாசிரியர். 1927 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் இளங்கீரன் 1997 இல் மறைந்தார். ” இளங்கீரனின் இலக்கியப்பணி” என்னும் ஆய்வு நூலை ரஹீமா முஹம்மத் எழுதியிருக்கிறார்.
எனது இனிய இலக்கிய நண்பர் இளங்கீரன், 29 ஆண்டுகளுக்கு முன்னர் மரகதம் Letter Hade இல் 14 பக்கங்களில் எழுதியிருக்கும் இந்த நீண்ட கடிதம், அவரது வாழ்வையும் பணிகளையும் அனுபவங்களையும் ஏமாற்றங்களையும் சோதனைகளையும் பதிவுசெய்கின்றது. இவ்வாறு மனந்திறந்து எனக்கு எழுதியிருப்பதன் மூலம் அவர் என்னை எவ்வளவுதூரம் நேசித்திருக்கிறார் என்பதையும் மிகுந்த நெகிழ்ச்சியுடன் புரிந்துகொள்கின்றேன். இனி அவரது கடிதத்தை பார்ப்போம்:
கடந்த மார்ச் மாதம் (1989) நான்போட்ட கடிதத்துக்கு நீர் பதில் எழுதியிருந்தீர். அதன்பிறகு நமக்குள் கடிதப்பரிவர்த்தனை இல்லை. எனினும் நீர் என் நினைவில் இருக்கவே செய்கிறீர். ராஜஶ்ரீகாந்தன் அடிக்கடி என்னைப்பார்க்க வருவார். அவர் உம்மைப்பற்றிச்சொல்லுவார். அவரும் என்னைப்பற்றி உமக்கு எழுதிக்கொள்வார் என்று நினைக்கிறேன்.
நீர் எனக்கு எழுதிய கடிதத்தில் ” மூத்த எழுத்தாளர்கள் எழுத்துக்கு ஓய்வு கொடுத்துவிடக்கூடாது. படைப்பிலக்கியம் படைக்க இயலாதவிடத்து, தம் சுயசரிதையையாவது எழுதுவது நல்லது என எஸ்.பொ.விடம் வேண்டுகோள் விடுத்தேன். அதனையே தங்களிடமும் கோரிக்கையாக விடுக்கின்றேன்” எனக்குறிப்பிட்டிருந்தீர்.
” ஓய்வு” பற்றி முதலில் சில விஷயங்களை நான் உமக்கு தெரிவிக்கவேண்டும்.
என் மணிவிழா தொடர்பாக வீரகேசரியில் வந்த கட்டுரையில் டயப்பட்டீஸ் வியாதி காரணமாக நான் எழுதுவதில இருந்து ஒதுங்கிக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் அது அற்பக்காரணம்.
1947 ல் இருந்து நான் ஓயாமல் 83 வரை எழுதியவன். நாவல்களை மட்டுமல்ல, தேசாபிமானி, தினகரன், மரகதம், மற்றும் சிற்றேடுகளுக்கும், வார இதழ்களான தொழிலாளி, ஜனவேகம் பத்திரிகைகளுக்கும் நான் ஆசிரியராக இருந்த காலத்திலும் கலை இலக்கியம், அரசியல், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, விமர்சனம் என்று எழுதிக்குவித்தவன். வானொலியிலும் தொடர்ச்சியாக நாடகங்கள், உரைச்சித்திரங்கள், சிறுகதைகள் என்று எழுதிக்கொண்டே இருந்தேன். மேடை நாடகங்களையும் விடவில்லை. பாலஸ்தீன், மகாகவி பாரதி ஆகிய இரு நாடகங்களையும் எழுதித்தயாரித்தேன். பாலஸ்தீனை மேடையேற்ற 1977 ல் பதவிக்கு வந்த யூ. என்.பி. அரசாங்கம் அனுமதி தரவில்லை. மகாகவி மேடை ஏறியது நீர் அறிந்ததே.
சீவியத்துக்கு நிரந்தரமான ஒரு தொழிலை வரித்துக்கொண்டு ஓய்வுநேரங்களில் எழுதாமல், எழுத்தையே முழுநேரத்தொழிலாகவும், கட்சி, இ.மு.எ.ச. வேலைகளிலும் ஊர்ச்சேவைகளிலும் முழுமூச்சாக ஈடுபட்டேன். எழுத்தை முழுநேரத்தொழிலாகக் கொண்டிருந்தபோதிலும் அதனை ஒரு பணம் சம்பாதிக்கும் கருவியாக கையாளவில்லை. நமது கொள்கை, கருத்துக்கள், சமூகப்பணிக்காகவே எழுதினேன். வேறு வார்த்தையில் சொன்னால், சமுதாயத்திற்கான – சமூகமாற்றத்திற்கான நோக்கத்தைச்சாதிக்க ஓர் ஆயுதமாகவே பேனாவைப் பயன்படுத்தினேன்.
இதனால், பலத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் கடும்சோதனைக்கும் உள்ளானபோதும், மனம்சோராமல் எழுதிக்கொண்டுதான் இருந்தேன். எழுத்தும் படிப்பும் எனது இரத்தத்தில் ஊறி நிற்பவை. இவை இரண்டுடன் மற்றும் பணிகளிலும் செயல்பட்டேன். இதனால் குடும்பத்துக்குத்தேவையான அடிப்படைக்காரியங்களை செய்வதற்கு – குடும்பத்தேவைகளை ஓரளவேனும் நிறைவேற்றிக்கொள்வதற்கு நேரமும் பொழுதும் கிடைக்கவில்லை. சாத்தியமாகவும் இருக்கவில்லை.
இந்த அனுபவம் உமக்கும் உண்டு என்று ஊகிக்கிறேன். அடிப்படைத்தேவைகளான உணவு, உடை, பிள்ளைகளின் படிப்பு, விருந்தினர் செலவு என்பதில் மட்டும்தான் கடமைகளை நிறைவேற்றமுடிந்தது. கூடியவருமானம் தேடுவதிலோ சேமிப்பதிலோ நாட்டம் செல்லாமல் மேற்கூறிய விஷயங்களிலேயே தொடர்ந்து உற்சாகம் சிறிதும் குன்றாமல் அலுப்புச்சலிப்பில்லாமல் எழுதினேன். செயல்பட்டேன். வாழ்க்கையில் எத்தனையோ கடும்சோதனைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளான போதிலும் மனம் பாதிக்கப்படவில்லை. ஆனால், 1982 ல் கைலாஸின் மரணம் என் மனதை முதல்தடவையாகப் பாதித்துவிட்டது. அத்துயர் என்னை வாட்டியபோதிலும் அதனை ஜீரணித்துக்கொண்டு பாரதிநூற்றாண்டு விழாக்களுக்காக உங்களுடன் சேர்ந்து உழைத்தேன். இருந்தும், 1983 ஜூலை கலவரத்தோடு என் எழுத்தும் கலை இலக்கியப்பணிகளும் நின்றுவிட்டன!? ஏன்?
1. நாம் இனத்துவேஷமின்றி – இன, சாதி பேதம் பாராட்டாமல் இன – தேசிய ஐக்கியத்துக்காக ஆரம்பகாலத்திலிருந்தே உழைத்தவர்கள். அதனை வளர்க்கப் பாடுபட்டவர்கள். நம்பிக்கையுடன் இயங்கியவர்கள். ஜூலைக்கலவரமும் அப்போது நிகழ்ந்த கொடூர சம்பவங்களும் மனதை ரொம்பவும் பாதித்து, கொண்டிருந்த நம்பிக்கையைத் தூள்தூளக்கிவிட்டன.
2. நுகேகொடையில் ஞானா ஒரு பங்காளியுடன் சேர்ந்து ஆரம்பித்த ‘ கிளாஸிக் பிரிண்டர்ஸ்’ அச்சகத்தில் ஞானாவுடன் நானும் சேர்ந்து இயங்கினேன். அப்போது மியாமி உரிமையாளரின் பத்திரிகையான ‘முஸ்லிம் அபேதவாதி’ க்கும் நான் ஆசிரியராக இருந்தேன். அப்பத்திரிகையும் கிளாஸிக் பிரிண்டர்ஸிலேயே அச்சாகியது. அத்துடன், ஞானாவும் நானும் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவது, சஞ்சிகை நடத்துவது என்று ஆக்கபூர்வமான திட்டங்களுடன் செயல்பட்டோம். இதற்கு நண்பர்களின் வரவேற்பும் ஒத்துழைப்பும் கிடைத்தன. ஜூலைக்கலவரம் அச்சகத்தையும் எமது திட்டங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டன.
3. நம்முடன் தொடர்புகொண்டிருந்த, பழகிய , நெருக்கமான இலக்கிய நண்பர்கள் ஞானா, சோமு குடும்பங்கள் உட்பட கொழும்பைவிட்டுப்போய்விட்டார்கள் கலவரத்தினால்.
இவை என்னைப்பெரிதும் பாதித்தன. கலை இலக்கியப் பணிகளில் கூட்டாகச்செயல்பட்ட நண்பர்களின் பிரிவு, சிந்தனையிலும் மனதிலும் இருந்த கலை இலக்கிய அரங்கை வெறிச்சோடச்செய்துவிட்டன. எதையும் செய்யமுடியாத சூழ்நிலை. இப்போதுதான் என்முன்னால் குடும்பக்கடமைகள் விஸ்வரூபம் எடுத்து நிற்பதைக்கண்டேன். அவற்றிற்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை. எனவே, என் கவனத்தை என்முன்னால் அறைகூவி நின்ற பிரச்சினைகளுக்குத்தீர்வு காணும் முயற்சியில் இறங்கினேன்.
01. திம்பிரிகசாயவில் நாங்கள் இருந்த வீட்டைச்சொந்தக்காரர்கள் காலி செய்யும்படி சொல்லிவிட்டார்கள். வீடு தேடும் படலம் ஆரம்பமாயிற்று. பிளட் வீடு ஒன்று எடுத்துத்தருவதாக யோகாவின் கணவர் பாலச்சந்திரனும் நோபல் வேதநாயகமும் வாக்குறுதியளித்து அதற்காக 35,000/= காசு கேட்டார்கள். நிரந்தரமாக வசிப்பதற்கு ஒரு வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் யாழ்ப்பாண வீட்டில் எங்களுக்கு இருந்த பங்குநிலத்தை ஈடுவைத்து அந்தக்காசை பாலச்சந்திரன் மூலம் கொடுத்தேன். பாலா எனக்கு உதவிசெய்யவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதனைச்செய்தார். ஆனால், நோபல் இழுத்தடித்தான். மாதக்கணக்கில் அல்ல, ஐந்துவருடங்களுக்கு மேலாக. வீடு அல்லது காசு இரண்டில் ஒன்றைப்பெறுவதற்காக இத்தனை வருடங்களும் கிழமையில் மூன்று நான்கு தடவைகள் பர்ப்பதற்கு நாயாய் அலைந்தேன். இறுதியில் தோல்வி. ( நோபல் என்னுடைய காசை மட்டுமல்ல மற்றும் பலருக்கும் மோசடி செய்துவிட்டு இந்தியாவுக்கு குடும்பத்துடன் ஓடிவிட்டான். ) வீடோ காசோ கிடைக்காதது ஒருபுறமிருக்க, ஈட்டு வட்டி 12,000/= கட்டவும் நேரிட்டது. இன்றைய மதிப்பின்படி ஒரு லட்சம் ரூபாவாகும். இந்த இழப்பினால் முழுநேரக்கவலை. முழுநேர சஞ்சலம்.
நான் நோபலிடம் அலைந்தபோது திரும்பவும் வீடுதேடும் படலம் ஆரம்பமாயிற்று. எப்படியோ கிருலப்பனைக்கு வீடு மாறினோம்.
02. எங்கள் நான்கு குமர்களும் வளர்ந்து நின்றார்கள். இவர்களின் கல்யாணப்பிரச்சினை பூதாகரமாக எழுந்து நின்றது. சீதனக்கொடுமை எங்கள் சமூகத்திலும் தீயாக எரியத்தான்செய்கிறது. அதனால் பணத்துக்கு எங்கே போகிறது? திகைப்புடன் யோசித்துக்கொண்டிருந்தால் காரியம் ஆகிவிடுமா?
03. எனது ஆக்கங்களும் சேர்த்துவைத்திருந்த மற்றவர்களின் ஆக்கங்களும் (50 ஆம் ஆண்டிலிருந்து சேர்க்கப்பட்டவை) தாறுமாறாக கோப்புகளில் அடைபட்டுக்கிடந்தன. இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி புத்தக வடிவில் தொகுக்கவேண்டும். இவற்றைவிட இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருந்தன. உலகப்புதினங்கள், சாதனைகள், விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள், வரலாற்றுக்கட்டுரைகள், அரசியல், உலக எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஈழத்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் அவர்களின் படைப்புகள், சர்வதேச விளையாட்டுக்கள் – சாதனைகள், உலகப்பிரமுகர்கள், ஈழத்து தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் – இப்படி பல. ஒவ்வொன்றையும் ஒரு என்சைக்கிளோபீடியா மாதிரி தொகுக்கவேண்டும். இவற்றைச்செய்வதற்கு காரணமும் இருந்தது.
என் வீட்டில் ஒரு சிறிய நூல்நிலையமாவது அமைக்கவேண்டும் என்பதை என் இளமைக்காலத்திலேயே நோக்காகக்கொண்டிருந்தேன். இலக்கியங்களில் மட்டுமல்ல, இங்கே குறிப்பிடப்பட்ட எல்லா விஷயங்களிலுமே எனக்கு ஆர்வமும் ருசியும் உண்டு. அதனால், ஆரம்பத்திலிருந்தே பலவகை நூல்களையும் வாங்கிச்சேகரித்துக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 5000 நூல்கள் வரை சேகரித்தேன். 3500 நூல்களை எடுத்துச்சென்றவர்கள் திருப்பித்தராதது, மழை, கரையான், நெருப்பு இப்படிப்பலவகையாக இழந்துவிட்டேன். இவற்றில் இப்போது என்ன விலைக்கும் கிடைக்காத அரிய நூல்களும் அடங்கும். மீதி நூல்களையாவது பாதுகாக்கவேண்டும். பிரிந்தும் சிறு சேதமடைந்தும் இருக்கும் நூல்களைச் செப்பனிட்டு பைண்ட் செய்யவேண்டும். கட்டுரைகளாக உள்ளவையையும் மற்ற கலை இலக்கிய விஷயங்களையும் தொகுக்கவேண்டும். இவற்றைச்செய்வதற்கு முன்னர் அவகாசம் இருந்ததில்லை. தொகுப்பு வேலை பாரமானது. பொறுமை கூடுதல் வேண்டும். காலநேரமும் தேவை.
04. இ.மு.எ.ச. வரலாறு எழுதி முடிக்கவேண்டும். இதுவும் சிரமமானதொன்று.
05. கைலாஸைப்பற்றி ஒரு நூல் எழுதவேண்டும். கைலாஸைப்பற்றி தகவல்களையும் கலை, இலக்கியப்பங்களிப்புகள், பத்திரிகைத் துறை, பல்கலைக்கழகப்பணி, இ.மு.எ.ச. தொடர்புகள், கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களும் எவருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. இவற்றை உள்ளடக்கிய முழுமையான வரலாறு எழுதப்படவுமில்லை. சில விஷயங்கள் வேண்டுமென்றே இருட்டடிப்புச்செய்யப்பட்டன. உதாரணமாக பேராசிரியர் வித்தியானந்தனின் மணிவிழா மலரில் வித்தியின் யாழ். பல்கலைக்கழகப்பணிகள் பற்றி அதனை வளர்த்தெடுத்தது பற்றி எல்லாம் அலங்காரமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால், யாழ். வளாகம் அமைக்கப்பட்டதும் அதன் முதல் தலைவராக இருந்து யாழ். பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றியசேவையை அளப்பரிய உழைப்பைப்பற்றி ஒரு வார்த்தைகூட கூறப்படவில்லை. யாழ். பல்கலைக்கழகத்தைப்பற்றி எவரும் எழுதுவதாயிருந்தால் – பேசுவதாயிருந்தால் கைலாஸைத் தவிர்த்து எழுதவோ பேசவோ முடியாது. கலை – இலக்கிய விமர்சனம் , ஆய்வுகள் சம்பந்தமாகவும் முழுமையாகவும் சரியாகவும் இதுவரை ஒரு நூலும் தோன்றவில்லை. இதற்கான காரணிகளை விபரிக்க இக்கடிதம் இடம்தராது.
கைலாஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலம்தொட்டு இறுதிக்காலம்வரை அவரும் நானும் மிக மிக நெருங்கிப்பழகியவர்கள். அந்தரங்க நண்பர்கள். அவரைப்பற்றிய சகல விஷயங்களையும் தெரிந்தவன். எனவே அவரைப்பற்றிய முழு நூல் ஒன்று எழுதும் திட்டம் உள்ளது. ஞானா, ராஜஶ்ரீகாந்தனிடம் நான் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்தபோது கட்டாயம் எழுதுங்கள். இ.மு. எ.ச. பிரசுரிக்கும் என்றார்கள்.
06. ஈழத்து எழுத்தாளர்கள் – என் தலைமுறையைச்சேர்ந்த பலரைப்பற்றியும் அவர்களின் படைப்புகள் பற்றியும் ஒரு நூல் எழுதவேண்டும்.
07. வரலாற்றில் இடம்பெற்ற உலகத்தலைவர்கள் பலரைப்பற்றி ஒரு நூல் எழுதவேண்டும்.
08. பதினைந்து வருடங்களுக்கு முன் கொழும்பில் நுஃமானின் அறையில் தங்குவது வழக்கம். ஒருநாள் என் வாழ்க்கை – எழுத்துலக அனுபவங்களை கோல்பேஸில் இருந்து உரையாடிக்கொண்டிருந்தபோது கேட்டார். அன்று சொல்லத்தொடங்கிய நான், இதற்காகவே இரவுச்சாப்பாட்டை முடித்துக்கொண்டு கோல்பேஸ் சென்று ஒரு தொடர்கதையைப்போல் சொல்லி முடித்தேன். முழுவதையும் கேட்ட நுஃமான், ” எழுத்தாளர்களும் இளம்தலைமுறையைச்சேர்ந்தோரும் தெரிந்திருக்கவேண்டிய – பயனடையக்கூடிய உங்களுடைய சுயசரிதையை எழுதவேண்டும்” என்றும் “தானே அதனைப்பிரசுரிப்பதாகவும்” சொன்னார். கைலாஸ_ம் இடைஇடையே கூறுவார். எழுத அவகாசம் இருக்கவில்லை. எனது சுயவரலாற்றை எழுதும்படி இப்போது மகன் மீலாத்தும் ராஜஶ்ரீகாந்தனும் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள். நீரும் எழுதும்படி குறிப்பிட்டிருக்கிறீர். எனவே எழுதவேண்டும்.
“படைப்பிலக்கியங்களைப்படைக்க இயலாதவிடத்து சுயசரிதையையாவது எழுதுங்கள்” என்று நீர் குறிப்பிட்டுள்ளீர்.
எனக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒன்றில் இறங்கினால், அது என்னை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளும். அதனால் தொடர்ந்தும் எழுத்து, இலக்கியப்பணிகள் என்றிருந்தால் அதிலேயே மூழ்கிவிடுவேன். என்னை எதிர்நோக்கிய குடும்ப கடமைகளையும் மற்றும் காரியங்களையும் நிறைவேற்றமுடியாது போய்விடும். இவ்வாறு சிந்தித்து முடிவெடுத்தபிறகுதான், இவற்றை நிறைவேற்றும் வரை படைப்பிலக்கியம் – இலக்கியப்பணிகளிலிருந்து ஒதுங்கியிருந்தேன். முழுக்கவனத்தையும் நேரத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதில் செலவிட்டேன். இதன் விளைவாக —
1. நான்கு குமர்களில் மூன்றுக்கு கல்யாணம் நடந்தது.
2. இதனை அடுத்து என் மகன்மார் இருவருக்கும் கல்யாணம் செய்யவேண்டியிருந்தது. அதுவும் முடிந்தது.
3. என் இரண்டாவது மூன்றாவது பிள்ளைகளின் கணவன்மாருக்கு கொழும்பில் வேலை. அதனால் அங்கு வீடுகள் தேவையாக இருந்தது. கொழும்பில் வீட்டுப்பிரச்சினை உமக்குத்தெரிந்ததே. இருப்பினும் அந்த முயற்சியிலும் இறங்கி அதனையும் செய்து முடித்தேன்.
4. மூத்த மகளின் கணவருக்கு நீர்கொழும்பில் வேலை. நான்கு வருடங்களுக்கு மேலாக தினமும் கொழும்பு – நீர்கொழும்புப்பிரயாணம். இதன் சிரமம் உமக்குத்தெரியும். மருமகன் சீசன் டிக்கட் எடுக்க விரும்பவில்லை. எடுத்தால், C.T.B. யில் மட்டும்தான் பயணம் செய்யமுடியும். அதற்காக காத்து நிற்கவும்வேண்டும். தனியார் பஸ் என்றால், உடனுக்குடன் கிடைக்கும். நேரத்துக்கு வேலைக்குப்போய்விட முடியும். எனவே பஸ்ஸிற்கு மாதம் 500/= செலவு போய்க்கொண்டிருந்தது. போக வர கிருலப்பனைக்கும் மூன்று மணித்தியாலங்களை வேறு செலவிடவேண்டியிருந்தது. இதனை உத்தேசித்து நீர்கொழும்பில் வசிக்கத்தீர்மானித்தோம். நீர்கொழும்பில் ஓரளவுக்கேனும் வசதியான வீடு கிடைப்பது எளிதாயில்லை. அதற்காகவும் சில மாதங்கள் அலைந்து, இறுதியாக நீர்கொழும்பு மென்சன் பிளேஸில் வீடுகிடைத்து வந்தோம்.
4. தொடர்ந்தும் வாடகைவீட்டில் இருக்க விரும்பவில்லை. சொந்தமாக வாங்க முடிவுசெய்தோம். எங்கள் பணவசதிக்கேற்ப வீடு கிடைக்காமல் அதற்காகவும் அலையவேண்டியிருந்தது. இறுதியாக நீர்கொழும்பில் வீடு வாங்கி அமர்ந்திருக்கிறோம்.
5. இவற்றைச்செய்து முடிப்பதற்கு மத்தியில் கொழும்பு வேலைகளையும் செய்துகொண்டிருந்தேன். இதுவரை 75 வீதம் முடிந்துவிட்டது. புத்தகங்களையும் செப்பனிட்டு ஒழுங்குபடுத்தி நூல் நிலையத்தையும் அமைத்துவிட்டேன். நாற்பது வருடகாலக்கனவு இப்போதுதான் நிறைவேறியது. இதனை இன்னும் விரிவாக்கவேண்டும். ராஜஶ்ரீகாந்தன், தொகுப்புகளையும் நூல் நிலையத்தையும் பார்த்துவிட்டு, ” இது ஒரு தனிமனிதன் செய்யக்கூடிய காரியமல்ல. நீங்கள் தனியாகவே செய்திருக்கிறீர்கள். இது ஒரு சாதனைதான்” என்றார். நீர் அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பி நீர்கொழும்பில் வதியும் காலத்தில் எனது நூல் நிலையம் உமக்கு நிச்சயம் பயன்படும். இலக்கியம் – பத்திரிகை இரண்டுக்கும் உமக்கு பிரயோசனமாயிருக்கும்.
6. இ.மு.எ.ச. வரலாறு முழுவதையும் எழுதி முடித்து ஞானாவிடம் கையளித்தேன். இவ்வருட இறுதிக்குள் அச்சுக்குப்போகும்.
நான் எழுதுவதை நிறுத்திய காலத்திலிருந்து இவற்றைச்செய்து முடிக்க எனது இருமகன்மாரின் பேருதவியும் ஒத்துழைப்பும் உறுதுணையாயிருந்தன. அவர்கள் வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து அனுப்பியிருக்காவிட்டால் இவை சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. 1983 இலிருந்து எங்கள் குடும்பச்செலவுகளையும், மற்றும் கல்யாணம், வீடு இவற்றுக்கான செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொண்டார்கள். ” உங்கள் வருவாய்க்காக எதையும் செய்யவேண்டாம். வீட்டுக்கடமைகளையும் உங்கள் வேலைத்திட்டங்களையும் கவனியுங்கள்.” என்று கூறி ஊக்குவித்ததால், நான் மேற்கூறிய விஷயங்களைச்செய்ய முடிந்தது. மீதியையும் அவர்களின் உதவியால் செய்துமுடிக்கலாம் என்று நம்புகிறேன். பெற்றோருக்கும் சகோதரங்களுக்கும் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்யும் பந்த பாசத்துடன் இயங்கும் மகன்மார் அபூர்வம்.
” மகன்மாரினால் ஓர் உதவியுமில்லை. எங்களைக் கவனிப்பதில்லை” என்று என்னிடம் பலர் துயரத்துடன் முறையிட்டிருக்கிறார்கள். எங்களைப்பொறுத்தவரை நாங்கள் பாக்கியசாலிகள்.
மகன் மீலாத் மனைவியுடன் கொழும்பில் அண்டர்சன் பிளட்டில் இருக்கிறார். மனைவி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி அஸ்ரப் எம்.பி.யின் மனைவியின் தங்கையாவார். அவ English Train Teacher. கொழும்பு சாகிறாவில் ஆசிரியராக இருக்கிறா. மீலாத், அஸ்ரப்பின் தொழில் அலுவலகத்தில் வேலை செய்கிறார். சட்டக்கல்லூரியிலும் படிக்க உத்தேசம். இளைய மகன் மியாத் சவூதியில். மனைவி யாழ்ப்பாணத்தில். தாய்- தந்தையோடு இருக்கிறா.
இருமகன்மாரும் திருமணமானபிறகும் கூட மாற்றமில்லை. எங்களுக்கும் சகோதரிகளுக்கும் உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். மீலாத் மனைவியோடு அடிக்கடி எங்களைப்பார்க்க வருவார்.
இப்போது மீதியாயிருப்பவை: கடைசி மகளின் கல்யாணம். அவவுக்கென்று மகன்மார் இருவரும் நீர்கொழும்பில் ஒரு காணி வாங்கியிருப்பதோடு, நகை – வீட்டுச்சாமான்கள் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறார்கள். நீர்கொழும்பிலேயே வரன் பார்க்கவேண்டியிருக்கிறது.
அடுத்து: நான் குறிப்பிட்டுள்ள நூல்களை எழுதவேண்டிய வேலை. காலமும் உடல் நிலையும் இடம்கொடுக்குமானால் செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கை.
இக்கடிதத்தை ஏற்கனவே எழுதத்தான் இருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென நோய்வாய்ப்பட்டேன். ஞானா, கமலி, ராஜஶ்ரீகாந்தன், அல். அஸ_மத் , மேமன்கவி, மற்றும் நண்பர்கள் நீர்கொழும்புக்கு வந்து பார்த்தார்கள். இரண்டு மாதங்களாகச் சிகிச்சை. தொடர்ந்தும் மருந்துதான். இப்போது ஓரளவு சுகம். அதனால் இக்கடிதம் எழுதமுடிந்தது.
சில்லையூருக்கும் சுகயீனம். உடல்நலம் குன்றிவிட்டார். பெரும்பாலும் வீட்டில்தான். ஓயாத குடிதான் அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது.
சோமு தம்பதிகள் கொழும்புக்கு மாறிவர முயற்சிப்பதாய் ஞானா சொன்னார்.
கடந்த 17 ஆம் திகதி அ.ந. கந்தசாமியின் ‘மதமாற்றம்’ நாடகநூல், கே. கணேஷின் பாரதியார் பற்றிய ருஷ்யக்கவிஞரின் மொழிபெயர்ப்பு நூல் ஆகிய இரண்டிற்கும் இ.மு.எ.ச. கொழும்பில் வெளியீட்டு விழாவை நடத்தியது. ‘ மதமாற்றம்’ நமது எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம் வெளியிட்டது. மூத்த தலைமுறையினர் பலர் வந்திருந்தனர். நானும் சென்றிருந்தேன். அறுபதுபேர் வரை இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நாட்டின் நெருக்கடியும் குழப்பங்களும் வன்முறைகளும் குறையவில்லை. தெற்கில் ஜனவரியிலிருந்து கூடிக்கொண்டேயிருக்கிறது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் பல மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. கொழும்பு மற்றும் இடங்களிலும் ஹர்த்தால், கடையடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிதம் என்று அடிக்கடி நிகழ்கின்றன. பணவீக்கமும் சகல சாமான்களின் விலைவாசியும் எக்கச்சக்கமாக ஏறியுள்ளன. நீர் போனபோது இருந்த விலைவாசி இப்போது நான்கு மடங்காகிவிட்டன. சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை கஷ்டம்தான். மேற்கூறிய காரணிகளினால் நாட்டை விட்டே வெளியேறும் எண்ணிக்கை கூடிக்கொண்டேயிருக்கிறது.
கொழும்பில் வாகன நெருக்கடி எக்கச்சக்கம். புறக்கோட்டையிலிருந்து பொரளைக்குப்போக இரண்டு மணித்தியாலம் பிடிக்கிறது. வாகனங்களும் சனநெரிசலும் பரபரப்பும் ஒரே டென்ஷன்தான். எனக்கு கொழும்பில் நிற்பதே பிடிப்பதில்லை.
நீர்கொழும்பில் அமைதியாக இருக்கமுடிகிறது. சுத்தமும் சூழலும் பசுமையும் மனதுக்கு இதமாக இருக்கின்றன. நீர் போனபின் நீர்கொழும்பு விருத்தியடைந்துள்ளது. எனக்கு நீர்கொழும்பு பிடித்திருக்கிறது.
உமது சமாந்தரங்கள் கதைத்தொகுதி படித்தேன். அவுஸ்திரேலியா அனுபவங்களைக்கூறும் கதைகளும் அருமை. சுருக்கமாகச்சொன்னால், சமாந்தரங்கள் கதைகள் உமது வளர்ச்சியைக் கோடிட்டுகாட்டுகின்றன. மகன் மீலாத்தும் நல்ல கதைகள் என்று பாராட்டியது எனக்கு மனநிறைவைத்தந்தது.
நீர் நாவலிலும் முனைந்துள்ளதாக மல்லிகை கடிதத்திலிருந்து தெரிகிறது. மிகவும் சந்தோஷம். ஒன்றல்ல பல நாவல்கள் உம்மிடமிருந்து பிறக்கவேண்டும்.
இளந்தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்களும் எழுத்தாளர்களும் தரமான படைப்பாளிகளாக மட்டுமல்லாமல் கலை, இலக்கியச்சிந்தனையாளர்களாகவும் வளரவேண்டும் என்பது எனது அபிலாஷை. இவ்வகையில் சிலரைக்காணமுடிகிறது. அது ஒரு திருப்தி. நீர் கதாசிரியர். பத்திரிகையாளர். நாவலாசிரியராகவும் மற்றொரு பரிமாணத்தை எட்டப்போகிறீர். கலை, இலக்கியச்சிந்தனையிலும் நீர் வளர்ந்து பரந்து பரவவேண்டும். அதோடு பத்திரிகைத்துறையில் மேலும் புதிய புதிய பரிமாணங்களை எய்தல்வேண்டும். உம்மால் அதுமுடியும். நீர் இலங்கைக்குத்திரும்பி நீர்கொழும்பில் எங்களுடன் வாழும்போது உமது வளர்ச்சிக்கும் புதிய புதிய சிகரங்களைத்தொடுவதற்கும் உமக்கு உறுதுணையாக இருப்பதில் ஆவலுடையவனாக இருக்கிறேன்.
உம்மிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன் கீரன்.
* பதிவுகள் இதழுக்கு அனுப்பியவர் – முருகபூபதி –
letchumananm@gmail.com
* இக்கடிதம் ‘நடு இணைய இதழி’லும் வெளியாகியுள்ளது.