ஆய்வு: கம்பகாவியத்தில் கனவு வெளிப்பாடு

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?கனவு மனித மனத்தின் உள்வெளிப்பாடு, மனித வாழ்வில் இது இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. மனிதன் கனவுகாண்பதையே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் அடக்குகின்றான். இன்றைய நிலையில் கனவினை உளவியல் கோட்பாட்டிற்குள் அடக்குவதை காணமுடிகிறது. அக்காலம் முதல் இக்காலம் வரை கனவு வருங்காலத்தின் வெளிப்பாடாக இலக்கியத்திலும் காப்பியத்திலும் முன்வைப்பதை அறியலாம். மனிதனே இதற்கு முதன்மையானவனாக உள்ளான். அத்தகைய மனிதன் எக்காலத்திலும் கனவு காணும் இயல்புடையவனாக இருந்துள்ளான். அவர்களுள் அருவமாக கனவினைக் காவியப் புலவர்கள் தம் படைப்புகளில் அழகுறக் கையாண்டுள்ளனர். கனவுகளைப் பற்றியும், அவை கம்பகாவியத்தில் இடம்பெற்றிருக்கும் விதம் பற்றியும் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

கனவுகளைப் பற்றிய அறிஞர்களின் கோட்பாடுகள்:
• கனவுகள் கடவுளாலோ, கடவுட்தன்மை உடையவர்களாலோ ஏற்படுவன அல்ல; மனித உள்ளத்தில் இயல்பாகத் தோன்றுவனவே என்பது அரிஸ்டாட்டிலின் கொள்கை, மேலைநாட்டு உளவியல் அறிஞர்களான சிக்மண்ட் ஃபிராய்டு (Sigmund Freud), கார்ல் யங் (Carl Jung), ஆல்ஃபிரெட் அட்லர் (Alfred W. Adler) முதலியோர் கனவுகளைப் பற்றி ஆராய்ந்து பல்வேறு விதமான முடிவுகளைக் கூறி இருக்கின்றனர். அதில்,

• கனவுகள் வருங்கால வாழ்வின் உருவெளித் தோற்றமே என்றும், ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கைப் போக்கை உய்த்து உணர்ந்து கொள்வதற்கும், அல்லவை கடிந்து தன்னைத் தானே திருத்திக் கொள்வதற்கும் அவை பயன்படுகின்றன என்றும் அட்லர் கருதினார். ஆனால்,

• யங் என்பார் நிகழ்காலத்தில் விளையும் சிக்கல்களால் உருவாக்கப் படுவனவே கனவுகள் என்று கூறுகிறார்.

• அறிஞர் ஃப்ராய்டு இவ்விருவரின் கொள்கைகளையும் மறுத்து, அடக்கப்பட்ட ஆசைகளும் நிறைவேறாத விருப்பங்களும் குறிப்பாகக் காம இச்சைகளே கனவுகள் தோன்றுவதற்குக் காரணம் என்று வலியுறுத்தினார். (The Interpretation of Dreams) இக்கருத்துமிகைப்பட்டது என்பதையும் தனது கொள்கைகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இயங்குவதையும் அவர் பிற்பகுதியால் உணரத்தலைப்பட்டார், என்பதையும் 1920க்குப் பிறகு வந்த அவருடைய எழுத்துகள்காட்டும்.

• வடமொழி வாணராகிய கௌடபாதர் என்பார் கனவுகளை இறைவனோடு தொடர்புபடுத்திப் பேசி, அவை மனிதனுக்கு கடவுளால் காட்டப்படும் முன்னறிவிப்பு என்று மொழிகிறார். மேலைநாட்டு அறிவியல் உளவியல் நெறிநின்று ஆராய்ந்து நூல் எழுதிய டாக்டர் ராமநாராயணன் என்பவரும் கௌடபாதரின் கருத்தையே ஒப்புகிறார். “கனவுகள் என்பன தெரியாத மொழியில் எழுதப்பட்ட கடிதம் போன்றது” என்பது சுவாமி சிவானந்தரின் கருத்து; நடைமுறை வாழ்வில் காணப்படும் காரண காரிய நெறியே கனிவலும் அமைந்திருக்கிறது என்று இவர்களின் கூற்றை எடுத்து கூறுகிறார். (மா. இராமலிங்கம் இலக்கியத் தகவு பக்.11)

கனவும் வரலாற்று அறிஞர்களும்:
“நான்காயிரம் ஆண்டுகள் பழமையான காகிதம் போன்ற (Papyrus) சுவடி ஒன்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டடது. அதில் ‘கனவுகளும் அதன் அர்த்தங்களும்’ பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தன. கனவுகள் பற்றிய நம்பிக்கைகள் கலாச்சார வளர்ச்சியடைந்த பண்டைய நாடுகளான எகிப்த், சீனா, கிரிஸ், இந்தியா போன்ற நாடுகளில் அந்நம்பிக்கைகளைக் கொண்டிருந்தன என்பதை, சில கனவு நிகழ்ச்சிகள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளன அவற்றில் அலெக்ஸாண்டரின் கனவும் ஒன்று, உலகையே ஆள வேண்டும் என கனவுகண்ட இளம் பேரரசன் அலெக்சாண்டர் (Alexander The Great) அதன் ஒரு பகுதியாக பொனீஷிய நாட்டின் “டைர்” (Tyr) நகரத்தின் மீது போர் தொடுத்தார். டைர் வீரர்கள் அலெக்ஸாண்டரின் படையை கடுமையாக எதிர்த்தார்கள். ஆலெக்ஸாண்டரின் படைசற்று நம்பிக்கை இழந்தது அன்றைய இறவில் “Satyr” பாதி மனித உடலும், பாதி ஆட்டின் உடலும் கொண்டது போன்ற கிரேக்கம் கற்பனை கதாப்பாத்திரம் ஒன்று தங்கக் கேடயத்தின் மீது நடனமாடுவது போல அக்கனவு விரிந்தது. இதன் அர்த்தம் புரியாத அலெக்ஸாண்டர் கவலை கொண்டார். “கனவுகளை விளக்குபவர் எனப் பெயர்பெற்ற அரிஸ்டாந்தர் (Aristander) வரவழைத்து கனவைச் சொல்ல, அவர் கவலை வேண்டாம் அரசே! இது நல்ல கனவுதான். கடவுளின் சொல்விளையாட்டு. என்பதை பிரித்துப் பார்க்க வேண்டும் Sa+tyros அதாவது Sa என்றால் உன்னுடையது என்று அர்த்தம் “டைர்”-நகரம் உன்னுடையது எடுத்துக்கொள் என்பதே கனவின் அர்த்தம்! என்றார். அதன்பின் கிடைத்த உற்சாகத்திலும், நம்பிக்iகியலும் போரிட்டு டைரை கைப்பற்றினார் அலைக்ஸாண்டர். எனவே கனவுகள் மறைமுகமாகவும் ஒரு பொருளை உனர்த்தும் எனக் கூறலாம், ‘இது நல்கனவு’ எனவே அலெக்ஸாண்டருக்கு ஊக்கம் கிடைத்தது எனவும் வைத்துக்கொள்வோம்.

தூக்கத்தைக் கெடுக்கும் பயங்கர கனவுகளும் (Nightmares) இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு ஒரு வரலாற்று உதாரணமாக இன்னொரு மன்னரின் வாழ்விலுள்ள கனவு நிகழ்வைக் கொண்டும் அறியலாம். அவர் “ஜூலியஸ் சீசர் (Julius Caesar) ஜூலியஸ் சீசர் சதிகாரர்களால் கொள்ளப்படுவதற்கு முன்னிரவில், அவரது (மூன்றாவது மனைவி “கல்பூர்னியா” (Calpurnia), சீசரின் உடலெங்கும் துளைகள் ஏற்பட்டு அவற்றிலிருந்து நீரூற்று போல ரத்தம் தெறிப்பதாகக் கனவு கண்டாள் சீசரிடம் இது பற்றிக் கூறி செனட் கூட்டத்திற்கு செல்ல வேண்டாமென மண்றாடினாள். அலட்சியப்; புன்னகையோடு வெளியேறிய சீசரின் இறுதிகால நிகழ்வுகளை வரலாறே நமக்குப் பறைசாற்றுகிறது. இக்கனவு நிகழ்வானது நமக்கு வரும் கனவுகளையோ, அது மறைமுகமாக உணர்த்தும் விஷயங்களையோ நாம் நம்பாமல் அலட்சியப்படுத்துகிறோம், அல்லது அவற்றை பொருட்படுத்துவதில்லை என்றும் இதனால் பல நன்மைகளை நாம் இழக்கிறோம் என்றும் கனவுகள் பலிக்கும் என்றும் நம்பும் ஒருசாரார் கருதுகின்றனர்.

இவ்வாறான கனவுகளை முறையாகப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வாமாக ஏதேனும் சாதித்த மனிதர்கள் யாரேனும் உண்டா எனத் தேடினால், நிச்சயம் இருக்கிறார்கள் எனறே வரலாறு பதிலாளிக்கிறது. அவர்களுள் மிகமுக்கிய உதாரணம், சர் ஐசக் நியூட்டன் (Sir Issack Newton)-னைக் கூறலாம்.

தனது மனதில் எழும் பல குழப்பமான கேள்விகளுக்கு கனவில்தான் அவருக்கு விடைக்கிடைக்குமாம். அவற்றை அரைத்தூக்கத்தில் குறிப்பெடுத்துக் கொள்வாராம். அவ்வாறு கனவின் மூலம் பெறப்பட்ட விடைகளும், மிகச்சரியாக இருப்பதுதான் அறிவியலாளர்களின் ஆச்சர்யம்.

அடுத்து, இவரது கேள்விக்கான பதிலை கனவில் கண்டவர். நமக்கு பெருமை தேடித்தந்த ஒருவர் கேள்வி-பதில் இரண்டையுமே கனவில் தான் கண்டாராம்! அவர் ஸ்ரீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan) இராமானுஜன் எப்பொதும் தனது தலையருகில் ஒரு நோட்டுப்புத்தகமும், ஒரு பென்சிலும் வைத்திருப்பாராம். அதில், தன் கனவில் வரும் சமன்பாடுகளையும், சில புதிரான கணித விவரங்களையும் தேற்றங்களையும் சிக்கலான கணிதங்களையும் அவற்றின் தீர்வுகளையும் அரைத்தூக்கத்தில் கிறுக்கிவைப்பாராம். அவர் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான தேற்றங்கள் இன்னும் மேலைநாட்டு கணித அறிஞர்களை சிந்திக்கவைத்து கெர்ணடுதான் இருக்கிறது. காரணம் இவர் தனது குறிப்பேடுகளில் தேற்றம்-அதன் விடை ஆகிய இரண்டை மட்டுமே பெரும்பாலும் குறித்துவைத்துள்ளார், (கணிதமேதை இராமானுஜன் பத்ரி சேஷாத்ரி (முகநூல் பக்கம்)

கனவானது வரலாற்று அறிஞர்கள் மத்தியிலும் அறிவியலாளர்கள் மத்தியிலும் எவ்விதத்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை, இணையம், முகநூல் பக்கங்களை கொண்டு இங்கு எடுத்துரைக்கப்பட்டது. இலக்கியங்களிலும், கம்பகாப்பியத்திலும் கனவானது எவ்வாறு பயன்று வந்துள்ளன என்பதையும் இவண் அறியலாம்.

கனவு பற்றிய தனிப்பாடல்கள்
மனிதனுக்கு கனவின் மீதுள்ள நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் புலவர்கள் பல இனிய பாடல்களைப் பாடிச் சென்றுள்ளனர். அதில் பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாள், எம்பெருமான் கண்ணனை தான் மணம் புரிவதாக கண்ட கனவினை தோழியிடம் சொல்லும் விதமாக அமைந்த “வாரணமாயிரம்” எனத் தொடங்கும் பத்து பாசுரங்களும் ஆண்டாள் கண்ட கனவு நனவாக்கப்பட்டதற்கு சான்றாகக் கொள்ளலாம். இப்பாசுரங்களை இன்றும் கன்னிப்பெண்கள் நோன்புற்ற நாட்களில் (மார்கழி மாதம்) பாடும் பொழுது ஆண்டாளைப் போன்று தங்களுக்கும் சிறப்பானதொரு திருமண வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையினை விதைக்கும் ஓர் விதையாக இக்கனவுப்பாடலைக் குறிப்பிடலாம். இதனை,

“வாரமணாயிரம் சூடிவலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டர் கனாக் கண்டேன் தோழீ “ என்று

தொடங்கி ஒவ்வொரு பாசுரத்திலும் மாப்பிள்ளை அழைப்பு முதல், திருமணம் முடியும் வரையிலான பத்துப்பாசுரங்களை அமைத்து ஆண்டாள் பாடியுள்ளதைக் கொண்டு அறியலாம், மேலும்,

“இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையு உடையவன் நாராயணன் நம்பி!
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மதிக்கக் கனாக் கண்டேன் தோழீநான்”

“அரிமுகனச்சுதன் கைம்மேலென்கை வைத்து
போரி முகந்தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்”
-(நாச்சியார் திருமொழி-ஆண்டாள்)

என்று சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாள் கண்டகனவு நனவானதை வைணவக் கோயில்களில் மார்கழிமாதம் நடக்கும் ஆண்டாள் திருக்கல்யாணம் நமக்கு நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன. மேலும்,

சங்க இலக்கிய பாடல்களிலும் கனவு அமைத்து புலவர்கள் பாடியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. கச்சிப்பேட்டு நன்னாகையார் என்ற புலவர் தலைவி ஒருத்தி இரவிலே கனவு கண்டுவிழித்த பிறகு தன் தோழியிடம் தான் கண்ட கனவைக் கூறுவதாக தலைவி தன் தோழியை நோக்கி

“கேட்டிசின் வாழி தோழி அல்கல்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா கருட்டஏற் றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சா அயத்
தமியேன் மன்ற அளியேன் யானே; என்று
(குறுந்தொகை-30)

‘தோழியே நான் கூறுவதைக் கேட்பாயாக நெருநல் இரவின் கண் பொய்யை மெய்போலச் செய்யும் வண்மையுடைய தலைவர் என் உடலோடு வந்து பொருந்த அணைந்த நனவு போலும் தன்மையுடைய பொய்யாகிய கனாத் தோன்றி என்னை மருட்டியது நான் உணர்வு பெற்று எழுந்தேன், என் ஆருயிர்த் தலைவர் என் மருங்கில் இருப்பார் என்று கருதிக் கையாலே படுக்கை முழுவதும் தடவிப் பார்த்தேன். ஆவர் இருந்தால் தானே! வண்டுகள் மொய்த்து உழக்கிய குவளைமலர் போல நான் நலிந்துவிட்டேன், நான் மிகவும் இரங்கத்தக்கவள்’ என்று தன் கணவனை பிரிந்த நிலையானது கனவில் தலைவன் தன்னுடன் இருப்பதாக கொள்ளம் மனநிலையினை வெளிப்படுத்துவதாக; தலைவின் ஏக்க நிலைப்பாட்டை கனவின் மூலம் வெளிப்படும் விதமாக அமைத்துப் பாடியுள்ளார் புலவர். மேலும்,

கோவூர்க்கிழார் என்னும் மற்றொரு புலவர் கிள்ளிவளவன் என்னும் மன்னனைப் பாடும்போது அவனது சினத்தை மூட்டியோரின் நாட்டு மக்கள் நனவின்கண் தசைகளில் எரிகொள்ளி வீழ்தல் முதலிய தீ நிமித்தங்களும் கனவின் கண் வாயிற் பல்வீழ்த்தல் முதலிய தீய நிகழ்ச்சிகளும் கண்டு, அவன் மேற் செலவு நினைந்தஞ்சி தாம் எய்தும் மனக்கலக்கத்தை தம் காதல் மகளிர் அறியாதவாறு மறைத்து அலமருகின்றனர் என்று பாடியுள்ளார். இதனை,

“திசையோடு நான்கு முற்க முற்கவும்
பெருமரத் திலையின் நெடுங்கோடு வற்றல் பற்றவும்
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
வெள்ளி நோன்படை கட்டிலோடு கவிழவும்
கனவின் அரியன காணா”…,
(புறநானூறு 41:4-11)

என்று தன் கனா குறித்து பாடியுள்ளமை அறியமுடிகிறது. மதுரைச் செங்கண்ணனார் என்ற புலவரும் கனவு குறித்து பாடியுள்ளார். இச்சங்கப்பாடல்களுடன் உளவியலாளர் அறிஞர் ஃசிக்மண்ட் பிராயடின் கொள்கை ஒத்துச்செல்வதையும் அறியலாம்.

கம்பகாவிய கனவு நிலை
“கனவுகளைப் பற்றித் தனிப்பாடல்கள் பாடிய புலவர்கள் காவியங்களிலும் அக்கனவைப் புகுத்த வேண்டும் என்று விழைந்திருக்கலாம். கனவைப் புகுத்துவதன் மூலம் ஏதோ ஒரு விதமான வனப்பு காவியத்தில் உண்டாவதை அவர்கள் உணர்ந்திருக்கலாம். குவியங்கள் பலவற்றிலும் கனவுகள் இடம்பெற்றிருப்பதற்கு இதுவே காரணமாக இருக்க வேண்டும். கதையைப் பொறுத்தவரை கதையின் அடிக்கருத்தைத் தக்க இடத்தில் அமைக்கவும் கதையின் உச்சநிலைக் கட்டம் படிப்போரின் நெஞ்சில் நன்கு பதியுமாறு செய்யவும் பின்னே வரும் நிகழ்ச்சிகளை முன்னதாக ஓரளவுக்குச் சுட்டிக் காட்டவும் கனவுகள் பயன்படுகின்றன” என்று சி.எம்.பௌராவின் கூற்றாகமுனைவர் மா.இராமலிங்கம் (இலக்ககிய தகவு பக்.13) குறிப்பிடுகின்றார். மேலும்,

“விதியின் ஆற்றலை விளக்கிக் காட்ட விழையும் புலவர்களுக்கு இது சிறந்த கருவியாக அமைகிறது”. அஃதோடன்றி ஒரு நெடிய கதையை நடத்திச் செல்கிறபோது தனிப்பட்ட கிளைக்கதைகளைத் தனியே தொடங்கவும் கனவுகள் பயன்படுகின்றன என்பது அவர் கருத்து.

பண்டையக் காலத்தில் கனவினைக் குறித்து ஆராய்ந்து எழுதிய நூலாக சிலப்பதிகாரத்திற்கு உரைதந்த “அடியார்க்கு நல்லார் உரையில் ‘கனாநூல்” என்று ஒரு நூல் குறித்து அறியமுடிகிறது. இது இம்பர் என்னும் நகரத்தில் வாழ்ந்த கணபரதேவன் கூற அவர் மகன் பொன்னவனால் எழுதப்பட்டது. நல்ல நிலையில் காணும் கனவு இரவு முற்சாமத்தில் கண்டால் ஓராண்டில், இரண்டாம் சாமத்தில் கண்டால் ஒரு திங்களிலும், நான்காம் சாமத்தில் கண்டால் பத்து நாட்கிளிலும் பலன் தரும் என்று கனாநூல் குறிப்பிடுகிறது”. என்றும் முனைவர் மா.இராமலிங்கம் (பக்.11) கனவுகள் குறித்து குறிப்பிடுகின்றார். இன்றும் விடியற்காலையில் காணும் கனவுகள் உடனே பலிக்கும் என்பது நம் நாட்டில் நிலவிவரும் நம்பிக்கைகளாகக் குறிப்பிடலாம்.

அன்றாட வாழ்வில் நாம் காணும் கனவுகளைவிடக் காவியத்தில் காட்டப்படும் கனவுகள் கற்பனா சுவையை ஏற்படுத்திபடிக்கும் போது ஆர்வத்தை தூண்டுவதாக அமைகின்றன. வாழ்க்கையில் நாம் காணும் கனவை வைத்து இது இப்படித்தான் நிகழும் என்று வரையறுத்துக் கூறமுடியாதெனினும் காவியக் கனவுகள் அப்படியில்லாமல் கனவைக் கொண்டே கதைப்போக்கை நாம் அறிந்து கொள்ளும் விதமாக அமைத்துப் பாடப்பட்டுள்ளமையை கம்பகாவியத்தில் திரிசடையின் கனவு உரைக்கும் பகுதி காப்பியத்தை தெளிவுபடுத்துவனவாக அமைந்துள்ளதை அறியலாம்.

இராமகாவியத்தில் குறிப்பிடப்படும் கனவுகளாக, தசரதன் உரைக்கும் கனவையும் திரிசடையின் கனவினையும் எடுத்துக் கொள்ளலாம். இங்கு வான்மீகி ராமாயணம் மட்டும், தசரதன் கண்ட தீக்கனா பற்றியும் கிரக நிலைப்பற்றியும் இராமனிடம் கூறுகதாகக் குறிப்பிடுகிறது. (கம்பராமாயணம்- கழக வெளீயிடு அ.கா. பக்-53)

இராம, ஆகாயத்திலிருந்து கொள்ளிக் கட்டையொன்று இடியோவையுடன் வீழ்வதாகக் கனவு கண்டேன். மேலும் எனது ஜன்ம நட்சத்திரத்தில் சூரியன், செவ்வாய், இராகு என்னும் மூன்று கிகரகங்களும் ஒரு பங்கு வந்து கூடியிருப்பதாக சோதிடர்கள் கூறுகின்றனர். இவற்றின் காரணமாய் அரசனுக்கு மரணம் நேரலாம் அல்லது அவனுக்கு மிகப் பெரிய தீங்கு உண்டாகலாம் என்பது சோதிட நூற் கொள்கை. மேலும் மனிதர்களின் எண்ணங்கள் நிலையானவை அல்ல. ஆகையால், எனக்கு இறுதி நேர்வதற்கு முன்னரே, என் மனம் உறுதியாக இருக்கும் பொழுதே உனக்கு முடிசூட்டி மகிழ விரும்புகிறேன். (4.17-20) (கம்பராமாயணம் பக்-53 அயோத்தி காண்டம்).

சங்க இலக்கியப்பாடல் (புறநானூறு41:4-11 முன்பக்கம் குறிப்பிட்டுள்ள), வரிகளோடு வான்மீகி தசரதனின் கனவு நிலையானது ஒத்துச்செல்வதை இங்கு காணலாம்.

திரிசடையின் கனவும், சீதையின் தேற்றமும்:
கம்ப காவிய சுந்தரகாண்டம் காட்சிப் படலத்தில், சீதை திரிசடையிடம் தான் அனுபவத்திற் கண்டதைக் கூறி புலம்புகின்றாள்,

“துய நீ கேட்டி….,
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள்”
(சுந்தரகாண்டம் கா.ப:30:3-4)

எனது “நலம் துடிக்கின்றதோ? நான் செய் தீவினைச்
சலம் துடித்து, இன்னமும் தருவது உண்மையோ?
பொலந் துடி மருங்குலாய்! புருவம், கண், முதல்
வலம் துடிக்கின்றில வருவது ஓர்கிலேன்.” என்று
(சுந்தரகாண்டம்; (31:1-4) )

தற்பொழுது இடக்கண் துடிப்பதாகவும், இராமன் முனியொடு மிதிலைக்கு வந்தபோதும் இடக்கண் புருவமும், தோளும், துடித்ததாகவும் ‘கான் புகுந்த நாள், வலம் துடித்ததே’ (காட்சிப்படலம்:33-4) என்று சீதை தன் இருவேறு மனிநலையைத் திரிசடையிடத்து தெரிவிக்கின்றாள்.

திரிசடை தன் கனவு கூறல
திரிசடையானவள் சீதையை நோக்கி உனக்கு மங்களங்கள் வந்துள்ளன. இக்குறி நல்லது நல்லது என்று வாழ்த்தி உன்னுடைய துணைவனான நாயகனை அடைவது சத்தியம். அன்றியும் நான் கூறுவதைக் கேள் என்று, இலங்கை மாநகருக்கும் இராவணனுக்கும் அவனின் சுற்றத்தாருக்கும் துன்பம் நேரும் விதமாக தான் கண்ட கனவினை (சுந்தரகாண்டம்: காட்சிபபடலம் 5107 முதல் 5121 வரை) 14 பாடல்களில் கூறுவதாக கவிசக்கரவர்த்தி கம்பர் குறிப்பிட்டுள்ளார் திரிசடை,

“துயில் இலை ஆதலின், கனவு தோன்றல;
அயில்விழி அனைய கண் அமைந்து நோக்கினேன்;
பயில்வன பழுது இல, பழுதின் நாடு என;
வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்
(காட்சிப்படலம்:38:1-4)

மேலும்,

“எண்ணெய் பொன் முடிதொறும் இழுகி, ஈறு இலாத்
திண் நெடுங் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்,
அண்ணல் அவ் இராவணன் இரத்த ஆடையன்,
நண்ணினன், தென்புலம்-நவை இல் கற்பினாய்
(காட்சிப்படலம்:39:1-4)

என்று கனவின் நிலைப்பாடாக “கனவில் செவ்வாடை, எண்ணெய்ப்பூச்சு, தேரில் செல்லல் தென்திசையில் போதல்” முதலியன கேட்டுக்கு அறிகுறியாக கம்பர் இட்டுச் செல்கிறார்.

திரிசடை தன் கனவில் இராவணனின் புதல்வர்கள், போர்க்களத்தில் இரத்தவெல்லத்திலும், தன் அரண்மனை ஒளியிழந்து பழைய அரண்மனைகளாகவும்; படைகளும் படைக்குருவிகளும் தானே துடிபோல் முழங்கியும், அவனின்வரக்க வீரர்கள் அணிந்த கற்பக மலர் புலால் நாற்றமும் வீசுவதாகவும், இலங்கை மாநகரமும் மதில்களும் எல்லாத் திசைகளாலும் தீப்பற்றி எரிவதாகவும் மேலும், மேகமானது ஆறாத புண்ணின் இரத்தத்தை கொட்டுவது போன்று மழையை பொழிந்தும் திருமாலின் ஆயுதங்கள் நெருங்கிப் போர் செய்கின்றன. அரக்கியர்களின் மங்களத் தாலிகள் அறுப்பவர்கள் பிறர் எவரும் இல்லாமல் தாமாகவே மார்பில் வீழ்ந்தன இந்த கனாக் காட்சியின் அதிசயத்தை மேலும் கேட்பாயாக,

“மன்னவன் தேவி, அம் மயன் மடந்தை தன்
பின் அவிழ் ஓதியும், பிறங்கி வீழ்ந்தன;
துன் அருஞ் சுடர் சுடச் சுறுக்கொண்டு ஏறின;
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது ஈது எனா
(காட்சிப்படலம்:48:1-4)

என்று இராவணன் செய்த துன்பங்களுக்கௌலாம் அவன் இராமனால் அடையப்போகும் இன்னல்களாக பின்நடக்கவிருக்கும் செயலை முன்கூட்டியே கனவின் மூலம் வெளிப்படுத்துகிறார் கம்பர். மேலும்,

“இன்று, இவண், இப்பொழுது இயைந்தது ஓர் கனா;
வன்துணைக் கோள்அரி இரண்டு மாறு இலாக்
இன்றிடை உழுவைஅம் குழுக் கொண்டு ஈண்டியே,
(காட்சிப்படலம்:49:1-3)

வலிமை மிக்க ஒன்றற்கொன்று துணையாயிருக்கும் இரட்டைச் சிங்கங்கள் தன் குழுவோடு கட்டுப்பாடற்ற மத யானைகள் வாழ்கின்ற அந்த வனத்தை சிங்கங்கள் சுற்றிக் கொண்டன பளமைளில்லாத தம்முடைய நகரை அடைவதற்காக அங்கே தங்கியிருந்த ஓர் மயிலும் வெளிப் போயது (50:1-4) என்றும்,

‘ஆயிரம் விளக்குகள் அமைந்த நீண்ட தூரம் ஒளி தரும் அடுக்குத் தீபமாகிய ஒரு விளக்கை ஏந்திக் கொண்டு சிவந்த நிறமுடையப் பெண் அரசனான இராவணனின் அரண்மiனியலிருந்து வீடணனின் கோயில் அடைதலைப் பொருந்தினாள்’ அப்போது,
“பொன் மனைபுக்க அப்பொரு இல் போதினில்
என்னை நீ உணர்த்திலின்; முடிந்தது இல்”
(காட்சிப்படலம்:52:1,2)

என அப்பொழுது நீ என்னை எழுப்பினாய் அக் கனவு நிறைவு பெறவில்லை என்று கூறி தன் கனவைக் கூறி முடிகின்றாள்.

கனவில் காணும் பொருட்களைக் கொண்டு நிமித்தம் கூறும் வழக்கத்தையும், அக்கனவில் வரும் மாந்தர்கள் அடையும் மனநிலை, அவர்களின் செயல்பாடுகளை வைத்தும்; கண்ட கனவானது தீக்கனவா, நல்லவைக் கூறும் கனவா என்பதை பகுத்து கூறும் தன்மையினை இப்பாடல்கள் வழி நாம் அறியமுடிகிறது. படிப்போருக்கு எதிர்ப்பார்புடனும் மேலும் படிக்கத் துண்டும் ஆவலையும் மனதில் விதைத்து, காவியத் தலைவி சீதையின் துயர் தீரப்போகிறது என்ற எண்ணம் முன்கூட்டியே படிப்போரின் மனதில் எழச்செய்கின்ற இந்நிலையே உண்மைக் கனவுக்கும் காவியக் கனவுகளுக்கும் உள்ள நுட்பமான வேறுபாடாகக் கருதலாம்.

கம்பரின், இக்கனவு பதிவுகள் கனவாக நின்றுவிடமால் அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் பகுதியே கம்பகாவியத்தின் யுத்தகாண்டகதைக் கொள்ளலாம். யுத்தக்காண்டத்தில் இந்திர சித்தனின் பிரமாத்திரத்தினால் வீழ்ந்து பட்ட இராம இலக்குவரைப் போர் களத்தில் கண்ட சீதை உற்றத் துயரை களையும் பொருட்டு, திரிசடை,

“கண்ட அக் கனவும், பெற்ற நிமித்தமும் நினது கற்பும்
தண்ட வாள் அரக்கர் பாவச் செய்கையும் தருமம் தாங்கும்
(யுத்தகாண்டம்: களம்காண்படலம் :8694)

என்று தான் முன்பு கண்டு கூறிய கனவினை நினைவு கூறுவாயாக, இராம இலக்குவருக்கு தீங்கேதும் நேராது என்று எடுத்துக் கூறுகின்றாள்.

ஓர் கனவு நிகழ்வை காப்பியத்தில் புகுத்துவதோடு அல்லாமல் அக்கனவின் நிமித்தம் கொண்டு நிகழவிருக்கும் நிகழ்ச்சிகளை கொண்டு நன்மை தீமை பாகுபர்டடிற்குள் புகுத்தி அக்காப்பியமானது இன்பவியல் அல்லது துன்பவியல் முடிவுக்கு இட்டுச் செல்லும் சிறப்பான ஒரு காவியத்தைப் படைக்க கூறும் கனவு உத்தியை கம்பர் பயன்படுத்தியுள்ளமை இவண் அறியமுடிகிறது.

இவ்வாறு சீதையின் துயர் நீக்க இராமர் இலக்குவர் வருவர் என்பது திண்ணம் என்ற ஒரு தீர்க்கமான முடிவை முன்கூட்டியேப் படிப்போர் மனதில் ஏற்படுத்தியுள்ளமை கம்பரின் காவிய படைப்பிற்குச் சிறப்பாக கூறலாம்.

இன்று கனவானது மனம், அறிவு, நினைவு என்று எதனுடன் தொடர்புடையது என்னும் முழுமையான அறிவியல் புரிதல் இன்னும் இல்லை. அறிவியலாலர்கள் மூளையில் உள்ள நினைவுக் குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக கனவு தோன்றுவதாகக் கருதுகின்றனர். கம்பர் தன் எண்ணத்தை தான் சொல்லவந்த செய்தியினை கவின் நிறைந்த ஒரு காப்பியத்தை படைத்தளித்துள்ளார் என்றால் அதற்கு ‘கனவு நிலைப்பாடும் காப்பியத்திற்கு பெரும் பங்கு வகித்துள்ளது எனலாம்’. இராமகாவியத்தை தொடர்ந்து ஒரு காட்சியோடு ஒரு காட்சி ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாக ஓர் தொடர்நிலையைக் கையாள இக்கனவு நிலைப்பாட்டை புகுத்தி படைத்துள்ளமை வெளிப்படையாக அறிந்து கொள்ள முடிகிறது.

பயன்படுத்திய நூல்கள்:

1. இலக்கியத் தகவு – ம. இராமலிங்ம்,
நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ்(பி) லிமிடெட்,
41,பி,சிட்கோ, இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
சென்னை-98.

2. இணையம்    – (விக்கிப்பீடியா பக்கம்).

3. கணித மேதை இராமனுஜ சேஷாத்ரி – முகநூல் பக்கம்.

4. கம்பராமாயணம், அயோத்தியா காண்டம் –
பேராசிரியர். ஆ.ச. ஞானசம்பந்தன்
மணி மேல்நிலைப் பள்ளி வளாகம்,
88.நேதாஜி சாலை,
பாபநாயக்கன் கம்பன் அறநிலை
பாளையம், கோவை-37
பதிப்பு-2004.

5. கம்பராமாயணம், சுந்தரகாண்டம் – பேராசிரியர். ஆ.ச. ஞானசம்பந்தன்
மணி மேல்நிலைப் பள்ளி வளாகம்,
88.நேதாஜி சாலை,
பாபநாயக்கன் கம்பன் அறநிலை –
பாளையம், கோவை-37
பதிப்பு-2004.

6. கம்பராமாயணம், யுத்தகாண்டம் – பேராசிரியர். ஆ.ச. ஞானசம்பந்தன்
மணி மேல்நிலைப் பள்ளி வளாகம்,
88.நேதாஜி சாலை,
பாபநாயக்கன் கம்பன் அறநிலை –
பாளையம், கோவை-37
பதிப்பு-2004.

7. குறுந்தொகை –    முனைவர்- இரா.செயபால்
(உரையாசிரியர்)
நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ்(பி) லிமிடெட்,
41,பி,சிட்கோ, இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்- சென்னை-98.

8. புறநானூறு – முனைவர்- இரா.செயபால்
(உரையாசிரியர்)
நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ்(பி) லிமிடெட்,
41,பி,சிட்கோ, இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்- சென்னை-98.

sakthi26gahan@gmail.com

* கட்டுரையாளர்: – செ.சக்திகலா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 11 –