மலேசியா நூல்கள் அறிமுகமும், குழந்தை எழுத்து உலகமாநாடும்.

- சுப்ரபாரதிமணியன் -கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில் கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டம் –  புதன்    மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் : தலைமை:கலாமணி கணேசன், சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. மலேசியா குழந்தை இலக்கிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன, முதல் குழந்தை எழுத்து உலகமாநாடு கோலாலம்பூரில் சமீபத்தில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் கலந்து கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார், சுப்ரபாரதிமணியன் பேசியதில் :

1. பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள்  வாசிக்கும் இலக்கியம் ).,                2. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம்   3, சிறுவர்கள் பற்றிய இலக்கியம்  என பல்வேறு பிரிவுகள் இருப்பதை சிறுவர்கள்  இலக்கியம்  பற்றிச் சொல்லலாம். இன்று பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள்  வாசிக்கும் இலக்கியம் ) அதிகமாக உள்ளது. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம்   அதிகம் வரவேண்டும். அதுதான் ஆரோக்யமானதாகவும் சிறுவர்களின் படைப்புத்திறனைக்காட்டுவதாகவும் இருக்கும்.

சிறுவர் இலக்கியம் என்பது பெரியவர்கள் இலக்கியம் அல்லது பொது இலக்கியம் அல்ல.  அது வயது அடிப்படையில் படைக்கப்படுவதை வெளிநாட்டுப்படைப்புகள்  காட்டுகின்றன. தமிழில் அப்படி வருவபவை குறைவு.வயதிற்கேற்ப ரசனை, வாசிக்கும் திறன், இயல்பு காரணமாய் இந்த வித்யாசம் தேவை.

குழந்தை பருவத்தின் அடையாளங்கள் இன்றைய தொலைக்காட்சி மற்றும் நுகர்வுக்கலாச்சார முறையில் தொலைந்து நிற்பதை மீட்டெடுக்க வேண்டும்.. கைபேசி, அய் பேடு சந்ததியாக இன்றைய சிறுவர்கள் மாறாமல் இருக்க சிறுவர்கள்  இலக்கியம் அதிகம் முன்னெடுக்கப்படவேண்டும். என்றார்.

புலவர் சொக்கலிங்கனார்  “ இலக்கிய இன்பம் “ என்றத் தலைப்பில்   சிறப்புரையாற்றினார். விஜயா நன்றி கூறினார்.

சுப்ரபாரதிமணியன்  மாநாட்டில் படித்த கட்டுரை பின் இணைப்பில் தரப்பட்டுள்ளது.

மலேசியா குழந்தை இலக்கியம் மாநாட்டில் நான் படித்தக் கட்டுரை.

குழந்தைகளும் குறும்படங்களும் –  சுப்ரபாரதிமணியன் –

சுப்ரபாரதிமணியன்திரைப்படங்களில் குழந்தைகளை முதிர்ந்தவர்களாக , அதிகம் பேசுபவர்களாக               ( வயசுக்கு மீறியப் பேச்சு ), வயதுக்கு மீறிய சாகசங்களில் ஈடுபடுபவர்களாக்க் காட்டுகிறார்கள். குறும்படங்களில் யதார்த்தமானக் குழந்தைகள் காணப்படுகிறார்கள். இயல்பாக அவர்களின் பிரச்சினைகளூடே உலவுகிறார்கள். எங்களூரை இந்தக்கட்டுரைக்கு மையமாக எடுத்துக் கொள்கிறேன்.எங்களூர் குறும்படங்களில் குழந்தைகள் காட்டப்பட்டத் தன்மை குறித்து கொஞ்சம்.

முதலில் எங்களூரைப்பற்றி சில தகவல்கள்:  இந்தாண்டு எங்களூர் திருப்பூருக்கு 100 வயது.. திருப்பூர் நூறாண்டைத்தொட்டு இருப்பது அது நகராட்சியாக  உருவாக்கப்பட்டு இருப்பதைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது ( டிசம்.1, 1917 ) ஜன 1 2008 ல்  மாநகராட்சியானது. . தற்போது பின்னலாடைத்துறை ஏற்றுமதியால் 30,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியைக் கொடுக்கும் நகரம். 18,000 கோடி ரூபாய் உள்நாட்டு வர்த்தகத்தால் பெறுகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் அது 1 லட்சம் கோடியாக உயரும் வாய்ப்புகள் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கருதுகிறார்கள். பல்லடம் தாலுக்காவின் சிறு கிராமமாக ஒரு காலத்தில் இருந்தது இப்போது வந்தாரை வாழ வைக்கும் ஊர். நன்னீர் ஓடிய நொய்யல் இன்று மறைந்து போன நதியாகி விடும் அபாயம் உள்ளது.  கரிசல் பூமியின் பருத்தி முன்பு நெசவாளர்களுக்கு வாழ்வு தந்தது இபோது பின்னலாடை மூலம் வேலை தேடி வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பைத் தந்து வருகிறது. சுதந்திரப்போராட்டம், தியாகி குமரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான    தியாகிகள் இந்திய சுதந்திரத்தில் பங்காற்றிய ஊர். 2009ல் திருப்பூர் மாவட்டமாக உருவாகியிருந்தாலும் நகரின் கட்டமைப்பு, சுகாதாரம், கழிவு நீர் மேலாண்மை , சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தத்தளிக்கிறது

எங்களூர் திருப்பூர் இளம் குறும்படைப்பாளிகளின் களமாக விளங்கி வருகிறது. இளம் படைப்பாளிகளில் மிகவும் இளையவர் ரவிக்குமார்.. இவரின் இன்று நேற்று நாளை திரைப்படம் பெரும் வெற்றி கண்ட்து.  லீவு, எட்டாம்வகுப்பு, கழல், எதிர்வினை, சுமங்கலி ஆகிய குறும்படங்களுக்குப் பின்பு இவர் இயக்கி வந்திருக்கும் 15 நிமிடக் குறும்படம் “கண்ணாமூச்சி”.தொடர்ச்சியாக அக்கரையுடனான செயல்பாட்டினால் “கண்ணாமூச்சி”யை வந்தடைந்திருக்கிறார் ரவிக்குமார்.

அவர் சார்ந்த பொதுவுடமை இயக்கச் செயல்பாடுகள் சமூகவியல் சார்ந்த முழு அழுத்தத்தைத் தரும் விஷயங்களையே இதுவரை அவரின் படைப்புகளாக்கியிருக்கிறது. விடுமுறைகூடக் கிடைக்காமல் பனியன் கம்பனியில் உழலும் சிறுவனைப் பற்றிப் படம் எடுத்திருக்கிறார். சரியான கல்வி வசதியும், உதவியும் இல்லாத ஒரு சிறுவன் தொழிற்சாலைக்குள் தள்ளப்படுவதைக் குறும்படமாக்கியிருக்கிறார். பல ஆசைகளில் உடம்பை நிர்மூலமாக்கும் மதுவின் தன்மை பற்றி ஒரு நிமிடக் குறும்படத்தில் காட்டியிருக்கிறார். பின்னலாடை, நூற்பாலைகளில் பதின்பருவப் பெண்கள் கொத்தடிமைகளாய் ஆக்கப்பட்டிருக்கும் கொடுமை பற்றி ‘சுமங்கலி’ பேசுகிறது. ’தழலில்’ சின்னச் சின்ன ஆசைகள் தலைமுறைகளைத் தாண்டி கடந்து போவதாக இருக்கிறது.

‘கண்ணாமூச்சியில் தலைமுறை இடைவெளி கடந்த தாத்தா பேரன் உறவு பற்றிய அழுத்தம் இருக்கிறது.சிறந்த சிறுகதைத் தன்மையை ‘கண்ணாமூச்சி’ அதன் திரைக்கதையாகப் பெற்றிருக்கிறது. திருப்பம் தரும் எதிர்வினை முத்தாய்ப்பாக அமைந்துவிட்டிருக்கிறது. தாத்தா பேரனிடம் கதை சொல்லும்போது யதார்த்த உண்மைகளை மீறி தனது வீரச்செயல்களுக்கான முத்திரையை நிறையச் சொல்லுவார். தனது ஆளுமையை நிலைநிறுத்த அது தேவையானது என்றிருப்பவர். நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளம் பற்றி பேரனிடம் கதை சொல்கிறார். கதை கேட்டு பேரன் தாத்தாவுடன் நெருங்கியிருக்கிறான். அவனது நண்பன் செஸ்-ஸில் வெல்ல முடியாதவனாக இருப்பதாகக் காட்டி அவனைத் தாத்தா வெல்ல வேண்டும் என்கிறான். “நீங்க செஸ் சேம்பியன் ஆச்சே தாத்தா” … தலையாட்டிவிடும் தாத்தா வேறு வழியின்றி செஸ் கற்றுக்கொள்கிறார்.தனது பழைய நண்பன் ஒருவனை தேடிச்சென்று செஸ் நகர்வுகளைக் கற்றுக்கொண்டும் செஸ் பற்றிய புத்தகங்களை வாசித்தும் ஒருவார இடைவெளியில் பையனை ஞாயிறில் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் கற்றுக்கொள்கிறார். வீட்டில் பலரின் விமர்சனத்திற்கு ஆளாகிறார். “பேரன் கேட்டிருக்கிறான், என்ன செய்ய”? ஞாயிறில் அந்த செஸ் பையன் வருவதில்லை. பேரனுக்காகக் காத்திருந்து அலுத்துப்போகிறார் தாத்தா. கையில் பேட்டுடன் கிரிக்கெட் மைதானத்திலிருந்து வருகிறான் பேரன்.

” இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. செஸ் போட்டி உன் பிரண்டோட இருக்கே. எங்கடா அவன் பயந்து போயிட்டனா?”

“அதிருக்கட்டும் தாத்தா.” என்று கிரிக்கெட்டில் வீரனான அவனின் நண்பனான ஒருவனைக் குறிப்பிட்டு அவ்னைத் தாத்தா தோற்கடிக்க வேண்டும் என்கிறான்.

“தாத்தாதான் கிரிக்கெட்டிலும் சாம்பியனாச்சே”

“ஆமாமா”

காலச்சூழலுக்கேற்ப தன் நண்பர்களையே சக நடிகர்களாக்கி அந்த அனுபவங்களுக்குள் அமிழ்ந்திருக்கிற அவர்களை கதை மாந்தர்களின் மூலம் வெளிப்படுதுவதாய் தனக்கு நெருக்கமானவர்களை நடிக்க வைத்திருக்கும் ரவிக்குமார், அந்த நெருக்கமானவர்களின் பலவீனஙகளை கடந்து திரையில் வெளிப்படுத்த சிரமஙகள் பட்டிருந்தாலும் அவர்களின் அனுபவங்களை நடிப்பிற்கும் உரமாக்கிக் கொள்கிறார். சக மனிதர்களால் வெளிப்படும் படைப்பிற்கான தன்மை யதார்தத்திற்கு வெகு அருகாமையில் இருக்கிற்து. அந்த வகையில் ஜெயபால், கே.பொன்னுசாமி, நந்தகோபால், சபரி ஆகியோர் நடிப்பை சொல்லலாம். உயர்ந்த தொழில் நுட்பக் காமிராவைப் பயன்படுத்தியிருந்தால் இப்படத்தின் தரம் வெகுவாகக் கூடியிருக்கும். சதுரங்கபலகைக் காட்சிகள், பலருடன் விளையாடுவதைக் காட்டியிருப்பது, சூழலை சரியாகக் காட்சிக்குள் கொண்டுவருவதில் நேர்ந்த அக்கறை இருக்கிறது. அக்கறை கொண்ட தலைமுறை குதிரைப்பாய்சசலாய் விரைந்துகொண்டிருக்கிற்து.

எங்களூரில் அரிமா சங்கங்கள் மூலம் உதடுபிளவுக்கு பல குழந்தைகளுக்குச் சிகிச்சைகள் தரப்பட்டிருகிறது. அதற்கு சர்வதேச  சமூக அமைப்புகள் உதவியிருக்கின்றன. அந்த வகையில் வடநாட்டில்

பிங்கிகுமாரி என்ற ஆறு வயது பெண்ணிற்கு நிகழ்ந்த சிகிச்சை பற்றி ஒரு படம் பற்றி :பிங்கி ஸ்மைல். இதைத் திரையிட்டு பல இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கிறோம்.

பிங்கிகுமாரி என்ற ஆறு வயது பெண்ணிற்கு உதட்டில் அமைந்த பிளவு முகத்தைக் கோரமாக்கி விட்டது. பள்ளிக்குச் செல்வதும், சமூக வாழ்க்கையில் சகஜமாக இருப்பதும் அவளுக்கு இயல்பானதாக இல்லாமல் போய்விட்டது. எதேச்சையாய் ‘ ஸ்மைல் ட்ரெயின் ‘ என்றத் தன்னர்வத்தொடு நிறுவனம் அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து நடத்திய 45 நிமிட அறுவைச் சிகிச்சை அப் பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது. இது பற்றின விவரணப்படம் ‘பிங்கி ஸ்மைல் ‘ ஆஸ்கர் பரிசும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சார்ந்த மேகன் மைவன் என்ற பெண் இயக்குனர் இந்த 40 நிமிட படத்தை இயக்கியிருக்கிறார்.

உதடு பிளவு என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பதாகும். ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இது அதிகமாக உள்ளது. மரபியல் ரீதியான காரணங்களூம் இதற்கு உள்ளன. கர்ப்ப காலத்தில் தவறாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்துகள், கர்ப்ப நோய்கள், போதைப் பொருட்கள், மது பானங்கள் பயன்படுத்தியதன் விளைவாய் இந்த உதடு பிளவு பிறப்பில் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகின்றது..

பிங்கி குமாரியை ஒரு சமூக சேவகர் கண்டு பிடித்து இலவச அறுவைச்சிகிச்சைக்ககாக கூட்டிச் செல்வது பற்றி இப்படம் தெரிவிக்கிறது. ஸ்மைல்ட்ரெயின் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உதடு பிளவு போன்றவற்றுக்கான விழிப்புணர்வு, சிகிச்சையில் அக்கறை செலுத்தி இயங்கி வருகிறது இதற்கான சிகிச்சை குறித்து சமூகப் பணியாளர்கள் , பிங்கியின் தகப்பனார் இடம் விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள். அவர்களின் கிராமச்சூழலும், அங்கு பள்ளி செல்ல விடாமல் தடுக்கும் குழந்தைகளின் கேலியும் முன் வைக்கப்படுகின்றன். இதை சாப நோயாக எடுத்துக் கொள்ளும் முதியவர்களும் இருக்கிறார்கள். இதை மீறி பிங்கியை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்று வெற்றி பெற்றுத்திரும்பும்போது அப்பெண்ணுக்கு இயல்பாய் பள்ளிக்குப் போகும் சூழ்நிலையும் , மற்றவர்களுடன் பழகும் சகஜநிலையும் ஏற்படுகிறது. பிங்கியோடு சொகான் என்ற பையனுக்கு நேர்ந்த சிகிச்சை முறைகளும் அவன் தன்னம்பிக்கை பெற்று பள்ளி வாழ்க்கையைத் தொடர்வதி இந்தப்படம் சொல்கிறது.

இப்பிரச்சினை குறித்து விழிப்புணர்வின் அடையாளமாக இப்படட்த்தை எடுத்துக் கொள்ளலாம். ரசூல் பூக்குட்டி சிறந்த ஒளிப்பதிவுக்காக இப்படத்திற்கு ஆஸ்கார் பரிசு பெற்றிருக்கிறார். ஆனால் இந்தியாவில் கிடைக்கும் இப்படத்தின் பிரதியில் ஒளிப்பதிவின் பிரத்தியேகத்தன்மை இல்லாமல் சாதாரண கல்யாண வீடியோ காமிராவில் எடுக்கப்பட்டது போல படம் அமைந்திருப்பது அதிர்ச்சி தருகிறது, ஆஸ்கார் பரிசு பெற்ற ஸ்லம் டாக் மில்லினர் படம் பம்பாயைச் சார்ந்த விளிம்புநிலைக்குழந்தைகளை மையமாகக் கொண்டு அமெரிக்காவைச் சார்ந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். இந்தக்குறும்படமும் அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண் இயக்குனரால் , இந்தியாவின் பெனாரசைச் சார்ந்த ஒரு கிராமத்தினரை மையமாக வைத்து அங்கு விளிம்பு நிலையில் வாழும் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ரோட்டரி, அரிமா சங்கத்தினர் உதடு பிளவுக்கான இலவச சிகிச்சைகளை பல ஆண்டுகளாக தங்களின் சமூகப் பணியில் ஒன்றாக செய்து வருவதை இங்கு குறிப்பிடவேண்டும்.

பூக்குட்டி: தாண்டவக்கோனின் குறும்படம். திருப்பூரின் இன்னொரு குறும்பட முகம் ; யதார்த்த நிகழ்வுகளை திரைத் தொடர்பு மொழியில் நாடகீயமாக வெளிப்படுத்துவதில் இருக்கும் சுவாரஸ்யத்தின் பலத்தை திருப்பூர் தாண்டவக்கோனின் குறும்படங்களில் காண முடிவது ஒரு சிறப்பம்சமாகவே எனக்குத் தோன்றுகிறது. அவரின் சமீபத்திய ” பூக்குட்டி” குறும்படத்தில் இடம் பெறும் பல நிகழ்வுகள் அப்படி நாடகீயமாகியிருக்கின்றன.

தாண்டவக்கோனின் முந்திய படமொன்றில் உலக உருண்டை பிளாஸ்டிக பையில் அடைபடும் படிமத்தை ஒரு செய்தியாய் வெளிப்படுத்தியிருந்தார்.இதில் உடல் உறுப்பு தானம் என்ற செய்தி உணர்ச்சிகரமான நாடகமாக வெளிப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகரமான கலைஞர்கள் உணர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் மூலமே தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்.

தாண்டவக்கோனின் பிற குறிப்பிடத்தக்க குறும்படங்கள் ( சற்றே நீளமானவை ) :

பூங்கா, பேராண்டி . இனி   பேராண்டி  பற்றி

சுப்ரபாரதிமணியன்தாண்டவக்கோனின் குறும்பட படைப்புலகத்தில் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். பள்ளி போகும் மூன்று குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவர்களின் உலகம், அவர்களின் பிரச்சனைகளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களூடே பயணம் செய்து அவர்களில் உலகில் நடமாடவும், அவர்களின் பிரச்சனைகளில் பங்கு பெறவும், சிக்கல்கள் அவர்களுக்குள் பூதாகரமாகும்போது கைகொடுக்கவும் அவருக்கு இயல்பாகிறது. குழந்தை மனத்துடன் அவர்களை அணுகுவதற்கு ஏற்ற மனநிலையை உருவாக்குவது சாமான்யமல்ல; அந்த இயல்பான மனநிலையையும் பக்குவத்தையும் கொண்டவராய் அவர் இருப்பது படைப்பு நிலைக்கு வெகு சாதகமாகிறது. இந்த சாத்தியத்தை அவரின் முதல் குறும்படமான ‘பூங்கா’ முதல் விளிம்பு நிலையினரான ஊனமான குழந்தைகளின் பிரச்சி னைகளை முன் வைக்கிற “கை”, குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பற்றிய கல்வி பற்றிய “பாலிபேக்” அவற்றிலும் காணமுடியும்.

“பூங்கா”வில் அன்பிற்காக ஏங்கும் பெண் குழந்தை பக்கத்து வீட்டு ஏழை பையனுடன் கொள்ளும் நட்பு அன்பிற்கு அடைக்கலமாகிறது. “இப்படிக்கு பேராண்டி” படத்தில் இந்தச் சிறுவர்கள் குடும்பங்களின் மூத்தோரான தாத்தா பாட்டிகள் இல்லாத வெறுமையை உணர்ந்து அவர்களை தேடிக் கண்டடைகிறார்கள். இந்த ஏக்கத்தை நமக்குள்ளும் ஆழ விதைத்து விடுகிறார். இது அவரின் கலைத்திறனின் வெற்றியாக இருக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் பள்ளிக் காவலாளி ஒரு சிறு செடி தன் பராமரிப்பில் இருந்து தவறிப் போவதை கவனிக்கிற போது துணுக்குகிறார். அதை முதுமையான கைவிரல்களால் நிலத்தைக் கீறி பதியமிட்டு நீர் ஊற்றவும் செய்கிறார். இந்தப் பரிவை தடுக்கி விழுந்து சாப்பாட்டு கேரியரை சிதறடித்து விடும் சிறுவனிடமும் காட்டுகிறார். பெரியோரின் நேசம் இப்படித்தான் படத்தில் அறிமுகமாகிறது. அது காவலாளி என்ற நிலையிலிருந்து தாத்தா பாட்டி பற்றின ஏக்கமாக விரிகிறது. அவர்கள் இல்லாத உலகத்தை நினைத்து பூதாகரமாக்கிக் கொள்கிறார்கள். தாத்தா பாட்டி உலகில் தங்களுக்கான இடமில்லாதது பற்றி அழுகை இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க இயலாதபடி சூழல் இருக்கிறது (ஆனால் தனிப்பயிற்சி எடுக்கும் ஆசிரியையின் மகள் தன் எதிர்ப்பை சுலபமாகக் காண்பிக்கிறாள். கட்டாய நடனத்தை எதிர்த்த காமிக்ஸ் வாசிப்பில் என்ன தவறு என்று எதிர் கேள்வி எழுப்புகிறாள். அவளுக்குள்ளும் தாத்தா பாட்டி இல்லாத ஏக்கத்தை காமிக்ஸ்க்குள் அடக்க வேண்டியிருக்கிறது.)

குழந்தைகள் இருவரின் ஏக்கம் பெற்றோர்களைத் தொற்றுகிறது. கனவுகளுக்குள் நிரம்பி அதிர்ச்சியடைகிறார்கள். குழந்தைகள் தாத்தா பாட்டி புகைப்பட தேடுதலில் ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது. இதன் முடிவாய் தாத்தா பாட்டிகளை கண்டடைகிறார்கள்.

தாத்தா பாட்டி பற்றின ஏக்கங்களே குழந்தைகளின் பார்வையிலிருந்து விரிகிற வேளையில், தாத்தா பாட்டியின் பார்வையோ, நோக்கிலிருந்தோ குழந்தைகள் மீதான பாசம் குறித்து இன்றும் சில நெகிழ்வுகளை இப்படம் உள்ளடக்கியிருந்திருக்க வேண்டும். அது சமச்சீராக பாச வெளியின் விஸ்தாரத்தை குடும்பமெங்கும் விதைத்து விளைந்திருப் பதைக் காட்டியிருக்கும்.

இப்படத்தின் குளோசப் காட்சிகள் பலமாக அமைந் திருக்கின்றன ஆனால் அழுகை காட்சிகளில் எல்லோரும் “நாடக நடிகர்களாகி” விடுகிறார்கள். பகல், இரவு, கனவு காட்சிகளிலும் ஒரே விதமான முகப்பூச்சு, உடை தரம், ஒளி யமைப்பு உறுத்துகிறது குழந்தைகளின் நுண்ணிய உணர்வு களின் மத்தியில் தனிபயிற்சி எடுக்கும் ஆசிரியை கணவனு டன் மாணவர்களை உட்கார வைத்தபடி தேநீர் அருந்தும் குரோமும் தென்படுகிறது. திரைப்படத்தளம் என்பது ஏற் படுத்தும் அழுத்தமான சுவடுகளை விரல்களை எண்ணுவ திலிருந்து எதிர்ப்புக் குரலுக்காக போராட்ட ஊர்வலம் என்ற தொலைக்காட்சி பிம்பம் ‘தாத்தாபாட்டி வேணும்’ என்று கோசமிட்டபடி ஊர்வலம் செல்லும் வரைக்கும் நீள் கிறது.

இந்த வகை சாதாரண நிகழ்வுகளை யதார்த்த தளத் தின் சாதாரண இயல்பை மீறி திரைப்பட வடிவத்தில் அழுத் தமான காட்சிகளாக்குவதில் தாண்டவக்கோன் அவரின் பெரும் பான்மையான படைப்புகளில் வெளிப்படுத்துகிறார் (சமீபத் திய அவரின் சிறுகதையன்றிலும் இதை நுணுக்க மாக கவனிக்க முடிகிறது) வெறும் யதார்த்த தளம் மீறி சுவாரஸ்யப்படுத்தும் தன்மைக்கு இந்த வகை வெளிப்பாடு அவசியம். அந்த வகையில்தான் குழந்தை களின் குறும்புகள் கூட இடம் பிடிக்கின்றன. அழுகை என்பது குழந்தைகள் காதை மூடும் விபரீதமாகிறது. சித்தப்பா என்ற பணம் மற்றும் பொருள் குறித்த அக்கறை கொண்ட கதாபாத்திரம் கனவிலும் அதே போன்ற செய்கையை தான் வெளிப் படுத்துகிறது.

குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிறு விபத்து பற்றி அறிகிற தாத்தா மனநிலையும் பதட்டமும் ஊசியில் நூல் கோர்க்க முடியாத சிக்கலால் நுணுக்கமாகக் காட்டப்படுகிறது. அதிலிருக்கும் பதட்டம் அன்பு குறித்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத எல்லோருக்கும் ஏற்படும் அதிர்ச்சிப் படிமமே இப்படத்தின் சாட்சிகளாகும். பள்ளிக் காவலாளி முதல் மருத்துவர் வரை பலரும் பகிர்ந்து கொள்ளும் அறிவுரைகள், கருத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அவை குழந்தைகளுக்கான உலகில் அழுத்தம் விடயங்களாகி விடும் என்பதையும் கவனிக்க நேர்கிறது. தொழில் முறையற்ற நடிகர்களின் நடிப்புப் பயிற்சி பலவீனம் துருத்தித் தெரிகிறது. பலவீனத்தை உதற அவர்களும் முயற்சி செய்கிறார்கள். படத்தில் இழையோடும் சோகத்தை குழந்தைகளின் சேஷ்டைகளும் கதாபாத்திர உருவாக்க சுவாரஸ்யமும் தவிர்க்கச் செய்கின்றன. சோக இழையை தவிர்த்துக் காட்டும் முயற்சியாக படத்தின் எழுத்துக் காட்சியில் கதாபாத்திரங்கள் இயல்பாய் சிரித்து வெளிப்படுவது குடும்ப உறவுகளில் தென்படாத அன்பையும் நேசிப்பையும் நோக்கி எள்ளி நகையாடியே இருப்பதற்கான சாட்சிகளாகக் கூட கொள்ளலாம். குழந்தைகளின் உலகில் அவர்களுடன் நேசக்கரம் நீட்டும் முயற்சிகளில் தொடர்ந்து தாண்டவக்கோன் இயங்குவது படைப்புலகிற்கு வரப்பிரசாதம்தான்.

அன்பையும் பாசத்தையும் நெகிழ்வை யும் பகிர்ந்து கொள்வது அவரின் படைப்பின் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஆதாரத்தை தன் படைப்புகளின் அடிநாதமாக அவர் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் தொடர்ந்த செயல்பாடுகளில் அறிந்து கொள்ள முடிகிறது. அவர் இயங்குகிற கட்சி சார்ந்த செயல்பாடுகள், கலை இலக்கிய முயற்சிகளில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் குழந்தைகள் பற்றிய அக்கறையிலிருந்து தொடங்கப்பட வேண்டிய செயல்களின் ஆதாரங்களை சுட்டிக் காட்டியபடியே இயங்குகிறார் அவர்.(பேராண்டி, குறும்படம். இயக்கம் : தாண்டவக்கோன், திருப்பூர்)

இந்த இரு திருப்பூர் இயக்குனர்களின்  படங்களே இந்தியக் குழந்தைகளின் உண்மை முகங்களாய் விளங்குபவை. இவை தமிழ்க் குறும்பட உலகில் முக்கியத்துவம் பெற்றதற்குக் காரணம்  அவற்றை யதார்த்த நம்பகத்தன்மையும் ஊடக மொழியை சரியாய் கையாண்டிருப்பதும்தான். அன்பையும் பாசத்தையும் நெகிழ்வை யும் பகிர்ந்து கொள்வது குறும்படப் படைப்பின் ஆதாரமாக இவ்வகையில் இருக்கிறது

சுப்ரபாரதிமணியன்,8/2635 பாண்டியன் நகர்,   திருப்பூர் 641 602

subrabharathi@gmail.com